1991 முதல் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். தீக்கதிரும் வண்ணக்கதிரும் தோழர்கள் அ குமரேசனும் மயிலை பாலுவும் என் நன்றிக்கு உரியவர்கள். எத்தனை கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள்! முழுப்பக்க கட்டுரைகளுக்கான மரியாதையை தீக்கதிர் அளித்தது எனில் முதல் பக்கத்துக்கான மரியாதையை வண்ணக்கதிர் அளித்தது. 1993இல்தான் தீக்கதிர் சென்னைக்கு வந்தது. 1991 டிசம்பர் 23 என்று நினைவு, மதுரை தீக்கதிர் அலுவலகம் சென்று தோழர் கே முத்தையா அவர்களை சந்திக்க விரும்பினேன். மூத்த தோழர் அல்லவா? எனக்கு தயக்கம் இருந்தது. தோழர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட பின் என்னை அவரிடம் அழைத்து சென்றனர். வாய் நிறைய சிரிப்புடன் "நல்லா எழுதுறீங்க, நிறைய எழுதுங்க" என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியது போல இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன்.
குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan நாவலின் சில பக்கங்களை மொழிபெயர்த்து மதுரையில் தமுஎச உண்ணாவிரத பந்தலில் ஆதவன் அவர்களை சந்தித்து கொடுத்தேன், "நல்லாயிருக்கு தோழர்" என்று சொல்லி புதுவிசையில் வெளியிட்டார். தொடர்ந்து விசையில் எனக்கு இடம் கொடுத்தார். அன்புத்தோழர் அருள் அவர்கள் பாலு சத்யாவை அறிமுகப்படுத்தினார், பெண்ணே நீயில் என் கட்டுரைகள் வந்தன. தூசிமுத்துவின் டைரி குறிப்பு என்ற கதை உயிர்எழுத்தில் வந்தது, உயிர்எழுத்து சிறுகதை தொகுப்பிலும் அது வந்ததாக சுதீர்செந்தில் என்னிடம் சொன்னார். அவரை திருச்சியில் அவர் வீட்டில் சந்தித்தேன். கதை சர்ச்சைக்கு உள்ளாகி இயக்கத்தில் விசாரணை நடந்தது.
ஆர் கே நாராயணின் இரண்டு கதைகள் உட்பட சில கதைகளையும் மொழிபெயர்த்தேன், வண்ணக்கதிரில் வெளியானது.
திசையின் பெயரை வைத்துள்ள ஒரு பிரபல பதிப்பகம் மொழிபெயர்ப்புக்காக என்னை அழைத்தபோது நான் காசுக்காக செய்யவில்லை, உங்கள் பதிப்பகத்தின் அரசியல் என் அரசியலுக்கு எதிரானது என மறுத்தேன்.
2006இல் மயிலை பாலு அவர்கள், மாவோ படைப்பின் சில பக்கங்களை கொடுத்து மொழிபெயர்க்க சொன்னார். செய்தேன். ஒரு நாள் தோழர் அலைகள் பெ.நா.சிவம் என்னை தொலைபேசியில் அழைத்தார். "மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது, வாங்க, சந்திப்போம்" என்றார். தெற்கு சிவன் கோவில் வீடு+பதிப்பகத்தில் அவரை சந்தித்தேன். முதல் சந்திப்பு. தோழர் விடியல் சிவா அப்போது அங்கு இருந்தார் என்று நினைவு. இரு சிவன்களின் உரையாடலையும் கவனித்துக்கொண்டு இருந்தேன். மதிய உணவை அருந்தினோம். தோழர் சிவம் அவர்களின் அன்புக்குரிய மனைவியார் மிகுந்த அன்புடன் உபசரித்தார். அம்மா என்றே அழைத்தேன். கையில் அச்சுக்கோர்க்கும் காலம் முதல் பதிப்பகம் நடத்தி வருவதாகவும் அச்சுக்கோர்ப்பு வேலை தனக்கு நன்றாகவே தெரியும் என அம்மா அவர்கள் கூறியபோது ஆச்சரியம் அடைந்தேன். பின்னர் கான்ராட் உட்ஸ் எழுதிய The Moplah rebellion and it's Genesis என்ற ஆங்கில நூலைக்கொடுத்து " மொழிபெயர்த்து கொடுங்கள்" என்றார். 2007இல் வெளியானது.
தொடர்ந்து மாவோ தொகுதி 5, 9 இரண்டும். பின் ஸ்டாலின் தொகுதி 7. இப்போதும் அலைகளுக்கான வேலைகள் தொடர்கின்றன.
2011இல் வேலிகளுக்கு அப்பால் என்ற வலைப்பூ தளத்தை தொடங்கி இன்று வரையிலும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். முகநூலில் இருந்தாலும் தலை காட்டுவது மிக அரிது. ஆனால் கொரோநா காலம் முகநூலில் எழுத தள்ளியது. உருப்படியாக செய்வோம் என்று கருதி ஜூலை 5 தொடங்கி செப்டம்பர் 5 வரை 30 பகுதிகளாக எம் பி எஸ் அவர்களின் வரலாற்றை எழுதினேன், தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
கட்டுரைகளை தொகுப்பாக வெளியிட எண்ணி ஒரு பிரபல பதிப்பாளரிடம் (அலைகள் அல்ல) பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னேன், அவர் "நீங்கள் பிரபலம் ஆக வேண்டுமே" என்று சிம்மக்கல் கடைக்காரர் போல நிராகரித்தார். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2021இல் இரண்டு கட்டுரை தொகுப்புக்கள், எம் பி எஸ் பற்றிய நூல் ஆகியவற்றை வெளியிடுவேன் என்று உறுதியாக நம்புகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக