
கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கை சாம்பலை எடுத்து தாளில் மடித்து பத்திரமாக வைத்திருந்தவர் பழம்பெரும் விடுதலைபோராட்ட வீரர் மார்க்சிஸ்ட் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள். தன் ஆவணப்படத்துக்காக அவரை சந்தித்த பாரதி கிருஷ்ணகுமாரிடம் அந்த சாம்பலை கொடுத்தார். 18.12.2005இல் ரஷ்ய கலாச்சார மையத்தில் ராமையாவின் குடிசை வெளியிடப்பட்டது. மிஞ்சிய சாம்பல் மேடையில் முறையாக எடுத்துக்கொள்ளபட்டு இப்போது வெண்மணியில் உள்ளது. கமலஹாசனும் அங்கே இருந்தார்.
கீழ் வெண்மணி கொலைகள் வெறும் சாதீய அடிப்படையில் ஆன கொலைகள் மட்டுமே அல்ல, கூலிப் போராட்டம் மட்டுமே அல்ல. அது இரண்டும் பிணைந்த போராட்டம். நிலப்பிரபுத்துவ கொடூரங்களுக்கு எதிராகவும் சாதிய அடிப்படையில் ஆன கொடுமைகளுக்கு எதிராகவும் ஒருசேர நடத்தப்பட்ட போராட்டம். ஏற்று நடத்திய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
உலகம் எங்கும் நிலப்பிரபுத்துவதுக்கு எதிரான போராட்டம் நடக்கவே செய்தது, இங்கே மட்டும் அதில் எங்கே இருந்து சாதியும் வந்து சேர்ந்தது? இந்து மதத்தின் சாதீய அடுக்கு அதில் இல்லையா? சாதீய அடுக்கையும் கொடுமைகளையும் நியாயப்படுத்தும் சூத்திரங்கள் அதில் இல்லையா? செருப்பு அணியக்கூடாது, வேட்டி கட்டக்கூடாது, துண்டு போடக்கூடாது, ரவிக்கை அணியக்கூடாது, கொசுவம் வைத்து புடவை கட்டக்கூடாது, திருமணம் ஆனால் பெண்ணை முதல் நாள் இரவு நிலப்பிரபு வீட்டுக்கு அனுப்ப வேண்டும், சவுக்கடி, வாயில் சாணிப்பால் ஊற்றுவது.... என அத்தனையும் எதில் இருந்து வந்தது? ஊற்றுக்கண் எது? மநு அநீதி அன்றி வேறென்ன?
18.12.2005 அன்று கமலஹாசன் தன் கையில் வாங்கியது திருநீர் அல்ல, அது 44 தலித் மக்களின் சாம்பல், காரணம் மநு. அன்று களத்துக்கு நேரில் சென்ற தோழர்களிடம் நந்தன் என்ற 12 வயது சிறுவன் , நிலக்கிழார்கள் நேரில் நின்று துப்பாக்கியால் சுட்டதை தான் பார்த்ததாக சொன்னான். 300க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள். பின்னர் 1980இல் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி அதே நந்தன், 12 வருடங்களுக்குப் பிறகு. பின்னொரு காலத்தில் அதே நந்தன் அதிமுகவில் சேர்ந்தான், அவன் இறந்த பின் அதே வெண்மணியில் அவன் நினைவாக அதிமுக கொடிக்கம்பம் உள்ளதாக, வெண்மணியின் 50ஆவது நினைவு நாளில் பாரதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார்.
நந்தனே திசை மாறி தடுமாறும்போது, அன்று மேடையில் இருந்த கமலஹாசன் தடுமாறுவதும் மநு என்ற ஒன்று வழக்கில் இல்லை என்று மநுவின் அட்வொகேட் ஆக மாறி வாதிடுவதும் வியப்பு அல்ல. அவர் வேலையை அவர் சரியாக செயகின்றார், அவ்வளவுதான்.
கடந்த 20 ஆண்டுகளில் வலதுசாரி ஆர் எஸ் எஸ் தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக இந்து மதத்திற்கு உள்ளேயே இருக்கின்ற தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், இஸ்லாமிய, கிறித்துவ மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதத்தை முறியடிக்க இடதுசாரிகளும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தம்மால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்து வரும் மிக முக்கியமான காலகட்டத்தில்தான் கமலஹாசன் தன் இமேஜை அஸ்திவாரம் ஆக்கி ஒரு இயக்கத்தை தொடங்கினார். ஜனநாயகத்தில் அவருக்கான உரிமை உள்ளது என சிலர் வாதிடக் கூடும். அவர் தன்னை ஒரு படிப்பாளியாகவும் முற்போக்குவாதியாகவும் காட்டிக்கொண்டே வருபவர். பலர் அதனை நம்பவும் கூடும். 2005இல் வெண்மணிக்கான மேடையில் நின்ற அவர், உண்மையில் இக்கட்டான இக்காலகட்டத்தில் மக்கள் ஒற்றுமைக்காக நிற்க வேண்டும், மக்கள் ஒற்றுமை பிளவு படக் கூடாது என உணர்ந்து இருப்பார் எனில் அவர் இத்தகைய ஒரு இயக்கத்தை தொடங்கி இருக்க மாட்டார். தொடங்கியது மட்டும் இல்லை, மநு அநீதி என்ற ஒன்று வழக்கத்திலேயே இல்லை என்று வாதிடவும் முற்பட்டுள்ளார். கூடவே இன்னோரு வேலையையும் இழுத்துப்போட்டு செய்கின்றார். மிக மோசமான பிற்போக்கு கருத்துக்களுக்கு சொந்தக்காரரும் மக்கள் போராட்டங்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசியாய் இருப்பவரும் ஆன மற்றொரு பிளவுவாத திசை திருப்பல் சக்தியான ரஜினிகாந்தை 'அவர் போன்ற நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்' என்று வருத்தம் வேறு படுகின்றார்.
தேசம் வலதுசாரி இந்துத்துவா சக்திகளிடம் இருந்து மீள வேண்டும், அதன் பொருட்டு மக்களின் ஒற்றுமையை திரட்டி மக்கள் சக்தியை ஒரு அணியின் கீழ் கொண்டு வர வேண்டும் என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் கடுமையாக போராடி வரும் நேரத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் எடுக்கின்ற இது போன்ற பிளவுவாத நடவடிக்கைகளால் உண்மையில் பலன் பெறப்போவது அதே வலதுசாரி தீவிரவாதிகள்தான். பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் எடுத்துள்ள நிலை இது போன்றதே, அங்கு மக்களின் வாக்கை பிரிப்பதன் மூலம் பிஜேபிக்கு ஆதரவான நிலையை அவர் எடுத்துள்ளார். மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், வரலாறு இவர்களை குப்பைத்தொட்டியில் வீசும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக