33) நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இடங்களிலும் முச்சந்திகளில்
நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் வேட்டிகளைக்
கிழித்துக்கொண்டு தெரு நாய்களைப்போல் சண்டைபோட்டுக்கொண்டாலும் உள்ளூரில் சாதிப்பிரச்னை
என்று வரும்போது இடதுசாரிகளைத்தவிர்த்த இதர கட்சிகள் அனைத்தும் இந்து மதத்திலேயே
இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும்,
சிறுபான்மை மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும் திட்டமிட்ட
வகையில் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். இவர்களில் தமிழகத்தில் திமுக, அ இ அதிமுக,
மதிமுக, பாமக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளும் அடக்கம் எனில் இக்கட்சிகளில் ஆதிக்கம்
செலுத்துகின்ற ஆதிக்க சாதியினருக்கும் தமிழகத்தின் தலித் மக்களுக்கும், இஸ்லாமிய
கிறித்துவ மக்களுக்கும் ஆன உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா?
34) இவர்கள் சொல்லும் தொப்புள்கொடி உறவு இலங்கையில் உள்ள
தமிழனை மட்டுமே இணைக்குமா? உள்ளூரில்
வெண்மணியில், மீனாட்சிபுரத்தில், மண்டைக்காட்டில், புளியங்குடியில்,
கடையநல்லூரில், போடியில், தேவாரத்தில், தென்காசியில், கோவையில், கோட்டைமேட்டில், பரமக்குடியில்,
கன்னியாகுமரி நித்திரவிளையில், உத்தப்புரத்தில், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி,
கொட்டக்கச்சியேந்தல், திண்ணியம், மேலவளவு, நக்கலமுத்தன்பட்டியில், மருதக்கிணறு
குருவிக்குளத்தில், பந்தப்புளியில், நேற்று
தர்மபுரியில், நிலக்கோட்டையில், வடக்கே கைர்லாஞ்சியில், காந்தமாலில், அயோத்தியில்,
மாலேகானில், ஹைதராபாத்தில், ஒரிசாவில், குஜராத்தில், ஹரியானாவில், முஜாஃபர்பூரில்,
மஹாராஷ்ட்ராவில் என பரந்துபட்ட இந்த பாரத்தேசம் எங்கும் கிழிந்து நாற்றமெடுத்து
நார் நாராகத் தொங்குவது தொப்புள்கொடிகளா மலக்குடல்களா?
35) இந்துதீவிரவாத சிவசேனாவின் பால்தாக்கரே வீட்டில்
பிரபாகரனின் புகைப்படம் தொங்குவதைப் பார்த்துப்
பரவசம் அடைந்த நெடுமாறன் அவர்களும், அதே பால்தாக்கரே மண்ணின்மைந்தர்களுக்கு
ஆதரவாக மும்பையில் இருந்து பிஹார், ஒரிசா, வங்காள தொழிலாளர்களை அடித்து விரட்டிய
போது ‘அது சரிதான்’ என புளகாங்கிதம் அடைந்து போன
ஆவேச அண்ணன் சீமானும், அதே சிவசேனா மும்பையின் தமிழர்களை அடித்து துவம்சம் செய்து
அவர்களின் சொத்துக்களை சூறையாடிய தாக்குதலுக்கும் இஸ்லாமிய மக்களின் மீது
படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டதற்கும் என்ன பெயர் வைப்பார்கள் என்று விளக்கக்
கடமைப்பட்டுள்ளார்கள். இந்த உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா?
குறிப்பிட்டுச் சொல்வதெனில், பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
இருந்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில்
இன்றும் கூட்டணியில் நீடிப்பது சிவசேனாதான் என்ற நிலையில் இந்த உறவுக்கு என்ன
பெயர்? பொன்.ராதாகிருஷ்ணனிடமாவது கேட்டு சொல்ல வேண்டும்.
36) ‘நரேந்திரமோடி ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் படுகொலை
செய்யப்பட்டது தவறுதான்; அதற்காக மோடி மன்னிப்புக்கேட்டால் அவர் இத்தேசத்தின்
பிரதமராக வருவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை’ என்று போகின்ற
இடங்களில் எல்லாம் பேசிவருகின்றார் தமிழருவி. சற்று முன் கிடைத்த தகவல்படி மோடி
தமிழருவியிடம் இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். தவிர
மன்னிப்புக்கேட்டால் மோடி மீதும் அவன் அரசு மீதும் நடக்கின்ற எண்ணற்ற வழக்குகளை
வாபஸ் வாங்கி விடலாம் என்றும் தமிழருவி சொல்லக்கூடும். ஒருவேளை நாதுராம் கோட்சே
உயிரோடு இருந்திருந்தால் காந்தியை சுட்டுக்கொன்றது தப்பு, மன்னிச்சிடுங்கோ என்று கண்ணீர்
சிந்தியிருந்தால் அவனும் கூட இத்தேசத்தின் பிரதமராக வருவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை
என்றும் கூட காந்திய மக்கள் இயக்கத்தின் பெருந்தலைவர் தமிழருவி ஊர் ஊராக
பிரச்சாரம் செய்திருக்கவும் கூடும்.
...தொடரும்