ஞாயிறு, நவம்பர் 29, 2020

மார்க்சிய ஆசான்களும் 170 ஆண்டுகளில் நடந்த புரட்சிகளும்

பிரடெரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820. 200 வருடங்கள்! 

கடந்த சில நூறாண்டுகளில் எத்தனையோ அறிவாளிகளும் மகான்களும் புவிப்பரப்பெங்கும் தோன்றினார்கள். அவர்களில் பலரும் இந்த உலகையும் சமுதாயத்தையும் கருத்துமுதல்வாத அணுகுமுறையுடன்தான் தத்தமது பார்வையில் புரிந்தும் எழுதியும் வைத்தார்கள். இன்னும் சிலரோ மதவாத அடிப்படையில் அணுகினர். இன்னும் சிலரோ மதத்தையும் கடவுள் என்னும் கோட்பாட்டையும் புறந்தள்ளி ஒருபடி மேலே சென்று சிந்தித்தாலும் அவர்களின் அணுகுமுறையும் கருத்துமுதல்வாத அடிப்படையில்தான் இருந்தது, ஆனாலும் இந்த அணுகுமுறையில் ஒரு முன்னேறிய பார்வை இருந்தது என்பது உண்மையே. வேறு சிலரோ கடவுள் என்னும் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் உயிர்கள் இடத்து அன்பு செலுத்த வேண்டும், அடுத்த உயிருக்கு துன்பம் தரலாகாது, எல்லா உயிர்களும் சமம், கொல்லாமையை கடைப்பிடிப்போம் என்று வேறு ஒரு பார்வையுடன் அணுகினர், இதுவும் ஒரு படி முன்னேறிய பார்வைதான்.

கடவுள் நம்பிக்கை மிகுந்த வள்ளலார்தான், கடவுளைப்பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்தால் போதுமா? வயிறு என்ற ஒன்று இருக்கிறதே, பசித்தவனுக்கு ஏது பரஞ்சோதி என்று யதார்த்தமாக சிந்தித்தார். யோசித்துப்பார்த்தால், அவர் பற்ற வைத்த அணையாத பெரும் அடுப்பு, வெறும் அடுப்பு அல்ல, அது ஒருவகை பொருள்முதல்வாத அணுகுமுறையே என்று புரிகின்றது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற சொல்லாடலுக்குள், எனக்கு தெரிவதெல்லாம் "அடுத்த மனிதன் பசியைப்போக்க அடுப்பைப் பற்றவை, அன்புடன் சமைத்துப்போடு, அவனை மகிழ்ச்சியாக வைத்திரு" என்ற மிக உயரிய தத்துவமே. சுருக்கமாக சொன்னால் சோத்துக்குள்ளே இருக்கான் சொக்கப்பன் என்ற பொருள்முதல்வாத அணுகுமுறை என்று நினைக்கின்றேன். வெயிலில் அலைந்து தெருவில் தலைச்சுமையாய் கீரை விற்பவளிடம் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் பேரம் பேசாதே என்பதுதான். 

கருத்துமுதல்வாத ஞானிகளை கடந்து வந்ததுதான் வரலாற்றின் பாதை. சட்டென இவர்களை ஒத்துக்கித் தள்ளிவிட முடியாது. மிக நீண்ட நெடிய பல நூறு வருட வயதுள்ள தத்துவப்போராட்ட வரலாற்றில் இவர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. 1800களில்தான் இந்த சிந்தனைப்போக்கில் வேறு மாதிரியான அணுகுமுறைகள் பிறந்ததை நாம் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கு முன்பாகவே, அதாவது கருத்துமுதல்வாதம் கோலோச்சிய காலத்திலேயே இரண்டு முக்கியமான மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. முதலாவது, 1775-1783 அமெரிக்க விடுதலைப்போர். விளைவு தனிமனிதனின் விடுதலை நிலைநாட்டப்பட்டது. இரண்டாவது, பிரெஞ்சுப் புரட்சி. அப்போது ஆட்சியில் இருந்தவர் மன்னர் பதினாறாம் லூயி. 5.5.1789 முதல் 9.11.1799 வரையில் இந்தப் புரட்சி நீடித்தது. 14.7.1789 அன்று Bastille சிறையை மக்கள் உடைத்து எறிந்தனர். செப்டம்பர் 1792இல் முதல் பிரெஞ்சு குடியரசு பிரகடனப்படுத்தபட்டது.  1793இல் லூயி கொல்லப்பட்டார். நெப்போலியன் போனபார்ட்டே (15.8.1769-5.5.1821) 1799இல் பதவியேற்றார். மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. இந்தப் புரட்சி சமத்துவம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடித்தது.

இதன் பின்னால் 1820 முதல் 1840 வரையிலான மூன்றாவது புரட்சி, தொழிற்புரட்சி நடந்தது. நவீன எந்திரங்களை கொண்டுவந்த புரட்சியாக இருந்தது. இது எதில் சென்று முடிந்தது? எல்லை கடந்து நாடுகளை அடிமைப்படுத்தியது. இவற்றின் பின்னால் நடந்த 1871 பிரெஞ்சு புரட்சிதான் மனித குல வரலாற்றில் முதலாவது பாட்டாளிவர்க்க புரட்சி அரசு. 18.3.1871 முதல் 27 நாட்கள் இந்த அரசு நீடித்தது. பல்லாயிரம் மக்கள் உயிர் போனது, பாரிஸ் நகரை மக்கள் ஆட்சி செய்தார்கள். 45 வருடங்களுக்கு பிறகு 1917இல் நடந்த சோவியத் புரட்சிக்கான ஒத்திகை என்று வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்டது. 

முதலில் சொன்ன மூன்று புரட்சிகளும் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகிய மூன்று பேரும் கோட்பாடுகளை பாட்டாளி வர்க்கத்தின் முழக்கங்கள் ஆக கட்டமைத்தன.

1800களின் மைய கட்டத்தில், முதலில் குறிப்பிடப்பட்ட கருத்துமுதல்வாத கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கியும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தும் மானுட குலத்தின் முன் புதிய தத்துவத்தை, வர்க்க அரசியல் பேசிய புதிய தத்துவத்தை இருவர் முன்வைத்தார்கள். ஒருவர் காரல் மார்க்ஸ், மற்றவர் பிரடெரிக் எங்கெல்ஸ். மார்க்ஸ் பிறந்த நாள் 5.5.1818, எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820.

வரலாற்றில் முதல்முறையாக, நிலத்தின் மீதான உடைமை குறித்தும் சொத்து மீதான உடைமை குறித்தும் அரசு என்ற கோட்பாடு குறித்தும் கேள்வி எழுப்பினார்கள் இந்த இரண்டு இளைஞர்களும். ஆம்! மார்க்ஸும் எங்கெல்சும் 1847-52 காலக்கட்டத்தில் Communist League ஐ உருவாக்கும்போது அவர்களின் வயது முறையே 29, 27! முதல் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு அதுதான். கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது 21.2.1888. எழுதப்பட்டது 1847இல். Samuel Moore என்ற நண்பருடன் சேர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் எங்கெல்ஸ். 

தற்செயல் நிகழ்வாக 22.2.1848 தொடங்கி 2.12.1848 வரையிலும் பிரான்சில் பிப்ரவரி புரட்சி நடந்தது. பிரான்சின் கடைசி மன்னர் முதலாம் பிலிப் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இரண்டாவது குடியரசு நிறுவப்பட்டது.

28.9.1864 அன்று முதலாவது அகிலம் லண்டனில் நிறுவப்பட்டது. அதன் பெயர் International Working men's Association. ஒன்பது ஆண்டுகள் நீடித்தது. இரண்டாம் அகிலம் 14.7.1889 அன்று நிறுவப்பட்டது. 1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது, 1916இல் அகிலம் தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது. குறிப்பான சாதனைகள் எனில் மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட 1889 பிரகடனம் வழி செய்தது. மார்ச் 19ஐ சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க 1910 பிரகடனம் வழி செய்தது. பின்னாளில் மார்ச் 8 ஆக மாற்றம் ஆனது.

இதன் பின்னர் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு எனில் 1905இல் ரஷ்யாவில் ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ்க்கு எதிராக நடந்த முதல் புரட்சி. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனவரி மாத பனிபோர்த்திய வீதிகளில் கொல்லப்பட்டனர். 20 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என லெனின் வர்ணித்தார். இப்புரட்சி தோல்வியில் முடிந்தது என்றாலும் சில மாற்றங்களுக்கு வழி செய்தது. டூமா என்ற நாடாளுமன்றம் உருவாக்கம், பல கட்சிகள் இயங்க அனுமதி, 1906 ரஷ்ய அரசியல் சாசனம் உருவாக்கம் ஆகியவை. பின்னர் நடந்த 1917 மாபெரும நவம்பர் புரட்சி. முன்னர் சொன்ன மூன்று புரட்சிகளில் இருந்தும் இதுவே முற்றிலும் வேறுபட்ட புரட்சி. ஏனெனில் இது முதல் முதலாக வர்க்க அடிப்படையில் நடந்த புரட்சி. சரியாக சொன்னால் மார்க்ஸும் எங்கெல்சும் பேசிய பாட்டாளி வர்க்க புரட்சி. 1917 என்பது முதல் உலகப்போர் முடிவுறும் காலம். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க அரசு பதவி ஏற்றபோது போர் நடந்துகொண்டுதான் இருந்தது. எனவே மன்னர் ஆட்சியின் போது நடந்து கொண்டு இருந்த பெரிய உலகப்போரின் பெரும் சீரழிவுகளையும் பொருளாதார சரிவையும் சீர் செய்து நாட்டை மீண்டும் நிலைநிறுத்தும் பெரும் கடமையை புதிய அரசு சந்திக்க வேண்டி இருந்தது. எந்த நாட்டுடனும் போர் செய்யவோ எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பு செய்யவோ மாட்டோம் என்பதே புதிய அரசு செய்த முதல் பிரகடனம். நிலம் அனைத்தும் அரசுடைமை என்பதே இரண்டாவது பிரகடனம்.

நீண்ட பல ஆயிரம் கால மனித குல வரலாற்றில் முதல் முறையாக நிலம் என்ற காரணியை அரசுடைமை ஆக்கியது பாட்டாளிவர்க்க புரட்சி அரசே. அதற்கான தத்துவ வெளிச்சத்தை பாய்ச்சியது கம்யூனிஸ்ட் அறிக்கையே. அதன் மூலவர்கள் மார்க்ஸும் எங்கெல்சும். 1917க்குப் பின் கடந்த 100 வருடங்களில் இந்த பூதம் முதலாளித்துவ அரசியலையும் முதலாளி வர்க்கத்தையும் எப்படி எல்லாம்   ஆட்டுவித்தது,  ஆட்டுவிக்கின்றது என்பது பெரும் வரலாறு.

உங்களை பெருமையுடன் நினைவு கூர்கின்றோம் தோழர் எங்கெல்ஸ்! தோழர் மார்க்ஸ்!

பிரெடெரிக் எங்கெல்சும் மார்க்சும்

எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820

எங்கெல்சுக்கும் தனக்கும் ஆன நட்பு கிரேக்க புராணங்களில் உள்ள நாயகர்களின் நட்புக்கு ஈடானது என்கிறார் மார்க்ஸ். " எங்கள் நட்பு ஒரேஸ்ட்டீசுக்கும் பிலடீஸுக்கும் Orestes and Pylades இடையே ஆன நட்பு " என்று சொல்கின்றார்.

மார்க்ஸ் லண்டனிலும் எங்கெல்ஸ் மான்செஸ்டரிலும் ஆக இருபது ஆண்டுகள் பிரிந்துதான் இருந்தனர். ஆனால் அவர்களின் நட்போ மென்மேலும் இறுகி வலுவானது. ஒன்றாக வாழவும் ஒன்றாகப் பணியாற்றவும் ஒன்றாக சிரித்து மகிழவும் முன் போல முடியவில்லையே என்று அவர்கள் அடிக்கடி வருத்தப்பட்டார்கள்.  ஒருவர் இடத்துக்கு மற்றவர் செல்வது அரிதாகவே நிகழ்ந்தது. அவர்களுக்கு இடையே ஆன கடிதப்போக்குவரத்து வெகு உயிரோட்டமாக இருப்பதற்கான காரணம் இதுவே! எங்கெல்ஸிடம் பதில் வர சற்றே தாமதம் ஆனாலும் மார்க்சிடம் இருந்து இப்படி கடிதம் வரும்: "இனியவனே எங்கெல்ஸ்! நீ அழுகின்றாயா, சிரிக்கின்றாயா, தூங்குகின்றாயா, துயில் நீங்குகின்றாயா?". இவர்களின் பிரிந்து வாழ்ந்த வாழ்க்கைதான், அவர்கள் விட்டுச்சென்ற பிரம்மாண்டமான கடிதத்திரள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு ஆய்வுக்கூடமாக நமக்கு கிடைத்துள்ளது.

இந்தக் கடித்தப்போக்குவரத்தில் அவர்கள் தொடாத விசயம் என்று எதுவுமே இல்லை. தத்துவ ஞானம், இயற்கையியல், அரசியல் பொருளாதாரம், சோசலிசம், வரலாறு, மொழியியல், கணிதம், தொழில்நுட்பம், போர்க்கலை, இலக்கியம் என பல துறைகளிலும் அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றமும் விவாதமும் நடந்துள்ளது. அவ்வளவுதானா? பாட்டாளிவர்க்க கட்சிக்கான போராட்டம், தொழிலாளி வர்க்க அரசியல் பிரச்சனைகள், அதன் போர்த்தந்திரம், நடைமுறை தந்திரம் ஆகியவற்றை பேசியுள்ளார்கள். இக்கடிதங்கள், மார்க்சிய ஆசான்கள் வாழ்ந்த சகாப்தத்தின் தொழிலாளர் இயக்கம், பொருளாதாரம், வெளிநாட்டுக்கொள்கை ஆகியவற்றை ஆராய்வதற்கான வளமிக்க பொக்கிஷமாகும்.

... ... ....

லண்டனில் மார்க்ஸ் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். குடும்பச்சுமை அவரை அழுத்தியது. மான்செஸ்டரில் எங்கெல்ஸ் பத்திரிகை தொழில் மூலமாக ஒருவாறு தன் வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு போனார். பாட்டாளிவர்க்க ஆசானைக் காக்கவும் தன் நண்பனை முதலாளித்துவ சமூகத்தின் வர்க்கப் பழிவாங்கலில் இருந்து காக்கவும் அந்த நிலையில் எந்த விதமான தியாகம் செய்யவும் எங்கெல்ஸ் ஆயத்தமாக இருந்தார்.

அப்போது இருந்த சூழ்நிலையில் எங்கெல்சுக்கு இருந்த ஒரே வழி "கேடுகெட்ட வணிகத்தொழிலுக்கு" மீண்டும் செல்வது ஒன்றே.  அவரது தந்தை பெரும் செல்வந்தர் என்பதை நாம் மறக்கக் கூடாது! அவர் நிறுவனத்தில்தான்   விற்பனை முகவராக வேலையில் சேர்ந்தார். முறையீடோ முணுமுணுப்போ ஆரவாரமோ இன்றி எங்கெல்ஸ் அதை செய்தார். வேறு வழியில்லை. தன் நண்பரின் மேதமையின் மேன்மையை எப்போதும் போற்றிப்புகழ்ந்து அவருக்கு தலைவணங்கிய எங்கெல்ஸ், மார்க்சின் மிக முக்கியமான தத்துவ, அரசியல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு மார்க்சுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் அவசியமான பொருளாதாரத் தேவைகளை கணிசமான அளவுக்கு நிறைவு செய்வது தன் கடமையே என்று கருதினார். லெனின் சொல்கின்றார்: எங்கெல்ஸ் மட்டும் தன்னலம் இன்றி எப்போதும் பண உதவி செய்துகொண்டே இருந்திடாவிட்டால், மார்க்ஸ் 'மூலதனம்' என்ற நூலை எழுதியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையில் மடிந்திருப்பார். (வி இ லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 1).

20 ஆண்டுகள் இந்த வேலையில் இருந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனக்கு வந்த பங்கை நிறுவனத்தில் முதலீடு செய்து 1864 முதல் அதன் உடைமையாளர்களில் ஒருவர் ஆனார். எங்கெல்ஸ் வீட்டில் அடிக்கடி தங்கிய மார்க்சின் மகள் எலியனோரா இப்படி கூறினார்: ...எங்கெல்ஸ் போன்ற ஒரு மனிதர் இந்த முறையில் இருபது ஆண்டுகளை கழிக்க நேர்ந்த கட்டாயத்தை நினைக்கும்போதே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் இது குறித்து புகார் செய்ததும் இல்லை, முணுமுணுத்ததும் இல்லை.

ஆனால் மிகக்குறைந்த ஊதியத்தை மட்டுமே பெற்று வந்ததால் மார்க்சுக்கு போதிய அளவுக்கு உதவி செய்ய முடியாமல் இருந்தார். வறுமையோ மார்க்சின் கழுத்தைப்பிடித்து இறுக்கியது. கடன் கொடுத்தவர்களுடன் முடிவற்ற போர் நடத்தினார். வாடகை தர முடியாமல் வீட்டு உரிமையாளர் உடனும் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக கடனாக வாங்கிய பொருட்களுக்காக கடைக்காரர்கள் உடனும் நீண்ட போரை நடத்திக்கொண்டு பெரும் துயரில் இருந்தார் மார்க்ஸ். எந்த அளவுக்கு எனில், குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக வறுமைக்கு பலியாயினர். க்விதோ Guido ,  பிரான்ஸிஸ்கா Franziska ஆகிய குழந்தைகள் இறந்தார்கள். குடும்பத்தின் அனைவருக்கும் செல்ல மகன் மூஷ்  என்னும் 'குருவிக்குஞ்சு'  Musch, the little sparrow அடுத்து இறந்தபோது மார்க்சுக்கு பேரிழப்பாக இருந்தது. மூஷ் நோய்வாய்ப்பட்டபோது மார்க்ஸும் எங்கெல்சும் சேர்ந்து கவலையில் வீழ்ந்தனர், அவனை குணப்படுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்தார் எங்கெல்ஸ். "எனக்குப் பதிலாக வேலை செய்து, நீ எனக்காக செய்து வரும் தோழமையுடன் கூடிய உதவிக்காகவும் குழந்தையிடம் நீ காட்டும் பரிவுக்காகவும் உனக்கு நான் எவ்வாறு நன்றி கூறுவது? தெரியவில்லை...." என்று எழுதினார் மார்க்ஸ்.

சிறுவனை அடக்கம் செய்துவிட்டு எங்கெல்சுக்கு இப்படி எழுதினார் மார்க்ஸ்: துன்பங்கள் பலவற்றை நான் ஏற்கனவே அனுபவித்து உள்ளேன்; ஆனால் உண்மையான துக்கம் என்பது என்னவென்று இப்போதுதான் உணர்கின்றேன்...இந்த நாட்களில் நான் அனுபவித்த பயங்கரமான சித்ரவதைகளின் இடையில் உன்னைப்பற்றிய சிந்தனையும் உன்னுடைய நட்பைப் பற்றிய சிந்தனையும் நாமிருவரும் இப்பூமியில் உருப்படியாக செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையும்தான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்தன...

எங்கெல்ஸின் பணிச்சூழல், அவரது இயல்புக்கு மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் வாழுமாறும் சம்பிரதாய மரியாதைகளை கடைப்பிடிக்கவும் அவரை கட்டாயப்படுத்தியது. மான்செஸ்டரில் முன்பு இருந்தபோது அவர் காதலித்து மணந்து கொண்ட எளிய அயர்லாந்து நாட்டுப் பெண் தொழிலாளி மேரி பர்ன்ஸ் Mary Burns வீட்டில்தான் இத்தகைய அந்நியமான சூழலில் இருந்து ஒதுங்கி ஓய்வு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. இங்குதான் அவர் பல துறைகளை சேர்ந்த தன் நண்பர்களையும் கம்யூனிஸ்ட் சங்கத்தின் தோழர்களையும் சந்திக்க முடிந்தது. கடும் சூழ்நிலையில் இருந்த அவருக்கு அன்பையும் ஆறுதலையும் அளித்த மேரி, 1863 ஜனவரி 6 அன்று இதய நோய் கண்டு மரணமுற்றார். இந்த இழப்பால் கடும் துயரத்தில் வீழ்ந்தார் அவர். மார்க்சுக்கு எழுதினார்: இவ்வளவு நீண்ட காலம் ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை நடத்தினால், அவள் மறைவு பெரிதாக உலுக்கிவிடாமல் போகாது. அவளுடன் கூடவே என் இளமையின் கடைசித்துளியையும் புதைத்து மூடிவிட்டதாக நான் உணர்ந்தேன் I felt although with her i was burying the last vestige of my youth...

மார்க்சின் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற தன்னால் முடியவில்லையே என்று மிகவும் வருந்தித்துடித்தார் எங்கெல்ஸ்.

1851 ஆகஸ்டில் NewYork Daily Tribune என்னும் அமெரிக்க முற்போக்கு பத்திரிக்கையில் பணியாற்றுமாறு அப்பத்திரிகை மார்க்சுக்கு அழைப்புவிடுத்தபோது அந்த வாய்ப்பை மார்க்ஸ் இறுகப் பற்றிக்கொண்டார்.

(Yevgenia  Stepanova எழுதிய பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச்சுருக்கம் என்ற நூலின் சில பகுதிகள், சில மாற்றங்களுடன்)

.... .... ..... .....

Newyork Daily Tribune இல்தான் 1857 சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் இந்திய விடுதலைப்போர் பற்றி மார்க்ஸும் எங்கெல்சும் பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார்கள். இந்தக் கட்டுரைகள் Progress Publishers வெளியீட்டில் The First Indian War of Independence என்ற நூலாக வந்துள்ளது.

உண்மையில் வேறு ஒரு சுவாரசியமான விசயமும் உள்ளது. தான் பொருளாதார ஆய்வில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் எங்கெல்ஸின் உதவியை நாடினார் மார்க்ஸ். ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற தொடர், மார்க்சின் பெயரால் வெளியானது, ஆனால் கட்டுரைகளை எங்கெல்ஸ்தான் எழுதினார்! (ஆதாரம், மேலே குறிப்பிட்ட அதே நூல், 7ஆம் அத்தியாயம்).

பிரடெரிக் எங்கெல்ஸ் 200

மார்க்சிய தத்துவ ஆசான்களில் ஒருவர் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820. 

இருவருமே பன்முகத்திறன் கொண்ட பெரும் ஆளுமைகள். இந்த விசயம் பற்றி இவர்களுக்கு தெரியாது என்று சட்டென்று சொல்லிவிட முடியாது. எங்கெல்ஸ் பல மொழிகள் அறிந்தவர். ரஷ்யன், பாரசீகம், ஜெர்மன் மொழிகள், பிரெஞ்ச், போர்த்துக்கீஸ், ஐரிஸ், ஸ்பானிஷ், ருமேனிய, பல்கேரிய மொழிகள், ஸ்காண்டினேவிய மொழிகள், மிலானீஸ், டச்சு-ஃபிரிஸ், Gaelic-Ireland, Schleswig-Holstein என. 12 மொழிகளில் பேசுவார், எழுதுவார். 20க்கும் மேற்பட்ட மொழிகளை வாசிப்பார்.

அடிப்படை ஐரோப்பிய மொழிகளை ஏற்கனவே முற்றாக அறிந்திருந்த, பண்டைய கிரேக்க, லத்தீன் மொழிகளை நன்கு கற்றிருந்த அவர், அவரே சொல்கின்ற படி 1850இல் ஆர்வத்துடனும் ஆதாரபூர்வமாகவும் ரஷிய மொழியைக் கற்றுக்கொள்ள முற்பட்டார். "...வழக்கில் உள்ள மொழிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததும், மிகவும் வளமிக்கதும் ஆன மொழிகளில் ஒன்று ரஷ்ய மொழி என்பதாலும் அதன் பரந்துவிரிந்த இலக்கியத்துக்காகவும் எல்லா விதத்திலும் கற்கத்தகுந்த மொழியாக உள்ளது...".

கிழக்கத்திய பிரச்சினையை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் பாரசீக மொழியை கற்கத்தொடங்கினார். 50ஆம் ஆண்டுகளின் இறுதியில் பண்டைய ஜெர்மன் மொழிகளைக் கற்றார். 1864இல் நடந்த டென்மார்க் போரும், Schleswig-Holstein ஆகியவற்றுக்காக நடந்த போராட்டமும் ஸ்காண்டினேவிய மொழிகளக் கற்கத் தூண்டின.

60ஆம் ஆண்டுகளின் இறுதியில் முதலாவது அகிலத்தில் அயர்லாந்து பிரச்னை கூர்மையாக விவாதிக்கப்பட்டபோது Gaelic-Ireland மொழிகளைக் கற்கத்தொடங்கினார். இதே ஆண்டுகளில் டச்சு-ஃபிரிஸ், ஸ்காட்லாந்து மொழிகளைக் கற்றார். தமது வாழ்வின் இறுதிக்காலத்தில் ருமேனிய, பல்கேரிய மொழிகளைப் பயின்றார்.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்று சொன்னால் அம்மொழி பேசும் மக்களின் வரலாறு, கலாச்சாரம், இலக்கியம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தி அம்மொழியின் சிறப்பியல்புகள், தோற்றம், வளர்ச்சிப்போக்கு போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்வது என்றே அவர் புரிந்துகொண்டு இருந்தார். மிகப்பல மொழிகளைக் கற்றிருந்ததன் பயன் என்னவெனில், மொழியியல், ஒப்புநோக்கு மொழியியல் ஆகியவற்றின் பொதுவான பிரச்சினைகளைப் பயின்று இந்த அறிவியலுக்கும் உறுதியான மார்க்சிய அடித்தளத்தை அமைத்துத்தர இத்திறன் அவருக்கு உதவியது.

மொழியியல் மட்டுமல்ல, அவர் உலக இலக்கியங்களை தொடர்ந்து கற்று வந்தார். பல்வேறு இனமக்களின் இலக்கியத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மட்டுமின்றி வரலாற்று வளர்ச்சிக்கு முந்தைய காலத்து இலக்கியத்திலும் எங்கெல்ஸ் மிகப்பெரும் நிபுணராக மிளிர்ந்தார்.

50ஆம் ஆண்டுகளின் முடிவில் அவர் இயற்கை அறிவியல் தளங்கள் ஆன வேதியியல், இயற்பியல், உடலியல், உயிரியல் ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றறியத் தொடங்கினார்.

(Yevgenia Stepanova எழுதிய பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச்சுருக்கம், 1985 Progress Publishers)

... ... .... ....

தான் கற்றறிந்த மொழிகளின் சிறப்பை எத்தனை அழகான சொற்களில் வர்ணித்து கொண்டாடுகின்றார் அவர் பாருங்கள்! மொழிகள் யாவும் மானுட சமூகத்தின் உழைப்பால் வளர்ந்த, வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு ஆன கருவியே என்ற அறிவியல் பார்வை கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படிப் பார்க்க முடியும்! எங்கெல்ஸ் எழுதிய கவிதை இது.

ஓ, ஹோமர், உனது மொழி,

மாக்கடலின் பெரும் பெரும் அலைகள்!

ஏஸ்ச்சயிலசின் Achilles அதலபாதாளத்தில்-

அந்தப்பள்ளத்தாக்கில்

ஒன்றன் மேல் ஒன்றென உருண்டோடும் பாறைகள்!


ரோமானியர்களின் வெண்கலக்குரல்!

மாவீரன் சீசர், 

படை வீரர்களிடம் பகன்ற மணிமொழிகள்!

பாறையின் கூர்முனைப்போல்

ஈட்டியெனக் கிளம்பும் வசனங்கள்

எப்படிக் கிரகிப்பது?

 பரந்து பரவிக்கிடக்கும் அவற்றிலிருந்து

முகிழ்க்கப் போவதோ-ஒரு

மாபெரும் மாளிகை!


இத்தாலியத்தாய் இயம்பிய

இன்றையப் புது மொழியோ

எழில் மிகுந்தது! இனிமை மிக்கது!

இப்புவிக்கோளத்தின் மையத்திலே

உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்ட

அழகுப்பூங்கா! அற்புதப் பூங்கா!


மணம்மிக்க மலர்க்காடு!

காவியத்து நாயகன் அங்கு கவிதை புனைகின்றான்!

அழகு ரோஜாக்கள்... அப்பப்பா!

அள்ள அள்ளத் தீராதவை!

அரியோஸ்டோ* மாலை தொடுக்கின்றான்....


என்னருமை ஸ்பானிஷ் மொழியே!

ஓ! உச்சிமரத்தின் ஒய்யார இலைகள் 

உலர்ந்து ஆடும்போது ஓடிவரும் காற்றின் சுகமே!

புயற்காற்றுச்சூறை நீ!

புராதன காலத்துச் சண்டமாருதப் பாட்டு நீ!

உன் ஒலி கேட்டு

திராட்சைக்கொடியில் பழங்கள்

பழுத்துத் தொங்குகின்றன!

மரக்கிளையில் ஏறி அனைவரும்

ஊஞ்சலாடுகின்றனர்!


போர்த்துகல் நாட்டின் பொன்மொழி-

மலர்ப்படுகை நிறை கடற்கரையை

நோக்கி வரும் அலைகளின் முணுமுணுப்பு!

அதன் ஓசையிலே

மேலைக்காற்றின் மெல்லிய இன்பம்

எழுந்தோடி வரும்!


பிரெஞ்சு மொழியின் குரலைக் கேட்போம்!

அது பொங்கிவரும் பிரவாகத்தின் பேரொலி!

அசைந்தாடி அதன் போக்கில் ஆனந்தமாக

மணல்வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாங்கு!

ஆஹா! அற்புதம்!

அதன் கலகலப்பு அலைகடலின் ஆர்ப்பரிப்பு!


ஆங்கிலம்!

நாளெல்லாம் வீசும் நற்காற்று!

பச்சைப்பசேல் எனப்பசும்புல்

மாவீரர்களின் நினைவுச்சின்னம்

சுற்றிலும் பசுமைப்புதர்கள்

சூறைக்காற்று அதனில் அது

சடசடவெனச் சரிந்து விழுமா?!


ஆ! ஜெர்மானியன் பகன்ற செப்புமொழியே!

கடல் அலையின் மோதலில் முகிழ்க்கும்

வெண் நுரை நீயே!

தீவுக்கூட்டங்களின் எழிலைத் தூக்கிச்சுமக்கிற

கூர்முனைப் பவளப்பாறைகளைச் சுத்தமாக்கி வருவாய்!


பாறைகளை நோக்கிவரும் 

பெரும்பெரும் அலைகள் எல்லாம்

ஹோமரின் இனிய கீதமே!

அங்கும் கூட பெரும் பெரும் பாறைகள்

மோதி நொறுங்குகின்றன!

அங்கு நீ

படைத்தளபதியின் பாங்கான பகட்டான 

மாளிகையைப் பார்க்கலாம்!

மணம் வீசும் மலர்த்தோட்டங்களைக் காணலாம்!

மரஉச்சியின் இலைகளுக்கு இடையே

பேரிறைச்சல் காதைத் துளைக்கும்!

புல்வெளிகளில் ரீங்காரம் இடும்

சிற்றோடைகளின் ஓசை

மணற்குன்றுகளுக்கு மெருகூட்டுகின்றன!

சுழன்று சுழன்று வீசும் காற்று

வந்து நுழையும் மாடமாளிகைகள்

கூட கோபுரங்கள்

இதுவே ஜெர்மானிய மொழி!

என்றுமுள இனியமொழி

ஆயிரமாயிரம் அற்புத நிலை கண்ட மொழி!

(டச்சு மொழி புகையிலைக் குழாயில் இருந்து வரும் புகை போன்றது. குளிருக்கு ஏற்ற கதகதப்பை மூட்டும் இதமான மொழி)

.... ... .... ....

 *Ariosto 1474-1533, இத்தாலிய நாட்டின் பெருங்கவிஞன்

சனி, நவம்பர் 21, 2020

எழுத்தும் அங்கீகாரமும்

கணையாழியில் தன் முதல் கதை வந்த மகிழ்ச்சியை கணையாழியை விற்ற சிம்மக்கல் கடைக்காரரிடம் பகிர்ந்து கொள்ள முயன்றபோது  அவர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதையும் அந்த நொடியில் தன் மனதில் அடித்த அலையையும் தோழர் சுப்பாராவ் பதிந்துள்ளார். அதன் பின் அவர் நமக்கு கொடுத்தது அதிகம், அங்கீகாரம் அவரை தேடி சென்றது.


1991 முதல் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். தீக்கதிரும் வண்ணக்கதிரும் தோழர்கள் அ குமரேசனும் மயிலை பாலுவும் என் நன்றிக்கு உரியவர்கள். எத்தனை கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள்! முழுப்பக்க கட்டுரைகளுக்கான மரியாதையை தீக்கதிர் அளித்தது எனில் முதல் பக்கத்துக்கான மரியாதையை வண்ணக்கதிர் அளித்தது. 1993இல்தான் தீக்கதிர் சென்னைக்கு வந்தது. 1991 டிசம்பர் 23 என்று நினைவு, மதுரை தீக்கதிர் அலுவலகம் சென்று தோழர் கே முத்தையா அவர்களை சந்திக்க விரும்பினேன். மூத்த தோழர் அல்லவா? எனக்கு தயக்கம் இருந்தது. தோழர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட பின் என்னை அவரிடம் அழைத்து சென்றனர். வாய் நிறைய சிரிப்புடன் "நல்லா எழுதுறீங்க, நிறைய எழுதுங்க" என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியது போல இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன்.


குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan நாவலின் சில பக்கங்களை மொழிபெயர்த்து மதுரையில் தமுஎச உண்ணாவிரத பந்தலில் ஆதவன் அவர்களை சந்தித்து கொடுத்தேன், "நல்லாயிருக்கு தோழர்" என்று சொல்லி  புதுவிசையில் வெளியிட்டார். தொடர்ந்து விசையில் எனக்கு இடம் கொடுத்தார். அன்புத்தோழர் அருள் அவர்கள் பாலு சத்யாவை அறிமுகப்படுத்தினார், பெண்ணே நீயில் என் கட்டுரைகள் வந்தன. தூசிமுத்துவின் டைரி குறிப்பு என்ற கதை உயிர்எழுத்தில் வந்தது, உயிர்எழுத்து சிறுகதை தொகுப்பிலும் அது வந்ததாக சுதீர்செந்தில் என்னிடம் சொன்னார். அவரை திருச்சியில் அவர் வீட்டில் சந்தித்தேன். கதை சர்ச்சைக்கு உள்ளாகி இயக்கத்தில் விசாரணை நடந்தது.


ஆர் கே நாராயணின் இரண்டு கதைகள் உட்பட சில கதைகளையும் மொழிபெயர்த்தேன், வண்ணக்கதிரில் வெளியானது.


திசையின் பெயரை வைத்துள்ள ஒரு பிரபல பதிப்பகம் மொழிபெயர்ப்புக்காக என்னை அழைத்தபோது நான் காசுக்காக செய்யவில்லை, உங்கள் பதிப்பகத்தின் அரசியல் என் அரசியலுக்கு எதிரானது என மறுத்தேன்.


2006இல் மயிலை பாலு அவர்கள், மாவோ படைப்பின் சில பக்கங்களை கொடுத்து மொழிபெயர்க்க சொன்னார். செய்தேன். ஒரு நாள் தோழர் அலைகள் பெ.நா.சிவம் என்னை தொலைபேசியில் அழைத்தார். "மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது, வாங்க, சந்திப்போம்" என்றார். தெற்கு சிவன் கோவில் வீடு+பதிப்பகத்தில் அவரை சந்தித்தேன். முதல் சந்திப்பு.  தோழர் விடியல் சிவா அப்போது அங்கு இருந்தார் என்று நினைவு. இரு சிவன்களின் உரையாடலையும் கவனித்துக்கொண்டு இருந்தேன். மதிய உணவை அருந்தினோம். தோழர் சிவம் அவர்களின் அன்புக்குரிய மனைவியார் மிகுந்த அன்புடன் உபசரித்தார். அம்மா என்றே அழைத்தேன். கையில் அச்சுக்கோர்க்கும் காலம் முதல் பதிப்பகம் நடத்தி வருவதாகவும் அச்சுக்கோர்ப்பு வேலை தனக்கு நன்றாகவே தெரியும் என அம்மா அவர்கள் கூறியபோது ஆச்சரியம் அடைந்தேன். பின்னர் கான்ராட் உட்ஸ் எழுதிய The Moplah  rebellion and it's Genesis  என்ற ஆங்கில நூலைக்கொடுத்து " மொழிபெயர்த்து கொடுங்கள்" என்றார். 2007இல் வெளியானது.


தொடர்ந்து மாவோ தொகுதி 5, 9 இரண்டும். பின் ஸ்டாலின் தொகுதி 7. இப்போதும் அலைகளுக்கான வேலைகள் தொடர்கின்றன.


2011இல் வேலிகளுக்கு அப்பால் என்ற வலைப்பூ தளத்தை தொடங்கி இன்று வரையிலும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். முகநூலில் இருந்தாலும் தலை காட்டுவது மிக அரிது. ஆனால்  கொரோநா காலம் முகநூலில் எழுத தள்ளியது. உருப்படியாக செய்வோம் என்று கருதி ஜூலை 5 தொடங்கி செப்டம்பர் 5 வரை 30 பகுதிகளாக எம் பி எஸ் அவர்களின் வரலாற்றை எழுதினேன், தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.


கட்டுரைகளை தொகுப்பாக வெளியிட எண்ணி ஒரு பிரபல பதிப்பாளரிடம் (அலைகள் அல்ல) பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னேன், அவர் "நீங்கள் பிரபலம் ஆக வேண்டுமே" என்று சிம்மக்கல் கடைக்காரர் போல நிராகரித்தார். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2021இல் இரண்டு கட்டுரை தொகுப்புக்கள், எம் பி எஸ் பற்றிய நூல் ஆகியவற்றை வெளியிடுவேன் என்று உறுதியாக நம்புகின்றேன்.

திங்கள், நவம்பர் 16, 2020

Oneday International

மணியடித்தாகி விட்டது. நேரம் சரியாக பிற்பகல் 2.20. வி.டி.ஸ்டேஷனில் இருந்து ரயில் மெதுவாக நகரத்தொடங்கியது. ரயில் நகர நகர வழியனுப்ப வந்தவர்கள் தம் சொந்தபந்தங்களிடம், நண்பர்களிடம் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறே பேச மறந்த கடைசி வினாடி பேச்சுகளை பேசிவிடும் அவசரத்தில் இருந்தார்கள். எதிர்வரும் காலத்தில் நீண்ட பல மாதங்கள், வருடங்களுக்குப் பிறகே சந்திக்க முடியும் என்ற நிலையில் பிரிகின்றவர்கள் வார்த்தைகளை மறந்து கண்ணீரால் வழியனுப்பிக்கொண்டு இருந்தார்கள், கைகளின் இறுக்கமான பிணைப்பில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரயிலின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க, கைகளை ஜன்னல் கம்பிகளில் இருந்து விடுவித்துக்கொண்டு மெதுவாக கைகளை மட்டும் அசைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் ஒதுங்கிக்கொண்டார்கள். உணர்வுகளை நெருக்கமாக்கி தூரத்தை அதிகப்படுத்தி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி ஓடத் தொடங்கியது.

நினைத்தால் சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது. சரியாக ஆறு மாதம் முன்புதான், பம்பாயில் விமானம் ஏறுவதற்காக இதே வி டி ஸ்டேஷனில் வந்து இறங்கினேன். நாரிமன் பாயிண்ட் செல்ல மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். கையில் இரண்டு சூட்கேஸ் பெட்டிகளை வைத்துக்கொண்டு ஏற முடியாமல், வந்த இரண்டு வண்டிகளையும் தவற விட்டேன், அவ்வளவு கூட்டம், சென்னையில் காணாதது. இறுதியில் ஒரு தந்திரம் செய்தேன். அடுத்த ரயில் வரும் முன் உத்தேசமாக பிளாட்பாரத்தின் முனையில் நெருங்கி நின்றேன், ஏற வந்த கூட்டம் அப்படியே என்னை உள்ளே தள்ளிவிட்டது, இறங்க வேண்டிய இடத்திலும் இதையே செய்தேன்.
எப்படி மறப்பது அந்த நாளை? ஜனவரியில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் வழியனுப்ப வந்த அவள் ரயில் புறப்படும்போது இப்படித்தான் கூடவே கையை அசைத்துக்கொண்டு வந்தாள். நான் கோச் வாசலில் நின்றுகொண்டு கையை அசைத்து விடை கொடுத்துக்கொண்டு இருந்தேன். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியும் என்ற துயரமிகு எதிர்காலம் இருவர் கண்களில் இருந்தும் அடக்க முடியாமல் கண்ணீரை சிந்த வைத்தது. இடதுகையால் சேலைத்தலைப்பைக் கொண்டு வாயைப்பொத்திக்கொண்டு இருந்தாள். ரயில் வேகம் அதிகரித்து தூரத்தில் அவள் புள்ளியாக மறைந்தாள். ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையத்தை தாண்டிய பின்னும் கூட என்னால் உள்ளே சென்றுவிட தோன்றவில்லை, ரயிலின் ஓட்டத்தோடு அவள் காற்றில் மிதந்து கை அசைத்துக்கொண்டு வருவதாகவே நினைத்துக்கொண்டு தூரத்தில் பார்வையை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டே வந்தேன். டிக்கெட் பரிசோதகர் வந்து சார் என்று அழைத்து என்னை விலக்கி கதவை மூடினார்.
இரண்டு வருட இடைவெளி இப்படி ஆறு மாதங்களாக சுருங்கும் என்று யார்தான் நினைத்தார்கள்? நேற்று வெள்ளிக்கிழமை, இந்நேரம் விமானத்தில் இருந்தேன், இப்போது ரயிலில்!
ஜூலை மாதம் என்றாலும் கூட இரவு வளர வளர குளிர் அதிகரிக்கவே செய்தது. ஜன்னல் கதவுகளை இருக்க மூடி இருந்தாலும் கிடைத்த ஊசி இடைவெளியில் உள்ளே புகுந்த சிலீர் காற்று இரக்கமின்றி எலும்பை துளைத்தது. ஓ...ஓ....என காற்றின் பெருங்கூச்சலுடன் அந்த இரும்பு வாகனம் சிறகு போல பறந்து கொண்டிருந்தது. பேருக்கு சாப்பிட்டுவிட்டு, போர்வையை இழுத்து மூடி தூங்க முயற்சி செய்தேன். ரயிலின் வேகத்தோடு பெட்டி அசைந்து ஒருவிதமான தாலாட்டில் தள்ளியது. இப்படித்தான் மூன்று வாரங்கள் முன்பு அந்த சனிக்கிழமை இரவு எங்கள் அனைவருக்கும் தூங்காத இரவாக நீண்டது.
.... ....
அநேகமாக கம்பெனியின் அனைத்து இந்திய என்ஜினீயர்களும் க்வார்ட்டர்ஸில் என் அறைக்கு வந்து என்னை சந்தித்து சென்றார்கள். உற்பத்தி மேலாளர் ஆன சம்புநாத் லாஹாவுக்கும் எனக்கும் கண்ட நாள் முதலே ஆகாமல் இருந்தது. அவரே நேரில் வந்து என் கையைப் பிடித்து தூக்கி, ஆங்கிலத்தில் "ஏய், எல்லாரும் கேளுங்க, இவன் இன்றைக்கு நமது இந்தியக்கொடியை மிக உயரத்தில் பறக்கவிட்டான். இன்றைக்கு நடந்ததை இனிமேல் என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன்" என ஒரு பிரசங்கி போல சத்தமாக அறிவித்துக் கொண்டு இருந்தார். பங்களாதேசியான ஜெஸீம், வழக்கம் போலவே சிரிப்பை மட்டும் சிந்திக்கொண்டு தன் மேனரிசமான வலதுகையை உயர்த்தி தலையை வலதுபுறம் சாய்த்து சூப்பர் என்பது போல காட்டிக்கொண்டு வந்து என்னை தோளில் தட்டிவிட்டு என் பக்கத்தில் கட்டிலில் சாய்ந்து கொண்டான். ஆக ஒன்று புரிந்தது, இவர்கள் அனைவரின் பேச்சில் இருந்து, இன்று நடந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் பரபரப்பாகிப் போனது, க்வார்ட்டர்ஸ் முழுக்கவும் இதே பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
என் அறை நண்பர்கள் ஆன மனோகரனும் காதரும் படுக்கையில் தலையணையை சுவரோடு சாய்த்தபடியே சிகரெட்டை ஊதித்தள்ளிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்து இருந்தார்கள்.
நடந்தது இதுதான். புதிதாக தொடங்கப்பட்ட அந்த சிராமிக் ஓடுகள் தயாரிப்பு தொழிற்சாலையின் முதல் ஸ்டோர் மேனேஜர் நான்தான். சவுதி அரேபியாவின் மிக நவீனமான இத்தாலிய ப்ரொடக்சன் லைன் கொண்ட தொழிற்சாலை. ஓடுகள்தானே என சாதாரணமாக நினைத்திருந்தேன், ஆனால் அங்கு சென்ற பின்னரே தெரிந்தது, ஓடு தயாரிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட கச்சாப்பொருட்கள் தேவை என்று. இவை தவிர எந்திர உதிரி பாகங்கள், பேக்கிங் சாமான்கள், அன்றாட பயன்பாட்டு பொருட்கள், கருவிகள் என அத்தனையும் என் பாதுகாப்பில்தான் என்பதும் தெரிந்தது.
கச்சாப்பொருட்கள் ஸ்பெயினில் இருந்து தமாம் துறைமுகம் வரும், அங்கிருந்து பெரிய கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு இங்கே ஸ்டோருக்கு, அதாவது என்னிடம் வந்து சேரும். வந்தால் ஒன்றிரண்டு லாரியாக வராது, பத்து, பதினைந்து லாரி என தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு வந்துவிடும். எனக்கு என லேபர்கள் இல்லை, எனவே உற்பத்தி பிரிவுக்கு சென்று மேலாளர் லாஹாவை சந்தித்து லேபர்களை வாங்கி கண்டெய்னர்களில் இருந்து சரக்குகளை சேதம் இன்றி இறக்க வேண்டும். இந்த வேலையில் இறங்கிவிட்டால் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது, சாப்பிடவும் நேரம் இருக்காது. ஏனெனில் லாரிகளை காத்திருக்க செய்ய முடியாது. ஒரு பெரிய ராட்சச ஃபோர்க்லிப்ட், ஒரு சிறிய ரக ஃபோர்க்லிப்ட் என இரண்டையும் வைத்து சரக்குகளை இறக்க வேண்டும். அதேசமயம் ஒரே நிறத்தில் உள்ள வேறு வேறு ரக மூட்டைகள் கலந்து விடாமல் அதனதன் இடத்தில் அடுக்கப்படுகின்றதா என்பதையும் கவனத்தில் வைத்து, கூடவே ரக வாரியாக மூட்டை எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு, லேபர்களையும் சோம்ப விடாமல் வேலை வாங்கி...ஒரு வழியாகி விடுவேன்.
இப்படித்தான் அந்த சனிக்கிழமையும் சரக்கு லாரிகள் வந்தன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைவரையும் சாப்பிடுமாறு சொல்லிவிட்டு, நானும் வேகமாக வந்து, எனது உணவு டப்பாவில் இருந்து கபூசை எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டு இருப்பேன், முர்த்தாசா என்ற பாகிஸ்தானிய லேபர் இடதுகை விரலைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தான். "சார்..." என்று தொடங்கி உருது மொழியில் வேகமாக ஏதோ சொன்னான். அவன் இடதுகை நடுவிரல் அடிபட்டு சதை பிய்ந்து ரத்தம் கொட்டியது. அதை பார்த்த உடன் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. "முட்டாளே, கவனமாக வேலை செய்யக் கூடாதா? என்ன மனுஷன் நீ?" என்று கத்தினேன். உடனடியாக முதலுதவி பெட்டியை திறந்து (சென்ற வாரம்தான் வாங்கி இருந்தோம்) வேண்டியதை செய்துவிட்டு, நிர்வாக அதிகாரி ஆன ஜாபருக்கு தொலைப்பேசியில் செய்தியை கூறினேன். ஜாபர் லெபனான் தேசத்தவன். "ரத்தம் நிற்கவில்லை, விரல் மோசமாக அடிபட்டு கிழிந்து உள்ளது, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்" என்றேன். "இப்போது வண்டிகள் எதுவும் இல்லை, நீ அவனை என் ஆபீசுக்கு அழைத்து வா, ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் எழுதவேண்டும்" என்றான். கூடவே, "ஃபோர்க்லிப்ட் ட்ரைவர் யார்?" என கேட்டான். "பாலேர்மோ" என்றேன். எனக்கு கோபம் கிர்ரென ஏறினாலும் பணிவாக, "சார், ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் பிறகு எழுதலாம், முதலில் இவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்" என்றேன். "நான் சொல்வதை செய்" என்று கத்திவிட்ட தொலைபேசியை துண்டித்தான்.

முர்த்தாசா என்ற அந்த லேபர், தொழிற்சாலையின் எல்லாப்பகுதிகளிலும் வேலை செய்து லாயக்கு படமாட்டான் என துரத்தி அடிக்கப்பட்டு கடைசியாக என்னிடம் தள்ளிவிடப்பட்டவன். அவன் இங்கேயும் சரியில்லை என நான் ரிப்போர்ட் செய்தால் அத்தோடு அவன் வேலை காலி. அவனுக்கு மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் உள்ளதாக என்னிடம் சொல்லி இருந்தான். அநேகமாக அன்று அவனுக்கு இந்திய மதிப்பில் மாதம் 5000 ரூபாய் சம்பளமாக இருந்திருக்கும். இதை அவனுக்குப் புரியவைத்து தட்டிக்கொடுத்து மொழி புரியாத நிலையிலும் புத்தி சொல்லி முரட்டுத்தனத்தை தணிய வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தேன்.
என்ன நடந்தது? நான் சாப்பிட வந்த ஒரு சில நிமிடங்களில், லாரியின் உள்ளே இருந்து கடைசியாக இருண்டன சரக்கு மூட்டையை எடுக்க கம்பியின் கொக்கியை இவன் மாட்டிக்கொண்டு இருந்தபோது, கம்பியின் மறுமுனையை சங்கிலியால் பிணைத்து இருந்த ஃபோர்க்லிப்ட்டினை சட்டென பின்னால் இழுத்து இருக்கின்றான் பாலேர்மோ என்ற ட்ரைவர், அவன் பிலிப்பைன்ஸ் தேசத்தவன். சட்டென இழுத்த நொடியில் மூட்டைக்கும் கொக்கிக்கும் இடையில் இருந்த முர்த்தசாவின் விரல் சிக்கி சேதம் அடைந்துள்ளது. விசயம் என்னவெனில் இருவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்து, பாலேர்மோ போலீஸ் வரை சென்று வந்தான். ஆக இவான் நிலைமையும் சிக்கல்தான். ஜாபர், யாரை எப்போது சீட்டுக்கிழித்து வீட்டுக்கு அனுப்பி முதலாளி ஷேக்கிடம் நல்ல பேர் வாங்கலாம் என காத்துக்கொண்டு இருக்கும் கயவன். பாலேர்மோ தெரிந்தேதான் இதை செய்தான் என்று முர்த்தாசா எழுதிக்கொடுத்தால் அவன் வேலை காலி. ஜாபரின் ஆபீசுக்கு இவனுடன் நான் போனவுடன் ஜாபர் அதையேதான் கேட்டான், "பாலேர்மோ வேண்டும் என்றே செய்தானா? சொல்" என்றான். ஜாபர் மட்டுமல்ல, யாருமே எதிர்பாராத விதத்தில் "இல்லை" என்று சொல்லிவிட்டான் முர்த்தாசா. உடனடியாக ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் எழுதப்பட்டது, நான் கையெழுத்து இட்டேன். இதனிடையே ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்க, ஜாபர் தன் காரிலேயே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அடிப்பட்டபின் ஏறத்தாழ அரை மணி நேரத்திற்கு பின் அவன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டது குறித்து, நான் மறுநாள் காலையிலேயே ஒரு ரிப்போர்ட் எழுதி, மிகப்பெரிய எந்திரங்களும் மிகப்பெரிய ஸ்டோரும் இருக்கும் தொழிற்சாலையில் எப்போதும் ஒரு டாக்டர், ஆம்புலன்ஸ் தயாராக இருப்பது அவசியம் என்று எழுதி கம்பெனியின் தலைவரான உரிமையாளருக்கு அனுப்பினேன்.
மறுநாளும் லாரிகளிலிருந்து சரக்கு மூட்டைகளை இறக்கிக்கொண்டு இருந்தபோது கம்பெனியின் உதவிப் பொதுமேலாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் உரிமையாளரின் தம்பி. "உனக்கென்ன, கம்பெனியின் ஜி.எம். என்ற நினைப்பா? உடனே வந்து என்னை சந்தி"என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான். விசயம் விவகார வடிவம் எடுப்பதாக உணர்ந்தேன். நான் அங்கே சென்றபோது ஜாபரும் இருந்தான். தம்பிக்காரன் கையில் நான் தலைவருக்கு எழுதிய கடிதம். என்னைப் பார்த்ததும்"வாட் ஈஸ் திஸ்?" என்று கடிதத்தை மேசை மேல் தூக்கி எறிந்தான். "சார், இது என் ஆலோசனை மட்டுமே. தவிர, விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பின்னரே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றீர்கள். அதுவே தலையிலோ வேறு முக்கிய இடங்களிலோ அடி பட்டு இருந்தால் அது ஆபத்தில் அல்லவா முடிந்து இருக்கும்! இது என் ஆலோசனைதான், எடுத்துக்கொள்வதும் தள்ளுவதும் உங்கள் விருப்பம்!" என்று கூறினேன். வேறு எதுவும் பேசாத உதவிப்பொது மேலாளர் "உன்னை வேலையில் இருந்து நீக்குகின்றேன், உன் இக்காமாவை கொடு" என்றான். இக்காமா என்பது அரசு அடையாள அட்டை. அதை திருப்பி வாங்கிக்கொள்வது என்பது ஒருவரை வேலையில் இருந்து நீக்குவது மட்டுமே. நான் பேசாமல் இருந்தேன். இந்த நேரத்தில்தான் லாஹாவும் ஜெஸீமும் உள்ளே வந்தார்கள். ஜெஸீம் தம்பிக்காரனின் செயலாளர் . தம்பி மீண்டும் உறுமினான். நான் உடனே " அப்படித்தான் முடிவு எனில் நான் கம்பெனியின் தலைவரிடம், அதாவது உன் அண்ணனாகிய முதலாளியிடம்தான் கொடுப்பேன். உன்னிடம் தர மாட்டேன், நீ உதவிப்பொது மேலாளர்தான்" என்று கூற, எதிர்பாராத இந்த தாக்குதலால் அவன் அடிபட்டு, அவமானப்பட்டதாக உணர்ந்தான். முகத்தில் குப்பென ரத்தம் பாய, பல்லைக்கடித படியே "தருவாயா மாட்டாயா" என்று நாற்காலியில் இருந்து எழுந்தான். நானோ நாற்காலியில் இருந்து எழாமல் உறுதியாக "மாட்டேன்" என்று சொல்ல, அங்கே ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாவதை ஜாபர் உணர்ந்தான். "நீ கொடுத்துவிடு, நான் பிறகு வாங்கி தந்து விடுகின்றேன்" என்று என்னிடம் அவசர வேண்டுகோள் வைத்தான். காரணம், இதற்கு முன் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் எகிப்து நாட்டை சேர்ந்த கணக்காளர் ஒருவர் மீது தம்பிக்காரன் தாக்குதல் நடத்த, அவனோ தொழில்முறை குத்துச்சண்டை வீரனைப்போலவே ஓங்கி ஒரு குத்துவிட்ட பின்னர்தான் முறையாக குத்துச்சண்டை பயின்றவன் என்ற விசயம் தெரிந்ததாம்.
நான் தொடர்ந்து மறுக்க, இறுதியில் அவன் என் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் பாய, நான் நாற்காலியில் இருந்து எழ, ஜாபர் சரியான நொடியில் இடையில் புகுந்து தடுக்க ஒரு கைகலப்பு நடந்தது. ஜாபர் அவனை தள்ளிக்கொண்டு போய் அரபு மொழியில் ஏதோ சமாதானம் சொல்லி உட்கார வைத்தான். இப்போது நான், "மிஸ்டர்! நீ அந்நிய நாட்டுக்குடிமகனை தாக்கி விட்டாய். நான் இதை சும்மா விட மாட்டேன். உடனே என்னை இந்தியாவுக்கு அனுப்பு" என்று சொல்லிவிட்டு என் மேலங்கியை கழற்றி நாற்காலியில் வீசிவிட்டு வெளியே வந்தேன். லாஹாவும் ஜெஸீமும் நம்ப முடியாத கண்களுடன் நடந்தவற்றை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சற்றே நேரத்தில் விசயம் காட்டுத்தீ போல பரவி விட்டது.
ஜாபர் வெளியே வந்து, "நீ உடனே சென்று அவனிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு வேலையைத் தொடர்ந்து செய்" என்றான். "இவ்வளவு நடந்தபின் இங்கே வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை, அதுவும் இவன் கீழ். விரைவில் விமான டிக்கெட்டை கொடு" என்று சொல்லிவிட்டு கம்பெனியில் இருந்து வெளியேறினேன்.
வேலைக்கு செல்லாமல் க்வார்ட்டர்ஸிலேயே இருந்தேன். என் மன உறுதியை குலைக்கும் வண்ணம் ஐந்தாயிரம் ரியால் அபராதம் கட்டினால் ஊருக்கு அனுப்புவதாக நிர்வாகம் தூது அனுப்பியது. நான் உறுதியாக மறுத்தேன். இதனால் வேண்டும் என்றே என்னை சோர்வடைய செய்யும் நோக்கில் நாளைக் கடத்தியது நிர்வாகம். இடைப்பட்ட நாட்களில் நான் பத்தா என்ற நகரின் பெரிய மார்க்கெட் வீதிக்கு செல்வதும் கடைகளில் வேடிக்கை பார்ப்பதும் ஆக இருந்தேன்.
இந்த நேரத்தில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருந்தது. கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் பாகிஸ்தான், இந்தியா அணிகள் விளையாடும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது, பாகிஸ்தான் அணியில் ஒருவர் அவுட் ஆகும்போது இங்கே இந்திய மக்களின் பிளாக்கில் ஆரவாரம் விண்ணை தொடுவதும், இந்திய வீரர்களை அவுட் ஆக்கும்போது அங்கே பாகிஸ்தானிய பணியாளர்கள் பிளாக்கில் ஆரவாரம் வானத்தை பிளப்பதும் ஆக கிரிக்கெட் ஜுரம் உச்சக்கட்ட வெப்பநிலையில் இருந்தது. இது ஒருவேளை தகராறில் முடியுமோ என்று நான் பயப்படும் அளவுக்கு போனது.
நேற்று முன் தினம் வியாழன் அன்று கம்பெனி டிக்கெட்டை ஒரு டிரைவரிடம் கொடுத்து அனுப்பியது. டிரைவரும் நானும் மட்டுமே சென்றோம். விமானம் புறப்பட இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே கால அவகாசம் இருந்தது, திட்டமிட்டு செய்ததாக நினைத்தேன். ஆனாலும் விமான நிலையம் சென்றோம், இருக்கை இல்லாமல் திரும்பினோம். டிக்கெட் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள், அன்றுதான் கிரிக்கெட் இறுதிப்போட்டி, தற்செயலாக பாகிஸ்தான் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு வந்தன. டிரைவர் இக்பால் பாகிஸ்தான் தேசத்தவர், மென்மையான, மரியாதை மிக்க குணம் கொண்டவர். அங்கு இருந்த ஆறு மாதங்களில், லதா மங்கேஸ்கரின் பழைய பாடல்களை ஒலிக்கவிடாமல் அவர் வாகனத்தை இயக்கி நான் பார்த்தது இல்லை. சரி, இன்றும் நானும் அவரும்தான் என்று எண்ணி இருந்த எனக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. முர்த்தாசாவும் பிற பாகிஸ்தானிய தொழிலாளர்களும் என் அறைக்குள் வந்தார்கள். முர்த்தாசா என் காலில் விழுந்து அழுதான். சக பாகிஸ்தானிய தொழிலாளர்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆதரவாகவும் பணிவாகவும் ஏதேதோ சொன்னார்கள். மட்டுமின்றி, என் இரண்டு சூட்கேஸ்களையும் சுமந்துகொண்டு பெரிய சைஸ் வேனில் ஏற்றியதுடன், நண்பர்கள் மனோகரன், காதர் ஆகியோருடன் விமானநிலையத்துக்கு என்னை வழியனுப்ப வந்தார்கள். "பாய், ஒரு இந்தியனை வழியனுப்ப நம்ம கம்பெனியில் பாகிஸ்தான் மக்கள் வர்றது இதுதான் முதல்முறை" என்று மனோகரன் என்னிடம் மெதுவாக கூறினார், காதர் தலை அசைத்து ஆமோதித்தார். செல்லும் வழி எங்கும் பணியாளர் குடியிருப்புக்களில் இருந்து கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண்போரின் ஆரவாரம் சாலை வரை எதிரொலித்தது.
... .....
ரயிலின் ஜன்னல் இறுக மூடியிருந்தாலும் அதையும் மீறி சிலீர் காற்று உள்ளே நுழைந்து சுதந்திரமாக உடலை தீண்டுவதை தடுப்பதில் போர்வை தோல்வி கண்டது.

திங்கள், நவம்பர் 09, 2020

வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா ச்சீஸ் பிஸ்ஸாவும்

 

மதுரையில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் எல்லாம் சேரவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக நானும் கைத்தறி நெசவுக்கு சென்றேன். இடையில் நெசவுக்கான புது ஜக்கார்ட் தறிகள் ஏராளமாக நிறுவப்பட்ட போது அவற்றுக்கான புதிய ஜக்கார்ட் டிசைன் அட்டை தயாரிப்பது, புதிய தறியையே நிறுவி, பாவும் ஊடுமாக புதிய கைத்தறி பூவேலைப்பாடு கொண்ட பூத்துவாலையை முதல் முதலில் நெய்து, வண்ணமயமாக மின்னும் துண்டை அதிசயமாக பார்ப்பது என கூலிக்கு வேலை செய்தேன். சோவியத் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த துண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கட்சி, சி ஐ டி யு என அறிமுகம் ஆன புதிது என்பதால் நம் உழைப்பில் உருவாகும் ஒரு துண்டு சோவியத்துக்கு செல்கின்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. தவிர வட மாநிலங்களுக்கும் இந்த துண்டுகள் விற்பனை ஆகின. வட இந்திய முதலாளிமார்களுடன் உரையாடும் பொருட்டு செல்லூரின் பண்ணாடிமார்கள் இந்தி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு இந்தி கற்றுக்கொண்டார்கள்!
மலையாளிகள் கணிசமான அளவுக்கு செல்லூரில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்காக என்றே மாலை நேரத்தில் அரிசிப்புட்டு, கேழ்வரகுப்புட்டு, நல்லெண்ணெய், சுண்டக்கடலை, அப்பளம் என விற்கும் கடைகள் இருந்தன. வாய்க்கு ருசியான இந்த உணவுகளுக்கு நானும் பழகினேன். இதை சாப்பிட்டுவிட்டு மீனாட்சி காலேஜில் இருந்து கல்பாலம் செல்லும் வழியில் உள்ள தள்ளுவண்டிகளில் தோசை, கறி, குடல், ஆம்லெட் என அதையும் நிரப்பி வீட்டுக்கு சென்று 'இரவு உணவை' முடிப்பேன். எல்லாமும் 2, 3 ரூபாயில் முடிந்துவிடும். ஆனையூர் வெங்கடாசலபதி தியேட்டரில் படம் பார்க்கும் முன் வெளியே உள்ள பரோட்டா கடையில் கறி, ஆம்லெட், பரோட்டா என்று சாப்பிட்டால் 1.25 ரூபாயில் முடிந்து விடும்.
ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். தினசரி 5, 6 ரூபாய்தான் சம்பளம். ஓவர் டைம் செய்தால் மணிக்கு25 பைசா கிடைக்கும். 2 ரூபாய்க்கு தட்டு நிறைய மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கும், நெய் மணக்க மணக்க சாப்பிட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
பின்னர் ஆவடியில் பயிற்சியாளர் வேலை கிடைத்து சென்னை வந்தேன். ஊதியம் அல்ல, உதவித்தொகைதான். ஒரு வருடம் என் அண்ணனுடன் மிகவும் பிஸியான குடோன் தெருவில் தங்கி இருந்தேன். ஆவடிக்கு மாத சீசன் டிக்கெட் 18 ரூபாய்தான். காலை சிற்றுண்டி தொடங்கி இரவு உணவு வரை செலவு 7 ரூபாயை தாண்டாது. குடோன் தெரு முனையில் என் எஸ் சி போஸ் சாலையில் மாடியில் இருந்த முனியாண்டி விலாசில் 2 ரூபாயுடன் இரவு சாப்பாடு முடியும், ஆம்லெட் எனில் 50 பைசா எக்ஸ்ட்ரா. உடன் பயிற்சி பெற்ற சிராஜுதீனின் மரியாதைக்குரிய தந்தையார் வழக்கமாக ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவார். தம்பு செட்டி அல்லது மினர்வா தியேட்டர் அருகில் என்று ஞாபகம், ஞாயிறு ஆனால் நானும் சிராஜுடன் அங்கே இருப்பேன், கறி சோறுக்காக! (டிவி சீரியல் நடிகர் ஃபரினாவின் சித்தப்பாதான் சிராஜ், பிற்காலத்தில்!). அந்தப் பகுதியில் இப்போதும் நிறைய மெஸ்கள் உள்ளன. மூன்று மாதம் முன்புதான் சிராஜின் தந்தை காலமானார், அவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். எனது வாசிப்பு பழக்கம் காரணமாக என் மேல் அன்பு செலுத்தினார். பின்னர் ஆவடி வந்து குடியேறினேன்.
75 ரூபாய் மாத வாடகையில் அறை. மாதம் 175 ரூபாய், ஆம் 175, கொடுத்து வள்ளியப்பன் மெஸ்ஸில் மூன்று வேளையும் சாப்பிட்டேன். திருமணம் ஆகாமல் ஆவடிக்கு வேலைக்கு வந்த இளைஞர்களுக்கு சோறு போட்டவர் வள்ளியப்பன். ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான சிற்றுண்டி கள் கிடைக்கும் அவரிடம்! தவிர ஒரு சிறு எவர்சில்வர் அண்டாவில் தேநீர் வேறு, இலவசமாக! அந்த நேரத்தில் அண்ணா பல்கலையில் மாலை நேர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் கிண்டியில் இருந்து பூந்தமல்லி வந்து அங்கிருந்து ஆவடிக்கு பேருந்திலோ லாரிகளிலோ ஏறி இரவு 11 மணிக்கு பசியுடன் மெஸ்க்கு வருபவர்களுக்கு தனியாக சோறு, குழம்பு என எடுத்து வைத்திருப்பார் வள்ளியப்பன். காலையில் பழைய சோறு வேண்டும் என சொல்லி வைத்தால் பத்திரமாக எடுத்து வைத்து கொடுப்பார் வள்ளியப்பன்.
மெஸ் நடத்திய மற்ற இருவர் எனில் பெரியசாமி ஒருவர், மற்றவர் சுப்ரமணி மெஸ். தோழர் கா சின்னையாவின் உறவினர் பெரியசாமி. அதிர்ந்து பேச தெரியாது அவருக்கு. ஆனால் நாம் கேட்கும் அனைத்தும் சத்தம் இல்லாமல் இலைக்கு வரும். அவரிடம் நான் சாப்பிட்ட மீன் குழம்பின் சுவை தனியானது. நம் முகத்தை பார்த்தே இலையில் வேண்டியதை கொண்டு வந்து கொட்டுவார். முருகேசன் மெஸ் கூரை வேயப்பட்ட ஒன்று. தோசை, இட்லி அங்கே அபாரம். காமராஜநகரில் வெங்கடாசலம் மெஸ். அவரும் அப்படியே. இலை காலியாக ஆக கொண்டு வந்து நிரப்பிக்கொண்டே இருப்பார். என்ன வேணும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார், வயிறு நிறையும். பசு மாடுகள் வளர்த்து வந்தார்.
அப்போது நான் வாங்கிய ஊதியம் மிக குறைவு. வள்ளியப்பனுக்கு 175 ரூபாய் மாதக்கடைசியில் கொடுக்க முடியாமல் ஒரு வாரம் தலைமறைவாக இருந்ததும் உண்டு.
இப்போது வள்ளியப்பன் மெஸ் இல்லை. பெரியசாமி மெஸ் அவர் ஓய்வுக்குப்பின் வித விதமான வடிவம் எடுத்து வந்தது. சில நாட்கள் முன்பு ஐஸ் க்ரீம் பார்லர் வடிவம் எடுத்து இருந்தது. பக்கத்தில் இருந்த சுப்ரமணி மெஸ் இடிக்கப்பட்டு பெரிய காம்ப்ளக்ஸ் ஆக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் பிஸ்ஸா வேண்டும் எனக்கேட்டு நின்றான் மகன். பிஸ்ஸா சாப்பிடுவது இல்லை என்று உறுதியுடன் இருந்த என்னை இளக்கினான். டொமினோஸ் சென்றேன். முதல்முதலாக ஒரு பிஸ்ஸா கடையில் நுழைகின்றேன். உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த பலர் ஆங்கிலத்தில் டாக்கிக்கொண்டு இருந்தார்கள். இத்தாலிய மொழியில் பேசியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கலாம் என்று நினைத்தேன். டிவி திரையில் ஓடிக்கொண்டு இருந்த மெனுவில் இருந்து குத்துமதிப்பாக மார்கரீட்டா ச்சீஸ் பிஸ்ஸா என்று தெரிவு செய்தேன், 375 ரூபாய்க்கு பில் வந்தது. வள்ளியப்பன் மெஸ்ஸின் இரண்டு மாத பில்லுக்கும் மேல் 25 ரூபாய் அதிகம். காணாமல்போன பெரியசாமி மெஸ்சுக்கும் சுப்ரமணி மெஸ்சுக்கும் அருகில் இருந்த சில பழைய வீடுகளை இடித்துவிட்டு அதன் மேல்தான் டொமினோஸ் கண்ணாடி பளபளப்புடன் நிற்கின்றது.
வள்ளியப்பனும் பெரியசாமியும் வெங்கடாசலமும் மேல் சட்டை அணியாமல் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு கண்ணுக்குத்தெரியாமல் டொமினோஸ் வாசலில் நின்று என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பதாகப்பட்டது.

'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் - வாழ்க்கைப் பயணம்

 


     பாம்பு மனிதன்' ரோமுலஸ்  விட்டேகர்  - வாழ்க்கைப் பயணம்   

ஆங்கில மூலம்: Zai Whitaker

தமிழில்: கமலாலயன்
வெளியீடு வானதி பதிப்பகம், தொலைபேசி 044 24342810, 24310769
பாம்புகளைப் பற்றி நம் கருத்தும் அவை குறித்த நம் பயமும் வழி வழியாய் நம் மூதாதையர் இடமிருந்து நம் சிந்தனைக்கு கடத்தப்பட்ட ஒன்று என்றே தோன்றுகின்றது. உண்மையில் நாம் அச்சமுற்று விலகி ஓடும் அளவுக்கு பாம்புகள் அல்லது எல்லா பாம்புகளுமே அத்தனை கொடிய விலங்குகளா? எல்லா பாம்புகளுமே விசப்பாம்புகள்தானா? தவிர, சினிமாக்களில் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளபடி பாம்புகளை, அதிலும் காதலர்களாக இருக்கின்ற பாம்புகளை ஒரு வேளை நாம் கொன்றுவிட்டால் அவை மறுபிறவி எடுத்து தகுந்த பின்னணி இசையுடன் நம்மை கொன்று பழி தீர்த்தே தீரும் என்பது உண்மையா?
சென்னைக்கு 80களின் தொடக்கத்தில் வந்த புதிதில் எல்லோரையும் போலவே சென்னையை சுற்றிப்பார்க்க விரும்பிய போது சொல்லப்பட்ட இடங்களில் கிண்டி பாம்பு பண்ணையும் முட்டுக்காடு முதலைப்பண்ணையும் இருந்தன. இரண்டையும் பார்த்தேன். பாம்புகள், முதலைகள், ஆமைகள் குறித்த ஒரு அறிமுகமாகவும் அன்றைய பொழுதுபோக்காகவும் அது முடிந்தது. தவிர நேஷனல் ஜ்யாக்ரபி, டிஸ்கவரி, அனிமல் பிளானேட் சேனல்கள் 90களின் இறுதியில் அறிமுகம் ஆனபோது ஊர்வன குறித்த சற்று அதிகமான செய்திகளையும் ரோமுலஸ் விட்டேகர் என்ற சாகச மனிதரையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் பின்னர்தான் பாம்பு, முதலைப்பண்ணைகள் அவருடைய சொந்த முயற்சியில் நிறுவப்பட்டவை என்று தெரிந்தது. மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியில் வீடு கட்டிக்கொண்டு வந்த பின் சுற்றியுள்ள காலி மனைகள், புதர்களில் இருந்து அடிக்கடி என் வீட்டுக்கு வருகை தரும் வித விதமான ஊரும் விருந்தினர்கள் குறித்து கவனமும் அவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வமும் வந்தது.
நாட்கள் செல்ல செல்ல, என் குடும்பத்தினர்க்கு பாம்புகள் குறித்த அச்சம் விலகியது. அதன் விளைவுதான் மலைப்பாம்பு என்று தவறாக கருதி கொடிய கண்ணாடி விரியனை உயிருடன் பிடித்து ஒரு நாள் இரவு முழுக்க வீட்டில் வைத்திருந்ததும் மறுநாள் வண்டலூர் விலங்கு காட்சி சாலை ஊழியரை தொலைபேசியில் அழைத்து விசயம் சொன்னபோது மிக மிக கவனமாக அதை ஊருக்கு வெளியே காட்டில் கொண்டு சென்று விடுவித்ததும். கமலாலயன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ரோமுலஸ் ராஜநாகத்தை வெறும் கையால் பிடித்த சாகசங்களை படித்து வியப்புற்றாலும், மிகுந்த பயிற்சி பெற்ற அவரே தொடக்க காலங்களில் பாம்புகளிடம் பெற்ற கடிகளால் இப்போதும் கூட கை விரல்களில் தொந்தரவை அனுபவித்து வருகின்றார் என்பதை தெரிய வரும்போது நான் உயிருடன் இருப்பதே உண்மையில் மிகப்பெரிய அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும்.
சென்ற வருடம் வடநெம்மேலியில் உள்ள முதலைப்பண்ணைக்கு சென்றிருந்த போது இருளர் சமூக சகோதரர்கள் பாம்பு விஷம் எடுக்கும் நிகழ்ச்சியை பார்த்தோம். இந்தியாவில் காணப்படும் அதிக விசமுள்ள பாம்புகளில் முதல் நான்கு இடங்கள் நாகப்பாம்பு, கட்டு வரியன் (விரியன் அல்ல), கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கே. அமெரிக்காவில் பிறந்து, இளம் வயதில் கப்பலில் நல்ல ஊதியம் கொடுத்த வேலையை விட்டு விட்டு பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து இங்கே தமிழகத்திலும் கர்நாடகாவின் ஆகும்பேயிலும் அந்தமானிலும் பாம்புகளுக்காகவும் முதலை, ஆமைகளுக்காகவும் பண்ணைகளை அமைக்கின்றார். இந்த உயிர்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றார், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றார். புகழ்பெற்ற பறவை மனிதர் சாலிம் அலியின் சகோதரியின் மகளான ஜாயை 1974இல் திருமணம் செய்து கொள்கின்றார். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அடர்ந்த காடுகள், மலைகள் என சுற்றித்திரிகின்றார், காடுகளில் படுத்து உறங்குகின்றார், பாம்புகளிடம் கடிப்படுகின்றார். மனைவியுடன் தேனிலவு சென்ற இடமோ நிலாம்பூர் பள்ளத்தாக்கு. இருவரும் காட்டுக்குள் பாறையில் படுத்து இரவை கழிக்கின்றனர். "அந்த இரவு காதல்வயப்பட்ட இரவாக இருக்கவில்லை. ஆகப் பெரும்பான்மையான எங்களுடைய உரையாடலும் கூட, குழிவிரியன்களைப் பற்றியதாகவே இருந்ததால், அதுவும் காதல் மணம் கமழாத பேச்சுதான். ஆனால், ஊர்வன வகை உயிரினங்களின் மீது வலிமையான ஓர் ஆர்வப்பெருக்கின் தொடக்கமாக அமைந்தது அந்த இரவுதான். எங்களுடைய திருமண வாழ்வின் அஸ்திவாரமாக மாறியதும் கூட அந்த ஆர்வப்பெருக்குத்தான்" என தன் தேனிலவு பாம்புகள், எலிகள், பூச்சிகளுடன் கழிந்த அனுபவத்தை ஜாய் எழுதுகின்றார். உண்மையில் இந்த நூலின் மையமான கருவும் அதுவே - ஊர்வன வகை உயிரினங்களின் மீது வாசகருக்கும் மக்களுக்கும் ஒரு ஆர்வப்பெருக்கை உண்டாக்குவது, விசப்பிராணிகள் என நாம் வெறுத்து ஒதுங்கும் பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிர்கள் இயற்கையை பேணுவதிலும் சுற்றுச்சூழல் சமநிலையை உறுதிப்படுத்துவதிலும் எத்தகைய தலையாய பங்கினை ஆற்றுகின்றன என்பதை நமக்குப் புரிய வைப்பது.
இது மட்டுமா? சென்னையின் புறநகர், செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் இருளர் இன மக்கள் இயற்கையிலேயே பாம்புகளை பிடிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த திறன் படைத்துள்ளவர்கள் என புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹாரி மில்லர் ரோமுக்கு அறிமுகம் செய்து வைத்தபின், அந்த மக்களின் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி, இந்தியாவில் பாம்புக்கடிக்கு மருந்து தயாரிக்கும் மிகப்பெரிய சமூகத்தேவையை ரோம் எப்படி நிறைவேற்றுகின்றார் என்பதையும் அவர்களுக்கான ஒரு கூட்டுறவு சங்கத்தை அவர் எப்படி வெற்றிகரமாக நிறுவி அந்த மக்களின் பொருளாதாரம் மேம்பட உதவினார் என்பதையும் ஒரு நாட்குறிப்பு போல இல்லாமல் மிக சுவாரஸ்யமான ஒரு சாகசக்கதை போல தொய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டே போகின்றார் ஜாய்.
நூலை வாசிக்கும்போது ரோம் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் நமக்கு மரியாதை பிறக்கின்றது. இயற்கை மீதும் சக உயிர்கள், மிருகங்கள், பறவைகள் மீதும் அன்பு பிறக்கின்றது, எல்லா உயிர்களும் ஒன்றாக கூடி சமாதான சக வாழ்வு வாழ்வதில்தான் வாழ்க்கை அர்த்தப்படும் என்று புரிகின்றது. இது நாள் வரையிலும் நாம் உயிர்கள் குறித்தும் இந்த பூமி குறித்தும் கொண்டுள்ள பார்வையில் ஒரு மாற்றத்தை இந்த நூல் உருவாக்குகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நூலை வாசிப்போர் உண்மையில் பாக்கியசாலிகள் என்று மட்டும் சொல்ல முடியும்.
1988இல் ஆங்கிலத்தில் வெளியான நூல் கமலாலயன் அவர்களின் உழைப்பால் இப்போது நமக்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. அழகு தமிழில் அவர் மொழியாக்கம், ஒரு குளிர்ந்த நீரோடையில் கால் நனைத்து நடப்பது போல சுகமாக உள்ளது. அவரையும் வெளியிட்ட வானதி பதிப்பகத்தாரையும் பாராட்டுவோம்.

ஞாயிறு, நவம்பர் 08, 2020

ராமையாவின் குடிசையில் மிஞ்சிய சாம்பலும் மநுவின் அட்வொகேட் கமலஹாசனும்

 

கீழ்வெண்மணியில் 44 விவசாயிகள், தொழிலாளர்கள் ராமையாவின் குடிசைக்குள் நிழக்கிழார்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட நாள் 25 டிசம்பர் 1968.


கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கை சாம்பலை எடுத்து தாளில் மடித்து பத்திரமாக வைத்திருந்தவர் பழம்பெரும் விடுதலைபோராட்ட வீரர் மார்க்சிஸ்ட் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள். தன் ஆவணப்படத்துக்காக அவரை சந்தித்த பாரதி கிருஷ்ணகுமாரிடம் அந்த சாம்பலை கொடுத்தார். 18.12.2005இல் ரஷ்ய கலாச்சார மையத்தில் ராமையாவின் குடிசை வெளியிடப்பட்டது. மிஞ்சிய சாம்பல் மேடையில் முறையாக எடுத்துக்கொள்ளபட்டு இப்போது வெண்மணியில் உள்ளது. கமலஹாசனும் அங்கே இருந்தார்.


கீழ் வெண்மணி கொலைகள் வெறும் சாதீய அடிப்படையில் ஆன கொலைகள் மட்டுமே அல்ல, கூலிப் போராட்டம் மட்டுமே அல்ல. அது இரண்டும் பிணைந்த போராட்டம். நிலப்பிரபுத்துவ கொடூரங்களுக்கு எதிராகவும் சாதிய அடிப்படையில் ஆன கொடுமைகளுக்கு எதிராகவும் ஒருசேர நடத்தப்பட்ட போராட்டம். ஏற்று நடத்திய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


உலகம் எங்கும் நிலப்பிரபுத்துவதுக்கு எதிரான போராட்டம் நடக்கவே செய்தது, இங்கே மட்டும்  அதில் எங்கே இருந்து சாதியும் வந்து சேர்ந்தது? இந்து மதத்தின் சாதீய அடுக்கு அதில் இல்லையா? சாதீய அடுக்கையும் கொடுமைகளையும் நியாயப்படுத்தும் சூத்திரங்கள் அதில் இல்லையா? செருப்பு அணியக்கூடாது, வேட்டி கட்டக்கூடாது, துண்டு போடக்கூடாது, ரவிக்கை அணியக்கூடாது, கொசுவம் வைத்து புடவை கட்டக்கூடாது, திருமணம் ஆனால் பெண்ணை முதல் நாள் இரவு நிலப்பிரபு வீட்டுக்கு அனுப்ப வேண்டும், சவுக்கடி, வாயில் சாணிப்பால் ஊற்றுவது.... என அத்தனையும் எதில் இருந்து வந்தது? ஊற்றுக்கண் எது? மநு அநீதி அன்றி வேறென்ன? 


18.12.2005 அன்று கமலஹாசன் தன் கையில் வாங்கியது திருநீர் அல்ல, அது 44 தலித் மக்களின் சாம்பல், காரணம் மநு. அன்று களத்துக்கு நேரில் சென்ற தோழர்களிடம் நந்தன் என்ற 12 வயது சிறுவன் , நிலக்கிழார்கள் நேரில் நின்று துப்பாக்கியால் சுட்டதை தான் பார்த்ததாக சொன்னான். 300க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள். பின்னர் 1980இல் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலை செய்யப்பட்ட  வழக்கில் முதல் குற்றவாளி அதே நந்தன், 12 வருடங்களுக்குப் பிறகு. பின்னொரு காலத்தில் அதே நந்தன் அதிமுகவில் சேர்ந்தான், அவன் இறந்த பின் அதே வெண்மணியில் அவன் நினைவாக அதிமுக கொடிக்கம்பம் உள்ளதாக, வெண்மணியின் 50ஆவது நினைவு நாளில் பாரதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார். 


நந்தனே திசை மாறி தடுமாறும்போது, அன்று மேடையில் இருந்த கமலஹாசன் தடுமாறுவதும் மநு என்ற ஒன்று வழக்கில் இல்லை என்று மநுவின் அட்வொகேட் ஆக மாறி வாதிடுவதும் வியப்பு அல்ல. அவர் வேலையை அவர் சரியாக செயகின்றார், அவ்வளவுதான்.


கடந்த 20 ஆண்டுகளில் வலதுசாரி ஆர் எஸ் எஸ் தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக இந்து மதத்திற்கு உள்ளேயே இருக்கின்ற தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், இஸ்லாமிய, கிறித்துவ மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதத்தை முறியடிக்க இடதுசாரிகளும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தம்மால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்து வரும் மிக முக்கியமான காலகட்டத்தில்தான் கமலஹாசன் தன் இமேஜை அஸ்திவாரம் ஆக்கி ஒரு இயக்கத்தை தொடங்கினார். ஜனநாயகத்தில் அவருக்கான உரிமை உள்ளது என சிலர் வாதிடக் கூடும். அவர் தன்னை ஒரு படிப்பாளியாகவும் முற்போக்குவாதியாகவும் காட்டிக்கொண்டே வருபவர். பலர் அதனை நம்பவும் கூடும். 2005இல் வெண்மணிக்கான மேடையில் நின்ற அவர், உண்மையில் இக்கட்டான இக்காலகட்டத்தில் மக்கள் ஒற்றுமைக்காக நிற்க வேண்டும், மக்கள் ஒற்றுமை பிளவு படக் கூடாது என உணர்ந்து இருப்பார் எனில் அவர் இத்தகைய ஒரு இயக்கத்தை தொடங்கி இருக்க மாட்டார். தொடங்கியது மட்டும் இல்லை, மநு அநீதி என்ற ஒன்று வழக்கத்திலேயே இல்லை என்று வாதிடவும் முற்பட்டுள்ளார். கூடவே இன்னோரு வேலையையும் இழுத்துப்போட்டு செய்கின்றார். மிக மோசமான பிற்போக்கு கருத்துக்களுக்கு சொந்தக்காரரும் மக்கள் போராட்டங்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசியாய் இருப்பவரும் ஆன மற்றொரு பிளவுவாத திசை திருப்பல் சக்தியான ரஜினிகாந்தை 'அவர் போன்ற நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்' என்று வருத்தம் வேறு படுகின்றார். 


தேசம் வலதுசாரி இந்துத்துவா சக்திகளிடம் இருந்து மீள வேண்டும், அதன் பொருட்டு மக்களின் ஒற்றுமையை திரட்டி மக்கள் சக்தியை ஒரு அணியின் கீழ் கொண்டு வர வேண்டும் என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் கடுமையாக போராடி வரும் நேரத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் எடுக்கின்ற இது போன்ற பிளவுவாத நடவடிக்கைகளால் உண்மையில் பலன் பெறப்போவது அதே வலதுசாரி தீவிரவாதிகள்தான். பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் எடுத்துள்ள நிலை இது போன்றதே, அங்கு மக்களின் வாக்கை பிரிப்பதன் மூலம் பிஜேபிக்கு ஆதரவான நிலையை அவர் எடுத்துள்ளார். மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், வரலாறு இவர்களை குப்பைத்தொட்டியில் வீசும்.