சனி, ஏப்ரல் 19, 2014

சாம்பல்தேசம்-13 (நெடுங்கதை)



இருக்கிற குழப்பம் போதாது என நடுவே ஒரு திருப்பமாக சேதார் மக்கள் கட்சி என்றொரு புதிய கட்சி மத்திய பஞ்சாயத்து தேர்தலில் திடீரெனக் குதித்தது. அதன் தலைவர் கந்தன்பச்சைக்கேணி மக்கள் முன் வைத்த தேர்தல் அறிக்கையில் ஒரே ஒரு வரிதான் இருந்தது: எல்பிஜி தேசமக்கள் அனைவருக்கும் சேதார் கார்டு வழங்கியது நானே; உயிர்வாழ்வதற்கு அடையாளமாகவும் அத்தியாவசியமானதும் ஆன சேதார் கார்டு வாங்குவீர்! செழிப்பாக வாழ்வீர்! சேதார் வாழ்வின் ஆதார்! வாக்களிப்பீர் சேதார் கார்டு சின்னத்துக்கு!”.


சேதார் கார்டு என்பது பேரிக்கா நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேசியக்கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டமாகும். சேதார் அட்டை இருந்தால் மட்டுமே ஒருவர் உயிரோடு இருப்பதாக அரசு ஒத்துக்கொள்ளும்; அட்டை இல்லாதவர்கள் தான் உயிரோடு இருப்பதாக உள்ளூர் சேதார் அதிகாரியிடம் தற்காலிக சான்றிதழ் பெற்று கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும்; இந்த அட்டை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர முடியாது; பொதுக்கழிப்பறை, பேருந்துநிலையம், ரேசன்கடை, சமையல் எரிவாயு, பிரசவவார்டு, சுடுகாடு என அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சேதார் அட்டையே ஆதாரம். பொதுக்கழிப்பிடங்களில் சேதார் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தேசம் நாறி நாற்றமெடுத்தது;  கணவன் மனைவி தாம்பத்திய உறவு கூட சேதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேசியக்கட்சி அரசு கறாராக அறிவித்தது;


இதன்பொருட்டு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் படுக்கை அறை வாசலில் சேதார் பஞ்சிங் மெஷின் வைக்கப்பட்டு தலைநகரில் வரவுசெலவு மந்திரியின் கம்ப்யூட்டரோடு நேரடியாக இணைக்கப்பட்டது.
சேதார் அட்டையை இதில் செருகி அனுமதி பெற்றாலன்றி படுக்கை அறையில் நுழைய முடியாது;  இதன் காரணமாக சேதார் இல்லாதவர்கள் உயிரோடு திரியும் பிணங்களாக வெறுத்துப்போய் மூலையில் முடங்கிக்கிடந்தார்கள். சேதார் அட்டை உள்ளவர்களோ அட்டையை கழுத்தில்  தொங்கப்போட்டுக்கொண்டு இல்லாதவர்களின் கண்ணில் படும்படி வேண்டுமென்றே நடமாடி வெறுப்பேத்தினார்கள்; சேதார் அட்டை காண்ட்ராக்ட் பேரிக்கா நாட்டின் ஹைபீம் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.

பேரிக்கா நாட்டின் ஜனாதிபதி, உலக வட்டிக்கடையின் தலைமை அதிகாரி ஆகியோரின் கம்ப்யூட்டரோடும் சேதார் அட்டை விவரங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன; உலகத்தில் எந்த மூலையிலும் பேரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற சொறிநாய் மீதும் கூட யாராவது கல்லை எறிந்தாலும் உடனடியாக பேரிக்கா ஜனாதிபதி சேதார் அட்டை பதிவுகளை நொடியில் பரிசோதித்து தன் நாட்டு நாயின் மீது கல்லை எறிந்தது யார் என்பதை இரண்டு நொடிகளில் கண்டுபிடித்து ஆளை அலேக்காக கறுப்புமாளிகைக்கு தூக்கி வந்துவிடுவார்.


வெறும் அட்டை கொடுத்த ஒரு நபரே மத்திய பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும் எனில் நாம் என்ன இளிச்சவாயர்களா என கொந்தளித்தார்கள் ரேசன் கடை ஊழியர்கள்; அட்டையை விடவும் பெரியவிசயமான  அரிசி கோதுமை சீனி மண்ணெண்ணெய், வெள்ள காலங்களில் அரிசி பணம் வேட்டி சேலை என அனைத்தும் வழங்கும் நாம் 555 தொகுதிகளிலும் தராசு சின்னத்தில் போட்டியிடுவோம் என ரேசன் ஊழியர்கள் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்போட்டு வேட்புமனுவும் தாக்கல்செய்தார்கள்; ரேசன் ஊழியர்களே மக்களுடன் நேரடித்தொடர்பு உள்ளவர்கள் என்பதால் இப்புதிய திருப்பம் தேசியக்கட்சிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.


வாகனச்சோதனையில் ஆயிரம் பர்கானாவுக்கு அதிகமாக கணக்கின்றி கொண்டு செல்பவர்களின் பணத்தை தேர்தல் கங்காணிகள் கைப்பற்றினார்கள்; இதனால் கல்யாணம் காதுகுத்து பூப்புனிதநீராட்டு இறுதிச்சடங்கு பள்ளிக்கூட கட்டணம் மருத்துவமனை செலவு போன்றவற்றுக்கு வட்டிக்கு பணம் வாங்கும் எல்பிஜி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்; வட்டிக்காரர்களில் பெரும்பாலோர் சிமுக அஇசிமுக கம்பவுண்டர் கட்சி தேசியக்கட்சி ராஷ்ட்ரீயக்கட்சி அந்தர் ராஷ்ட்ரீயக்கட்சி போன்ற பெருந்தலைகள் என்பதால் தமது பிசினஸ் பாதிக்கப்படுவதை உணர்ந்து தேர்தல் கங்காணியம் அத்துமீறி செயல்பட்டு சாமான்யமக்கள் வயிற்றில் அடிப்பதாக ஒற்றுமையாக குற்றம் சாட்டினார்கள். ‘சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான்என கங்காணியம் அடித்துச்சொல்லிவிட்டது.  இதற்கு மறுநாள் நடந்த வாகனச்சோதனைகளில் பிடிபட்ட கரன்சிகள் எல்லாம் பேரிக்கா டாலர்களாக இருப்பதுகண்டு கங்காணிகள் குழப்பமும் வியப்பும் அடைந்தார்கள். ‘பர்கானாவுக்குத்தான் தடையே தவிர டாலருக்கு இல்லைஎன தேசியக்கட்சி ராஷ்ட்ரீயக்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டிவைத்து கொக்கரித்தபின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் கங்காணிகள் கையைப்பிசைந்து கொண்டிருப்பதாக சற்றுமுன் கிடைத்த தகவல் கூறுகின்றது. 


தேர்தல் நாள் நெருங்க நெருங்க இளவரசரின் சிக்கன எளிய வாழ்க்கை மேலும் தீவிரம் அடைய, மீண்டும் நள்ளிரவில் டிவியில் பிரமாதராய் கையில் கால்குலேட்டர், லேப்டாப், காப்பி ஃப்ளாஸ்க் சகிதம் தோன்றி சற்றுமுன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி ராஷ்ட்ரீயக்கட்சிக்கு 0.0001 சதவீத வாக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், தேசியக்கட்சிக்கு 95.99 சதவீத வாக்கு கிடைப்பது உறுதி என்றும், மீதி எல்லாம் கள்ள ஓட்டு என்றும் குர்தாவைப்போட்டுத் தாண்டி சத்தியம் செய்தார்.

 


தொடரும்...

புதன், ஏப்ரல் 16, 2014

சாம்பல்தேசம்-12 (நெடுங்கதை)



"துஷ்ட தேவதையே! துக்கிரியே! துஞ்சுபுலி இடறாதே! துன்பக்கேணியில் நீந்தாதே! வெண்மணியில் சாம்பல் தயாரிக்கும்போது அரிதாரம் பூசியவனுடன் பொறிபறக்க குளுமணாலியில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த உனக்கு வரலாறு தெரியுமா? ஜெனெரல் டயரின் துப்பாக்கியோடு தாதாபாய் நவ்ரோஜியின் தலையைப் பதம்பார்த்த எஸ்பி சாண்டர்ஸின் குண்டாந்தடியும் என்னிடம்தான் உள்ளது என்ற உண்மையை மறைப்பது கடுஞ்சூரியனை கைக்குட்டையால் மறைக்க முயலும் சிறுமதியீனர்களின் குறுஞ்செயல் அன்றோ! அரசியல் அரைகுறையே! குத்தாட்ட ராணியே செல்லாது உன் போணியே!  அடங்கு இல்லையேல் கண்மணிகள் அடக்குவார்கள்!" என்று தமிழ்ச்சித்தர் தமுக்கொலியில் கட்டம்கட்டி பதிலடி கொடுத்திருந்தார்.

தொடர்ந்து சிதம்பரம், வாச்சாத்தி, திண்ணியம், மேலவளவு, இடுவாய், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், தர்மபுரி, பரமக்குடி போன்ற பல இடங்களிலும் தயாரிக்கப்பட்ட சாம்பலுக்கு சிமுக, அஇசிமுக இரண்டு கட்சிகளுமே போட்டிபோட்டு சொந்தம் கொண்டாடி அறிக்கை விட, கிளைவ்பேட்டையில் ராயப்பேட்டையும் தேனாம்பேட்டையும் சந்திக்கும் முட்டுச்சந்தில் சிமுக, அஇசிமுக கட்சியினர் நேருக்கு நேராக விவாதித்து அனல் பறக்க கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டதில் அங்கே இருந்த கடைகள் வீடுகள் ஏகத்துக்கு சூடாகி தீப்பிடித்து எரிந்தன என்று மாலைபீரங்கி, மாலைடமாரம்  போன்ற பத்திரிக்கைகள் படத்துடன் செய்தி வெளியிட்டன.
சிமுக, அஇசிமுக சாம்பல் புயலில் எங்கே தனது கட்சி இருப்பது தெரியாமல் அடித்துக்கொண்டு போகப்படுமோ என்று பயந்த கம்பவுண்டர் அய்யா  பதட்டமடைந்து, "தேசியக்கட்சியும் ராஸ்ட்ரீயக்கட்சியும் கடாரநாட்டுமக்களை ஏமாற்ற முடியாது! அவர்கள் என்ன இளிச்சவாயர்களா? நாங்க மட்டும் கடந்த காலத்தில் சொம்படிச்சிக்கிட்டா இருந்தோம்? எங்களால் இயன்ற அளவுக்கு மரங்களையும் காடுகளையும் நடுரோட்டில் போட்டு நாங்கள் சாம்பல் தயாரித்ததை நாடு அத்தனை எளிதில் மறந்து விடுமா? நாங்கள் உங்களோடு மத்தியபஞ்சாயத்தில் மருந்துமந்திரியாக இருந்தபோது தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகளை எரித்து அதிலிருந்து சாம்பல் தயாரிக்கவில்லையா? சவால் விடுகிறேன், கடைசியாக தர்மபுரியில் தலித்துக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் எரித்து நாங்கள் தயாரித்த சாம்பல்களை கப்பல் கொண்டு அள்ளினாலும் எவனாலும் முடியாது!

அறிவுகெட்ட முண்டங்களே!
எதில் வேண்டுமனாலும் பங்கு பிரிப்போம், தர்மபுரிசாம்பலை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! சதிடில்லியில் தேசியக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், குஜராத்தில் ராஷ்ட்ரீயக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், கெமிக்கல் பவுடர்கள், கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல்...என அதே சரக்குகளைத்தான் நாங்களும் தர்மபுரியில் பிரயோகப்படுத்தினோம்! அப்படியிருக்க நாங்கள் தயாரித்த சாம்பல் மட்டும் குறைந்துவிடுமா என்ன? ரெண்டு கட்சிகளும் நாகரிகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்! இந்த தேர்தலில் எங்கள் சாதியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது! தில் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா! விச ஊசி போட்டு காலி பண்ணிடுவேன்! முடியலியா, ரயில்தண்டவாளத்தில் படுக்க வெச்சிடுவேன்! ஜாக்கிரதை!" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை விடுத்தார்.


கலர்கலரான துணிகளை உடலிலும் தலையிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைகள் சூழ திடீரென்று தெருவில் வரும் குடுகுடுப்பைக்காரனைப்போல் தேர்தல் சமயங்களில் மட்டும் பிரசன்னமாகி எந்த ஜித்தனும் எதிர்பாராத புழுதிகளைக் கிளப்பி அரசியல் கட்சிகளுக்கு ரணஜன்னி விசஜுரமும், வாக்காளர்களுக்கு சிரிப்பும், அகில உலக  அரசியலில் திரில்லும் வரவைக்கும் குணச்சித்திர கேரக்டரான ஜரிதா கட்சித்தலைவர் அப்புராணிஸ்வாமி எப்போதும் போல வடக்குமாசி வீதியில் ஒரு சந்தில் இருந்த இட்லிக்கடை முன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். "தேசியக்கட்சி, தமிழ்ச்சித்தர் ரெண்டு பேருமே ஜனங்களை நன்னா ஏமாத்தறா. அவா ரெண்டு பேருமே ராஷ்ட்ரீயக்கட்சியோட சாம்பலை எங்கே பதுக்கி வச்சுருக்காங்கறது நேக்கு நன்னாத் தெரியும். அதுக்கான ப்ரூஃப், எவிடென்ஸ் எல்லாம் எங்கிட்டே ஒரு பாலிதீன் பேக்ல சேஃபா இருக்குது. இது பத்தி னைநா சபைக்கு ப்ராது கொடுக்க நாளைக்கு கார்த்தால மூணேகால் மணி ஃப்ளைட்ல பேரிக்கா போறேன். தேர்தலுக்கு முதநாள் ரெண்டாம் ஜாமத்துல இதுபத்துன எவிடென்ஸ் எல்லாம் பத்திரிக்கைகாராளுக்கு வெளியிடுவேன். அக்கார்டிங் டு இன்டர்னேஷனல் சாம்பல் சட்டம் செவன் ஹன்ட்ரெட் ஃபார்டி நைன், தீஸ் கல்ப்ரிட்ஸ்...."என்று அளித்த திகில் பேட்டி மாலைப்பத்திரிக்கைகளில் வருவது தெரிந்து கடாரநாட்டு மக்கள் கட்சி வேறுபாடின்றி கடைகளில் வரிசையில் நின்று, ஏஜெண்டுகள் பேப்பர் கட்டை  சைக்கிளில் இருந்து இறக்கும் முன்னரே முண்டியடித்து வாங்கிப்படித்து விலாநோகச் சிரித்து கடுப்படிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை சற்றே மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள். கட்சிவேறுபாடுகள் கடந்து எல்பிஜி மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியுடைய ஒரே தலைவர் அப்புராணிஸ்வாமிதான் என ஒரு பத்திரிக்கை அப்பாவித்தனமாக செய்தி வெளியிட ‘திஸ் ஈஸ் ஹைலி மிஸ்ச்சீவஸ்! ஐயாம் அப்ரோச்சிங் ஹானரபிள் சுப்ரீம்கோர்ட்!என அவதூறு வழக்குப்போடப்போவதாக அப்புராணிஸ்வாமி அறிக்கை விட்டார்.

தொடரும்...

திங்கள், ஏப்ரல் 14, 2014

சாம்பல்தேசம்-11 (நெடுங்கதை)

ரோஸ் கலரில் கன்னம் என்ற கான்செப்ட் கடாரநாட்டில் ஒர்க்அவுட் ஆகும் என கணக்குப்போட்டு ராஸ்ட்ரீயக்கட்சியின் போக்கு பிடிக்காமல் நேற்று இரவு ரெண்டு மணிக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ்ச்சித்தர் தேசியக்கட்சி கூட்டணியில் இணைந்து ராஷ்ட்ரீயக்கட்சிக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். "சாம்பல், ரயில்பெட்டி, ஒரிசா என்று பேசும் முன் வரலாற்றைப் படித்துப்பார்! டெக்னாலஜி வளராத நாற்பது வருசத்துக்கு முன்னாலேயே வெண்மணியில் சாம்பல் மலைகளையே உருவாக்கியவர்கள் நாங்கள்! அந்த சாம்பல்கள் எல்லாம் எங்கே போயின? சோழநாடு சாம்பலுடைத்து என்பதை மரமண்டைகளான ராஷ்ட்ரீயக்கட்சியினர் உணரவேண்டும், இல்லையேல் கழகத்தின் கண்மணிகள் பல்லுடைத்து உணரவைப்பார்கள்! நீங்கள் தீயில் சாம்பல் தயாரிக்கலாம், நாங்கள் தண்ணீரில் சாம்பல் தயாரிக்கும் தனிக்குடியில் பிறந்தவர்கள்! தாமிரபரணித்தண்ணீரைக் கேட்டுப்பார், கதைகதையாய் சொல்லும்! சிமுக எப்போது ஆட்சியில் இருந்தாலும் தொழிலாளர்கள் விவசாயிகள் எப்போது போராடினாலும் அப்போதெல்லாம் உடனடியாக கண்ணில் பாசத்தோடு நெஞ்சில் நேசத்தோடு இரும்புக்கரம் கொண்டு சாம்பல் தயாரித்ததை வரலாறு சொல்லும்!

”ஜெனரல் டயர் கொடுத்துவிட்டுப்போன துப்பாக்கியை நான் சுவரில் மாட்டவில்லை, என் இதயத்தில் ஆணி அரைந்து இறுதி மூச்சு உள்ளவரையும் நெஞ்சிலே சுமக்கும் உரம் உள்ளவன் நான்! டயரின் துப்பாக்கியை கடார நாட்டில் அதிகமுறை பயன்படுத்தி சாம்பல் தயாரித்தது சிமுக ஆட்சியே என்பதை சின்னப்பிள்ளை கேட்டாலும் சொல்லும்! என்னோடு
மோதாதே! நேற்று இரவு ரெண்டு மணி வரை உன்னோடு இருந்தவன்தானே நான்! உன்னைப்பற்றித் தெரியாதா? உன் செப்படி வித்தையை நாக்பூரோடு நிறுத்திக்கொள்! சாம்பலைப் பற்றி என்னிடம் பேசாதே! எல்பிஜி குடியரசில் விஞ்ஞான ஃபார்முலா அடிப்படையில் முதல்முதலாக சாம்பல் தயாரித்தது சிமுகதான் என்று புக்காரியா கமிசனே கொடுத்த சர்டிஃபிகேட்டை பெரியண்ணா ஆலயத்தில் வரவேற்பரையில் பெருமையுடன் நாங்கள் மாட்டி வைத்திருப்பது உனக்கெங்கே தெரியும்? டங்குவார் அந்துடும் ஜாக்கிரதை! கடாரநட்டையே சாம்பலாக்கும் புனிதப்போரில் என் குடும்பமே நெற்றி வேர்வை சாம்பலில் விழ உழைப்பதை நாடறியும் ஏடறியும்! ஊடுதல் சாம்பலுக்கின்பம் அதனின் இன்பம் தேய்த்து முயங்கப்பெரின் என்று ஐயன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறான்! உங்கள் வாக்கு அரைநிலாவுக்கே! உங்கள் வாக்கு கரி அடுப்புக்கே!" என்று தமிழ்ச்சித்தர் விடுத்த எச்சரிக்கையை டாஸ்மாக் கடைகளில் சிக்கன் ரோஸ்ட்டோடு கண்மணிகள் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.


"இதுக்குத்தான்யா இந்த ஆள கூடச்சேத்துக்க கூடாதுங்குறது" என்று புலம்பிய அருக்காணி கம்பெனி நேற்று இரவு ரெண்டு மணி ஒரு நிமிசத்துக்கு கூட்டணியில் சேர்ந்திருந்த அஇசிமுக தலைவரை உடனடியாக மொபைலில் தூண்டிவிட்டு தமிழ்ச்சித்தருக்கு சூடான பதில் கொடுக்க சொன்னார். அவரும் சேவுராமசாமி, சின்னையன், பன்னீர்சொம்பு, பன்ரொட்டி போன்ற முக்கிய அறிவாளிகளை கலந்தாலோசித்து "ஏய் தமிழ்ஜித்தா! துரோகி! கபோதி! ஜெனரல் டயரின் துப்பாக்கிக்கு நீ மட்டும் சொந்தம் கொண்டாடி தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்காதே! வெண்மணியில் சாம்பல் தயாரிக்கும்போது நாம் ஒரே கட்சியாக ஒன்றாக இருந்துதான் தயாரித்தோம் என்பதை மறைக்காதே! எங்கே அந்த சாம்பல்? உன் வண்டவாளத்தை நாடறியும்! சாம்பலுக்கு கணக்கு கேட்ட புரட்சித்தளபதியை பொன்னிறத்தலைவனை சைக்கிள்செயினால் அடித்தவன்தானே நீ? அதன் பின்தானே நாங்கள் தனியாக சாம்பல் தயாரிக்க ஆரம்பித்தோம்?


 
தாமிரபரணியெல்லாம் ஒரு சாதனையா? சாலைப்பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் வீட்டு அடுப்பில் நான் தயாரித்த சாம்பலை சரித்திரம் சொல்லும்! உறங்கிய பூனைகள் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? பொடா, எஸ்மா,டெஸ்மாவில் நான் தயாரித்த சாம்பலையும் லாக்-அப்புக்களில் நான் தயாரித்த சாம்பல்களையும் லாரி லாரியாக அள்ளினாலும் தீருமா? தர்மபுரியில் பிள்ளைகளை எரித்து நாங்கள் சாம்பல் தயாரிக்கவில்லையா? வாச்சாத்தியின் சாம்பலுக்கு ஈடுஇணை ஏது? உன் யோக்கியதை தெரியாதா? சிறுகுவளையில் பக்கத்துவீட்டில் ஓசியில் சாம்பல் வாங்கி வந்து அதையே அடுத்த தெருவில் காசுக்கு விற்று செகண்ட் ஷோ  பார்த்த நயவஞ்சகன்தானே நீ? உன் ரெண்டு பிள்ளைகளைக்கு நடுவில் பாய் விரித்து நிம்மதியாக தூங்க தில் இல்லாத நீ கடாரநாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றுவாய்?


“பரமக்குடியில்
நாங்கள் தயாரித்த சாம்பலை எங்கே பதுக்கினாய்? டாஸ்மாக் திறந்து கடாரநாட்டின் குடும்பங்களை சாம்பலாக்கி வருவது எனது அரசுதான் என்பதை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது! ஜெனரல் டயரின் துப்பாக்கி உனக்கு மட்டும் சொந்தமில்லை! கருநாகமே! சிறுநரியே! நாக்கை அடக்கிப்பேசு! இழுத்து வச்சு அறுத்துடுவேன்! மூஞ்சி பேந்து போகும் என்று நாகரிகமாக எச்சரிக்கிறேன்! உங்கள் ஓட்டு ரெட்டைத்தலைபாம்புக்கே! வாழ்க புரட்சித்தளபதி நாமம்! வளர்க பட்டை நாமம்!" என்று அறிக்கை விட மாலைப்பத்திரிக்கைகள் ரெண்டே நிமிசத்தில் விற்றுத்தீர்ந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சாசனம் இதுதான் என்று டைம்ஸ் பத்திரிக்கை உடனடியாக விருது அளித்தது. 
தொடரும்....