வெள்ளி, ஜனவரி 29, 2021

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா?

நாம் இன்று என்ன செய்கின்றோமோ அதன் மீதுதான் எதிர்காலம் கட்டப்படும் - காந்தி

1

"அவர்தான் தேசப்பிரிவினைக்கு காரணமானவர்; அவர் முஸ்லிம்களை அரவணைத்தார், இந்துக்களை கை விட்டார்; அவரை வாழ அனுமதித்தோம் எனில் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்; பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு இந்தியாவை வற்புறுத்தினார்; தேசப்பிரிவினையின் போது இந்து அகதிகளின் துயரங்களை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார், ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இஸ்லாமியரகளை ஆதரித்தார்; பாரத்மாதாவை காப்பாற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்". கோட்சேவின் ஆதரவாளர்களும் வலதுசாரி இந்துத்வா தீவிரவாதிகளும் காந்தியை கொல்லப்போவதற்கும், கொன்றதற்கும் கடந்த 90 வருடங்களாக சொல்லிவரும் இந்தப் பொய்களை 1947க்குப் பின்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் நம்பி வளர்ந்துள்ளன.

உண்மை என்ன? மட்டுமின்றி, 1947க்குப் பின் அமைந்த காங்கிரஸ் அரசு உண்மையில் காந்தியின் உயிர் மீது எத்தனை அக்கறை கொண்டு இருந்தது, அவர் வாழ வேண்டும் என்று விரும்பி இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியாதா என்ற கோணம் மிக முக்கியமானது, அதிகம் பேசப்படாதது, விவாதிக்கப்பட வேண்டியது. ஒட்டுமொத்தமான பழியும் அந்த இரண்டு அமைப்புகளை மட்டுமே சாருமா?

2

அவரைக்கொல்ல 5 முறைகளுக்கும் மேல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துமே வலதுசாரி இந்துத்வா தீவிரவாத அமைப்புகள் ஆன ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹா சபா அமைப்புக்களினால் நடத்தப்பட்டவை. 1934 ஜூன் 25, 1944 ஜூலை, 1944 செப்டம்பர், 1946 ஜூன் 29, 1948 ஜனவரி 20, இறுதியாக ஜனவரி 30 அன்று கொலை செய்யப்பட்டார். உண்மையில் 1934க்கு முன்பாகவே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன, அல்லது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியாமல் போனது. எனவே தேதிவாரியான ஆவணங்கள் இல்லாமல் போயின.

இந்த கால வரிசையை கவனித்தால், பாகிஸ்தான், தேசப்பிரிவினை ஆகிய கருத்தாக்கங்கள் முஸ்லீம் லீக்கின் அஜெண்டாவில் இல்லாதிருந்த காலத்திலேயே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது புரியும். அவ்வாறெனில், ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை சொல்கின்ற, அவரது கொலையை நியாயப்படுத்த முன்வைக்கும் "தேசப்பிரிவினைக்கு அவரே காரணம்" என்ற பிரச்சாரம் எப்படி உண்மை ஆகும்?

இந்த இரண்டு அமைப்புக்களிலும் இருந்த உயர்மட்ட தலைவர்களும் காந்தியின் கொலை முயற்சிகளில் நேரடியாக ஈடுபட்டவர்களும் பெரும்பாலோர் பூனா நகரை சேர்ந்த வலதுசாரி உயர்சாதி இந்துக்கள் என்பது தற்செயலானது அல்ல. அது ஒரு இயக்கம். மூன்று முயற்சிகளில் நாதுராம் கோட்ஸேயும் நாராயண் ஆப்தேயும் பிறரும் இருந்தார்கள், இரண்டு முயற்சிகளில் கோட்ஸே பிடிபட்டான். 

நேரடியாக 1948 ஜனவரி 20க்கு வருவோம். ஹிந்து மஹாசபையின் மதன்லால் காஷ்மீரிலால் பாவா, நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே, திகம்பர் பட்கே, கோபால் கோட்ஸே, சங்கர் கிஷ்டய்யா ஆகிய 7 பேர் கூடினார்கள். அவர்கள் திட்டம் இதுதான். டெல்லி பிர்லா மாளிகையில் மாலையில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியின் மேடைக்கு அருகில் வெடிகுண்டு வீசுவது, மக்கள் கலைந்து ஓடும்போது பட்கே அல்லது கிஷ்டய்யா துப்பாக்கியால் காந்தியை சுட வேண்டும். மதன்லால் பாவா வெடிகுண்டை வீசினான். காந்தி தப்பித்தார். இந்த தாக்குதலுக்குப் பின் மதன்லால் கைது செய்யப்பட்டான். போலீசில் அவன் கொடுத்த வாக்குமூலம் தெளிவானது. காந்தியை கொல்ல பூனாவில் இருந்து வந்துள்ள கும்பலில் தானும் ஒருவன் என்று சொன்னதுடன், அவனும் கூட்டாளிகளும் தங்கியிருந்த டெல்லியில் மரினா ஹோட்டலுக்கு போலீசை அழைத்து சென்றுள்ளான். அங்கு இருந்த ஆடைகளில் NVG என்ற சலவைக்குறி இருந்ததால் அங்கே கோட்ஸேயும் இருந்ததை போலீஸ் உறுதி செய்தது. 

அப்போது பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். பம்பாயில் Ruia College இல் இந்தி மொழி பேராசிரியர் ஆக இருந்தவர் ஜே சி ஜெயின். காந்தியை கொல்ல வந்துள்ள கும்பலில் தானும் ஒரு ஆள் என்று பாவா தன்னிடம் கூறியதாக ஜெயின் மொரார்ஜியிடம் சொல்லியிருக்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மொரார்ஜி, அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஆன சர்தார் படேலிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது என்று பட்டேலும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். நடந்தது என்ன? அடுத்த 10 நாட்களில் அதே கும்பல் காந்தியை அதே இடத்தில் கொன்றது.

3

ஜனவரி 20 முயற்சிக்குப் பின்னர் காங்கிரஸின் மத்திய அரசின் உள்துறை, போலீஸ் நிர்வாகங்கள் எச்சரிக்கை அடைந்து முயற்சி செய்து இருந்தால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திருக்க முடியும். ஏனெனில் ஜனவரி 20 வெடிகுண்டு வீச்சுக்கு பின் கைது செய்யப்பட்ட பாவா, தன் வாக்குமூலத்தில், மராத்தி மொழிப் பத்திரிகைகள் ஆன Hindu Rashtra, Agranee ஆகியவற்றின் ஆசிரியர்கள் ஆன கோட்ஸேயும் ஆப்தேயும் தங்கள் கும்பலை சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லியிருக்கிறான். மீண்டும் அவன் வருவான் என்றும் சொல்லியிருக்கிறான். பாம்பே, பூனா நகர போலீஸுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளை நடத்தும் நபர்களை நன்றாகவே தெரியும். ஆனால் டெல்லி போலீஸ் பூனா போலீசின் உதவியை நாடவே இல்லை! இது ஒரு விசித்திரம் எனில், அப்போது டெல்லியில் இருந்த பாம்பே போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரிடம் பாவாவின் வாக்குமூலத்தை கொடுத்து, பாம்பே சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அந்த அதிகாரி என்ன செய்து இருக்க வேண்டும்? பாம்பேக்கு விமானத்தில் சென்று இருக்க வேண்டும், அவரோ ரயிலில் டெல்லியில் இருந்து அலகாபாத் சென்று மீண்டும் இன்னொரு ரயிலை பிடித்து பாம்பே சென்றுள்ளார். அவர் பாம்பே செல்வதற்குள் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே ஆகிய மூவரும் பாம்பேயில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்து விட்டார்கள், அதாவது 31ஆம் தேதி அன்று காந்தியை கொல்வதற்கு.

இத்தனை கொலை முயற்சிகளுக்குப் பின்னும் கூட, தனக்கு கூடுதல் பாதுகாப்பை காந்தி மறுத்துள்ளார், தன்னைக் காண வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்றும் உறுதியாக இருந்துள்ளார். பூனாவின் கொலைக்கும்பல் பற்றி நன்கு அறிந்து இருந்த பாம்பே, பூனா, அகமத் நகர் போலீஸ்துறையை காந்தியின் பிரார்த்தனை கூட்டங்களில் அதன் பிறகாவது நிறுத்தி இருந்தால் கோட்ஸே, ஆப்தே, கார்கரே ஆகியோரை அவர்கள் அடையாளம் கண்டு பிடித்து இருப்பார்கள். ஒருவேளை 30ஆம் தேதி காந்தி உயிருடன் இருந்திருப்பார்.

சர்தார் பட்டேலிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ரகசிய அறிக்கையில், "போலீஸ் அதிகாரிகளும் அரசின் உயர் அதிகாரிகளும் ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளில் ரகசிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தீவிரவாத இந்து அமைப்புகளின் கொள்கைகளை ஆதரிப்பதிலும் பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபடுகின்றனர்" என்றே பதிவுசெய்யபட்டுள்ளது. காந்தியை கொலை செய்ய முயற்சி செய்து வந்த கும்பலோ இந்த இரண்டு அமைப்புகளின் முன்னணித் தொண்டர்கள். எனில் இவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் திரைமறைவில் கூட்டு இருந்ததா? காந்தியை காப்பாற்றுவதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் செய்யாமல் இருந்தது, காந்தி படுகொலை விசாரணை நடந்த விதம், இவை இரண்டையும் கவனித்துப்பார்க்கும் ஒருவர், இப்படித்தான் முடிவு செய்வார்: காந்தி படுகொலை விசாரணையானது, பல ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவற்றை மூடி மறைக்கவே நடத்தப்பட்டது.

4

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை தீவிரவாதிகள், தாங்கள் அணியும் காலணியின் கீழ் காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் படங்களை ஒட்டிவைத்து இழிவுபடுத்துவார்கள். துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தோட்டாவின் இலக்காக காந்தியின் படத்தை ஒட்டிவைத்து சுடுவார்கள். காந்தியின் படுகொலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள், காரணம், இந்து மத புராணங்களில் கதையாக சொல்லப்படும், ராட்சசர்களை தெய்வங்கள் வதம் செய்வதற்கு ஒப்பானது காந்தியின் கொலை என்பது.

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளின் மேல்மட்ட தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பிராமணர்கள் ஆன பேஷ்வாக்கள், சித்பவன் பிராமணர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில், நிர்வாகம், போலீஸ், நீதித்துறை என அதிகார மட்டத்த்தை ஆக்கிரமித்து இருந்தவர்கள் பிராமணர்களே. 1947க்கு முன், அதாவது தேச விடுதலைக்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே ஒரு பிராமண அரசு மஹாராஷ்டிராவில் பூனா பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி செய்த மராத்திய அரசுதான்.  பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதும் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் வந்து விழும் என்று பெரும் கனவுடன் இருந்த பேஷ்வா பிராமணர்களின் நம்பிக்கை, காந்தியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஹரிஜன மக்கள் ஆதரவு, தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம், சமபந்தி உணவு, ஹரிஜன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னது மட்டும் இன்றி நேரடியாக களத்திலும் இறங்கியது ஆகிய நடவடிக்கைகளால் தகர்ந்தது. ஏனெனில் காந்தி மட்டும் அல்லாது, காங்கிரஸ் கட்சிக்குள் மாற்று சிந்தனை கொண்ட ஒருவர், நேரு, பிரதமர் ஆக இருந்ததும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

ஹிந்து ராஷ்டிரக்கனவைத் தோற்றுவித்த சவர்க்காரும் ஹிந்து மஹாசபை உறுப்பினர்களும் இந்தியா எங்கும் வெறித்தனமாக  ஹிந்து மேலாதிக்கத்தை ஆதரித்தும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்த காலமும் அது. சனாதன இந்துக்களும் இந்து தீவிரவாத அமைப்பினரும் காந்தி செல்கின்ற இடங்களில் மட்டுமின்றி, இந்தியா எங்கும் அவருக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்துத்வா கோட்பாட்டுக்கும் மேல் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக விமர்சனங்களை முன் வைத்தவர்கள் மீது நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே கும்பல் பல இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருந்ததாக வரலாறு சொல்கின்றது. எனவே 1934க்கு முன்பாக காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளையும் கோட்ஸே கும்பல்தான் செய்திருக்க வேண்டும். 

தேசப்பிரிவினையின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும், குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து, புதிய பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட வேண்டும், அதேபோல் புதிய பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் எல்லை கடந்து வந்து இங்கே குடியேற வேண்டும், அதன் பின் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துவது எளிது. அதன் பின் இந்த தேசம் நூறு விழுக்காடு இந்து நாடாகும். ஆனால் அப்படியான ஒரு மாபெரும் இடப்பெயர்ச்சியானது வன்முறை மூலமே சாத்தியம் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த காந்தி தன் களச்செயற்பாடுகள் மூலம் அவ்வாறு ஒரு பெரும் கலவரம் மூளாமல் தடுத்தார். வட மேற்கு எல்லையில் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் உண்மையே. ஆனால் அவருடைய இருப்பும் பாத்திரமும் பாதிப்பும் இல்லாமல் போயிருந்தால் ஆர் எஸ் எஸின், ஹிந்து மஹாசபையின் பெரும் கனவுத்திட்டங்கள் ஒருவேளை பல கோடி  மக்களின் உயிரிழப்புக்குப் பின் சாத்தியம் ஆகி இருக்கக்கூடும்.

5

காங்கிரஸின் அணுகுமுறை எப்படி இருந்தது?

காங்கிரஸ் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்த பல தலைவர்கள் நிலப்பிரபுத்துவ, பழமைவாத, சாதிய சிந்தனையில் ஊறியவர்கள். தேசவிடுதலை இயக்கத்துக்கு காந்தியை முன்நிறுத்திய இதே தலைவர்கள், தேசம் விடுதலை ஆன பின் காந்தியின் இருப்பை வெறுப்புடன் நோக்கினார்கள். அவரது நேர்மை, எளிமையான வாழ்க்கை முறை, ஆடம்பர வெறுப்பு, ஹரிஜன மக்களுடன் வேற்றுமை இன்றி பழகியது, தீண்டாமை ஒழிப்பு ஆகியன இந்த தலைவர்களுக்கும் பின்பற்றத் தகாதவையாக இருந்தன. மிக மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தி சொன்னதே. அதிவேக தொழில் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்குப் பதிலாக கிராம சமுதாய இந்தியாவை நோக்கி மெதுவாக முன்னேறினால் போதும் என்ற அவர் வாதம்; காங்கிரஸ் மந்திரிகள் கடல் போன்ற தமது அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற வேண்டும், வீடுகள் இல்லாத மக்களுக்கு அந்த பங்களாக்களை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் காந்தி பேசினார். மவுண்ட் பேட்டன் பிரபுவையும் கூட, அவரது வைசிராய் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும், மாளிகையை தேசப்பிரிவினையின்போது பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆன மருத்துவமனையாய் மாற்ற வேண்டும் என்று வேண்டினார். தேசப்பிரிவினையை திரும்பப்பெற வேண்டி, நான் பாகிஸ்தானுக்கு போவேன் என்றும் கூட பேசினார்.

இப்படிப்பட்ட ஒருவர், நடைமுறைக்கு ஒவ்வாத முதியவர், காலாவதியான ஒரு மனிதராக, இனிமேல் வேண்டப்படாத ஒருவராக, ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபைக்கு மட்டுமின்றி, காங்கிரசில் இருந்த மேல்சாதி நிலப்பிரபுத்துவ இந்துத்வா சிந்தனை கொண்டவர்களுக்கும் ஆனார். ஆக ஒரு தரப்பு நேரடியாகவும் மறுதரப்பு மறைமுகமாகவும் அந்த முதியவரை சமூகத்தில் இருந்து அகற்றிவிடப் பாடுபட்டனர். 

6

ஆக, இஸ்லாமியருக்கான பாகிஸ்தான் என்ற நாடு உருவான பின், இந்துக்களுக்கான ஒற்றை தேசம் ஆன இந்தியா உருவாகும் என்ற தம் கனவு தகர்ந்ததை இரண்டு தீவிரவாத இந்துத்வா இயக்கங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் காந்தியே என்று நம்பினார்கள். (மேலே சொன்ன காங்கிரஸின் முக்கியமான தலைவர்களும் இதையேதான் நம்பினார்கள்!) ஆனால் மிகத் தந்திரமாக என்ன செய்தார்கள்? தமது தாய்நாடு பிளவுப்படுத்தப் பட்டதாகவும், கிழக்கு-மேற்கு பாகிஸ்தான்களில் இந்துசகோதரர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதற்கெல்லாம் காரணம் காந்திதான் என்றும் பிரச்சாரம் செய்து தமது கோபத்திற்கான உண்மையான காரணத்தை மறைத்தார்கள். காங்கிரஸ் தலைவர்களோ, தம் தவறுகளை மறைக்கவும் பழிபோடவும் ஆர் எஸ் எஸ் , ஹிந்து மஹாசபையினரின் இந்த மதவெறி பிரச்சாரம் தமக்கு உதவுவதாக உள்ளூர மகிழ்ந்தனர். அப்புறப்படுத்த வேண்டிய மனிதரை யாரோ ஒருவர் அப்புறப்படுத்தியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனால் பழி தம் மீது விழவில்லை என்று திருப்தி அடைந்தார்கள்.

... .....

உதவிய நூல்: 'Let's kill Gandhi!', Tushar A.Gandhi, Rupa Publications.

காந்தியின் மகன் மணிலால் காந்தி, அவர் மகன் அருண் மணிலால் காந்தி, அவரது மகன் துஷார் காந்தி.

வியாழன், ஜனவரி 28, 2021

To Let - Only for Vegetarians: உணவில் சாதி

 

1

1904ஆம் ஆண்டு. ஈ வெ ராமசாமி நாயக்கர் என்பதுதான் அப்போது அவர் பெயர், கடவுள் பக்தி உண்டு. காசிக்கு செல்கின்றார். பிராமணர்

அல்லாதோர் நடத்திய உணவு விடுதியில் உணவருந்த நுழையும்போது வாயிற்காப்போன் அவரை உள்ளே விட மறுத்தார், அங்கே பிராமணர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு பூணூலை மாட்டிக்கொண்டு நானும் பிராமணன்தான் என்று ஏமாற்றி உள்ளே நுழைய முயற்சித்த ராமசாமியின் அடர்மீசை அவர் பிராமணர் இல்லை என்று காட்டிக்கொடுத்தது, கீழே தள்ளப்பட்டார். பசியால் வாடிய அவர் எச்சில் தொட்டியில் வீசப்பட்டதை உண்டார். அங்கிருந்து திரும்பும்போது கடவுள் மீதான நம்பிக்கையை கைவிட்டவர் ஆக இருந்தார்.

பிற்காலத்தில் அவரே காங்கிரஸில் இணைந்தபோதும் காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் என தனித்தனியே பந்தி பரிமாறப்பட்டதையும் கண்டு கொதித்தார். காங்கிரஸ் மாநாடுகளில், 'பிராமணர்களுக்கு தனி இடம், தனி சாப்பாடு உண்டு' என்று விளம்பரமே செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் சாதிப்பாகுபாடு இருந்தது. இதனை எதிர்த்து பெரியாரும் ஜீவானந்தமும் வரதராஜுலுவும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 1901 காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற பிரதிநிதிகள் வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையை பின்பற்றியதாக காந்தி தன் தன்வரலாற்றில் வேதனையுடன் இப்படிக் குறிப்பிடுகிறார்: தமிழர்களின் சமையல் கூடம், மற்றவர்களின் சமையல் கூடத்துக்கு தொலைவில் இருந்தது. தாங்கள் சாப்பிடுவதை பிறர் பார்த்தால் தோஷம் என்று தமிழ்பிரதிநிதிகள் கருதினார்கள். இது வர்ணாசிரமத்தின் சீர்கேடாகவே எனக்கு தோன்றுகிறது.

காங்கிரஸில் பெரியாரால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஏன் நீடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

2

உணவு என்பது அடிப்படை மனித உரிமை என்ற நிலை மாறி, பணம் படைத்தவனுக்கு உணவு கிடைக்கும், மற்றவன் பிச்சை எடுக்கலாம் அல்லது பட்டினியால் சாகலாம் என்ற நிலைக்கு உலகம் வந்துள்ளது அல்லது உலகளாவிய கார்பொரேட்டுகளால் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் 35,000 பேர் இந்த விஞ்ஞானம் முன்னேறிய நவீன காலத்தில்தான் பட்டினியால் சாகின்றார்கள். அதே நேரத்தில் உலகம் எங்கும் ஒரு நாளில் மட்டும் ராணுவங்களுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் அரசுகள் பல நூறு கோடி டாலர்களை செலவு செய்துகொண்டே இருக்கின்றன, அதாவது மக்களின் வரிப்பணம் கமிஷன்களுக்கு செலவு செய்யப்படுகின்றது. இந்தியாவில் மட்டும் தினமும் சுமார் 30 கோடி மக்கள் இரவில் உணவின்றி பட்டினியுடன் உறங்க செல்கின்றனர்.  சுமார் 22.5 கோடி இந்திய மக்கள் சத்துணவுக் குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மறுபுறம் உணவுப்பொருட்களின் விலையோ அரசே நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் பெரும் மக்களாலும் வாங்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே இருக்கின்றது. இப்போது மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களும், அம்பானி, அதானி போன்ற பெரும் கார்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே கொழுத்து செழிக்க வழி செய்யும். விவசாயம், விவசாயிகள் நலன், விளைபொருள் விலை நிர்ணயம், மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஆகிய அடிப்படை கடமையில் இருந்து தன்னை முற்றாக விலக்கிக்கொள்வதில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஒரு அரசை இந்திய மக்கள் இப்போது பார்க்கின்றனர்.

3

இந்தியா, பல பஞ்சங்களை கண்டுள்ளது, இப்பஞ்சாங்களில் உணவு கிடைக்காமல் செத்தவர்கள் பல கோடி மக்கள். 1865-67 ஒரிசா பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1868-70 ராஜஸ்தான் பஞ்சத்தில் 15 லட்சம் மக்கள், 1876-78 சென்னைப் பஞ்சத்தில் 1.08 கோடி மக்கள்,  1896-97 இந்திய பஞ்சத்தில் 50 லட்சம் மக்கள், 1899 வங்கப் பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1943 பஞ்சத்தில் 30 லட்சம் மக்கள் செத்து மடிந்துள்ளனர். இதில் பிரிட்டிஷ் அரசு காலத்தின் 1943 பஞ்சம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. அன்று பிரிட்டிஷ் பிரதமர் ஆக இருந்த சர்ச்சில், இரண்டாம் உலகப்போரின் பாதிப்பில் இருந்து இங்கிலாந்தை காப்பாற்றவும் ராணுவத்துக்கான இருப்பை வைக்கவும் பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு வழக்கமாக வந்து கொண்டு இருந்த அரிசி வரத்தை தடை செய்து இங்கிலாந்துக்கு கொண்டு சென்று இந்திய மக்களை சாகடித்தார்.

இவ்வாறான பஞ்ச காலங்களில், பொருளாதார வசதி படைத்தோர் இரக்கம் கொண்டு மக்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்து அரிசிக்கஞ்சியும் துவையலும் இலவசமாக கொடுத்து காப்பாற்றிய வரலாறும் இருக்கின்றது. இதுவன்றி, 1925இல், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், Labour Advisory Board உறுப்பினர் எம் சி ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில், பெண் குழந்தைகள், ஆதிவாசிகள், தலித் மக்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய மக்களை பள்ளிக்கூடங்களுக்கு வர வைக்கும் முயற்சியாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் மதிய உணவுதிட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிரெஞ்ச் நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில் இதே போன்ற மதிய உணவுதிட்டம் 1930இல் கொண்டுவரப்பட்டது. காமராஜர் ஆட்சியில் அவரது மதிய உணவுத்திட்டத்துக்கும், பின்னர் எம் ஜி ஆரின் காலத்தில் அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கும் இதுவே முன்னோடி.

ஆனால் இந்த இலவச உணவுக்குள் வெவ்வேறு வடிவங்களில் சாதி வந்தது. இப்போதும் இருக்கின்றது. பட்டியல் இன மாணவர்களுக்கு தனியே உணவு பரிமாறுவது, உணவின் அளவைக் குறைப்பது, பட்டியல் இன மாணவர்களுடன் பிற சாதி மாணவர்கள் உணவு உண்ண மறுப்பது அல்லது பிற சாதிகளை சேர்ந்த பெற்றோர் தம் குழந்தைகளை உணவு உண்ண அனுமதிக்க மறுப்பது. தலித் சமூக மாணவர்களுக்கு தனி இடம், தட்டு என பாகுபாடு காட்டுவது, பிற சாதி மாணவர்களின் தட்டுகளை எடுத்தாலோ தொட்டாலோ அடி உதைக்கு உள்ளாவது.   இன்னொரு வடிவம், தலித் சமூக சமையல் தொழிலாளர்கள் சமைக்கும் உணவை பிற சாதி மாணவர்கள் உண்ண மறுப்பது.

4

1569ஆம் ஆண்டு பேரரசர் அக்பர், சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாஸை சந்திக்க விரும்பி பஞ்சாபுக்கு வருகின்றார். பேரரசரை மிக விமர்சையாக வரவேற்க சீக்கிய மக்கள் ஏற்பாடுகளை செய்ய முனையும்போது, குரு சொல்கின்றார், "நம் அனைவரையும் போலவே அக்பரும் ஒரு மனிதரே. குருவின் வசிப்பிடம் எல்லோருக்கும் கதவை திறந்து வைத்துள்ளது. அரசரும் அவர் குடிகளும், இந்துக்களும் இஸ்லாமியரும், ஏழைகளும் பணம் படைத்தோரும் இங்கே சமம். எனவே அக்பரை வரவேற்க தனி மரியாதை எதுவும் தேவையில்லை, எல்லோருக்கும் என்ன மரியாதையோ அதுவே அவருக்கும்."

பேரரசர் அக்பர், ஹரிப்பூர் ராஜாவுடன், கோவிந்த்வாலுக்கு வருகின்றார். குருவும் மற்றோரும் அவரை வரவேற்று எல்லா இடங்களையும் காட்டுகின்றனர். லாங்கர் எனப்படும் இலவச உணவுச்சாலையில், வழிப்போக்கர்கள், பிச்சை எடுப்போர், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இன்றி மட்டுமல்ல, சாதி மதம் கடந்து எல்லோரும் வரிசையில் அமர்ந்து ஒரே விதமான எளிமையான உணவை உண்டுகொண்டு இருப்பதை கண்டு அக்பர் வியப்படைகின்றார். பகல் இரவு என மூடப்படாமல் உணவு பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மீதியாகும் உணவு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் இரையாகின்றது, எனவே உணவு வீணாவதில்லை. அக்பரும் ஹரிப்பூர் ராஜாவும் அதே மக்களுடன் வரிசையில் உட்கார்ந்து உணவை உண்கின்றனர். அதன் பின் நடந்த உரையாடல் மிக முக்கியமானது. 

இதன் பின்னர், குருவுக்கு மிகப்பெரிய அளவுக்கு  நிலம் தானமாக தர அக்பர் முன்வருகின்றார். குரு அமர்தாஸ் நன்றி தெரிவித்து கூறுகிறார், "அரசரே! தானமாக எதையும் நான் பெறுவதில்லை. மக்கள் உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், அதில் பிறருக்கு உதவ வேண்டும், இந்த லாங்கருக்கு அவ்வாறு உதவினால் போதும்". நிலத்தை வாங்க மறுக்கின்றார். பிற்காலத்தில், குருவின் மகள் Bhaniயின் திருமணப் பரிசாக அந்த நிலத்தை அக்பர் வழங்கியதாக வரலாறு சொல்கின்றது.

5

வாடிய பயிரைக் கண்டா போதெல்லாம் நானும் வாடினேன் என்பார் ராமலிங்க வள்ளலார். முற்றும் துறந்த முனிவர்கள் என்று நாம் அறிந்தவர்கள் ஒருவர் கூட அடுத்த மனிதனின் பசி குறித்தோ பசியைப் போக்குவது குறித்தோ பேசியது இல்லை, அவர்கள் அறிந்தது எல்லாம் இறைவன் திருவடியை எப்படியாவது பற்றி சொர்க்கம் போகும் வழியை காண்பதுதான். ஆனால், பசியின் கொடுமையை வள்ளலாரைப்போல் இத்தனை நுட்பமாக சொன்னவரும் இலர், பசியை ஆற்றிக்கொண்ட ஒருவனின் உடலும் உள்ளமும் அடையும் பேரானந்தத்தையும் அவரைப்போல் விவரித்தவரும் இலர். அந்த வகையில் அவரது அணுகுமுறை ஒரு பொருள்முதல்வாதியின் அணுகுமுறை. அவர் ஏற்றி வைத்த விளக்கிலும் தீ, அவர் மூட்டிய அணையாப்பெரும் அடுப்பிலும் தீ. 1867 மே 23 வைகாசி 11 அன்று அவர் சத்திய தர்ம சாலையில் அணையா அடுப்பை ஏற்றுகின்றார், 150 வருடங்கள்! அணையாத அடுப்பு, அடுத்தவன் பசி தீர்க்கும் அடுப்பு! "உலகில் தர்மம் உள்ளமட்டும் இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று சொல்லித்தான் அவர் அந்த அடுப்பை பற்ற வைத்துள்ளார். எவரிடமும் கை நீட்டி தானமாக பெறாமல் மக்களிடம் இருந்து பெறப்படும் கொடைகளால் அங்கு வரும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கப்படுகின்றது, ஒரே வரிசை, சாதி, மதம், இனம் பாராது ஒரே வரிசை, ஒரே உணவு.

பெண் விடுதலையை வீட்டுக்குள் இருந்து தொடங்க வேண்டும் என்று பெரியார் சொன்னதில் பொருள் உள்ளது. அதில் மிக முக்கியமானது, பெண்களை சமையல் அறையில் இருந்து விடுதலை செய்வது. அதற்கு மாற்றாக பெரியார் முன் வைப்பது சமுதாய பொது சமையலறை Community kitchen. ஆனால் இது அத்தனை எளிதல்ல! காரணம் சாதிதான்! ஆயிரம் சாதியையும் தீண்டாமையையும் தன் அஸ்திவாரமாக வைத்துள்ள இந்திய சமூகத்தில், ஒரு பொது அடுப்பில் ஒரு சாதிக்காரன் சமைக்கும் உணவை மறு சாதிக்காரன் உண்ணும் நாளில்தான் அது சாத்தியப்படும்.

6

நிற்க. பொதுவெளியில், பேருந்துகளில், ரயில்களில், ஹோட்டல்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் சாதி எங்கே சார் இருக்கின்றது என சிலர் கேட்கலாம். தனித்தனி சாதிகளுக்காக தனித்தனி matrimonial விளம்பரங்களில் பார்க்கின்ற பல மணமகனும் மணமகளும், பெரும் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலும் லண்டனிலும் மாட்டுக்கறியின், பன்றியின் கொழுப்பு தோய்ந்த டாலர்களையும் பவுண்ட் ஸ்டெர்லிங்குகளையும் சம்பாதித்து ஸ்டேட்ஸில் இருப்பதாக இங்கிலீஸில் பீற்றிக்கொண்டு திரிந்தாலும் தன் சாதியில் வரன் தேடுவதில் மட்டும் மிக கவனமாக இருக்கின்றார்கள். இதில் சைவ சாப்பாடு என்று ஒரு வகை. கருப்பு அன்பரசன் , தன் உணவுப்பழக்கத்துக்கு தன் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களால் ஏற்பட்ட மிக மோசமான சாதிய அடிப்படையில் ஆன இடைஞ்சல்களை சொல்லி இருந்தார். என் நண்பர்களில் பலர் எஸ் சி. சார், என் நண்பர்களில் பலர் முஸ்லீம் சார், கிறிஸ்டியன் சார் என்று பல்லை இளிப்பவர்களை விடவும் மோசமான சாதி வெறியர்களை நாம் பார்க்க முடியாது, இவர்கள் எப்போதும் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு நம்முடன் திரியும் பேர்வழிகள். இது வெறும் உணவுப்பழக்கம் சார்ந்த விஷம்தானே, இதற்குள் சாதி எங்கே இருக்கின்றது என சிலர் கேட்கக்கூடும். உண்மையில் இது வெறும் உணவுப்பழக்கம் மட்டுமே எனில், இந்து மதத்துக்கு உள்ளேயே புலால் உணவு அருந்தாத இடை சாதியினர் இருக்கின்றார்களே, அவர்களுடன் மேல்சாதி வெஜிடேரியன்கள் திருமண உறவு உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொள்வார்களா என்ற நியாயமான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும். அந்தக் கேள்விக்கு மவுனமே பதில் எனில், இந்த Only for vegetariansக்குள் மறைந்து இருப்பது சாதி வெறி அன்றி வேறில்லை. Friendship  'பெருந்தன்மை'க்குள் துருத்திக்கொண்டு தெரிவது மேல்சாதி ஆணவம் அன்றி வேறென்ன?  குரு அமர் தாஸுக்கும்  வள்ளலாருக்கும் இவர்களுக்கும் ஒருபோதும் ஒட்டுமில்லை, உறவும் இல்லை. 

சமீபத்தில் பெரம்பூர் பகுதியில் ஒரு வீட்டின்  கதவில் நான் கண்டது: To Let - Vegetarians Only.  குடியிருக்கும் வீடு மட்டும்தான் வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன? பலப்பல வருடங்களுக்கு முன், கலைவாணர் என் எஸ் கே, நல்லதம்பி என்ற படத்தில் ரயிலை சாதியப்பார்வையில் உணர்ந்து  கிந்தன் கதை என ஒரு கதாகாலட்சேபம் செய்து இருப்பார். இப்போதும் ரயில்களில் ஒரே டாய்லெட்த்தான், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் இருவருக்கும். எனவே Vegetarians only அன்பர்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு பிராது எழுதி, வெஜிட்டேரியன் டாய்லெட் வேண்டும் என்று கேட்கலாம்.

சனி, ஜனவரி 16, 2021

எழுத்தாளர் காஸ்யபன் என்ற சியாமளம்

14.1.2021. மூத்த தோழர் காஸ்யபன் தன் 86ஆவது வயதில் மறைந்து விட்டார். நாக்பூரில். 

அவர் கதைகளை சிறு வயதில் இருந்தே செம்மலரில் வாசித்து இருந்தேன். வித்தியாசமான மையக்கருத்து கொண்டவை, வித்தியாசமான நடையில் அமைந்தவை, அவர் பார்வை வேறு மாதிரி இருக்கும். அதனால் அவர் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருந்தது. தேன் கலந்த நீர் என்ற கதையை நான் எப்போதும் குறிப்பிட்டு சொல்வேன். தூரத்தில் இருந்தே அவரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். தமுஎச மாநாடு சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராம் அரங்கில் நடந்தபோது, மனைவி முத்துமீனாட்சி அவர்களுடன் வந்து இருந்தார். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன், தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாலும் அவருடன் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது வருந்துகின்றேன். 2010இல் நான் கொச்சியில் பணியில் இருந்தபோது, அவர் நாக்பூரில் இருந்து தன் வலைப்பூவை தொடங்கினார். முதல் பதிவு 2010 ஏப்ரல் 22 அன்று எழுதினார், ஹைதராபாத் சார்மினார் பற்றி எழுதினார். அவர் வலைப்பூவை வரவேற்று ஈ எம் ஜோசப் முதல் பதிவு செய்தார், நான் இரண்டாவது, எஸ் வி வேணுகோபாலன் மூன்றாவது. 

அதன் பின் அவருடன் அடிக்கடி உரையாடிக்கொண்டே இருந்தேன். என்னையா, எப்படி இருக்கீரு என்று தொடங்கி, பையனை நல்லா படிக்க வையுமய்யா என்று முடிப்பார். நான் நலம் விசாரித்தால், கெழவன் கெடக்கம்யா என்பார். அவர் மிக நுட்பமான ஞாபக சக்தி கொண்டவர். பொதுவாக நம் இலக்கிய வட்டாரங்களில் பேசப்படாத, எழுதப்படாத வரலாற்று விசயங்களை, அவை 60, 70 வருடங்களுக்கு முன்பு நடந்தவையாக இருக்கும், மிகத்துல்லியமாக இடம், நபர்கள், உரையாடல் உட்பட சரியாக பதிவு செய்வார், ஆச்சரியம் அடைவேன். சொக்கலால் பீடி, எம் பி எஸ், சுப்ரமணியசாமி, தி க சி, நெல்லை மாவட்ட நிகழ்வுகள், கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய நினைவுகள் உள்ளிட்ட பல பதிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை, முக்கியமான வரலாற்றுப்பதிவுகள். அவர் வயதை கணக்கில் கொண்டால், மொத்தம் 1022 பதிவுகளை எழுதியுள்ளார் என்பது மிக வியப்புக்குரியது. 2014இல் 139 பதிவுகள்! தி க சி தனக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்து எழுத வைத்தார், கே முத்தையா தத்துவரீதியாக தனக்கு போதம் செய்து சரியான வழியில் நடத்தினார் என்று நூல்வெளி யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதன் லிங்கை கமென்டில் தருகின்றேன். தீக்கதிர், செம்மலர் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

கட்சிப்பிளவுக்குப் பின், கலை இலக்கிய பெருமன்றத்தில் தொடர்ந்து இயங்குவதில் ஏற்பட்ட தடங்கல் கொள்கை அடிப்படையில் ஆனது. மூத்த தோழர் என் சங்கரய்யா, கே எம் ஆகியோரின் முன் முயற்சியில், மார்க்சிஸ்ட் கட்சி தன் இலக்கிய அமைப்பு ஒன்றை நிறுவதிட்டமிட்டு மதுரையில் கூடியது, 35 பேர் கொண்ட அந்தக் குழுவில் காஸ்யபனும் ஒருவர். அங்குதான் 1975இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. அதன் பின்னும் கூட திகசி அவர்கள் உடனான தோழமை தொடரவே செய்தது, அவரை நானும் என்னை அவரும் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை என்பார் காஸ்யபன்.

சில மாதங்களுக்கு முன்புதான் அருமை மகன் சத்தியமூர்த்தியை கொரோனாவால் இழந்தார். அவரிடம் பேசுவதற்கு துணிச்சல் இல்லை என்பதால் பேசாமல் இருந்தேன். எம்பி எஸ் குறித்த பதிவில் பாரதியின் பாம்புபிடாரன் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். 1980 தொடக்கத்தில், கோவை தமுஎச இசை முகாமில், அவர் பாம்பு பிடாரன் குறித்து எம் பி எசுடன் நடத்திய உரையாடலை தன் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார்.  ச தமிழ்ச்செல்வன் அந்த முகாமில் பங்கு பெற்று இருந்தார்.  நீண்ட நாட்கள் கழித்து அவரே என்னை தொலைப்பேசியில் அழைத்தார். மெதுவாக பேச்சை தொடங்கினேன். சம்பிரதாயமான "எப்படி இருக்கீங்க தோழர்?" என்ற விசாரிப்புக்கு அவர் சொன்னார், "இருக்கணும்லய்யா?". மகனை இழந்த அவரின் ஆழ்ந்த துயரம் அந்த ஒற்றை சொல்லில் வெளிப்பட்டது. பதில் சொல்ல முடியாமல், பேச்சை தொடர முடியாமல் திணறினேன். அவர்தான் அடுத்த வார்த்தை சொல்லி மவுனத்தை உடைத்தார். பேரனை மட்டும் வைத்துக்கொண்டு தன் மகனின் இறுதிசடங்கை முடித்த பெரும் துயரை சொன்னார், முகநூலில் தன் பேரனின் மனத்திடத்தை பாராட்டி பதிவு செய்து இருந்தார். 

முகாமுக்கு பிறகு, எம் பி எஸ் அவர்களை காஸ்யபன் பேட்டி கண்டார், அப்போது செம்மலரில் வெளிவந்ததை சொன்னார். ச தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வேண்டியுள்ளேன், அந்த நேர்காணலை மீண்டும் செம்மலரில் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று.

தெலுங்கானா போராட்ட பின்னணியில் கிருஷ்ணா நதிக்கரையிலே என்று ஒரு துப்பறியும் நாவலை எழுதினார், என் சி பி எச் வெளியிட்டது. அவர் கதைகள் 80களில் நூலாக (அந்தக்கணங்கள்) அன்னம் வெளியீட்டில் வந்தன. 

அன்புத்தோழர் அவர் மனைவி முத்துமீனாட்சி அவர்கள், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த அறிஞர். அவரும் சிறுகதைகள் எழுதியுள்ளார், பல நூல்களை பல மொழிகளிலும் ஆக்கம் செய்துள்ளார். காஸ்யபனின் கதைகளை ஜகதா என்று இந்தியில் மொழிபெயர்த்துள்ளார், சீதாராம் யச்சூரி முன்னுரை எழுதியுள்ளார். நல்லி திசையெட்டும் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல்.... நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகள் ஹன்ஸா காஸ்யப் இசையில் பட்டம் பெற்று காப்புரிமை தொடர்பான தளத்தில் வழக்கறிஞராக உள்ளார். நம் வார்த்தைகள் இவர்கள் துயரை ஆற்றி விடாது, உங்கள் துயரில் பங்கு கொள்கின்றோம். தமிழக இலக்கிய உலகமும், பொதுவுடைமை இயக்கமும், கொண்ட கொள்கையில் உறுதியான மூத்த தோழரை இழந்துவிட்டன.

.... ... ...... .....

தமுஎசவும் காஸ்யபனும்

மதுரை பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள அந்தப்பகுதிக்கு பெயர் திடீர்நகர். ..அங்கே சீமை ஓடு போட்டிருந்த ஒரு தொழிற்சங்க கட்டிடத்தில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. சி ஐ டி யு எனும் அகில இந்திய தொழிற்சங்க மையத்துடன் இணைக்கப்பட்டு இருந்த அந்த மின் ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் 35 எழுத்தாளர்கள் கூடி இருந்தார்கள். அனைவரும் செம்மலர் ஏட்டில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு செம்மலர். எனவே, இயல்பாக வே அதன் தலைவர்கள் ஆகிய ஏ பாலசுப்பிரமணியம், எம் ஆர் வெங்கட்ராமன், ஏ நல்லசிவம், என் சங்கரய்யா ஆகியோர் வருகை புரிந்து இருந்தனர். ஏட்டின் ஆசிரியர் கே முத்தையா கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார்.

1974, நவம்பர் 23, 24 தேதிகளில் நடந்த இந்தக் கூட்டத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவரும் சிறந்த இலக்கிய விமர்சகரும் ஆன என் சங்கரய்யா, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கிற ஆலோசனையை முன்வைத்தார். ... ...அந்த மகத்தான அமைப்பை துவங்குவது என்றும், அதன் அமைப்பு மாநாட்டை மதுரையில் கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்று வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து படர்ந்த பெரும் ஆலமரமாய் த மு எ ச திகழ்கிறது. அன்றைய அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள் இவர்களே:

1 கு சின்னப்பபாரதி 2 த ச ராசாமணி 3 டி செல்வராஜ் 4 ஐ மா பா 5எஸ் ஏ பெருமாள் 6 இரா.கதிரேசன் 7 மேலாண்மை பொன்னுச்சாமி 8தி வரதராசன் 9 பெ மணியரசன் 10 அஸ்வகோஷ் 11 காஸ்யபன் 12 ப ரத்தினம் 13 நெல்லைச்செல்வன் 14 கம்பராயன் 15 தணிகைச்செல்வன் 16 நாமக்கல் சுப்ரமணியம் 17 வேலுச்சாமி 18 வேல ராமமூர்த்தி 19 ச மாதவன் 20 ஐ பெரியசாமி 21 கோமகன் 22 ச மு சுந்தரம் 23 பாலதண்டாயுதபாணி 24 வீரமாசக்தி 25 புலவர் பாலு 26 முல்லை இளமுருகன் 27 மோகனச்சந்திரன் 28 நெடுமாறன் 29 அடியிற்கை சீனிவாசன் 30 இளங்கோவன் 31 நடராசன் 32 விளதை கலா முகிலன் 33 செல்வம் 34 யாரா 35 செங்கீரன்.

... .... ...

1975 ஜூன் 25 நள்ளிரவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. 29 அன்று மிசா சட்டம் கடுமையாக்கப்பட்டது. எங்கும் இருள், மையிருட்டு இருள்.தமிழகத்தில் திமுக ஆட்சி. இங்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் சற்றே மூச்சு விட்டுக்கொண்டு இருந்தன. அதை பயன்படுத்தி க்கொண்டு, திட்டமிட்டபடி தமுஎசவின் அமைப்பு மாநாடு, முதல் மாநில மாநாடு, மதுரை தமுக்கம் கலையரங்கில் 1975 ஜூலை 12, 13 ஆகிய நாட்களில் மிகச்சிறப்பாக நடந்தது. பொதுச்செயலாளர் ஆக கே முத்தையா தேர்ந்தெடுக்க ப்பட்டார். காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர்களில் ஒருவர். இந்த முதல் மாநாட்டை நடத்திக்கொடுத்தவர்கள் இரா கதிரேசன், ப ரத்தினம், காஸ்யபன் தலைமையில் ஆன மதுரை மாவட்டக்குழு.

... ... ....

1977 தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிந்தனர். 1978 ஜூன் 24, 25 தேதியில் கோவையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிலும், 1981 ஜூலை யில் சென்னையில் நடந்த மூன்றாவது மாநாட்டிலும் காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர் ஆனார். மதுரையில் 1982 மே 29 முதல் ஜூன் 2 வரை 5 நாட்கள் நடந்த இலக்கிய முகாமில் 19 தலைப்புகளில் வகுப்புகள் நடந்தன. திரைப்படக்கலை வகுப்புக்கு ஆசிரியர் ஆக இருந்தவர் காஸ்யபன். 

1984 செப்டம்பர் 22,23,24 தேதியில் சென்னையில் நடந்த நாடகவிழா வில் நாடகம் குறித்த புரிதலை ஏற்படுத்தி கருத்துரை வழங்கியவர்கள்: எஸ் வி சகஸ்ரநாமம், டி எம் வி ரமணன், இயக்குனர் கே பாலச்சந்தர், பேரா. ராமானுஜம், சு சமுத்திரம், ஞாநி, மேஜர் சுந்தரராஜன், பூரணம் விஸ்வநாதன், கே முத்தையா, அஸ்வகோஷ், காஸ்யபன், ச தமிழ்ச்செல்வன். மதுரை பீபிள்ஸ் தியேட்டரின் காஸ்யபன் கதையில், ராஜகுணசேகரன் இயக்கத்தில் வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் என்ற நாடகம், அன்றே இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியது.

1986 செப்டம்பர் 24-28 5 நாட்கள் மதுரையில் நடந்த நாடகப்பயிற்சி முகாமை நடத்திக்கொடுத்த மதுரை மாவட்டக்குழுவில் காஸ்யபனும் இருந்தார். 1987 ஜனவரியில் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் காஸ்யபன் மாநில செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்க பட்டார். தொடர்ந்து வந்த மாநாடுகளில், மாநிலக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் 1988 ஜனவரி 6 முதல் 10 வரை நடந்த த மு எ ச இசைபயிற்சி முகாமை நடத்திக் கொடுத்தவர்கள் எம் பி சீனிவாசன், கே ஏ குணசேகரன். 94 பேரை ஒருங்கிணைத்து இரண்டே நாள் பயிற்சி கொடுத்து, கோவை மக்கள் முன்னால் 9ஆம் தேதி பாட வைத்து சாதனை செய்தார் எம் பி எஸ். பாரதியாரின் பாம்புப்பிடாரன் பாடல் குறித்து எம் பி எஸ்க்கும் தனக்கும் நடந்த உரையாடல் பற்றி தன் வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளார் காஸ்யபன். தோழர்கள் வாசிக்கலாம்.

த மு எ சவின் கொள்கை நெறிகளை வகுத்ததில் ஆகட்டும், திரைப்படம், நாடகம், சிறுகதை ஆகிய தளங்களில் ஆகட்டும், அனைத்து கலை இலக்கிய வடிவங்களிலும் தன் மேலான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இயக்கத்தின்  தத்துவ ஆசிரியர்களில் ஒருவர் ஆக பெரும்பணியை செய்துள்ளார். அவர் மறைவு ஏற்படுத்தியுள்ள இழப்பை சில பல சொற்களில் சொல்லி நிரப்பிட முடியாது. வயது வித்தியாசம் பாராது அவரே முன்வந்து பேசுவார். கடுமையான சொற்களால் விமர்சனங்களை முன்வைக்கின்றவர்களிடம் கூட அதே அளவு கடுமையான சொற்களை கொண்டு பதில் சொல்ல தெரியாத பெரும் பரந்த மனப்பான்மையும் அனுபவ முதிர்ச்சியும் அமைந்தவர். அவரை இழந்துவிட்டோம்.

உதவிய நூல்: இலக்கிய வானில் வெள்ளி நிலா, அருணன், 1999 மே மாதம் கோவையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் வெளியிடப்பட்டது.

ஞாயிறு, ஜனவரி 10, 2021

இந்தியாவில் மீண்டும் உணவுப்பஞ்சம் வருமா? யாரால் வரும்?


விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் Janam Mukherjee எழுதிய Hungry Bengal என்ற நூலையும், Madhusree Mukherjee எழுதிய Churchill's secret war என்ற நூலுக்கான விமர்சனத்தையும் நான் வாசித்தபின் எழுதியது.

"பட்டினியால் செத்துக்கொண்டே இருக்கும் தம் குழந்தைகளை, ஆறுகளிலும் கிணறுகளிலும் பெற்றோர் வீசினார்கள். பலர் ஓடும் ரயில்கள் முன் பாய்ந்து தங்களை மாய்த்துக் கொண்டார்கள். வெறும் கஞ்சிக்கு தெருத்தெருவாக அலைந்தார்கள். குழந்தைகள் புல், இலை தழைகள், வேர், செடிகொடிகள், கிழங்குகளை தின்றார்கள். இறந்துபோன உறவினர்களை அடக்கம் செய்யக்கூட இயலாத படி மக்கள் இருந்தார்கள். பஞ்சத்தால் செத்து மடிந்தோரின் உடல்களை நாய்கள், கழுகுகள், நரிகள் தின்றன. ...தங்கள் குழந்தைகளின் பசி தீர்க்கும் பொருட்டு பெண்கள்  விபச்சாரத்துக்கு இசைந்தார்கள். இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளை கொன்றார்கள், தகப்பன்களோ தம் பெண் குழந்தைகளை விற்றார்கள்" - Madhusree Mukherjee.

... .... ...

1943 வங்கப்பஞ்சம், வறட்சியால் ஏற்பட்டது அல்ல, அது (பிரிட்டிஷ் அரசின்) தவறான கொள்கையால் உருவாக்கப்பட்டது- IIT காந்திநகர் ஆய்வாளர்கள்.

ஹிட்லர், முசோலினி ஆகியோரின் அச்சு நாடுகள் கூட்டணியில் இருந்த ஜப்பான், 1942இல் கிழக்கில் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு பெரும் அளவில் அரிசியை கொடுத்து வந்தது பர்மா. இப்போது ஜப்பானின் கைக்கு போனதும், தொடர்ந்து கிழக்கில் வங்கமும் கைப்பற்றப்படும் என்ற அச்சத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், மக்களிடம் இருந்த வண்டிகள், படகுகள், கார் லாரி போன்ற வாகனங்கள், யானைகள், மாடுகள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். முக்கியமாக மக்களிடம் இருந்த அரிசி இருப்பு அனைத்தையும் அரசின் வசம் கொண்டுவந்தார்கள்.

வணிகர்களும் முதலாளிகளும் உடனடியாக அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை பதுக்கினார்கள். சந்தையில் உணவுப்பொருட்கள் காணாமல் போயின. அரசு என்ன செய்தது? பிரிட்டிஷ் வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு மட்டும் உணவுப்பொருட்களை வழங்கியது, சாமானிய மக்கள் பட்டினியில் விடப்பட்டனர். 

முக்கியமாக, இந்தியாவில் மக்கள் செதுக்கிக்கொண்டு இருக்கும்போது, இங்கே இருந்து உணவு தானியங்கள் மிகப்பெரிய அளவுக்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்ச காலமான  ஜனவரி-ஜூலை 1943 காலத்தில் மட்டும்70,000 டன் அரிசி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 4 லட்சம் இந்திய மக்களுக்கு ஒரு வருஷத்துக்கு போதுமான உணவு இது. 1943 இலையுதிர்காலத்தில், 4 கோடியே 70 லட்சம் பிரிட்டிஷ் மக்களுக்கு ஆன  1 கோடியே 85 லட்சம் டன் உணவுப்பொருட்கள் இருப்பை கையில் வைத்து இருந்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த இருப்பையும் கூட வேறு ஒரு காரணத்துக்காக வைத்து இருந்தார் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்- முசோலினியின் இத்தாலி ஒரு வேளை நேச நாடுகளிடம் வீழ்ந்தால் அங்கே அனுப்பி வைப்பதற்கு. ஆஸ்திரேலியாவும் கனடாவும் வங்க மக்களுக்கு கோதுமை தர முன் வந்தன. ஆனால் அன்று இந்தியப்பெருங்கடலில் உணவுப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டு இருந்த அனைத்து கப்பல்களையும் அட்லாண்டிக் கடலுக்கு திருப்புமாறு உத்தரவு இட்டார் சர்ச்சில், அதாவது அனைத்து கப்பல்களும் பிரிட்டனை நோக்கி பயணித்தன. ஏற்கனவே பிரிட்டனில் தேவைக்கு அதிகமான இருப்பு கையில் இருந்தது. அன்று அச்சு நாடுகளுக்கு ஆதரவாக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தன்னால் பர்மாவில் இருந்து வங்கத்துக்கு அரிசியை பெற்றுத்தர முடியும் என்று உதவ முன்வந்த செய்தியை கூட பிரிட்டிஷ் அரசு வெளியில் வராமல் தணிக்கை செய்தது.

உண்ணாவிரதம் இருந்த காந்தி ஏன் சாகவில்லை எனில், தான் அருந்தும் நீரில் அவர் ரகசியமாக குளுக்கோஸ் கலந்து குடிப்பதால்தான் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்ன சர்ச்சில், "நான் இந்தியர்களை வெறுக்கின்றேன். அவர்கள் காட்டுமிராண்டித்தனமான மதத்தை பின்பற்றும் காட்டுமிராண்டித்தனமான பிறவிகள். முயல்கள் போல் பிள்ளை பெற்று தள்ளுகின்றனர், அதுவே பஞ்சத்துக்கு காரணம்" என்றும், உணவுப்பொருட்கள் இல்லையென்றால் மஹாத்மா காந்தி எப்படி உயிரோடு இருப்பார் என்றும் கேலி பேசினார்.

1757 பிளாஷி போரில் வென்ற பின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி சில வருடங்களிலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க நேர்ந்தது. 1770 வங்கப்பஞ்சத்தில் குறைந்தது 20 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான கணக்கு தெரியவில்லை.

அதன் பின்னர் ஏற்பட்ட 1873-74, 1876, 1877, 1896-97, 1899, 1943 ஆகிய ஆறு பெரும் பஞ்சங்களில் முதல் ஐந்தும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டன என்றும் 1943 பஞ்சமோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் அன்று பிரதமர் ஆக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடுங்கோன்மை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சர்ச்சிலைதான் மிகப்பெரிய ஜனநாயகவாதி, அறிவாளி என்று இந்தியாவிலும் பலர் இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

... ... ....

இப்போது மத்திய அரசு சட்டமாக அறிவித்துள்ளவை, பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் நிலத்தையும் விவசாயிகளையும் வேளாண் பொருள் விற்பனையையும் கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள வழி செய்யும் சட்டங்கள். இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்திய வேளாண்மைதுறையில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அம்பானி, அதானி, டாடா போன்ற கார்பொரேட் முதலாளிகளின் கையில் சென்றுவிடும். விளைவாக, தங்களுக்கு எங்கிருந்து அல்லது எந்த நாட்டில் விற்றால் லாபம் கிடைக்குமோ அந்த நாடுகளுக்கு இந்தியாவில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இந்திய மக்களை பட்டினி போடவும் இந்திய கார்பொரேட் வர்க்கம் தயங்காது. லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் ஒன்றே உலக கார்பொரேட்களின் ஒரே கொள்கை. மத்திய அரசு கார்பொரேட்டுகளின் அப்பட்டமான ஏஜெண்ட் ஆக இருக்கிறது என்பதிலும் இந்த சட்டங்கள் ஒழிக்கப்படாவிட்டால் 130 கோடி மக்கள் கொண்ட இந்திய சமூகம் எந்த நேரத்திலும் ஒரு வங்கப்பஞ்சத்தை சந்திக்கும் என்பதிலும் ஐயமில்லை.

சனி, ஜனவரி 02, 2021

ரொட்டியின் கதையும் ரொட்டியை திருடுபவன் கதையும்

ரொட்டி எனப்படுவது சர்வதேச உணவு

ரொட்டி எனப்படுவது முதலும் முடிவும்

ரொட்டி எனப்படுவது நீயும் நானும்

ரொட்டி எனப்படுவது அதிகாரத்தின் வீழ்ச்சி

- பாலைவன லாந்தர்


அவர்கள் என் பாட்டனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் பாட்டனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள்என் தாய் தகப்பனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் தாய் தகப்பனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைக்கும்

உனக்கும் உன் மனைவி பிள்ளைக்கும் ரொட்டி தயாரிக்கின்றார்கள்

அதே செங்கதிர் மணிகளால்

- இது என் (இக்பால்) கவிதை.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பாரதி புத்தகாலயம் முனைந்து நடத்திய இணைய வழிக் கவிதை வாசிப்பு, கலப்பைப்புரட்சியாக நூல் வடிவில் வந்துள்ளது.

ரொட்டி என்ற சொல்லின் மூலம் rotie என்ற பிரெஞ்சு சொல் என்று சொல்கின்றனர். இஸ்ரேலியர்கள் எகிப்தில் இருந்து பெருங்கூட்டமாக கனானை நோக்கி இடம்பெயர்கின்றார்கள். பசியெடுக்கவே, மோசஸை நோக்கி உணவுக்கு என்ன செய்ய என்று கேட்க, மோசஸ் கடவுளை வேண்ட, கடவுள் மன்னா என்ற உணவை இறக்குகின்றார். முதல்முதலாக மன்னாவைப் பார்த்த அவர்கள் அது என்ன என்று கேட்க, உங்களுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் உள்ளது என்று மோசஸ் கூறியதாக Hebrew விவிலியத்தில் உள்ளது. இதே நிகழ்ச்சி குர் ஆனில் மூசா நபி மூலம் சொல்லப்படுகிறது. அல்லா மன்னாவையும் சல்வாவையும் இறக்குகின்றான். 

வடக்கு ஜோர்டானில் கண்டுபிடிக்க ப்பட்ட ரொட்டி 14,000 வருடங்களுக்கு முந்தையது. எகிப்தில் 6,000 வருடங்களுக்கு முன்பே ரொட்டி உணவாக இருந்துள்ளது. பிரமிடுகளில் உள்ள ஓவியங்கள், இறந்தவர்கள் தம் அடுத்த கட்ட வாழ்வில் உண்பதற்காக ரொட்டிகளை கூடவே வைத்து புதைக்கப்பட்டதை குறிப்பிடுகின்றன. அரபு பிராந்தியம் என்பது, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், ஈரான், ஈராக், லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், சிரியா என்று பல நாடுகளை உள்ளடக்கியது. அரபு மக்களின் பாரம்பரிய உணவு குபூஸ், குப்ஸ் என அழைக்கப்படும் ரொட்டி மொராக்கோ வரை பரவி இருந்துள்ளது. உள்ளூரில் விளைந்த தானியங்களை இடித்து மாவாக்கி தீயில் சுட்டு ரொட்டி உருவாக்கப்பட்டது. எகிப்திய அரபு மொழிப் புழக்கத்தில் அதன் பெயர் ஆய்ஸ், அதாவது உயிர், வாழ்க்கை. இந்தியாவில் ஆயுசு, ஆயுள் என்று நாம் புழங்கும் சொல்லாடல் நினைவுக்கு வருகின்றது. ஆக குப்ஸ் அல்லது குபூஸ் எனப்படும் ரொட்டியின் மகத்துவம் புரிகின்றது. 

.... .....

இந்தியாவுக்கு ரொட்டி வந்த கதை

ரொட்டி செய்ய கோதுமை வேண்டும் அல்லவா? பிஹாரின் Saran மாவட்டத்தில் Chirand என்ற ஊரில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கிமு 3500 காலத்திலேயே அங்கு கோதுமை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது Vishnu-Mittre 1974.  இன்றைய மத்திய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில், மொஹெஞ்சதாரோ ஹரப்பா நாகரிக காலத்துக்கும் 3000 வருடங்கள் முன்பே வேளாண்மை செய்யப்பட்டதற்கான ஆதாரமும் அதற்கான கட்டுமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சரியாக சொன்னால், மண்பானை தொழிலை தொடக்ககால கற்கால மனிதன் அறியாத காலத்திலேயே அங்கு வேளாண்மை நடந்துள்ளது. போலன் நதிக்கரையில் Mehrgarh என்ற பகுதியில் 200 சதுர ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் ஆறு இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வில், அங்குள்ள வேளாண்மைக்கான கட்டுமானங்கள் கிமு 5000-2700 காலகட்டத்தில் ஆனவை என்று சொல்கின்றன. மிகப்பழமையானது 7000 வருடங்களுக்கு முந்தையது என்றும் இளமையானது 4000 வருடங்களுக்கு முந்தையது என்றும் தெரிகிறது. மண்ணால் ஆன செங்கல் கட்டுமானங்கள் கிமு 6000 காலத்தியவை Jarrige and Meadow, 1980. இங்கே மூன்று விதமான கோதுமைகள் கண்டுபிடிக்க பட்டன, அதாவது பலூசிஸ்தான் பிரதேசம் மிகப்பழமையான கோதுமை வேளாண்மை பகுதி என்பது தெரிகின்றது.

வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உபி, மபி, ராஜஸ்தான், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலையாய உணவுப்பொருள் கோதுமை. வளமான கங்கைசமவெளி இதற்கு முக்கியமான காரணம். இப்பகுதித்தான் இந்தியாவின் கோதுமைக்களஞ்சியம். மத்திய, தென் இந்தியப்பகுதிகளுக்கு கோதுமை பரவாமல் இருந்ததற்கு, விந்திய, சாத்புரா மலைகளும் காடுகளும் தடையாக இருந்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு, கிழக்கு இந்தியாவில் இருந்துதான், அதாவது பஞ்சாப், உபி போன்ற பிரதேசங்களில் இருந்து அல்ல, மத்திய இந்தியாவுக்கும் மஹாராஷ்டிராவுக்கும் கோதுமை வந்தது, பிற்காலத்தில் தென்னிந்திய பகுதிக்குள் வந்துள்ளது Vishnu-Mittre, 1974. இது கோதுமையின் கதை.

பெர்சியா எனப்பட்ட ஈரானில் இருந்து ரொட்டி இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அரபு மக்கள், ரொட்டியை தெற்காசிய பகுதிக்கு ஏற்றுமதி செய்தார்கள், அதனால் ரொட்டி இங்கு அறிமுகம் ஆனது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் காலக்கட்டத்திற்கு முன்பே  கற்கால மனிதன், உணவு தானியங்களை இடித்து நீர் சேர்த்து தீயில் வாட்டி உண்டான் என்ற தகவல், முறையான சமையல் அப்போதே தொடங்கிவிட்டதை சொல்கின்றது. கற்களை பயன்படுத்தி தானியங்களை இடித்துள்ளான். ஹரப்பா நாகரிக காலம் கிமு 2300-1750.

இந்தியர்களின், குறிப்பாக வட இந்தியர்களின் வாழ்வில் கோதுமை முக்கியமான இடத்தைப் பிடிக்க இரண்டு காரணங்கள்:

1. உப்பிய ரொட்டிக்குப் பதிலாக உப்பாத சப்பாத்தி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அரிசி உணவு தாங்காது, கெட்டுவிடும். இப்படியான சாதகமான அம்சமும், உழைக்கும் மக்களுக்கும் இடம்விட்டு இடம் பெயர்கின்ற படைவீரர்களுக்கும் மிகவும் பொருத்தமான உணவாகவும் இருந்தது. மேலும், பார்லி விளைந்தாலும் அதில் சப்பாத்தி செய்ய முடியாது.

2. வட இந்திய பகுதிகளில் நிலவும் கடுமையான தட்பவெப்பநிலை, நெல் விளைச்சலுக்கு சாதகமாக இல்லை, ஆனால் கோதுமை அத்தகைய கடுமையை தாங்கி நின்று வளரும்.

... .... ....

இப்போது ரொட்டியை திருடுபவனின் கதைக்கு வருவோம். 

2016-17, 17-18 காலத்தில் பெருமுதலாளிகளிடம்  மிக அதிக நன்கொடை பெற்ற கட்சி பிஜேபி. மொத்த நன்கொடையில் 93%, அதாவது 915.59 கோடி ரூபாய் பிஜேபிக்கு கிடைத்தது.  இது மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

2013-14 _18 காலக்கட்டத்தில், பிஜேபி ஆட்சியில் என்று வாசியுங்கள், பொதுத்துறை வங்கிகளில் நடந்த கடன் மோசடி 29200 கோடி ரூபாய், அதற்கு முன் அது 7500 கோடி ரூபாய்.

செப்டம்பர் 2019இல் பெருமுதலாளிகள் கம்பெனி மீது விதிக்கப்படும் corporate tax 35%இல் இருந்து 25%ஆக குறைப்பு, பண மதிப்பில் சொல்வது எனில் 1.45 லட்சம் கோடியை அரசு இழந்தது, அதாவது முதலாளிகள் பாக்கெட்டில் போட்டது.

2017இல் இந்த தேசம் உருவாக்கிய சொத்தில் 73% ஒரே ஒரு சதவீத பெருமுதலாளிகள் பாக்கெட்டுக்கு போனது. 2000இல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 9. 2017இல் 101, இப்போது 119. இத்தேசத்தின் 77% சொத்து நாட்டின் 10% பேரிடம் உள்ளது. 

அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாக இந்த வேளாண்மை சட்டங்கள் இருப்பது ஏன்?

20.7.1988இல் கவுதம் அதானி தொழிலுக்கு செய்த முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். 2001இல் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, அதானியின் சொத்து 5000% உயர்ந்தது! முதல்வராக அவர் இருந்தவரை அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர். அவரே பிரதமர் ஆன பின் 4 மடங்காக உயர்ந்தது, அதாவது 2014-19 காலத்தில் மட்டும் 11.9 பில்லியன் டாலராக உயர்வு. 2019இல் அதானி குழுமத்தின் கடன் மட்டும் 72000 கோடி தள்ளுபடி. அப்போது நாட்டின் மொத்த விவசாயிகள் கடன் 76000 கோடி மட்டுமே.

முகேஷ் அம்பானியின் ஏறுமுகமும் மோடியால்தான் சாத்தியம் ஆனது. அது Jio வில் தொடங்கியது. ஒரு நாட்டின் பிரதமர் தனியார் கம்பெனி விளம்பரத்துக்கு நடித்தார். 2014-19 பிஜேபி காலத்தில்தான் முகேஷ்அம்பானியின் சொத்து 23 பில்லியன் டாலரில் இருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந்தது, தன் வாழ்நாளில் திரட்ட முடியாத பணத்தை மோடி ஆட்சியில்தான் திரட்டினார். 30 கோடி மக்கள் இரவு உண்ணாமல் பட்டினியுடன் உறங்கும் இதே தேசத்தின் பிரதமர் , மும்பையில் 220 கோடி டாலர் மதிப்பில் 27 மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர்அம்பானிக்கு உற்ற நண்பராக இருக்கின்றார்.

... .... .... .....

ரொட்டிகளை பசிக்கென திருடுபவர்கள் உலகின் மரியாதைக்கு உரியவர்கள் - பாலைவன லாந்தரின் அதே கவிதையில்.

என்ன சொல்லி உங்களை வாழ்த்துவது?


என்ன சொல்லி உங்களை வாழ்த்துவது?


சம்பிரதாய சடங்கின் எச்சம் தோய்ந்த சொற்கள்

என் காதுகளில் இறங்கி இதயத்தை கூசச்செய்யாவண்ணம்

ஒதுங்கியும் ஓரமாயும் 

தனித்தும் செல்லவே விரும்புகின்றது மனம்

எனில் 

என்ன சொற்களால் நான் உங்களை வாழ்த்திவிட முடியும்?


பொய்யும் புரட்டும் நாளொரு ஏமாற்றுவித்தையும்

கோட்டைகளின் புகைப்போக்கிகள் வழியே 

உணவென்ற பேரில் வெளியேறி

பசிக்கும் நம் வயிறுகளில் சாம்பலாய் நிறைந்துவிட

என்ன சொல்லி வாழ்த்திவிட முடியும் உங்களை?


தாய் மண்ணில் இருந்து வேருடன் அறுத்தெரியப்பட்டவன்

தலைநகர் வீதிகளில் கொடும்பனியெனப் பொழியும்

பொய்களில் உறைந்து கருகும் இந்த நடுநிசியில்

நான் உங்களை என்ன சொல்லி ஏமாற்றிவிட முடியும்?


ஒற்றைச்சொல்லும் கைவரவில்லை

அச்சமுடன் நகர்கின்றது இந்த நள்ளிரவு

உறங்குகின்றார்கள் மனைவியும் பிள்ளைகளும்

நம்பிக்கையெனும் போர்வையைப் போர்த்தியபடி

நாளை மற்றொரு பொழுது விடியும் என்று


இத்தனை விழுதல்களுக்குப் பின்னும்

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும்

இத்தனை இழத்தல்களுக்குப் பின்னும்

என்னையும் உங்களையும்

முன்னே உந்தித்தள்ளிக்கொண்டே செல்வது வேறேன்ன?


ஆயிரம் முறை  அடிபட்டு மிதிபட்டாலும்

தன்னைத்தானே உறுதியாக்கிக்கொண்டும்

தன்னையே வரலாற்றின் பாதையாக சமைத்துக்கொண்டும்

என் பொழுதையும் உங்கள் பொழுதையும் விடியச்செய்யும்

அந்த இரண்டு சொற்களை மட்டும் 

உங்கள் தோட்டத்தில் விதைத்து விடுகின்றேன், என் வாழ்த்தென,

போராட்டமும் நம்பிக்கையும்.

அன்புத்தோழர் எஸ் வி ஆர்


2008இல் மும்பையில் தாக்குதல் நடந்தது. 2009 ஜனவரி புதுவிசையில் 'கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்' என்ற கட்டுரையை எழுதினேன். அதே இதழில் அருமைத்தோழர் எஸ் வி ஆரின் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது எனில், தோழர் ஆதவன் தீட்சண்யா என்னை அழைத்து 'உங்கள் கட்டுரையை எஸ் வி ஆர் பாராட்டினார்' என்று சொன்னபோது நான் எப்படி இருந்திருப்பேன்? ஆனால் வழக்கமான என் குணத்தின் காரணமாக அமைதியாக இருந்தேன். நான் நேசிக்கும் எழுத்தாளர், கலைஞர்களை தொடர்பு கொண்டு பேச ஆசைப்பட மாட்டேன், பக்கத்தில் இருந்தாலும் மரியாதையுடனும் நெகிழ்வுடனும் பார்த்துக்கொண்டு நகர்ந்து விடுவேன்.

2016இல் 'இந்தியத் தொழிற்சங்க-இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால்' என்று ஒரு கட்டுரையை எழுதினேன். புதுவிசையில்தான், 2016 டிசம்பர் விசை வீட்டுக்கு வந்தது. அதே விசையில், எஸ் வி ஆர்  இந்தோனேசிய படைப்பாளியான ப்ரமூதியா ஆனந்த தூர் பற்றி எழுதிய தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும் என்ற 41 பக்க கட்டுரை வெளியானது. சுஹார்த்தோவின் இராணுவ ஆட்சியால் கைது செய்யப்பட்டு, விசாரணை இன்றி ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் ப்ரமும் ஒருவர். சித்ரவதைக்கு உள்ளானார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.

கட்டுரையின் இறுதியில் எஸ் வி ஆர் தந்து இருந்த குறிப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி தூங்காவிடாமல் செய்தது. நாம் என்னத்த எழுதிட்டோம் என்று குறுக வைத்தது. அந்தக் குறிப்பு:

"ப்ரமூதியா ஆனந்த தூரின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்னும் ஆவல் எனக்குக் கடந்த 16 ஆண்டுகளாகவே இருந்தன. எனினும் சென்ற ஆண்டில்தான் புரு நாவல்களில் முதல் மூன்று நாவல்கள் கிடைத்தன. நான்காவது நாவலின்(கண்ணாடி வீடு house of glass) பிரதி ஒன்றை வாங்கி எனக்கு அனுப்பி வைத்தவர் இலண்டன் நண்பர் மு நித்தியானந்தன். .... நான்கு மாதங்களுக்கு முன் இந்தக் கட்டுரையை எழுத தொடங்கி ஏறத்தாழ 80 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட பின், கண்பார்வைக் கோளாறின் காரணமாக அவை அழிக்கப் பட்டு விட்டன....."


மீண்டும் தட்டச்சு செய்துள்ளார், கண் பார்வையை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் உள்ளார். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு  அதன் பின் தோழர் ஆதவனிடம் எஸ் வி ஆரின் எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். அன்புடன் பேசினார். அத்தனை பெரிய உடல் நலக்குறைவை அவர் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை, தொடர்ந்து எழுதவும் பேசவும் முடியவில்லையே என்ற வருத்தமே அவரிடம் மேலோங்கி இருந்தது. நேர்மையான படைப்பாளியின் கவலையும் மனநிலையும் அது.

2019இல் எங்கள் அலுவலகத்தின் நூலகத்தில் இருந்த பழைய நூல்கள் ஒவ்வொன்றும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.  280 நூல்கள் வாங்கினேன். நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்யும் குழுவில் நானும் இருந்தவன் என்பதால் அந்த நூல்கள் பற்றி நான் அறிந்து இருந்தேன். அத்தனையும் 70, 80களில் வெளியானவை என்பதுடன் பலப்பல நூல்கள் மறுபதிப்பு காணாதவை. அவற்றில் ஒன்று ரஷ்யபுரட்சி -இலக்கிய சாட்சியம் என்ற நூல், எஸ் வி ஆர் எழுதியது. வாசித்தேன்,  ரஷ்ய வரலாற்றையும் புரட்சியையும் நேசிக்கின்ற  எவர் ஒருவரும் அந்த நூலை வாசிக்கும்போது மிகுந்த மன சஞ்சலத்துக்கு ஆளாவார்கள், தொடர்ந்து நூலை வாசிக்க மாட்டார்கள், நூலுடன் ஒத்துப்போவது சிரமம்! ஆனால் உண்மையான வரலாற்றுப்பதிவுதான். 

தற்செயலாக 12.5.2018 the hindu வில் ஒரு கட்டுரையும் வெளியாகி இருந்தது, the weird and wonderful world of Soviet bone music, aditya aiyer  எழுதியது. ஸ்டாலின்  ஆட்சியின்போது எழுத்தாளர் இசைக்கலைஞர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக எழுதவோ பேசவோ முடிந்ததா என்று பேசும் கட்டுரை அது.  2020 ஜனவரியில் எஸ் வி ஆர் அவர்களுடன் பேசினேன். அவர் நூலை வாசித்தேன் என்று சொன்னேன், அடடா, என்னிடமே அந்த நூல் இல்லையே என்றார்! நான் நூலை பிரதி எடுத்துக்கொண்டு, மூல நூலை அவருக்கு அனுப்பிவிட முயற்சி செய்தேன். அப்போது தட்பவெப்பநிலை கோத்தகிரியில் அவருக்கு உகந்ததாக இல்லை என்றும்,  கண் பார்வைக்கோளாறு ஒரு பக்கம், முகத்தில் தோலில் அரிப்பு போன்ற தொந்தரவால் அவதிப்படுபவதாகவும் கோவையில் இருப்பதாகவும் மீண்டும் கோத்தகிரி வீட்டுக்கு வந்த பின் சொல்கின்றேன் என்றும் சொன்னார். 

அதன் பின் சமீபத்தில்தான் வாட்ஸப்பில் அவருடன் உரையாடத் தொடங்கினேன். மிக எளிமையான ஒரு நண்பனைப்போல் அவர் அணுகுமுறையும் உரையாடலும், எள்ளலும் நகைச்சுவையும் ஆக அவருடன் ஆன உரையாடல்கள். இத்தனை உடல்நலக்குறைவுக்கு இடையிலும் கிரேக்கப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஷின் நூலை கொரோனா காலத்தில் மொழியாக்கம் செய்தார், அவருடைய இளமைக்கால நண்பர் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியீட்டில் 2020இல் வந்தும் விட்டது.  

2021க்கு என் குடும்பத்தாரின் புது வருட வாழ்த்துச்சொன்னேன் அவருக்கு. அவரும் அவருடைய அன்புத்துணைவியார் சகுவும் இருக்கின்ற மகிழ்ச்சி சூழ்ந்த ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். மனைவி மகனுடன் மகிழ்ந்தேன்.

சிகிச்சைக்காக வெளியூர் செல்கின்றேன், ஊர் திரும்பிய பின் நூலை அனுப்புங்கள் என்றும் சொன்னார்.  இந்த உடலில் கடைசியாக ஒரு அணு உயிருடன் இருப்பது வரை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கவலைப்பட்டு உட்கார வேண்டிய அவசியம் இல்லை என மெய்ப்பித்து வருகின்றீர்கள் தோழர் எஸ் வி ஆர்! என் போன்றவர்கள் வெகு தொலைவில் நிற்கின்றோம், உங்களை நெருங்க அல்ல, பின் தொடரவாவது முயற்சி செய்கின்றோம்! நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்!