திங்கள், அக்டோபர் 19, 2020

ஹரித்வார் கங்கை நீராடலும் மானசதேவி கோவிலில் என் வேண்டுதலும்



 யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே

கண்ணன் போவதெங்கே?

கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே

மன்னன் போவதெங்கே?

 

1973இல் கவுரவம் படத்தில் வக்கீல் கண்ணன் என்ற சிவாஜி கணேசன் உஷா நந்தினியுடன் பாடினார், எஸ் பி பியின் அழகிய ஆர்ப்பாட்டம் அற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு ஆறு வருடம் சென்றது. தமிழின் மிக அழகிய நாயகிகளில் ஒருவரான ஸ்ரீவித்யாவுடன் அவரே

கங்கை யமுனை இங்குதான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கயற்கண் மங்கள நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்

என்று அலஹாபாத்தில் பாடினார்.

 கண்ணதாசன் தெரிந்து எழுதினாரா தெரியாமலேயே எழுதினாரா, தெரியவில்லை, ஸ்ரீவித்யா அழகிய அங்கயற்கண்ணிதான். மதுரையில் நான் படித்த காலத்தில் வந்த படங்கள்.

சிவனுக்கும் மீனாட்சிக்கும் (அல்லது பார்வதிக்கும்) நான் நெருங்கிய நண்பன். பிறந்த ஊரான தென்காசி, காசி விஸ்வநாதருக்கும் அவர் உடனுறை உலகம்மைக்கும் கோவில் கொண்ட ஊர். 13ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் கட்டிய கோவில் இது. திராவிடக் கட்டிடக்கலை. தென்காசி என்றால் குற்றால நீராடலும் நூறாண்டு கடந்த கிருஷ்ணவிலாசின் கோதுமை அல்வாவும் ஒட்டிபிறந்த மூன்று பிள்ளைகள். தென்காசி கோவிலின் சிற்பங்கள் மிக மிக அழகானவை, அதிலும் அந்த மன்மதன் ரதி சிற்பத்தை ஒரு நாள் முழுவதும் ரசிக்கலாம், மறுநாளும் ரசிக்கலாம்.


படித்த ஊரான மதுரையில் கோவில் கொண்டுள்ள சுந்தரேஸ்வரரின் நாயகியான மீனாட்சியம்மனின் பல பெயர்களில் அங்கயற்கண்ணி என்பதும் ஒன்று. மதுரையை அழிக்க வருணன் பெருமழையை ஏவி விட, மிரண்டு போன பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட, சடையன் ஆன சிவன் தன் சடையை விரித்து அதிலிருந்து நான்கு மேகங்களை விடுவிக்க, அவை நான்கு மாடங்களாகக்கூடி நின்று மதுரையைக் காத்ததால் அது நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்பட்டதாக பரஞ்சோதி முனிவர் சொல்கின்றார். சடையப்பன் ஆன சிவன் இதே போல் இன்னொரு முறையும் சடையை அவிழ்த்த கதையையும், எப்படி நான் மீண்டும் சடையுடன் 'சங்கமம்' ஆனேன் என்பதையும் கீழே சொல்கின்றேன்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைநகரான மசூரி குறித்தும், நண்பர்களுடன் அங்கே சென்றிருந்த போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் ரஷ்கின் பாண்டை சந்திக்காமல் வந்த மனக்குறை குறித்தும் ஒரு பதிவு எழுதினேன். மிக மிக அழகிய அமைதியான ஊர் அது. ஊர் திரும்ப டேராடூனில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வர வேண்டும். நேரம் நிறைய இருந்ததால் ஹரித்வார் சென்று கங்கையில் குளிக்க திட்டமிட்டோம். டேராடூன் ரயில் நிலையத்தில் பெட்டிகளை போட்டுவிட்டு பேருந்து பிடித்து ஹரித்வார் சென்றோம்.

மசூரி இமயத்தின் கார்வாலி மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது. மசூரியின் உச்சியில் அமைந்துள்ள லால் டிப்பா என்ற சிறிய வீட்டின் மாடியில் உள்ள பழமையான ஜப்பானிய தொலைநோக்கி மூலம் பார்த்தால் 200 கி.மி. தொலைவில் உள்ள இமயத்தின் இரு சிகரங்களை மட்டும் இன்றி கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவற்றையும் பார்க்கலாம். கங்கோத்திரி என்பது கங்கை பிறக்கும் இடம். சரியாக சொன்னால் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது, பாகீரதிதான் கங்கையின் தாய். ஆனால் அலாக்நந்தா நதியின் நீளத்தை கணக்கில் கொண்டால் அதுதான் கங்கையின் தாய் என்று விஞ்ஞானம் சொல்கின்றது. கார்வாலி மலைத்தொடரின் பல நதிகள் அலாக்நந்தாவுடன் வெவ்வேறு இடங்களில் சங்கமிக்கின்றன. விஷ்ணு பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, இறுதியாக பாகீரதி நதி தேவ பிரயாகை என்னும் இடத்தில் அலாக்நந்தா நதியுடன் சங்கமிக்க, அந்த இடமே கங்கையின் பிறப்பிடம் ஆகின்றது.

புராணம் என்ன சொல்கின்றது? சிவன் தன் தலையில் இருந்த தேவி கங்கையை விடுக்கின்றான், அதுவே கங்கோத்திரி, 3100 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து கோமுகியில் புறப்பட்டு 257 கி.மீ. பயணித்து, காடு மலை கழனி என்று உருண்டும் புரண்டும் நடந்தும் ஓடியும் தன் தீரத்தின் முதல் நுழைவாயில் ஆன ஹரித்துவார் வந்து சேர்கின்றாள் தேவி கங்கை. இந்த நகரின் பழைய பெயர் கங்காத்வாரா. இந்துமதத்தின் ஏழு புண்ணியத்தலங்களில் ஹரித்வார் ஒன்று. மற்றவை அயோத்தியா, மதுரா, காசி, காஞ்சிபுரம், அவந்திக்கா, துவாரகா. வடக்கில் உள்ள காசி என்ற பனாரசுக்கு இணையான புண்ணியத்தலமே தெற்கில் உள்ள தென்காசி.

இங்கேதான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடக்கும். நாங்கள் ஹரித்வார் ரயில் நிலையத்தை பார்த்தபோது இந்த சீசனின் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது போல 15க்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை பார்க்க முடிந்தது. நாங்கள் பார்க்கும்போது புதர் மண்டிக்கிடந்தன. கும்பமேளாவின் தலைசுற்ற வைக்கும் கூட்டத்தை டிவியில் பார்க்கும்போது, உண்மையில் அத்தனை லட்சம் மக்களும் நிர்வாண சாமியார்களும் டிக்கெட் வாங்கி இருந்தால் அந்த ஸ்டேஷன் தாங்கி இருக்குமா என்ற சந்தேகமே வந்தது. தவிர, In the company of women என்ற குஷ்வந்த் சிங்கின் நாவலின் நாயகன் நினைவுக்கு வந்தான். மணமான அவன் மனைவியை தவிர பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திரிவான். புனித நகரான ஹரித்வாருக்கு வந்து அங்கும் ஒரு பெண்ணுடன் கொட்டம் அடிப்பான். இறுதியில் பால்வினை நோய் தாக்கி சாவான்.

கங்கோத்திரியின் கதை இதுவெனில், 3293 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து வருகின்றாள் யமுனை. இவள் விஷ்ணுவின் மனைவி, அவள் சிவனின் மனைவி. பத்ரி என்ற சிவனின் வாசஸ்தலமான பத்ரிநாத்துக்கும், கேதார் என்ற விஷ்ணுவின் வாசஸ்தலமான கேதார்நாத்துக்கும் புனித யாத்திரையை தொடங்குபவர்கள் ஹரித்வாரில் இருந்துதான் தொடங்குகின்றார்கள். எனவே இந்த ஊர் ஹர்த்வார் என்றும் அழைக்கப்படுகின்றது. ஹரி என்றால் விஷ்ணு, ஹரன் என்றால் சிவன்.

 

செப்டம்பர் மாதத்தின் நல்ல மதிய நேரத்தில் நாங்கள் சென்றபோது இரண்டு படிகளே மேலே தெரிய அலை புரண்டு சுழித்து கங்கை ஓடிக்கொண்டு இருந்த காட்சியை என்ன சொல்ல! தூய்மையான நீர்! கங்கையின் முதல் தீரம் அல்லவா! காசியை பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் தூய்மையான கங்கையை இங்கே கண்டபோது மனம் ஆனந்தத்தில் குளித்து மூழ்கியது. கருடன் தன் கும்பத்தில் அமிர்தத்தை ஏந்தி பறந்துவந்தபோது உஜ்ஜயினி, நாசிக், அலஹாபாத், ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் அமிர்தத்துளிகள் சிதறி விழுந்ததாம். ஹர் கி பவுரி என்ற இடத்தில் உள்ள பிரம்மகுண்டம்தான் இங்கே துளிகள் சிந்திய இடம், அதுவே ஹரித்வாரின் மிகப்புனிதமான படித்துறை. பாதுகாப்பு கருதி சங்கிலி கட்டி உள்ளார்கள், சங்கிலியைப் பிடித்துக்கொண்டு கங்கையில் இறங்கினோம், சடையுடன் சங்கமம் ஆனேன். கங்கையின் நீரை உளமாரக் குடித்தேன். உடலால் களித்தேன். குற்றாலமும் வைகையும் கங்கையும் என்னால் அங்கே ஒன்றாக சங்கமம் ஆகின. நீரில் மூழ்கும்போது ....இங்குதான் சங்கமம் என்று கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் பாடியது காதில் கேட்டது. புட்டிகளிலும் ஜெரி கேன்களிலும் கங்கை நீரை நிரப்பி மக்கள் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். உறவுகளுக்கு வழங்குகின்றனர். ஹஜ் பயணம் நிறைவு செய்து திரும்புபவர்கள் கொண்டு வரும் ஜம்ஜம் நீர் நினைவுக்கு வந்தது. தனது கீதத்தில் நதிகளை ஏன் கவியரசர் ரவீந்திரர் உயரத்தில் வைத்துப் போற்றினார் என்பது புரிந்தது. நதிகள் யாருக்கும் வஞ்சகம் செய்வதில்லை, உனக்கு கையளவுதான், உனக்கு கடலளவு என்று பேதம் பார்ப்பதில்லை. பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே... என்று கன்னடத்துக் குடகில் பிறந்து தஞ்சையை வாழ்விக்கும் காவிரியைப் பாடிய சீர்காழியின் குரல் ஹரித்வாரின் கரையில் எனக்கு கேட்டது. திடீரென ஒருவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டுவந்து அவிழ்த்த போது அது இறந்துபோன அவரது உறவுகளின் சாம்பல் என்று அறிந்து அதிர்ந்து கரை ஏறினேன்.

..... ..... ....

குளித்து உடை மாற்றி 178 மீட்டர் உயரே மலை மேல் இருந்த மானஸ தேவி கோவிலுக்கு கேபிள் காரில் சென்றோம். சிவனின் மனதில் உதித்த தேவி மானஸ தேவி. மானஸ என்றால் நம் விருப்பம் என்று பொருள். விரும்பியதை வேண்டினால் மானஸ தேவி நிறைவேற்றி வைப்பாள்.

 இது வில்வ தீர்த்தம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி. வில்வம் மன அழுத்தத்தை போக்கக் கூடிய அருமருந்து. வில்வ மரத்திடம் நாம் வேண்டியதை கேட்க அது சிவனிடத்தில் முறையிட்டு அதை தீர்க்கும், நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. வில்வத்தின் இலை, பட்டை, பழம், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

2014 தொடங்கி இந்த தேசம் கொடிய மனநோயாளிகளிடம் சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆகி வருகின்றது, மானஸ தேவியும் ஹரியும் ஹரனும் கைகோர்த்து இவர்கள் மன நோயை குணமாக்கி தேசத்தையும் இவர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தேவியிடம் வேண்டிக்கொண்டு மலை இறங்கினோம்.

 

கருத்துகள் இல்லை: