அகிரா குரோசாவாவின் Village of the watermills என்ற குறும்படம் குறித்த சில சிந்தனைகள். The Dreams என்ற அவரது கனவுகள் பற்றி அவர் இயக்கிய சில குறும்படங்களின் தொகுப்பில் ஒன்றுதான் நீராலைக்கிராமம்.
இக்கிராமத்துக்கு நம் கதைசொல்லி வருகின்றான். எங்கு நோக்கிலும் மரம் செடி கொடி பூக்கள், அமைதியாக புரண்டு ஓடும் ஆறு, மரத்தில் ஆன வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நீராலை என இந்த உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஓர் கிராமமாக இருக்கின்றது. நகர வாழ்க்கையின் அடையாளம் துரும்புக்கும் இல்லை. இயற்கை அழகு எங்கு திரும்பினாலும் கொட்டிக்கிடக்கின்றது.
கதைசொல்லி ஆற்றின் குறுக்கே உள்ள சிறிய மரப்பாலத்தை கடந்து வரும்போது குழந்தைகள் அவனுக்கு வணக்கம் சொல்கின்றனர். அங்கே உள்ள சிறிய கல்லின் மீது சிறுகுழந்தைகள் பூக்களை பறித்து வைத்து செல்வதைப் பார்க்கின்றான். தொடர்ந்து நடந்து வர ஆற்றின் கரையில் உட்கார்ந்திருக்கும் முதியவர் ஒருவர் மரத்தால் ஆன நீராலைச்சக்கரம் ஒன்றை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் அருகே சென்று வணக்கம் சொல்கின்றான், அவர் தனது வேலையில் கவனமாக இருக்கின்றார், மீண்டும் சொல்லும்போது அவர் பதில் வணக்கம் சொல்கின்றார். அவர் எதிரே இவனும் தரையில் அமர்கின்றான். அவருக்கும் அவனுக்கும் ஆன உரையாடல் தொடங்குகின்றது. முதியவர் தன் வேலையை தொடர்ந்து கொண்டே இருக்க இவன் பேசுகின்றான்.
இந்த கிராமத்துக்கு பெயர் என்ன?
பெயர் ஏதும் இல்லை. சிலர் நீராலைக்கிராமம் என்று சொல்வார்கள்
ஆள் நடமாட்டாமே இல்லையே?
மக்கள் வேறு இடங்களில் இருக்கின்றார்கள்
பக்கத்தில் உள்ள வீட்டினுள் பார்க்கின்றான், ஓர் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருகின்றது.
மின்சாரம் எங்குமே இல்லையே?
எம் மக்களுக்கு மின்சாரம் தேவையில்லை. மக்கள் சொகுசு வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விட்டு உண்மையில் நல்ல பல விசயங்களை இழந்து விட்டார்கள்.
அப்போ வெளிச்சத்துக்கு என்ன செய்றீங்க?
மெழுகுவர்த்தியோ எண்ணெய் விளக்கோ பயன்படுத்துகின்றோம்
ஆனால் இரவு ரொம்ப இருட்டாக இருக்கே?
(சற்றே நிதானமாக அவனை நோக்கி) உண்மைதான், அதனால்தான் அது இரவாக இருக்கின்றது. .... பகலைப்போல் இரவும் வெளிச்சமாக இருந்தால் எப்படி? ...நட்சத்திரங்களை பார்க்க முடியுமா? வெளிச்சமான இரவுகளை எனக்கு பிடிக்காது.
டிராக்டர்கள் ஏதும் இல்லையே?
எங்களுக்கு தேவையில்லை, மாடுகளும் குதிரைகளும் இருக்கின்றன....மரங்களை வெட்ட மாட்டோம், கீழே விழும் மரங்களின் விறகுதான் எங்கள் எரிபொருள், தவிர மாட்டுச்சாணமும் நல்ல எரிபொருள்.
நீண்டு நெடிய வளர்ந்து நிற்கும் பசுமையான மரங்களை பார்க்கின்றான்.
முதியவர் தொடர்ந்து பேசுகின்றார்.
மனிதன் எப்படி வாழ்ந்தானோ அப்படி வாழ நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம். அதுவே இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான். அதை மறந்து விட்டு அவனே இயற்கையை அழிக்கின்றான். இயற்கையை விடவும் சிறப்பான ஒன்றை தன்னால் உருவாக்க முடியும் என மனிதன் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றான். குறிப்பாக நம் விஞ்ஞானிகள். அவர்கள் அறிவாளியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இயற்கையின் இதயத்தை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கண்டுபிடித்த எல்லாம் இறுதியில் மனிதனின் சந்தோஷங்களை பிடுங்கி எறிகின்றனவாகவே உள்ளன. ஆனாலும் என்ன, தமது கண்டுபிடிப்புகளை பற்றி அவர்கள் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றார்கள். ..தங்களை அதிசயப்பிறவிகளாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கின்றார்கள். இயற்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் அழியப்போவதை உணரவில்லை. மனிதன் உயிர்வாழ அடிப்படையில் என்ன வேண்டும்? தூய காற்றும் தூய நீரும் அவற்றை பிறப்பிக்கும் மரம் செடிகொடிகளும். ஆனால் எல்லாமே அழிக்கப்படுகின்றது. சூழல் நாசமாக்கப் பட்டுவிட்டது. அசுத்தமான காற்று, அசுத்தமான நீர், விளைவு, மனிதனின் இதயமும் அசுத்தமாகி விட்டது.
சற்றுத்தொலைவில் இசைக்கருவிகள் இசைக்கப்படும் ஒலி கேட்கின்றது.
இன்று திருவிழாவா?
இல்லை, அது இறுதிச்சடங்கு. என்ன, ஆச்சர்யமாக இருக்கின்றதா? மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்ட காலம் வாழ், மற்றவர்கள் உனக்கு நன்றி சொல்வார்கள். ...எமது கிராம மக்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வார்கள், இருப்பார்கள். இன்று இறந்த பெண்ணுக்கு வயது 99. (எழுகின்றார்) மன்னிக்கவும், நானும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும். .... உன்னிடம் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும், இவளே என் முதல் காதலி. என்ன செய்ய, வேறு ஒருத்தனை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள், நான் நொறுங்கிப் போனேன். முதியவர் வருத்தம் தொனிக்க சிரிக்கின்றார்.
வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடையுடன் வருகின்றார், கையில் ஜல்ஜல் என ஒலிக்கும் ஒரு இசைக்கருவி.
முகத்தில் வியப்பு பொங்க இவன் கேட்கின்றான், உங்கள் வயது என்ன?
103. போதும் வாழ்ந்தது. தெரியுமா, வாழ்க்கை கடினமானதுன்னு சொல்வாங்க, அதெல்லாம் சும்மா. உண்மை என்ன? வாழ்வதே சந்தோசம், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது.
பக்கத்தில் இருந்த செடியில் இருந்து பூக்களைப் பறிக்கின்றார். ஒரு கையில் பூ, மறு கையில் இசைக்கருவியை ஒலித்தபடி நடக்கின்றார். இறுதி ஊர்வலம் பலத்த ஆரவாரத்துடன் மகிழ்ச்சி பொங்கும் இசையுடன் வருகின்றது. முன்னணியில் குழந்தைகள் மலர்தூவியபடி வர பின்னால் வரும் பெரியவர்கள் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடி வருகின்றனர். ஊர்வலத்தை முன்னின்று வரவேற்ற முதியவர் ஆடியபடியே ஊர்வலத்தில் சங்கமிக்கின்றார்.
.......
மிக அற்புதமான இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு கிராமத்தில் படம் நகர்கின்றது. வீடுகளும் நீராலைகளும் மரத்தால் செய்யப்பட்டுள்ளன. அமைதியாக ஓடும் ஆற்றில் கையால் நீரை அள்ள முடியும். பின் எதற்கு நீராலைகள்? மின்சாரமும் ட்ராக்டரும் பெட்ரோலியமும் இன்ன பிற நவீன வசதிகளும் நமது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் படுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்னால் நம் முன்னோர்கள் அவர்கள் அறிவைப் பயன்படுத்தி கண்டறிந்த பல கருவிகளின் அடையாளமாக மட்டுமின்றி இப்போதும் இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை மட்டுமே மனித சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதன் குறியீடாக இக்கிராமம் எங்கும் நீராலைகள் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கத்தின் உயிர்ப்பின் பகுதியாகவே தனது கிராம மக்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வார்கள் என்று முதியவர் சொல்கின்றார்.
16 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் உள்ளடக்கத்தில் ஒரு நீண்ட மானுடவியல் படமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக