சனி, ஜூன் 20, 2020

ரோசா பார்க்ஸ்: அமெரிக்கப் பேருந்தில் பற்றிய பெருந்தீ

1955 டிசம்பர் முதல் நாள். வியாழக்கிழமை. அமெரிக்காவின் அலபாமா மாவட்டம், மாண்ட்கோமெரி என்னும் நகரம். தனன்து அன்றைய நாள் பணிகளை முடித்த பின்னர் க்ளீவ்லாண்ட் அவன்யூ செல்லும் பேருந்து எண் 2857இல் 42 வயதான ஆஃப்ரோ-அமெரிக்க கருப்பினப் பெண்மணி ஒருவர் ஏறி இருக்கையில் அமர்கின்றார். வண்டியின் ஓட்டத்தில் ஓட்டுநர் ஜேம்ஸ் பிளேக் அந்தப் பெண்மணியையும் மேலும் மூன்று  கறுப்பினப் பெண்களையும் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு வெள்ளையர் அமர இடம் தருமாறு கட்டளை இடுகின்றார். மூன்று பெண்கள் எழுந்து விட இந்தப் பெண் எழ மறுக்கின்றார். "எழ வேண்டும், இல்லையேல் நான் போலீசை அழைத்து உன்னைக் கைது செய்ய வேண்டியிருக்கும்" என ஓட்டுநர் எச்சரிக்கின்றார். அவரோ அமைதியாக "நீங்கள் அவ்வாறே செய்யலாம்" என்று உறுதியாக கூற, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப் படுகின்றார்.

தனது இருக்கையில் இருந்து எழ முடியாது என அப்பெண்மணி திட்டவட்டமாக மறுத்த கணத்தில் அமெரிக்க மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் முதல் வரிகள் எழுதப்பட்டன என்பதை அந்த ஓட்டுனரோ காவலர்களோ பெண்மணியை விசாரணை செய்த நீதிமன்றமோ நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள்.

அப்பெண்மணியின் பெயர் ரோசா லூயி மெக்காலே. 1932இல் ரேமாண்ட் பார்க்ஸ் என்னும் மனித உரிமைப் போராளியை திருமணம் செய்துகொண்டபின் ரோசாபார்க்ஸ் என்று அறியப்பட்டார். படுக்கைவிரிப்புக்கள் தயாரிக்கின்ற வணிகமையத்தில் தையல் தொழில் செய்தவர். மட்டுமின்றி, கறுப்பின மக்கள் உரிமைக்கான தேசிய அமைப்பின் (National Association for the Advancement of Colored People) தலைவரின் செயலாளர் ஆகவும் இருந்தார். கணவன் மனைவி இருவருமே வாக்காளர் சங்கம் (Voter's League) என்ற அமைப்பின் உறுப்பினர்கள்.

அமெரிக்காவில் நிறவெறி மிக மோசமாக இருந்த காலம் அது. ஜிம்க்ரோவ் சட்டம் எனப்பட்ட "பிரிவினைச்சட்டம்" நடைமுறையில் இருந்தது. அது என்ன சட்டம்? அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாவட்டங்களில் பேருந்துகளில் கறுப்பின மக்கள் பின்வரிசையில் அமர வேண்டும். வெள்ளையர்கள் வரும்போது எழுந்து தமது இடத்தை அவர்களுக்கு தர வேண்டும். கறுப்பின மக்கள் அமர்வதற்கான கடைசி ஐந்து வரிசைகளும் கூட வெள்ளையர் வந்துவிட்டால் அவர்களுக்கு உரியதாகிவிடும். ஓட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்த படியே கறுப்பின மக்களின் இருக்கைக்கு மேல் உள்ள ஒரு  அடையாளக் குறியீட்டை நகர்த்துவார். அவர் பின் நோக்கி நகர்த்த நகர்த்த அந்த இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் எழுந்துவிட வேண்டும். பல நேரங்களில் ஓட்டுநர் இந்த அடையாளக்குறியை அகற்றியும் விடுவார், அதாவது கறுப்பர்களுக்கு இருக்கை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் கடைசி ஐந்து வரிசைகள் தவிர மற்ற இருக்கைகள் காலியாக இருந்தாலும் அவற்றில் கறுப்பர்கள் அமரக் கூடாது! கறுப்பர்கள் முன்வாசல் வழியே வந்து ஓட்டுநரிடம் பயணச்சீட்டு பெற்று கீழே இறங்கி பின்வாசல் வழியே மீண்டும் உள்ளே எற வேண்டும்! இவ்வாறு ஏறும் முன்பே கதவு மூடப்படுவதும் கறுப்பர்கள் சாலையில் ஏமாந்து நிற்பதும் அடிக்கடி நடப்பவை.

அன்றைய தினம் ரோசா ஐந்தாம் வரிசையில் அமர்ந்திருந்தார், அதாவது கறுப்பர்களுக்கான முதல் வரிசை. ஓட்டுநர் அடையாள குறியை நகர்த்தியபோது அவர் எழ மறுத்தார், கைது செய்யப் பட்டார். 12 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு நிகழ்வில் ரோசாவை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட அதே ஓட்டுநர்தான் இப்போதும்.

ஒரு கறுப்பர் எழ மறுப்பதும் கைது செய்யப்படுவதும் இது முதல் முறை அல்ல. 1945இல் ஈரென்மார்கன் என்பவர் கைது செய்யப் பட்டார். பின்னர் கிளாடெட் கால்வின் என்ற 15 வயது நங்கை கைது செய்யப்பட்டாள். இவள் மீதான வழக்கை நடத்திவிடும் பொருட்டு அதற்கான நிதி திரட்டும் பணியில் ரோசாவும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அப்பெண் திருமணம் ஆகாதவர் ஆக, கர்ப்பிணியாகவும் இருந்ததால் அவரால் வழக்கின் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாது என உணர்ந்து வழக்கு கைவிடப்பட்டது. 1944இல் ஜாக்கி ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் மேரி லூசி ஸ்மித் என்னும் இளம்பெண் கைதுசெய்யப்பட்டாள். அவள் அபராதம் செலுத்தி மீண்டு வந்தாள். கொடுமைகள் நீண்டுகொண்டே செல்ல, இத்தகைய ஒரு சூழலில் வழக்கை உறுதியாக சந்திக்க வல்லமை கொண்ட ஒரு நபர் கைது செய்யப்படும் ஒரு நல்வாய்ப்புக்காக NAACP அமைப்பு காத்திருந்தது. மனித உரிமைகளின் மாண்பை நிலைநாட்டும் அந்த அரிய நாள் ரோசாவின் வடிவில் வந்து சேர்ந்தது.

ரோசாவின் கைது பற்றி அறிந்த மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவரும் ஆன ஈ.டி.நிக்சன் அகமகிழ்ந்து போனார்! "கடவுளே! 'பிரிவினை' எத்தனை பெரிய வாய்ப்பினை என் கைகளில் அள்ளித்தந்துள்ளது! ". இப்படி ஒரு வழக்கை எதிர்கொள்ள ரோசாவை விடவும் உறுதியான ஒரு நபர் கிடைக்க மாட்டார் என்பதை அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார்.

ரோசா இப்படிக் கூறினார்: "எங்களுக்கு (கறுப்பின மக்களுக்கு) இழைக்கப்படும் கொடுமைகளினால் நான் மிகவும் கொதிப்படைந்திருந்தேன். எனது தாத்தா, எனது பாட்டி, என் பெற்றோர்கள்! அவர்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள்! எனக்குத் தெரியும், என்றாவது ஒரு நாள் நானும் இத்தகைய சூழலை சந்திப்பேன், ஆனால் அப்போது அந்த வாய்ப்பை என் மக்களின் விடுதலைக்காக நான் பயன்படுத்தி க்கொள்வேன்!"

பெயிலில் வெளியே வந்த ரோசா, மாண்ட்கோமெரி பிரிவினைச் சட்டத்துக்கு எதிராக இந்த வழக்கை நடத்துவதென முடிவு செய்தார். மகளிர் அரசியல் குழு என்னும் அமைப்பு அன்று நள்ளிரவு கூடுகின்றது. 35,000 துண்டறிக்கைகள் உருட்டச்சில் அச்சிடப்பட்டு மறுநாள் காலையில் கறுப்பின மக்களின் பள்ளிக்கூடங்களில் விநியோகிக்கப்பட்டன. அறிக்கை மிக எளிமையாக இருந்தது. ஆனால் ஒரு பெரும் போராட்டத்துக்கான அறைகூவல் அதில் இருந்தது. "ரோசாவின் கைதுக்கும் விசாரணைக்கும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு நீக்ரோவும் வரும் திங்கள் அன்று பேருந்துப்பயணத்தை புறக்கணிக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். அப்படியே உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளும் பெரியவர்களும் பேருந்துகளை புறக்கணித்து வாடகைக்கார்களை பயன்படுத்துங்கள்!"

வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் மாண்ட்கோமெரியின் ஒட்டுமொத்த கறுப்பின சமூகமும் அரசுப்பேருந்துகளை புறக்கணித்து எங்கு சென்றாலும் நடந்தே சென்றார்கள், வாடகை கார்களில் பயணித்தார்கள்.

எப்போதும் போல முப்பது நிமிடங்களில் விசாரணை முடிந்தது, ரோசா குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதே நாளில் மாண்ட்கோமெரி முன்னேற்ற சங்கம் அமைக்கப்பட்டது. நகருக்கு புதிதாக வந்த ஒரு வழக்கறிஞர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அப்போது அவர் டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலய மதகுரு.

தமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருந்த மாண்ட்கோமெரியின் 40,000 கறுப்பின மக்கள் நிறவெறி தலையின் உச்சிக்கு ஏறியிருந்த அமெரிக்க அரசுக்கும் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கும் வரலாற்றின் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். பேருந்து புறக்கணிப்பு 381 நாட்கள் நீடித்தது! எரிச்சலுற்ற வெள்ளையர்கள் கறுப்பின மக்களை தாக்கினார்கள், வீடுகளையும் தேவாலயங்களையும் தாக்கினார்கள். தீக்குண்டுகளை வீசினார்கள். நிறவெறி கொண்ட காவல்துறை தன் பங்கை நிறைவேற்றியது, கறுப்பின மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன, கறுப்பின வாடகை கார் ஓட்டுநர்கள் கைது செய்யப் பட்டார்கள். போராட்டத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உச்சகட்டமாக மார்ட்டின் லூதரின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவரது மனைவியும் குழந்தைகளும் தப்பித்தார்கள். மார்ட்டின் வெளியே சென்றிருந்தார். (மார்ட்டின் 1968 ஏப்ரல் 4 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் ).

வேறு வழியின்றி அமெரிக்க உச்சநீதிமன்றம் விவகாரத்தில் தலையிட்டது. 1956 நவம்பர் 13 அன்று மனித உரிமைப்போராளிகள் வெற்றி பெற்றார்கள். பேருந்துகளில் நிறப்பிரிவினை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு எழுதப்பட்டது. டிசம்பர் 21 அன்று மான்ட்கொமெரி அரசுப்பேருந்து ஒன்றில் ரோசா பார்க்ஸ் அமர்ந்திருக்க அவர் பின்வரிசையில் வெள்ளையர் ஒருவர் அமர்ந்துள்ள புகைப்படம் வெளியானது. மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியின் அடையாளம் அது.

வழக்கு நடந்த நாட்களில் ரோசாவும் அவரது கணவரும் எண்ணற்ற தொல்லைகளை சந்தித்தார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரோசாவை பற்றியோ வழக்கைப் பற்றியோ வேலை செய்யும் இடத்தில் பேசக் கூடாது என கணவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி தடை செய்ய, பார்க்ஸ் அவரது வேலையை தூக்கி எறிந்தார். வழக்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டதால் தொல்லைகள் தொடர்ந்தன. எனவே தமது குடியிருப்பை மிச்சிகன் மாவட்டத்தின் டெட்ராய்டுக்கு மாற்றினார்கள்.

கறுப்பின மக்களின் வரலாற்றில் மட்டுமின்றி அமெரிக்க வரலாற்றிலும் ஒரு மாபெரும் திருப்பத்தை உருவாக்கிய ரோசா தனது 95ஆவது வயதில் 2005 அக்டொபர் 24 அன்று மரணம் அடைந்தார்.

மனித உரிமைகள் மீதும் உலக மக்கள் மீதும் கறுப்பின மக்கள் மீதும் அமெரிக்க அரசு தொடர்ந்து ஏவும் கொடும் தாக்குதல்கள் இன்றோ நேற்றோ தொடங்கி வைக்கப்பட்ட ஒன்றல்ல. 1492இல் பஹாமாஸ் தீவுகளில், அதாவது இன்று அமெரிக்கா என்று சொல்லப்படும் மண்ணில், ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவனது சகாக்களுடன் வந்து இறங்கி அங்கே பல நூற்றாண்டுகளாக வசித்து வந்த சூது வஞ்சகம் ஏதும் அறியாத பூர்வ குடி மக்களான அரவாக் செவ்விந்தியர்கள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த நாட்களிலேயே கருக்கொண்டு விட்டது. ஜார்ஜ் ஃபிளாய்ட் இந்தப் பட்டியலில் இப்போது சேர்க்கப் பட்டுள்ளான்.
.... 

கருத்துகள் இல்லை: