சனி, அக்டோபர் 31, 2020

மேக்ரான்கார் கோட்டை உச்சியின் ஷெனாயும் நகராவும்


இது ராஜஸ்தான் மண்ணின் இசை குறித்த ஒரு நினைவுக்குறிப்பு. 2009இல் ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் சென்றிருந்தேன். ஜெய்ப்பூரின் ஆம்பர் கோட்டை அளவிலும் அழகிலும் மிகப்பெரியது. ஒரு நாள் போதாது, முழுமையாக காண. ஜோத்பூரின் மேக்ரான்கார் கோட்டை அழகானது, 1450களில் கட்டியுள்ளனர். தவிர ஜெய்ப்பூரின் மியூசியம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. மம்மி ஒன்று இங்கே உள்ளது. அங்கு இருந்த ஒரு வாரமும் ராகுல சங்கிருத்தியாயன் எழுதிய ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

மேக்ரான்கார் கோட்டையின் ஒரு இடத்தில் சில இசைக்கலைஞர்கள் அமர்ந்து ராஜஸ்தானின் கிராமிய இசையை இசைக்கின்றார்கள். ஷெனாய், நகரா ஆகியவற்றுடன் வாய்ப்பாட்டும் உடல் மொழியும், காண்பதும் கேட்பதும் அரிய அனுபவம். உயர்ந்த மலைக்கோட்டையில் அந்த ஷெனாய் இசையும் நகராவும் பாட்டும் நம்மை அப்படியே தூக்கிக்கொண்டு மேகங்கள் இடையே பறக்கவைத்துவிடும்! அங்கிருந்து நகர்வது கடினம். அவர்கள் பார்வையாளர்களிடம் பணம் கேட்பதில்லை. தவிர, ஏழ்மையின் காரணமாக பணத்துக்காக பாடுகின்றனர் என்று சொல்லவும் முடியாது. இவர்களை பெரிய அளவிலான இசை நிகழ்வுகளில் பாட அழைக்கின்றார்கள் என்பது யூடியூபில் பார்க்கும்போது தெரிகின்றது. 

இவர்கள் அன்றி மங்காணியர் என்ற இஸ்லாமிய சமூகத்தினர் இந்திய பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களில் இரண்டு நாடுகளிலும் வசிக்கின்றனர், இவர்கள் பாரம்பரிய இசைக்கலைஞர்கள், ராஜபுதன வம்சத்தினர். இவர்களை ஆதரிப்போர் இந்து மதத்தை சேர்ந்த மன்னர்களும் நிலக்கிழார்களும் குறுநில மன்னர்களும்! இந்து மத மக்களின் திருமணங்களிலும் துயர நிகழ்வுகளின்போதும் மங்காணியர் இசைக்கின்றார்கள். இவர்களின் முக்கிய கருவிகள் கர்தால், டோலக், ஆர்மோனியம், மோர்சிங். கர்தால் இசைப்பவர் நடனமே ஆடுகின்றார்! அப்படி ஒரு கருவி அது.

இங்கே மேக்ரான்கார் கோட்டையில் பாடும் இக்பால் ராஜஸ்தானியின் ஒரு லிங்கை  கொடுத்துள்ளேன், ரசியுங்கள்!

m.youtube.com/watch?v=c77yAnxitP8

கருத்துகள் இல்லை: