ராஜஸ்தானத்து மங்காணியர் சமூக இசைக்கலைஞர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இவர்கள் இஸ்லாமியர்கள், ராஜபுதன வம்சத்தினர். இந்தியா, பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களில் வாழ்கின்றனர். பாரம்பரிய ராஜஸ்தானத்து கிராமிய இசைக்கலைஞர்கள். ஆனால் இவர்கள் வழிவழியாக இந்து மத மக்களின் விழாக்கள், துயர நிகழ்வுகளின்போது மட்டுமே இசைக்கின்றார்கள்! இவர்களுக்கு ஆதரவாக இருப்போர் மன்னர்கள், குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள்.
ஹரிப்ரஷாத் சவுராஷியா, ஜாகிர் உசேன் ஆகியோரின் Song of the river, song of the desert ஆகியவற்றை கேட்டிருந்த எனக்கு, ஜோத்ப்பூரின் மேக்ரான்கார் கோட்டையின் ஓரிடத்தில் அமர்ந்து ஷெனாய், நகரா ஆகியவற்றை மட்டுமே துணையாக கொண்டு ராஜஸ்தானத்து வாய்ப்பாட்டுடன் பாடும் இக்பால் ராஜஸ்தானி, ஷெனாய் இசைக்கலைஞர் ஆகியோரின் அற்புதமான நிகழ்வைக்காணும் பெரும் வாய்ப்பு வாய்த்தது. அந்த உயரமான மலைக்கோட்டையில் இருந்து சுற்றிலும் பார்க்க பழமைமிகு நீல நகரமான ஜோத்பூர் சூரிய ஒளியில் மினுங்கி மயக்கியது. சில்லென்ற காற்று தழுவ, இதயத்தை ஊடுருவும் ஷெனாயின் கொஞ்சலும் இக்பால் ராஜஸ்தானியின் பாட்டும், மலையின் அமைதியை தன்னுடன் உரையாட அழைக்கும் நகராவின் ஒலியுமாக இரண்டே நொடிகளில் மலைக்கோட்டையின் அந்தத் திருப்புமுனை பெரிய பெரிய கச்சேரி வித்வான்களுக்கு சவால் விடுக்கின்றது. அத்தனை எளிதில் நாம் அங்கிருந்து நகர முடியாமல் நிலையாக நிறுத்தி விடுகின்றது. அவ்வப்போது ரசிகர்களுடன் இக்பால் உற்சாகத்துடன் உரையாடுகின்றார், சிரித்து மகிழ்கின்றார், நம் வெகுமதிகளை மரியாதையுடன் பெற்றுக்கொள்கின்றார். நகரங்களில் நடக்கும் பெரிய இசை நிகழ்வுகளுக்கு இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள், கவுரவிக்கப் படுகின்றார்கள். பணத்துக்காக அன்றி கோட்டையை பார்வையிட வருவோரை மகிழ்விப்பதே இவர்களின் கடமையாக உள்ளதை நாம் புரிந்துகொள்கின்றோம்.
ஓர் இரவு ரயில் பயண தூரத்தில் உள்ள ஜெய்ப்பூர் Pink city இளஞ்சிவப்பு நகரம், கோட்டைகளும் பழமையான கட்டிடங்களும் சிவப்பு கற்களால் கட்டப்பட்டவை. எல்லை ஊரான ஜெய்சால்மர் Yellow city மஞ்சள் நகரம், சூரிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. நான் அங்கு செல்லவில்லை. யூடியூபில் பாருங்கள்.
இப்பதிவில் மங்காணியரின் ஒரு இசை நிகழ்வை பதிகின்றேன். கர்தால் என்றொரு கருவி. கர் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு கை என்று பொருள். தமிழில் நாம் கரம் என்று சொல்கின்றோம். இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு விரல்களால் இயக்கப்படும் இக்கருவி, நிகழ்வில் பெரும் மாயம் செய்கின்றது! கர்தால், ஹார்மோனியம், டோலக், நகரா, பின்னர் நம் ஊர் மோர்சிங். ஆஹா!
இங்கே நான் தருகின்ற இரண்டாவது ஜுகல்பந்தி லிங்கில், 6 நிமிடங்களுக்குபிறகு, மதுரை சோமு தன் மருதமலை மாமணியே உடன் மங்காணிய கலைஞர்களுடன் சேர்ந்து விரிப்பில் அமர்ந்து கொள்கின்றார், நால்வருடன் ஐவராகின்றார்! சக்தித்திருமுகன் முத்துக்குமரனை மறவேன், நான் மறவேன் என்ற வரிகளுக்கு முன்பாக மோர்சிங்கும் வயலினும் மிருதங்கமும் போட்டி போடும் காட்சியும் ஒலியும் தானாகவே இந்த இடத்தில் இணைந்து கொள்ளும் அற்புதம் நிகழும்! கேட்டு ரசியுங்கள்!
m.youtube.com/watch?v=IBhRsVP5Gyk
m.youtube.com/watch?v=y1NqYE6ktIs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக