வாழ்க்கையின் துன்ப துயரங்கள், அடிகள், சறுக்கல்கள், பின்னர் மகிழ்ச்சி, பணம், புகழ், காதல், திருமணம், மண முறிவு என அத்தனை உணர்வுகளையும் அனுபவித்தவர் அவர் என்பதால் தனது படங்களில் வித விதமான கதாபாத்திரத்திங்களையும் சூழலையும் உருவாக்குவதில் அவர் வெற்றி பெற முடிந்தது.
தன் இரண்டாவது திருமண முறிவின் பின், 1927இல் சிட்டி லைட்ஸ் திரைப்படத்தை இயக்கினார். 1931இல் இந்த மவுனப்படம் வந்தபோது ஏற்கனவே பேசும் படங்கள் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த பணம், பதவி, அந்தஸ்து ஆகிய துவும் தேவையில்லை என்பதே கதை.
பூக்கள் விற்கின்ற பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு உதவுவதும், குடிகார பணக்காரன் ஒருவனை அவ்வப்போது மரணத்தில் இருந்து காப்பாற்றுவதும் இக்கதையை நகர்த்தி செல்லும் நிகழ்வுகள். வழக்கம் போலவே இப்படத்திலும் பாத்திரங்களுக்கு பெயர் இல்லை.
படத்தின் முதற்காட்சியே சமூகத்தின் பெரிய மனிதர்களை அம்பலப்படுத்தி கிண்டல் செய்வதாகும். அமைதியையும் செழிப்பையும் குறிக்கும் ஒரு சிலையை நகர மேயர் திறக்க உள்ளார். ஊரின் பெரிய மனிதர்கள் கூடியுள்ள கூட்டம். அமைதியும் இல்லை, செழிப்பும் இல்லை, இந்தக் கொண்டாட்டம் போலித்தனமானது என்பதை உணர்த்த சொற்பொழிவாளர்களின் பேச்சுக்குப் பதில் நாராசமான ஒலிகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார் சாப்ளின். அர்த்தமற்ற சாரமில்லாத நீண்ட உரைகளுக்குப்பின் சிலையை மூடியிருக்கும் துணி விலக்கப்படுகின்றது. ஆண்களும் பெண்களும் நீட்டிய வாள்களுடன் இருக்கின்ற மிக அற்புதமான கிரெக்கோ ரோமானிய கற்சிலையின் ஒரு பெண்ணின் இடுப்பில் அழுக்குதுணியுடன் நம் நாயகன் ஆழ்தூக்கத்தில் இருப்பதை பார்த்தால், கூடியிருக்கும் மாட்சிமை பொருந்திய கனவான்கள் அதிர்ச்சி அடையமாட்டார்களா? அமைதியின், செழிப்பின் புனிதம் கெட்டுவிட்டதாக பெரும் கூச்சல் இடுகின்றனர்.. நாயகனோ இந்த அமர்க்களம் எதுவும் அறியாமல் மிக மெதுவாக கண் விழித்து, நீட்டி மடக்கி முறித்து.... அட! இது என்ன? தன்னை சுற்றி இப்படி ஒரு கூட்டமா? நிச்சயமாக இல்லை. சிலையில் இருந்து மெதுவாக கீழே இறங்க முயல, கால்சட்டை சிலையின் ஒரு வாளில் மாட்டிக்கொள்ள, நாயகன் அப்போது அந்தரங்கத்தில் தொங்க, அப்போது பார்த்து தேசியகீதம் முழங்க..! பாவம், மரியாதை செலுத்தும் வண்ணம் தன் தொப்பியை கழற்றுகின்றான்.ஆனாலும் என்ன, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடவே முடிந்தது!
ஒரு போலீஸ்காரனிடமிருந்து தப்பிக்க, நின்றுகொண்டு இருக்கும் விலை உயர்ந்த ஒரு காரின் கதவை திறந்து அந்தப்பக்கமாக இறங்குகின்றான் காரின் கதவை அறைந்து மூடும்போது அங்கே பூக்களை விற்றுக்கொண்டு இருக்கும் அழகிய பெண்மணி, இவனை ஒரு பணக்காரன் என்று கருதி, சட்டையில் செருகிக்கொள்ள அழகிய பூ ஒன்றை தருகின்றாள். அவளை அலட்சியமாக பார்க்கும் நாயகன், அவளுக்கு கண் பார்வை தெரியாது என்று தெரிந்த பின் மனம் வருந்தி தன்னிடம் இருந்த ஒரே ஒரு நாணயத்தையம் அவளுக்கு கொடுத்து விடுகின்றான். காரின் கதவு மூடப்படும் சத்தம் கேட்டு, மீதி சில்லறையை அந்தப்பணக்காரன் வாங்காமல் சென்று விட்டதாக வருத்தப் படுகின்றாள். ஆனால், அவனோ, ஓசையின்றி அதே பெஞ்சில் அவளருகே உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டு இருக்கின்றான். அவளோ அந்தப்பணக்காரன் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என ஆசைப்படுகின்றாள்.
மீண்டும் அதே இடத்திற்கு வரும் நாயகன், அவளை அங்கு காணாது தவித்து அவள் வீட்டுக்கு செல்கின்றான். அவள் உடல்நலம் இன்றி இருப்பதை அறிந்து அவளுக்கு உதவ முடிவு செய்கின்றான். தெருவை சுத்தப்படுத்தி பணம் சேர்க்கின்றான். வியன்னாவில் இருந்து வந்துள்ள ஒரு மருத்துவர், பார்வையற்றவர்களை குணப்படுத்துவதாக செய்தி ஏடுகளில் பார்த்து அவளிடம் சொல்ல, அவளோ அப்படியானால் நான் உங்களை பார்க்க முடியும் அல்லவா என பெருமகிழ்ச்சி அடைகின்றாள். ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் தன் ஏழ்மை நிலையை அவள் பார்த்துவிட்டால் தன்னை நிராகரிக்க கூடும் என்று வருந்துகின்றா ன். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசில் மாட்டி சிறைத்தண்டனை பெறுகின்றான்.
காதலி கண்பார்வை பெற்று புதிதாக கடை ஒன்றும் திறக்கின்றாள். விடுதலை பெற்ற அவன் வழக்கமான இடத்தில் அவளை தேடுகின்றான். இரண்டு சிறுவர்கள் அவனுடைய கிழிந்த உடைகளை இழுத்து வம்பு செய்ய, அவள் அந்த மோசமான காட்சியை பார்த்து விடுகின்றாள். தன் அன்புக்குரியவளைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் இவன் சிரிக்க, அவளோ யார் இவன், நம்மைப்பார்த்து சிரிக்கின்றான் என்று திடுக்கிட்டு முகத்தை திருப்பிக் கொள்கின்றாள். அவளுக்குப் பார்வை கிடைத்துவிட்டதை அறிந்த அவன், தன் இழிவான நிலையை எண்ணி அவளை தவிர்க்க எண்ணி திரும்பி நடக்க முயலும்போது, அவனை அழைத்து புத்தம் புதிய வெள்ளை ரோஜா ஒன்றை அவனுக்கு அளிக்கின்றாள். கூடவே ஒரு நாணயத்தையும் கொடுப்பது என எண்ணி, அவன் உள்ளங்கையில் திணிக்க முயலும்போது, அடடா! அந்த தொடுவுணர்வு அவன் யார் என்பதை அவளுக்கு சொல்லிவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவன் அன்றோ இவன்!
அவனது கோட்டில் இருந்து தோள்கள் வழியாக அவன் முகத்தை தடவியவாறே ஊர்ந்து செல்லும் அவளது கைகள் சொல்லிவிடுகின்றன, நைந்து கிழிந்து போன நாடோடியாக தன் எதிரில் நிற்கும் இவன்தான் தன் அன்புக்குரியவன் என! நேருக்கு நேராக கண்ணோடு கண் நோக்கி ஒருவரை ஒருவர் பார்வையிலேயே நீதானா என கேட்கும் அந்தக் காட்சியில், வெட்கம், கூச்சம், பயம், துணிவு, வேதனை, அன்பு, தேடல், ஏக்கம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருப்பார் சாப்ளின். தன் கனவு நாயகன் இவனா? அவளால் நம்ப முடியவில்லை, ஆனால் உண்மையை உணர்ந்து அவனை ஏற்றுக்கொள்கின்றாள். அவனது கரங்களைப் பற்றி தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்கின்றாள்.
... ... .....
இப்படத்தின் கதையை ஒட்டி பல படங்கள் வந்துவிட்டன. 1954இல் எஸ் எஸ் வாசன் ராஜி என் கண்மணி என்று தயாரித்தார், டி ஆர் ராமச்சந்திரனும் ஸ்ரீரஞ்சனியும் நடித்தனர். பால சரஸ்வதி சில பாடல்களை பாடினார். இலங்கை வானொலியில் நாள் தவறாமல் நான் கேட்ட பாடல், மல்லிகைப்பூ ஜாதி ரோஜா, முல்லைப்பூவும் வேணுமா, தொட்டாலும் கை மணக்கும் பூவும், பட்டான ரோஜாப்பூவும் கதம்பம் வேணுமா என்ற பாடல். இந்தப் பாடல் சிட்டி லைட்ஸ் படத்தின் தீம் இசை. படத்தின் இசையமைப்பாளர் சாப்ளின்தான், ஆனால் Jose Padilla Sanchez என்ற ஸ்பெயின் நாட்டு இசையமைப்பாளர் இயற்றிய La Violetera என்ற இந்த இசையை அவர் பயன்படுத்தி க் கொண்டார், அதனால் பிரச்சினையையும் சந்தித்தார் என தெரிகின்றது.
இதே பாடலை மிக அழகிய நடிகை என்று புகழப்பட்ட Sara Montiel பாடினார். City lightsஇல் சாப்ளினும் அவளும் சந்திக்கும் காட்சியில் இந்த இசை உணர்ச்சிமிக்கதாக உள்ளது.
எப்படி ஆயினும் சாப்ளினின் புகழ்பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என நிலைத்து விட்ட படம் சிட்டி லைட்ஸ்.
......
தீக்கதிர் வண்ணக்கதிர் 12.6.2005இல் வெளியானது, இப்போது சில மாற்றங்களுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக