வியாழன், அக்டோபர் 29, 2020

மூடப்படும் சாமானியனின் கனவுலகின் கதவுகள்

 

தமிழர்கள் அனைவரும் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கூரையின் கீழ் ஒன்றாக உட்கார்ந்து ஒரு கலை நிகழ்வைக் கண்டார்கள் எனில் அது சினிமா அரங்குகளே. சமூக அந்தஸ்துக்கு அங்கே முன்னுரிமை இல்லை. ஒருவர் எவ்வளவு பணம் கொடுத்து நுழைவுசீட்டு வாங்குகின்றார் என்பது மட்டுமே அங்கே உட்கார்வதற்கான இடத்தை தீர்மானிக்கும். உயர் வகுப்புக்கான டிக்கெட் வாங்க ஒருவரிடம் பணம் இல்லையா, அவர் உள்ளே நுழைய முடியாது அல்லது (குறைந்த கட்டண நுழைவுசீட்டு பெற்று) 'கூட்டத்தோடு கூட்டமாக' உட்கார வேண்டும்.

- அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.

சினிமா அரங்குகளைப் பற்றி சமூக நோக்கில் கா.சிவத்தம்பி அவர்கள் கூறியது அது. 1930களில் இந்தியாவில் திரைப்படங்களும் திரையரங்குகளும் சாமானிய மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாகவும் பொழுதுபோக்கு இடங்களாகவும் விளங்கத் தலைப்பட்டன என்பதை சாதாரணமாக கடந்துபோக முடியாது. பல நூறு சாதிகளாக இன்றளவும் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகம் ஒரு நூறாண்டுக்கு முன் எவ்வாறு பிளவு பட்டு இருந்திருக்கும் என்பதை கணக்கில் கொண்டால் மட்டுமே திரையரங்குகள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சிவத்தம்பி சொல்லியதன் கனத்தையும் உணர முடியும். தெருக்கள், பொது இடங்கள், நீர் நிலைகளான கிணறு, குளங்கள், ஏரிகள், கோவில்கள், ஊர்ச்சாவடி என பொதுவெளி எங்கும் சாதியின் கோரமான முகத்தை பார்க்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் இங்கெல்லாம் நுழையவோ நடமாடவோ உட்காரவோ முடியாது, பயன்பாட்டை அனுபவிக்கவும் முடியாது. சினிமா என்றோர் வெளிநாட்டு அறிவியல் சாதனமே இதிலும் ஓர் உடைப்பை ஏற்படுத்த வேண்டி இருந்தது! அதுவும் கூட இயல்பாக நடந்ததா? எம் எஸ் பாண்டியன் கூறுகின்றார்: சமூக ஏற்றத்தாழ்வை உடைக்கும் ஒரு கருவியாக சினிமா என்னும் சாதனம் எழுந்ததை 'நாகரிகத்தில் உயர்ந்த' சமூகம் எப்படி பார்த்தது? சமூகத்தின் கீழ்த்தட்டு சினிமா ரசிகர்கள் 1930களில் அறிமுகமான சினிமா படங்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால் விளிம்புநிலை மக்களின் இந்த பேரார்வத்தை மேல் சாதியினரும் 'உயர் நாகரிக' வர்க்கமும் எரிச்சலுடன்தான் பார்த்தனர்.

... .... ....

தமிழில்  நேஷனல் பிக்சர்ஸ், ஏ வி எம் இணைந்து தயாரித்த பராசக்தியின் கதை ஆசிரியர் பாவலர் பாலசுந்தரம். மு.க. திரைக்கதையும் வசனமும் எழுதினார். கே ஆர் ராமசாமி நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் பிசியாக இருந்தால் விழுப்புரம் சின்னையா கணேசன்என்ற இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் பண்பட்ட நாடக நடிகர் ஆக இருந்தவர் ஆதலால் புதிதாக நடிப்புக்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. பின்னர் நிகழ்ந்தது வரலாறு. தமிழ் கலை பண்பாட்டில் மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றிலும் அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இப்படியொரு படத்துக்கு தான் திரைக்கதையும் வசனமும் எழுத செல்லலாமா என தந்தை பெரியாரிடம் அவர் கேட்டபோது, 'செய்யலாமே?' என்று கூறினாராம். படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின் திரையிட்டுப் பார்க்கும்போது, இந்தப் பையனை மாற்ற வேண்டும், சரியில்லை என ஏ வி மெய்யப்பன் கூறினாராம்.  நேஷனல் பி ஏ பெருமாள் முதலியார்தான் பிடிவாதமாக கணேசனே இருக்கட்டும் என்று உறுதியாக இருந்தாராம்! வரலாறு என்ன? சக்ஸஸ் என்று கணேசன் பேசிய முதல் வசனம் படம் பிடிக்கப்பட்ட இடத்தில், ஏ வி எம் வளாகத்தில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஸ்டுடியோ இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு வருகின்றது. மீதியுள்ள படப்பிடிப்பு அரங்குகள் பெரிய வணிக நிறுவனங்களுக்கு குடோன்களாக  வாடகைக்கு விடப்பட்டுள்ளதை நான் நேரில் கண்டேன். அவருடைய சிலை மட்டும் அப்புறப்படுத்தப்படவில்லை என்று நம்புகின்றேன். இது தமிழகத்தின் பெரிய சினிமா நிறுவனத்தின் கதை. சினிமா அரங்குகளின் கதை அல்லது கதி எப்படி உள்ளது?

எனது இளம்பருவ நாட்கள் மதுரையில்தான் கழிந்தன.  ஆசியாவின் மிகப்பெரும் தியேட்டர் மதுரை தங்கம் தியேட்டர். 52000 சதுர அடியும் 2563 இருக்கைகளும் ஆக மிகப்பெரிய தியேட்டர் அது. மிக உயரமும்  அகலமும் கொண்டது. நுழைவில் இருக்கும் மிகப்பெரிய  கண்ணாடியில் கோபிகைகளும் கிருஷ்ணனும் ஆற்றில் நீராடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும், இப்போதும் நினைவில் உள்ளது. இங்கே ஒரு காட்சி ஓடுவதும் பிற அரங்குகளில் நான்கு காட்சிகள் ஓடுவதும் சமம். பட விநியோகஸ்தர்களுக்கு சொர்க்கம் என்றால் சூப்பர் ஸ்டார்களுக்கோ கிலி தரும் அரங்கம்! ஏனெனில் மற்ற தியேட்டர்களில் ஒரு படத்தை நான்கு மாதம் ஓட்டி வரும் வருமானத்தை இங்கே ஒரே மாதத்தில் அள்ளலாமே! ஹீரோக்களின் ஈகோ வேறு! இங்கே ஒரு படம் ஒரு மாதம் ஓடினால் மற்ற தியேட்டர்களில் நான்கு மாதம் ஓடி ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தும்! பராசக்தி 1952இலும் நாடோடி மன்னன் 1958இலும் இங்கேதான் 175 நாட்களுக்கு மேல் ஓடினவாம். இதே தியேட்டரில் எம் ஜி ஆர் நடித்த நவரத்தினம் ஒரு மாதம்தான் ஓடியதாக என் நினைவு. எம் ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. நாடோடி மன்னனில் தொடங்கி, கட்சி தொடங்கிய பின் வந்த தேர்தல்களில் திண்டுக்கல், மதுரை மேற்கு தொகுதி, அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் அவரும் அடைந்த வெற்றிகளை சினிமாவுடனும் மதுரையுடனும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

உழைப்பாளி மக்களின் ஊர் மதுரை. தமிழகத்தின் மிகப்பெரிய கைத்தறி நகரம் செல்லூர், எம் ஜி ஆர் வென்ற மேற்கு தொகுதியில் அடக்கம். சுமார் 30,000 நெசவாளிகளின் வாக்கை நம்பி நின்ற எம் ஜி ஆரை மக்கள் ஏமாற்றவில்லை. ஆனால் கைத்தறி நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார், நானும் நம்பினேன். 1987இல் அவர் இறந்தும் விட்டார், செல்லூரில் கைத்தறி தொழில் அழிந்ததுதான் மிச்சம். தூறல் நின்னு போச்சு, காயத்ரி, லட்சுமி, அன்று சிந்திய ரத்தம்.. என இங்கே நான் பார்த்தது நிறைய. இது நான் அறியாத மயக்கம்... என்ற எஸ் பி பியின் அமைதியான பாட்டு. ஜெய்சங்கர், பத்மபிரியா, அசோகன்... மதுரை மக்களின் அத்தனை லட்சம் கனவுகளும் பல நாயகர் நாயகிகளின் முகங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிய திரையும் இடித்து தள்ளப்பட்டு இப்போது ஒரு வணிக வளாகமாய்! என்ன சோகம் இது! இந்த தேசத்தில்தான் இந்த கேடுகளுக்கு சாத்தியம் மிக அதிகம். அரசே அந்த அரங்கை வாங்கி ஒரு திரைப்பட ஆய்வு நிறுவனம், கூட்ட அரங்கம் என நிறுவி இருக்கலாம். காசியில் மேதை பிஸ்மில்லா கானின் வீடு இடிக்கப்பட்டு விட்டதாம்! பிஸ்மில்லாவின் ஷெனாய் ஒலி கேட்ட பின்னர்தான் விஸ்வநாதர் காசியை வலம் வருவாராம்!  காசி தொகுதியின் எம் பி நம் பிரதமர்.

கலைகளின் நகரம் மதுரை. அதிலும் கோவில் திருவிழா நாட்களில் கேட்கவே வேண்டாம். திரும்பிய தெருக்கள்தோறும் கரகாட்டம், நாடகம், பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், வழக்காடு மன்றம் என தூங்காமல் கண் விழிக்கலாம். தியேட்டர்களுக்கோ கணக்கில்லை. ரீகல், தேவி, கல்பனா, சாந்தி, மீனாட்சி, நியூ சினிமா, சென்ட்ரல், இம்பீரியல், சிட்டி சினிமா, சிந்தாமணி, அலங்கார், கணேஷ், மூவிலாண்ட், பரமேஸ்வரி, போத்திராஜா, சினி பிரியா, மினி பிரியா, சிவம், சக்தி, மிடலாண்ட், விஜயலட்சுமி, ராம், அம்பிகா, டூரிங் தியேட்டர்கள் ஆன ஆனையூர் வெங்கடாசலபதி, விளாங்குடி பாண்டியன்...

TVS சுந்தரம் ஹால், காந்தி மியூசியம் போன்ற அரங்குகள் சாமான்ய மக்களுக்கு தொடர்பற்ற பரதநாட்டியம் போன்ற நிகழ்த்துகலைகளுக்கான இடங்கள். ஆக தியேட்டர்கள் மட்டுமே உழைக்கும் சாமான்ய மக்களின் ஒரே ஒரு, ஒரே ஒரு பொழுதுபோக்கு இடம். இதன்றி சித்திரை திருவிழாவின் போது அரசின் சுற்றுலாத்துறை தமுக்கத்தில் நடத்தும் ஒரு மாத பொருட்காட்சி, அங்கே நடக்கும் சினிமா கலைஞர்களின் கச்சேரி, திரைப்படங்கள் என ஒரு மாதம் ஓடும். அதே மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கும் பல நாள் விசேஷங்கள், நரியை பரியாக்குவது, பிட்டுக்கு மண் சுமந்தது...என. அவ்வளவுதான். 

ரீகல் என்ற விக்ட்டோரியா எட்வர்ட் ஹால். பகலில் இங்கே பள்ளிக்கூடம் நடக்கும், சனி, ஞாயிறுகளில் கூட்டங்கள் நடக்கும். மாலையில் சினிமா அரங்கம் அது. என் வாழ்க்கையில் நான் பார்த்த ஆங்கில திரைப்படங்கள் பெரும்பாலானவை இங்கேதான். அழகிய பழங்கால கட்டிடம், மரங்கள் சூழ்ந்த அமைதி. எத்தனை படங்கள்! Jason and the Argonauts, The car, Coma, the great Russian circus, christopher lee யின் dracula.... கரிமேடு பரமேஸ்வரியில் ஷோலே படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கு இல்லை. இந்தியாவின் சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியல் இட்டால் இப்போதும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கின்றது! Technical ஆக இப்படம் ஒரு பாடம். இப்படத்தின் பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் எனில் ஸ்டீவன் ஸ்பியல்பெர்க் டிவிக்காக என எடுத்து பின்னர் படம் ஆக்கிய The Duel வேறு வகையில் பாடமானது. ஒரு காரோட்டியும் பெரிய டேங்கர் லாரியும் என இரண்டே பாத்திரங்கள்.

சிவாஜி, எம் ஜி ஆர் என நடிகர்களின் காலத்துக்குப் பின் இயக்குனர்களின் காலம் 1975இல் தொடங்குகின்றது. தேவராஜ் மோகன், துரை, மகேந்திரன், பாரதிராஜா, ஆர் செல்வராஜ், ருத்ரய்யா,  பாலு மஹேந்திரா, பேரா. பிரகாசம், விசு...என. கூடவே இளையராஜாவின் புதிய இசை. எனவே இப்படியொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்ட வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த தியேட்டர்களை மறக்க முடியாது. 16 வயதினிலே, அழியாத கோலங்கள், நண்டு, அவள் அப்படித்தான், பசி, கிராமத்து அத்தியாயம், சாதிக்கொரு நீதி, தண்ணீர் தண்ணீர், எச்சில் இரவுகள்... மதுரை டூரிங் தியேட்டர்களில் மிக அரிய படங்களை பார்த்திருக்கின்றேன்.

மிகப்பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண மண்டபம் ஆகவோ வணிக மால்களாகவோ உருமாற்றம் அடைந்து வருகின்றன. இங்கே சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் பிஸியான குடோன் தெருவில் என் அண்ணனுடன் ஒரு வருட காலம் இருந்தேன். ஜார்ஜ் டவுனில் மினர்வா தியேட்டரை மறக்க முடியாது. பழைய கால வீடு போல. இருக்கைகள் அனைத்தும் ஒயர் பின்னியவை! ஹிட்ச்காக் படங்கள் பலவற்றை இங்கே பார்த்தேன். கட்டணத்தை இப்பொழுது கற்பனை செய்ய முடியாது. அங்கே ஸ்டாலில் அருந்திய காப்பியின் இனிப்பும் கசப்பும் மணமும், அடடா! பெரம்பூர் புவனேஸ்வரியில் செம்மீன் பார்த்தேன். ஓட்டேரி பாலாஜியில் Five man army, அம்பத்தூர் ராக்கியில் Pappillon,  ப்ளூ டைமண்டில்   The great dictator, the modern times, மிட்லாண்டில் City lights, ஈகாவில் The Last Emperor, அங்கேயே தமிழின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான். காசினோ, அலங்கார் (ஒமர் முக்தார்), பைலட், மேகலா, ப்ராட்வே,  ராக்சி, உமா, சயானி, ஸ்டார், சாந்தி, அண்ணா, தேவி காம்ப்ளெக்ஸ், ஆனந்த் (நாயகன்), கமலா, சத்யம், கெயிட்டி, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர், ஆவடியில் மீனாட்சி, ராம ரத்னா, குமரன் (இங்கே பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் திரையிடப்பட்டன)....

ராம ரத்னா.  இங்கே பார்த்த படங்களுக்கு கணக்கில்லை.  இப்போது அது திருமண மண்டபம்! அந்த  சாலை வழியே போவது சுடுகாடு வழியே பயணிப்பது போல் உள்ள. இன்று ஜுமாஞ்சி 1995 படத்தை டிவியில் பார்த்தபோது ராம ரத்னாவில் பார்த்த நினைவு மேல் எழும்பி வந்தது, எனவே இந்தப் பதிவு. 

வேலூர் மாவட்டம் பூட்டுதாக்கு என்ற ஊரில் கணேஷ் என்ற டூரிங் தியேட்டர் இப்போதும் இயங்குவதாக படித்தேன், மகிழ்ச்சியாக உள்ளது. நேஷனல் பிக்சர்ஸ் பி ஏ பெருமாள் முதலியார் இந்த ஊர்க்காரர் என்றும் வருடம் தோறும் சிவாஜி அவரை சந்திக்க வருவார் என்றும் படித்தேன். தியேட்டரின் எலக்ட்ரிசியன் சுப்பிரமணி, தன் சுய முயற்சியில், படச்சுருளை 4 முறை மாற்றுவதற்கு பதிலாக 2 முறை மாற்றினால் என்ன என்று சிந்தித்து 10000 அடிக்கான ஒரு spool ஐ வெற்றிகரமாக கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றாராம்!

இறுதியாக: 2000த்தின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் மலைத்தொடரின் அடியில் பாலைவனத்தில் திறந்தவெளி திரையரங்கு ஒன்றை நிறுவினாராம்.  மரத்தினால் ஆன 150 இருக்கைகள், திரை, ஜெனரேட்டர் என அனைத்தும் தயார். முதல் நாள் ஜெனெரேட்டரை இயக்க, அது இயங்கவே இல்லையாம். எனவே, இன்னும் திரையிடப்படாத திரையரங்கம் என்ற பெயர் தாங்கி சிதிலம் அடைந்து வருகின்றதாம்.

பல லட்சம் ரசிகர்களின் கைதட்டல், சிரிப்பு, அழுகை, கோபம், ஆட்டம், அடிதடி என அனைத்து உணர்வுகளையும் நான்கு சுவர்களுக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டு வணிக வளாகங்களுக்குள் சமாதி அடைகின்றன நம் அரங்குகள்.

கருத்துகள் இல்லை: