சனி, மார்ச் 29, 2014

சாம்பல்தேசம்-5 (நெடுங்கதை)



இளவரசர் சிறுபிள்ளையாக இருந்தபோது மோட்சத்தீவுக்கு குடும்பத்தோடு பிக்னிக் போனதும் போன இடத்தில் பாயசம் குடித்தபோது பொறையேறியதும் தான் இளவரசர் தலையில் தட்டி பொறையை நிப்பாட்டியதும் காரியக்கமிட்டி உறுப்பினரும் பிரபல நடிகருமான சமிதாப் அச்சனுக்கு ஞாபகம் வர, தான் சொன்னால் இளவரசர் கேட்பார் என்றும், தவிர சாக்கடையில் குதிப்பதும் எல்.பி.ஜி.குடியரசின் அரசியலில் குதிப்பதும் ஒன்றுதான் என்பதை பக்குவமாக எடுத்துச்சொன்னால் இளவரசர் புரிந்துகொள்வார் என்றும் சொல்லி தானே பொறுப்பேற்றுக் கொண்டார். இளவரசர் அரசியலில் குதிக்கும்போது கைகாலில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அச்சனின் கடமை என்றும் தேவைப்பட்டால் ஹாலிவுட்டில் இருந்து டூப்புக்களை அழைத்துக் கொள்ளலாம்  என்றும் இரவு ரெண்டேமுக்கால் மணிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தேசியக்கட்சியின் கொள்கைப்பாடலான “ஓ சூரத்மாதா! சேவ் பேரிக்கா!என்ற பாடல் பாடப்பட்டது.
 

அதுவரை சிறுநீர் கழிக்கமுடியாமல் அடக்கி வைத்திருந்த காரியக்கமிட்டி மெம்பர்கள் முண்டியடித்து கதவைத் திறந்து வரலாற்றுப்புகழ் வாய்ந்த செங்கோட்டை ரோட்டில் நிம்மதியாக சிறுநீர் பெருநீர் போன்றவற்றைக் கழித்து வாயு பிரித்து ஏப்பம் விட்டனர்.
 
வெளியே காத்திருந்த டி.வி.செய்தியாளர்களுக்கு பெரியன்னை பேட்டியளித்தார். "நமஸ்தே! இன்னும் ரெண்டு நாளில் தேசியக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்த தேர்தலிலும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம்! ஜெய் ஹிந்த்! ஜெய் ஹோ!" என்று இந்தியிலும் இங்க்லீசிலுமாக கலந்துகட்டி பேட்டியளித்துவிட்டு பூனை, ஓநாய், முள்ளம்பன்றிப்படைகள் சூழ காரில் ஏறி சைரன் ஒலிக்க பறந்தார். பெரியன்னை புறப்பட்ட விநாடியில் எல்லாரும் சாப்பாட்டு அறைக்குள் ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டு நுழைந்தார்கள்.
*****************************************
ராஷ்ட்ரீயக்கட்சியில் வலைவீசித்தேடியும் "ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர்" ஒருத்தரும் தட்டுப்படாததால் வெறுப்படைந்த பெரிசுகள் நீண்ட விவாதத்துக்குப்பின்னும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பி காக்கிடவுசர் தலைமையகத்தை தொடர்பு கொண்டார்கள்; அவர்களின் ஆலோசனைப்படி சாம்பல் பிரசினையை மையமாக வைத்தே தேர்தலைச்சந்திப்பது என வேறு வழியின்றி முடிவுசெய்தனர்.
**************************************
 

அன்றைக்கும் வழக்கம் போலவே "பர்ர்ர்ர்தேசி பர்ர்ர்ர்தேசி ஜானா நஹீ" பாடலை முணுமுணுத்தபடியே ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டிருந்த இளவரசர்  தற்செயலாக கீழே பார்க்க ஏதோ வித்தியாசமாகத் தெரிவதை உணர்ந்தார். கூர்மையாகக் கவனித்த பின் அதிர்ச்சியடைந்தார். சக பைலட்டை தொடையில் தட்டி, "ஜி! பீச்சே தேஹ்கோ!" என்று சொல்ல, அவரும் கீழே பார்த்தார்; ஒருபக்கம் பருத்தி விவசாயிகள் கத்தரிக்காய் விவசாயிகள் நெசவுத்தொழிலாளர்கள் சிறுதொழில் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக விசம் குடித்து தற்கொலை செய்துகொள்வதும் பக்கத்திலேயே கிரிக்கெட் மைதானத்தில் 20க்கு 20 கிரிக்கெட் விளையாட்டில் தொடைதெரிய ஆடும் பெண்களைப் பார்த்து லட்சக்கணக்கான எல்பிஜி தேசத்துமக்கள் கைகொட்டி ரசிப்பதும், மட்டையாளர்களை ஏலம் எடுத்த தொழிலதிபர்களும் கணிப்பாளர்களும் (கிரிக்கெட் விளையாடத் தெரியாத மக்குகள் இவர்களை சூதாடிகள் என்று சொல்கின்றார்கள்) கத்தை கத்தையாக பணத்தை ஆட்டிக்கொண்டு லட்சம், ரெண்டு லட்சம், அஞ்சு லட்சம் என கூச்சல் இடுவதும் ஆன வழக்கமான காட்சிகள் கண்ணில் படவே புதுசா என்ன இருக்கு என்ற தொனியில் "அச்சா சைட் சீயிங்" என்றார். 


எரிச்சல் அடைந்த இளவரசர் "அடச்சீ! சரியான முட்டாளாக இருக்கிறானே!" என்ற படியே தான் உணர்ந்ததைச் சொன்னார். "மற்ற தேசங்களெல்லாம் அடுத்த நூற்றாண்டை நோக்கி வேகமாக நகர்ந்து செல்ல நமது தாய்நாடான எல்.பி.ஜி.குடியரசு மட்டும் பெயிலான பையன் மாதிரி அதே இடத்தில் அசையாமல் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா? என்ன பைலட் நீ?" என்று கடிந்துகொள்ள, அவரும் உடனடியாக பைனாகுலரை எடுத்து உற்றுப்பார்த்து "அட ஆமா!" என்று அதிர்ச்சி அடைந்தார். "இது நமக்கு அவமானம் இல்லையா?" என்று ஒரு நொடி யோசித்த இளவரசர் உடனடியாக எதிரே இருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து வேலையை ராஜினாமா செய்வதாகவும் சக பைலட்டிடம் பொறுப்பை ஒப்படைப்பதாகவும் எழுதிக்கொடுத்துவிட்டு முதுகில் பாராசூட்டை மாட்டியபடியே "தேசம் அழைக்கின்றது, குட் பை! ஜெய் ஹிந்த்!" என்றபடியே கதவைத் திறந்து கீழே குதித்தார். நேராக தனது தாய் வீடான நால்மூர்த்தி பவன் புல்வெளியில் வந்து இறங்கினார்.  

தனது அன்னையைப் பார்த்து தான் கண்ட காட்சியை காண ஓடினார். தனது அம்மாவை நடுவீட்டில் உட்காரவைத்து சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு காரியக்கமிட்டி உறுப்பினர்கள் "நாட்டுக்கு அம்சம் இருபது, வீட்டுக்கு அம்சம் நீ இருப்பது" "தாயில்லாமல் நானில்லை, நீ இல்லாமல் நாடில்லை" என்று கஞ்சிரா, முரகோஸ், டோலக், ஷெனாய் முழங்க கோரசாகப் பாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்ட இளவரசர் “என்ன கண்றாவி! எப்பவும் இந்த இழவுதானா?என எரிச்சலடைந்தார். இருநூறு நாள் வேலைத்திட்டத்தில் இவர்களை தள்ளிவிட வேண்டும் என கறுவினார். 
 
தொடரும்...

வியாழன், மார்ச் 27, 2014

சாம்பல்தேசம்-4 (நெடுங்கதை)



ஆளும்கட்சியான தேசியக்கட்சியின் டாப் லெவல் தலைவர்கள் அன்றிரவே சதிடில்லியில் தங்கள் கட்சியின் காரியக்கமிட்டி ஆபிசில் ஜமக்காளங்கள் திண்டுகளை இழுத்துப்போட்டு தொந்திகளை தரையில் சாய்த்தும் மல்லாக்கப்படுத்தும் ஏப்பம் விட்டபடியும் பான்பராக்கை மூலையில் துப்பியபடியும் அவசரக்கூட்டம் நடத்தி  தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத்தொடங்கினர். சிலர் 'வசூல்ராஜா' ஆனந்த் சார் மாதிரி வீல்சேர்களில் வந்து தலையைப் பின்னால் சாய்த்தபடியே விவாதங்களில் பங்கு பெற முயற்சித்தனர்.  ஆனால் எல்லோருமே மீட்டிங் முடிந்தபின்னான சாப்பாட்டில் மெனு அய்ட்டங்கள் பற்றி தத்தமது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு கற்பனையில் இருந்தார்கள். நாட்டின் முதல் மத்திய பஞ்சாயத்து தலைவரான அழகர்லாலின் பேத்தியும்  இப்போதைய ஆட்சியின் வழிநடத்துனருமான பெரியன்னை கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். ஏ.சி.அறை முழுக்க குமட்டி வீசிய பான்பராக், மருந்து மாத்திரை நாற்றம், ஏப்பம், ஆசனவாயு போன்ற நாற்றங்களையும் உணர்ந்த பெரியன்னைக்கு, ஒருபுறம் வாந்தியும் மயக்கமும் வர, "ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர்" என்று பிரமாதராய் சொல்லியிருந்தது வேறு நினைவுக்கு வந்து பெரும் கலக்கத்தை உண்டு பண்ணி மண்டையை சொறியவும் வைத்தது.

யாராவது ஏதாவது ஆறுதலாகச் சொல்வார்களா என்று தலையைத் தூக்கிப்பார்த்த பெரியன்னை, எல்லாருமே அரைக்கண் மூடியபடி மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது கண்டு எரிச்சல் அடைந்தார். அப்படியே திடீரென கண் விழித்தாலும் பேய்க்கனவு கண்டது போல அலறியபடி "பெரியன்னை மாதாஜீக்கு ஜே! ஜெய் ஹோ!" என்று கத்திவிட்டு மீண்டும் வாயைப்பிளந்தபடி தூங்கத்தொடங்கினர். கைத்தடி இன்றி நடக்கும் ஒரே தலைவரும் பேரிக்கா நாட்டின் நம்பிக்கைக்கு உரியவருமான மனோன்மணிசிங்கை நீங்க உங்க கருத்தை சொல்லுங்க" என்று பெரியன்னை கேட்டுக்கொண்டதும், "நமஸ்தே அம்மா! நமது கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரு இளைய நட்சத்திரம் இப்போது அவசியம் தேவை. நாடு ரெண்டாம் பட்சம். பார்க்க சிவப்பா மூக்கும் முழியுமா வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா நமது மக்களை சமாளிச்சுடலாம், ஜெய் ஹோ!" என்று கூற, எல்லாரும் கோரசாக "அச்சா! பஹூத் அச்சா!" என்று கோரஸ் பாட, "சைலன்ஸ்! அப்படி யார் இருக்காங்க?" என்று மனோன்மணிசிங்கைப் பார்க்க "அம்மா! நீங்க தப்பா நினக்க கூடாது! நான் ரெண்டு நாளா தீவிரமா யோசிச்சுப் பார்த்ததுல நம்ம இளவரசர் தவிர வேறு யாருக்கும் இந்த தகுதி இல்லன்னு முடிவுக்கு வந்திருக்கேன்" என்று பவ்யமாகக் கூறினார். வேறு யாரை சொன்னாலும் உடனடியாக காரியக்கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து கடாசி எறியப்படுவது உறுதி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். "ஆ பேஸ் பேஸ்! அச்சா சாய்ஸ்! இளவரசர் ஜிந்தாபாத்! ஜெய் ஹோ! சூரத் மாதா கி ஜே!" என்ற கோசங்கள் ஏ.சி.அறையைப் பிளந்தன. இளவரசர் வேறு யாருமல்லர், பெரியன்னையின் மூத்த மகன்தான்.

ஹெலிகாப்டர் ஓட்டியாக வேலைபார்த்து தனது குடும்பத்திற்காக ஒரு நாளைக்கு 32 பர்கானா சம்பாதித்துக் கொண்டிருந்தவர் இளவரசர்; இந்த 32 பர்கானா வருமானத்தில் தனது குடும்பத்தாருக்கு பீட்சா, பர்கர், மட்டன், மீன் என சமாளிப்பதும், பென்ஸ் காருக்கு பெட்ரோல், ரீபோக், உட்லேண்ட்ஸ் ஷூ, டான் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் என வாழ்க்கை நடத்த ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர் இளவரசர்; பல நேரங்களில் கடன் கழுத்து வரை நெறிக்கும்போது க்விஸ் வங்கியில் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் பணத்தை எடுத்து செலவு செய்வார்; இவரை கட்சிக்குள் எப்படிக் கொண்டு வருவது என்ற பிரச்னை தலைதூக்கியது. சதிடில்லி ரயில்வே ஸ்டேசனுக்கு அடுத்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற சாக்கடையில் குதித்தாலும் குதிப்பேனே தவிர அரசியலில் குதிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தவர் இளவரசர். அவரை சமாளித்து அரசியலில் குதிக்க வைப்பது எப்படி என்ற கேள்விதான் இப்போது அறையில் துர்நாற்றத்தை விடவும் பயங்கரமாக சுழன்றடித்தது.
தொடரும்....

புதன், மார்ச் 26, 2014

சாம்பல்தேசம்-3 (நெடுங்கதை)



தும்பை கடற்கரையில் இறங்கிய ராபர்ட் கிளைவ், பாரம்பரிய முறைப்படி கேட்வே ஆஃப் எல்பிஜிவழியே நுழைந்து வந்தார்; இந்த கேட் வழியே உள்ளே நுழைபவர்கள் தொலைதூரத்தில் உள்ள தலைநகர் சதிடில்லிக்கு நொடியில் சென்றடைந்துவிடலாம் என்பது இக்கேட்டின் சிறப்பு. கிளைவுக்கு தேசியக்கட்சியின் மூத்ததலைவர் மனோன்மணிசிங் மாலைமரியாதையோடு பூரணகும்ப மரியாதையும் செலுத்த, ராஷ்ட்ரீயக்கட்சியின் தலைவர் அருக்காணி ஜெனெரல் டயருக்கு மாலையிட்டு குஜராத்தில் இருந்து கொண்டுவந்த ரத்தத்தில் குங்குமம் இட்டது ஒரே கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததை உலகத்தில் உள்ள அத்தனை டிவி சானல்களும் நேரடியாக ஒளிபரப்பின.

சிமுக தலைவர் எப்போதும்போல எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற நூல்களில் இருந்து அடிமையாய் இருப்பதில் அளவற்ற ஆனந்தம் இருப்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இப்படியேதான் எல்பிஜி குடியரசு இருக்கும், பேரிக்காவின் நலனின் பொருட்டே தனது குடும்பமாகிய கட்சியும் கட்சியாகிய குடும்பமும் கடந்த அறுபது வருடங்களாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது, இதெல்லாம் டான்சி ராணிகளுக்கு புரியாது என்ற உறுதிமொழியையும் கிளைவுக்கு அளித்தார். பொன்னிறத்தலைவன் காலத்தில் இருந்தே தனது கட்சியும் இதன் பொருட்டே பாடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இதெல்லாம் சிமுக துரோகிகளுக்கு புரியாது என்றும் ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப்புரியும் என்றும் அதே இடத்தில் அஇசிமுக தலைவர் சூடான பதிலடி கொடுத்தார்; இந்த இருவரையும் கூட இருந்து பார்த்தவன் நான், இருவரும் துரோகிகள், என்னை ஏமாற்ற முடியாது; பேரிக்கா நாட்டின் நலனுக்காக பாடுபடுவதில் வீரேந்திரமூடியை  விஞ்ச எந்தக்கொம்பனாலும் முடியாது, நாடெங்கும் வீரேந்திரமூடியின் அலை வீசுது பார்! என கருப்புத்துண்டை இடுப்பில் கட்டியபடியே ஒரு ஆவேச நடனம் ஆடினார் புரட்சிப்புயல் புண்ணாக்கோ. இவை அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்த பேரிக்கா ஜனாதிபதி மனோன்மணிசிங்கை தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது சகாக்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அன்றைய இரவை மும்பானிஜியின் புதிதாகக் கட்டப்பட்ட 44 மாடிகொண்ட வீட்டில் கழித்தனர் ராபர்ட்கிளைவும் டயரும். தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி, அந்தர் ராஷ்ட்ரீய, உப்பர் ராஷ்ட்ரீய, பாஹர் ராஷ்ட்ரீய, சிமுக, அஇசிமுக, ஆகிய கட்சிகளோடு தேசிய, அகில, திராவிட, புரட்சிகர, மக்கள், ஜனநாயக, முற்போக்கு, தொழிலாளி, விவசாயி...உள்ளிட்ட சொற்களை முன்னாலும் பின்னாலும் கொண்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் புரட்சிப்புயல் புண்ணாக்கோ, தமிழ்க்கிணறு மணியன், கம்பவுண்டர் அய்யா போன்றோரும் கீழ்த்தளத்தின் வரவேற்பறையில் ஜமக்காளம் விரித்து ஒற்றுமையாக தூங்கினார்கள்.     

மறுநாள் முறைப்படி சதிடில்லியில் எல்பிஜி குடியரசின் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த ராபர்ட்க்ளைவ், ஜெனரல் டயர் இருவரும் பேரிக்கா ஜனாதிபதியின் நிபந்தனையான ‘கடந்த அறுபது வருடங்களில் எல்பிஜி குடியரசை அதிக அளவில் சாம்பலாக்கிய கட்சியின் தலைவரே அடுத்த மத்திய பஞ்சாயத்துதலைவராக வர முடியும்என்பதை அறிவித்து தேர்தல் இந்த திசையில்தான் செல்லும் என்று முடிவு செய்தார்கள். தவிர ஒவ்வொரு கட்சிக்கும் ஆன தேர்தல் அறிக்கை பேரிக்காவில் ப்ரிண்ட் ஆகி வருவதாகவும் வந்தவுடன் கையில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். 
 
இதனை நேரடி ஒளிபரப்பு செய்த ஒண்டூத்ரீ சானலின் பிரபல செய்தியாளரும் தேர்தல் ஆரூட நிபுணருமான பிரமாதராய் வரும் தேர்தலில் தேசியக்கட்சிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சிக்கும் சரியான போட்டியிருக்கும் என்றும்  இரண்டு கட்சிகளுக்கும் இடையே வெற்றிதோல்வி என்பது 0.0001 சதவீதத்தில் ஊசலாடுவதாகவும் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது உள்ளங்கை விளக்கெண்ணெய் போல தெளிவாகி விட்டது என்பதால் வரும் முப்பது நாட்களும் ஜேம்ஸ்பாண்ட் பட ரேஞ்சுக்கு வினாடிக்குவினாடி சஸ்பென்ஸ்தான் என்றும் உசுப்பேத்தினார். 


ஆனால் அடுத்து அவர் கூறியது இந்த தேர்தலின் திசையையே மாற்றிவிடக் கூடியதாய் இருந்தது; ரயில்வே ஸ்டேசன், பஸ்ஸ்டாண்ட், பொதுக்கக்கூஸ், ரேசன்கடை, டாஸ்மாக் கடை, பீடா கடை, கிரிக்கெட் மைதானம், பள்ளிக்கூட அட்மிசன் போன்ற ஜனநடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அவர் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர் யார் நின்றாலும் 99.99 சதவீத வாக்கு கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் திட்டவட்டமாகத் தெரிந்தது. மக்களின்  எதிர்பாராத இந்த தீர்ப்பு கட்சிகள் இடையே பெருத்த அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி பீதி கிளப்பியது. கிளைவும் டயரும் பேரிக்கா ஜனாதிபதியும் கூட எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் அதிர்ச்சியில் உறைந்தார்கள். உலகமே ஒன்று நினைக்க எல்பிஜி மக்கள் வேறொன்றை நினைப்பார்கள் என்பது இந்த முறையும் உண்மையாகி விட்டதே! இவங்களப் புரிஞ்சுக்கவே முடியலியே!  திடீரென ரோஸ் கலர் தலைவருக்கு எங்கே போவது?

தொடரும்....