ஓ மாஜிரே! (ஓ படகோட்டியே!)கரையை நெருங்கும் எவரும் அறிவார்
காகிதப் படகுக்கு கரையென்று இல்லை
கரை எதுவாயினும்
எங்கே ஒதுங்குகின்றேனோ அதுவே என் கரை
வாழ்க்கையில் பற்றிக்கொள்ளவென சில ஆறுதல்கள் கிடைக்கலாம்
ஆனால் அவை உண்மையல்ல,
காகிதக் கப்பல்கள் போல,
தண்ணீரில் அடித்துச் செல்லப்படும்
உண்மையான ஆதரவு என்பது
உன்னோடு எப்போதும்கூட வருவதுதான்,
படகோட்டியே,
அந்த ஆறுதலைத் தருபவன் நானே
இந்த நீரால் அடித்துச் செல்லப்பட்ட கரைகள்
தூர்ந்து போன கரைகள் ஏராளம்
இதற்கு முன் காணாமற்போன அத்தனை ஆதரவுகளும்
மீண்டும் வரக் காண்பாய்
ஆனால், படகோட்டியே,
ஆற்றின் நடுவே உனக்குக் கிடைக்கும்
ஒரே ஆதரவு எனில் அது எனதே
மக்கள் வருவார்கள், போவார்கள்,
உன்னைச் சந்திப்பார்கள்
ஆனால், படகோட்டியே,
புரிந்து கொள்,
உனது இக்கட்டான இடர்மிகு சோதனைக்காலங்களில்
யார் உனக்கு ஆதரவாக நிற்பார்களோ
அவர்களே உனக்கான உண்மையான மனிதர்கள்.
....
இந்தித்திரைப்பட உலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்சார் அவர்கள் எழுதிய பாடல் இது. ஓ மாஜிரே... அப்னா கினாரா.... நதியா கி தாரா ஹே...என்ற பாடல் அது.1975 இல் வெளிவந்த குஷ்பூ என்ற படத்தில். கிஷோர்குமார் பாடினார், ஆர்.டி.பர்மன் இசையில். மாஜி என்ற சொல்லை படகோட்டி, ஓடக்காரன் என்று எப்படியும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலவழித் தமிழாக்கம் நான் செய்தேன்.
மாஜியை நோக்கிப் பாடுவதாக இருந்தாலும் உண்மையில் பாடுபவன் தன்னை சுயபரிசோதனைக்காக உட்படுத்திக்கொள்வதே இந்த அழைப்பு. தனக்குத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கேள்விகளை எழுப்புவது. இதில் நதி என்பது வாழ்க்கையின் ஓட்டம். நம் உடலுக்குள் ஓடும் சக்தியின் அடையாளம். கினாரா என்பது நாம் பற்றிக்கொள்ளும் ஆதரவு, அன்பு, பாதுகாப்பு.
இந்தப் பாடல் சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஆன உரையாடல். மூளை எப்போதும் கேள்விகளுக்கான பதிலைத் தேடுகின்றது. ஆதரவை நாடுகின்றது. ஆன்மா சொல்கின்றது, வாழ்க்கையின் உயிரோட்டமே உண்மையான ஆதரவு என்று.
... .... ....
பட்டியாலி bhatiyali என்ற நாட்டார் இசைவடிவம் பங்களாதேஷிலும், மேற்கு வங்கத்திலும் இசைக்கப்படுகின்றது. குறிப்பாக நதியில் கரைக்குத் திரும்பும் படகோட்டிகளால் பாடப்படுவது. பட்டா என்ற சொல் எழுச்சித் தணிவை, அதாவது கடல்நீர் தரையைவிட்டு வடியும் வேளையை, கடல் நீரின் பின்னடைவு நேரத்தைக் குறிப்பது. மனிதனின் உணர்வுகள் தணிந்து மறையும் வேளையை அடையாளப்படுத்தும் இயற்கை நிகழ்வு.
பொதுவாக ஆற்றையும் நீரையும் பாடுபவை, நீரோடு வாழ்க்கையை நடத்தும் மீனவர்களின், படகோட்டிகளின் வாழ்வைப் பாடுபவை பட்டியாலி இசை வடிவம். மையமாக இருப்பது 'பிரக்ருதி தத்துவம்', அதாவது இயற்கையைப் பாடுவது.
வங்காள டெல்டா பகுதியின் பல பகுதிகளில் பாடப்படுகின்றது. இன்றைய பங்களாதேஷின் மேமன்சிங் மாவட்டமே இதன் பிறப்பிடம் என்று சொல்லப்படுகின்றது.
வங்கக்கவிஞர் ஜசிமுத்தீன் எழுதிய "அமே(ய்) பாஷாய்லி ரே, அமே(ய்) டுபாய்லி ரே" என்ற புகழ்பெற்ற பட்டியாலி பாடலை பாடகர் அப்பாஸ் உத்தின் அகமத் என்பவர் பாடிப் புகழ்பெறச் செய்தார். பங்களாதேஷை சேர்ந்த மற்றொரு பாடகர் ஆன ஆலம்கீர் என்பவர் 1970களில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு (கராச்சி) குடிபுகுந்தார். இதே பாடலை பாகிஸ்தானில் பாட, அங்கே மக்கள் மத்தியில் மிகப் புகழ்பெற்ற பாடலாகி விட்டதாம்.
... .... ....
கங்கா ஆயே கஹான் சே Ganga aye kahan se என்ற பட்டியாலி பாடல் 1961இல் வெளிவந்த காபூலிவாலா படத்தில் சலீல் சவுத்ரி இசையில் ஹேமந்த்குமார் பாடி இடம்பெற்றது. 'கங்கை எங்கேயிருந்து வருகின்றாள்? கங்கை எங்கே போகின்றாள்?' என்று தொடங்கும் பாடல். இந்த வங்கப்பாடலின் மையமான ஆன்மாவை எடுத்துக் கொண்டு இந்தியில் குல்சார் எழுதியதுதான் தொடக்கத்தில் நான் சொன்ன ஓ மாஜிரே! பாடல்.
தை பிறந்தால் வழிபிறக்கும் படத்தில் இடம்பெற்ற ஆசையே அலைபோல, நாமெல்லாம் அதன் மேலே என்ற பாடல் இந்தச் சாயலை ஓட்டியது.
'ஆசையே அலைபோல, நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்களிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?'
என்று திருச்சி லோகநாதன் பாடினார். கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.
கோவலனும் கண்ணகியும் புகார் நீங்கி மதுரை செல்ல முடிவு செய்கின்றார்கள். செல்வங்கள் அனைத்தையும் இழந்து வாணிபம் செய்து வாழும் பொருட்டு மதுரை செல்கின்றான், உடன் கண்ணகியும். வழியில்தான் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண்துறவியை சந்திக்க நேர்கின்றது. அவர் பெருமான் அருகனை வழிபடும் பொருட்டு மதுரை செய்கின்றார். மூவரும் இணைந்தே மதுரை செல்கின்றனர். படகில் செல்லும் போது அவர் பாடும் பாட்டு அவனுக்கென்றே எழுதப்பட்டதுபோல் உள்ளது.
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதிலே
மறக்க ஒண்ணா வேதம்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம்
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன்தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன்தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
துடுப்புக்கள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்தப்படகின் நிலை போலே ஆகும்
அந்தப்படகின் நிலை போலே ஆகும்'
மு கருணாநிதி எழுத, ஆர் சுதர்சனம் இசையில் கே.பி.சுந்தராம்பாள் கவுந்தி அடிகளாகப் பாடினார். படம் பூம்புகார் (1964).
நாயகன் படகில் வருகின்றான். அவனது மனவோட்டத்தை அறிந்தவன்போல பெருங்குரலெடுத்து படகோட்டி பாடுகின்றான்.
'ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே....ஓ
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஆசை என்னும் மேடையிலே
ஆடிவரும் வாழ்வினிலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லே'
கண்ணதாசன் எழுத, விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.
வங்க மண்ணைச்சேர்ந்த சலில் சவுத்ரி கேரளத்துக்கு வருகின்றார். மலையாளிகள் அவரை அணைத்துக் கொண்டாடுகின்றார்கள். கடற்புரத்து கரையில் மலர்ந்த காதலரின் கதைக்கு அத்தனை அற்புதமாக இசையமைத்து இருந்தார். தகழியின் செம்மீன் அது.
ஏதோ ஒரு சொப்னம் என்ற மலையாளப்படத்தில்தான் அற்புதமான அந்தப் படகோட்டிப்பாட்டு சலீல் சவுத்ரியின் இசையில் மலர்ந்தது. பூமானம் பூத்துலங்ஙே என்ற பாடல். யேசுதாஸின் கம்பீரமான குரலில்.
துலாபாரம் என்ற தோப்பில் பாஷியின் கதை. ஜி தேவராஜன் இசையமைத்தார். கண்ணதாசன் எழுதினர். படகோட்டிக்காக கே.ஜே.யேசுதாஸ் பாடுகின்றார்.
"காற்றினிலே பெருங்காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ?'
.... .... ....
மாநிலங்கள் மொழிகள் பிற எல்லைகள் என அனைத்து தடைகளையும் பிரிவினையையும் ஓடக்காரர்கள் என்னும் உழைப்பாளிகள் தம் பாசாங்கற்ற சொற்கட்டால் அமைந்த எளிய பாடல்களால் உடைத்துவிடுகின்றார்கள். தத்துவ விசாரணை செய்கின்றார்கள் .
ஓ மாஜிரே பாடலின் இணைப்பு
https://www.youtube.com/watch?v=KsBnr89VRPY