வியாழன், அக்டோபர் 06, 2022

இந்த மழைக்காலம் பொழிந்த நீரால் ...

இந்த மழைக்காலம் பொழிந்த நீரால்

என் கண்கள் நிரம்பி வழிகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
தடுமாறும் என் இதயமே,
என்ன விதமான விளையாட்டு இது, அறியேன்
என் உதடுகள் பாடும் இந்தக் கொடுங்கீதம்
எங்கிருந்து வந்தது, அறியேன்
இது எங்கோ தொலைதூரத்துக்கு என்னை தூக்கிச் செல்கிறது
நான் மறந்துவிட்ட கீதம்தான்,
ஆனால் எப்படியோ இன்னும் என் நினைவில் உள்ளது
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
அது பேசி ஓய்ந்த பழங்கதைதான்,
நீ அதை மறந்திருப்பாய் என்றே நினைக்கின்றேன்
ஆனால்
கண்ணாமூச்சி ஆடிய அந்த மழைக்காலத்தை
என்னால் மறக்க முடியாதே !
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
வருடங்கள் பல ஓடிவிட்டன நாம் பிரிந்த பின் சந்தித்து
கடந்த காலம் இந்த மழைக்காலமின்னலில் பளிச்செனத் தெரிகின்றது
அதில் நான் உன்னைப் பார்க்கின்றேன்
நம்பிக்கையும் நிராசையும் என் இதயத்தில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
இந்த மழைக்காலம் பொழிந்த நீரால்
என் கண்கள் நிரம்பி வழிகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
....
இந்தி மூலம்: கவிஞர் ஆனந்த் பக்ஷி
தமிழில் மு இக்பால் அகமது
........
மெஹ்பூபா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். ஆர் டி பர்மன் இசை. ஒரு துன்பியல் பாடலுக்கு மிகப்பல இசைக்கருவிகளைக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ரேசன் அமைத்திருந்தாலும் ஒவ்வொரு சொல்லின் உள்ளேயும் உறைந்து கிடக்கும் துயரின் பிழிவை செதுக்கிச் செதுக்கி பாடுகின்றான் பாடகன். இசைக்கருவிகளுக்கும் அவனுக்குமான போட்டி நடக்கின்றது. வெற்றிபெற்றது யார்? பாடியவர் கிஷோர் குமார்.

லிங்க் https://www.youtube.com/watch?v=_4Ccxj_A4UU

கருத்துகள் இல்லை: