வியாழன், ஜூன் 24, 2021

தேவ்லி வரும் இரவு ரயில்

The Night Train at Deoli

- Ruskin Bond

தமிழில்: மு இக்பால் அகமது

... .... ...... 

கல்லூரியில் படிக்கும்போது கோடை விடுமுறையை களிப்பதற்காக டேராவில் இருந்த என் பாட்டியின் வீட்டுக்கு வந்துவிடுவேன். சமவெளியில் இருக்கும் ஊரைவிட்டு மே மாதத்தின் முற்பாதியில் புறப்பட்டு வந்தால் ஜூலை மாதத்தின் பிற்பகுதியில்தான் திரும்புவேன். தேவ்லி டேராவில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள சிறிய ரயில் நிலையம் . டெராய் எனப்படும் அடர்ந்த காடுகள் அடங்கிய  இந்தியப்பகுதியின் எல்லையாகும் தேவ்லி.


ரயில் தேவ்லிக்கு வரும் நேரம் அதிகாலை ஐந்து மணியாகும். இருள் விலகாத அப்பொழுதில் மின்சார விளக்குகளும் எண்ணெயில் எரியும் விளக்குகளும் சிந்தும் மங்கலான வெளிச்சத்தில் நிலையம் சற்றே ஒளிரும். ரயில் பாதைகளுக்கு அப்பால் விரியும் காடுகள் விடியலில் மெல்லிய வெளிச்சத்தில் புகைபோல் தெரியும். தேவ்லி நிலையத்தில் ஒரே ஒரு ரயில் மேடை மட்டுமே உண்டு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு அறை, பயணிகள் காத்திருப்பு அறை தவிர ஒரு தேநீர் கடை, ஒரு பழக்கடை, சில நாய்கள். இவை தவிர அங்கு வேறொன்றும் இல்லை, அடுத்துள்ள அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பயணிக்கும் முன் இங்கே பத்து நிமிடம் மட்டுமே ரயில் நிற்கும், வேறென்ன வேண்டும்.

தேவ்லியில் ரயில் ஏன் நிற்கின்றது, இது எனக்குப் புரியாத ஒன்று. அந்த ரயில் நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இதுவரை எதுவும் நடக்கவும் இல்லை. ரயிலில் இருந்து ஒருவரும் இறங்குவது இல்லை, ஒருவரும் ரயிலுக்கள் ஏறுவதும் இல்லை. சுமைதூக்கிகளை அங்கே நான் பார்த்ததே இல்லை. ஆனால் ரயில் என்னவோ இங்கே முழுதாக பத்து நிமிடங்கள் நிற்கும், பிறகு மணியடிக்கும், கார்ட் விசில் ஊதுவார், பிறகென்ன, தியொலியை பிரிந்து செல்வோம், மறந்து விடுவோம்.

எனக்குள் எப்போதுமே ஒரு குறுகுறுப்பு உண்டு, அந்த சுவர்களுக்குப் பின்னால் தேவ்லியில் நடப்பது என்ன? அந்த தனிமையான பிளாட்பாரத்தை நினைத்து எப்போதும் வருந்துவேன், அங்கே வருவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. முடிவு செய்தேன், ஒரு நாள் நான் தேவ்லியில்  இறங்குவேன், நாள் முழுக்க அங்கேயே இருப்பேன், அந்த நகரத்துக்கு என் வரவு மகிழ்ச்சியை தரட்டும்.

எனக்கு பதினெட்டு வயது அப்போது, பாட்டியின் வீட்டுக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்தேன், இரவு ரயில் தேவ்லியில்   நின்றது. ஒரு இளம்பெண் பிளாட்பாரத்தில் கூடைகள் விற்றுகொண்டு இருந்தாள். 

அது குளிர்ச்சிமிகு அதிகாலை நேரம். அவள் தன் துப்பட்டாவை தோள்களை சுற்றி அணிந்து இருந்தாள். கால்களில் செருப்பு ஏதும் இல்லை, அவள் பழைய உடைகளை அணிந்து இருந்தாள், ஆனால் அவள் பதின்ம வயதில் இருந்தாள், அவள் நடையில் நாகரிகமும் மரியாதையும் இருந்தன.

என் ஜன்னலுக்கு வந்தவுடன் நின்றாள். நான் அவளையே உற்றுக்கவனிப்பதை அறிந்து இருந்தாலும் அது தெரியாதது போல் அலட்சியமாக இருந்தாள். வெளிர்ந்த நிறம், ஒளிரும் தலை முடி, அலைபாயும் விழிகள். அங்கும் இங்கும் சுற்றியடித்துவிட்டு உணர்வலைகள் வீசியடிக்கும் அவ்விழிகள் இறுதியில் என் விழிகளை சந்தித்து நின்றன.

என் ஜன்னலில் சிறிது நேரம் நின்றாள், இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் அங்கிருந்து அகலும்போது நான் என் இருக்கையில் இருந்து எழுந்ததை உணர்ந்தேன். பெட்டியின் வாசலை நோக்கி நகர்ந்தேன்,  பிளாட்பாரத்தில் இறங்கி  எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றேன். தேநீர்க்கடையை நோக்கி நடந்தேன். மெல்லியதாக எரிந்து கொண்டு இருந்த அடுப்பின் மீது கெட்டிலில் தேநீர் கொதித்துக்கொண்டு இருந்தது. ஆனால் கடைக்காரர் தேனீர் விற்கும் பொருட்டு ரயிலுக்கு சென்று இருந்தார். அவள் கடையின் பின் இருந்து என்னைத் தொடர்ந்து வந்தாள்.

'கூடை வேண்டுமா?' என்று கேட்டாள். 'மிகத் தரமான பிரம்பால் ஆனவை, மிக உறுதியானவை'.

'வேண்டாம், எனக்குத் தேவையில்லை'

நாங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு நின்றோம், அது மிக நீளமான பொழுதாகத் தெரிந்தது. 'அப்படியா? உண்மையாகவே வேண்டாமா?'

'சரி, ஒரு கூடை கொடு'. மேலே இருந்த கூடையை எடுத்துக்கொண்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்தேன், அவள் விரல்களைத் தொடும் துணிச்சல் இல்லை எனக்கு.

அவள் ஏதோ சொல்ல வந்தாள், கார்ட் விசில் ஊதினார்; ஏதோ சொன்னாள், மணி ஓசையிலும் ரயில் என்ஜினின் மூச்சிலும் அவள் சொன்னது காற்றோடு போனது. நான் என் பெட்டியை நோக்கி ஓடினேன். ரயில் புறப்பட்ட வேகத்தில் பெட்டி முன்னும் பின்னுமாக மோதிக் குலுங்கியது.

ரயில் நகர்ந்து முன்னோட பிளாட்பாரம் பின்னோக்கி ஓட நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். பிளாட்பாரத்தில் அவளைத்தவிர யாரும் இல்லை, நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு என்னைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தாள். ரயில் சிக்னல் கம்பம் தாண்டும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், ரயில் காட்டுக்குள் நுழைய ஸ்டேஷன் கண்ணில் இருந்து மறைந்தது, ஆனால் அவள் தன்னந்தனியே அங்கே நிற்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின் நான் படுக்கவில்லை, உட்கார்ந்தே பயணித்தேன். அவளது முகமும் நெருப்பின்றிப்புகைந்த கண்களும் ஆன அந்தச்சித்திரம் என் நினைவை விட்டு அகல மறுத்தது.

டேராவுக்கு வந்து சேர்ந்த பின் அங்குள்ள புதிய அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் இந்த நிகழ்ச்சி மங்கலாகி தொலைதூரத்துக்கு சென்றுவிட்டது. இரண்டு மாதங்களுக்குப்பிறகு பாட்டி வீட்டில் இருந்து மீண்டும் ஊருக்கு புறப்படும்போது அவள் என் நினைவுக்கு வந்தாள்.

தேவ்லி ரயில்நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது அவளைத்தேடினேன். என்னால் நம்பமுடியவில்லை, பிளாட்பாரத்தில் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். பெட்டியின் படிக்கட்டில் இருந்து கீழே குதித்தேன், அவளை நோக்கி கை அசைத்தேன்.

என்னைக்கண்டு கொண்டாள், புன்னகை செய்தாள். நான் அவளை நினைவில் வைத்துள்ளேன் என்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் என்னை நினைவில் வைத்துள்ளாள் என்பதால் நான் மகிழ்ச்சியுற்றேன். இரண்டு பழைய நண்பர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வு போல இருந்தது அது.

தன்னிடம் இருந்த கூடைகளை விற்கும் பொருட்டு ஒவ்வொரு பெட்டியாக போகவில்லை அவள், நேராக தேநீர்க்கடையை நோக்கி வந்தாள். ஒளியற்று இருந்த அவள் கண்களில் வெளிச்சம் மின்னியது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆனால் அதற்கு மேலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். 

அப்படியே அவளை அள்ளி ரயிலுக்குள் தள்ளி என்னுடனேயே கொண்டுசென்றுவிட வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டேன்.  தேவ்லி ரயில் நிலையத்தில் மீண்டும் அவள் என் கண் பார்வையில் இருந்து தொலைவில் மறையும் எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கையில் இருந்த கூடைகளை எடுத்து தரையில் வைத்தேன். அவள் ஒரு கூடையை எடுக்க எத்தனித்தாள், ஆனால் நான் அவள் கையை இறுகப்பற்றினேன்.

'நான் டெல்லிக்கு போகின்றேன்'

தலையசைத்து அவள் சொன்னாள், 'நான் எங்கும் போக வேண்டியதில்லை'

கார்ட் விசில் ஊதினார், ரயில் புறப்பட வேண்டும், கார்ட் மீது அக்கணத்தில் பெரும் வெறுப்பு உண்டானது.

'நான் மீண்டும் வருவேன்... நீ இங்கே வருவாயா?'

மீண்டும் தலையசைத்து ஆமோதித்தாள். அப்போது மணியோசை ஒலிக்க ரயில் நகரத்தொடங்கியது. வேறு வழியின்றி என் கையை அவளிடம் இருந்து விடுவித்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன்.

இந்த முறை நான் அவளை மறக்கவில்லை. பயணத்தின் பிற்பகுதி முழுவதும் அவள் என்னுடனேயே இருந்தாள், அதன் பின்னரும் நெடுநாட்களாக. அந்த வருடம் முழுவதுமே ஒளிரும் உயிர்ப்புடன் அவள் என் நினைவில் இருந்தாள். அந்த வருடம் கல்லூரி முடிந்த உடன் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்பாகவே டேராவுக்கு புறப்பட்டேன். முன்பாகவே தன்னைப் பார்க்க வந்துவிட்ட பேரனைக் கண்டு பாட்டி மகிழ்ந்து போவாள்.

தேவ்லியில்  ரயில் நுழையும்போது படபடப்பும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொண்டன. அவளிடம் என்ன சொல்வது? அவளைக்கண்டால் என்ன செய்வது? சரி, அவள் முன்பு கதியற்றவன் போல நடந்துகொள்ளக் கூடாது, பேச இயலாமல் தத்தளிக்க கூடாது, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

ரயில் தேவ்லி   நிலையத்துக்குள் வந்தது, பிளாட்பாரம் நெடுகிலும் தேடினேன், அவள் எங்கேயும் இல்லை.

கதவைத் திறந்து படிக்கட்டில் இருந்தும் இறங்கிவிட்டேன். என்னால் அந்த ஏமாற்றத்தை உணர முடிந்தது, நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்துகொண்டு இருப்பதாக உணர்ந்தேன். நான் ஏதாவது செய்தாக வேண்டும், ஸ்டேஷன் மாஸ்டர் அறையை நோக்கி ஓடினேன், 'இங்கே கூடைகளை விற்பாளே ஒரு இளம்பெண், உங்களுக்கு தெரியுமா?'

'அப்படி யாரையும் தெரியாது.... பாருங்க, ரயிலை விட்டுவிடக் கூடாதுன்னா உடனே  போய் ரயிலில் ஏறுங்கள்'.

ஆனால் பிளாட்பாரத்தின் இரண்டு முனைகளிலும் என் கண்கள் அலை பாய அவளைத் தேடினேன். ரயில் நிலைய இரும்பு வேலியடைப்புக்களை வெறித்துப் பார்த்தேன். ஒரு மாமரத்தையும் காட்டை நோக்கிச்செல்லும் புழுதி படிந்த சாலையையும் அன்றி வேறொன்றும் இல்லை அங்கே. அந்தச்சாலை எங்கே செல்கின்றது? ரயில் பிளாட்பாரத்தை தாண்டி வெளியே வந்துவிட்டது, ஓட வேண்டும், ஓடினேன், என் பெட்டியின் கதவைப் பிடித்து உள்ளே ஏறினேன். ரயிலின் வேகம் அதிகரித்தது, காட்டுக்குள் நுழைந்தது, ஏதும் செய்ய இயலாதவனாக ஜன்னலின் வழியே வெளியே வெறித்து நோக்கினேன்.

இரண்டே முறை மட்டுமே சந்தித்த ஒரு இளம்பெண், அதுவும் என்னிடம் எதுவுமே பேசாதவள், அவளைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது, தெரியாது என்றால் துளியும் தெரியாது, ஆனால் அவள் மீது என் இதயத்தில் மென்மை சுரந்தது, அவள் மீது ஒரு பொறுப்புணர்வு பிறந்தது,  அவளை நான் எங்கே எப்படித் தேடுவேன்? 

நான் பாட்டி வீட்டில் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கவில்லை, எனவே பாட்டிக்கும் இந்த முறை என் மேல் வருத்தமே. நான் அங்கே நிம்மதியாக இருக்கவும் இல்லை, தன்னிலை மறந்தவனாக இருந்தேன். எனவே மீண்டும் சமவெளி நோக்கி ரயிலைப் பிடித்தேன், தேவ்லி   ரயில் நிலையத்தில் மீண்டும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவளைப்பற்றி கேட்க வேண்டும்.

ஆனால் இப்போது புதிய ஸ்டேஷன் மாஸ்டர் வந்திருந்தார். கடந்த வாரம்தான் பழைய மாஸ்டர் வேறொரு ஊருக்கு பணியிடமாற்றத்தில் போயிருந்தார். புதியவருக்கோ கூடைகள் விற்கும் இளம்பெண்ணைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தேநீர்க்கடையின் உரிமையாளரை சென்று பார்த்தேன், ஒடுங்கிய சிறிய உருவம் கொண்ட அவர் பழைய ஆடைகளை அணிந்து இருந்தார். கூடைகளை விற்கும் அந்த இளம்பெண்ணைப் பற்றி எதுவும் தெரியுமா எனக் கேட்டேன்.

'ஆமா, அப்படி ஒரு பெண் இங்கே இருந்தாள், எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஆனால் இப்போதெல்லாம் அவளைப் பார்க்க முடிவதில்லை'

'அப்படியா? என்ன ஆச்சு அவளுக்கு?'

'எனக்கு எப்படியப்பா தெரியும்? அவள் யார் எனக்கு?'

மீண்டும் ஒருமுறை ரயிலைப் பிடிக்க ஓடினேன்.

தேவ்லியின் ப்ளாட்பாரம் கரைந்து ஓடியது. எனது அடுத்த பயணத்தில் ஒரு முறை இந்த ஊரில் இறங்குவேன், ஒரு நாள் முழுவதும் இங்கே இருந்து அவளைத் தேடுவேன், அவளைப்பற்றி விசாரிப்பேன், இறுதியில் அவளைக் கண்டுபிடிப்பேன். வேறு எதனாலும் அல்ல, தன் கரிய அலைபாயும் விழியின் பார்வை ஒன்றால் மட்டுமே என் இதயத்தைக் கொள்ளைக்கொண்ட அவளைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதி பூண்டேன்.

இந்த நினைவுடன் என்னைத் தேற்றிக்கொண்டு மீதமுள்ள இறுதியாண்டு கல்லூரிப்படிப்பை முடித்தேன். கோடை வந்தது, டேராவுக்கு ரயிலில் பயணமானேன், அதிகாலை இருள்விலகாத பொழுதில் 

தேவ்லி  நிலையத்துக்குள் ரயில் நுழைந்தது. பிளாட்பாரம் நெடுகிலும் அவளைத் தேடினேன், எனக்குத் தெரியும், அவளை என்னால் மீண்டும் காண முடியாது, ஆனாலும் ஒரு நம்பிக்கை...

ஆனாலும் முன்பு நான் முடிவு செய்தபடி தேவ்லியில் பயணத்தை இடை நிறுத்தி அந்த ஊரில் அவளைத்தேடுவது என்பது நடக்காமல் போனது. (என்ன செய்ய, இது கதையாகவோ சினிமாகவோ இருந்திருந்தால், தேவ்லியில்  இறங்கியிருப்பேன், மர்மத்தை துலக்கி சுபமான முடிவு கண்டிருப்பேன்). உண்மையில் அவ்வாறு செய்வதற்கு எனக்குள் பயம் இருந்தது என்றே நினைக்கிறேன். உண்மையில் அவளுக்குக்கு என்ன நேர்ந்தது இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் எனக்கு பயம் இருந்தது. ஒருவேளை அவள் தேவ்லியை  விட்டு சென்றிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகியிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம்...

கடந்த சில வருடங்களில் தேவ்லியை   பல முறை கடந்து சென்றிருக்கின்றேன், என் ஜன்னலின் வழியே எப்போதும் வெளியே தேடுவேன், என்னை நோக்கிப் புன்னகையை வீசிய அதே முகத்தை மீண்டும் கண்டுவிட மாட்டேனா என்கிற சிறு நம்பிக்கை. 

தேவ்லி நிலையத்தின் சுவர்களுக்கு அந்தப்பக்கம் என்ன நடந்திருக்கக்கூடும் என்று யோசித்து இருக்கின்றேன். ஆனால் என் பயணத்தை ஒருபோதும் இடைநிறுத்தி அங்கே இறங்கியது இல்லை. அது என் விளையாட்டை நாசம் செய்துவிடக்கூடும். என் நம்பிக்கையும் கனவும் இப்படியே தொடரட்டும், ஆளரவமற்ற அந்த பிளாட்பாரம் நெடுகிலும் ஜன்னல் வழியே நான் தேடுவேன், கையில் கூடைகளுடன் அவள் வருகைக்காக.

தேவ்லியில்  நான் ஒருபொழுதும் என் பயணத்தை இடைநிறுத்தி இறங்கியது இல்லை, ஆனால் எத்தனை முறை என்னால் அவ்வழியே பயணிக்க முடியுமோ அத்தனை முறையும் பயணிக்கின்றேன்.

..... ......

ஞாயிறு, ஜூன் 20, 2021

ரயிலோடு போய்...

வாழ்க்கை ரயிலை நகர்த்துவது கடந்த இரண்டு மாதங்களாக அதனை எளிதாக இல்லை.

வாசிப்பும் எழுத்தும் 2020இல் மார்ச்சுக்கு பிறகு இருந்தது போல இல்லை. அப்படி எல்லாம் இல்லை, எப்பொதும்போல்தான் என்பவர்களின் சித்தத்தை போற்றுவோம். 

இன்று ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது வாழ்க்கைப் பயணத்தில் கோரோனா pause பட்டனை அழுத்திவிட்டது என்றார். உண்மைதான். பயணங்கள், நினைத்த நேரத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வருவது எல்லாம் இயலாமல்... வாசிப்பும் எழுத்தும் கதி என்று கிடந்தவர்கள் பத்து பதினைந்து பக்கத்துக்கு மேல் நகர மாட்டேங்குது என்று முகநூலில் புலம்புகின்றார்கள். எனக்கும் அப்படியே. வேறு வழியில்லை, ஒரு நோய்த்தொற்று நம் மனநிலையை ஆட்டுவிக்க, நம்மை முடக்க நாம் அனுமதித்து விடலாமா என்ற கேள்வியை எழுப்பிக் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. என்ன செய்யலாம்? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை மீட்கும். 

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புதிய ஊருக்கு பயணம் செல்வது வழக்கம். மதுரை, திண்டுக்கல், களக்காடு குளியல் என்று இந்த வருடம் சுற்றியதும் உறவுகள் நண்பர்களை கண்டதும் மகிழ்ச்சிதான். ஆனால் ஆர்ப்பரித்துக்கொட்டும் ஆளில்லாக் குற்றாலத்தை செய்தியில் காணும்போது மனம் வெறுப்படைகின்றது. என்ன வாழ்க்கை இது!

ரயில் பயணங்கள் சுகமானவை. ஜன்னலோர இருக்கை சொர்க்கம். அதிலும் தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் அந்த மலைப்பாதை ரயில் பயணம், ஊட்டி டார்ஜிலிங் பயணங்களுக்கும் அழகுக்கும் சற்றும் குறைந்தது அல்ல. செங்கோட்டை தாண்டினால் அது வேறு உலகம். மலையும் காடும் கேரள உழைக்கும் மக்களும் மரச்செறிவுகளுக்குள் மறைந்திருந்து பார்க்கும் வீடுகளும் ரயில் ஜன்னலை உரசி செல்லும் செடிகொடிகளுமாக... வளைந்து வளைந்து ஒரு மலைப்பாம்பை போல ச்சக் சக் சக்.... என்றவாறு புகைகக்கி செல்லும் டீசல் எஞ்சின் இழுத்துச்செல்லும் ரயில். புனலூர், தென்மலை ஆகியவை அழகிய ஊர்கள். தென்மலை அழகிய சுற்றுலாத்தலம். புனலூரில் பிரிட்டிஷ் காலத்திய தொங்குபாலம் இப்போதும் பயனில் உள்ளது. 13 கண் பாலம் மிகப்புகழ் பெற்றது. கட்டஞ்சாயா, பழம்பொரி, கப்ப, மாட்டுக்கறி வறுவல் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மலைரயில் பயணத்துக்கு தனியே இலக்கு ஒன்றும் தேவையில்லை, பயணிப்பது மட்டும்தான் இலக்கு. அகல ரயில் பாதை இடப்பட்ட பின் இன்னும் பயணம் செய்யாமல் இருப்பது அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதன்றி வேறென்ன?

பழைய டெல்லியில் இருந்து டேரா டூன் சென்ற ரயில் பயணத்தின்போது, அதிகாலை எழுந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் கடந்து செல்லும் நிலையங்கள் எல்லாம் பழமையானவை, பயணம் நெடுகிலும் கங்கையும் யமுனையும் நம்மை கடந்து சென்றுகொண்டே இருக்கின்றன. ஹரித்வார் ரயில் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை கண்டேன், ஆள் உயரத்துக்கு புல் முளைத்து மூடிக்கிடந்தன. அதாவது கும்பமேளாவுக்கு வரும் லட்சக்கணக்கான சாமியார்களுக்கு டிக்கெட் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தனை கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொண்டேன்.

பயணங்கள் முடக்கப்பட்டு இருப்பது வாழ்க்கை முடக்கப்பட்டு கிடப்பதாகும், நம் வாழ்க்கை மட்டுமல்ல, மனிதர்கள் இடம்பெயராமல் தேங்கிக்கிடப்பது நம் வாழ்வில் மட்டுமே பொருளாதார இழப்பையும் சிக்கல்களையும் உருவாக்கவில்லை, இது ஒரு சங்கிலித்தொடர், சக மனிதர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் இழப்பை ஏற்படுத்தி, விளைவாக மனநிலையிலும் உணர்வுகளிலும் கூடவோ குறையவோ பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. அசைவும் இயக்கமுமே வாழ்க்கை, இது சகல உயிர்களுக்கும் பொருந்தும்.

... ... .... ....

2000இன் முற்பாதியில் த மு எ ச சென்னை DIBICAவில் திரைப்படக்கலை குறித்த ஒரு பட்டறையை நடத்தியது. மூன்று நாட்கள். பாலு மகேந்திரா, இயக்குநர் சிவக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, உமா வாங்கல், இயக்குநர் ஹரிஹரன் (ஏழாவது மனிதன்), ச தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் ஆகியோருடன் இருந்த பெரும் வாய்ப்பு அது. சத்யஜித் ரே அவர்களின் சாருலதாவில் இருந்து ஒரு காட்சி திரையிடப்பட்டது. சாருலதா குரு ரவீந்திரநாத் தாகூரின் கதை. காட்சியின் சகல வித  அமைப்புகள் - ஒளி, ஒலி, கதாப்பாத்திரத்தின் நகர்வு, பேசும் விதம், க்ளோஸ் அப், மிட் சாட், லாங் சாட், நிற்கும் இடம் உள்ளிட்ட பல அம்சங்களும் எப்படி திட்டமிடப்பட்ட ஒத்திசைவுடன் படமாக்கப்பட்டது என்று ஒவ்வொரு அம்சமாக விளக்கினார் இயக்குநர் சிவக்குமார்.

ஏழாவது மனிதனுக்கு முன்பு வரை ஹரிஹரன் பம்பாயில் மராட்டிய மேடை நாடகத்தில் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு இயங்கியவர் அவர். அங்கே அவர் பெரும் அனுபவசாலி. இங்கே வரும்போது தமிழ் தெரியாது அவருக்கு. பிறருடன்  ஆங்கிலத்தில்தான் உரையாடி இருக்கின்றார்.  ஏழாவது மனிதன் படம் தயாரிப்பில் இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர் சி எஸ் லட்சுமி (அம்பை) என்று அவர் குறிப்பிட்டார். ஊருக்குள் வந்த சிமெண்ட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சொல்லும் படம் அது. ரகுவரன் நடித்து இருந்தார். 

பயிற்சிப்பட்டறையில் Night Mail என்னும் 1936ஆம் வருடப்படம் ஒன்று திரையிடப்பட்டது. அப்போது யூடியூப் எதுவும் கிடையாது. தியேட்டருக்கு போக வேண்டும் அல்லது திரைப்பட விழாவுக்கு போக வேண்டும். இல்லையேல் பர்மா பஜாரில் வெளிநாட்டு சிடிக்களை வாங்கலாம். இப்போது night mail இணையத்தில் கிடைக்கின்றது. 23 நிமிட படம். படத்தில் ஒரு ஆங்கிலகவிதை உள்ளது. பின்னணியில் ஒலிக்கும். திரையில் கவிதையும் ரயிலும் ஓட, கூடவே திரையின் முன்னே நின்றுகொண்டு அப்பாடலைப்பாடினார் ஹரிஹரன், சொல்லும் உச்சரிப்பும் சிறிதும் பிசகாமல்! அரங்கில் இருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது, படத்துக்கும் ஹரிஹரனுக்கும் சேர்த்து. 

This is the night mail

Crossing the border

Bringing the check and the

Postal order

Letters for the rich

Letters for the poor

The shop at the corner and the

Girl next door.... என்று கவிதை போகின்றது. ரயில் சக்கரத்தின் ஓட்டத்துடனும் தாள லயத்துடனும் இசைந்து ஓடுகின்ற ஓசை நயமிக்க சொற்களுடன் கவிதை ஓடும். W H Auden என்ற புகழ்பெற்ற கவிஞரின் கவிதை அது. இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர். Benjamin Britten என்பவர் பாடியிருக்கின்றார். இணையத்தில் தேடுங்கள், படமும் உள்ளது, இந்தப் பாடல் ஒலிக்கும் பகுதியும் தனியாக கிடைக்கின்றது. (ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது... என்ற பாட்டு என் நினைவுக்கு வந்தது, பாடலின் பொருளுக்காக). Auden அவர்களின் கவிதைகள் நான் வாசித்தது இல்லை என்பதை ஒப்புக்கொள்கின்றேன். அவரது கவிதை மிகக்கச்சிதமாக இப்படத்தில் பொருந்திவருவதை மட்டுமே கருத்தில் கொண்டு இப்பதிவை எழுதுகின்றேன். கவிதை வரிகளும் கவிதை படத்தில் இடம்பெறும் 3 நிமிட காட்சியும் யூடியூப்பில் உள்ளன. 

கடிதங்களை ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு சுமந்து செல்லும் மெயில் எனப்படும் ரயிலில் பணியாற்றும் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் இந்த ரயிலின் வரவுக்காக காத்திருக்கும் ஊழியர்கள், இதே ரயிலில் வரும் ஒரே ஒரு செய்தித்தாளுக்காக காத்திருக்கும் ஒருவர், ரயில் கடக்கும் பாதையில் உள்ள ஊர்கள், காடுகள், மலைகள் என கருப்பு வெள்ளையில் 84 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கடிதங்கள் அடங்கிய கனத்த பையை நிற்காமல் ஓடும் ரயிலுக்கு எப்படி மாற்றுகின்றார்கள் என்கிற தொழிநுட்பம் நம்மை கைதட்ட செய்கின்றது. ஒரே ஒரு நொடிக்கும் குறைவாகவே வரும் அக்காட்சி படத்தின் சூப்பர் காட்சி.

கொடுங்காலம் ஒழியும் நாளுக்கென காத்திருக்கின்றேன், பயணங்கள் முடிவதில்லை.

ரஷ்கின் பாண்ட் எழுதிய ரயில் நிலைய கதை ஒன்றுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

... .... ...

நீர்வண்ண ஓவியம்: Bijaynanda Rahman

திங்கள், ஜூன் 14, 2021

எர்னெஸ்டோ சே குவேரா: இளம்பருவம்

போரில் இறங்குமாறு எதிரிகள் எங்களை அறைகூவி அழைத்தார்கள். ஆகவே வேறு வழியின்றி நாங்கள் போருக்கு ஆயத்தமாக வேண்டியிருந்தது. துணிச்சலுடன் போர்முனை நோக்கிப் போக வேண்டியிருந்தது - சே.

... ... ..

1969 ஒரு பிப்ரவரி மாதத்து மாலையில் ஹவானா நகரின் மிராமர் என்னும் புறநகரில் சேயின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச், சேயின் நண்பர் ஆல்பெர்ட்டோ, சேயின் மனைவி ஜூலியா ஆகியோரை I Lavretsky  என்ற ரஷியர் நேரில் கண்டு பேசிய பதிவு: 

பாடிஸ்டாவை துரத்தியடித்தபின், கியுபன் தேசிய வங்கியின் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட குவேரா, புதிய அரசு வெளியிட்ட புதிய நாணய தாள்களில் சே என்று கையெழுத்து இட்டு எதிர்ப்புரட்சியாளர்கள் மத்தியில் பெரும் கோபமும் வெறுப்பும் ஏற்படக் காரணமாக விளங்கினார்.

கியுப புரட்சி வெற்றிக்குப்பின் ஒரு முறை அவரிடம் சே என்ற புதிய பெயரை விரும்புகின்றாரா என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: என்னைப்பொறுத்தவரை சே என்ற சொல் என் வாழ்க்கையின் மிக மதிப்பு வாய்ந்த, அதி முக்கியமான விசயங்கள் அனைத்தையும் குறிக்கின்றது. அதுவன்றி அது வேறு எப்படியும் இருக்க முடியாது. என் முதற்பெயரும் குடும்பப் பெயரும் சிறிய, தனிப்பட்ட, முக்கியத்துவம் அற்ற சில விசயங்களை மட்டுமேதான் குறிக்கின்றன.

டான் எர்னெஸ்டோ (தந்தை) சொல்கின்றார்: என் மகன் ஏன் 'மேஜர் சே' ஆனான்? ஏன் அவன் கியுப புரட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கினான்? எது அவனை பொலிவிய மலைத்தொடர்களுக்கு உந்தித்தள்ளியது? இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் நாம் கடந்த காலத்தையும், எங்கள் குடும்ப மூதாதையர்கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். என் மகனின் நரம்புகளில் ஐரிஷ் புரட்சியாளர்கள், ஸ்பானிய வீரர்கள், அர்ஜென்டினாவின் தேசபக்தர்கள் ஆகியோரின் குருதி பாய்ந்தது என்ற உண்மையை முதலில் குறித்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் ஓய்ந்து இராத தன் மூதாதையர்கள் இடம் இருந்து சில அம்சங்களை சே மரபுச்செல்வமாகப் பெற்றிருந்தான் என்பது தெளிவான உண்மை. தூர தேசங்களில் அலைந்து திரியவும், அபாயகரமான சாகசங்களில் ஈடுபடவும் புதிய கருத்துக்களை கண்டு தெளிவு கொள்ளவும் அவனது இயல்பிலேயே சில அம்சங்கள் காரணமாக இருந்தன. 

... ... ....

1930ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள், எனக்கு அந்த நாள் மிக நன்றாக நினைவில் இருக்கிறது, நானும் சிலியாவும் (குவேராவின் தாயார்) டேட்டியுடன் (குழந்தையான குவேராவை செல்லமாக Tete என்று அழைத்தனர்) நீச்சல் குளத்தில் குளிக்க சென்றிருந்தோம். சிலியாவுக்கு தண்ணீர் என்றால் மிக ஆசை, அவள் நல்லதொரு நீச்சல் வீராங்கனையும் ஆவாள். அன்று குளிர்ச்சி அதிகமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. திடீரென டேட்டி மூச்சுவிட கஷ்டப்பட்டு இருமத் தொடங்கினான். நாங்கள் உடனே அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு சென்றோம், அவன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார். ஒருவேளை கடும் குளிரின் காரணமாக அவன் இந்த நோய்க்கு ஆளாகி இருக்கலாம். அல்லது அவன் அம்மாவிடம் இருந்து இந்த நோய் அவனுக்கு வந்திருக்கக் கூடும், சிலியா குழந்தையாக இருந்தபோது அவளும் இந்த நோயால் அவஸ்தைப் பட்டிருக்கிறாள்.... .... அந்தக்காலத்திய மருந்துகளுக்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் இல்லை. தட்பவெப்பநிலை மாறினால் சரியாகிவிடும் என்று எல்லோரும் எங்களுக்கு ஆலோசனை கூறினார்கள்..... ஒரு வருத்தமும் இன்றி எங்கள் தோட்டத்தை விற்றுவிட்டு, கோர்டோபாவுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த அல்ட்டா கிராசியா என்ற இடத்தில் வில்லா நிடியா என்ற வீட்டை வாங்கினோம். ... ஒவ்வொரு நாளும் , குறிப்பாக இரவுகளில், சே ஆஸ்துமாவால் அவதிப்பட்டான். நான் அவனது படுக்கைக்கு அருகில்தான் படுத்து இருப்பேன், அவன் மூச்சுவிட திணறும்போது அவனை எடுத்து தோள்களில் ஏந்தி, அவன் அவஸ்தையில் இருந்து விடுபடும் வரையிலும், களைப்புற்று தானாகவே தூங்கும் வரையிலும் , நேரமாகி விடும், விடிவதற்கு சற்று முன்னர்தான் அவன் தூக்கத்தில் ஆழ்வான், அவனை தேய்த்துவிட்டுக் கொண்டும் தட்டிக்கொடுத்தும் தூங்க வைப்பேன்....

புரட்சியாளர்கள் நோயின் காரணமாகவோ உடலுறுப்பு குறைபாடுகள் காரணமாகவோ சிலவகை உணர்ச்சிகளின் காரணமாகவோ உருவாவதில்லை. மாறாக அவர்கள் ஒரு சுரண்டும் அமைப்பின் காரணத்தாலும் நீதிக்காகப் போராடும் மனிதனின் இயல்பான உந்துதலின் காரணமாகவே உருப்பெறுகின்றார்கள். ... .... பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு டேட்டியை நாங்கள் உற்சாகப்படுத்தினோம். டேட்டி விளையாட்டுக்களை நேசித்தான். தன் நோயைப்பற்றி கவலைப்படாமல் எதை எடுத்துக்கொண்டாலும் அதில் தான் முழுத்திறனையும் செலுத்தி செயல்பட்டான். சாபக்கேடான ஆஸ்துமா இருந்தபோதும் தான் யாருக்கும் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிக்க முயல்வதுபோல அவன் செயல்பட்டான். பள்ளி மாணவனாக இருந்தபோதே அவன் பிரதேச விளையாட்டு மன்றமான Atalaya வில் உறுப்பினராகி அதன் கால்பந்தாட்டக்குழுவில் மாற்று ஆளாக விளையாடினான். அவன் சிறந்த ஆட்டக்காரன்தான் எனினும் விளையாடும்போதே ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு ஆளாகி மைதானத்தை விட்டு வெளியேறவும் மூச்சுத்திணறலை சரியாக்கவும் வேண்டிய நிலையில் இருந்தால் அவனால் முழு ஆட்டக்காரனாக விளங்க முடியவில்லை. கடுமையானதும் கஷ்டமானதும் உடல் முழுவதையும் பயன்படுத்தி விளையாடக்கூடியதும் ஆன ரக்பி விளையாட்டையும் விளையாடினான். சில காலம் குதிரைச்சவாரி செய்தான். கோல்ப் விளையாடினான், சறுக்கு விளையாடினான். ஆனால் குழந்தைப்பருவத்திலும் இளமையிலும் அவன் உண்மையாகவே ஈடுபாடு காட்டியது சைக்கிள் சவாரிதான் என்பதில் மறுகருத்து இல்லை. 

... சே ஒருபோதும் வீட்டில் முடங்கி கிடந்தது இல்லை. அவன் மாணவனாக இருந்தபோதே ஓர் அர்ஜென்டைன் கப்பலில் மாலுமியாக சேர்ந்து ட்ரினிடாட்டில் இருந்து பிரிட்டிஷ் கயானா வரை பல நாடுகளுக்கும் சுற்றினான். பின்னர் கிறானோடாசுடன் சேர்ந்து தென் அமெரிக்காவின் பாதி பகுதியை சுற்றினான், சரியாக சொல்வது எனில் நடந்தே சுற்றினான். 

(இப்போது லாவரெட்ஸ்கி தன்னிடம் இருந்த காகிதங்களில் இருந்து 1950 மே 5 தேதியிட்ட El Grafico என்ற அர்ஜென்டினா நாளிதழில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை வாசிக்கின்றார், சேயின் தந்தை கேட்கின்றார்) : 1950 பிப்ரவரி மாதம் 23, செனோரேஸ், Micron Moped Firm நிறுவனத்தின் பிரதிநிதியான நான் உங்களுக்கு, நீங்கள் வலம் வருவதற்காக ஒரு மைக்ரோன் மொபெட்டை அனுப்புகின்றேன். நான் இதில் அமர்ந்து 12 அர்ஜென்டைன் மாநிலங்கள் வழியாக 4000 கிலோமீட்டர்கள் பயணம் செய்தேன். அப்பயணம் முழுவதும் இந்த மொபெட் எவ்வித தடங்கலும் இன்றி வேலை செய்தது. இதில் ஒரு குறையைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் பயணம் செய்த பின், புறப்படும் போது எவ்வாறு இருந்தேனோ அதே நிலையிலேயே திரும்பி வந்து சேர்ந்தேன் என்று கூறுகின்றேன். எர்னெஸ்டோ குவேரா செர்னா (கையொப்பம்).

தொடர்ந்து சேயின் தந்தை கூறுகின்றார்: .... டேட்டிக்கு அப்போது வயது பதினொன்று, ராபெர்டோவுக்கு எட்டு. இருவரும் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். காற்றில் கரைந்தது போல எங்கேயும் அவர்களை பார்க்க முடியவில்லை.... போலீசுக்கு தகவல் கொடுத்தோம்... 800 கிலோமீட்டர்க்கு அப்பால் அவர்களை கண்டுபிடித்தார்கள். ஒரு ட்ரக் வண்டியின் பின்னால் கட்டணம் இன்றி பயணம் செய்துள்ளார்கள்.... .... ஒருமுறை கிறேனாடோசும் அவனும் எழுதிய கடிதத்தை பெறும்போது நாங்கள் கனத்த இதயத்தோடும் கலக்கத்தோடும் இருந்தோம். தென் அமெரிக்காவில் பயணித்த காலத்தில் அவர்கள் சென்று இருந்த தொழுநோயாளிகள் காலனியைப் பற்றி விவரித்து எழுதி இருந்தார்கள். ஒரு சமயம் பெருவில் இருந்து எழுதிய கடிதத்தில் அவனும் ஆல்பர்ட்டோவும் கட்டுக்கு அடங்காத காட்டாற்று வெள்ளம் பாயும் அமேசான் நதியில் தொழுநோயாளிகள் வழங்கியிருந்த ஒரு தெப்பத்தில் ஏறிப்பயணம் செய்வதாக எழுதி இருந்தான். ஒரு மாதத்துக்குள் என்னிடம் இருந்து கடிதம் ஏதும் வரவில்லை எனில் நாங்கள் முதலைகளுக்கு இரையாகி விட்டோம் அல்லது ஜிப்ரோ இந்தியர்களுக்கு உணவாகப் பரிமாறப்பட்டு விட்டோம் என்றோ எங்கள் தலைகள் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்பட்டு விட்டன என்றோ ஊகம் செய்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் நடந்தால் பாடம் செய்யப்பட்ட எங்கள் தலைகளை நியு யார்க் நகரில் அழகுப்பொருட்கள் விற்கும் கடைகளில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதி எங்களுக்கு சிரிப்பூட்ட முயற்சி செய்து இருந்தான்.

பின்னர் அவன் மெக்சிகோவில் இருந்து எழுதிய கடிதத்தில், தான் பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்துவிட்டதாகவும் பாடிஸ்ட்டாவை எதிர்த்துப் போராட கியூபாவுக்குப் போவதாகவும் சொல்லி இருந்தான்.

... .... ....

உதவிய நூல்: எர்னெஸ்டோ சே குவேரா, ஆசிரியர்: I Lavretsky, தமிழில்: சந்திரகாந்தன்

வெளியீடு: NCBH, 1986

ஈ எம் எஸ்: ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள்

.... ... கேரள அரசாங்கம் செயல்பட்டதன் கடைசி சில வாரங்களில் இதைக் காண முடியும். அச்சமயத்தில் "கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வேலையை முடக்கி விடுவது" என்ற அப்பட்டமான நோக்கத்துடன் கேரளாவில் இருந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் இறுதியான "விடுதலைபோராட்டத்"திற்கு (விமோசன சமரம்) தங்களை தயார் படுத்திக்கொண்டு இருந்தனர். இங்கே பயன்படுத்தப்பட்ட முறைகள் வேறெந்த மாநிலத்திலாவது காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சியால் பயன்படுத்தப் பட்டிருந்தால் அவை "வன்முறை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை" என்றும் நிந்திக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருந்தும் அந்தப் போராட்டங்கள் காங்கிரஸ் "உயர்தலைமை"யின் ஆசீர்வாதத்தை பெற்று இருந்தன. அந்த உயர்தலைமையானது பிரதமரின் மகள் இந்திரா காந்தியை பெயரளவுக்கு காங்கிரஸின் தலைவராக கொண்டிருந்தது. பிரதமரும் (ஜவஹர்லால் நேரு) தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழித்துவிட முடியாது. உண்மையில் அவர் மட்டும் இதை உறுதியாக கண்டித்து இருப்பாரே ஆனால் (வேறெந்த மாநிலத்தின் காங்கிரஸ் அரசாவது இத்தகைய நிலைமையை எதிர்நோக்க வேண்டி இருந்தால் அவர் செய்திருக்க கூடியதைப்போல்)  கேரளாவில் எந்த ஒரு "விடுதலைபோராட்டமும்" இருந்திருக்காது.... கேரளாவின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் "விடுதலைபோராட்டத்தில்" நேரு வகித்த பங்கானது தன்னை ஒரு "மிதவாதி" என்றும் "சமூக ஜனநாயகவாதி" என்றும் முகமூடி தரித்துக்கொண்டு, எதிர்க்கட்சி குறித்து சகித்துக்கொள்ளாத அப்பட்டமான முதலாளித்துவ தலைவர் அவர் என்று கணிப்பதில் இருந்து தவற முடியாது. அவருடைய வாழ்க்கை முழுவதும் எதிர்த்து வந்த முஸ்லீம் லீகுடன் அவருடைய கட்சி கூட்டு சேர்ந்ததை அவர் நியாயப்படுத்த முடியாது. ....."பலரை நாங்கள் விரோதித்துக் கொண்டோம்" என்று தனிப்பட்ட முறையில் எங்களிடம் கூறிய அவர், பகிரங்கமாக பேசும்போது "எங்களுடைய கட்சிக்கும் அதன் அரசுக்கும் எதிராக பெரும் "வெகுஜன எழுச்சி" ஏற்பட்டு இருப்பது தன்னை மிகவும் ஆகர்சித்து இருப்பதாக பிரகடனம் செய்தார். மாநிலத்தின் மக்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் இரண்டு விரோதமான முகாம்களில் அணி திரண்டிருக்கும் நிலைமைக்கு ஒரு தீர்வாக , சட்டமன்றத்திற்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்....

நேரு இப்போது சொல்லும் "வெகுஜன எழுச்சி" என்பது, 25 வருடங்களுக்கு முன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவானதும் அவர் தலைமை தாங்கி இருந்ததும் ஆன தீவிர எழுச்சி அல்ல. அச்சமயத்தில் எழுந்த அந்த எழுச்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதிற்கு எதிராக இருந்தது போலவே உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக நடத்தப்பட்டதாகும். அன்று இளம் காங்கிரஸ்காரர்களாக இருந்த எங்களுக்கு தலைமை தாங்கி இருந்தபோது எந்த உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக எங்களை வழி நடத்தினாரோ அதே பிற்போக்கு சக்திகள் இப்போது எங்களுக்கு எதிராக அணிதிரண்டு அவருக்குப் பின்னால் நின்று இருந்தன.... .... ஒரு சில வருடங்களுக்கு முன்பு, 1952ஆம் வருட தேர்தல்களில் அவர் முஸ்லீம் லீக்கை "ஒரு செத்த குதிரை" என்று வர்ணித்தார். இன்று கம்யூனிஸ்ட்களை தோற்கடிப்பதற்காக அதே குதிரையின் மீதே சவாரி செய்கின்றார். இப்போது அவர் பயணம் செய்யும் இதர "குதிரைகள்" எவையெனில், ஏதாவது ஒரு ஜாதியின் "நலன்களுக்காக" வாதாடும் கிறிஸ்தவ சர்ச்சுகள், நாயர் ஆகிய இதர சாதிய அமைப்புகளே ஆகும். முப்பது வருடங்களுக்கு முன்பு தீவிரவாதியாக இருந்த நேரு, இந்த சாதிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றை ஒரு குச்சியால் கூட தொட்டு இருக்கமாட்டார். ஆனால் "விடுதலைபோராட்டம்" மூலம் தூக்கியெறியப்பட்ட, சபிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள், இடைக்கால தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்வதற்காக பிரதமர் நேரு இத்தகைய அனைத்து சாதியக்கட்சிகளையும் தன் கட்சிக்குப் பின்னால் அணி திரட்டிக் கொண்டு இருக்கின்றார்.

... அவர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியபடி, "நாங்கள் யாரை விரோதித்துக் கொண்டோம்"? எங்களுடைய விவசாய உறவுகள் மசோதாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திய நிலப்பிரபுக்கள்;  ஆசிரியர்களையும் இதர ஊழியர்களையும் வேலையில் அமர்த்துவதிலும் டிஸ்மிஸ் செய்வதிலும்  தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்திய தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், நிர்வாகங்கள்; தொழிலாளர்களின் விவசாயிகளின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடந்தகாலத்தில் தாங்கள் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் போலீஸ் படைகளை ஓடி வரச்செய்தது போல இனியும் அவ்வாறு ஆட்டுவிக்க முடியாத கிராமப்புற, நகர்ப்புற பெருந்தனக்காரர்கள்; கடந்த காலத்தில் அருவருப்புடன் பார்க்கப்பட்ட "அடித்தட்டு மக்கள்", புதிய அரசு நிர்வாகத்தால் தங்களுக்கு சமமாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத நகர்ப்புற, கிராமப்புற சமூகத்தின் வசதி படைத்த பகுதியினர் - இவர்கள்தான்.

...சட்டமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை தவிர அது வேறொன்றும் இல்லை. அவரது அரசு கொடுத்த ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் எங்களுடைய அரசை டிஸ்மிஸ் செய்து புதிய தேர்தல் நடத்த உத்தரவிட்டார். நாங்களாகவே பதவி விலக வேண்டும் என்ற அவரது ஆலோசனைக்கு பின் இருந்த அவரது உண்மையான நோக்கத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தி விட்டது. அதாவது நாங்களாகவே பதவி விலகி இருந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை (நேரு) கலைத்தார் என்ற அவப்பெயரில் இருந்து அவரைக் காப்பாற்றி இருக்கும். இந்தக் கூட்டம்தான் காங்கிரசுக்கு பின்னால் அணி திரண்டு, நேரு மிகவும் பாராட்டிய "வெகுஜன எழுச்சி"யை உருவாக்கியவர்கள்.

.... ....

ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள் (Reminiscenes of an Indian Communist) என்ற நூலில் இருந்து சில பகுதிகள்.

ஆசிரியர்: ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்

தமிழில்: என் ராமகிருஷ்ணன்

1988 வெளியீடு, சென்னை புக் ஹவுஸ் பி லிட், சென்னை 600002

416 பக்கங்கள், அன்றைய விலை ரூ.35.

... ... ....

(வாசிப்பின் ஓட்டம் கருதி பத்திகளை சற்றே முன் பின்னாக இங்கே மாற்றி அமைத்துள்ளேன்)


சனி, ஜூன் 12, 2021

காதுகளில் விழும் கேலிசெய்யும் பறவைகளின் குரல்


அது bee hummingbird ஆ bee hummingbird moth ஆ?

இரண்டு வருடங்கள் முன் திருநெல்வேலியில் என் அண்ணன் வீட்டு தோட்டத்தில் நான் பார்த்ததும், நேற்று என் வீட்டு முருங்கை மரப்பூக்களை வட்டமடித்ததும் எது?

Bee hummingbird ஆண் பறவை 5.51 செமீ, பெண் 6.1 செமீ அளவே உள்ளவை என்றும் கியூபா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் உள்ளன என்றும் வாசித்துள்ளேன். மேலும் humming bird moth என்ற உயிரினத்தை hummingbird என்று மக்கள் பொதுவாக தவறாக புரிந்துகொள்கின்றனர் என்றும் தெரிகிறது. எனில் நேற்று நான் பார்த்தது என்ன? எதுவாயினும் நேற்றைய மாலையை வண்ணமயம் ஆக்கிய அந்த சின்னஞ்சிறு உயிருக்கு நன்றி! இந்தக்கொடுங்காலம் இப்படியான சில வினாடிப்பொழுதுகளால் தோற்கடிக்கப்படுவது மகிழ்ச்சியே! உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

அதுவரையிலும் பார்த்திராத சில பறவைகள் என் வீட்டு மரங்களில் எப்போதாவது சில வினாடிகள் அல்லது ஒன்று இரண்டு நிமிடங்கள் வந்து காட்சியளித்துவிட்டுப் போவது வழக்கம். உடனே அவற்றின் அடையாளங்களை கொண்டு இணையத்தில் தேடி வந்துசென்ற விருந்தாளி யாராக இருப்பார் என அறிந்துகொள்ள முற்படுவேன். சில நேரங்களில் வெற்றி பெற்றுள்ளேன். சென்னையில் வழக்கமாக காண முடியாத பறவைகள் எனில் அவை வேறு மாநிலங்களில் இருந்து இடப்பெயர்ச்சிக்கு வந்த பறவைகளாக இருக்கக்கூடும் என்றும் தெரிகின்றது. சலீம் அலி பற்றி வாசித்த பின்னர் மைசூர் ரங்கணத்திட்டு சென்றிருந்தது இன்னும் என் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. அங்குள்ள சிறிய காட்சியரங்குக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு இருந்ததை கண்டு என் மகிழ்ச்சி எல்லை கடந்தது. குற்றலாக்குறவஞ்சியில் தென்காசியை சுற்றியுள்ள மலைகளில் வட்டமிடும் விதவிதமான பறவைகள் பற்றிய பாடல் மிக மிக அற்புதமானது. 

குடகில் இருந்து திரும்பி வரும்போது நகர்கோலெ வனம் ஊடாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணித்து வந்தோம். மான்கள், குரங்குகள், நரிகள் போன்றவை தவிர வேறு வன விலங்குகளை காணமுடியவில்லை எனினும் அதுவரை கேட்டிராத காட்டு விலங்குகளின் குரலோசையும் பறவைகளின் குரலோசையும் மிக நிசப்தமான அந்த வனப்பயணத்தை அர்த்தமுள்ளதாக்கியது. அந்தமான் ஜார்வா ஆதிவாசி மக்கள் வசிக்கும் காட்டின் ஊடாக மிக நீண்ட பயணம் சென்றிருக்கின்றேன். அது 60000 வருடங்கள் பின்னோக்கிய பயணம், கால எந்திரம் எனக்கு அப்பயணத்தை அங்கே சாத்தியம் ஆக்கியது! இன்று வரையிலும் இனக்கலப்பு இல்லாத ஜார்வா மக்கள், 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து பயணித்து அங்கே குடியேறியவர்கள். காட்டின் ஊடான பயணத்தில் அவர்களை நேரில் கண்டபோது எனக்கு மெய் சிலிர்த்தது உண்மை. ஏனெனில் அவர்கள் என் மதிப்பிற்குரிய மூதாதையர்கள். 60000 வருடங்களாக அந்த மிக மிகப்பெரிய காட்டை அவர்கள்தான் பாதுகாத்து வருகின்றார்கள், நவீன மனிதன் லட்சத்தீவில் தன் மரண ஆட்டத்தை தொடங்கி விட்டான். அடுத்த குறி அந்தமானின் கிழக்கு கடற்கரை என்றும் இலக்கு குறித்துவிட்டான்.

நகர்கோலெ காட்டின் ஊடான  பெரும்பகுதி பயணம் முடியும்போது காட்டிலேயே தொன்றுதொட்டு வசிக்கும் நகர் இன பழங்குடி மக்களை பார்க்கலாம். அவர்களும் காடும் வன விலங்குகளும் பறவைகளும் மரங்களும் ஒத்திசைந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். காட்டுக்கு வெளியே வசிக்கும் நமக்குத்தான் காடும் விலங்குகளும் அந்நியமாக இருக்கின்றன. நகர்கோலெ என்றால் நகர்களின் நீரோடை, நீரூற்று என்று பொருள். டிராவல் xp சானலில் எத்தியோப்பியாவில் காடுகளில் வசிக்கும் மக்கள் பற்றி இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த மக்களுக்கும் ஜார்வா மக்களுக்கும் பெரிய வேறுபாடு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எத்தியோப்பியா மக்கள் நாகரிக உலக மக்களின் பழக்கவழக்கங்களை கைக்கொண்டு விட்டார்கள் என்பதன்றி வேறு வேறுபாடு இல்லை.

மசூரியில் இருந்தபோது அதிகாலை ஜில் குளிரை பொருட்படுத்தாமல் எழுந்து கையில் அடக்கமான கேமராவை வீடியோவை முடுக்கி நடக்கத்தொடங்கினேன். அதுவரையில் கேட்டிராத எத்தனை எத்தனை பறவைகளின் குரல்கள்! அதிகாலையின் அமைதியும் பறவைகளின் குரல்களும் ஆள் நடமாட்டம் இல்லாத மூடுபனி மறையாத மலைச்சாலையும் மரங்களுமாக இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். ரஷ்கின் பாண்டை Ruskin Bond வாசியுங்கள்.

... ... ...

நெடுந்தொலைவு செல்லும் விமானங்கள் 18, 20 கிமீ உயரத்தில் பறப்பவை. சாதாரணமாக 8 -10 கிமீ உயரத்திலேயே ஆகாயத்தில் மைனஸ் 40 டிகிரியை தாண்டிய குளிர்ச்சி நிலவும். 18 கிமீ உயரத்தில் பறக்கும்போது இடப்பெயர்ச்சிக்கு வரும் பறவைகளை பார்த்துள்ளதாக விமான ஓட்டிகள் பதிவு செய்துள்ளார்கள்! அவை பொதுவாக இமயம் தாண்டியும் ரஸ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறந்து வரும் பறவைகளாக இருக்கக்கூடும். நம்ப இயலாததும் வியப்புக்கு உரியதும் என்னவெனில் அப்பறவைகள் இடையில் எங்கும் ஓய்வுக்காக இறங்குவது இல்லை என்பதே. அதே போல், ஆப்பிரிக்காவில் இருந்தும் அரபிக்கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளில் இருந்தும் சென்னைக்கு இடப்பெயர்ச்சிக்காக பறவைகள் வருகின்றனவாம். 

கொச்சியில் இருந்தபோது நான் இருந்த திரிக்காகராவில் NGO க்வார்ட்டர்ஸ் பகுதியில் மன்னத் ஸ்டோர் என்ற கடையின் முன் மிக மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. மாலை ஆறு மணிக்கு நீங்கள் அங்கே இருக்க வேண்டும்! அந்த மரம் முழுக்க முழுக்கவும் சிட்டுக்குருவிகள் சிட்டுக்குருவிகள்! எத்தனை ஆயிரம்! என்னென்ன பாடல்கள்! நான் சொல்வது 2009 கதை. இப்போது எப்படி என்று தெரியவில்லை, செல்போன் டவர்கள் சிட்டுக்குருவிகள் இனத்தை அழிப்பதாக சொல்கின்றனர். 

.... ... ....

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த இஷான் ஜாப்ரி என்ற முதியவர், தன் அறையில் குருவிகள் கூடு கட்டுவதை அறிந்து மின்விசிறியை இயக்குவதை நிறுத்தி வைத்தார் என்று வாசித்துள்ளேன். குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி என்ற அவர் வீட்டின் முன் இந்துத்துவா தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் டின்களுடன் நூற்றுக்கணக்கில் திரண்டு நின்று வெளியே வா என்று சவால் விடுக்கின்றார்கள். குல்பர்க் சொசைட்டி என்பது மிகப்பல வீடுகளையும் குடும்பங்களையும் கொண்ட ஒற்றை சுற்றுசுவருக்குள் அடங்கிய பெரிய வசிப்பிடம். சொசைட்டியின் மொத்த மக்களும் ஜாப்ரியின் செல்வாக்கு தங்களை காப்பாற்றும் என்று நம்பி அவரது வீட்டுக்குள் ஒட்டுமொத்தமாக தஞ்சம் அடைகின்றார்கள். ஜாப்ரி தொலைபேசியில் மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்துப் பேசுகின்றார். இறுதியில் ஜாப்ரியும் தஞ்சம் புகுந்த மக்களும் வெட்டி வீழ்த்தப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டார்கள், குருவிகளும் தப்பவில்லை, ஜாப்ரியுடன் மடிந்து போயின. Fall of too many sparrows. 

நமக்கென்ன, அம்பானி நமக்கு 5ஜி தரப்போறாராம், Antilia வில் மரங்கள் இருக்கிறதா, சிட்டுக்குருவிகள் இருக்கின்றனவா எனத்தெரியவில்லை.

அந்தமான் காட்டில் இருந்து நான் எடுத்து வந்த குயிலின் இறகு ஒன்று இப்போதும் என் வீட்டில் எங்கள் கண்பார்வையில் உள்ளது.

..... ....

 (The fall of a sparrow என்ற நூல் சலீம் அலி எழுதியது)

புதன், ஜூன் 09, 2021

டேவிட் அலெக்ஸாண்ட்ரோவிச் டஷ்மான்

டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான் David Aleksandrovich Dushman 1.4.1923-4.6.2021

"நாங்கள் அங்கே சென்றபோது முகாமை சுற்றி போடப்பட்டு இருந்த மின்சார வேலியை எங்கள் டாங்குகளை ஏற்றி உடைத்து முன்னேறினோம். பின்னர்தான் அந்த ஜீவன்களை கண்டோம். தடுமாறியபடியே அந்த மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்தன. ஏற்கனவே செத்து மடிந்தவர்கள் மீது அந்த எலும்புக்கூடுகள் உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தன. எல்லோரும் சீருடை அணிந்து இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் பார்த்தது எல்லாம் வெறும் கண்கள், கண்கள், ஒடுங்கிய கண்கள் மட்டுமே. கொடூரம், மிகக் கொடூரம். எங்களிடம் இருந்த உணவு டப்பாக்களை அந்த மனிதர்களை நோக்கி எறிந்தோம். அடுத்த கணம் ஃபாசிஸ்ட்டுகளை வேட்டையாட முன்னேறினோம். அப்போது வரையிலும் எங்களுக்கு  தெரியாது, ஆஸ்விட்ஸ் Auschwitz என்ற நாஜி சித்ரவதை முகாம் என்ற ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது".

"என்னால் நடக்க முடியாது, ஏனெனில் என்னால் மூச்சுவிட முடியாது. எனது ஒருநாள் உடற்பயிற்சி என்பது ஒரே ஒரு நிமிடம் மட்டுமே என்றுதான் இருந்தது. மிக மிக மெதுவாக, மிக மிக மிதமாக எனது உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்தில் நான் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் ஆனேன் (1951இல்)".

... .. ...

போலந்தில் நாஜி ஹிட்லரால் கட்டப்பட்டு இருந்த கொலைக்கூடமான ஆஸ்விட்ஸ் வதைமுகாமை 1945 ஜனவரி 27 அன்று சோவியத் செம்படை வீரர்கள் முற்றுகை இட்டு அழித்தனர். சோவியத் டாங்கு படையில் அப்போது முன்னணியில் இருந்த டேவிட் டஷ்மான் ஜெர்மனியின் மியூனிக் நகரில் 4.6.2021 அன்று தான் 98ஆவது வயதில் காலமானார். அவர் கூறியதுதான் மேலே உள்ளவை. உண்மையில் அவரே காலத்தின் அடையாளம்தான். இந்த 98 ஆண்டுகளில் உலகத்தின் எத்தனை எத்தனை அரசியல் நகர்வுகளையும் போர்களையும் பார்த்திருப்பார்! செஞ்சேனை விடுதலை செய்த ஐரோப்பா ஒரு காலத்தில் சோசலிச உலகமாக இருந்தது, அதை பார்த்திருப்பார், 1990களுக்கு பிறகு சோவியத்தின் சிதைவையும் அதன் விளைவாக நிகழ்ந்த ஐரோப்பிய சோசலிச முகாமின் தகர்வையும் பார்த்திருப்பார். சோவியத்தின் சிதைவு எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளின் தத்துவார்த்த தழுவல்களையும் ஆட்டிப்படைத்தது எனில், 1945 தொடங்கி 1990 வரை ஒரு 45 வருட காலத்திய அரசியல் அமைப்பு பலமான அஸ்திவாரத்தில் கட்டப்பட்டு இருந்ததா, வெறும் ஊதிப்பெருக்கப்பட்ட உள்ளீடு அற்ற போலி கட்டமைப்பாகவே இருந்ததா, பொலபொலவென உதிர்ந்து போகும் அளவுக்கு, என்பது விவாதத்துக்கு உரியது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஹிட்லரின் படைகளால் கடத்தப்பட்டும், பிடிக்கப்பட்டும் இருந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் Auschwitz- Birkenau வதை முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் யூத இன மக்கள். பிறர் ஹிட்லரால் போரில் பிடிக்கப்பட்ட சோவியத் படை வீரர்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், பெண்கள், நாடோடிகள், ஓரின சேர்க்கையாளர்கள். 1940 முதல் 1945 வரை இங்கு நடந்த வதைகள், படுகொலைகள் கற்பனைக்கு எட்டாதவை.

சோவியத்தின் டாங்கு படை முகாமின் சுற்றுசுவரை தகர்க்க, சோவியத்தின் 322ஆவது துப்பாக்கி படை பிரிவு முகாமின் உள்ளே நுழைந்தது. அங்கு அவர்கள் நுழைந்த பின்னர்தான் அது ஒரு சித்ரவதை முகாம் என்பதே அவர்களுக்கு தெரிந்தது, பின்னர் உலகத்துக்கும் தெரிந்தது. 

செஞ்சேனையின் ஒரு வீரராக ஜெர்மனிக்கு வரும் முன்னர், டஷ்மான் இரண்டாம் உலகப்போரின் கொடூரமான போர்க்களங்கள் பலவற்றில் பங்கு பெற்றார். புகழ்பெற்ற ஸ்டாலின்கிராட் முற்றுகைப்போர், Kursk போர்க்களம் ஆகியவை முக்கியமானவை. போரின்போக்கில் மூன்றுமுறை மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். அவரது நுரையீரலின் ஒரு பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 12000 போர்வீரர்கள் கொண்ட அவரது டாங்கு படைப்பிரிவில் போர் முடியும்போது உயிருடன் இருந்தவர்கள் 69 வீரர்கள் மட்டுமே, அவரும் ஒருவர். 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தார்கள் என்பது வெறும் உயிரிழப்பு மட்டுமே அல்ல, ஃபாசிச சக்திகளிடம் இருந்து உலகை காக்க அவர்கள் செய்த உயிர்த்தியாகம் என்றுதான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்.

... ... ..

போரின் பிறகு வாள்வீச்சுக்கலையை கற்றுக்கொண்டார். நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சையில் இழந்த அவர் இயல்பு வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மீட்டுவிடவில்லை. ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சொன்னவர்தான் தன் மனஉறுதியை மட்டுமே துணையாக கொண்டு மிக மிக மெதுவாக முன்னேறுகின்றார். 1951இல் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் பட்டத்தை வெல்கின்றார்! பின்னர் 1952 முதல் 1988 வரை சோவியத் யூனியன் பெண்கள் வாள்வீச்சு அணிக்கு பயிற்சியாளர் ஆக இருந்தார்! 1976 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், 1980 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை Valentina Sidrova உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். 90 வயதுக்குப் பிறகும் பயிற்சி அளிப்பதை தொடர்ந்துள்ளார்!

1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேலிய விளையாட்டு அணியின் மீது பாலஸ்தீன போராளிகள் நிகழ்த்திய தாக்குதலின்போது மிக அருகில் இருந்து உயிர் தப்பினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான Thomas Bach தன் இரங்கற்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "தலைசிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர் அவர். ஆஸ்விட்ஸ் வதை முகாமை விடுவித்த வீரர்களில் நம்மிடையே வாழ்ந்த கடைசி வீரர் அவர்". 1970இல் மேற்கு ஜெர்மனிக்காக தான் போட்டியில் பங்கு பெற்றபோது டஷ்மான் தனக்கு நட்புரீதியில் ஆலோசனைகள் அளித்ததை நினைவுகூர்கின்றார். "டஷ்மான் யூத வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றவர், ஆஸ்விட்ஸ் முகாமை நேரில் கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாலும் அவர் அனைத்தையும் புறந்தள்ளி மிகப்பெரிய மனிதாபிமானமிக்க மனிதராக நடந்து கொண்டார், என்னால் அவரது இந்த உயரிய குணத்தை ஒருபோதும் மறக்க முடியாது" என்றும் கூறுகின்றார்.

"வரலாற்றின் சாட்சியங்களாக இருப்போரின் ஒவ்வொருவரின் மறைவும் நமக்கு இழப்புத்தான். அதிலும் டேவிட் டஷ்மானின் இழப்பு என்பது தனிப்பட்ட வேதனையை ஏற்படுத்துகின்றது. நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்" என ஜெர்மனியின் யூத சமூகத்தவரின் மத்திய கவுன்சிலின் முன்னாள் தலைவரான Charlotte Knobloch தன் இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

... ...

பால்டிக் கடலோரம் வடக்கு போலந்தில் உள்ள Danzig என்ற நகரில் பிறந்தவர் அவர். போருக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரப் பதக்கங்கள், பாராட்டு சான்றுகளை பெற்றவர். ஜெர்மன்-சோவியத் போரில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்படும் உயரிய  The Order of The Patriotic War விருதைப் பெற்றவர். 60 லட்சம் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, தனது பெருமைக்குரிய பதக்கங்களை அணிந்து கூட்டங்கள், கலந்துரையாடல்களில் பங்கேற்பது என சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். 

ஆஸ்திரியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின், 1996 முதல் 4.6.2021 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் வாழ்ந்தார். அவர் மனைவி Zoja பல வருடங்களுக்கு முன் மறைந்தார்..

ஜெர்மனி சரண் அடைந்த 1945 மே 9ஆம் நாள் வெற்றித்திருநாள் Victory Day என சோவியத் அரசு அறிவித்து கொண்டாடியது, இப்போதும் தொடர்கின்றது. அந்த நாளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனை அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என டஷ்மான் சொல்வார்.

டேவிட் டஷ்மான்! அவர் காலமானார் என்பது சம்பிரதாயமான அஞ்சலி அல்ல, அவர் மானிட குல விடுதலை வரலாற்றின் செதுக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றென நிரந்தரமாக வாழ்வார்.