வெள்ளையர்கள் வாழ கோட்டைக்கு வடக்கே வெள்ளையர் நகரம், அவர்களுடன் வணிகம் நடத்தும் உள்ளூர் வணிகரும் இரு மொழிகள் அறிந்த உதவியாளர்கள் ஆன துபாஷிகளும் வாழ வெளியே மேற்கே கறுப்பர் நகரம்.
வெளியிடங்களில் இருந்து குடியேற்றப்பட்ட நெசவாளர்கள் வாழ்ந்த சின்னதறிப்பேட்டை, அதாவது சிந்தாதிரிப்பேட்டை. ஆங்கிலேயர்கள் கையில் அதிகாரம் வந்த பின் தங்களுக்கான பங்களாக்கள் கட்டி வாழ்ந்த எழும்பூர்.
ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் நடத்திய மைசூர் போர்களில் ஆங்கிலேயர் வென்ற பிறகு, மாகாணத்தின் தலைநகர் ஆனது சென்னை. ஆனால் போர்களால் ஆன எதிர்மறை நிலைகளால் வணிகம் பாதிக்கப்பட, கடல் வணிகம் கல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டது.
நகர மக்கள் தொகையில் எட்டில் ஒரு பகுதி ஆதிதிராவிடர். மக்கள்தொகை 1871இல் 4 லட்சம், 1921இல் 5 லட்சத்துக்கும் அதிகம், 1931இல் ஆறரை லட்சம்.
நிர்வாகம், வணிகம், கல்வி, பண்பாடு, அரசியல் ஆகிய துறைகளில் பணியாற்ற்றுவோர்க்கு தகுந்த ஒரு குடியிருப்பு நகராக வளர்ந்தது அன்றி அது தொழில் நகராக வளரவில்லை.
சென்னையில் இயற்கையான துறைமுகம் இல்லை. புயல், சூறாவளி போன்ற சீற்றங்களில் இருந்து கப்பல்களை காப்பாற்ற 1889யில்தான் திட்டங்கள் மேற்கொள்ள பட்டன. 1913-14இல் ஆண்டுக்கு 8 லட்சம் டன் சரக்குகளை கையாள முடிந்தது. துறைமுகத்தில் சுமார் 3000 தொழிலாளர்கள் பணியாற்றினர், பெரும்பாலோர் உடலுழைப்பு கூலிகள்.
சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி தேவைக்கு மட்டுமல்ல, உள்நாட்டு கிளர்ச்சிகளை ஒடுக்க ராணுவத்த்தை வேகமாக அனுப்பவும் ரயில் பாதை தேவைப்பட்டது. சென்னை ஆற்காடு இடையே 1856 ஜூலை மாதம் ரயில் இயக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து, SIR கம்பெனியால் 1876இல் கொண்டுவரப்பட்டது, அது மீட்டர் கேஜ். சென்னையின் மேற்கு வடக்காக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. மதராஸ் இரயில்வேஸ் என்னும் நிறுவனமும் தெற்கு மராத்தா இரயில்வே என்னும் மற்றொரு நிறுவனமும் சென்னை பம்பாய் இணைப்பு பொறுப்பை மேற்கொண்டன. இரு நிறுவனங்களும் 1908இல் மதராஸ் தென் மராத்தா இரயில்வே MSM Company என்று இணைந்தன.
ரயில் பெட்டிகள், இன்ஜின், பிற சாதனங்களை பழுதுபார்க்க, பராமரிக்க பட்டறைகள் தேவைப்பட்டன. மீட்டர் கேஜ் பிரிவுக்கு நாகப்பட்டினத்திலும் பிராட் கேஜ் பிரிவுக்கு போதனூரிலும் பட்டறைகள் அமைத்தனர். பெரம்பூரில் 1873இல் பெரிய பட்டறை அமைக்கப்பட்டது. 1914இல் இங்கு 5500 பேர் பணியாற்றினர்.
மதராஸ் நகரில் 1895இல் டிராம் பாதை அமைக்கப்பட்டது. லண்டன் நகரில் ஆறு வருடங்களுக்கு பின்னரே டிராம் தொடங்கப்பட்டது! 1919இல் டிராம் தொழிலில் 1200 தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். 1931இல் கடற்கரையில் தாம்பரம் இடையே மின்சார ரயில் ஓட தொடங்கியது.
மதராஸ் நகருக்கு மின்சாரம் வழங்க மதராஸ் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷனால் பேசின் பிரிட்ஜில் அனல் மின்நிலையம் ஆகஸ்ட் 1907இல் உற்பத்தியை தொடங்கியது. தொலைபேசி வசதி 1893இல் வந்தது. 1855இல் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் விரைவு தந்திப் பணி முடிந்தது.
1889க்கு முன் ஸ்பென்சர் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து மண்ணெண்ணெய் இறக்குமதி செய்து விற்றது. 1889 முதல் பெஸ்ட் அன் கோ நிறுவனம் மண்ணெண்ணெய் வணிகம் செய்தது. 1906இல் ஏசியன் பெட்ரோலியம் கம்பெனி அவ்வணிகத்தை செய்ய, பர்மா ஆயில் கம்பெனி 1905இல் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை நிறுவியது. பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதியாக பர்மா ஷெல் இருந்தது. எண்ணெய் சேமிப்பில் 775 ஊழியர்கள் வேலை செய்தார்கள்.
கிறித்தவ அறிவுப்பரப்பு கழகம் என்ற அமைப்பு முதல் அச்சகத்தை 1711இல் நிறுவியது. 1761இல் புதுச்சேரியை கைப்பற்றிய ஆங்கிலேயர், அங்கிருந்த அச்சகத்தை பெயர்த்து சென்னையில் வேப்பேரியில் நிறுவினர். 1850இல் தங்கச்சாலையில் அச்சகம் செயல்பட தொடங்கியது. 1500 ஊழியர்கள். அடிசன் பிரஸ், MSM ரயில்வே அச்சகம், Associated Press ஆகியன பெரிய அச்சகங்களை கொண்டிருந்தன. சுமார் 60 சிறிய அச்சகங்களில் சுமார் 5000 ஊழியர்கள் வேலை செய்தார்கள்.
சென்னையில் இயங்கிய ஒரே பெரிய தொழில் எனில் அது பஞ்சாலை தொழில்தான். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் ஆக 9000 தறிகள் இயங்கின. 1920களில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நிறுவப்பட்டது. அலுமினிய பாத்திர உற்பத்தியில் ஈடுபட்ட ஒரே தொழிற்சாலை இந்தியன் அலுமினிய கம்பெனி.
1910இல் குரோம்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலையை பாரி நிறுவனம் நிறுவியது. கீழை நாடுகளில் மிகப்பெரிய பதனிடும் ஆலை அதுவே. தவிர, 200க்கும் அதிகமான சிறு பதனிடும் தொழற்சாலைகளில் 500 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் வகுப்பினர்.
1874இல் யானை கவுனி அருகில் South India spinning and weaving mills என்ற நூற்பு நெசவு ஆலையை பார்சி வகுப்பை சேர்ந்த ஒருவர் நிறுவினார். முதலீடு 5 லட்சம் ரூபாய். சீனாவுக்கு நூல் ஏற்றுமதி செய்த இந்த நிறுவனம், தொழில் போட்டி காரணமாக 1892இல் மூடப்பட்டது.
1876இல் Binny & Co என்னும் ஐரோப்பிய நிறுவனம் பெரம்பூரில் 1878 ஜனவரியில் Buckingham Mill & Co என்ற பஞ்சாலையை 8 லட்ச ரூபாய் முதலீட்டில் நிறுவியது. 1884இல் அதே பின்னி, அதே ஆலைக்கு அருகில் ஓட்டேரி ஓடைக்கு மறுகரையில் Carnatic Mill ஐ நிறுவியது. 1920இல் இணைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள்தான் பி அண்ட் சி மில். 8976 தொழிலாளர்கள். மற்றுமொரு பம்பாய் முதலாளி சூளையில் 1875இல் தொடங்கிய மில்லில் 2000 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
அடுத்த முக்கியமான தொழில் எனில் தீப்பெட்டி தொழில். ஸ்வீடன் நாட்டினர் 1928இல் திருவொற்றியூரில் Western india match company என்னும் விம்கோ தீப்பெட்டி ஆலையை தொடங்கினார்கள். 800 தொழிலாளர்கள்.
South india industries நிறுவனம் அமைத்த Madras Portland cement company சிமெண்ட் ஆலைதான் இந்தியாவின் முதல் சிமெண்ட் ஆலை! ஆண்டுக்கு 10000 டன் உற்பத்தி, 220 தொழிலாளர்கள். 1924இல் மூடப்பட்டது.
வண்ணாரப்பேட்டை யிலும் திருவல்லிக்கேணியிலும் பீடி ஆலைகள் இருந்தன, பெரும்பாலும் சிறுவர்கள் வேலை செய்தார்கள். சுமார் 4000 தொழிலாளர்கள்.
..... ...
உதவிய நூல்: சென்னைப்பெருநகர தொழிற்சங்க வரலாறு, முனைவர் தே வீரராகவன், தமிழில் ச சீ கண்ணன், புதுவை ஞானம்,
அலைகள் வெளியீட்டகம், 2003 பதிப்பு
2 கருத்துகள்:
அருமையான ஆய்வு நூல் தோழர்.பெருங்களத்தூர் நூலக ஆணைக்குழுவின் கிளை நூலகத்தில் எதிர்பாராமல் கிடைத்தது.அந்நூலகத்தின் நிரந்தர வாசகன் நான்.இல்லத்துக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.படித்து முடித்து விட்டு குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன்.'சென்னை நகர தொழிற்சங்க வரலாறு_ஒரு சிறு அறிமுகம் ' என்ற தலைப்பில்10 தொடர்களை ஒரு காலாண்டு இதழில் எழுதினேன் தோழர்.தங்கள் இணையதளம் சிறப்பான கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.தங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்.
உண்மை. மிக முக்கியமான தொழிற்சங்க வரலாற்று நூல் அது. தோழர் வீரராகவரின் அறிய முயற்சி வரலாற்றில் மிக முக்கியமானது. வாசிப்புக்குப் பின்னான உங்கள் கூடுதல் பதிவாக்க முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. உங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு நன்றி
கருத்துரையிடுக