புதன், மே 12, 2021

டேவிட் ஹாலும் ஹாட் கேக்கும்

சமீபத்தில் மதுரையில் நடந்த மூத்த தோழர் (மரியாதைக்குத்தான் சொன்னேன், அவரும் நானும் கழுதைக மாதிரி சுத்தாத தியேட்டர் மதுரையில் பாக்கி இல்லை) மகள் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். Heritage என்ற ரிசார்ட்ட்டுக்குள் திருமணம். அது மிகப்பெரிய வனம். மதுரை கோட்ஸ் மில்லின் பெரிய அதிகாரிகள் தங்கியிருந்த குடியிருப்புகள். மதுரை க்ளப். அதாவது 50, 60 வருடங்கள் முன்பு மதுரையின் விளிம்பில் கோச்சடையில் இருந்த காடு என்று சொல்லலாம். இப்போது நகருக்குள் உள்ளது! அத்தனையும் ஆங்கிலேய கட்டிடக்கலை அம்சங்களுடன் இருந்த குடியிருப்புகள். வனத்தை பாதுகாத்து கட்டிடங்களை கட்டியுள்ளார்கள். மதுரை கோட்ஸ் மூடிய பின் அதனை வாங்கியவர்கள் ஹோட்டலாக, தங்கும் விடுதியாக, திருமண மண்டபமாக பயன்படுத்த எண்ணி யுள்ளார்கள். பழைமையையும் அழகையும் சேதப்படுத்தாமல் திட்டமிட எண்ணி உலகப்புகழ் பெற்ற இயற்கையுடன் இசைந்த கட்டிடக்கலை வல்லுநர் ஆன Geoffrey Bawa வின் மாணவர் வினோத் ஜெயசிங்கே வசம் பொறுப்பை கொடுத்தார்களாம். Bawa இலங்கை கொழும்புவில் பிறந்தவர். 1919-2003 காலத்தில் வாழ்ந்தவர். பாவாவின் கலை பற்றி Architectural Digest இதழ்களில் வாசித்தால் இப்படி ஒரு மனிதரா என்று வியப்புறுவோம். எனக்கு கொச்சியில் fort kochi நினைவுக்கு வந்தது. அறிமுகம் இல்லாத ஒரு பெண் சிநேகிதி கொடுத்த சைக்கிளில் அவளுடன் ஹெரிட்டேஜில் முழுக்க எங்களை மறந்து சுற்றிக்கொண்டு திரிந்தான் என் மகன்.

டேவிட் ஹால் David hall  எனப்படும் பழம்பெரும் கட்டிடம் அது. 1665இல் கட்டப்பட்டது. கேரளத்தின் மிளகும் வாசனை மசாலா பொருட்களும் அறிந்த டச்சுக்காரர்கள் கொச்சியை 1663 ஜனவரியில் போர்த்துக்கீசியரிடம் இருந்து கைப்பற்றினார்கள். 1669இல் Hendrik Adriann van rheed tot drakestein என்பவரை டச்சு மலபாரின் கவர்னராக நியமித்தனர்.  கேரளத்தின் மருத்துவ குணங்கள் அடங்கிய செடி கொடிகள் தாவரங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஒரு நூலை எழுதும் முயற்சியில் அவர் இறங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் அவருக்கு தகவல்களை திரட்டி அளித்துள்ளார்கள். அவருடன் மலையாளி ஆன இட்டி அச்சுதன் வைத்தியர் என்பவரும் நூலாசிரியர் ஆக இருந்துள்ளார். Hortus  Malabaricus  எனப்படும் தொகுப்பு உருவானது. பின்னர் இது மலையாளம் உட்பட பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு கைமாறாக இப்போது காணப்படும் ஃபோர்ட் கொச்சி பகுதியில் சர்ச்சுகளை கட்டிக்கொள்ள அவர் டச்சுக்காரர்களுக்கு அனுமதி அளிக்க, அவர்களோ போர்த்துக்கீசியர் கட்டியிருந்த தேவாலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள். இவ்வாறாக மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்களை இடித்து தள்ளி இருக்கின்றார்கள். அந்த இடிபாடுகளின் மிச்சங்களில் இருந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூன்று வீடுகளை கட்டியதில் ஒன்றுதான் டேவிட் ஹால். 1665இல் அதில் van rheed குடியிருந்தார் என்றும் காயம் அடைந்த டச்சு படையினருக்கு ஆன பராமரிப்பு விடுதியாக இருந்திருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன. நிற்க.

கொச்சியில் விடுமுறை நாட்களை களிப்பது அல்லது நண்பர்கள் வந்தால் அழைத்துக்கொண்டு செல்வது எனில் ஃபோர்ட் கொச்சி, மட்டஞ்சேரி, செராயி கடற்கரை மூன்றும்தான். முதல் இரண்டும் 500 வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துக்கொண்டு செல்லும் பழமையான அமைதியான சிறு நகரங்கள். ஐரோப்பிய கட்டிடக்கலையின் அழகை நுகரலாம். இப்போது சுற்றுலாப்பயணிகளை நம்பி இயங்கும் வாசனை மசாலா பொருட்கள் விற்பனை, உணவு விடுதிகள், சிறு கடைகள், பழம்பொருள் கடைகள் இயங்குகின்றன. மிகப்பெரிய பழமையான கட்டிடங்கள் சரக்கு கிடங்குகளாக உள்ளன. இரண்டு நாட்கள் என் விருந்தினராக இருந்தவர் மறைந்த அருமைத்தோழர் மதுரை ஜோதிராம். மிகச்சிறந்த வாசிப்பாளி, ரசிகர் அவர், நான் அறிவேன். தொலைபேசியில் அழைத்த ஒரு வாரத்தில் வந்துவிட்டார்.

டேவிட் ஹால் இப்போது CGH Earth எனப்படும் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரங்கில் எப்போதும் ஓவியக்கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். ஏதாவது கலை நிகழ்ச்சிகள், உரையாடல்கள் நடக்கும். பின்கட்டில்தான் கொட்டிக்கிடக்கும் அந்த அழகு! செடி கொடிகளும் அடர்ந்த மரங்களும் ஆழ்ந்த அமைதியும் நம்மை சூழ்ந்து இருக்க, நாற்காலிகள் மேசைகள் நமக்கு. அது சிறிய அளவு சிற்றுண்டி சாலை. சூடான கேக் ஆர்டர் செய்தால் கிடைக்கும், வகை வகையாக. Swedish hot cake எனக்கு மிகுந்த விருப்பம். இப்படி ஒரு நாள் மாலையில் அங்கு அமர்ந்து இருந்த போதில் மழை பிடிக்க, அடடா! யாருமற்ற அந்த மாலைப்பொழுது இனி எப்போது வாய்க்கும்?

எர்ணாகுளம் என்ற கொச்சி, இந்து முஸ்லிம் கிறித்துவ மக்களை சமமாக உள்ளடக்கிய நகரம். நான் இருந்த நாட்களில் அப்படி ஒரு கலப்பான நகரில் இருந்ததாகவோ பிறர் என்னை இசுலாமியனாக பார்த்ததாகவோ நான் என்றும் உணர்ந்து இல்லை. அவரவர் மதம், அவரவர் உணவு, அவரவர் உடை, அவரவர் கலாச்சாரம், ஆனால் எல்லோருக்கும் பொதுவாக நல்லிணக்கம். மரையின் டிரைவ் எனப்படும் காஸ்ட்லி ஏரியா. கடலின் ஒரு கரையில் பேப்பூர் சுல்தான் வைக்கம் முகமது பஷீர் எப்போதோ புத்தகங்களை விற்றுகொண்டு இருந்ததாக வாசித்துள்ளேன். அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அது எந்த இடமாக இருக்கக்கூடும் என்று புத்தி பேதலிக்க நான் யோசித்து பார்த்தது உண்டு.

பொழிச்ச மீனும் ஹாட் கேக்கும் உண்டு கட்டஞ்சாயாவும் அருந்திய பஷீரும் ஜோதிராமும் இப்போதும் என்னுடன் உரையாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

படத்தில் டேவிட் ஹாலின் பின்கட்டு.

கருத்துகள் இல்லை: