ஞாயிறு, மே 09, 2021

ரங்கணத்திட்டும் குற்றாலக்குறவஞ்சியும்

கொடகு எனப்படும் கூர்க் coorg நகரின் மீது ஒரு காதல் இருந்துகொண்டே இருந்தது. 2018 டிசம்பரில் சாத்தியமானது. காதலுக்கு காரணம் காப்பி மட்டும் அல்ல, பலவிதமான பழங்களில் இருந்தும் வடிக்கப்படும் வைன் முக்கியமான காரணம்! மிளகாயில் இருந்து தயாரிக்கப்பட்ட வைனையும் ருசி பார்த்தேன்! 

மைசூர் அரண்மனையை விடவும் ஸ்ரீரங்கப்பட்டினமும் திப்புவின் கோடைகால அரண்மனை, திப்பு வீரமரணம் எய்திய இடம், திப்புவின் தாய் தந்தையர் உட்பட சொந்தங்கள் அனைவரும் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியனவும் என்னை கவனிக்க வைத்த வரலாற்று சிறப்புமிக்க தலங்கள். திப்புவின் வாள், அவரது உடைகள் உள்ளிட்ட பழம்பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட 1799இல்தான் திப்புவும் களத்தில் கொல்லப்படுகின்றான். அவனது இரண்டு இளம்பிள்ளைகளை காரன் வாலிஸ் பிணைக்கைதிகளாக கல்கத்தாவுக்கு கொண்டு சென்றான்.

காப்பித்தோட்டங்கள் எங்கிலும் நிறைந்த கொடகு. மெர்காரா என்ற மடிகரேதான் தலைநகர். அங்குள்ள பழம்பெரும் அரண்மனையில் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. நாங்கள் சென்றபோது மிகப்பெருங்கூட்டம் அங்கே, லோக் அதாலத்!

மைசூரில் திட்டமிடப்படாத பயணமாக ரங்கணத்திட்டு பறவைகள் காப்பிடம் சென்றது மறக்க முடியாது. காப்பிடம் திறக்கப்படும் நேரத்தில் முதல் பத்து வருகையாளர்களில் நாங்களும் நுழைந்தோம், ஆஹா! அது என்னவொரு அமைதியான காலைப்பொழுது! எத்தனை எத்தனை பறவைகள்! மிகப்பரந்த ஏரியின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்களில்தான் எத்தனை வகை பறவைகள், எத்தனை வண்ணங்கள்! முதலைகள் ஆங்காங்கே பாறைகளின் மீது வாயை திறந்தவாறு அசைவின்றி கிடந்தன, நாம் பயணிக்கும் படகின் கீழும் முதலைகள்தான். முதுபெரும் பறவையியலாளர் சலீம் அலியின் பெயரால் ஒரு காட்சியரங்கும் இருந்தது. ரோமுலஸ் விட்டேகரின் மனைவி Zahida என்ற Zai யின் அம்மாவுக்கு, சலீம் அலி மாமா உறவுமுறை. காங்கிரசை நிறுவிய A O Hume ஒரு பறவையியலாளர்தான். திரும்பி வர மனசில்லாமல்தான் திரும்பினோம். 

என் ஊரான தென்காசியின் அடையாளமான குற்றாலத்தைப் போற்றும் திருக்குற்றாலக் குறவஞ்சியை நினைவுகூர்ந்தேன். சிங்கன் வாயிலாக எத்தனை வகை பறவைகளை திரிகூடராசப்ப கவிராயர் பட்டியல் இடுகின்றார்!

சிங்கன், பறவைகள் வரவு கூறுதல்:

ஐயே! வருகின்றன பறவைகள்! திரிகூடநாயகரின் வாட்டமில்லாத வயல்களுள் வாரப்பற்றுக்காடு, தோட்டம் இவற்றில் எல்லாம் பலவகைப் பறவைகளும், நாரைகளும், அன்னங்களும் தாராக்களும், கூழைக்கடாக்களும், செங்கால் நாரையும் வருகின்றன ஐயே!

காடை, சம்பங்கோழி, காக்கை, கொண்டைக்குலாத்தி, மாடப்புறா, மயில் இவை வருகின்றன; 

வெள்ளைப்புறாக்களும், சகோரமான செம்போத்தும், ஆந்தையும் மீன் கொத்திப் பறவையும், பச்சைக்கிளிகளும், ஐந்துநிறக் கிளிக்கூட்டமும், மயில்களும், நாகணவாய்ப் பறவைகளும், உள்ளான்களும், சிட்டுக்குருவிகளும், கரிக்குருவிகளும், அன்றிற்பறவைகளும் சத்தமிட்டுக்கூடிப் பலநிற வேறுபாடுகளுடன் துள்ளி ஆடுகின்ற ஆலத்தையும் நான்முகன் தலையோட்டையும் கொண்ட திரிகூடநாதரின் மனைவியாராகிய குழல்வாய்மொழியம்மை எடுத்து அணிந்து கொள்ளுகின்ற ஐந்து நிறத்தை உடைய பட்டாடைபோல, பலவகை நிறத்துடன் பறவைகள் வருகின்றன ஐயே!

நூவன், பறவை பிடிக்கும் வகையினைச் சொல்லுதல்:

அடே குளுவா! பெரிய கண்களை உடையவான கண்ணிகளை நெருக்கிக் கீழே பதித்து வைத்தோமானால் காக்கைகளும் கூட அக் கண்ணிகளில் அகப்பட்டுக்கொள்ளும்; அக்கண்ணிகளை கீழே கவித்துப் பதித்து வைத்தோமானால் வக்காப்பறவையும் அகப்பட்டுக்கொள்ளும்; உலைந்து சுருங்கி இருக்கின்ற கண்ணிகளை நன்றாக முடிபோட்டுக் கீழே பதித்து வைத்தோமானால் உள்ளான் பறவைகளும் அகப்பட்டுக்கொள்ளும்; அதனால் அடே குற்றாலமலைக் குளுவா! குற்றாலமலைக் குளுவா! நீ சிக்குப்பட்ட கண்ணிகளைச் சிக்கெடுத்து கீழே பதித்து வைய்டா! குற்றாலமலைக் குளுவா!

நான் பிறந்த ஊரின் மீது இப்போது ஒரு சிறுபறவையாய் வட்டமிடுகின்றேன் கவிராயரே!

கருத்துகள் இல்லை: