இரண்டாம் உலகப்போரின் போக்கில், ஜெர்மனியுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசை இந்தியாவில் இருந்து தூக்கி எறிந்துவிடலாம் என்று நம்பிய சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரையும் சந்தித்தார். தாய்லாந்தில் இருந்து ரயில்பாதை அமைத்து பர்மா வழியாக மணிப்பூருக்குள் வர வேண்டும் என்று முனைந்து ஜப்பான் படை அமைத்த சயாம் மரண ரயில்பாதை இருண்ட வரலாற்றை கொண்டது. அது குறித்து தனியே ஒரு பதிவு எழுதினேன். பல லட்சம் தமிழர்கள் அதில் செத்து மடிந்தனர். ஒருவேளை அச்சு நாடுகள் வெற்றி பெற்று ஜப்பானியர் இந்தியாவுக்குள் வந்திருந்தால்...? 2015இல் அந்தமான் சென்று இருந்தபோது இதே எண்ணம் மனதில் உதித்தது. 1942 முதல் 45 வரை அந்தமான் ஜப்பானியர் வசம் இருந்தது. நேதாஜியின் வருகையை முன்னிட்டே அங்கு விமான ஓடுபாதை கட்டப்பட்டது! அங்கே ஜப்பானியப்படைகள் பதுங்கி இருக்க கட்டப்பட்ட பங்கர்களை உள்ளே சென்று பார்த்தேன். அந்தமானில் இருந்தும் பர்மா வழியாகவோ தாய்லாந்து வழியாகவோ இந்தியாவுக்குள் வரலாம்.
இந்தியாவின் ஏழு சகோதரிகள் Seven sisters எனப்படும் வட கிழக்கு மாநில மக்களின் பண்பாடு, மொழிகள், வரலாறு, கலை இலக்கியம் என்பன ஏனைய இந்தியப்பகுதியில் இருந்தும் பெரிதும் மாறுபட்டவை, எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. பழங்குடியினர் மிக அதிகம் வாழும் வட கிழக்கு இந்தியா. அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் ஆகியன.
2014 ஜனவரியில் கல்கத்தாவுக்கும் மேகாலயாவின் ஷில்லாங்குக்கும் சென்றிருந்தேன். காலை 6 மணிக்கு பொழுது விடியும், 5 மணிக்கு இருட்டி விடும்! இரவு குளிர் ஜனவரியில் 10 டிகிரிக்கும் குறைவு. ஷில்லாங் மக்கள்தொகை அடர்த்தி குறைவு. கிழக்கின் ஸ்காட்லாந்து என்று ஷில்லாங்கை சொல்கின்றனர், அவ்வளவு அழகு. பாராபாணி என்ற ஊரில் உள்ள உமியம் என்ற ஏரி மிக மிகப்பெரியது, அழகு மிக்கது. காசி மலைத்தொடர் அந்த மக்களின் வழிபாட்டுக்கு உரிய ஒன்று. காசி மொழி உண்டு. மக்கள் எளிமையானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். நமக்கு இங்கே கிடைக்கும் நுகர்பொருள் வசதிகளுடன் ஒப்பிட்டால், அவர்கள் வாழ்க்கை உண்மையில் பாராட்டத்தக்கது. இருப்பதைக் கொண்டு வாழ்கின்றனர். அசாமின் பகுதியாகவே முன்பு இருந்ததுதான் ஷில்லாங். விமான நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு சந்தைக்கு சென்று இருந்தோம். நம் பெருநகரங்களில் பெரும் மார்க்கெட் வீதிகளில் கிடைக்கும் பொருட்கள் கூட அந்த சந்தையில் இல்லை. ஆனால் காய்கறிகள், பழங்கள், கருவாடு, மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, குளிர் தங்கும் ஆடைகள், சீனப்பொருட்கள் ஆகியவற்றுக்கு குறைவில்லை. இந்த நுகர்பொருட்களுடன் அவர்கள் வாழ்க்கையை திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்று சொல்லலாமா?
சமீபத்தில் பர்மாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற, பல எல்லை ஊர்களில் இருந்து மக்கள் இந்தியாவின் மிஜோரம் மாநிலத்துக்குள்வந்துவிட, மிஜோ மக்கள் அவர்களை வரவேற்று கட்டியணைத்தார்கள். காரணம், மியான்மரின் மக்களும் மிஜோ மக்களும் chin எனப்படும் ஒரே இனக்குழுவை சேர்ந்தவர்கள், ஒரே திபெத்தோ பர்மிய மொழிகளை பேசுகிறவர்கள், கலாச்சார, பழக்கவழக்கங்கள் இருவருக்கும் பொது. தவிர திருமண உறவுகள் இப்போதும் நீடிக்கின்றன! இதனால்தான் உள்ளே வருபவர்களை வெளியே தள்ளுங்கள் என்று மத்திய அரசு சொல்ல, அவர்கள் எங்கள் சொந்தங்கள், வரவேற்போம், பாதுகாப்போம் என்று மாநில முதல்வர் உறுதியாக சொல்லியிருக்கிறார். ஏப்ரல் 25 2021 The Hindu sunday magazine பாருங்கள்.
ஒரு வருடத்தில் அதிக அளவு மழைப்பொழிவு பெறும் சிரபுஞ்சி இங்கேதான் உள்ளது. மலைகளின் மீது இருந்து தொலைவில் தெரியும் பங்களாதேஷ் நாட்டை காட்டுகின்றார்கள், பார்க்கலாம்.
ஊடகங்களும் அரசு தரும் செய்திகளும் வட கிழக்கு மக்களை பயங்கரவாதிகளாகவே நமக்கு சித்தரித்து காட்டி இருக்கின்றன. அந்த மக்களை நேரில் காணும் யாரும் இக்கூற்றை நம்ப முடியாது. அவர்கள் பேசும் மொழிகளுக்கு என தனியான எழுத்துரு இல்லை.ஆங்கில எழுத்துக்களில் தம் மொழியை எழுதுகின்றனர். பல வட கிழக்கு பழங்குடியினர் மொழிகள் இதனால் அழிந்து வருகின்றன. மக்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். பிற பகுதி இந்திய மக்கள் வட கிழக்கு மக்களின் பண்பாடு, மொழி, கலை ஆகியவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்யாதது, மாநிலங்களின் வளர்ச்சியில் அரசின் பாராமுகம், எல்லையில் வாழும் அம்மக்களின் பிரத்யேக பிரச்னைகளை புரிந்துகொள்ள தவறும் அரசு நிர்வாகம், அவற்றை தேசப்பாதுகாப்பு, எல்லை பிரச்சனை ஆகியனவாக குறுக்கி பார்ப்பது ஆகியவைதான் வட கிழக்கு மக்களுக்கும் பிற பகுதி இந்திய மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்கி வைத்துள்ளன. இந்த மாநிலங்களின் மக்கள் அனைவரையும் சீன மக்களாகவே இதர இந்திய மக்கள் பார்ப்பதன் விளைவுதான் கொரோனா தொற்றின் தொடக்க காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கி கல்வி பயின்ற வட கிழக்கு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முட்டாள்தனமான தாக்குதல்கள்.
... ... ...
லைபாக்லை ஆண்ட்டி பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் சிறிய தேநீர் கடை நடத்தி வருகின்றாள். மாணவர்களுக்கு கடனில் கொடுத்தாலும் கணக்கு எதுவும் எழுதி வைப்பதில்லை அவள். ஆள்வோரும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து அந்த ஏரியாவை வளைத்துப்போட்டு பெரிய வணிக காம்ப்ளக்ஸ் கட்டுகின்றார்கள். லைபாக்லை ஆண்டியின் கடையும் வாழ்க்கையும் சேர்ந்து காணாமல் போகின்றன. ஒரு ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் ஆண்ட்டி, பலத்த காயம் அடைகின்றாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவள் கடையில் தேநீர் வாங்கி பருகி கணக்கில் எழுதி வைத்த மாணவர். இது போன்ற போராட்டங்களில் இருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கையாக மருத்துவர் சொல்லும்போது, போராடினால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று தீர்மானமான குரலில் பதில் சொல்கின்றாள்.
அரசு கடனுக்காக 150 கி மீ தள்ளி இருக்கும் தன் ஊரில் இருந்து 10 முறைக்கு மேல் பயணித்தும், அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் கையூட்டு கொடுத்தும்கூட கடன் ஒப்புதல் கிடைக்காமல் நொந்து போகும் டா என் என்பவரின் கதை மற்றொன்று.
இரண்டு கதைகளும் வட கிழக்கு மக்களின் கதைகள், மொழிபெயர்த்து கொடுத்தவர் ச சுப்பாராவ். லைபாக்லை ஆண்ட்டி என்ற இந்நூலில் அவர் நண்பர் வே கண்ணன் கொடுத்துள்ள நான்கு பக்க மதிப்புரை முக்கியமானது. பணி நிமித்தமாக அசாம் சென்ற அவர், அசாமிய மொழி கற்றுக்கொண்டு, வட கிழக்கு முழுவதும் சுற்றி மக்களின் வாழ்க்கையை புரிந்து பதிவு செய்கின்றார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. சுப்பாராவும் வடகிழக்கில் சுற்றி திரிந்து நேரடி அனுபவம் பெற்றவர்தான்.
கொச்சியில் தெற்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை ஒட்டிய தேவார என்ற ஊர் முழுக்கவும் தமிழக மக்கள் நிரம்பியது. அவ்வளவு மக்களும் கொச்சியில் வேலை தேடி சென்றவர்கள். அதிகாலை, மாலை நேரங்களில் பேருந்தில் பயணிக்கும் எவரும் தமிழ்நாட்டில் இருக்கின்றோமோ என்று ஐயமுறும் அளவுக்கு தமிழர்களை பார்க்கலாம்.
தொழில் கட்டமைப்பு ஏதுமற்ற வட கிழக்கு மாநில மக்களை இப்போது சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பெருமளவு பார்க்கின்றோம். மால்கள், பெரிய சிறிய ஓட்டல்கள், கட்டுமானங்கள் என எங்கும் இருக்கின்றனர். காரணம் இங்குள்ள தொழில் கட்டமைப்பு, அதனால் பெருகும் வேலை வாய்ப்பு, அதன் பலன் ஆன பணப்புழக்கம். இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல, நீண்ட நெடிய அரசியல் வரலாறு உள்ளது இதன் பின்னால்.
ஷில்லாங் மார்கெட்டில் ஆரஞ்சுகளை விற்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களிடம் ஆங்கிலத்தில் உரையாடினார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தன் மகள் செவிலியர் படிப்பு படிப்பதாக கூறி எங்களுக்கு ஆரஞ்சுகளை பிரியமாக கொடுத்தார், பணம் வாங்க மறுத்தார். நாங்கள் கொண்டு சென்று இருந்த சென்னையின் காற்றில் தன் மகளின் சுவாசம் இருப்பதாக அவர் உணர்ந்திருக்க கூடும். இங்கே ஒவ்வொரு முறையும் ஏதாவது கடையில் அல்லது ஹோட்டலில் பொருளையோ உணவு பார்சலையோ என் கையில் தரும்போது மெல்லியதாக என் விரல்களில் படும் ஏதோ ஒரு வட கிழக்கு இளைஞனின் ஸ்பரிசத்தில் ஷில்லாங்கின் ஆரஞ்சு மணத்தை உணர்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக