மதுரையில் படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக கல்லூரி செல்லாமல் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டபோது சி ஐ டி யு சங்கத்தில் இணைந்தேன். கூடவே சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியிலும் இயங்கினேன். செல்லூர் போஸ் சாலையில் SYF கொடியேற்றி அனல் தெறிக்க பேசிய மாநில செயலாளர் ஒல்லியாகவும் கண்ணாடி அணிந்தும் இருந்தார். அவர் பேச்சின் மீது மயக்கம் வந்தது. பின்னர் ஒரு காலம் வரும், சென்னைக்கு வருவேன் என்றோ அவர் ஆசிரியராக பணி செய்த கட்சி நாளேட்டில் நானே கட்டுரைகள் எழுதுவேன் என்றோ 20 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை நாளிதழ் அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு அவருடன் பணி செய்வேன் என்றோ பணி முடித்தவுடன் ஒன்றாகவே மின்சார ரயில் பிடித்து ஆவடி வரை அவருடன் பயணிப்பேன் என்றோ (அவர் செவ்வாப்பேட்டை செல்வார்) அவர் எழுதிய விடுதலைத்தழும்புகள் நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைக்க, ஆவடி தமுஎச சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தி வெள்ளியில் பேனாவும் பரிசாக கொடுப்போம் என்றோ நினைத்தும் பார்த்தது இல்லை. தோழர் சு பொ அகத்தியலிங்கம்!
மதுரை அந்த மாதிரி மண். எப்போதும் எங்கே திரும்பினாலும் அரசியல் கூட்டங்களுக்கு பஞ்சமில்லை. மிக மிகப்பழைய சினிமா ப்பாடல்கள் எல்லாம் மிக சாதாரணமாக குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும். கையில வாங்கினேன் பையில போடல, துடிக்கும் ரத்தம் பேசட்டும் துணிந்த நெஞ்சம் நிமிரட்டும், உண்மை ஒரு நாள் வெளியாகும், உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம், எங்கள் திராவிடப்பொன்னாடு, அச்சம் என்பது மடமையடா, சும்மா கெடந்த நெலத்தை கொத்தி, ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...
அதிலும் அந்த வரிகள்...
இழந்து போனவை விலங்குகளே
எதிரே உள்ளது பொன்னுலகம்
நடந்து போனவை கனவுகளே
நடக்கப்போவது புதிய யுகம்
ஒரு புதிய யுகம் ஒரு புதிய யுகம்
இரண்டு வர்க்கம் இனிமேல் இல்லை
எழுந்து வாரீர் தோழர்களே!
காலம் நமதே நமதென்று கதவு திறக்கும் வா இன்று!
.. அந்த ராணுவ அணிவகுப்பின் ஒத்திசைவுடன் ஓங்கி ஒலிக்கும் ட்ரம்பெட்டுடன் தீர்மானமாகத்தொடரும் துடிக்கும் ரத்தம் பேசட்டும்...! இப்போதும் மெய் சிலிர்க்கின்றதே! துலாபாரம் படத்தில் ஜி.தேவராஜன் இசையில் இடம்பெற்ற அந்தப்பாட்டின் வரிகள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வரிகள் என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.
திமுக கூட்டங்கள் எனில் எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து என்ற தொகையறாவுடன் தொடங்கும் சீர்காழியின் பாட்டு, அதில் வள்ளுவன் குறள் போல வடிவமோ சிறிதாக என்ற வரியை இப்போதும் ரசிப்பேன், எங்கே சென்றாய் எங்கே சென்றாய், கல்லக்கூடி கொண்ட..., சீர்காழி பாடிய அண்ணாவுக்கு ஆன கருணாநிதியின் இரங்கற்பா பூவிதழின் மென்மையிலும் மென்மையான..., தலையில தொப்பி எதுக்குங்க என்று எம் ஜி ஆரை தரக்குறைவாக விமர்சிக்கும் பாடல்,காங்கிரஸ் கூட்டம் எனில் நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தான் நேரு பிரான், இந்திப்பாடல் மேட்டில் அமைந்து எஸ் சி கிருஷ்ணன் பாடிய கர்ம வீரர் காமராஜர் வாழ்கவே வாழ்கவே எந்நாளுமே.. இப்படி.
மதுரையில் இருந்த காலம் பொற்காலம். எம் ஆர் வெங்கட்ராமன், பி ராமமூர்த்தி, எஸ் ஏ தங்கராஜ், என் சங்கரய்யா, ஏ பாலசுப்ரமணியம், ஜோதிபாசு, ஈ கே நாயனார், பி சுந்தரய்யா, ஈ எம் எஸ், பி டி ரணதிவே, பசவபுன்னையா, பி ராமச்சந்திரன், உமாநாத், கே டி கே தங்கமணி, எம் கல்யாணசுந்தரம்... என மரியாதைக்குரிய மூத்த தோழர்களின் கூட்டங்களை எல்லாம் கேட்கும் பெரும் வாய்ப்பு வாய்த்தது. நெல்பேட்டையில் ஒரு அரிசி ஆலையில்தான் எம் ஆர் வி, பி ஆர், ஏ பி ஆகியோரின் அரசியல் வகுப்புகளில் பங்கு பெறும் வாய்ப்புகள் வாய்த்தன. திலகர் திடலில் (வாரச்சந்தை மைதானம்) ஒரு மே தினக்கூட்டம். தோழர்கள் வி பி சிந்தன், தா பாண்டியன் இருவரும் உரையாற்ற, என்ன ஒரு அனுபவம் அது! குருதியை சூடேற்றும் நரம்புகளை முறுக்கேற்றும் போர் முரசங்கள் அல்லவா இருவரும்! அது சோவியத் யூனியன் ஒளிவீசிக்கொண்டு இருந்த காலம். மாஸ்க்கோவில் மழை பெய்தால்... என்று கேலி செய்தவர்களுக்கு, குறிப்பாக அன்றைய காங்கிரஸ் கட்சியினருக்கு, 60களில் கேரளா மக்கள் பதில் சொன்னார்கள் எனில் 70களில் மேற்கு வங்க மக்களும் திரிபுரா மக்களும் பதில் சொன்னார்கள். உண்மையில் இடதுசாரி இயக்கத்தோழர்கள் அப்போது இறுமாந்துதான் கிடந்தோம். ஆர் வி சுவாமிநாதன் என்ற காங்கிரஸ்காரர் வெற்றிபெற்றுக்கொண்டே இருந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பி ஆர் வென்றார். மதுரை கிழக்கு சட்ட மன்றத்திற்கு சங்கரய்யாவை மக்கள் தேர்ந்தெடுத்தனர். சைக்கிள் ரிக்சாவில் அவர் பயணித்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் விழாவுக்கு பட்டிமன்றம் எனில் அது இரவு 9 மணி தொடங்கி காலை 4 வரை நடக்கும். ஒரு முறை தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில், திராவிட அரசியலா பொதுவுடைமை அரசியலா முதலாளித்துவ அரசியலா என்ற பொருளை ஒட்டி நடந்த பட்டிமன்றத்தில், தா பாண்டியன், விடுதலை விரும்பி, நன்மாறன் உள்ளிட்ட பெரும் பேச்சாளர்கள் மூன்று அணிகளாக, அணிக்கு நால்வர் என இரண்டு சுற்று முடிந்து அடிகளார் தீர்ப்பு சொல்லும்போது அதிகாலை 4 மணி.
சிலந்தியும் ஈயும், வால்கா முதல் கங்கை வரை, பின் சோவியத் பதிப்புகள் என வாசிப்பு இருந்தாலும் சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, மகரிஷி, பாக்கியம் ராமசாமி/ஜ ரா சுந்தரேசன், பாலகுமாரன், எம் எஸ் உதயமூர்த்தி, கண்ணதாசன், ஜெயகாந்தன் என்று இணையாக ஒரு வாசிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்த parallel வாசிப்பு எத்தனை பயன்மிக்கது, வாசிப்பிலும் சிந்தனையிலும் எத்தனை மாற்றங்களை கொண்டுவந்தது என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன். கூடவே வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் (இப்போது தொடர்கதையே இல்லை).
இடையில் ஒரு ஆறு மாத காலம் ஆம்பூர் தோல் காலணிகள் தொழிற்சாலையில் வேலை செய்தேன். அது ஒரு வகை அனுபவம். தாராளமய மதுரை வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட வாழ்க்கையாக இருந்தது. கட்டுப்பெட்டியான இஸ்லாமிய வாழ்க்கையை அங்கேதான் பார்த்தேன். மீண்டும் மதுரை வந்தபோது நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை நூலை வாசித்தேன். தமிழில் பி ஆர் பரமேஸ்வரன் மொழியாக்கம் செய்து இருந்தார். சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டது. அவரோ பிறப்பால் கேரளத்தவர்! கையூர் தியாகிகளின் வரலாறு அது. சிறையில் உறவினர்களும் தோழர்களும் அப்புவையும் சிருகண்டனையும் சந்தித்து உரையாடும் அந்தக்காட்சி! சென்னைக்கு வேலை நிமித்தமாக வர வேண்டி இருந்தது. மதுரை நகரக்கட்சி செயலாளர் தோழர் எம் எம் என்று அழைக்கப்பட்ட முனியாண்டி அவர்களிடம் அறிமுகக் கடிதம் பெற்று 52 குக்ஸ் சாலை பெரம்பூர் சென்னை மாவட்ட கட்சி அலுவலக முகவரிக்கு வந்தேன். எம் எம் அவர்கள் சிறந்த மல்யுத்த வீரர், உடல் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர், மதுரையில் அவரைப்போன்றவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் V K பழனி, இப்போதும் 93 வயது தாண்டி வாழ்ந்து கொண்டும் புதுயுக வாலிபர் தேகப்பயிற்சி சாலை என்கிற உடற்பயிற்சி கூடத்தை பழங்கானத்தத்தில் நடத்திக்கொண்டு இருப்பதாக 14.11.2019 The Hindu வில் வாசித்தேன்.
அப்போது இருந்த சென்னை மாவட்ட செயலாளரிடம் எம் எம் கொடுத்த கடிதத்தை கொடுத்தேன். என்ன வேலை, எங்கே செல்ல வேண்டும், காலையில் எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும் என்றெல்லாம் மாவட்ட செயலாளர் விசாரித்தார். அங்கேதான் இரவு தங்கினேன். மறுநாள் காலை எழுத்து தேர்வுக்கு ஆவடி செல்ல வேண்டும். கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது ஒருவர் வந்தார். வாங்க போகலாம், கார் ரெடியாக இருக்கு என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'நீங்க ஊருக்கு புதுசு, ஆவடி இங்கே இருந்து சுமார் 30 கிலோமீட்டர், மழையும் கடுமையா இருக்கு, அதனால் உங்களை காரில் அழைத்து சென்று ஆவடியில் விட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சொல்லி என்னை அனுப்பினார், நான்தான் ட்ரைவர்' என்றார். கட்சியின் கொடி கட்டிய காரில் அரசு வேலைக்கான எழுத்து தேர்வுக்கு சென்ற ஒரே ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன்! மாவட்ட செயலாளர் வேறு யாரும் இல்லை, நினைவுகள் அழிவதில்லை நூலை தமிழில் தந்த தோழர் பி ஆர் பரமேஸ்வரன்தான்! என்ன ஒரு சிந்தனை அது! ஒரு இளைஞன் கட்சி அலுவலகத்தில் வந்து தங்கினால் அவன் வேலைகளை அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடாமல் அவன் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்டு சிந்தித்து இருந்தால் மட்டுமே மிக கவனம் எடுத்து திட்டமிட்டு தன் காரையும் கொடுத்து அனுப்பியிருக்க முடியும்! செவ்வணக்கம் தோழர் பி ஆர் பி! உங்களைப்போன்ற செம்மல்களால்தான் இயக்கம் வளர்ந்தது! நினைவுகள் அழிவதில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக