இப்படியே நாட்கள் வானொலியுடன் உறவு வைத்துக்கொண்டு போன போதில், மதுரை காந்தி மியூசியம் திறந்தவெளி அரங்கில் எஸ் பி பியின் நிகழ்ச்சி என்று தெரிய வந்தது. நாங்கள் நெசவாளிகள், சினிமாவுக்கு டிக்கெட் வாங்குவதுதான் அதிகபட்ச பொழுதுபோக்கு செலவு, இன்னிசைக்கச்சேரிக்கு டிக்கெட் எங்கே? இப்படித்தான் முன்பு அதே அரங்கில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடந்தபோது அரங்கின் பின் வரிசை மதில் சுவர் பின்னால் இருந்த மரத்தின் மீது ஏறிக்குதித்து கச்சேரியை ஓசியில் ரசித்து வந்தேன்.இளையராஜா, மலேசிய வாசுதேவன், கங்கை அமரன் என பெரிய கூட்டமே இருந்தது. அப்போது அவர் வெள்ளை நிற சட்டை, பாண்ட் அணிவார். 1979, 80 என்று அவர் உச்சத்தில் இருந்த நேரம் அல்லவா, பாடல் மழை பொழிந்து கொண்டே இருந்தது, ஓசியில்! தண்ணி கருத்திருக்கு பாட்டுக்கு ரசிகர்கள் ஆடிய ஆட்டம் சாமியாட்டம்!
அதே சாகச வழியில் இப்போதும் எஸ் பி பி கச்சேரிக்குள் கலந்தேன்! மதனோற்சவம், என் கண்மணி, ஒரு நாள் உன்னோடு ஒரு நாள், பொன் மாலைப்பொழுது... என பாடிக்கொண்டே இருந்தார். அழகன் அவர். வானொலியில் மட்டுமே பறந்து வந்த குரலுக்கு சொந்தக்காரரை நேரில் கண்ட மகிழ்ச்சி சொல்லி முடியாது!
ஒவ்வொரு பாட்டும் முதல் பாட்டு போலவே துலக்கமாக உயிரோடு இருந்தது. 40 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் 15 பாட்டுக்கும் மேல் பாடினார் என்று அறிகின்றோம், கடுமையான உழைப்பாளியாக இருந்திருந்தால் மட்டுமே இது முடியும். சங்கராபரணம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மதுரை மூவிலாண்ட் தியேட்டர் அழகானது, அமைதியானது, படத்தை அங்கே பார்த்தேன்.
மதுரை இசைக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், நடனக்கலைஞர்களின் கோட்டை. கோவில் திருவிழாக்காலங்களில் கேட்கவே வேண்டாம், திரும்பும் தெருவெல்லாம் பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், நாடகம், பட்டிமன்றம்... என தூங்காத நகரமாகவே இருக்கும். அதிகாலை 6 மணிக்கு மேடைக்கு முன் வீதிகளில் மக்கள் துணி விலகியது தெரியாமல் தூங்கிக்கொண்டே இருக்க, அரிச்சந்திர மயான காண்டம் அப்போதும் முடிந்திருக்காது. பாட்டுகச்சேரிகளோ! மிக அற்புதமான கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் அப்போது நிறைய இருந்தன. அமெரிக்கன் காலேஜ் குழு மிகப்பிரபலம். சின்சியரான குழு என்று சொல்லலாம். உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதிதானே, சங்கீத ஞானம் பற்றி கவலை இல்லை என்றில்லாமல், மேடை கச்சேரிக்கு வீணை, கடம் என கொண்டு வருவார்கள். நிழல்கள் படம் அப்போதுதான் ரிலீஸ் ஆகி இருந்தது. கூட்டத்தில் இருந்து பொன்மாலைப்பொழுது பாடச்சொல்லி சீட்டு போனது! நாங்கள் அதற்கான ஒத்திகை பார்க்கவில்லை, ஆனாலும் முயற்சி செய்கின்றோம் என்று அறிவித்து பாடி கைதட்டல் பெற்றார்கள். என் மூத்த அண்ணன் அப்போது நெசவுத்தொழிலாளி (பின்னர் பட்டுவளர்ச்சி துறையில் பணி செய்து ஓய்வும் பெற்றுவிட்டார்). நன்றாகப்பாடுவார். சங்கராபரணத்தில் இடம் பெற்ற ஓம்கார.. பாடலை பாடிப்பாடி பயிற்சி செய்து ஒரு மேடையில் ஏறி பாடி கைதட்டலும் பெற்றுவிட்டார்! பின்னர் தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பாடினார், ஒரு முறை பி.சுசீலா அம்மையாருடன் பாடி மகிழ்ச்சி அடைந்தார். உடுமலைப்பேட்டை தமுஎச வெளியிட்ட பாடல் கேசட்டில் அவர் பாட்டும் இருந்தது. நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் மேடை கச்சேரி கலைஞர்கள் எஸ் பி பி நினைவாக கச்சேரி நடத்தியுள்ளனர். இன்று அண்ணனுடன் பேசினேன். தமிழகத்தில் எஸ் பி பி பாடல்களைப் பாடி வாழ்க்கையை நடத்தும் பல நூறு கலைஞர்களின் உணர்வை எதிரொலிக்கும் குரலாக அவர் பேசினார். உண்மை. டி எம் எஸ், எஸ் பி பி பாடல்கள் பல நூறு பாடகர்களுக்கும் இசைக்கருவி இசைப்பவர்களுக்கும் பல பத்தாண்டுகளாக வாழ்க்கையை கொடுத்துள்ளன, இனிமேலும் கொடுக்கும்.
டி எம் எஸ், சீர்காழி, ஏ எம் ராஜா, கண்டசாலா, சி எஸ் ஜெயராமன் ஆகியோரின் காலம் ஆகட்டும், எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் காலம் ஆகட்டும், திரையிலும் வானொலியிலும் அவர்களின் பாடல்களை, நடிப்பை பார்த்தோம், கேட்டோம். அல்லாமல், ஆல் இந்தியா ரேடியோவில் அவர்களின் நேர்காணல்களை கேட்டிருப்போம், முகங்களை எங்கே பார்த்தோம்? ஆனால் காலம் எஸ் பி பி அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியது, நமக்கும் வழங்கியது. இசை நிகழ்ச்சிகளில் அவர் தனது உயரத்தை எப்போதும் வெளிக்காட்டி பிறரை துச்சமாக பார்த்ததில்லை, தன்னை உயர்த்தி ஒருபோதும் பேசிக்கொண்டது இல்லை, வயதில் மிக சிறிய குழந்தைகளிடம் கூட மரியாதையுடன் நடந்து கொள்வார், குழந்தைகளுடன் டூயட் பாடும்போதும் தொழில் பக்தியுடனும் கவனத்துடனும் பாடுவார், அசிரத்தையாக அவர் இருந்ததில்லை. அவர் பங்கு பெறும் நிகழ்வுகளின்போது நிகழ்வின் எல்லையை தாண்டியும் பல அனுபவங்களை உணர்வுடன் பேசுவார், அவர் நிகழ்வுகளை நான் பார்ப்பதற்கு முக்கியமான காரணம் இது.
ஜெயா டிவி ஹமாம் என்னோடு பாட்டுப்பாடுங்கள் நிகழ்வில் யாரும் அதுவரை சொல்லாத ஒரு முக்கியமான வரலாற்றை சொன்னார். "நாங்கள்ளாம் இப்போ பாட்டு ரிகார்டிங் முடிஞ்ச உடனே கையிலே சம்பளத்தை வாங்குறோம், அதுக்கு காரணம் எம் பி சீனிவாசன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவரை நான் நினைத்துக்கொள்வேன்" என்று மிக நன்றியுணர்வுடன் அவர் செய்த பதிவு இப்போதும் என் நினைவில் உள்ளது. இன்று காலை ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. கங்கை அமரனுடன் அவர் பேசுகின்றார், நாமெல்லாம் இன்னிக்கு நல்லா இருக்கோம்னா அது ரசிகர்கள் போட்ட பிச்சைடா என்று சொல்கின்றார்! மிக உயரத்தில் இருந்த மனிதனின் மிகப்பணிவான எண்ணம் அல்லவா இது! அதனால்தான் அவரை எல்லோரும் மதிக்கின்றார்கள். எஸ் பி பி! துயர் சூழ்ந்த பொழுதுகளிலும் சரி, மகிழ்ச்சியான நிமிடங்களிலும் சரி, மனிதர்களை மகிழ்ச்சியுடன் வைத்து இருந்தீர்கள்! நீங்கள் என்றும் எங்களுடன் இருக்கின்றீர்கள்!
எத்தனை பாடல்கள்! ஆனால் எஸ் பி பி என என் மனதில் அழுத்தமாக எழுதிய பாடல்கள் என சிலவற்றை சொல்வேன், இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாத பாடல்கள், அவர் குரல் செய்யும் மாயங்களை ரசிக்கலாம்:
இயற்கை என்னும், ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, தொடுவதென்ன தென்றலோ மலர்களோ, மார்கழிப்பனியில், என்ன சொல்ல என்ன சொல்ல, கண்ணனை நினைக்காத, யமுனா நதி இங்கே, ஓடம் கடல் ஓடும், எனக்கொரு காதலி இருக்கின்றாள், மாதமோ மார்கழி, காதல் விளையாட, அம்பிகை நேரில் வந்தாள், கண்ணெல்லாம் உன் வண்ணம், கண்டேன் கல்யாணப்பெண் போன்ற, ஒரு சின்னப்பறவை, சித்திரப்பூ சேலை, மதனோற்சவம், ஒரு நாள் உன்னோடு ஒரு நாள், நந்தா என் நிலா, சம்சாரம் என்பது வீணை, என் கண்மணி உன் காதலன், அங்கே வருவது யாரோ, பாடும்போது நான் தென்றல்..., அவளொரு நவரச நாடகம், தேன் சிந்துதே வானம், தேவன் வேதமும், அங்கும் இங்கும் பாதை உண்டு, கனாக்காணும்.., you are like a fountain..., What a waiting.., shayanora, மழையும் நீயே, ஜாதி மல்லி பூ சரமே, மௌனமான நேரம், பூந்தேனில் கலந்து, பூந்தளிராட...., சின்னப்புறா ஒன்று..., நதியோரம், படைத்தானே பிரம்ம தேவன், மயிலே மயிலே, நான் எண்ணும் பொழுது...