உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற சர்வதேசப்
பெருநோய்களின் பிறப்பிடமாக அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி போன்ற
ஏகாதிபத்திய சாக்கடைகள் உள்ளன. உண்மையில், பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்கள்
எங்கெல்லாம் தமது காலனிககளை ஏற்படுத்தி இருந்தனவோ அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள்
ஓகோவென நிகழ்ந்து 'அந்த
மக்கள் தங்களைத் தாங்களே ஆள்கின்றார்கள்! சூப்பர் ஜனநாயகம் பாரீர்!' என்பதெல்லாம் கடைந்தெடுத்த டூப்
என்பதை வரலாறு தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஆட்சி
செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய, சர்வதேச முதலாளிகளின் ஏவல் நாய்களாக
இருப்பதை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகள் மட்டும் அல்ல, நரசிம்மராவ் தொடங்கி மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, கடப்பாரை அத்வானிஜி, சாஃப்ட்மேன் வாஜபேயிஜி, காங்கிரஸ், பாரதீய ஜனதா, இவர்களது தொங்குசதைகளும் உள்ளூர்
ஏஜெண்டுகளும் ஆன உதிரிக்கட்சிகள் எல்லோரும் சர்வதேச முதலாளிகளின் ஏவலாளிகளே.
இவர்களின் கைவிரல் அசைவுக்கு காத்திருந்து சேவகம் செய்யவே போலீஸ், ராணுவம், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புக்கள்.
ஹோண்டா
முதலாளி விட்டெறிந்த காசைப் பொறுக்கிக் கொண்டு, ஹோண்டா தொழிலாளிகள் மீது கற்பனை
செய்ய இயலாத காட்டேறித்தாக்குதலை நடத்திய ஹா¢யானா மாநில அரசையும் அதன் போலீசையும்
எப்படி அழைப்பது? சென்னைப்புறநகா¢ல் பெரும் பரப்பளவில் அமைந்துள்ள ஹ¥ண்டாய் தொழிற்சாலையில்
நிரந்தரத்தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும் பகுதி கான்ட்ராக்ட்
தொழிலாளர்களே. இவர்கள் இந்தியாவின் புனிதமான சட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சங்கம்
தொடங்குவது கூட நிர்வாகத்துக்கு கசக்கின்றது; அவர்களை டிஸ்மிஸ் செய்கின்றது.
போலீசை ஏவி அடிக்கின்றது, சிறையில்
அடைக்கின்றது.
தமிழ்
மக்களின் தானைத்தளபதி, உண்மையில்
கொரிய நாட்டு முதலாளியின் படைகளுக்கு லோக்கல் தளபதியாக இருக்கின்றார் என்பது
தொடர்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றது. இவையன்றி, பெப்சி, கோககோலா போன்ற ஏகாதிபத்திய
பானங்களில் விசமருந்துகள் இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட மைய அரசு
இந்தியாவில் அவற்றை அனுமதித்திருக்கின்றது எனில், மைய அரசு யாருடைய ஏவலாளாக
இருக்கின்றது?
25 வருடங்களுக்கு
முன்பு போபாலில் நடந்த மீதைல் ஐசோ சயனைட் என்ற விசவாயுக்கசிவு விபத்தால் (?) ஆயிரக்கணக்கான மக்கள் செத்து
விழுந்தனர். குற்றவாளியானஅமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைட் கம்பெனி மீது பெரிய
வழக்கெல்லாம் போட முடியவில்லை. நைஜீரிய மக்களுக்கு இருக்கின்ற மான உணர்ச்சி, சூடு, சொரணை, கோபம் மிகப்பெரிய இந்திய அரசுக்கு
இல்லை.
கடந்த
ஐந்து வருடங்களாக "இடதுசாரிகள் ஆதரவிலான ஒரு அரசு" என்பதை
சகித்துக்கொள்ள முடியாமல், தொண்டையிலேயே
இருந்த கசப்பு மருந்து போல, ஆனால்
துப்பவும் முடியாமல் எரிச்சலுடன் காலத்தை தள்ளியது காங்கிரஸ். நினைத்தபடியெல்லாம்
பொதுத்துறையை விற்பது, அமெரிக்கா
இருக்கும் திசையைப் பார்த்து தூங்கும்போதும் கும்பிட்டபடியே இருப்பது போன்ற
நடவடிக்கைகளுக்கு இடதுசாரிகள் 'சொட்டை, சொள்ளை' என்று 'குறை' சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, அத்வானி, வாஜபேயி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கும்பலுக்கும், இவர்களுக்குள் உறவுப்பாலமாக
விளங்கும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அவர்களது எஜமானன் ஆன அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி ஆகிய
சர்வதேச கொள்ளையர்களுக்கும் இது மிகப்பெரும் எரிச்சலாகவே இருந்தது. இடதுசாரிகளை
ஒழித்துக்கட்டவும், குறைந்த
பட்சம் அவர்களது செல்வாக்கையாவது குறைக்கவும், லஞ்சலாவண்யத்தில் சிக்காதவர்கள் என்ற
நல்ல பெயரைக் களங்கப்படுத்தவும் என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கும்பல்
கூட்டுச் சேர்ந்து செய்து வருகின்றது. கேரளாவில் ஊழல் புகார், மேற்கு வங்கத்தில்
மாவோயிஸ்டுக்கள்+மம்தா பானர்ஜி+காங்கிரஸ்+பா.ஜ.க. கூட்டணி போன்றவை எல்லாம்
தற்செயலாக திடீர் என நடப்பவை அல்ல என்று உறுதியாகக் கூற முடியும்.
இப்போது
தனிப்பலத்துடன் ஆட்சியில் ஏறியுள்ள காங்கிரஸ், தனது எஜமானுக்கு விசுவாசமாக இட்ட
கட்டளைகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றும் என்பதில் இரண்டு கருத்துக்கு
இடமில்லை. ஜூலை மாதம் வரும் பட்ஜெட் இதை உறுதிப்படுத்தும். எதிர்காலத்தில்
பொதுத்துறை நிறுவனங்கள் வீதியில் வைத்து ஏலம் விடப்படும்; ஷெல் போன்ற கம்பெனிகளை நிறையப்
பார்க்க முடியும்; அடிப்படை
ஜனநாயக, தொழிற்சங்க
உரிமைகள் மேலும் நசுக்கப்படும். ஹோண்டா, ஹூண்டாய் போல் பல சம்பவங்கள் நிகழலாம்; பல்வேறு கென் சாரோக்களை நாம் இங்கே
பலிகொடுக்க நேரலாம். ஷெல் போன்ற கம்பெனிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய
விசயங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்; நமக்கோ நைஜீரிய டெல்டா ஓகோனி
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன.

(முற்றும்)