வியாழன், நவம்பர் 22, 2012

தலைவர்களும் தலைவர்களாகிய தாதாக்களும்







1)காந்தியடிகள் கொலை வழக்கில் கோட்சேயுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விநாயக் தாமோதர் சவர்க்கார். இவர் வலதுசாரி இந்துத்வா தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ்-இன் தத்துவ ஆசான்களில் ஒருவர் என்றறியப்படுபவர். ஹிட்லரின் ஆரிய இனமே உயர்ந்த இனம்என்ற கோட்பாட்டை அப்படியே தனது தத்துவமாக ஏற்றுக்கொண்ட அமைப்பு ஆர் எஸ் எஸ். பிற்பாடு போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் அக்குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். காந்தியடிகளை கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று செய்தி பரப்பப்பட்டால்  இந்தியாவில் மிகப்பெரும் மதக்கலவரம் வரும் என்று ஆசைப்பட்ட ஆர் எஸ் எஸ், நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பிராமணனுக்கு முஸ்லிம் மக்கள் செய்யும் மதச்சடங்கான ‘சுன்னத்என்ற ஆண் குறித்தோலை நீக்கும் சடங்கை செய்து, அவனது கையில் இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தியது. இந்த சதிவேலை அனைத்திலும் மேற்படி ஏழு பேரும் ஈடுபட்டார்கள். 2002ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி அரசு தனது ‘மதச்சார்பின்மையை உலகத்துக்கு முரசறிந்து அறிவிக்கும் வண்ணம் இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களை குடியரசுத்தலைவராக ஆக்கியது. அன்று பிரதமர் அடல்பிஹாரி வாஜபேயி. மேற்படி சவர்க்காரின் உருவப்படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இஸ்லாமியர் ஆன அப்துல்கலாமை வைத்து திறந்து வைத்து சாகசம் செய்து மதச்சார்பிமைக்கோட்பாட்டை நேசிக்கும் அனைவரையும் கேலி செய்தது பாஜக அரசு. அதே நாடாளுமன்றத்தின் முன்னால் இவர்களால் கொல்லப்பட்ட காந்தியடிகளின் சிலை இப்போதும் மவுனமாக இருக்கின்றது.

2)ரெய்சினா குன்று என்றறியப்படும் குடியரசுத்தலைவர் மாளிகையில் 1997இல் குடியேறிய முதல் தலித் குடிமகன் கே ஆர் நாராயணன். அன்றும் பிரதமர் வாஜபேயி. அதே சவர்க்காருக்கு பாரத்ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்து அவ்வாறே முடிவு செய்யுமாறு வேண்டி குடியரசுத்தலைவரான நாராயணனுக்கு கடிதம் எழுதுகின்றார். நாராயணன் அவர்களோ தனது பதவிக்காலம் முழுவதும் இந்தக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த பிரமோத் மஹாஜன் இப்படிக்கூறினார்: ‘பாட்டுப்படுபவர்களுக்கும் நாட்டியம் ஆடுபவர்களுக்கும் பாரத்ரத்னா வழங்கும்போது சவர்க்காருக்கு வழங்கினால் என்ன கெட்டுப்போகும்?’. அன்று 10 காங்கிரஸ் எம்.பி.க்களும் சில பாரதீய ஜனதா முதலமைச்சர்களும் மத்திய மந்திரிகள் சிலரும் ‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்ஆன திருபாய் அம்பானிக்கு பாரத்ரத்னா வழங்க ஒத்தைக்காலில் நின்று தவம் செய்தனர் என்பது கூடுதல் தகவல். அம்பானிகள் வீசும் சில்லறைகளைப் பொறுக்க இவர்களுக்குள் கட்சி வித்தியாசம் என்றுமே வந்ததில்லை, அத்தனை ஒற்றுமை. (சமீபத்தில் ரிலையன்சை நிம்மதியா தொழில் நடத்த வுடுங்கப்பாஎன பத்திரிக்கையாளர்கள் மீது எரிந்து விழுந்த மந்திரி வீரப்பமொய்லி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பா?)

3)சமீபத்தில் மரணம் அடைந்த பம்பாயின் தாதாவான பால்தாக்கரே, இவரும் ஹிட்லர்,முசோலினி கொள்கைகளை தனது தத்துவமாக வரித்துக்கொண்டவர். சிவசேனா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிறுவனர். இந்தியாவின் இளைஞர்களுக்கு இந்த தத்துவங்களே பொருத்தம் என்று உபதேசம் செய்தவர். பம்பாயின் இடதுசாரி  தொழிற்சங்கத்தலைவர்கள், இஸ்லாமியர்கள், பிற மாநிலத்தவர்கள் போன்றோரை இவர் விரல் அசைத்தால் இவரது சீடர்கள் கொலை செய்வார்கள். உலகின் ஆகப்பெரும் ஜனநாயக தேஷம், மதச்சார்பின்மைக்கோட்பாட்டுக்கும் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கும் ஒண்ணாம் நம்பர் உதாரணம் வேணுமா? இந்தியாவுக்கு வாங்க என்று பீத்திக்கொள்ளும் இத்தேசத்தில் தாக்கரே மீது இதுவரை ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட்டது இல்லை இந்தியாவின், மராட்டிய அரசுகளின் போலீசும் ராணுவமும்.

4)உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் தற்போதைய தலைவருமான மார்க்கண்டேய் கட்ஜு நவம்பர் 19 தி இந்து நாளிதழில் ‘Why I can’t pay tribute to Thackeray’ (நான் தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க மாட்டேன் – காரணம் என்ன?) என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சாரம் வருமாறு:

அரசியல் சட்ட்த்தின் 19(1)(இ) பிரிவு ‘இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் குடியிருக்கவும் நிரந்தரமாக வாழவும் இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டுஎன அறிவிக்கின்றது. ஆனால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர் கொள்கை, மஹாராஷ்ட்ராவில் குடியேறிய குஜராத்திகள்,தென்னிந்தியர்கள்,பிஹாரிகள்,உ.பி.யினர் உள்ளிட்ட பிற மாநிலத்தவருக்கு எதிரானது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பால்தாக்கரேயால் நிறுவப்பட்ட சிவசேனை அமைப்பினர் 1960,70களில் பம்பாயில் குடியேறி வணிகம் செய்து கொண்டிருந்த தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள், அவர்களது வீடுகளையும் ஓட்டல்களையும் அழித்தார்கள். (பால், செய்தித்தாள் விற்போராக, டாக்சி ஓட்டுனர்களாக பிழைப்பு நடத்திய) பிஹாரிகளையும் உ.பி.யினரையும் அடித்து அவர்களது சொத்துக்களையும் அழித்தார்கள். இஸ்லாமியர்களை தாக்கினார்கள்.

இந்தியா பொதுவாக ஒரு குடியேறியவர்களின் நாடுதான் (வட அமெரிக்காவைப்போல); இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களில் 92-93 விழுக்காட்டினர் இந்நாட்டின் பூர்விக குடிகள் அல்லர், அவர்கள் இந்தியாவின் வடமேற்கு வாயிலாக இந்நாட்டில் நுழைந்து  குடியேறியவர்களின் வாரிசுகள் (‘What is India?’ என்ற எனது கட்டுரையை எனது தளமான justicekatju.blogspot.in-இல் காண்க).  இந்நாட்டின் பூர்விக மக்கள் ஆதி திராவிடர்களே, இவர்களை நாம் ஆதிவாசிகள் என்று சொல்கின்றோம் (பில்,கோண்டு,சண்டாளர்,தோடர்கள் முதலியோர்), இவர்களின் ஜனத்தொகை இன்று 7-8 விழுக்காடு மட்டுமே. ஆக தாக்கரேயின் மண்ணின்மைந்தர் கொள்கை தீவிரமாக அமலாக்கப்படும் எனில் (தாக்கரேயின் குடும்பம் உட்பட) 92-93 விழுக்காடு மராட்டியர்களை அந்நியர்கள் என்றுதான் சொல்லவேண்டும், அவர்களை அந்நியர்களாகவே நட்த்த வேண்டியிருக்கும். ஏனெனில் மஹாராஷ்ட்ராவின் உண்மையான மண்ணின்மைந்தர்கள் 7-8 விழுக்காடே இருக்கின்ற பில்லுகளும் பிற பழங்குடியினரும்தான்.

இன்று இத்தேசத்தில் மிகப்பல பிரிவினைவாத சக்திகளும்  (மண்ணின்மைந்தர் கோட்பாடு போன்றவற்றை பேசுகின்ற) பிளவு சக்திகளும் இயங்கி வருகின்றன. தேசப்பற்றுள்ள யாவரும் இச்சக்திகளை எதிர்த்துப்போராட வேண்டும்.
நாம் ஏன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்? ஒரு மிகப்பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே இத்தேச மக்களின் நலனுக்காக ஆகப்பெரும் வளத்தை உருவாக்க முடியும், விவசாயத்தால் மட்டுமே இதை சாதிக்க முடியாது.  நவீன தொழில்மயத்துக்கு இன்று தேவைப்படுவது மிகப்பரந்த சந்தை. ஒன்றுபட்ட இந்தியாவால் மட்டுமே இத்தகைய ஒரு பரந்த சந்தையை தர முடியும், அதனால் மட்டுமே வறுமையை, வேலையின்மையை, இன்ன பிற சமூக அவலங்களை ஒழிக்க முடியும்; மிகவும் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இத்தேசமும் நிற்க வேண்டும் எனில் மக்களுக்கான பரந்த சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இத்தகைய காரணங்களால் திரு.பால் தாக்கரேக்கு என்னால் இரங்கல் தெரிவிக்க முடியாது.
5) மஹாராஷ்ட்ர மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அசோக் தாவாலே விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம்: சிவசேனா, அதிலிருந்து உருவான மஹாராஸ்ட்ரா நவனிர்மாண் சேனா இரண்டுமே வன்முறைக்கலாச்சாரத்தையும் பிராந்திய வெறியையும் தூண்டுவன;  சி.பி.ஐ.எம் இவற்றை உறுதியாக எதிர்க்கின்றது...சிவசேனாவின் கொள்கையானது மதச்சார்பானது; பாபர் மசூதி இடிப்பை தாக்கரே ஆதரித்தார், அதன் பின் நடந்த மும்பை கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளிலும் சிவசேனை, தாக்கரே ஆகியோரின் பங்கு இருந்ததை ஸ்ரீகிருஸ்ணா கமிசன் தெளிவாக எடுத்துச்சொல்லியது...சிவசேனையின் கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிரானது. தொழிற்சங்கதலைவர்கள், அலுவலகங்கள் சிவசேனையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர்...1970இல் கம்யூனிஸ்ட் எம் எல் ஏ தோழர் க்ருஷ்ண தேசாய் சிவசேனையினரால் கொலை செய்யப்பட்டார் என்பது உச்சகட்டம்...சிவசேனையின் அரசியல் தலித்துக்களுக்கு எதிரானது...1970இல் தலித் பாந்தர் இயக்கத்தின் தலைவரான பகவத் ஜாதவை சிவசேனையினர் கொன்றனர்...சிவசேனை-பாஜக கூட்டணி அரசு ரமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 தலித்துக்கள் உயிர் இழந்தனர்...சிவசேனை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது, சர்வாதிகாரத்தை ஆதரிக்கின்றது. காங்கிரஸின் எமெர்ஜன்சியை பால்தாக்ரே ஆதரித்தார் என்பது வரலாறு; ஹிட்லரின் புகழ் பாடுபவர் அவர்...சிவசேனையை விமர்சிக்கின்ற பத்திரிக்கையாளர்கள்,இலக்கிய கலாச்சாரவாதிகள் மீது அவர்கள் எப்போதும் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள்...சிவசேனையின் மதவெறி,சாதீய,தொழிலாளர் வர்க்கவிரோத கலகக்கொள்கைகளை சிபிஐ எம் எப்போதும் எதிர்த்து நிற்கும்”.

6)இப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்துள்ளார்: ‘தாக்கரேயின் மறைவு மஹாராஷ்ட்ரா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழப்பாகும். இத்தேசத்தின் சாமானியக்குடிமகனின் நலனுக்கு உழைத்த ஒரு மூத்த தலைவரை இத்தேசம் இழந்துள்ளது.
7)பால் தாக்கரேயின் சடலம் தீயூட்டப்பட்ட இடமான சிவாஜி பூங்காவை  தாக்கரே நினைவிடமாக கட்ட வேண்டும் என இப்போது சிவசேனா குரல் எழுப்புகின்றது.  சிவாஜி பூங்கா என்பது ஒரு பொதுமக்களின் விளையாட்டுத்திடல். இத்திடலின் நலனில் அக்கறையுள்ள சுற்றுச்சூழல் நலம்விரும்பிகளின் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரான பாஸ்கர் ஜாதவ் என்பவர் அரசு இதற்கு அனுமதி தரும் என்றும் சொல்லியுள்ளார். ஏற்கனவே இத்திடலின் ஒரு வாசலில் தாக்கரேயின் மனைவி உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சவர்க்காரின் உருவப்படத்தை இத்தேசத்தின் குடியரசுத்தலைவர் திறந்து வைப்பார் எனில், சிவாஜி பூங்காவில் மட்டும் அல்ல, நாடாளுமன்றத்தின் முன்னுள்ள காந்தியடிகளின் சிலையின் இருபுறமும் கோட்சே, பால் தாக்கரே இருவர் சிலைகளும் நிறுவப்படக்கூடும். அச்சிலைகளை இத்தேசத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் திறந்து வைக்கவும் கூடும்.     

  

சனி, அக்டோபர் 13, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் (இறுதிப்பாகம்)


பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.

கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாதுஎன்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்கபொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.

இமாம் எழுந்தார். ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லைஎன்று விம்மியவாறே கூறினார்.


உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும் கூட 
சூரியன் நிலைத்து நிற்பதில்லை, மறையவே செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இவற்றை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.” 


(முற்றும்)

(புகைப்படத்தில் குஷ்வந்த் சிங். (இப்போது  பாகிஸ்தானில் உள்ள ) பஞ்சாபின் ஹதாலி மாவட்டத்தில் சர்கோதா என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பு 1915, பிப்ரவரி 2.  அவரது தந்தை சர் சோபா சிங் அன்றைய காலத்தில் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ் பெற்றவர், வெள்ளையர் காலத்திய டெல்லியில் பல அழகுமிகு கட்டிடங்களை கட்டியவர். குஷ்வந்த் சிங் லாஹூர், டெல்லி,லண்டன் நகரங்களில் படித்தவர். சட்டப்படிப்பில் பார்-அட்-லா படித்தவர். அவரது நாவல்கள்,சிறுகதை தொகுப்புக்கள் முப்பதுக்கும் மேல் இருக்கலாம். சமூகம், மதம், அரசியல், பாலியல்  சார்ந்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவரது வழக்கம்)

திங்கள், அக்டோபர் 08, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 3 (குஷ்வந்த் சிங்)


அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.


மனோமஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.



*******************************************



ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.



சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதேஎன்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.



*****************************************



சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.



பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.



மற்றொருவர் தொடர்ந்தார். ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொல்வதற்கு?



இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. யாரது?” கேட்டது கிராமத்தலைவர். உள்ளேவாங்கஇமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.



சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்



சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.



அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.



விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”



மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.



என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”



வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.



ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.



ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்என்றது ஒரு குரல்.



ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

(தொடரும்...4)



திங்கள், அக்டோபர் 01, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 2 (குஷ்வந்த் சிங்)

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி  இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள சிக்னல்கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கிஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.


ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன்கார்டு இறங்கிஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.



பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறிரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.



பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின்அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள்இறுதியாககிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.



* * *



திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.



கிராமத் தலைவர் யார்?”



பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்



போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.



அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகுமண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க



எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடாஇல்லைநான் சொன்னது காதுல விழலியாபோலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களாவேலை நடக்கட்டும்



* * *



விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின்அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.



* * *



வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால்ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோதுதங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும்குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும்பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...



சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களைவெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.



நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம்மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து கருங்கும்மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.



மரண அமைதியில் மனோமஜ்ரா உறைந்தது. 

(தொடரும் 2)

சனி, செப்டம்பர் 29, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 1 (குஷ்வந்த் சிங்)





(டிரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங். 1956 ல் வெளியிடப்பட்டது. 1947 ல் தேசப்பிரிவினையின் போது, வடக்கிலும் வடமேற்கு எல்லையிலும் சிந்திய குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் பல லட்சம் அவற்றில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற பாகுபாடு ஏதுமில்லை. எல்லைப்புறத்தின் ஒரு கிராமத்தில் தேசப்பிரிவினையின் பின்புலத்தில் நிகழும் கண்ணீர் கசியும் சம்பவங்களே இப்புதினத்தின் மையமாக நிற்பவை. இனி, புதினத்தின் சில பக்கங்களிலிருந்து..)
*****************************************************************
அந்த 1947-ன் கோடைகாலம், இந்தியாவின் வழக்கமானதொரு கோடைகாலமாக இல்லை. பருவநிலை கூட அப்போது வழக்கத்தைவிட உஷ்ணமாகவும், காய்ந்து போயும், புழுதி கிளப்பியபடியுமாக இருந்தது. கோடைகாலம் நீண்டதாகயிருந்தது. மேகங்கள் தென்பட்டன. ஆனால் மழையில்லை. தங்களது பாவங்களுக்காக ஆண்டவன் தண்டித்துக் கொண்டிருப்பதாக ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள்.

தாங்கள் பாவம் செய்துவிட்டதாகப் புலம்புவதற்கு அவர்களிடம் போதிய காரணங்கள் இருந்தன. இந்தக் கோடைக்கு முன்புதான், தேசம் இரண்டு கூறுகளாக இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என பிரிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. விளைவு, கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. ஒருசில மாதங்களிலேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. இந்துக்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக முஸ்லிம்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக இந்துக்கள் கூறினார்கள். இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள், கத்தியால் குத்தினார்கள், வெட்டினார்கள், மோதினார்கள். இரண்டு தரப்புமே சித்திரவதையில் இறங்கினார்கள். இரண்டு தரப்புமே பெண்களைச் சூறையாடினார்கள். கல்கத்தாவிலிருந்து, கலவரம் வடக்கு, கிழக்கு, மேற்காகப் பரவியது. கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்தார்கள். பிஹாரில் முஸ்லிம்களை இந்துக்கள் படுகொலை செய்தார்கள்.

பஞ்சாபிலும் எல்லை மாகாணத்திலும், பெட்டிகளில் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு அவை இந்துக்களால் கொல்லப்பட்ட பிஹார் முஸ்லிம்கள் என்று கூறித் திரிந்தார்கள். பல நூறு வருடங்களாக வடமேற்கு எல்லையில் வசித்து வந்த இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் சொத்துக்களைத் துறந்து, கிழக்கே தங்களது சமூக மக்களைத் தேடி அலைஅலையாய்ப் புறப்பட்டார்கள். கால்நடையாக, மாட்டு வண்டிகளில், லாரிகளில், ரயில்களின் கூரைகளில், ஓரங்களில், அங்கே இங்கே என்று பயணித்தார்கள். தங்களது பயணவழிகளில், தண்ணீர்த் துறைகளில், ரயில் நிலையங்களில், சாலைச் சந்திப்புகளில், அவர்களைப் போலவே கிழக்கு நோக்கிப் பாதுகாப்புத் தேடி சாரைசாரையாகப் பயணிக்கின்ற முஸ்லிம்களை எதிர்கொண்டார்கள். கலவரம் காற்றைப் போல இரைந்து கர்ஜித்தது.

பாகிஸ்தான் என்ற புதியதேசம் முறைப்படி அறிவிக்கப்பட்ட அந்த 1947-ன் கோடையில், முஸ்லிம்களும் இந்துக்களும் சீக்கியர்களுமாக ஒருகோடி பேர் எதிரெதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பருவமழை தொடங்கியபோது, அநேகமாக அவர்களில் பத்துலட்சம் பேர் உயிரிழந்திருந்தார்கள். வட இந்தியா கலவரத்திலும் வன்முறையிலும் அச்சத்திலும் மூழ்கியிருந்தது. பாலைவனச்சோலை போல, எல்லையின் மிக நீண்டதூரத்தில் சிதறிக் கிடக்கின்ற ஓரிரண்டு கிராமங்களில் மட்டுமே அமைதி நிலவியது. மனோமஜ்ராவும் அத்தகைய கிராமங்களில் ஒன்று.

மனோமஜ்ரா சிறிய கிராமம். செங்கல் வீடுகள் மொத்தமே மூன்றுதான். அதில் ஒன்று வட்டிக்குப் பணம்தரும் லாலாராம் லாலின் வீடு. மற்ற இரண்டு, சீக்கிய குருத்வாராவும் முஸ்லிம்களின் மசூதியும்தான். அந்த மூன்று கட்டிடங்களுமே ஒரு முக்கோணத்தை உருவாக்கியிருந்தன. நடுவில் ஒரு அரசமரம். மொத்தம் எழுபது குடும்பங்கள். லாலாராம்லாலின் குடும்பம் மட்டுமே இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில். கிராமத்தின் நிலம் அனைத்தும் சீக்கியர்களிடம் இருந்தன. இஸ்லாமியர்கள் குத்தகைதாரர்களாக இருந்தார்கள். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்த சிலரின் மதமோ என்னவென்றே தெரியவில்லை.

***

மனோமஜ்ராவின் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நிற்பதில்லை. வேகம் குறைந்த பாசஞ்சர் ரயில்கள் இரண்டு மட்டுமே அங்கே நிற்பவை. காலையில் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் ரயிலும், மாலையில் லாகூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயிலும், மனோமஜ்ராவில் ஓரிரண்டு நிமிடங்கள் நின்று செல்பவை. எப்போதுமே அங்கே வரும் வாடிக்கையாளர்என்றால் அவை சரக்கு ரயில்கள் மட்டுமே. மனோமஜ்ராவிற்கு சரக்குகள் வருவதுமில்லை, அங்கிருந்து செல்வதுமில்லை. என்றாலும், ரயில் நிலையத்தில் எப்போதும் சரக்கு வண்டிகளின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். வருகின்ற சரக்கு ரயில்கள் சரக்கு வண்டிகளைக் கழற்றி விடுவதும், இருக்கின்ற வண்டிகளை இணைத்துக் கொண்டு செல்வதுமாக மணிக்கணக்கில் அந்த வேலை நடக்கும். கிராமம் ஆழ்தூக்கத்தில் உறைந்திருக்கும்போது, அந்த மையிருட்டில், எஞ்சின்களின் விசில் சத்தமும், மூச்சிரைக்கும் வேகமும், சரக்குகளின் சத்தமும், வண்டிகளை இணைக்கும் கப்ளிங்குகளின் சத்தமும் காலை வரை தொடரும்.

* * *

அந்த செப்டம்பர் தொடக்கம் முதலே, மனோமஜ்ராவிற்கு ரயில்கள் வரும்நேரம் தாறுமாறாக இருந்தது. ரயில்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை, வழக்கத்துக்கு மாறாக இரவு நேரங்களிலும் ரயில்கள் ஓடுவதைக் கேட்க முடிந்தது. சரக்கு ரயில்கள் ஓடுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஆனால் அடையாளமற்ற ரயில்கள் அர்த்த ராத்திரி முதல் விடிகாலை வரை ஓடத் துவங்கின. மனோமஜ்ராவின் கனவுகள் கலையத் தொடங்கின....


(தொடரும்)

சனி, ஆகஸ்ட் 11, 2012

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே? (2)


ஜப்பானியப் படைக்குவிப்பில் மிகப்பெரியதும் மிகப்பலம் வாய்ந்ததுமான இராணுவப்பிரிவு மஞ்சூரியாவில் குவிக்கப்பட்டிருந்த குவாண்டுங் இராணுவம்தான்.  படைவீரர்கள் மட்டுமே பத்து லட்சத்துக்கும் மேல். இது தவிர ஆயிரக்கணக்கான பீரங்கிகள், டாங்குகள், விமானங்கள்... ஆசியாவில் தங்களது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்படையின் மீதுதான் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.

1945 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற போட்ஸ்டாம் மாநாட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 முதல் சோவியத் யூனியன் ஜப்பானுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கும் என்று பிரகடனம் (ஆகஸ்ட் 8) செய்தது.  “...ஜெர்மனி அனுபவித்ததைப் போன்ற அபாயங்கள், பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும் ஆன வாய்ப்பை ஜப்பானிய மக்களுக்கு அளிக்கவும் வல்ல ஒரே வழி இதுதான் என்று கருதுவதாகஅப்பிரகடனம் கூறியது.

ஆகஸ்ட் 9 அன்று உயர்மட்ட இராணுவ கவுன்சில் கூட்ட்த்தில் ஜப்பானியப்பிரதமர் கண்டாரோ கட்சுகி கூறியது: “இன்று காலையில் சோவியத் யூனியன் போரில் இறங்கியதானது, இனி மேற்கொண்டு நாங்கள் யுத்த்த்தை தொடர முடியாத நம்பிக்கையற்ற சூழலில் எங்களை தள்ளியுள்ளது”.
ஆகஸ்ட் 6 அன்று வீசப்பட்ட அணுகுண்டு பேரழிவுக்குப்பிறகும் ஜப்பான் போரைத் தொடரத்தான் உறுதியாக இருந்தது; நேசநாடுகளுக்கு எதிராக தனது இராணுவத்தை உபயோகப்படுத்துவதில் நம்பிக்கையும் உறுதியும் பூண்டு இருந்தது.  ஆனால் சோவியத்தின் போர்ப்பிரகடனம்தான் ஜப்பானைப் பின்வாங்கி சரணடைய செய்தது.  அவ்வாறானால் அமெரிக்கா அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன? அமெரிக்க அணுகுண்டுதான் நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வந்ததா?
ட்ரூமனும் அவரது இராணுவமும் வகுத்த திட்டம் இதுதான்: போட்ஸ்டாம் மாநாடு நடந்து முடிந்தவுடன் ஜப்பான் மீது ஒரு அணுகுண்டை வெடிப்பது; உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின் மகத்தான பங்கையும், தூரக்கிழக்கு நாடுகளில் சோவியத்தின் பங்கையும் இருட்டடிப்பு செய்வது, சிறுமைப் படுத்துவது; ஆனால் தட்பவெப்ப நிலை அல்லது தொழினுட்பக் காரணங்களால் இது தடைப்படும் எனில் ஜப்பானின் க்வாண்டுங் படைகள்  மீது சோவியத் தாக்குதலைத் தொடங்கும் முன்பாகவே முந்திக்கொண்டு ஜப்பான் மீது அணுகுண்டை வெடிப்பது.

இதற்கு மேலும் சந்தேகம் எழுப்புவோர்க்கு ட்ரூமன் தனது நாட்குறிப்பில் (டைரி) எழுதியதே சரியான சான்று. பெர்லினில் இருந்து (போட்ஸ்டாம் மாநாட்டில் இருந்து) புறப்பட்ட பின்னர் ட்ரூமன் தன் நாட்குறிப்பில் எழுதியது: “போட்ஸ்டாம் மாநாட்டில் நான் கற்றுக்கொண்ட்து என்னவெனில் ஜப்பானியருக்கு எதிரான போரில் அவர்களது (ரஷ்யாவின்) கை ஓங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். அடி கொடுத்தால் மட்டுமே அவர்கள் (ரஷ்யர்கள்) உணர்வார்கள்.

பிரிட்டனின் சர்ச்சில், அமெரிக்காவின் ஐசன்ஹோவர், மேற்கத்திய நாடுகளின் பிரபலப்புள்ளிகள் அனைவருமே ஒரு விசயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள் – அமெரிக்க மக்களைக் காப்பதற்காகவோ நீண்டகாலப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவோ ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படவில்லை. ட்ரூமன் கூறிய பேரழிவு விளைவிக்கும் அந்தப் ‘புதிய ஆயுதத்தை’ (At Potsdam Conference, however, President Truman chose to tell Stalin only that the U.S. possessed "a new weapon of unusual destructive force - http://www.dannen.com/decision/potsdam.htmlகையில் ஏந்திக்கொண்டு முக்கியமாக சோசலிச சோவியத்தையும் உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டவும், தனது ஏகாதிபத்திய எல்லைகளை விரிவுபடுத்தவுமே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஜப்பானிய மக்களின்  விலைமதிப்பற்ற உயிர்கள் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு அறிஞன் மாண்டெஸ்க்யூ, ஒரு ராணுவ சர்வாதிகாரி பற்றி இப்படிக் கூறினான்: அவன் நினைத்துக் கொள்கின்றான், வரலாற்றில் இருந்து அவன் பிரிக்கப்பட முடியாதவன் என்றுஎனவேதான் அவன் எங்கே நின்று விடுகின்றானோ அங்கேயே வரலாறும் முற்றுப்பெற்று விடுவதாக கற்பனையில் மிதக்கின்றான்”.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிட்லரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது முடிவை இறுதியில் அவனேதான் தேடிக்கொண்டான். அமெரிக்காவின் அதிபர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள், தாங்கள் இயங்கும் போது இந்த உலகம் இயங்குவதாகவும், தாங்கள் நின்றுவிடும்போது இந்த உலகமும் நின்றுவிடுவதாகவும். ஹிட்லரின் வரலாற்றை அவர்கள் வாசிக்க வேண்டும்.

(புகைப்படத்தில் சர்ச்சில்,ரூஸ்வெல்ட்,ஜோசப் ஸ்டாலின்) 
(முற்றும்)