சனி, டிசம்பர் 24, 2011

பெத்லஹேமும் வெண்மணியும்


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
போர்க்கொண்ட பூமியில் பூக்காடு தோன்றவே
புகழ்மைந்தன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!
நூற்றாண்டு இருளினை நொடியோடு போக்கிட
ஒளியாகத் தோன்றினானே!
……………………………………………………..
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடம் வாருங்கள், நான் இளைப்பாறுதல் தருவேன்என்று சகமனிதனின் துயரம் சிந்திய கருணைமகன் பிறந்தநாள் இன்று.   ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நானும் வாடினேன்என்று உள்ளம் உருகிய வள்ளலாரைப்போல. சக மனிதனின் துன்பம் கண்டு எவன் கண் கலங்குகின்றானோ அவனே உண்மையான மனிதன், இறை நம்பிக்கையுள்ளவர்கள் அவனை இறைவனின் அவதாரம் என்று கொண்டாடக் கூடும்.

ஆனாலும் என்ன, பெத்லஹேமில் கருணைமகன் பிறந்த அன்றே முளைவிட்ட ஒரு மரம் அறியுமோ ஒரு 33 வருடங்கள் கழிந்தபின்னர் அவனுக்கு தானே சிலுவை மரமாக மாறக் கூடும் என்று அறிந்திருந்தால் அந்த மரம் முளைக்காமலேயே போயிருக்க கூடும்!
தச்சனின் மகனாக மாட்டுத்தொழுவத்தில் தோன்றிய அந்த மகனை, வெறும் மரங்களாய் கிடந்த மானிடரை செதுக்கி சிற்பமாய் வடித்தெடுத்த அந்த நல்மேய்ப்பனை, பிற்பாடு தான் செய்யப்போகும் ஒரு சிலுவையில்தான் ரத்தம் வடிய வடிய ஆணியடித்து சித்திரவதை செய்யப் போகின்றார்கள் என்று அறிந்திருந்தால் அதே ஊரில் பிறந்த இன்னொரு தச்சன் பிறக்காமலேயே இருந்திருக்கவும் கூடும்!
கீழ்த்தஞ்சையில் பிறந்த கொடுமைக்காக நிலப்பிரபுத்துவ சாதீய நெருப்பில் கரைந்து சாம்பலாகும் நாள் வரும் என்று முன்னரே தெரிந்திருந்தால் அந்த 44 உயிர்களும் சாதீயப்பெருவியாதியால் பீடிக்கப்பட்ட இந்த தேசத்தில்  பிறக்காமலேயே இருந்திருக்கவும் கூடும்! 
தஞ்சை. சோழவள நாடு சோறுடைத்து என்றால் வெறும் காவிரி நீர் மட்டுமே காரணமா? எல்லா இடத்திலும்தான் மண் இருக்கின்றது, ஆனால் வெறும் மண்ணில் தம் வியர்வையோடு ரத்தத்தையும் கீழ்வெண்மணியின் விவசாயிகள் ஆண்களோடு பெண்களும் சிந்தி வெறும் மண்ணுக்கு உயிரூட்டி தமிழ்மக்களுக்கு சோறு ஊட்டினார்கள்.
சூரிய உதயத்திற்கு முன்னாலேயே வயலில் இறங்கிடணும், சூரியம் மறஞ்ச பொறவுதான் வெளியே வரணும்”.  தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக் கூடாது என்ற சமூக ஒடுக்குமுறைகள் ஒருபுறம். தங்களுக்கான நியாயமான கூலி வேண்டி விவசாயத்தொழிலாளிகள் நடத்தும் பொருளாதாரப்போராட்டம் மறுபுறம். அங்கே இருந்த அரசியல் கட்சிகள், பிரதானமான திமுக, காங்கிரஸ் உட்பட எல்லோரும் நிலப்பிரபுக்களின் கொல்லைப்புறங்களில் எச்சில்களுக்கு கையேந்தி நின்று கொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி உயர்கின்றது, அரசியல் போராட்டம் வேர் விடுகின்றது. (40 வருடங்களுக்குப் பின்னும் இதைத்தானே உத்தப்புரத்திலும் பார்த்தோம்!). கர்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கிப் பாய்ந்த காவிரி போல் உயர்சாதி வகுப்பில் பிறந்த பி.சீனிவாசராவ் அங்கே விவசாயிகளின் தலைவனாகின்றார், அவர்களோடு உண்டு உறங்கி அவர்களொடு தன்னைக் கரைத்துக் கொள்கின்றார். 
1968 டிசம்பர் 6 அன்றே வெண்மணியில் மிராசுகளின் கூட்டத்தில் கீழ்சாதிக்கூலிக்காரன்களின் குடிசைகளைக் கொளுத்துவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டுகின்றார்கள். இது பற்றி அன்றைய திமுக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.  உச்சக்கட்டமாக டிசம்பர் 25 அன்று நிலப்பிரபுக்கள் சாதிவெறியர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்ற விவசாயியின் குடிசையில் ஓடி ஒளிந்த 44 விவசாய யேசுநாதர்கள் உயிரோடு எரித்து சாம்பல் ஆக்கப்பட்டார்கள்.  20 பெண்கள் (2 கர்ப்பிணிகள்), 19 சிறுவர் சிறுமியர், 5 முதியோர் உட்பட. 25க்கும் மேற்பட்ட குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்ட்து.
வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வேதனை என்னவெனில் வெண்மணிப்படுகொலைக்கு காரணமான கோபாலக்ருஷ்ண நாயுடு உள்ளிட்டோர் மட்டும் இன்றி, பக்கிரி என்ற ரவுடி இறந்தான் என்று சொல்லி கோபால் உள்ளிட்ட 22 விவசாயத்தொழிலாளர் மீதும் வழக்கு போடப்பட்டது!
முதல்குற்றவாளியான கோபாலக்ருஷ்ண நாயுடுவுக்கும் அவரோடு 7 பேருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவசாயத்தொழிலாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தோழர் கோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட்து. தோழர் ராமய்யனுக்கு 5 ஆண்டு, மற்ற 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  அதாவது பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் சிறைத்தண்டனை! மனிதர்களை உயிரோடு கொளுத்திய கொடூரன் ஒருவனுக்குக் கூட ஆயுள்தண்டனை வழங்கப்படவில்லை!  இதுவல்லவோ நீதி!
இறுதியில் என்னதான் நடந்தது? மிராசுதார் கோபாலக்ருஷ்ண நாயுடு உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதி (?) மன்றத்தால் நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்! தோழர் கோபாலோ ஆயுள்தண்டனை உறுதிசெய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்!
உச்சகட்டமாக இவ்வழக்கின் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் சொன்னதுதான் இந்த அரசும் நிர்வாகமும் காவல்துறை நீதிமன்றங்களும் யாருக்கு சேவகம் செய்கின்றன என்பதை உறுதி செய்கின்றது: ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 23 பேருமே மிராசுதாரர்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள், மிகப்பெரிய நில உடைமையாளர்கள், கவுரவம் மிக்க சமூக அந்தஸ்து உடையவர்கள். அவர்கள் இந்தக் குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளை பழி தீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இட்த்திற்கு தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்கு தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது’.
கோபாலக்ருஷ்ண நாயுடுவின் கைக்கொள்ளி சாதீய ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களில் இன்றும் அணையாமல் பற்றி எரிந்துகொண்டேதான் இருக்கின்றது, கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றும் வேலைகளை வேறு யாரும் அல்ல, அரசாங்கமே செய்யும்! தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் உத்தப்புரத்திலும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டியிலும் நடந்தது வேறென்ன? இதற்கு சவாலாக விவசாயிகளின் தொழிலாளிகளின் போராட்ட  நெருப்பின் தகிப்பு வெண்மணியின் பல்மடங்கு உக்கிரத்தோடு ஆக்ரோசமான ஆவேசத்தோடு கனன்று கொண்டேதான் இருக்கின்றது. அன்று ராமையாவின் குடிசையில் நிலப்பிரபுக்கள் பற்ற வைத்த சாதீயத்தீ தன் நாக்குகளால் 44 அப்பாவிகளை எரித்தபோது அவர்களைக் காப்பாற்ற எந்த ஆண்டவனும் வரவில்லை, ஆண்டுகொண்டிருந்தவர்களும் வரவில்லை. மக்கள் ஒற்றுமை என்னும் வலிமையான ஆயுதம் மட்டுமே நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ  அடக்குமுறைகளையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் வெட்டி வீழ்த்தும்.  கேளுங்கள் தரப்படும், தட்டினால் மட்டுமே திறக்கப்படும்.

வெள்ளி, டிசம்பர் 16, 2011

ராட்க்லிஃப் கோடும் முல்லைப்பெரியாறும்


The Radcliffe Line was announced on 17 August 1947 as a boundary demarcation line between India and Pakistan upon the Partition of India. The Radcliffe Line was named after its architect, Sir Cyril Radcliffe, who as chair of the Border Commissions was tasked with equitably dividing 175,000 square miles (450,000 km2) of territory with 88 million people.

1) ஒரே ஒரு கோடுதான் போடப்பட்டது ஒரு ப்ரிட்டிஷ்காரனால்.  அனேகமாக குறைந்தது இருபது லட்சம் பேர் இந்தியர்கள் படுகேவலமாக பட்டினியிலும் படுகொலையிலும் செத்தார்கள், பெண்கள் (எப்போதும்போல்) பாலியல் வன்முறைக்கு பலியானார்கள். இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவரும் இரு(ற)ந்தார்கள். அவர்கள் எல்லோருமே நேற்று வரை அருகருகே வீடுகளில் வசித்து வந்தவர்கள், அண்ணன் தம்பி மாமன் மச்சான் அக்கா தம்பி அம்மா என்று ஒருவரை ஒருவர் அன்பொழுக விளித்துக்கொண்டவர்கள்தான்; வெள்ளைக்காரன் போட்ட கோடு இவர்களை ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொள்ள செய்தது, எந்தப் பக்கத்துவீட்டுப் பெண்களை அக்கா தம்பி அம்மா என்று அழைத்துக் கொண்டார்களோ அதே பெண்களை நடுவீதிகளில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.  400 வருட அந்நியர் ஆட்சியில் அவர்கள் செய்யாத படுகொலைகளை தங்களுக்குள்ளேயே ஒரு சில மாதங்களுக்குள் செய்து கொண்டார்கள், இந்திய தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட இத்தனை லட்சம் பேரின் பிணங்கள் தேவைப்பட்டது.

2)ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் சொல்லியபடி பல பத்தாண்டுகளுக்கு முன்பே கேரளாவில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி தமிழனாக பாதி மலையாளியாக வாழும் குடும்பங்கள் ஏராளம். இதே போல பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி மலையாளியாக பாதி தமிழனாக வாழும் மலையாளி குடும்பங்கள் இங்கே ஏராளம். தத்தமது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரண்டு மாநில அரசுகளுக்கும் உள்ளது.  சென்னையிலும் கோவையிலும் கம்பம் போடி பகுதிகளிலும் மலையாளிகள் நடத்தும் கடைகள் தாக்கப்பட்டுள்ளன. சென்னையில் வாழும் மலையாளிகளின் சமாஜ் தலைவர் தொலைக்காட்சியில் சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகின்றேன்:'நாங்கள் இங்கே பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே குடும்பங்களோடு குடியேறிவிட்டோம். தமிழ்நாடுதான் எங்கள் ஊர். நாங்கள் தமிழ்க்கலாச்சாரத்தையும் மலையாளக்கலாச்சாரத்தையும் ஒரு fusion ஆக ஏற்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருகின்றோம்.'  அவர் சொன்ன வார்த்தைகள் கேரளாவில் பல பத்தாண்டுகளுக்கு முன் குடியேறிவிட்ட தமிழர்களுக்கும் பொருந்தும்தானே! 

ஆனால் தொடர்ந்து கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதலும் தமிழகத்தில் கேரளமக்களின் வணிகத்தலங்கள், ஹோட்டல்கள் மீது தாக்குதலும் அருவருக்கத்தக்க விதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகின்றது. 

3) ஆளும்கட்சியான அ இ அ திமுகவுக்கும் அழிந்துகொண்டிருக்கும் திமுகவுக்கும் உயிர் கொடுக்க முல்லைப்பெரியாறு கை கொடுத்துள்ளது. 'உரிமையாகக் கிடைத்திட வேண்டிய தண்ணீருக்காக உதிரம் சிந்திடும் வன்முறையைத் தவிர்த்து நன்முறை திரும்பிடும் வகையில், இந்தப் பிரச்னையில் அரசுக்கு தி.மு.க. உறுதுணையாக திகழ்ந்திடும் என்ற உறுதியைத் தெரிவிக்கிறேன்' என்கின்றார் ஸ்டாலின். திமுக,அ இ அதிமுக...தமிழ்நாட்டு மக்களின் பணத்தையும் பொதுச்சொத்தையும் சுரண்டித்தின்று கொழுத்த கட்சி அ இ அதிமுக என்றால், பல படி மேலே போய் இந்திய மக்களின் சோற்றை ஒரு பருக்கை விடாமல் நக்கித்தின்ற களவாணிதான் திமுக.  தாமிரபரணி தலித் தமிழ் மக்கள் படுகொலைக்கு (உதிரம் சிந்திடும் வன்முறை) திமுக சொந்தம் கொண்டாடலாம் என்றால் தர்மபுரி தமிழ் மாணவிகள் படுகொலைக்கும் பரமக்குடிக்கு தலித் தமிழ்மக்களின் படுகொலைக்கும் அ இ அதிமுக சொந்தம் கொண்டாடலாம், வாச்சாத்தியில் வனங்களில் நடந்த தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கோ இரண்டு கட்சிகளுமே சொந்தம் கொண்டாடலாம். இந்நிலையில் 2ஜி கேவலத்திலில் இருந்து மக்களை திசைதிருப்ப திமுகவுக்கும், பரமக்குடி, அண்ணா நூலகம் ஆகிய பிரச்னைகளிலி இருந்து திசைதிருப்ப அ இ அதிமுகவுக்கும் ஒரு நல்வாய்ப்பை கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் இரண்டு திருடர்களுக்கும் வழங்கியுள்ளன.  இப்போது இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்காக வருந்தி மூக்கை சிந்துவதாக கண்ணீர் விடுகின்றன.  பொறுப்பற்ற அல்லது தமிழக மக்கள் ஓரங்கட்டிவிட்ட ஒருசில அரசியல் கட்சிகளோ இதுதான் சாக்கு என்று விளம்பரம் தேடும் முயற்சியில் எல்லை மாவட்டங்களில் தமிழ் மக்களை தூண்டிவிட்டு வன்முறையில் இறங்கியுள்ளன; இதை தொலைக்காட்சியில் பார்க்கும் பிற பகுதி மக்கள் தத்தம் பகுதிகளில் மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்குவது தொடர்கதையாகி வருகின்றது.  எந்த மலையாளிகள்? நேற்று வரை நமக்கு தேநீர் வழங்கிய, நமக்கு சாப்பாடு போட்டு தமது குடும்பத்துக்கான வருமானத்தை நம்மிடம் தேடிக்கொண்ட சேட்டன்களின் கடைகளை அங்கே தேநீர் அருந்திய, சாப்பாடு சாப்பிட்ட அதே தமிழர்கள்தான் அடித்து நொறுக்குகின்றார்கள்! ஆளும் கட்சியான அ இ அதிமுகவும் திமுகவும் இன்னபிற தேகா கூகா மூகா காக்கா நாக்கா கட்சிகளும் இது குறித்து உரத்த ஒருமித்த குரலில் அல்லவா கண்டித்திருக்க வேண்டும்! இல்லை! ஆக ஆளும் கட்சியின், பிற கட்சிகளின் இந்த கள்ள மவுனம் வன்முறையாளர்களுக்கு பச்சை விளக்கு காட்டியது போலாக, இதோ, தொலைக்காட்சியை பாருங்கள், தொடரும் வன்முறை, கடைகளை நொறுக்குவது... அணைப்பிரச்னையை சாக்காக வைத்துக்கொண்டு மிக எளிய வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகின்ற சகமனிதனை நொறுக்குவது என்ன நியாயம் என்று புரியவில்லை!  தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு...இதுதானோ? மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ என்ற பாடலைப் பாடியவன் தமிழன் என்றுதான் ஞாபகம். (கேரள அரசும் அங்கு தமிழர்கள் மீதான தாக்குதலில் இதே மெத்தனத்தையும் மவ்னத்தையும்தான் கடைப்பிடிக்கின்றது என்ற நிலைமையை தெரிந்துதான் எழுதுகின்றேன்; அங்கே அவர்களது இழிவான அரசியல்!)

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

கபில்சிபலின் குரலில் ஒளிந்துள்ள காங்கிரசின் கோரமுகம்







இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் ‘மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாக இந்தியாவின் மிகமோசமான குட்டிச்சுவர் ஆட்சியான UPA-IIவின் மாண்புமிகு மந்திரி கபில்சிபல் வருத்தப்பட்டு கண்ணீர்,மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டுள்ளார்.  டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களானட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்கார்ர்களுகே கூட எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம்! கபில்சிபலுக்கும் இந்த அதிர்ச்சி ஏற்பட்டதில் நமக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை – ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு! தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்குப் பின்னால் காந்தி என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டு இந்தக் குடும்பம் செய்கின்ற அட்டூழியம் கொஞ்சநஞ்சம் அல்லவே! இக்குடும்ப ஆட்சியின் நாசங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தும்போதுதான் கருத்துரிமையை, பேச்சுரிமையை அடியோடு புதைக்கின்ற 1975 எமெர்ஜென்சி போன்ற காட்டுமிராண்டி சட்டங்களை காங்கிரஸ் கட்சி தயக்கம், வெட்கம் ஏதும் இன்றி மக்கள் மேல் திணிக்கும்! இப்போது கபில்சிபல் போன்ற நபர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கடுப்பெடுத்துப் புலம்புவது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.

2)  விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரிய முதல் ஊழலை தொடங்கி வைத்த பெருமை கபில்சிபலின் காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு! தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே இந்த புண்ணியகாரியத்தை செய்தார்கள்! 1948இல் காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கினார்கள். தொடர்ந்து முத்கல் வழக்கு (1951), முந்த்ரா வழக்கு (1957), மாளவியா-சிராஜுதீன் ஊழல் (1963), பிரதாப் சிங் கைரோன் (1963), இந்திராகாந்தியின் குரலில் தொலைபேசியில் பேசி லட்சக்கணக்கான ரூபாய்களை அரசு வங்கியில் இருந்து சுருட்டிய நகர்வாலா வழக்கு (1975) (அதாவது இந்திரா காந்தி சொன்னால் வங்கியில் இருந்து  மக்கள் பணத்தை சுருட்டலாம் என்று நிரூபித்த சம்பவம்!), அப்துல் ரஹ்மான் அந்துலே செய்த சிமெண்ட் ஊழல்...என அத்தனையும் நூறு வருட பாரம்பரியம் உள்ள கபில்சிபலின் காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்கள்!  உச்சக்கட்டமாக ஒரே இரவில் அவசரநிலையை அறிவித்து லட்சக்கணக்கான மக்களையும் எதிர்க்கட்சித்தலைவர்களையும் சிறைகளில் தள்ளிக் கொடுமை செய்தது காங்கிரஸ்தான்! ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்ததும்  காங்கிரஸ்தான்! பல்லாயிரக்கணக்கானோர் வீடு திரும்பவில்லை! கோட்டுசூட்டோடு இங்லீசு பேசி திரியும் கபில்சிபல் போன்ற காங்கிரஸ்காரர்கள் இந்திய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய பதில்கள் வண்டி வண்டியாக மிச்சம் உள்ளன! இதுதான் காங்கிரசின் ரத்தம்தோய்ந்த வரலாறு!


3)  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையை பி.வி.நரசிம்மராவ் பெறுகின்றார்! அவரது காங்கிரஸ் ஆட்சிக்கு பெருமை சேர்த்த ஊழல்களை பட்டியல்தான் போட வேண்டும்: ஃப்ரான்ஸ் தேச ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் வாங்கியது (ரூ.2500 கோடி அளவுக்கு), ஹர்ஷத்மேத்தா முக்கியப்புள்ளியாக இருந்த பங்குச்சந்தை ஊழல் (1992), கோல்ட் ஸ்டார் ஸ்டீல்ஸ் அண்ட் அல்லாய்ஸ் (1992), ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், ஹவாலா ஊழல் (ரூ.65 கோடி), யூரியா ஊழல் (1996)...என காங்கிரஸின் மெடல் பட்டியல் நீண்டு நாறுகின்றது!

4)  இவை அன்றி இந்தியாவின் பெயரை உலகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பரப்பிய ஃபேர்ஃபாக்ஸ், HPJ பைப்லைன், HDW நீர்மூழ்கிக்கப்பல், அனைத்திற்கும் மேலாக ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி குடும்பங்கள் முழுமையாக மூழ்கி முத்தெடுத்த போஃபார்ஸ் பீரங்கி ஊழல், போபால் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய மக்களை ஒரே ராத்திரியில் கொன்று குவித்த அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை காசு வாங்கிகொண்டு தப்பிக்க வைத்த சாதனை...என கபில்சிபல்,சிதம்பரம் போன்ற முதலாளிகள் சட்டையில் குத்தி பெருமைப்பட்டுக்கொள்ள காங்கிரஸ் மெடல்கள் ஏராளம்! பல கோடி ரூபாய் ஊழல் செய்து இமெல்டா மார்க்வெஸ் போல தங்கத்தால் தனது வீட்டை அலங்கரித்துக்கொண்ட டெலிஃபோன் மந்திரி சுக்ராம் காங்கிரசை சேர்ந்தவர்தான்! பிற்பாடு இவர் தன் கட்சியில் இருப்பதே பொருத்தம் என பாரதீய ஜனதா கட்சி தனக்குள் சேர்த்துக் கொண்டது! (பாஜகவின் ஊழல் பட்டியல் தனியாக உள்ளது, அதாவது ரேஸில் ரெண்டாவது இடம், தனியே எழுதுவோம்).

5)  இந்த ஊழல் ஓட்டப்பந்தயப் போட்டியில் யார் ஓடினாலும் எப்போதும் முன்னால் வந்து பதக்கத்தை வெல்வது காங்கிரஸ்தான்! காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்! மற்றவர்கள் எல்லாம் வாயில் நுரை தள்ள தரையில் விழ வேண்டியதுதான்! பாருங்கள், இப்போது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஆல்டைம் சாம்பியன் ரூ.176000 கோடி அளவுக்கு 2ஜி ஊழல்! காங்கிரசைத்தவிர யாரால் முடியும்? தொடர்ந்து 3ஜி, காம்ன்வெல்த் விளையாட்டு, மும்பையில் சட்டவிரோதமாக கடற்கரையில் கட்டப்பட்ட பலமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆதர்ஸ் ஊழல்...என காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்!

6) இப்படி கபில்சிபலின் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு, ஒரு சில வருடங்களுக்கு முன்பு அச்சு ஊடகங்களின் பங்கே பிரதானம். ஆனால் கால மாற்றம், தகவல் தொழினுட்ப வளர்ச்சி, இணைய தளம் எல்லாமும் சேர்ந்து கடந்த காலத்தை விடவும் இந்த ஊழல்களை நொடியில் உலகம் பூராவும் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தன, பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி காங்கிரசை சந்தி சிரிக்க வைத்தன என்பது, முதலில் சொன்ன அரபு எழுச்சியின் காரணமாக ஆட்சி மாற்றங்களே நிகழ்ந்தன என்பதும் காங்கிரசுக்கு எரிச்சலையும் எச்சரிக்கையையும் ஒருங்கே வர வைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின்  எரிச்சல்தான் கபில்சிபலின் வாய் வழியே வெளியே வந்துள்ளது என்பதை நாம் மறக்கவேண்டாம்.  முடிந்தால் மீண்டும் ஒரு எமர்ஜென்சியை கொண்டுவரவும் காங்கிரஸ் தயங்காது என்பதை  காங்கிரசின் ரத்தக்கறை படிந்த நீண்ட வரலாறு, குறிப்பாக 1975 வரலாறு நமக்கு சொல்லியுள்ளது. ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வீழ மாட்டேன் மானிடரே!

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!

                        - மகாகவி சுப்பிரமணிய பாரதி

வியாழன், டிசம்பர் 08, 2011

ஒற்றை இருபது ரூபாய் வேண்டி கேரளவீதியில் ஒரு தமிழன்...


1) கொச்சியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று.  குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார்.  வணங்கினார்.  நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம்.  நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார்.  அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன்.  அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார்.  அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார்.  ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என்ற அவரது பணிவான, சாலையில் நடந்து செல்லும் மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடக்கூடாத கவனமான பேச்சிலும், தள்ளி நின்று தரையப் பார்த்தபடி நின்றிருந்த அவர் மனைவியின் வெட்கத்திலும் மானமுடன் வாழ்ந்த ஒரு தமிழ்க்குடும்பம் கட்டிக்காத்து வந்த பெருமை கேரள வீதி ஒன்றில் வீழ்ந்துபட்ட கேவலமும் அவமானமும் தெரிந்தது.  ’ஊரை விட்டு ஓடி விடும் குடும்பங்கள் நடு ராத்திரியில்தான் கிளம்புகின்றன’ என்று எஸ்.ராமக்ருஸ்ணன் சமீபத்தில் பேசியது இப்போது ஞாபகம் வருகின்றது.  தென்காசியில் இருந்து மதுரைக்கு பிழைப்பு தேடி என் சிறு வயதில் புறப்பட்ட என் குடும்பமும் குளிர் நடுங்கும் ஒரு நடு ராத்திரியில்தான் புறப்பட்டது எனக்கு என்றும் மறக்காது. என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது.  ’என் பிள்ளைகளுக்காக’ என்று வைத்த அந்த வேண்டுகோளில் ‘எனக்கும் என் சம்சாரத்துக்கும் நீ ஒண்ணும் தரவேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்வேன்’ என்ற தன்மானம் ஒளிர்ந்து மிளிர்ந்ததை என்னென்று சொல்ல! தவிர கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல!  நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

2) கொச்சியின் அதிகாலை, அந்திமாலைப் பொழுதுகளில் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு ‘நாம் இருப்பது தமிழ்நாடோ?’ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு தமிழ் மக்களின் கூட்டத்தைப் பார்க்க முடியும்.  அத்தனை பேரும் கட்டிடத்தொழிலாளர்கள், ஆண்கள் பெண்கள்.  இவர்களில் சிலர் குடும்பமாக, மற்றவர்கள் நாலைந்து ஆண்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து இருப்பார்கள். கேரளாவில் இத்தகு வேலைகளுக்கும் வீட்டுவேலைகளுக்கும் உள்ளூர் மலையாளிகள் கிடைப்பது அரிதிலும் அரிது, இதுதான் தமிழர்களையும் வங்காள, ஒரிய மக்களையும் கேரளத்தின்பால் தள்ளுகின்றது. இதன்றி பல பத்தாண்டுகளுக்கு முன்பே அங்கே குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி தமிழனாக பாதி மலையாளியாக வாழும் குடும்பங்கள் ஏராளம். கொச்சியின் பிரபலமான அபிராமி குரூப் ஓட்டல், கச்சேரிப்படியில் உள்ள அசோக்பவன் போன்ற ஓட்டல்கள் எல்லாம் தமிழர்களுக்கு உரியவை. கொச்சியின் தெற்குப் பகுதியான தேவார தமிழ்நாடோ என்று ஐயுறும் அளவுக்கு ஒரு சின்ன தமிழ்நாடு! இதே போல பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி மலையாளியாக பாதி தமிழனாக வாழும் மலையாளி குடும்பங்கள் இங்கே ஏராளம். 

3) முல்லைப்பெரியாறு பிரச்னையை கேரள அரசும் கேரள அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் கையாளும் விதம் கண்டனத்துக்கு உரியது.  ஒரே அரசியல் கட்சி ஆயினும் இரண்டு மாநிலங்களிலும் இரண்டு நிலை எடுத்துள்ள கட்சிகளும் உள்ளன. இப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு எல்லை மாவட்டங்களில் சில அமைப்புக்களும் சில கும்பல்களும் வன்முறையில் இறங்கியுள்ளன. தத்தமது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரண்டு மாநில அரசுகளுக்கும் உள்ளது.  சென்னையிலும் கோவையிலும் கம்பம் போடி பகுதிகளிலும் மலையாளிகள் நடத்தும் கடைகள் தாக்கப்பட்டுள்ளன. மலையாளிகள் நடத்தும் கோடிக்கணக்கான பணம் புரளும் நகைக்கடைகள் தாக்கப்பட்டவுடன் தமிழக போலீஸ் துப்பாக்கிக்காவல் போட்டுள்ளது!  இப்போது தமிழ் தேசிய பொதுவுடமைக்கட்சியினர் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை!  ஆனால் அன்றாட வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து தேநீர் குளிர்பானக் கடை நடத்தி ஆவேச தமிழ்ப்பற்றாளர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மலையாளிகளுக்கு ஏற்பட்ட நட்டம் நட்டம்தான்! இப்போது தொலைக்காட்சியில், சென்னையில் ‘நாம் தமிழர்’ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ததாக ஒரு செய்தி வருகின்றது. சென்னையில் வாழும் மலையாளிகளின் சமாஜ் தலைவர் தொலைக்காட்சியில் சொன்னது: 'நாங்கள் இங்கே பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே குடும்பங்களோடு குடியேறிவிட்டோம். தமிழ்நாடுதான் எங்கள் ஊர். நாங்கள் தமிழ்க்கலாச்சாரத்தையும் மலையாளக்கலாச்சாரத்தையும் ஒரு fusion ஆக ஏற்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருகின்றோம்.'  அவர் சொன்ன வார்த்தைகள் கேரளாவில் பல பத்தாண்டுகளுக்கு முன் குடியேறிவிட்ட தமிழர்களுக்கும் பொருந்தும்தானே! 

4) முல்லைப்பெரியாறு பிரச்னை அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அமைதியை விரும்பும் அனைவரும் ஏற்பர். கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதே போல் தமிழகத்தில் கேரள மக்கள் மீதான தாக்குதலையும் கண்டிக்க வேண்டும். இல்லை இல்லை, 'தமிழ்தேசியம்’ ‘நாம் தமிழர்’ என்று ஆவேசப்படுகின்றவர்களிடம் ஒரே ஒரு கேள்வி: அந்த ‘தேசியத்’தில்,  ‘நாமி’ல் கேரள வீதியில் அதிகாலையில் குடும்பத்தோடு நின்றுகொண்டு ஒரு ஒற்றை இருபது ரூபாய்க்காக ஒரு தமிழன் முகத்தை தேடிய திண்டுக்கல்காரரும் அடக்கமா? 

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

அயோத்தியா தீர்ப்பு: ஒரு வரலாற்றறிஞரின் பார்வையில் - ரொமிலா தாப்பர்

(டிசம்பர் 6. சாதீயத்துக்கும் பிராமணீயத்துக்கும் எதிராக அவற்றின் ஆணிவேர் வரை கோடரியை ஆழமாக வீசிய அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள்! எதிர்கால இந்தியா அம்பேத்கரை தவிர்த்து விட்டு வரலாறு பேச முடியாது! வலதுசாரி ஆர் எஸ் எஸ், பாஜக இந்துத்வா சக்திகளுக்கு இது கசப்பாக இருந்தது. கை சும்மா இருக்குமா? கை அரிப்பெடுத்தது, கடப்பாரை தூக்கியது, 400 வருட கால அயோத்தி மசூதியை இடித்தது, ஆக இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதன் பின்னால் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை பின்னுக்கு தள்ளும் மகத்தான தந்திரத்தையும் செய்தார்கள். இடித்தவர்கள் இசட் பிரிவு பாதுகாப்புடன் பத்திரமாக ஊர் சுற்ற, இடி பட்டவர்களோ பொது இடங்களில் போலீசாலும் ராணுவத்தாலும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இந்த நாளில் அவமானப்படுத்தப் படுகின்றார்கள்... அயோத்தி குறித்த அயோக்கியத்தனமான தீர்ப்பு பற்றி மூத்த வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர் எழுதிய கட்டுரை இங்கே...)


அயோத்தியா தீர்ப்பு: ஒரு வரலாற்றறிஞரின் பார்வையில் - ரொமிலா தாப்பர்
(The verdict on Ayodhya: a historian’s perspective - Romila Thapar)
தமிழில்: இக்பால்

[இன்றைய அரசியலை நியாயப்படுத்த கடந்த் காலத்தை மாற்றியமைக்க முடியாது (We cannot change the past to justify the politics of the present)]

இத்தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பு; இத்தகைய ஒரு தீர்ப்பை அரசாங்கமே கூட பல வருடங்களுக்கு முன்னரே கொடுத்திருக்க முடியும்.  நிலம் யாருக்கு சொந்தம், அழிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் புதிதாக ஒரு கோவிலைக் கட்டுவது என்ற இரு விசயங்களின் மீது இத்தீர்ப்பு மையம் கொண்டுள்ளது.  பல்வேறு மத அடையாளங்களும் பாதிக்கின்ற தற்கால அரசியலில் இப்பிரச்னை சிக்கி சுழல்கின்றது. வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதாகவும் சொல்லப்படுகின்றது.  வரலாற்று ஆதாரங்கள் என மேற்கோள் காட்டப்பட்டவை எதுவும் இறுதித்தீர்ப்பில் இடம் பெறவில்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் கடவுள் அல்லது அரைக்கடவுளான மனிதன் ஒருவன் பிறந்தான் என்றும் அந்த இடத்தில்தான் அந்தப் பிறப்பை குறிக்கும் வகையில் ஒரு புதிய கோவிலைக் கட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் சொல்கின்றது. இந்துக்களின் நம்பிக்கை, உணர்வு என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலாகவே இந்த தீர்ப்பு உள்ளது.  இத்தகைய உரிமைகோரலுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு நீதிமன்றத்தில் இருந்து இப்படியான ஒரு தீர்ப்பை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.  இந்துக்கள் ராமர் என்பவரை ஆழ்ந்த உணர்வுடன் கடவுளாக வழிபடுகின்றார்கள் என்பது உண்மையே, ஆனால் இந்த வழிபாடும் நம்பிக்கையும் மட்டுமே ஒரு இடம் இன்னார் பிறந்த இடம்தான் என்று நிரூபிக்கவும், அந்த இடத்தின் மீதான உரிமையை பெறுவதற்கும், அத்தகைய இடத்தை வசப்படுத்த அங்கே இருந்த முக்கியமான வரலாற்று நினைவுசின்னத்தை திட்டமிட்டு அழிப்பதற்கும் ஆன போதிய ஆதாரங்கள் ஆகி விடுமா?

கி.பி.12ஆம் நூற்றாண்டில் அக்குறிப்பிட்ட இடத்தில் கோவில் இருந்தது என்றும் மசூதி கட்டப்படுவதற்காக அக்கோவில் இடிக்கப்பட்டது என்றும் எனவே அதே இடத்தில் புதிய கோவில் கட்டப்படுவற்கான உரிமை உள்ளது என்றும் இத்தீர்ப்பு சொல்கின்றது.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அங்கே தோண்டி செய்த ஆராய்ச்சிகளும் அவற்றின் குறிப்புக்களும் நீதிமன்றத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் இவற்றை தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்றாய்வாளர்களும் கடுமையாக மறுத்துள்ளனர்.  ஆக இவ்விசயம் துறைசார் நிபுணத்துவத்துக்கு உட்பட்டது என்பதாலும் இந்த ஆய்வு, ஆதாரங்கள் ஆகியவற்றின் மீது கருத்து வேறுபாடுகள் இருப்பதாலும், ஆனால் அத்தகைய கருத்துக்களில் ஒன்றை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பின் மீது நம்பிக்கை ஏற்படுவது கடினமே.  ”வரலாற்று ஆதாரங்கள் சார்ந்து நான் தீர்ப்பு சொல்ல முடியாது, ஏனெனில் நான் வரலாற்று அறிஞன் அல்லன்” என்று கூறியுள்ள ஒரு நீதிபதி “வரலாறும் தொல்லியல் ஆய்வும் மட்டுமே வழக்கில் தீர்ப்பு சொல்ல முற்றிலும் போதுமான ஆதாரங்கள் அல்ல” என்றும் கூறியுள்ளார்! ஆயினும் வழக்கின் சிக்கலே ஆதாரங்களின் வரலாற்று உண்மைத்தன்மையும், கடந்த ஆயிரம் வருடங்களில் அங்கே இருந்த கட்டிடங்கள் எவை என்பது பற்றியும்தான்.

ஏறத்தாழ 500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மசூதி, பிற்காலத்தில் நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியான அந்த மசூதி, ஒரு அரசியல் கட்சியின் தலைமை தூண்டிவிட்டதன் பேரில் ஒரு பெரும் கும்பல் திட்டமிட்டு இடித்து தள்ளியது.  ஆனால் வழஙகப்பட்ட தீர்ப்பின் எந்த ஒரு இடத்திலும் இத்தகைய திட்டமிட்ட அழிவு நடவடிக்கையையும் நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்ற குற்ற நடவடிக்கையையும் கண்டிக்க வேண்டும் என்ற குறிப்பை காண முடியவில்லை.  ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்த குறிப்ப்ட்ட இடத்தின் மீது அமைய உள்ள, கட்டப்பட உள்ள அந்தக் கோவிலின் கர்ப்பக் கிருகம் இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில்தான் அமையும்.  ஆனால் தீர்ப்பில் ‘ஏற்கனவே இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு கோவில் இடிக்கப்பட்டது’ கண்டிக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய கோவில் கட்டப்படுவதற்கான நியாயமாகவும் அது போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் 1992ஆம் ஆண்டில் மசூதி இடிக்கப்பட்ட செயல் கண்டிக்கப்படவே இல்லை - அது வழக்குக்கு அப்பாற்பட்ட விசயம் என்பதாக தந்திரமாக முடிவு செய்திருக்க கூடும்.

ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டது:

இத்தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது - தம்மை ஒரு சமூகக்குழுவாக அறிவித்துக் கொண்டுள்ள எந்த ஒரு கூட்டமும் தாம் வணங்குகின்ற ஒரு கடவுள் அல்லது அரைக்கடவுள் பிறந்ததாக நம்புகின்ற எந்த ஒரு இடத்தையும் தமக்கே உரியது என்று உரிமை கோரலாம்.  ஆக எதிர்காலத்தில் சொத்து என்று உரிமை கோரத்தக்க இடங்களிலும், சர்ச்சைகள் உற்பத்தி செய்யப்படக் கூடிய இடங்களிலும் பல ‘ஜன்மஸ்தானங்களை’ பார்க்க முடியும். திட்டமிடப்பட்ட வகையில் வரலாற்று நினைவு சின்னங்கள் இடித்து அழிக்கப்படுவது கண்டிக்கப்படாதபோது, அடுத்தவருடைய கட்டிடங்களை சொத்துக்களை யாராவது அழிப்பதை யார், எது தடுக்கப்போகின்றது?  வழிபாட்டுத்தலங்களின் நிலைமையை மாற்றுவதை தடுக்கும் 1933 சட்டமானது, சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது செயலற்ற ஒன்றாகவே போய் விட்டது.

வரலாற்றில் நடந்த்து நடந்ததுதான், மாற்றி அமைக்க முடியாது.  ஆனால் நடந்தவற்றை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி நாம் கற்றுக்கொள்ள முடியும், நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  இன்றைய அரசியலை நியாயப்படுத்த கடந்த காலத்தை மாற்றி அமைக்க முடியாது.  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்துள்ளது, வரலாற்றின் இடத்தில் வெறும் மதநம்பிக்கையை வைக்க முயல்கின்றது.  இத்தேசத்தின் சட்டமானது நம்பிக்கைகளின், உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல, சான்றுகளின் மீது அமைந்த்து என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறக்கும்போதுதான் உண்மையான தீர்ப்பு வழங்கப்படும்.

(The Hindu, October 2, 2010)
தமிழில்: இக்பால்