புதன், டிசம்பர் 25, 2024

தாழ்திறக்கும் தருணங்கள்

தாழ்திறக்கும் தருணங்கள்,

தமிழிய, இலக்கிய, அரசியல் உரையாடல்கள்,

பாவெல் சூரியன் அவர்கள் பல்வேறு ஆளுமைகளுடன்  நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு,

வெளியீடு போதிவனம், விலை ரூ.260

யானை வழித்தடத்தில் எறும்புகளும் ஊர்ந்து செல்லும் வாழ்க்கைச் சூழலில் யானை மட்டுமே கவனத்திற்கு வரும். யானையின் மொத்த உருவத்தில் ஒரு துளி நுண்ணிய துகள்தான் எறும்பு எனினும் இயற்கைச் சுழற்சியில் எறும்பின் செயல்பாடு கவனத்துக்கு வருவதில்லை. அத்தகையா எறும்புகளைத் தேடிக் கண்டுபிடித்து நம் கண் முன்னே கவனப்படுத்துகிறார் தோழர் பாவெல் சூரியன். வெளிச்சத்தையும் புகழையும் நாடாத எளிய மனிதர்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எத்தகைய அங்கீகாரத்திற்கும் ஏங்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தன் காலத்தில் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, வரும் தலைமுறைக்குத் தூண்டுகோலாக அமைவதாகவும் உள்ளது.

-        - பதிப்பாளர் கே.எஸ்.கருணாபிரசாத், போதிவனம்

...

நேர்காணல், கட்டுரைகள் எனப் பன்னிரெண்டு பதிவுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. எல்லா நேர்காணல்களையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தித் தள்ளினாலும் வாசகர்கள் தாங்களே ஒவ்வொன்றையும் எந்தவித முன்முடிவும் இன்றிப் படித்து, அறிந்து, உணர்ந்துஅனுபவிக்கும் சுகத்திற்கு நான் ஒரு குறுக்கீடாக ஆகிவிடக் கூடாதென்று அந்த உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றேன்.

-         - அணிந்துரையில் கமலாலயன்

நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணல்கள்:

தமிழும் தமிழியும், பூரணச்சந்திர ஜீவா (சௌந்தரசுகன், ஆகஸ்ட் 2003)

தணிகை முதல் தலைநகர்வரை, கவிஞர் க.ச.கலையரசன் (சௌந்தரசுகன், மார்ச் 2004)

ஊரும் பேரும், மரு. தணிகைவேல் (சௌந்தரசுகன்,அக்டோபர் 2004)

தமிழ்வழிக்கல்வி, வெற்றிச்செழியன் (சௌந்தரசுகன், ஜூலை, ஆகஸ்ட், செப்.2009)

இசைபட வாழ்தல், திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் (சௌந்தரசுகன், நவம்பர் 2003)

அதிர்வுகள், கெங்கை குமார் (சௌந்தரசுகன், ஜூன் 2003)

திண்ணை நூலகம், தஞ்சாவூர்க்கவிராயர் (மே 2022)

கைதிகள் கட்டிய சிறைச்சாலை, மு. இக்பால் அகமது (பேசும் புதிய சக்தி, அக்டோபர் 2024)

சாதிகளுக்கு எதிரான சமர், ஆர்.பார்த்தசாரதி

இதழியல் போராளி சுகன்

இயற்கை வாழ்வியல், உ. பாலசுப்ரமணியன் (கல்வெட்டு பேசுகிறது, ஜூன் 2019)

புலியாட்டம், எம்.ஆர்.ராதா (தச்சன், செப்.2007)

… தனக்கான பொருள், புகழ் சேர்க்கும் சுயநலமிகள் பரபரப்பாக இயங்கும் சமூகத்தில், எளிய மனிதர்களின் இருப்புக்காகவும் அவர்களின் வாழ்விற்காகவும் அரசியல், மொழி, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் களமாடுபவர்கள்தான் நம்முடைய ஆளுமைகள். தன்னளவில் வர்த்தக நோக்கம் அற்று, விளம்பரம் மறுத்து வினையாற்றுகின்றவை சீரிய சிற்றிதழ்கள். அப்படியான சிற்றிதழ்கள் வழங்கிய வாய்ப்பின் வழியாகத்தான் இன்று பலரின் பார்வைக்கும் பரந்த வாசிப்புக்கும் இலக்காகி இருக்கின்றன எனது பதிவுகள். என் பணி சிறு துளி, அதைப் பெருவெள்ளமாக்கியவை சிற்றிதழ்கள்தான்.

-         - முகப்புரையில் பாவெல் சூரியன்.

வெளிச்சம் இல்லாத நிலையே இருட்டு என்பான் மகாகவிபாரதி. அங்கேயும் ஓர் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதே இதன் பொருள். அங்கே எந்த விதமான கைமாறும் விளம்பரமும் கருதாது, தளராது இயங்கிக்கொண்டு இருக்கும் அரசியல்க்களச்செயற்பட்டாளர்களையும்  கலைஞர்களையும்  எழுத்தாளர்களையும், தத்தமது தொழில்முறையால் சமூகத்தின் சாமானிய மக்களுடன் எப்போதும் உறவாடிக்கொண்டும் பயன்மிக்க வகையில் புதியவற்றைப் படைத்துக்கொண்டும், சரியாகச் சொன்னால் தமது தனிப்பட்ட பொருளாதார இழப்புக்களையும் புறந்தள்ளி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்ற இந்த மனிதர்களையும் நேரில் சந்தித்து உரையாடி, அவர்களின் களச்செயற்பாட்டின் அடிநாதமாக ஓடும் அரசியல் என்ன என்பதை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ள பாவெல் சூரியன் அவர்களின் பணியும் தன்னலம் அற்றதே. அவற்றை அச்சில் கொண்டுவர எண்ணிய கருணாபிரசாத் அவர்களுக்கு எத்தனை முறை வேண்டும் ஆனாலும் நன்றி சொல்லலாம்.

காவேரி டெல்டாவான நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் பாவெல். திராவிட மாணவர் கழகம், இடதுசாரி இயக்கம் ஆகியவற்றில் இயங்கியவர். தாமரை, சங்கு, சௌந்தர சுகன் ஆகியவற்றில் எழுதியவர். கலை மு.மணிமுடி அவர்களுடைய நெருங்கிய தோழர். கலை இதழின் ஆசிரியர் குழுவில் இயங்கியவர். நீருக்கும் உண்டு நினைவாற்றல், தமிழகத்தின் மேற்கு வங்கம் ஆகிய தொகுப்புக்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு வெளியாகிறது. காலத்தின் உரையாடல் என்ற தொகுப்பை 2009ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

அவரது சகோதரர் தெ.வெற்றிச்செல்வன் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். இவர்களுடன் பிறந்தவர்கள்  மூன்று சகோதரிகள். இவர்களுடைய தந்தையார் பெரியதும்பூர் ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிவைத்து விட்டுப்போன உயிலின் கருவை மையப்படுத்தி மெய்யாக வாழ்ந்த கதை என்ற நூலை வெற்றிச்செல்வன் 2007ஆம் ஆண்டில் எழுதி இருந்தார்.

நேற்று இந்த நூலின் முதல் பிரதிகளில் ஒன்றை எனது வீட்டுக்கு வந்து என்னிடம் அளித்த பாவெல் சூரியன் அவர்களுக்கு நான் எந்த வடிவில் நன்றி சொல்ல என்பது தெரியவில்லை. நூலை என் மகன் சாதத்திடம்  கையளிக்கச் சொன்னேன். அவனும் பெற்றுக் கொண்டான். தொடர் ஓட்டப்பந்தயத்தில் கைக்கோலை தன் முன் காத்திருக்கும் சக ஓட்டக்காரனிடம் கையளிப்பதைப்போல, தீச்சுடரைக் கைமாற்றுவதைப் போல தோழரிடம் இருந்தும் என்னிடம் இருந்தும் அவன் பெற்றுக்கொண்டான். இன்றில்லாமல் போனாலும் தக்க வயதில் அந்தத் தீயின் வெப்பத்தை உணர்ந்து முன் கொண்டு செல்வான். தொடர்ந்து ஓடுவான்.

நன்றி தோழர், பாவெல் சூரியன்!

...

25.12.2024

 

செவ்வாய், டிசம்பர் 24, 2024

திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு

திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு,

ஆசிரியர் கே. செல்வராஜ்,

வெளியீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவள்ளூர் மாவட்டம்

மாவட்டக்கட்சியின் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த நூல், இடதுசாரி இயக்கம் இல்லாத கிராமங்களிலும் ஊர்களிலும், குறிப்பாக ஆலைத்தொழில் வளர்ச்சி பெறாத, ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் சக்தி ஏதும் காணப்படாத விவசாயத்தை மையமாகக் கொண்ட கிராமங்களில் இயக்கத்தைக் கட்டியவர்களின் வரலாறாக விரிகிறது.

நூலை எழுதியவரே இந்த மாவட்டத்தின் கட்சிச் செயலாளராக இருந்துள்ளார் என்பதும் அவரே ஒரு தேர்ந்த வாசிப்பாளர் என்பதும் இந்த வரலாற்றுத் தேடலுக்கு இயல்பாகவே கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி, தொல்லியல் படிவங்கள், சான்றுகள் என்றால் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி, கொடுமணல், சிவகளை ஆகிய ஊர்கள்தான் உடனடியாக நினைவுக்கு வரும். 

1963, 64 ஆம் ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப்படுகை, அத்திரம்பாக்கம் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல் ஆயுதங்கள் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று சொல்கின்றன. பூண்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைப்படிவங்கள் 13 கோடி ஆண்டு வயதானவை. குடியம் குகைகளில் ஆதிமனிதன் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. நூல் இங்கே இருந்து தொடங்குவது சிறப்பு. 

மாநில அரசு இந்த ஊரின் தொல்லியல் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் மத்தியில், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் விளம்பரம் செய்ய வேண்டும். 

பழவேற்காடு உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களைப் பற்றியும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நூலில் நான் குறிப்பாக கவனம் செலுத்திய இடங்களை மட்டுமே இங்கே என் பார்வையில் சொல்லி இருக்கிறேன்.

மஹாத்மா காந்தி கோட்சேயால் கொலை செய்யப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை 5.25 மணி நேரத்தை குறிக்கும் வகையில் திருவள்ளூர் நகரில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சங்கொலி எழுப்ப படுகிறது.

தெலிங்கானாப்புரட்சி நாயகன் பி.சுந்தரய்யா திருவள்ளூர் ரெஸ்லன் உயர்நிலைப்பள்ளியில் 1918, 19 காலத்தில் படித்துள்ளார்.

செவ்வாப்பேட்டை திருவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்.

சென்னை மாவட்டத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட செயலாளர் கே. முத்தையா. 

1964இல் செங்கல்பட்டு மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் கே.எஸ்.பார்த்தசாரதி. அவர்தான் தமிழகத்தில் கைத்தறி நெசவாளர் தொழிற்சங்க இயக்கத்தின் சிற்பி என்பதை சரியாகப் பதிவு செய்துள்ளார் செல்வராஜ்.

ஒன்றுபட்ட சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் செயலாளர் பி.ஆர்.பரமேஸ்வரன். 1968-81 காலகட்டத்தில். சென்னை மாவட்டக் கட்சிச் செயலாளராக அவர் இருந்த காலத்தில் விசேச அரங்கத்தில் நான் கட்சி உறுப்பினர் ஆக இருந்தேன் என்பதை நினைவு கூர்கிறேன். 1946 கப்பற்படை எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை (மொழி பெயர்ப்பு), இந்தியா இந்து இந்துமதம் ஆகிய நூல்களின் ஆசிரியர் அவர். செங்கல்பட்டு மாவட்டம் தனியாக செயல்படும்போது அதன் செயலாளர் டி. லட்சுமணன். த.நா.சிறுபான்மை மக்கள் நலக்குழு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சங்கம் ஆகியவற்றை நிறுவியதில் அவர் பங்கு மகத்தானது.

அவ்வாறு அமைக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டக் கட்சியில் தோழர் என். மருத்துவமணி, ஜி.மணி, காஞ்சிபுரம் சுந்தா, கே.செல்வராஜ் ஆகியோரும் மாவட்டக்குழு உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். எனது வட சென்னைக் கட்சி, த மு எ ச இயக்கப் பணியின்போது தனிப்பட்ட முறையில் மருத்துவமணி அவர்களை நான் அறிவேன். மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பணி செய்து தொழிற்சங்கம் கட்டியவர் அவர். 'ஜீவா- கலாச்சாரத்தின் அரசியல்' என்ற முக்கியமான நூலை அவர் எழுதினார். சுந்தா காஞ்சிபுரம் மாவட்ட த மு எ ச செயலாளர் ஆகவும், மாநிலக்குழு உறுப்பினர் ஆக இருந்தார். காலமாகி விட்டார்.

பொன்னேரி தாலுகாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சைக்கிளில் போக கூடாது, துண்டு, செருப்பு அணியக்கூடாது என ஆதிக்க சாதியினர் அட்டூழியம் செய்த காலத்தில், கட்சி நடத்திய போராட்டத்தில் மூத்த தோழர்கள் ஏ.கே.கோபாலன், மணலி கந்தசாமி பங்கு பெற்ற செய்தி நூலில் உள்ளது. போராட்டத்திற்குப் பிறகு பொய் வழக்கு, பேச்சு வார்த்தை, உடன்பாடு ஆகிய நடவடிக்கைகள் நடந்துள்ளன. வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கூட்டங்களில் பங்கு பெற்றுள்ளனர். சங்கம் அமைத்துப் போராடியதால் இந்தக் கிராமத்திற்கு 1958ஆம் ஆண்டிலேயே முழுமையான மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.

சீமாவரம் கிராமத்தில் ராஜகோபால் நாயுடு என்ற பண்ணையாரின் கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் பதிவாகி உள்ளது.

திருப்பாலைவனம் கிராமத்தில் தலித் மக்கள் நடத்திய போராட்டத்தில் சி.கே.மாணிக்கம், வி.பி.சிந்தன், கே.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சோழவரம் ஒன்றியம் சிறுனியம் கிராமத்தில் பலராம நாயுடு என்ற பண்ணையார் நடத்திய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு கட்டத்தில் தோழர் சாமுவேல் என்பவர் பண்ணையின் கையில் இருந்த சாட்டையைப் பிடுங்கி அவரைத் திருப்பி அடித்த வரலாறு பதிவாகி உள்ளது.

பஞ்சமி நிலம் மீட்புக்கான போராட்டத்தில் 1994இல் நடந்த சாலை மறியலில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் மாண்டுள்ளனர்.

பக்தவத்சலம் முதலமைச்சர் ஆக இருந்த 1963-67 காலத்தில் தலைவிரித்து ஆடிய உணவுப் பஞ்சத்தைக் கட்சி எதிர்கொண்டுள்ளது. அரிசிப் பதுக்கல்காரர்களை எதிர்த்து வலிமையான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  அரிசி ஆலைகள் அதிகம் இருந்த செங்குன்றம் பகுதியிலேயே பஞ்சம் என்பது மக்களிடையே கோபத்தைத் தூண்டி உள்ளது. விளைவாக அரிசி ஏற்றி வந்த லாரிகளை மக்கள் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்ய முயன்றபோது காவல்துறையும் அரசு நிர்வாகமும் தலையிட்டு ஒவ்வோர் அரிசி ஆலையிலும் ஐந்து மூட்டைகளை மக்களுக்குக் கொடுப்பது என்று உடன்பாடு எட்டப்பட்ட வரலாறு உள்ளது. பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.ஹரிபட் ஆகிய தோழர்களும் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டங்கள் யாவும் மகத்தான தஞ்சை மாவட்ட விவசாய இயக்கத்தை நினைவு படுத்துகின்றன என்பதில் மிகையில்லை. திருவள்ளூர் மாவட்ட விவசாய இயக்கத்தின் வரலாறு தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்று என்பதையே இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பதிவுகள் காட்டுகின்றன.

1946ஆம் ஆண்டிலேயே திருவள்ளூர் நகரத்தில் பீடித் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கம் 1978இல் அமைக்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட தென் மாவட்ட வி.ச.வுக்கு என்.மருத்துவமணி செயலாளராக இருந்துள்ளார். கே. செல்வராஜ் வடக்குமாவட்டப் பொருளாளராக இருந்துள்ளார்.

மதுராந்தகம் ஜமீன் எண்டத்தூர் கிராம ஏரியின் சட்ட விரோத கலங்கலை மூன்று கிராம மக்களை திரட்டி 1980இல் உடைத்து எறிந்துள்ளனர். 1914ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த தலைவலி தீர்ந்துள்ளது.

கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி பி.டி.தினகரன் என்பவர் 199 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததும் அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் நூலில் பதிவாகி உள்ளது!

2000ஆவது ஆண்டில் மலைவாழ் மக்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட DYFI செயலாளராக என். மருத்துவமணி இருந்துள்ளார்.

மாணவர் அமைப்பின் ஊத்துக்கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினர் ஆக இருந்த பி.டில்லிபாபு, கட்சியின் வழிகாட்டுதலுக்கு இணங்க 1988ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டக் கட்சிப்பணிக்குச் சென்றார். தர்மபுரி மாவட்டக் கட்சிச் செயலாளரகவும் ஆனார். 2006, 2011 ஆகிய இரண்டு தேர்தல்களில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

2019ஆம் ஆண்டு பொன்னேரியில் நடந்த சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டில் எஸ்.எம்.அனீப், அப்சல் அகமது, ராபர்ட் எபினேசர் ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

மாவட்டத்தின் நீண்ட கால இயக்க வரலாற்றில் ஏ.கே.கோபாலன், எம்.ஆர்.வெங்கட் ராமன், பி.ராம மூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், வி.பி.சிந்தன், பால தண்டாயுதம், ஹரிபட், என். சங்கரய்யா உள்ளிட்ட மூத்த தோழர்கள் பல போராட்டங்களில் நேரடியாகக் களம் கண்டுள்ளனர்.

நூலாசிரியரே சொல்வது போல் நூலில் விடுபட்டுள்ள கீழ்க்காணும் விவரங்களை அடுத்த பதிப்பில் சேர்த்து வளப்படுத்த வேண்டும்.

ஆவடியில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியமான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அடக்கிய தொழில் மையங்கள் ஆகும். 

1962 சீனப்போருக்குப் பின்னர்தான் டேங்க் ஃபேக்டரி எனப்படும் கனரக வாகன தொழிற்சாலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து டேங்க் ஆராய்ச்சிக்கென சி.வி.ஆர்.டி.ஈ. எனப்படும் ஆய்வு-வளர்ச்சி நிறுவனமும் அருகில் நிறுவப்பட்டது. இந்தியாவில் கனரக டேங்க் ஆராய்ச்சி நிறுவனம் இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் டேங்க் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலையும் நிறுவப்பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட பழமையான ஆர்ட்னன்ஸ் டிப்போ, விமானப்படை தளம், 8 பேஸ் ரிப்பேர் டிப்போ, விமானப்படையின் 23 எக்விப்மென்ட் டிப்பொ, சென்ட்ரல் வெஹிக்கிள் டிப்போ, கபற்படை வயர்லெஸ் ஸ்டேஷன் ஆகிய தலையாய பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் ஆவடியில்தான் உள்ளன. இடதுசாரிகளின் தலைமையில் ஆன அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனத்துடன் (All India Defence Employees Federation) இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தி உள்ளன. வி.பி.சிந்தன் வழிகாட்டலில் எழுபதுகளில் டேங்க் ஃபேக்டரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பாதுகாப்புத்துறை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பதாகும்.

டேங்க் ஃபேக்டரி ஊழியர் ஆன தோழர் மணி திருவள்ளூர் நகர கட்சிக்கிளையில் உறுப்பினராக இருந்தார் என்பது நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே தொழிற்சாலையில் கட்சியில் இயங்கிய மூத்த தோழர் சு.பால்சாமி (இப்போது வட சென்னை சி.ஐ.டி.யு.வின் நிர்வாகிகளில் ஒருவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையின் பல சங்கங்களில் பொறுப்பில் உள்ளார்) பணியில் இருந்தபோதே பொத்தூர் பம்மது குளம் கிராமத்தில் விவசாயிகளுக்குப் பாத்தியப்பட்ட நில ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தமிழக அரசின் இரண்டு போலீஸ் பட்டாலியன், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஆகியன ஆவடியில்தான் அமைந்துள்ளன. 

சென்னை வானொலியின் ஒலிபரப்பு கோபுரம் ஆவடி திருமுல்லைவாயிலில்தான் உள்ளது. 

அண்ணனூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே ஆராய்ச்சி சோதனைச்சாலை ஒன்றும் உள்ளது.

ஒன்றிய அரசின் ஊழியர்கள் பல்லாயிரம் பேர் வாழும் நகரம் ஆன ஆவடியில் பல மாநில மக்களையும் எந்த இடத்திலும் எப்போதும் காண முடியும் என்பதால் ஆவடி ஒரு குட்டி இந்தியா ஆகும்.

ஆவடி டியுப் ப்ராட்க்ட் ஆஃப் இந்தியா, திருநின்றவூர் டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆகியவை பழைய தொழிற்சாலைகள். 

சில நாட்கள் முன்பு பட்டாபிராமில் 21 தளங்கள் கொண்ட டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது. சதர்ன் ஸ்ட்ரக்சுரல் லிமிடெட் என்ற மாநில அரசின் பழமையான புகழ்பெற்ற கனரக பொறியியல் பொதுத்துறை நிறுவனத்தை இடித்து தள்ளிவிட்டு அதனிடத்தில்தான் டைடல் பார்க் நிறுவப்பட்டுள்ளது என்பதையும் தள்ளி விட முடியாது. எஸ்.எஸ்.எல். என்று சுருக்கமாக அறியப்பட்ட அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் ப. சிதம்பரமும் துணைத்தலைவராக மைதிலி சிவராமன் அவர்களும் பொறுப்பில் இருந்துள்ளார்கள்.

ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் அமைந்துள்ள சத்யமூர்த்தி நகருக்கான பெயர்க்காரணம் உள்ளது. காங்கிரஸ் கட்சி சோசலிசம் பேசிய ஆவடி காங்கிரஸ் மாநாடு இந்த நகரில் நடந்ததால் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியின் பெயரால் அப்பகுதி அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன், திருமழிசையில் உத்தராதி என்னும் வைஷ்ணவ மடத்தில் தாமோதராச்சாரி என்ற பெயரில் தங்கி இருந்துள்ளார் என்பதும் வரலாறு.

சென்னை சைதாப்பேட்டை, பழவந்தாங்கல் பகுதிகளில் டபுள்யு.ஆர்.வரதராஜன்,வை.கிருஷ்ணசாமி, சு.பொ.அகத்தியலிங்கம், சு.பொ.நாராயணன் போன்ற மூத்த தோழர்களுடன் இணைந்து கட்சிப்பணி செய்த டிவிஎஸ் தொழிலாளியான தோழர் உத்தண்டராமன் திருவள்ளூர் மாவட்டத்தின் தமுஎச செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தோழர் ஆன அவர் இப்போதும் செவ்வாப்பேட்டையில் வசிக்கிறார்.

நூலைச் செப்பனிட்ட தோழர் கமலாலயன் இதே திருவள்ளூர் மாவட்டத்தின் அறிவொளி ஒருங்கிணைப்பாளராக இருபது வருடங்களுக்கும் மேல் திறம்பட செயல்பட்டவர். அறிவியல் இயக்கத்திலும் செயலாற்றியவர்.

புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் என்ற ராஜகோபால குலசேகரனின் சொந்த ஊர் கீழானூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.சேகர் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்மிக்க இசையமைப்பாளர்.

மூத்த தோழர் கே.செல்வராஜ் குறுகிய கால அவகாசத்தில் இந்த வரலாற்று நூலை எழுதியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நெருக்கடியையும் மீறி ஒரு மாவட்டத்தின் வரலாறு, அதன் இடதுசாரி இயக்க வரலாறு ஆகியவற்றை தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அவருடைய உழைப்பைப் பாராட்ட வேண்டும். கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சிதான் நிகழ்காலம். தன்னலம் அற்று தம்மை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட மூத்த தோழர்களின் வரலாற்றைப் பயில்வதன் மூலமே இன்றைய ஊழியர்கள் தமது செயற்பாடுகளை செம்மைப் படுத்தி முன்னேற முடியும்.  ஏனெனில் இடதுசாரிகளின் வரலாறு எப்போதுமே தனி நபர்களின் வரலாறாக இருந்தது இல்லை, அவை இயக்கத்தின் வரலாறு.

-        ...

23.12.2024

 

 

 

 

 

 

 

 

 


வெள்ளி, நவம்பர் 29, 2024

மதுரை தியாகி விஸ்வநாத தாஸ்

முப்பது ஆண்டுகள் நாடக வாழ்க்கையில் 29 முறை பிரிட்டிஷ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர்.

நாடக மேடையிலேயே உயிரை நீத்தவர். பாடுவதற்கு மைக் இல்லாத காலம் அது. எனவே கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவருக்கும் பேசுவதும் பாடுவ்தும் கேட்கும் வகையில் உரத்த குரலில் ஓங்கிப்பாட வேண்டும். ஹார்மோனியம் வாசிப்பவர் ஐந்து கட்டை சுருதியில் பாட வேண்டும்.

தனது முப்பது வருட நாடக வாழ்க்கையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, சின்னமனூர், மேலூர் என தமிழ்நாட்டின் பல ஊர்களிலும், சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நாடகம் நடத்தியவர் விஸ்வநாததாஸ்.

சிவகாசியில் சுப்பிரமணியம், ஞானம்மாள் தம்பதியர்க்கு இரண்டாவதுமகனாகப் பிறந்தவர் விஸ்வநாத தாஸ். மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த குடும்பம். இசை, நெசவு, மருத்துவம் ஆகியவற்றில் தேர்ந்தவர் சுப்பிரமணியம். ஞானம்மாள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர். விஸ்வநாத தாஸ், இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என ஆறு மக்கள் இவர்களுக்கு.

அம்மாவின் ஊரான திருமங்கலத்தில் தாத்தாவுடன் வசித்து வந்த விஸ்வநாத தாஸ், பக்கத்தில் உள்ள கோவிலில் சனிக்கிழமை தோறும் தாசரதிகள் காலில் சலங்கை கட்டி சப்ளாக்கட்டை, மேளம் அடித்து குதித்து ஆடும் திருப்பெயர் சரவெடிப் பாடலை தவறாமல் கேட்டும் பார்த்தும் வர, ஒரு கட்டத்தில் தாசரதிகள் வராத நாட்களில் விஸ்வநாத தாஸ் சலங்கை கட்டி பாடி ஆடத்தொடங்கி உள்ளார்.

சிவகாசிக்கு வந்த இடத்தில் இவரது கூத்து, நாடகம் என்று கவனம் போக, பெற்றோர் கண்டித்துள்ளனர். தோல் மண்டி உரிமையாளர் தொந்தியப்ப நாடார் என்பவர் விஸ்வநாத தாசிடம் இருந்த திறமைகளை கண்டு அவருக்கு முறையான வழிகளில் பாடவும் நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து தெருக்கூத்துகளில் பாடவும் சிறிய வேடங்களில் நடிக்கவும் செய்த தாஸ், நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்துள்ளார். சில நாடக குழுக்களில் பெண்களும் நடித்து வந்துள்ளனர். மகன் கெட்டுப்போவான் என்று நினைத்த தந்தையார் விஸ்வநாத தாஸ்க்கு தூத்துக்குடியை சேர்ந்த சண்முகத்தாய் என்பவரை மணம் முடித்து வைத்தார்.

1911ஆம் ஆண்டு காந்தியடிகள் தூத்துக்குடிக்கு வந்த்போது அவர் பேசிய மேடையில் விஸ்வநாத தாஸ் பாட, காந்தி மனமகிழ்ந்து அவரைப் பாராட்டியதுடன் அவரது திறமையை தேச விடுதலைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எனவே ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான பாடல்களை புராண நாடகங்களின் இடையே பாட மக்களும் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்து வரவேற்று உள்ளனர். அரிச்சந்திரன், வள்ளி திருமணம், கோவலன், நல்ல தங்காள் ஆகிய நாடகங்கள் மிகுந்த புகழ் பெற்றவை. அந்த சந்திப்புக்கு பின் கதர் ஆடைகளை அணியத் தொடங்கினார்.

கொக்குப்பறக்குதடி பாப்பா – நீயும்

கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா

கொக்கென்றால் கொக்கு அது நம்மைக்

கொல்ல வந்த கொக்கு

எக்காளம் போட்டு நாளும் இங்கே

ஏய்த்துப்பிழைக்குதடி பாப்பா

வர்த்தகம் செய்ய வந்த கொக்கு –நமது

வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு

என்ற வள்ளித்திருமணம் நாடகப்பாடல் யாரை குறிவைத்து பாடப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்வார்கள். அவரது நாடகம் எனில் போலீஸ் அங்கே இருக்கும். ‘விஸ்வநாத தாஸ் இனி ஆங்கிலேயர்களை தாக்கியோ விடுதலை பற்றியோ எந்தப் பாடலையும் பாடக் கூடாது’ என தடை விதித்தது ஆங்கிலேய அரசு. தடை மீறி அவர் பாடுவதும் கைது ஆகி அபராதம் கட்டுவதும் சிறை செல்வதும் தண்டனை மீண்டு மறுபடியும் தடை மீறுவதும் அவரது வாழ்க்கை ஆனது. ஒருநாள் நாடகம் நடித்தால் ஆறு மாதம் சிறை வாசம் என்று அவர் வாழ்க்கை தியாகம் நிரம்பிய ஒன்றானது.

திருநெல்வேலியில் அவர் மீது ராஜதுரோக வழக்கு நடந்தபோது மாவட்ட நீதிபதி முன் விஸ்வநாத தாஸ்க்காக வழக்காடியவர் வ.உ.சிதம்பரம் அவர்கள் என்பதும் வரலாறு. சென்னையில் ஒற்றைவாடை அரங்கில் கோவலன் வேடத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்தபோது முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த ஒருவர் மேடையிலேயே அந்நிய தயாரிப்பில் ஆன ஆடையை தீ வைத்து எரித்த சம்பவமும் நடந்தது. அவருக்கு தனது கதர் ஆடை துணிகளை வழங்க, காத்திருந்த போலீஸ் அவரை கைது செய்தது.

 

கதர்க்கொடி தோணுதே, கரும்புத்தோட்டத்திலே, போலீஸ் புலிக்கூட்டம் நம் மீது போட்டு வருது கண்ணோட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்த பஞ்சாப் படுகொலை பாரில்கொடிது, தேசாபிமானிகளே உண்மைத் தெய்வீக ஞானிகளே, கெருவ மிகுந்த நீலன் (அன்றைய கொடுங்கோலன் ஆன கவர்னர் நீலன்), தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவாருண்டோ? மண்ணில் ஏங்குவார் உண்டோ? ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவை.

 

விஸ்வநாத தாஸ் சிறையில் அடைக்கப்படும்போது அவரது மூத்த மகன் சுப்பிரமணியதாஸ் மேடைகளில் பாடுவார். இப்படி ஒரு மேடையில் பாடும்போது கைது செய்யப்பட்ட சுப்பிரமணிய தாசை விசாரித்த நீதிபதி இது வரை பாடியதற்காக மன்னிப்பு கேட்டு, இனிமேல் விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடுவதில்லை என்று எழுதி கொடுத்தால் விடுதலை செய்வதாக சொன்னார்.

 

அப்போதுதான் சுப்பிரமணியத்துக்கு திருமணம் ஆகி இருந்தது. நீதிபதி விதித்த நிபந்தனையை கடலூர் சிறையில் இருந்த தந்தை விஸ்வநாத தாஸ்க்கு ஒருவர் மூலம் சொல்லி அனுப்பினார். ‘மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுப்பதை விடவும் சிறையிலேயே செத்து மடி’ என்று தந்தை பதில் சொன்னார். சுப்பிரமணியத்டுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.

 

வறுமை நிலையில் குடும்பத்தின் சொத்து அனைத்தும் இழந்த நிலையில் 1940ஆம் ஆண்டு திருமங்கலத்தில் இருந்த வீடும் ஜப்தி செய்யப்படும் நிலை வந்தது.

சென்னையில் ஐந்து நாடகங்கள் நடத்த அழைப்பு வந்ததால் அந்த நாடகங்களின் மூலம் வரும் வருவாயில் வீட்டை மீட்டு விடலாம் என்று எண்ணி விஸ்வநாத தாஸ் சென்னைக்கு வந்தார்.

அப்போது சென்னை கவர்னராக இருந்த எர்ஸ்கின், விஸ்வநாத தாஸ்க்கு ஒரு தூது அனுப்பினார். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதர்வாக நாடகம் நடத்தினால் விஸ்வநாத தாசின் கடன் அனைத்தையும் அடைத்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவி பணம் தருவதாக தகவல் சொன்னார். ‘ஆங்கிலேயனின் பணம் எனக்கு அற்பமானது’ என்று துச்சமாக மறுத்தார் விஸ்வநாத தாஸ்.

அவரது வீடு 2500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

சென்னையில் ராயல் தியேட்டரில் ஐந்து நாடகங்கள் நடத்த திட்டம் இட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவினால் முதல் மூன்று நாடகங்களில் நடிக்க இயலாமல் போனது. 1940 டிசம்பர் 31ஆம் நாள் வள்ளித்திருமணம் நாடகம் தொடங்கியது. மிக அற்புதமான மயில் ஆசனத்தில் பொலிவுமிகு தோற்றத்தில் அவர் அமர்ந்து இருக்கும் முதல் காட்சிக்காக திரை உயர்ந்தது. மாயா பிரபஞ்சத்திலே என்ற பல்லவியை விஸ்வநாத தாஸ் பாடத் தொடங்கினார். மக்கள் ஆரவாரம் செய்ய, கூட்டத்திலிருந்த போலீசோ அவர் அடுத்து என்ன பாடுவாரென்று கூர்மையாக கவனித்தது. ஆனால் தொடர்ந்து பாடமுடியாமல் சரிந்த விஸ்வநாத தாஸ், ஹார்மோனியம் இசைத்துக் கொண்டு இருந்த தம்பி சண்முகதாசின் மடியில் உயிர் இயக்கத்தை நிறுத்தினார். அதே மயில்வாகனத்தில் அவரது இறுதி ஊர்வலம் 1941 ஜனவரி முதல் நாள் அன்று நடந்தது. சென்னை மூலக்கொத்தளத்தில் மகன் சுப்பிரமணியன் அவரது சிதைக்கு தீ மூட்டினார்.

 

தொடக்க காலத்தில் விஸ்வநாத தாசுடன் மேடையில் நடிக்க நடிகைகள் மறுத்துள்ளனர். காரணம் சாதிதான். ஆனால் பிராமண குலத்தில் பிறந்த முத்துலட்சுமி அம்மையார் அவருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர்தான் எஸ்.ஆர்.கமலம், திருச்சி காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, மதுரை கே.பி.ஜானகி ஆகியோர் அவருடன் இணைந்து நடித்தார்கள்.

வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் என்ற நூலில் காணப்படும் அரிய தகவல்கள் இவை. நூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் மு.செல்லப்பன், தூத்துக்குடியை சேர்ந்தவர். தியாகி விஸ்வநாத தாஸ் நற்பணி மன்றம் சார்பில் 1996ஆம் ஆண்டு கோவில்பட்டியை அ.சாரதா என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூல்வெளியிடப்பட்ட பின் திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீட்டை கலைஞர் மு. கருணாநிதி தன் ஆட்சிக்காலத்தில் நினைவு சின்னமாக அறிவித்தார். இதற்கான நீண்ட போராட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு தகவல், கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆன கே.பி.ஜானகி, தன் நகைகளை விற்று விஸ்வநாத தாஸ்க்கு கொடுத்து நாடகம் நடத்த உதவி செய்துள்ளார். மட்டுமின்றி மதுரை மேலமாசி வீதியில் தனக்கு சொந்தமாக இருந்த வீட்டை கம்யுனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்காக ஜானகி விற்றார்.

...

29.11.2024

 

செவ்வாய், நவம்பர் 26, 2024

காலத்தின் ரேகை படிந்த சைக்கிள்கள்

காலத்தின் ரேகை படிந்த சைக்கிள்கள்


அநேகமாக எல்லா வீடுகளிலும் 
ஒரு சைக்கிள் துருப்பிடித்து மூலையில் கிடக்கிறது,
கேட்பார் அற்று

வீட்டின் தலைவனுக்குத் தெரியும், 
அது யாருடைய சைக்கிள் என்று

அப்பா இறந்த நாளில் அது வீட்டின் சுவர் ஓரம் இருந்தது
எப்போதும் போல்,
முதல் நாள் வரை அப்பாவால் துடைக்கப்பட்டு மின்னிய பளபளப்புடன்

அது ஒரு சம்பிரதாயமான அன்றாட சடங்கு போல் 
அப்பாவின் காலைக்காரியங்களில் ஒன்று

அதுவே ஞாயிறு எனில் 
நீண்ட மூக்குடைய எண்ணெய் கேனின் கட்டளையில் 
சக்கரங்களும் பற்சக்கரங்களும் 
முந்தைய ஆறு நாட்களின் கரகரப்பையும் அலுப்பையும் 
கரைத்துக்கீழே தள்ளும்

கல்யாணத்துக்கு முன்பே 
தான் கம்பெனியில் வாங்கிய முதல் போனசில் வாங்கியதாக 
அப்பா சொல்வார்

பச்சைவிளக்கு பார்க்க 
கேரியரில் உட்கார்ந்து சென்றபோது 
சக்கரத்தில் சேலை சிக்கிய கதையை அம்மா சொல்லுவாள், 
ஜன்னலைப்பார்த்து திரும்பி நின்று புன்னகைத்தபடி

மகன் படித்து வேலையில் சேர்ந்த பின்
வாங்கிய பைக்கை அவர் ஒருபோதும் தொட்டதில்லை,
'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா '

பஞ்சாயத்து ஆபீஸ்,
மின்சார ஆபீஸ்,
ரேசன் கடை
மீன் மார்கெட்
அடுத்த தெரு நண்பர்களுடன் அரட்டை ... 
எங்கேயும் எப்போதும் சைக்கிள் பயணம்தான்,
சுய சம்பாத்தியத்தில் வாங்கிய பெருமை 
அவர் முகத்தில் தெரியும்

மகன் கார் வாங்கினான்,
பைக்கும் பேரப்பிள்ளைகளின் ஸ்கூட்டரும் இடத்தை அடைக்க
முன்னே நின்ற சைக்கிள் 
சுவர் ஓரம் போனது
...

அப்பா ஒருநாள் காலையில் கண்விழிக்காமல் போய் சேர்ந்தார்

சுவர் ஓரம் இருந்த சைக்கிள் 
சில நாட்களில் வீட்டின் கொல்லைக்கு இடம் பெயர்ந்தது

தன் மேல் விழுந்த மழை வெயில் எல்லாவற்றையும் தாங்கியபடி அங்கேயே நின்று துருப்பிடிக்கத் தொடங்கியது

ஹாண்டில் பாரிலும்
பெடல்களிலும் 
காலத்தின் ரேகைகள் படிந்து கிடந்தன,
தேயாமல்.
...

சிவரஞ்சனி

சிவரஞ்சனி


பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம்...

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

நலந்தானா நலந்தானா

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு ஏனோ அவசரம் 

ஹிந்தியில் baharon phool barsao படம் சூரஜ்

Jane Kahan Gaye woh din, படம் mera naam joker

Dil ke jha rokhe mein, படம் பிரம்மச்சாரி

Mere Naina sawan badho, படம் mehbooba

இவை யாவும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள்.

இந்த ராகம் பெரும்பாலும் சோக உணர்வை வெளிபடுத்த தக்க கனமான ஒரு ராகம் என்பது மேற்கண்ட பாடல்களை கேட்டாலே உணர முடியும்.

குறிப்பாக மேரா நாம் ஜோக்கர் படத்தின் ஜானே Kahan Gaye, பிரமசாரியில் Dil ke jharokhe mein... ஆகிய இரண்டு பாடல்களிலும் வயலின் இசை தூக்கலாக இருந்து பாடலின் உணர்வை இன்னும் ஆழத்துக்கு கொண்டு செல்கிறது.
...

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்னவென்றால் ஐம்பது, அறுபதுகளில் ஹிந்தியில் இருந்து மெட்டுக்களை இங்கே இறக்குமதி செய்வார்கள்.
ஆனால் சூரஜ் படம் வந்தது 1966, மல்லிகா படம் வந்தது 1957. மல்லிகாவின் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு... மெட்டு அப்படியே baharon phool barsao பாடலில் ஒலிக்கும். தமிழில் டி ஆர் பாப்பா இசையமைத்து இருந்தார். ஹிந்தியில் சங்கர் ஜெய்கிஷன். தமிழில் அது காதலர் இருவர் சோக மழை பொழிந்து பாட, ஹிந்தியில் அது காதலியை காதலன் வர்ணிக்கும் பாடலாக உள்ளது. என்னவோ போங்க. 
...

Mehbooba படத்தின் போஸ்டர் மதுரையில் நான் செல்லூரில் இருந்து ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளிக்கூடம் போகும் வழியெங்கும் ஒட்டப் பட்டு இருக்கும். அது ஒரு நீண்ட சுவர். சினிமா போஸ்டர் ஒட்ட என்று நேர்ந்து விட்ட சுவர் போல இருக்கும்.

ராஜேஷ் கன்னா கிட்டார் மீட்டி mere Naina sawan badho என்று பாட ஹேமமாலினி தொலைவில் அய்யோ போச்சே...என...

இதே பாடலை அதிகாலை நேரம் சுபுஹ்ஹுக்கு பின்னே அண்ணல் நபிகள் வரும் போது என்ன செய்தாள் ஒரு மாது என்று நாகூர் ஹனிபா பாடி ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
...

அலோக் கட்டாரே என்று ஹிந்தியில் ஒரு மேடை பாடகர் இருக்கிறார். யூடியூப் பில் நண்பர்கள் பார்த்து இருக்க கூடும். இந்த குழுவில் ஒரு விசேஷம், பாடல்களை அப்படியே பாடிவிட்டு போக மாட்டார்கள். Improvise பண்ணுவார்கள். Mere Naina sawan badho பாடலுக்கு முன் சிவரஞ்சனி ராகத்தில் புல்லாங்குழல் lead இரண்டு நிமிடங்கள் தருவார் பாருங்கள்.

சரி, என்ன ஆச்சுன்னு கேக்குறீங்க. 1989இல் ஆவடியில் மாஸ்டர் சுரேந்திரன் என்பவரிடம் வயலின் கற்றுக்கொண்டேன், அதாவது எல் கே ஜி level. அவர் ஶ்ரீவில்லிபுத்தூர் காரர். தி நகர் அழைத்து சென்று எனக்கு வயலின் வாங்கி கொடுத்தார். அப்போது 650 ரூபாய். வைத்திருக்கிறேன். 

சரிகமபதநிச பாடச் சொன்னார். மாய மாளவ கௌள. பாடினேன், சாரீரம் நல்லா இருக்கேன்னார். ஒரே குஷி. தொடர்ந்து வகுப்புகளுக்கு போகவில்லை. தெலுங்கு கீர்த்தனைகள் மனதில் ஒட்டவில்லை. எனக்குள் இருந்த தமிழ் வாசகனும் எழுத்தாளனும் தள்ளி நின்று பார்த்தார்கள். நின்று விட்டேன்.
ஆவடி நேரு பஜாரில் இருந்த அந்த இசைப்பள்ளியும் இப்போது இல்லை. நடனம், வீணை, வாய்ப்பாட்டு என்று எல்லாமும் இருந்தது. நடனம் கற்று தர என்று மலையாளி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் கொச்சியில் இருந்து வந்தார் என்றால் பாருங்கள்.
...

வசந்தமாளிகையில் கலைமகள் கைப்பொருளே, குயில் பாட்டு வந்ததிங்கே ஆகியவையும் சிவரஞ்சனிதான்.

ஞாயிறு, நவம்பர் 17, 2024

பங்களாதேஷ் அரசியல் குழப்பமும் பின்னணியும் (செப்டம்பர் 2024)

1971 விடுதலைப் போரில் (பாகிஸ்தானிடமிருந்து) பங்கு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படும் என அவாமி லீக் கட்சியின் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்தார். வங்கத்தின் தந்தை என்று மக்களால் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசீனா. இதனை எதிர்த்து 2018இல் மாணவர்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அந்த இடஒதுக்கீட்டை அவரே ரத்துசெய்தார். பங்களாதேஷ் உயர்நீதிமன்றம் மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து விழுக்காடாகக் குறைத்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் பங்களாதேஷ் மக்களும் இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

மிகப்பெரிய கலவரங்கள், துப்பாக்கிச்சூடு, பல நூறு மாணவர்களின் மரணம், தொடர்ந்த அரசியல் குழப்பம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகங்களும் நடைபெற்ற கலவரங்களுக்கும் ஹசீனா வெளியேறியதற்கும் இடஒதுக்கீடு மட்டுமே காரணம் என்பதாக செய்திகளைப் பரப்புகின்றன. இது உண்மையா?

கடந்தகாலம் அமைதி நிரம்பிய ஒன்றா

1971 விடுதலைப் போருக்கு முன் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகத்தான் வங்கதேசம் இருந்தது. இருபகுதி அல்லது இரு நாட்டு மக்களும் இஸ்லாமியர் என்றாலும் மேற்கே உருது மொழியும் கிழக்கே வங்கமொழியும் பேசும் விசித்திரமான யதார்த்தம் நிலவியது. வங்காள மொழியைத் தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுத்ததைக் கண்டித்து 1952இல் மாணவர்  போராட்டம் வெடித்தது. தொடர்ந்த இருபது வருடங்களும் போராட்டங்களால் நிரம்பிய காலமே. 1952 போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முதலில் பலியானவர்கள் மாணவர்கள்தான்.

1972-இல் பாகிஸ்தானிலிருந்து விடுபட்டு பங்களாதேஷ் சுதந்திர நாடானது. 1975 ஆகஸ்ட் 15 அன்று அன்றைய ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். 1983 இல் தன்னை ராணுவ சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்ட ஹுசேன் முகமது எர்ஷத்தின் கீழ் நான்கு பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1982-இல் எர்ஷத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. 1971 போரில் பாகிஸ்தானுடன் ஒத்துழைத்த துரோகிகளுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும் என்று கோரி 2013 இல் ஒரு போராட்டம் வெடித்தது. அதிக வரிவிதிப்பை எதிர்த்து 2015-லும்

சாலைப்போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று கோரி 2018 இலும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பிடத்தக்கவிதமாக பாகிஸ்தானுடன் ஒத்துழைத்தவர்கள் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

 2024 இல் நடந்த போராட்டங்கள் 'பாகுபாட்டுக்கு எதிரான மாணவர்கள் (Students Against Discrimination -SAD) என்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட்டன. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியும் இந்த அணியின் பின்னால் இல்லை என்று கூறப்பட்டதால் ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த அமைப்பின் கீழ் திரண்டார்கள். தொடக்கத்தில் மாணவர்களின் போராட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகி இருந்தாலும் சூழ்நிலையின் கட்டாயத்தால் பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் மாணவர்களின் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டதால் போராட்டத்தின் வீச்சு பலமானது.

முன்னர் கூறிய இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் கூடவோ குறையவோ கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. ஆனால் 2008, 2013 ஆம் ஆண்டு போராட்டங்கள் மிக வலுவானவை. 2018 இல் மொத்த இட ஒதுக்கீடு 56 விழுக்காடாக இருந்தது. இதில் விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 விழுக்காடு, பெண்களுக்கு 10 விழுக்காடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 விழுக்காடு, உடல் ஊனமுற்றோருக்கு ஒரு விழுக்காடு, குறிப்பிட்ட சில மாவட்ட மக்களுககு பத்து விழுக்காடு, மீதம் உள்ள 44 விழுக்காடு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு என இருந்தது. இதன் உட்பொருள் என்னவெனில் சாமான்ய உழைக்கும் மக்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றாலும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும் என்பதுதான். முக்கியமாக, அன்றைய விடுதலைப் போரில் முஜிபுர் ரஹ்மானின் (அல்லது இன்றைய ஷேக் ஹசீனாவின்) கட்சிக்காரர்கள் பெரும்பங்கு வகித்தார்கள் என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கப் போகிறவர்கள் ஹசீனாவின் அவாமிலீக் கட்சிக்காரர்கள்தான் என்பது போராட்டக் காரர்களின் வாதம். மேலும் மொத்த மக்கள் தொகையில் அவ்வாறான விடுதலைப்போர் வீரர்களின் வாரிசுகளின் எண்ணிக்கை 0.12 இல் இருந்து 0.20 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்பதும் இவர்களின் கணக்கு. சிறுபான்மை மக்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் ஆன இட ஒதுக்கீடு எப்போதும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.

உயர்நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் 93 விழுக்காடு இடங்களை நிரப்பவும், 5 விழுக்காடு இடங்களை மட்டுமே விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஐம்பது வருடங்களில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வழங்கிக் கொண்டே போவதானது இந்த ஒதுக்கீட்டின் பலனை தவறாகப் பயன்படுத்துவதற்கும் தகுதியில்லாதோர் ஏமாற்றி பயன்படுத்துவற்கும் இட்டுச் செல்லும். குறிப்பாக ஹசீனாவின் கட்சிக்காரர்கள் இதனை அனுபவிப்பதற்கான வழி என்று மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினார்கள். 2018 போராட்டங்களைத் தொடர்ந்து அரசுப்பணிகளில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் ஹசீனா ரத்துச் செய்ய அதுவும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. மாணவர்கள் கோரிக்கை இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான், ஒழிக்க வேண்டும் என்பது அல்லவே!

ஹசீனா அரசின் அடக்குமுறை

பங்களாதேஷ் விவசாயிகள் சம்மேளனம் ஆன பங்களாதேஷ் க்ரிஷோக் ஃபெடரேஷன் தனது இணையத்தளத்தில் (www.krishok.org) 8.8.2024 இல் பதிவிட்டுள்ள தகவல் இது. 2024 போராட்டங்கள் பல்கலைக்கழகங்களில்தான் வெடித்தன. மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக ஹசீனா அரசு போலீசையும் ராணுவத்தையும் ஏவி தாக்குதல் நடத்தியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும். பல்லாயிரம் மாணவர்கள் கண் பார்வையை அல்லது உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.

மட்டுமின்றி, "விடுதலைப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை எனில் 'ரசாக்கர்'களின் பேரக் குழந்தைகளுக்கா கொடுப்பது?" என்று ஹசீனா தொலைக்காட்சியில் வெறுப்புரை ஆற்றி மாணவர்களின் கோபக்கனலில் எண்ணெயை ஊற்றினார். 1971 போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்த துரோகிகளைத்தான் அந்நாட்டு மக்கள் 'ரசாக்கர்' என்று இழிவாக அழைக்கிறார்கள். 'ரசாக்கரா? யார்? நான் யார்? நீ யார்? நீ தான் சர்வாதிகாரி!" என்று மாணவர்கள் பதில் முழக்கங்களை எழுப்பினார்கள். ஹசீனாவின் கட்சி அமைச்சர் ஒருவர்

தொலைக்காட்சியில் தோன்றி போராட்டக்காரர்களை "அடக்குமாறு" தனதுகட்சி மாணவர் பிரிவைத் தூண்டிவிட்டபின் போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் பரவின. ராணுவமும் எல்லைக் காவல் படையும் களத்தில் இறங்கி 'கண்டவுடன் சுடும்உத்தரவைப் பின்பற்றினர்.

ஜுலை 15 அன்று டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆறு மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். பேகம் ரொக்கியா பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர் அபு சையத்தை ரங்க்பூரில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றனர்.

.நா. அமைதிப்படை பயன்படுத்தும் கவச வாகனங்களையும் ஹெலிகாப்டர்களையும் போராட்டக்காரர்களை ஒடுக்க ஹசீனா அரசு பயன்படுத்தியதாக .நா. பிரதிநிதி ஒருவர் அதிகாரப்பூர்வமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

2024 போராட்டங்களின் தொடக்கப் புள்ளிகள் இதுபோன்ற நிகழ்வுகள் தான். ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவை நோக்கி ஓடிவந்த அன்றும் 39 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

தேர்தல் முறைகேடுகளும் ஊழலும் அடக்குமுறையும்

சுமார் இருபதுவருட குழப்பம் மிகுந்த, ஆட்சிக் கவிழ்ப்புகள், சதிவலைகள் நிரம்பிய அரசியல் சூழலுக்குப்பின் 1996 ஜூன் மாதம் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த ஹசீனா பிரதமர் ஆனார். அன்றைய சூழ்நிலையில் அவர் ஜனநாயகத்தின் காவலராகப் பார்க்கப்பட்டதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் 2001 தேர்தலில் அவர் கட்சி தோல்வியுற்றது. அதற்கு அடுத்த எட்டு வருட காலத்தில் ஐந்து வருடம் பங்களாதேஷ் தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா பிரதமராக இருந்தார். 2009 இல் நடந்த தேர்தலில் ஹசீனா மீண்டும் பதவிக்கு வந்தார். 2024 ஆகஸ்டு மாதம் வரை சுமார் 15 வருடங்கள் பிரதமராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தில்லுமுல்லுகள் செய்தும் வாக்காளர்களை மிரட்டியுமே அவரால்வெற்றிபெற முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் வலுவாகக் குற்றம் சாட்டின. உண்மையில் 2014, 2024 தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஹசீனா 'பெரும்பான்மை' பெற்றதில் வியப்பில்லை. இந்தக் காலத்தில்தான் அரசு நிர்வாகம், நீதித்துறை, ராணுவம், நிதி நிர்வாகம் என அனைத்து மட்டங்களிலும் சீர்கேடுகளும் லஞ்ச ஊழலும் பெருகின. அதிர்ச்சியளிக்கும் விதமாக, தனது பிரதமர் இல்லத்தில் இருந்த கடைநிலை ஊழியர் ஒருவரே 34 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 285 கோடி ரூபாய், இந்திய நாணய மதிப்பில்) அளவுக்கு முறைகேடாக சம்பாதித்ததாக ஹசீனாவே ஒத்துக் கொண்டார்.

நாட்டின் 21 தென் மாவட்டங்களை தலைநகர் டாக்காவுடன் இணைக்கும் பத்மா பாலம் கட்ட உலக வங்கி 870 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுத்திருந்தது. இதில் அரசு அதிகாரிகள் பயங்கர ஊழல் செய்வதாக உலக வங்கியே (!) குற்றம் சாட்டி கடன் தொகையை ரத்து செய்தது. இது முகமது யூனுஸ் செய்த சதி, ஹில்லாரி கிளிண்டனுடன் கூட்டுச் சேர்ந்து யூனுஸ் உலக வங்கியை நிர்ப்பந்தம் செய்து கடனை ரத்துச் செய்தார் என்று ஹசீனா குற்றம் சாட்டினார். ஆனால் 260 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் அதே பாலத்தை ஹசீனா கட்டினார். அதாவது உலக வங்கி மதிப்பீட்டைப் போல மூன்று மடங்கு செலவில்!

பங்களாதேஷ் மத்திய வங்கியில் இருந்து 8.10 கோடி அமெரிக்க டாலர் பணம் திருட்டுப் போனது.

2018 இல் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம் (Digital Security Act, 2018) என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அரசை விமர்சிப்பவர்கள், இணைய தளத்தில் எழுதுபவர்கள், பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் என சகல தரப்பினரையும் ஒழித்துக்கட்டினார் ஹசீனா. யாரையும் எப்போதும் கைது செய்யலாம் என்பதுடன் விதவிதமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. குற்றம் சாட்டப்படுவோரின் தொலைபேசி, கணினிகள் உள்ளிட்ட சாதனங்களை அரசு கைப்பற்றலாம். இவ்வாறு பல நூறு பேர் காணாமற் போனார்கள். ப்ளாக் எனப்படும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடினார்கள். ஏறத்தாழ இருநூறு இணையதளங்களை 'அரசுக்கு எதிரான அவதூறு பரப்புவதாகச் சொல்லி ஹசீனா அரசு மூடியது. 2017 ஆம் ஆண்டு மியான்மரில் சிறுபான்மை இல்லாமியர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 10 லட்சம் ரோஹிங்க்ஞா இஸ்லாமியர் பங்களாதேஷுக்குள் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே ஒரு நல்ல விசயம் மட்டும் ஹசீனா ஆட்சியில் நடந்தது. ஆனால் இந்த மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றித் தனியே எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவின் அக்கறை என்ன?

இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையில் நாட்டைத் தனது இடுக்கிப்பிடியில்தான் ஹசீனா வைத்திருந்தார். இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் பங்களாதேஷில் பல நுறு கோடி டாலர் மதிப்புக்கு தொழில் முதலீட்டைச் செய்துள்ளன. எனவே ஹசீனா அரசை ஆதரித்தன. மேற்கத்திய உலகம், அமெரிக்கா உட்பட 'தீவிரவாதத்துக்கு' எதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவைத் தயங்காமல் அளித்தவர் ஹசீனா. இத்தனை எதிர்மறையான அடையாளங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் தன்னை ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்ள அவர் எப்போதும் வெட்கப்பட்டதே இல்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் தன் நாட்டுக்குள் இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்):

 2009-10 : 3202.10

10-11: 4560

11-12: 4743

12-13: 4776

13-14: 6034

14-15: 5816

15-16: 5452

16-17: 6400

17-18: 8400

18-19: 9400

மின்சாரம், கட்டுமானம், சாலைப்போக்குவரத்துக் கட்டுமானம், நீர்வழிப்போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்புக் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், விவசாயம்சார் தொழில்கள், உணவுப்பதனம், சுற்றுலா. குளிர்பதனக் கிடங்கு, மருந்துக் கிடங்கு, மருந்து தயாரிப்பு, ஆயத்த ஆடைத் தொழில், கப்பல் கட்டுமானம், இவற்றுடன் கல்விகள் தொழில்களிலும் இந்திய முதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனம் பங்களாதேஷில் கொட்டிக் கிடக்கிறது என்ற உண்மையின் பின்னணியில் இந்திய அரசு தனது அண்டை நாட்டில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை ஏன் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது, ஹசீனா தப்பிக்கவும் திரிபுராவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும் ஏன் அனுமதித்தது போன்ற கேள்விகளுக்கு எளிதில் விடை காண முடியும்.

அம்பானி, அதானி, டாடா,  டாபர், கோத்ரெஜ், ஆதித்ய பிர்லா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், சன் ஃபார்மா, விஜபி, சியாட் டயர்ஸ், ஏர்டெல், ஆதித்ய பிர்லா சிமெண்ட் என இந்தியப் பெருமுதலாளிகளின் முதலீடு பங்களாதேஷில் இடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இரண்டு முக்கியமான நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோரின் முதலீட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உண்டு எனில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹசீனாவை இந்திய அரசு ஆதரித்ததிலும் பாதுகாத்ததிலும் வியப்பில்லை.

அமெரிக்காவின் ஆகப்பெரிய முதலீடும் பங்களாதேஷில் உள்ளது. 2023 ஜூன் கணக்கின்படி 395 கோடி அமெரிக்க டாலர் நேரடி மூலதனம் அங்கே உள்ளது. அதேபோல் 230 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு அமெரிக்கா பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 830 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள  பொருட்களை பங்களாதேஷ் தனது நாட்டுக்குள் இறக்குமதி செய்துள்ளது.

சர்வதேச அரசியல் உறவு

வங்காள விரிகுடாவின் வடக்குக் கரையில் அமைந்த அந்த நாடு இந்தியாவுடனும் சீனாவுடனும் கொண்டுள்ள அரசியல், வணிக உறவுகளின் ஏற்ற இறக்கம் தெற்காசியப் பிரதேசத்தில் நிலவும் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கக் கூடியவை. மேலும் உலகில் இஸ்லாமியர் அதிகம் உள்ள நாடுகளில் நான்காவது நாடு, உலக மக்கள் தொகையில் எட்டாவது நாடு பங்களாதேஷ் என்பதும் அமெரிக்காவின் கவனத்துக்குக் காரணம் ஆனவை.

இந்துமாக்கடல் பரப்பில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் அமைந்துள்ள சீனாவின் ராணுவத்தளம், வங்காள விரிகுடாவில் இருந்து அந்தமான் கடல் வரை பரந்த நீர்ப்பரப்பில் இருக்கும் சீனக் கப்பல்களின் எண்ணிக்கை, பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் நிறுவப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளத்துக்கும் போர்க்கப்பல் தளத்துக்கும் கட்டுமானத்தில் சீனா செய்துள்ள பெரும் உதவி, 2016 இல் சீனாவிடமிருந்து 20.50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வாங்கியுள்ள இரண்டு நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியன அமெரிக்காவின் கவனத்தில் எப்போதும் உள்ளன. மட்டுமின்றி மாலத்தீவுடன் சீனா செய்துள்ள ராணுவ உடன்படிக்கை, இலங்கைக்கும் நேபாளத்துக்கும் ராணுவ அதிகாரிகளை சீனா அனுப்பியது என ராணுவம் சார்ந்த பலவித அசைவுகளும் இந்தியாவின், அமெரிக்காவின் கவனத்தில் உள்ளன.

ஆர்.எஸ்.எஸ்.சின் பொய்ப் பிரச்சாரமும் உண்மை நிலையும்:

அங்கே நிலவும் அரசியல் குழப்பத்தில் இந்தியாவில் உள்ள வலதுசாரி இந்துத்துவா ஆர்எஸ்எஸ் அமைப்பு மீன்பிடிக்க முயல்கிறது. பெரும்பான்மை சமூக மக்கள் இஸ்லாமியர்கள் என்ற பின்னணியில், பங்களாதேஷில் சிறுபான்மை இந்துமத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்துமத மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து இந்திய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன.

உண்மை நிலவரம் என்ன?

'பங்களாதேஷ் தேசிய ஹிந்து மகா கூட்டணி' (பங்களாதேஷ் ஜாதியோ ஹிந்து மஹா ஜோட்) (Bangladesh National Hindu Grand Alliance) என்ற வலதுசாரி இந்து அமைப்பு 2006 இல் தொடங்கப்பட்டது. இதில் 23 ஹிந்து அமைப்புக்கள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆன கோவிந்தோ சந்திர பிரமாணிக் என்பவர் இந்தியாவில் இயங்கும் ஆர்எஸ்எஸ்சின் உறுப்பினர் என்பதுடன் விஸ்வ இந்து பரிஷத்தின் பங்களாதேஷ் தலைவரும் ஆவார். ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்புடைய இந்த பை  வலது சாரி இந்துத்துவா அமைப்பு 353 வேத பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளது. ஈடிவி பாரத்துக்கு பிரமாணிக் அளித்த காணொளி செவ்வியில் (10.8.2024) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"பங்களாதேஷில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக சிறுபான்மை இந்துமத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சம் அடைந்ததற்கு மாறாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஜமாத்--இஸ்லாமியும் கலீதாஜியாவின் பங்களாதேஷ் தேசியக்கட்சியும் இந்துக்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனுமதிக்கக் கூடாது, கோவில்களைப் பாதுகாக்க வேண்டும், கொள்ளைகளை அனுமதிக்கக் கூடாது' எனத் தமது கட்சியினருக்கு கறாராக அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறே இந்துமத மக்களுக்கும் கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இந்துக்கள்மீதும் இஸ்லாமியர்கள் மீதும் கூட தாக்குதல்கள் நடந்தன. இவை இதுபோன்ற நேரங்களில் சமூக விரோதிகள் வழக்கமாக செய்கின்ற வன்முறைகள்தான். இந்தியாவில் ஊடகங்கள் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடப்பதாக செய்தி பரப்புவது உண்மைக்கு மாறானது" என்று கூறுகின்றார். அவரே தொடர்ந்து, "1971-க்குப் பிறகு ஏறத்தாழ 4.5 கோடி இந்துக்கள் இங்கே இருந்து இந்தியாவுக்குள் சென்று விட்டார்கள், இது தொடர்ந்து நடக்கின்ற ஒன்ற; கடந்த ஆறு வருடங்களில் பங்களாதேஷில் இந்துமத மக்களின் எண்ணிக்கை 2.8 விழுக்காடு குறைந்துள்ளதுஎன்று கூறுகிறார்.

இதுதான் உண்மை நிலை. இங்கே இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்கள் ஒருபுறம் பொய்ச்செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க, பொறுப்பாகப் பேச வேண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அவ்வாறு இந்தியாவுக்குள் வருவோரை "ஊடுருவல் செய்யும் கரையான்கள்" என்று இழிவாகப் பேசினார். பிரதமர் மோடி எப்போதும்போல் மவுனமாக இருக்கிறார்.

கடந்த பதினைந்து ஆண்டுகால சர்வாதிகார ஹசீனா ஆட்சிக்கு 2014 முதல் மோடி அரசு கொடுத்து வரும் கண்மூடித்தனமான ஆதரவைக் கண்டு பங்களாதேஷ் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள் என்பதுதான் யதார்த்தம். அண்டை நாட்டுடன் ஆன உறவின் எல்லை, எல்லைக்கு அப்பால் இருந்து  தஞ்சம் தேடி இந்தியாவுக்குள் வரும் மக்களை எவ்வாறு நடத்துவது போன்றவற்றில் புரிதலோ அரசியல் முதிர்ச்சியோ இந்தியப் பிரதமருக்கும் அவரது சகாக்களுக்கும் இல்லை என்பது தெளிவு.

பங்களாதேஷின் பிரபல யூடியுபரும் பல லட்சம் முகநூல் வாசகர்களைக் கொண்டவருமான பினாகி பட்டாச்சார்யா இப்போது பிரான்சில் தஞ்சம் புகுந்து வாழ்கிறார். அரசைத் தீவிரமாக விமர்சனம் செய்து வந்த பினாகியை ராணுவம் தனது விசாரணைக்கு அழைத்தபோது எச்சரிக்கை அடைந்து தப்பித்து ஓடி விட்டார். பினாகியும் அவரது நண்பர்களும் இணைந்து "இந்தியாவே வெளியேறு!” என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள். "எமது இயக்கம் இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல. சர்வாதிகார ஹசீனாவுக்கு இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய அரசும் கொடுத்து வரும் ஆதரவுக்கு எதிராக பங்களாதேஷ் மக்கள் தொடுக்கும் தீவிரமான அரசியல் போர்தான். எமது தாய்நாட்டின் சுயாதிபத்தியத்தை, மரியாதையை மீட்டெடுக்கவே நாங்கள் தொடுத்துள்ள போர் இதுஎன்கிறார் பினாகி. வழக்கம்போலவே இந்தியாவின் 'கோடி மீடியா’க்கள் பினாகி மீதும் அவதூறுகளையும் பொய்க் குற்றச்சாட்டுக்களையும் சுமத்திப் பிரச்சாரம் செய்கின்றன.

இடதுசாரிகளின் நிலை

1950, 60களில் பங்களாதேஷின் இடதுசாரிக் கட்சிகள் சொல்லத்தக்க அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இடதுசாரிக் கட்சிகள் உள்ளன என்று பொருள். 1952 "மொழி இயக்கம்”,1969 "மக்கள் கிளர்ச்சிஆகியவை இடதுசாரிகளின் செல்வாக்கை உயர்த்தின. விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில் இடதுசாரிகளின் செல்வாக்கு இருந்தது. 1971 விடுதலைப் போரில் இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாகப் பங்கேற்றன. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது சில இடதுசாரிக் கட்சிகள் ஆளும் அரசுக்கு ஆதரவாகவும் மற்றவை எதிராகவும் இருந்த பிரிவினை நிலை தொடர்ந்து இருந்துள்ளது. குறிப்பாக 1972 முதல் 75 வரையான காலகட்டத்தில் அரசுடன் சில இடதுசாரிக் கட்சிகளும் இருந்த நிலையில், அரசுக்கு எதிரான நிலை எடுத்த இடதுசாரிக் கட்சிகளின் பல்லாயிரம் ஊழியர்கள் அரசால் படுகொலை செய்யப்பட்ட வரலாறும் உள்ளது.

பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சி 2024 ஜுன் 6 அன்று, ஊழலை ஒழிப்பது, அரசியல் மாற்றம் ஆகிய   முழக்கங்களை முன்வைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இப்போதைய நிலையில் இடதுசாரிக்கட்சிகள் மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லாத கட்சிகளாகவே நீடிக்கின்றன. கடந்த கால அனுபவங்களின் வெளிச்சத்தில் தமது நிலையை, நடைமுறை வியூகங்களை, கொள்கை நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இடத்தில்தான் பங்களாதேஷின் இடதுசாரிக் கட்சிகளும் இயக்கங்களும் இருக்கின்றன.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு

முகமது யூனுஸ் தலைமையில் அவருடன் பதினாறு பேர் கொண்ட அமைச்சரவை தற்காலிக அரசை அமைத்துள்ளது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு மக்களிடையே நுண்கடன் திட்டத்தை அறிமுகம் செய்து பிரபலமாகி அதன் தொடர்ச்சியாகவே நோபல் விருதை வென்றவர் யூனுஸ்.

"போதிய அளவுக்கு நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் தேர்தல் கமிசன் நிர்வாகத்திலும் முக்கியத் துறைகளிலும் சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பின், நியாயமான பாரபட்சமற்ற மக்கள் அனைவரும் பங்கு பெறும் தேர்தலை நடத்தத் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்கிறார் யூனுஸ்.

ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் காணாமற்போன பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரைத் தேடிக் கண்டுபிடிக்க வழி செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் யூனுஸ் கையெழுத்து இட்டுள்ளார். சீரழிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த சர்வதேச நிதியம் (.எம்.எஃப்), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து 800 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு யூனுஸ் கடன் கேட்டிருப்பதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' எழுதுகிறது.

இவை அவர் மீதான நேர்மறையான தோற்றத்தை உருவாக்குபவை எனினும் அவர் மீதான விமர்சனங்களும் உள்ளன.

'ஏழை எளிய மக்களின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் அரசு சாரா அமைப்புக்களுடன் (என்.ஜி.) தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் அவர் ஆர்வம் காட்டுபவர்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள்" என்றும் சில இடதுசாரி அமைப்புக்கள் யூனுஸ் மீது குற்றம் சாட்டுகின்றன.

பங்களாதேஷின் அரசியல் நிலவரங்களை அமெரிக்க உயர் அதிகார மட்டங்களுடன் தொடர்ந்து அவர் விவாதித்து வந்தார் எனவிக்கிலீக்ஸ்' அம்பலப்படுத்தியதாக 'டைம்' இதழ் சொல்கிறது.

1983 இல் பங்களாதேஷ் கிராமின் வங்கியை யூனுஸ் நிறுவி ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு பிணை இல்லாத நுண்கடன்களை (Micro credits) வழங்கினார். நிதி முறைகேடுகள் அங்கே நடப்பதாகக் கூறி யூனுஸை வங்கியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கினார் ஹசீனா.

யூனுஸின் முதன்மை நிறுவனமான பங்களாதேஷ் கிராமின் வங்கியின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கிராமின் டெலிகாம் நிறுவனத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் யூனுஸுக்கும் அவரது நண்பர்கள் மூவருக்கும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர் அவர்களுக்கு 'பெயில்' வழங்கப்பட்டது. அவரது பொறுப்பில் உள்ள கிராமின்ஃபோன் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம்தான் அந்நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை எளிய மக்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடனை அளிப்பதாகச் சொன்னாலும் வாங்கிய கடனை அடைக்கப்பதற்கே மக்கள் மீண்டும் வங்கியில் நுண்கடன் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. யூனுஸ் மீதான முதல் நிதி மோசடிக்குற்றச்சாட்டு 2010 இல் கிளம்பியது. நார்வே நாட்டின் நொராட் (NORAD - Norweigian Agency for Development Co-operation) என்ற நிறுவனம் வழங்கிய பல கோடி டாலர் நிதி உதவிகளை அவர் கையாடல் செய்ததாக டென்மார்க் ஆவணப்பட இயக்குநர் டாம் ஹீன்மான் (Tom Heinemann) குற்றம் சாட்டியதுடன் அதுபற்றி Caught in Microdebt (நுண்கடன் வலையில் வீழ்ந்த கதை) என்ற ஆவணப் படத்தையே தயாரித்துள்ளார். படம் யூடியுப்பில் உள்ளது.

தம்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் தமது பிரத்யேக இணையத்தளத்தில் (www.muhammadyunus.org) மறுத்து விளக்கம் கூறியுள்ளார் யூனுஸ். அவற்றையும் அனைவரும் பார்க்க முடியும்.

02.09.2024

கட்டுரை எழுத உதவிய வலைத்தளங்கள்:

wikipedia, Krishok.org, thefederal.com, aljazeera.com, scmp.com, theprint.com, foreignpolicy.com, livemint.com, thehindu.com, thedailystar.net, etvbharat.com, industantimes.com, businessstandard.com, ndtv.com, firstpost.com, thefinancialexpress.com, crisis24.garda.com, drishtiias.com, rescue.org, wtcmumbai.org, muhammadyunus.org

திணை (செப்டம்பர்-நவம்பர் 2024) காலாண்டிதழில் வெளியான கட்டுரை.