புதன், டிசம்பர் 25, 2024

தாழ்திறக்கும் தருணங்கள்

தாழ்திறக்கும் தருணங்கள்,

தமிழிய, இலக்கிய, அரசியல் உரையாடல்கள்,

பாவெல் சூரியன் அவர்கள் பல்வேறு ஆளுமைகளுடன்  நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு,

வெளியீடு போதிவனம், விலை ரூ.260

யானை வழித்தடத்தில் எறும்புகளும் ஊர்ந்து செல்லும் வாழ்க்கைச் சூழலில் யானை மட்டுமே கவனத்திற்கு வரும். யானையின் மொத்த உருவத்தில் ஒரு துளி நுண்ணிய துகள்தான் எறும்பு எனினும் இயற்கைச் சுழற்சியில் எறும்பின் செயல்பாடு கவனத்துக்கு வருவதில்லை. அத்தகையா எறும்புகளைத் தேடிக் கண்டுபிடித்து நம் கண் முன்னே கவனப்படுத்துகிறார் தோழர் பாவெல் சூரியன். வெளிச்சத்தையும் புகழையும் நாடாத எளிய மனிதர்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எத்தகைய அங்கீகாரத்திற்கும் ஏங்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தன் காலத்தில் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, வரும் தலைமுறைக்குத் தூண்டுகோலாக அமைவதாகவும் உள்ளது.

-        - பதிப்பாளர் கே.எஸ்.கருணாபிரசாத், போதிவனம்

...

நேர்காணல், கட்டுரைகள் எனப் பன்னிரெண்டு பதிவுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. எல்லா நேர்காணல்களையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தித் தள்ளினாலும் வாசகர்கள் தாங்களே ஒவ்வொன்றையும் எந்தவித முன்முடிவும் இன்றிப் படித்து, அறிந்து, உணர்ந்துஅனுபவிக்கும் சுகத்திற்கு நான் ஒரு குறுக்கீடாக ஆகிவிடக் கூடாதென்று அந்த உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றேன்.

-         - அணிந்துரையில் கமலாலயன்

நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணல்கள்:

தமிழும் தமிழியும், பூரணச்சந்திர ஜீவா (சௌந்தரசுகன், ஆகஸ்ட் 2003)

தணிகை முதல் தலைநகர்வரை, கவிஞர் க.ச.கலையரசன் (சௌந்தரசுகன், மார்ச் 2004)

ஊரும் பேரும், மரு. தணிகைவேல் (சௌந்தரசுகன்,அக்டோபர் 2004)

தமிழ்வழிக்கல்வி, வெற்றிச்செழியன் (சௌந்தரசுகன், ஜூலை, ஆகஸ்ட், செப்.2009)

இசைபட வாழ்தல், திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் (சௌந்தரசுகன், நவம்பர் 2003)

அதிர்வுகள், கெங்கை குமார் (சௌந்தரசுகன், ஜூன் 2003)

திண்ணை நூலகம், தஞ்சாவூர்க்கவிராயர் (மே 2022)

கைதிகள் கட்டிய சிறைச்சாலை, மு. இக்பால் அகமது (பேசும் புதிய சக்தி, அக்டோபர் 2024)

சாதிகளுக்கு எதிரான சமர், ஆர்.பார்த்தசாரதி

இதழியல் போராளி சுகன்

இயற்கை வாழ்வியல், உ. பாலசுப்ரமணியன் (கல்வெட்டு பேசுகிறது, ஜூன் 2019)

புலியாட்டம், எம்.ஆர்.ராதா (தச்சன், செப்.2007)

… தனக்கான பொருள், புகழ் சேர்க்கும் சுயநலமிகள் பரபரப்பாக இயங்கும் சமூகத்தில், எளிய மனிதர்களின் இருப்புக்காகவும் அவர்களின் வாழ்விற்காகவும் அரசியல், மொழி, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் களமாடுபவர்கள்தான் நம்முடைய ஆளுமைகள். தன்னளவில் வர்த்தக நோக்கம் அற்று, விளம்பரம் மறுத்து வினையாற்றுகின்றவை சீரிய சிற்றிதழ்கள். அப்படியான சிற்றிதழ்கள் வழங்கிய வாய்ப்பின் வழியாகத்தான் இன்று பலரின் பார்வைக்கும் பரந்த வாசிப்புக்கும் இலக்காகி இருக்கின்றன எனது பதிவுகள். என் பணி சிறு துளி, அதைப் பெருவெள்ளமாக்கியவை சிற்றிதழ்கள்தான்.

-         - முகப்புரையில் பாவெல் சூரியன்.

வெளிச்சம் இல்லாத நிலையே இருட்டு என்பான் மகாகவிபாரதி. அங்கேயும் ஓர் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதே இதன் பொருள். அங்கே எந்த விதமான கைமாறும் விளம்பரமும் கருதாது, தளராது இயங்கிக்கொண்டு இருக்கும் அரசியல்க்களச்செயற்பட்டாளர்களையும்  கலைஞர்களையும்  எழுத்தாளர்களையும், தத்தமது தொழில்முறையால் சமூகத்தின் சாமானிய மக்களுடன் எப்போதும் உறவாடிக்கொண்டும் பயன்மிக்க வகையில் புதியவற்றைப் படைத்துக்கொண்டும், சரியாகச் சொன்னால் தமது தனிப்பட்ட பொருளாதார இழப்புக்களையும் புறந்தள்ளி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்ற இந்த மனிதர்களையும் நேரில் சந்தித்து உரையாடி, அவர்களின் களச்செயற்பாட்டின் அடிநாதமாக ஓடும் அரசியல் என்ன என்பதை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ள பாவெல் சூரியன் அவர்களின் பணியும் தன்னலம் அற்றதே. அவற்றை அச்சில் கொண்டுவர எண்ணிய கருணாபிரசாத் அவர்களுக்கு எத்தனை முறை வேண்டும் ஆனாலும் நன்றி சொல்லலாம்.

காவேரி டெல்டாவான நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் பாவெல். திராவிட மாணவர் கழகம், இடதுசாரி இயக்கம் ஆகியவற்றில் இயங்கியவர். தாமரை, சங்கு, சௌந்தர சுகன் ஆகியவற்றில் எழுதியவர். கலை மு.மணிமுடி அவர்களுடைய நெருங்கிய தோழர். கலை இதழின் ஆசிரியர் குழுவில் இயங்கியவர். நீருக்கும் உண்டு நினைவாற்றல், தமிழகத்தின் மேற்கு வங்கம் ஆகிய தொகுப்புக்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு வெளியாகிறது. காலத்தின் உரையாடல் என்ற தொகுப்பை 2009ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

அவரது சகோதரர் தெ.வெற்றிச்செல்வன் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். இவர்களுடன் பிறந்தவர்கள்  மூன்று சகோதரிகள். இவர்களுடைய தந்தையார் பெரியதும்பூர் ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிவைத்து விட்டுப்போன உயிலின் கருவை மையப்படுத்தி மெய்யாக வாழ்ந்த கதை என்ற நூலை வெற்றிச்செல்வன் 2007ஆம் ஆண்டில் எழுதி இருந்தார்.

நேற்று இந்த நூலின் முதல் பிரதிகளில் ஒன்றை எனது வீட்டுக்கு வந்து என்னிடம் அளித்த பாவெல் சூரியன் அவர்களுக்கு நான் எந்த வடிவில் நன்றி சொல்ல என்பது தெரியவில்லை. நூலை என் மகன் சாதத்திடம்  கையளிக்கச் சொன்னேன். அவனும் பெற்றுக் கொண்டான். தொடர் ஓட்டப்பந்தயத்தில் கைக்கோலை தன் முன் காத்திருக்கும் சக ஓட்டக்காரனிடம் கையளிப்பதைப்போல, தீச்சுடரைக் கைமாற்றுவதைப் போல தோழரிடம் இருந்தும் என்னிடம் இருந்தும் அவன் பெற்றுக்கொண்டான். இன்றில்லாமல் போனாலும் தக்க வயதில் அந்தத் தீயின் வெப்பத்தை உணர்ந்து முன் கொண்டு செல்வான். தொடர்ந்து ஓடுவான்.

நன்றி தோழர், பாவெல் சூரியன்!

...

25.12.2024

 

கருத்துகள் இல்லை: