புதன், ஜனவரி 08, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூல் வெளிவந்துவிட்டது

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூல் வெளிவந்துவிட்டது.

நான்கு வருடங்களுக்கும் மேலான உழைப்பைச் செலுத்தியதன் பலன் நூலாக இப்போது கைகளில்.  வெளியிட்டுள்ள பரிசல் பதிப்பகத் தோழர் சிவசெந்தில்நாதன், நூலின் முகப்பையும் வடிவத்தையும் அழகுற வடிவமைத்த ஜீவமணி பாலன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

எம்.பி.எஸ். வரலாற்றை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது உண்மைதான். ஆனால் அதில் எத்தனை உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது, முடியுமா என்று உண்மையில் தயங்கினேன்.

2020 மார்ச் மாதம் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் முகநூலில் அவர் குறித்து சிறிய பதிவுகளை தொடராக இட்டு வந்தேன். எம்.பி.எஸ்ஸை அறிந்த நண்பர்கள் அவற்றை வாசித்தார்கள். சுமார் 25 தொடர்கள் நிறைவுற்ற நிலையில் அவற்றை அச்சிட்டுப் பார்த்தபோது ஒரு சிறிய நூலின் அளவுக்கு இருந்தது. அதுதான் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 

எம்.பி.எஸ். குறித்து மரியாதைக்குரிய மறைந்த அறந்தை நாராயணன் 1991இல் எழுதிய சிறிய நூல் உண்மையில் மிகுந்த மதிப்புமிக்கது, தமிழில் எம்.பி.எஸ் பற்றிய ஓரளவு முழுமையான நூல் அது மட்டுமே என்ற நிலையும் இருந்தது. அவர் பற்றிய அடுத்த நூல் எனில் அது நான் எழுதும் நூலாகத்தான் இருக்கும் என்ற யதார்த்தம் சற்றே பயத்தை கொடுத்தது. தகவல் தொழில் நுட்பம் மிக உயர்ந்து நிற்கும் 30 வருடங்களுக்குப் பிறகான சூழலில், அவர் பற்றி வெளியாகும் அப்படியான ஒரு நூல் அதற்கு ஏற்ப ஓரளவேனும் முழுமை பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பெரிய கவனமும் கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. எனில் அதற்கான நேரம், உழைப்பு ஆகியவற்றை தனிப்பெரும் கவனத்துடன் செலுத்த வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக, இவை அனைத்தையும் தாண்டி நூலை எழுதிவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்கு நான் செல்ல ஒரே ஒரு முக்கியமான காரணம் இருந்தது: அவர் ஒரு இடதுசாரி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி. இந்தக் காரணங்களாலேயே தமிழ் திரைப்பட முதலாளிகளால் திட்டமிட்ட வகையில் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவரது சக தோழரான நிமாய் கோஷுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. 

சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் நின்று ஈடுபட்டவன் என்ற என் மனநிலை என்னை முன்னே தள்ளி 'நீ அவரைப் பற்றி எழுது,உன்னால் முடியும். யாருக்காக காத்திருக்கப் போகிறாய்?' என்று கேள்வி எழுப்பியது. தொடங்கினேன். நான்கரை வருடம் உழைப்பில் கடந்து வந்த புத்தகங்கள், பதிவுகள், இணையத்தில் கண்ட காணொளிகள், ஒலிப்பதிவுகள், அவரை அறிந்த மிக சிலருடன் ஆன உரையாடல்கள் யாவும் எனக்கு பெரிய நம்பிக்கையை தந்தன. சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழி இந்த நூலைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை. நூலின் தேவை கருதி நான் வாங்கிய தமிழ், ஆங்கில மொழி நூல்கள் மட்டுமே நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றில் இருந்து நேரடியான தகவல்களைப் பெற முடிந்தது. பிற நூல்கள் நூலின் கருத்தாக்கத்துக்கு பெரிதும் உதவின. பல நூல்கள் வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் சென்றன, சென்று சேர்ந்த இடங்களில் இருந்து பெற்றவை ஏராளம்.

எல்லாமும் சேர்ந்து இப்போது ஒரு நூலாக வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்கொண்ட வேலையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்து முடித்தேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நூலை எழுதியது என்பது என்னைப் பொருத்தவரை அது ஓர் அரசியல் செயல்பாடுதான். அதற்கான நோக்கம் உள்ளது.

உதவி செய்த, ஒத்துழைத்த, உற்சாகம் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி. என் மனைவியும் மகனும் இந்த நான்கு வருட காலமாக நல்கிய பெரும் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகப்பெரியன, அவர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: