சனி, அக்டோபர் 21, 2023

ஆகாத தீதார்: சிறுகதைகள் நூல் மதிப்புரை

இறுதி மூச்சு அடங்கும் முன் கணவன் தனக்கு இன்னொருத்தியும் இருக்கிறாள் என்ற உண்மையை சொல்கிறான். மௌத்திற்கு பிறகு நியாயப்படி தனது சம்பாத்தியத்தின் பகுதியை அவளுக்கு கொடுத்து விடும்படி கூறிவிட்டு ஜனாஸா ஆகி விடுகிறார். அவர் இதுநாள் வரை மனதில் சுமந்த பாரத்தை சொகாராவின் இதயத்துக்கு மாற்றுகிறார். 

இரண்டாம் தாரம் ஆனவள் ஜமாஅத்தில் முறையிட்டு தனக்கான பொருளாதார உதவியை அல்லது உரிமையை கேட்க, தான் மட்டுமே அறிந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு சொகாரா கொடும் சொற்களால் சொத்தை அபகரிக்க வேஷம் போடுவதாக அவளை கூட்டத்தின் நடுவே அவமானப்படுத்த அவள் கூசி ஒடுங்கி அங்கிருந்து சென்று விடுகிறாள். 

தன்னை வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருந்த கணவன் மீதான கோபமும் தன் கணவனை எவளோ ஒருத்தி பங்கு போட்டுக்கொண்ட கோபமும் ஒருசேர இந்த ஆத்திரத்துக்கு பலியானதோ அவளைப்போலவே ஒரு பெண்தான். இப்போது சொத்து முழுவதும் அவளுக்கே. 

இதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறது. பாத்திரங்கள் வேறு. அதே சொகாரா தன் இறுதி மூச்சு அடங்கும்முன் மகன் சமீரை அழைத்து ஏதோ சொன்னது சமீரோடு போகிறது. ம்மா சொன்னது அவனோடு புதைகிறது. 

இரண்டு பேர் அறிந்த செய்திதான் ரகசியம். உண்மை என்னவென்றால் ஏழு வயது சமீர் அன்றைக்கு இருட்டுக்கு பயந்து கதவு அருகே நின்றுகொண்டு இருக்க, அவன் இருப்பதை அறியாத அவனது அத்தா தனது இரண்டாம் தார உண்மையை உடைத்தபோது சமீரும் கேட்டுவிடுகிறான். மூன்றாம் நபர் அறிந்த பின் அது ரகசியம் இல்லையே! இப்போதும் சொகாரா சமீருக்கு சொன்னது என்னவென்று நமக்கு தெரியாது, மூன்றாம் நபர் யாரும் அங்கே இருந்தால் அன்றி நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. 

மனித மனங்களின் அழுக்குகளும் தர்ம நியாயங்களும் கேள்விக்கு உள்ளாகின்றன. மறுமையின் கூரான கத்தி போன்ற கேள்விகளும் விளைவாக விதிக்கப்பட உள்ள நரக வாழ்வும் இம்மையின் சுகபோகங்களுக்காக அறிந்தே ஒத்திவைக்கப்படுகின்றன.

(கைப்பற்றப்பட்ட வசியத்)

... ...

இறந்த கணவனின் முகத்தை அவனது ஜனாஸா அங்கிருந்து தூக்கிச்செல்லப்படும் வரையிலாவது பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பையும் மனைவிக்கு மறுத்து தனி ஒரு அறையில் அடைக்கப்படும் கொடும் வழக்கத்தை யார் புகுத்தி இருப்பார்கள்? இஸ்லாமியபெண்ணின்  இந்த உள்ளக்குமுறலை ஆமினா பேசுகிறார். மரண வீட்டில் மனைவியின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை என்கிறார். ஆண் எத்தனை அயோக்கியன் ஆனாலும் அவன் வாயை அடைக்க முடியாது. ஆனால் பெண்களின் ஒரே ஒரு தவறும் போதும், காலமெல்லாம் அவள் வாயை அடைக்க.

(ஆகாத தீதார்)

... ...

வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவோரிடம் இரண்டு பட்டியல் உள்ளது, கோடாலித்தைலம், கைலி, தாவணி அன்பளிப்பு க்கு ஒன்று; இடைப்பட்ட காலத்தில் மரணித்தவர்களின் வீடுகளுக்கு சென்று துக்கம் விசாரிப்பது இன்னொரு பட்டியல். (இருட்சிறை)

"காலைல எம்புள்ளைக அசந்து தூங்கிட்டு இருக்குங்க! எங்கத்தா வந்து பேன அமத்திட்டு போவாங்க... என் ஈரக்குலை..." என்று தன்னை பார்க்க வந்த பள்ளித்தோழி பௌசியாவிடம்  கரைந்து புலம்புகிறாள் பஷீரா. "அவன் இருந்தவரை அந்த வாழ்க்கை நரகம்னு நெனச்சிட்டு இருந்தேன். கூடாட்டம் இருந்தாலும் அந்த வீடு எனக்குன்னு இருந்துச்சு.இங்கின ஒருவா கஞ்சி தொண்டைல இறக்க கூட நெஞ்செல்லாம் எனக்கு அழுத்துது". 

நல்ல கணவன் கிடைப்பதுதான் வாழ்வின் ஒற்றை இலக்கு என்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்றி வாசிக்க சொல்கிறார் ஆமினா. கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல தகப்பனும் தாயும் கூட வேண்டும்! இவை கிடைக்கப்பெறாத பெண்கள் வாழ தகுதியற்றவர்கள். உலகம் அவர்களுக்கு இல்லை.

தாய் தகப்பன் அண்ணன்மார், பின் கணவன் மாமனார் மாமியார், பின் மகன்கள் என்று யார் கையையாவது எதிர்பார்த்துக்கொண்டே நாளை, வாழ்க்கையை அல்ல, தள்ள பெண் ஜென்மத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்தின் புதிய பரிமாணம் என்ற ஒன்றை இந்த கதையில் சொல்கிறார். ஆசுவாசப்படுத்தும் ஆறுதல் மையங்கள் என்றும் இயந்திரத்துக்கு பதிலாக பெண்களை பயன்படுத்தி கொண்ட காலகட்டங்களில் ஓய்வெடுக்கும் சொற்ப பருவத்தை பள்ளிக்கூடம் அன்பளித்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்வது முற்றிலும் உண்மை. படிப்பு, படிப்பு சார்ந்த எதிர்காலம் எல்லாம் கனவுகளுக்கு அப்பாற்பட்டவை, நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம்.

கற்ற கல்வியும் வெளிநாட்டு வாழ்க்கையும் பௌசியாவின் கண்களை அகலப்படுத்தி இருந்தன என்றும் அவர் சொல்வது எத்தனை இசுலாமிய பெண்களுக்கு அதை அவர்கள் குடும்பத்தினர் சாத்தியப்படுத்தி உள்ளனர் என்ற கேள்வியை முன்வைப்பதன்றி வேறில்லை.

(இருட்சிறை)

... ...

15, 16 வயது பள்ளிக்கூட பெண்ணுக்கு, ஹாஜிரா, அவசரத்திருமணம் செய்து வைக்கிறார்கள். மலேயாவில் அஹமது தன் குடும்பத்து ரொட்டிக்கடையில் கடுமையாக உழைக்கிறான். திருமணம் ஆன கையோடு மலேயா செல்ல மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையில் இங்கே கிடந்து சிறுமி அல்லாடுகிறாள். பஞ்சாயத்து வைத்து அவளை தாய் தகப்பன் தம்முடன் அழைத்து செல்கிறார்கள். மாதாமாதம் அவன் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும். கணவனுக்கும் அவளுக்கும் இடையே ஆன உரையாடல்கள் இதனை மையமாக வைத்தே  வளர கசந்து போகிறது உறவு.

விடுமுறையில் வந்த இடத்தில் அஹமது விபத்தில் செத்து போகிறான். அதற்கு முன் அவனுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் " உன்னை அத்து விட போறேன்" என்று அவன் சொல்வதுடன் முடிகிறது. 

அடக்கம் செய்யப்படும்வரை அவளுக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அங்கே ஒரு காப்பித்தண்ணி வச்சு தரக்கூட யாருமில்லை. அஹமதுவின் மரணம் மரத்துப்போய் வயிற்றுப்பசி அவளை ஆக்கிரமித்து கொள்கிறது. இறப்பு வீட்டின் கூட்டம் எப்போது கலையும், நிம்மதியாக மூச்சு விடலாம், ஒரு வாய் காப்பி குடிக்கலாம் என்று எதிர்பார்த்து கிடக்கிறாள். எப்போது கலையும்? அஹமதுவின் ஜனாஸா தூக்கப்பட்டால்தான் கலையும்! 

ஹாஜிராவுக்காக ஊர்ப்பஞ்சாயத்தை கூட்டிய அம்மாவும் அத்தாவும் இப்போது அவளை புருஷன் வீட்டிலேயே விட்டுவிட்டு அவசரமாக வெளியேறுகிறார்கள். பயனில்லாத பெண்ணாக திரிந்துபோனாள் ஹாஜிரா. கைகழுவுகிறார்கள்.

(பொம்மக்குட்டி)

... ...

அக்காலத்திய ஆண்கள் போல் கையில் எசவாக கிடைத்த, அடிப்பதற்கும் மிதிப்பத ற்கும் ஆன பிண்டம் என மனைவியை நினைக்கும் சராசரி ஆண்தான் அப்துல். மனைவிக்கு போக்கிடம் இல்லை என தெரிந்தால் இந்த ஆண்கள் தம் மொத்த அகோரத்தையும் இறக்கி வைத்து விடுகிறார்கள்.

... இணை வைத்து பேசாத ஆண்கள் அந்த ஊரில் இல்லை. பாரிஸாவுக்கு வாய்த்த கணவனும் அப்படியே. பிற ஆண்களுடன் மட்டுமின்றி பெற்ற தகப்பன், சகோதரனுடனும் சேர்த்து பேசி அசிங்கப்படுத்துகிறான். 

கணவன் இறந்து விடுகிறான். பாரிஸா அழவில்லை. அவள் கணவன் கபருக்கு போனபின்னும். கண்ணீர் வெறும் நீரில்லை, அது மன்னிப்புக்கான மொழி. பாரிஸா அழவில்லை.

(இன்ஸ்டன்ட் புனிதம்)

... ...

வெறும் புகைப்படத்தில் தொடங்கும் கதை இறுதியில் வாசிப்பவனுக்கு ஒரு கேள்வியை வைத்து விசாரணை செய்வதில் முடிகிறது. "தீங்கிழைத்த நிலையில் யாருடைய புகைப்பட ஆல்பத்திலாவது நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்களா?". ஆண் சமூகத்தை நோக்கி வீசப்பட்ட மிக கூர்மையான கட்டாரி. வாசிப்பவனின் கழுத்து அறுபடுகிறது.

(புகைப்படம்)

... ...

தனது மரணமே இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்பது அதாவது மற்றவர்கள் அனைவரும் கபருக்கு போன பின், அச்சத்தினின்றும் எழுவது. எதன்பொருட்டு அச்சம்? மரணம் நேர்ந்தபின் என்ன நடக்கும் என்பது தெரிந்தால் என்ன தெரியாமலேயே போனால் என்ன? அப்படியல்ல, இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையில் இருந்து எழுவது இது. கொரோனாவில் மரணமுற்ற மனிதனை அடக்கம் செய்யும் நிகழ்வை ஒட்டி மனிதர்கள் இடையே நிகழும் உரையாடல் சில அப்பட்டமான உண்மைகளை முகத்தில் அறைகிறது.

(ஊர்வாய்)

... ...

எக்குத்தப்பான சாபம். ஆபிதாவின் சாபத்துக்கு ஆளான நிஜாம்தான் ஆபிதா கிழவியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். கணவன் சம்சுதீன் மிகுந்த மனஉறுதி கொண்டவர். உம்ரா செல்ல ஆயத்தமானபோதே ஒருவேளை  தான் உம்ராவில் இருக்கும்போது ஆபிதா மௌத் ஆனால் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு திட்டம்போட்டு கொடுக்கும் அளவுக்கு மனஉறுதி கொண்டவர். ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மரியாதை. 

ஆபிதா அநேகமாக இறந்து விட்டாள் என்ற நிலையிலும் கூட டாக்டர் வந்து உறுதிசெய்யும் வரை காத்திருக்கிறார். இறப்பு உறுதியான பின் நிலைகுலைந்து பெருங்குரல் எடுத்து அழுகிறார். ஊரே அதிர்ச்சி அடைகிறது. அது சம்சுதீனின் அழுகை அல்ல. தனிமை வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் ஓர் ஆணின் அழுகை. காலம் நெடுகிலும் பெண்ணை அதிகாரம் செய்து ஆனால் அவள் உழைப்பில் அண்டி வாழ்ந்து வந்த ஆண் ஆதிக்க வர்க்கத்தின் இயலாமையின் குரல் அது. தானே போட்டுகொண்ட ஆண் என்னும் கண்ணாடி கவசம் பரிதாபமாக உடைப்படும் நேரம் இது. கணவனை, மகனை, தகப்பனை, மருமகனை இழந்துவிடும் பெண்கள் அழுது ஓய்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள். சம்சுதீன்களுக்கு அந்த புள்ளியில் இருந்து அடுத்து தெரிவதோ வெற்றிடம்தான்.

(ரேகை போல் வாழ்க்கை).

.... ...

13 சிறுகதைகள் கொண்ட நூல் இது. இழவு வீடுகளில் இறந்தவர்களை மையமாக வைத்து நடக்கும் நிகழ்வுகள், உரையாடல்களை கொண்டு கதைகள் நகர்கின்றன. இஸ்லாமிய பெண்களின் இடத்தில் இருந்து சொல்லப்பட்ட கதைகள். எனவே இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம், உறவுகள், உரையாடல்கள் என வரையப்பட்டு இருந்தாலும் தமிழக மண்ணின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் காலங்காலமாக அருகில் இருந்தும் கலந்தும் வாழ்ந்தும் பார்த்தும் வாழும் பிற சமூக மக்கள் புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை.

இசுலாமிய சமூக பெண்கள் சந்திக்கும் குடும்ப அல்லது சமூக சிக்கல்கள், பிரச்னைகளை இக்கதைகள் பேசுவதாக குறுக்கியும் பார்க்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக ஆணாதிக்க சமூகத்தின் கீழ், ஆண்களின் பெருவிரல் நசிவின் கீழ் உழன்று கிடக்கும் பெண் சமூகத்தின் குரலை முன் வைக்கும் இக்கதைகள் ஆண்களை நோக்கி கேள்விகளை வீசுகின்றன. மட்டுமின்றி நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட பெண்கள் தமக்குள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செய்ய முற்படுவதன் நுட்பமான உளவியலையும் புரிந்துகொள்ள முயன்றால் அதன் தொடக்கப்புள்ளியும் ஆண்களிடத்தில் இருந்துதான் என்பதையும் இவை வெறும் தனிநபர் சார்ந்த பிரச்னைகள் அல்ல என்பதையும் உணர முடியும். இந்த புரிதலுக்கு நீண்ட பயிற்சியும் குடும்பம் சொத்து உறவுகள் குறித்த புரிதலும் வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தில் ரொம்ப படிச்சவ, காலேஜ் படிச்சவள ஆம்பிளைகள் கட்டிக்க வருவதில்லை என்ற பெண்களின் உரையாடல் தொடர்ந்து வருகிறது. இது இன்றளவும் உண்மை. படித்த பெண் கேள்வி கேட்பாள், கேள்வி கேட்கும் பெண் தமக்கு தேவையில்லை என்ற ஆம்பிளை ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இது. ஆனால் கதைகளில் வரும் பெண் மாந்தர்களின் பாடுகளை வாசிக்கும் எவரும் பெண் கல்வியின் அவசியத்தை மறுத்து விட முடியாதபடிக்கே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மரண வீட்டின் துக்கம் மூன்று நாளைக்கே, அதன் பின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது இசுலாமிய நெறி. மாண்டார் மீள்வதில்லை, இருப்போர் வாழ்வை தொடர்க, அதுவே இயற்கை என்ற யதார்த்த நியதியில் இருந்து சொல்லப்பட்ட நெறி இது. 

இந்த கதைகள் மாண்டோருக்கும் இருப்போருக்கும் ஆன இடைப்பட்ட முற்றுப்பெற்ற உறவுகளை சொல்லவில்லை, வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் வைக்கும் கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்பவை. ஆமினா முஹம்மத் இங்கே வெற்றி பெறுகிறார். இன்னும் நிறைய எழுதுவார்.

21.10.2023

...

ஆகாத தீதார், ஆமினா முஹம்மத்

Galaxy Booksellers and Publishers, மேலூர், மதுரை


மத்திய கிழக்கு பாலஸ்தீன அமெரிக்க அரசியலும் இந்திய இஸ்லாமிய சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

இன்று நேற்றல்ல, கடந்த பல பத்து வருடங்களாகவே மத்திய கிழக்கு அரபு பிராந்திய அரசியல் ஆனது அமெரிக்க சார்பு அல்லது எதிர்ப்பு அரசியல் என்ற மையமான புள்ளியில் அங்குள்ள அரபு நாடுகளை இரண்டு முகாம்களாக பிரித்து வைத்துள்ளது. இஸ்லாம் என்ற ஒற்றை மார்க்கம் இந்த நாடுகளை இயற்கையாகவே இணைத்து ஒரு சரடாக  மாற்றி இருக்க வேண்டும். மாறாக அமெரிக்காவின் சுயநல கார்பொரெட் அரசியல், குறிப்பாக பெட்ரோலிய அரசியல் மிக தந்திரமாக இந்நாடுகளை பிரித்து வைத்துள்ளது. இதன்றி இசுலாமிய மதத்துக்கு உள்ளேயே இருக்கின்ற இன அல்லது குழு அரசியலும் இந்த நாடுகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் வகை செய்தன.

அரபு பிராந்தியத்தில் பெட்ரோலிய வளம் மிக்க நாடுகளோ தத்தம் நாடுகளுக்கு பங்கம் வராமல் இருந்தால் போதும், ஈரான், ஈராக், லிபியா, பாலஸ்தீனம் அழிந்தால் நமக்கென்ன என்று சுயநல அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், அங்கெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் இல்லை, பாரம்பரிய மன்னர் ஆட்சி அதாவது சர்வாதிகார ஆட்சிகள் நடக்கின்றன. தலைதூக்கிய ஓரிரண்டு ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அவ்வாறான குரல்கள் உடனடியாக நசுக்கப்படும்.

வெட்கம்கெட்ட அரபு நாடுகள் இப்போதாவது தம் மவுனத்தை கலைக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக அணி திரள வேண்டும். அமெரிக்க அரசியலும் இஸ்ரேலும் சேர்ந்து ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தையும் அபகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மூன்றாவது உலகப்போர் உருவாகும் எனில் முழுமுதற்காரணம் இஸ்ரேலின் ரவுடித்தனமும் அமெரிக்காவின் ஆதரவும் மட்டுமே. பிரிந்து கிடந்ததன் பலன்தானே இராக்கும் லிபியாவும் அழிந்தது?

இங்கே இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை அல்லது செயற்பாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இஸ் ரேலையும் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூகம் வெட்கங்கெட்ட சக அரபு நாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? 

அடக்குமுறையின் எந்த ஒரு வடிவத்துக்கும், எந்த ஒரு சமூகம் நசுக்கப்பட்டாலும் வெறும் பிரார்த்தனைகள் பலன் தராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது அரசு பயங்கரவாதமாக இருந்தாலும் திட்டமிட்ட இயக்கங்களின் தாக்குதலாக இருந்தாலும் அப்படித்தான். தம் மீதான தாக்குதலை எதிர்ப்பதாக கருதி வீட்டுக்குள்ளும் வழிபாட்டு தலங்களுக்குள்ளும் புலம்பி, ஆவேசப்படுவதும் மணிக்கணக்கில் உரை ஆற்றுவதும் ஒரு பலனையும் தராது. எதிரி மிக மோசமான ஆயுதங்களுடன் வீதியில் இறங்கி அழித்துக்கொண்டு இருக்கும்போது பிரார்த்தனைகளால் என்ன பயன்?

...

அமெரிக்காவின் சுயநல சர்வதேச கார்ப்பரேட் அரசியலும் மத்திய கிழக்கின் பெட்ரோலிய அரசியலும் பாலஸ்தீன காஸா அரசியலின் மையமாக இருப்பதை இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 1908இல் ஈரானில் பெட்ரோல் வளம் கண்டறியப்படும் முன் மத்திய கிழக்கின் அரசியல் மதம், இனம் ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது உண்மைதான். 1908க்கு பின் மத்திய கிழக்கின் அரசியல் வெறும் மத இன அரசியல் மட்டுமே அல்ல. பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் , 1908க்கு முன்பான தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பெறாத கூட்டு சமூக வாழ்க்கை என்ற அரபு சமூகத்தின் முகம் 1908க்கு பின் முற்றாக மாறியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தன் மண்ணில் எடுக்கப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்த ஈரான் மன்னரை அமெரிக்கா படுகொலை செய்த நாளில் இருந்துதான் நவீன கால அரபு பிராந்திய அரசியலை பார்க்க வேண்டும். அதன் பிற்கால தொடர்ச்சிதான் மும்மர் கடாபியும் சதாம் உசேனும்.

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் கண்டுபிடிப்பான மதம், பின்னர் அந்த அமைப்பை தக்க வைப்பதற்கு ஆன ஒரு கருவியாக இருந்தது மட்டுமின்றி அத்தகைய சமூக அமைப்போடு சேர்ந்து இணையாக வளர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டும் இருந்தது. இது அரபு நாடுகளுக்கும் பொருந்தும். 1908க்கு பின் ஆன அரபு சமூகத்தை பண்டைய நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கும் விவசாய சமூகம் என்று எளிதாக யாரும் கடந்து போக முடியாது என்பதற்கான ஒரே காரணம் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் எழுந்த பொருளாதார பேரெழுச்சியும் அதனை தொடர்ந்த சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியலில் பெட்ரோலியம் வகுத்த அதாவது அரபு நாடுகள் வகுத்த பங்கு பாத்திரமும் ஆகும். OPECக்கின் தோற்றம் சர்வதேச அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

இந்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கும் அல்லது தவறும் அல்லது புரிந்தும் எடுத்து சொல்ல முன்வராத எந்த ஒரு இயக்கமும் தன் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றுவது அன்றி வேறில்லை. இந்த மையமான அரசியலை இந்திய இஸ்லாமிய சமூகத்துக்கு எடுத்துச்சொல்லாத எந்த ஒரு மத அடையாளம் சார்ந்த அமைப்பும் வெறும் அடையாள அரசியல் நடத்தும் அமைப்பாகவே இருக்க முடியும். அவர்கள் தம் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். 

இந்திய பிரதமரும் இந்திய அரசும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்தபின் இந்திய இஸ்லாமிய சமூகம் வெளிப்படையாக வீதிக்கு வந்தே ஆக வேண்டும். பாலஸ்தீன, காஸா மக்களுக்கு ஆதரவாக வீதிகளில் இயக்கம் நடத்தும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இந்திய இஸ்லாமிய சமூகம் கைகோர்க்க வேண்டும். காலத்தின் கட்டாயம் இது.

19.10.2023

மேல்மருவத்தூர் மடம் செய்த ஆன்மிக 'புரட்சி'

பார்ப்பனீய மடங்கள் ஆனாலும் இடைசாதி மடங்கள் ஆனாலும் உழைக்கும் மக்களை யதார்த்தமான வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவும் போராடும் ஜனநாயக சக்திகளை நோக்கி அவர்கள் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனங்களே. மக்களை ஏமாற்றி பணம் சுருட்டுவது பிரதான தொழில் என்றாலும்.

சங்கர மடங்கள் மேல்சாதி சிறுபான்மை பிராமணர்களுக்கு எனில் இடைசாதி மடங்கள் ஆகப்பெரும்பான்மை பிராமணர்கள் அல்லாத மக்கள் பிரிவினரை தம் பக்கம் இழுத்தன என்பதுதான் நுட்பமான அபாயம். 1980களுக்கு பிறகு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஆசிரியர் சிறிய அளவில் சாமியார் தொழிலை தொடங்குகிறார். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில்தான் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பேராதரவுடன் அவர் தம் தொழிலை விரிவாக்குகிறார். அமைச்சர் பெருமக்கள், டெல்லி அதிகார மட்டம், ஒரு கட்டத்தில் மோ டி என மேல்மருவத்தூரில் வந்து குவிய உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் போலீஸ் நிர்வாகமும் அடங்கி போவதுடன் மடத்துக்கு சேவகம் செய்யும் துறைகள் ஆகின. இயற்கையாகவே அவர் ஒரு அரசியல்வாதிகளின் கருப்புபண பினாமி ஆகிறார்.

பல சதுர கி மீ பரப்பளவு நிலங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்டன. அவர் அனுமதி இன்றி நிலம் விற்க வாங்க முடியாது என்ற நிலை புகுத்தப்பட்டது. எல்லாகார்ப்பரேட் மடங்களும் போலவே இங்கும் கல்வி மருத்துவம் என்ற சேவை முகமூடி தேவைப்பட ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் பலமாக செல்வாக்கை நிலைநிறுத்திய பங்காரு அதையும் செய்தார். தன் மனைவியை உள்ளூராட்சி தலைவர் ஆக கொண்டுவந்தார். அதாவது கணவர் சாமியார் மனைவி உள்ளூர் நிர்வாக தலைவர். ஆஹா! அவரது ஒரு மகனுக்கு த நா அரசின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பெண் எடுத்தார்கள்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. மருத்துவ கல்லூரி விடுதியில் தண்ணீர் வராததால் குரல் கொடுத்த மாணவன் அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் தொடர்ந்து நடந்த கலவரத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதும் வரலாறு. நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் அல்லது மாணவர்கள் அமைப்பு எதுவும் குரல் எழுப்பிட முடியாது, எழுப்பினால் நிர்வாகத்தின் ரவுடிகள் சிறப்பாக கவனிப்பார்கள்.

பல்மருத்துவகல்லூரி தொடங்கி அனுமதி பெற பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி நிர்வாகத்தின் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் மக்கள் சமூகத்திலும் உள்ளூர் அரசியலிலும் தேர்தல்களிலும் ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது, உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு திராவிட கட்சிகளும் சரி இடதுசாரி இயக்கங்களும் சரி எந்த அளவுக்கு குரல் எழுப்ப முடிகிறது, கடந்த 30, 35 வருடங்களில் உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்ட இயக்கங்கள் என்னென்ன, என்னென்ன வடிவங்களில் நடத்தப்பட்டன என்ற வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் மட்டுமே மேல்மருவத்தூர் என்ற தமிழ்நாட்டின் பகுதியில் உள்ளூர் அரசியல் இயக்கங்களின் பங்கு வளர்ந்துள்ளதா தேய்ந்து உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியும். தேய்ந்து இருந்தால் அதற்கான காரணம் வெட்ட வெளிச்சம்தான். இந்த லட்சணத்தில் பெண் உரிமை கோவில் நுழைவு என்று ஒரே கூச்சலாக உள்ளது. என்ன கோவில்? என்ன நுழைவு? ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின்பால் திரள வேண்டிய ஆண்களையும்

பெண் சமூகத்தையும் ஒரு சேர பங்காரு அடிகளார் ஹைஜாக் செய்யவில்லையா? இதில் பெண் உரிமை எங்கே வந்தது?

... ...

பார்ப்பனீய மடங்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பதும் இடைசாதி பினாமி மடங்களிலும் பீடங்களிலும் பெண்களுக்கு அனுமதி அளிப்பதும் இரண்டுமே ஜனநாயக விரோத சக்திகளுக்கு உவப்பானவைதான். ஒன்றில் மறுப்பதை இன்னொன்றில் balance செய்வது, இதில் நமக்கென்ன உள்ளது உவப்பு அடைய? இரண்டையும் தாண்டிய பங்காருவின் ஜுனியர் ஜக்கியின் வழிபாட்டில் ஜீன்ஸ், டிரம்ஸ், ட்ரம்பெட், கும்பல் கும்பலாக வெளிநாட்டு ஸ்டைல் டான்ஸ், வண்ண விளக்குகள் என்று வேறு ஒரு வடிவத்தில் உள்ளதே, மேல்மருவத்தூரை விடவும் அங்கே பெண்ணுரிமை ஜாஸ்தி என்று மார்க் போடலாமா? 

உண்மையில் ஜக்கி, நித்யானந்தா, பிரேமானந்தா எல்லோருக்கும் பங்காருதான் வழிகாட்டி. எல்லோரும் அவரை தொடர்ந்து வந்தவர்கள். கர்நாடகாவில் இருந்து ஜக்கி இங்கே யாரை முன்னுதாரணமாக கொண்டு வந்தான்? பல நூறு ஏக்கர் அரசு வனங்களை அவன் வளைத்துப்போட்டு டெல்லியின் அரசியலை நடத்துகிறான் எனில் பங்காருதான் முன்னோடி. பெண்கள், சொத்து என்று கொட்டம் அடித்து இப்போது நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கும் ஜக்கிக்கும் பங்காருவுக்கும் அரசு நிர்வாகத்தின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. 

வளர்ச்சியாக வார வழிபாட்டு மன்றம் என்ற ஒரு அமைப்பு. நூற்றுக்கணக்கான மக்கள் திரளை பார்க்க முடிகிறது. இது பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்கள் கூட்டம். இந்த கூட்டம் இயல்பாக யாரை நோக்கி வந்திருக்க வேண்டும்? பார்ப்பனீய இந்துத்துவா அமைப்பான ஆர் எஸ் எஸ் காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாத மக்களை திட்டமிட்டு தன் வட்டத்துக்குள் கொண்டு வந்தது எனில் பங்காரு, ஜக்கி போன்றோரின் வழிபாட்டு அல்லது அபிமானிகள் அமைப்புகளும் அதே வேலையைத்தான் செய்கின்றன. சுருக்கமாக இந்த அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று complementary ஆனவை. அதாவது எப்படி ஆனாலும் உழைக்கும் மக்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் பின்னால் திரண்டு விட கூடாது என்பதில் கவனமாக உள்ளன. உழைக்கும் மக்களின் எதிரிகளான அரசு அமைப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இப்படியான ஆன்மீக முகமுடி பேர்வழிகளும் அமைப்புகளும் தேவைப்படுகிறார்கள், இந்த அமைப்புகள் சிதைந்து விடாமல் கவனமாக இருப்பார்கள். வனநிலத்தை ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்ததை மறந்து தள்ளிவிட்டு போக முடியாது.

வள்ளலார், வைகுண்டசாமி வரிசையில் திருடர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமா? அந்த வேலையை பார்ப்பனீய கும்பல் முயற்சி செய்து பார்க்கும், நம் வேலை அது அல்ல.

20.10.2023

திங்கள், அக்டோபர் 16, 2023

மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

 
மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

- எஸ் வி ராஜதுரை

வரலற்றில் வர்க்க போராட்டங்கள் மதவடிவங்களிலும் வெளிப்படுவதை மார்க்சியம் எடுத்துக்காட்டியிருக்குறது. இதற்குப் பலரும் அறிந்துள்ள எடுத்துக்காட்டு, 'ஜெர்மனியில் உழவர் போர் என்னும் நூல். இதில் எங்கெல்ஸ், தாமஸ் முன்ஸர் என்பவரின் தலைமையில் நடந்த ஏழை உழவர்களின் போராட்டத்தில் விவிலியமும் கிறிஸ்தவக் கருத்துக்களும் எவ்வாறு ஒடுக்குவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார். தென்னிந்தியாவில் சமணபெளத்த மதங்களுக்கு எதிராக பக்திமார்க்கம் என அழைக்கப்படும் சைவமும் வைணவமும் நடத்திய போரட்டங்களும்கூட வணிக வர்க்கத்திற்கு எதிராக சாதிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் நடத்திய போராட்டங்களே எனச் சில மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

'மாப்பிள்ளைமார்' அல்லது 'மாப்ளாக்கள்' என அழைக்கப்படும் மலையாள முஸ்லிம்கள் 1921-22ஆம் ஆண்டுகளில் நடத்திய கிளர்ச்சியும் கூட வர்க்கப்போராட்டத்தின் வடிவமே என்பதை பிரிட்டிஷ் வரலாற்றறிஞர் கான்ராட் உட் Conrod Wood நிறுவுகிறார். அவரது நூலின் தமிழாக்கம் ஆன 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' (அலைகள் வெளியீடு, சென்னை), அன்றைய சென்னை பெருமாநிலத்தின் (Madras Presidency) பகுதியாக இருந்ததும் இன்றைய கேரள மாநிலத்தை சேர்ந்ததுமான மலபார் பகுதியில் 1921 ஆகஸ்ட் முதல் 1922 முற்பகுதி வரை நூற்றுக்கணக்கான சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ நான்கு இலட்சம் மாப்பிள்ளைமார் வாழ்ந்த பகுதியில் நடந்த இக்கிளர்ச்சி, பார்ப்பனர்கள், நாயர்கள் உள்ளிட்ட மேல் சாதி இந்துக்களுக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக நடந்த வர்க்கப்போராட்டம் ஆகும். மலபார் பகுதியில் இருந்த நிலவுடைமை அமைப்பு அன்றைய சென்னை பெருமாநிலத்தின் வேறெந்த பகுதியிலும் காணப்படாத ஒன்று. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்தியதையை பெற்றிருந்த (ஆனால் சட்டப்படி நிலத்தின் உடைமையாளர்களாக இல்லாது இருந்த) சாதிய இந்துக்களுக்கும் (ஜென்மிகள்), அவர்களிடம் குத்தகைதாரர்களாகவும் கூலி உழவர்களாகவும் இருந்த மாப்பிள்ளைமார்களுக்கும் இடையே, ஜென்மிகளின் சுரண்டலுக்கு எதிராக நடந்த இக்கிளர்ச்சி யில் ஜென்மிகளுக்கு சார்பாகவே பிரிட்டிஷ் இந்திய நிர்வாக யந்திரம் நடந்துகொண்டது.

ஜென்மிகளுக்கு ம் சாதி இந்துக்களுக்கும் எதிராக 1836-1919ஆம் ஆண்டுகளிலேயே பல்வேறு கிளர்ச்சி கள்  நடந்து இருப்பினும் 1921_22 ஆம் ஆண்டு கிளர்ச்சி தான்  மேலும் பரவலானதாகவும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடத்தப்பட்டது. எனினும் இதில் மலபார் பகுதியில் இருந்த எரநாடு போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் இருந்த மாப்பிளைமார் மட்டுமே கலந்துகொண்டனர். ஏராளமான மேல் சாதி இந்துக்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பாலியல் வன்முறைகளும் நடந்தன. ஜென்மிகளுக்கு எதிராக மாப்பிள்ளைமார் நடத்திய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம் பொருளாதார சுரண்டல் என்றாலும் குத்தகைதாரர்களும் ஏழை உழவர்களும் ஒன்று கூடுவதற்கு தடையாக அவர்கள் தொடர்பு வட்டம் குறுகியதாக இருந்தது. சிதறிக்கிடந்த அவர்களை நெருக்கமான தொடர்புக்குள் கொண்டுவந்தவை அவர்கள் வழிபாட்டு தலங்களே ஆகும்.

இஸ்லாமிய மதத்தலைவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அந்த கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் 'தங்கள்கள்' என சொல்லப்படும் மதத்தலைவர்கள் சிலர் அந்த வர்க்கப்போராட்டத்திற்கு பிற மதத்தவர் இடையே இருந்த சுரண்டப்படும் மக்களினதும் ஜனநாயக சக்திகளினதும் ஆதரவை திரட்டுவதற்கு பதிலாக மூர்க்கத்தனமான மதவெறி போராட்டமாக அதை திசை திருப்பினர். அதேபோல் மாப்பிள்ளைமார் இடையே இருந்த வணிக வர்க்கமும் ஆதரவு தரவில்லை. விதிவிலக்காக சில வணிகர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோதிலும் கிளர்ச்சிக்கு மத அடிப்படை வழங்கியவர்கள் கற்பிதம் செய்த 'மாப்ளா ராஜ்ஜியம்' நமது காலத்தின் தாலிபான் ஆட்சியின் உருவரைவு என்று கூட சொல்லலாம். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் பரந்துபட்ட இஸ்லாமிய மக்களின் விடுதலைபோராட்டங்கள்,  மத அடிப்படைவாதிகளின் தலைமையின் கீழ் வந்தால், புதிய வகையான பாசிசம்தான் உருவாகும் என்பது அன்றைய தங்கள்களில் இருந்து இன்றைய ஒசாமா பின் லேடன் வரை தொடர்ந்து மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த கிளர்ச்சியை பொருத்தவரை தேசியவாதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டை கான்ராட் உட் விளக்குகிறார்: "(மாப்ளா) கிளர்ச்சி மண்டலத்தில் கிலாபத் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததில் பொறுப்பான தலைவர்கள், கிளர்ச்சியில் எந்த பொறுப்பிலும் பங்கேற்காமல் இருந்தது மட்டுமல்ல; தமது கிலாபத் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருமாறி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக மாறியது கண்டு ஒட்டுமொத்தமாக அதனை கண்டனம் செய்தார்கள்... சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, இந்த கிளர்ச்சி ஒரு பைத்தியக்காரத்தனமான பாய்ச்சல் என்றும் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்க கூடியது என்றும் வர்ணித்தார்."

மாப்ளா கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு தன் காவல்துறையை மட்டுமின்றி இராணுவத்தையும் பயன்படுத்தி யது. அது மட்டுமின்றி இன்று சர்வாதிகார ஆட்சிகள் நிலவும் இலத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் இருப்பவை போன்ற 'உஷார் படைகளை' (vigilantes) - அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள குடிமக்களின் படைகளை - உருவாக்கியது. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்த சால்வா ஜுடம் போன்ற 'குடிமக்கள் படை' ஒன்றை உருவாக்கிய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்தியாவில் இப்போதும் உள்ளதும் மூர்க்கத்தனமாக அடக்குமுறைகளுக்குப் பிரசித்தி பெற்றதும் ஆன 'மலபார் சிறப்பு காவல்படை'யையும் 1921இல் உருவாக்கியது. அதே சமயம், இஸ்லாமிய குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரின் பிரச்னையை மதச்சார்பற்ற வகையில் அணுகி அவற்றை தீர்ப்பதற்கான இடதுசாரி விவசாயி சங்கங்கள் உருவாவதற்கும் இந்த கிளர்ச்சி காரணமாயிற்று. நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வர்க்கப்போராட்டத்தின் நியாயங்கள், பலகீனங்கள் ஆகியவற்றை விளக்கும் இந்த நூலை தமிழாக்கம் செய்துள்ள மு. இக்பால் அகமதுக்கு இது முதல் முயற்சி என்பதால், ஆங்காங்கே தென்படும் சில நெருடல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

...

'பார்வையிழத்தலும் பார்த்தலும்'

எஸ் வி ராஜதுரை, என் சி பி எச், மே 2016

... ... ... ...

எனது முதல் மொழிபெயர்ப்பு நூல் 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' அலைகள் வெளியீட்டகத்தால் 2007 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எஸ் வி ஆர் அவர்கள் இந்த நூலுக்கு இப்படி ஒரு மதிப்புரையை எழுதி இருப்பதை நான் இப்போதுதான் அறிவேன்! நன்றி தோழர் எஸ் வி ஆர்!

16/10/2023