புதன், மே 12, 2021

அந்தமான் சிறை: துரோகிகளும் தியாகிகளும்

"... இதுவரையிலும் சிறையில் எனது நடத்தை மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும், ஆறு மாதம் முடிந்தபின்னும் கூட சிறையில் இருந்து என்னை வெளியே அனுப்பவில்லை... என்னால் முடிந்தவரை நான் மிக ஒழுக்கமானவனாகவே இருந்துள்ளேன்.... அரசாங்கம் எனக்கு என்னவிதமான வேலை கொடுத்தாலும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளேன்.... ஓடிப்போன மகன் எங்கேதான் திரும்பி வருவான், பெற்றோரின் வடிவில் உள்ள அரசின் வாசலைத்தவிர?... அரசு நிர்ணயிக்கும் காலம் வரை நானும் என் சகோதரனும் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளிக்க உளமாற சம்மதிக்கின்றோம்..."

- இப்படி ஒரு உறுதிமொழியை பிரிட்டிஷ் ராணிக்கு கடிதம் மூலம் சமர்ப்பித்தவரின் பெயர் வினாயக் தாமோதர் சவர்க்கார், கைதி எண் 32778, அந்தமான் சிறை, கடிதம் எழுதிய நாள் 14 11 1913.  ஆதாரம் R C Majumdar என்பவர் எழுதிய Penal settlements in Andamans என்னும் நூல்.

... .... ....

முதல் இந்திய விடுதலைப்போர் என்று மார்க்ஸ் ஏங்கெல்சால் பெருமையுடன் அழைக்கப்பட்ட சிப்பாய் கலகம் டெல்லியின் விளிம்பில் உள்ள 

மீரட் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ முகாமில் 10 5 1857 வெடித்தது. 1 11 1858 வரை, அதாவது ஒன்றரை வருடங்கள், நீடித்தது இக்கலகம். முகலாய பேரரசின் ஆட்சிக்கும் கம்பெனியின் ஆட்சிக்கும் முடிவு கட்டினாலும், ஆட்சியதிகாரத்தை பிரிட்டிஷ் ராணியின் கைகளுக்கு மாறியது. 1757 பிளாசி யுத்தத்தை தொடர்ந்து 1612இல் கிழக்கிந்திய கம்பெனி இங்கே தன் நாட்டாமையை நிறுவியது. கலகத்தின் பின்னர்தான், இந்தியா உள்ளிட்ட தன் காலனிய நாடுகளின் விடுதலை போராட்டங்களில் ஈடுபடுவோரை நாடுகடத்தி வைப்பதற்கு என்றே தனியாக ஒரு சிறைச்சாலையை கட்ட வேண்டும் என்ற பிரிட்டிஷாரின் எண்ணமும் திட்டமும் தீவிரமானது. சென்னையில் இருந்து 1600 கிமீ கிழக்கே இந்திய பெருங்கடலுக்குள் உள்ள அந்தமான்தான் சிறை கட்ட தகுதியான இடம் என்று முடிவு எடுத்து, 1896-1906 காலக்கட்டத்தில் சிறையும் கட்டப்பட்டது. பர்மாவில் இருந்து அதற்கான செங்கல்கள் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. கட்டியவர்கள் வேறு யாரும் இல்லை, நாடு கடத்தப்பட்ட தண்டனை கைதிகளை கொண்டே சிறை கட்டப்பட்டது. வெறும் தீவும் காடும் பழங்குடியினரும் தவிர வேறு எதுவும் இல்லாத தீவில் இக்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பல நூறு பேர் நோயிலும் விஷப்பூச்சிகள், பாம்புகள் கடியிலும் பழங்குடியினர் தாக்குதலுக்கு ஆளாகியும் செத்து மடிந்த கதை மிக நீண்டது. தீவுகளில் இருந்த பழங்குடியினர் அறுபதாயிரம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் என்று வரலாறு சொல்கின்றது. 2015இல் அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தேன். சிறைச்சாலையையும் பார்த்தேன்.

இச்சிறைச்சாலை கட்டப்படும் முன் Viper தீவில் முதல் சிறைச்சாலை கட்டப்பட்டது. அதற்கு முன்பே 1857 சிப்பாய் கலகத்தை ஒடுக்கிய கம்பெனி நிர்வாகம், அந்தமான் தீவை கட்டப்படாத திறந்தவெளி சிறையாக பயன்படுத்தி சிப்பாய் கலக போராளிகளை தனிமைப்படுத்தி உள்ளது. மிகப்பல கிளர்ச்சியாளர்களை கொன்ற பின், 200கும் மேற்பட்ட வர்களை இத்தீவுக்கு கடத்தியது. David Barry என்ற சிறை அதிகாரியும் மேஜர் James pattis walker என்பவரும் கண்காணித்து உள்ளனர். அதாவது, முகலாய பேரரசின் கடைசி குடும்பத்தினரும் கிளர்ச்சிக்கு ஆதரவு கேட்டு கடைசி மன்னர் பகதூர் ஷாவுக்கு கடிதம் எழுதியவர்களும் தீவுக்கு கடத்தப்பட்டார்கள். மன்னர் ஷா பர்மாவுக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார், அங்கேதான் இறந்தார். ரங்கூன் என்னும் ஊரில்தான் அவர் கல்லறை உள்ளது. 

இந்தியாவின் பிற பகுதிகளில் அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மட்டுமின்றி கராச்சியில் இருந்து 733 பேர் 1868 ஏப்ரல் மாதம் இங்கே கடத்தப்பட்டனர். இங்கு கடத்தப்பட்ட போராளிகளில் பின்வரும் போராட்ட இயக்கங்களில் பங்கு பெற்றவர்களும் அடங்குவர்: வஹாபி இயக்கம் 1830-1869, கேரளாவின் மாப்ளா கிளர்ச்சி 1792-1947, முதல் Rampa ராம்பா கிளர்ச்சி 1878-1879, இரண்டாவது ராம்பா கிளர்ச்சி 1922-1924, Tharawadi தாராவதி விவசாயிகள் கிளர்ச்சி, பர்மா, 1930, வங்கத்தின் அலிப்பூர் சாதி வழக்கு 1908 (இவர்களில் 34 பேர் 1909இல் அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள்). கதார் புரட்சியாளர்கள் இந்திய விடுதலைக்காக Kama Gata Maru என்னும் கப்பலில் நாடுகள் தோறும் சுற்றி 1914இல் கல்கத்தா வந்தார்கள், கைது செய்யப்பட்ட அவர்களும் அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள்.

8 2 1872 அன்று வைப்பர் தீவில் கைதிகளை பார்வையிட வந்த வைசிராய் ஆன Lord Mayo என்பவரை, வஹாபி போராளி Sher Ali கொன்றார். 11 3 1872 அன்று அலி தீவில் தூக்கில் இடப்பட்டார்.

மார்ச் 1868 அன்று தீவில் இருந்து தப்பிக்க முயன்று கடலில் பயணித்த 238 கைதிகள் ஏப்ரல் மாதம் பிடிபட்டார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, 87 பேர் தூக்கில் இடப்பட்டார்கள்.

அதன் பின்பு ஏழு அலகுகளும் இரண்டு மாடிகளும் கொண்ட பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது, ஏனெனில் சுற்றிலும் கடல் அன்றி எதுவுமில்லை. அடைக்கப்பட்ட பின்னர் அவர்கள் சந்தித்த கொடுமைகள் எழுத முடியாதவை. கொடும் சித்ரவதை, சாட்டையடி, துப்பாக்கிச்சூடு, தூக்கு, இரும்பு செக்கில் எண்ணெய் எடுப்பது, தேங்காய் நாரில் கயிறு திரிப்பது, குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தால் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பது, எப்போதும் கழுத்து கைகள் கால்களில் சங்கிலி என்று கடும் தண்டனைகள். 

இரண்டாவது லாகூர் சதி வழக்கில் பகத்சிங் உடன் 16 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் 1931இல் தூக்கில் இடப்பட்டனர். யதீந்திர நாத் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். பட்டுகேஷ்வர் தத், பிஜோய் குமார் சின்ஹா, சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர், டாக்டர் கயா பிரசாத், கமல்நாத் திவாரி, மஹாவீர் சிங் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள். 

பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் நவ்ஜவான் பாரத் சபாவில் இயங்கிய மூவர் மஹாவீர் சிங், மொஹத் மொய்த்ரா, மோகன் கிசோர் நாமதாஸ். பகத்சிங், பட்டுகேஷ்வர் தத், துர்க்காவதி தேவி (பகவதி சரண் வோராவின் மனைவி) ஆகியோர் லாகூரில் இருந்து ரயிலில் தப்பிக்க உதவியவர் மஹாவீர் சிங், இரண்டாவது லாகூர் சதி வழக்கில் அவரும் சேர்க்கப்பட்டார். அவருடன் ஆயுத சட்ட வழக்கில் கைதான மொஹத் மொய்த்ரா, மோகன் கிசோர் ஆகியோரும் அந்தமானில் அடைக்கப்பட்டார்கள். உல்லாஸ்கர் தத் கொடும் சித்ரவதைக்கு ஆளாகி மனநிலை பிறழ்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டார், மருத்துவமனையில் 14 ஆண்டுகள் இருந்து மறைந்தார். இந்து பூஷன் ராய் எண்ணெய் பிழியும் கொடும் தண்டனையை தாங்க முடியாமல் தன் துணியை கிழித்து தூக்கிட்டு மடிந்தார். 

காகோரி ரயில் கொள்ளை (9 8 1925) போராளிகள்,  சிட்டகாங் ஆயுதகிடங்கு கொள்ளையில் ஈடுபட்ட யுகாந்தர் இயக்க தலைவர் மாஸ்டர் சூர்யா சென் ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டனர். சூர்யா சென் 13 1 1934இல் தூக்கில் இடப்பட்டார். 

சிறையின் கொடுமைகள், மனித உரிமைகள் மீறல், அரசியல் கைதிகளாக நடத்தாமல் அவமானப்படுத்துவது, மிக மோசமான தரமற்ற உணவு, செய்தித்தாள் வாசிக்கும் உரிமை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 13 5 1933 முதல் 2 6 1933 வரை 46 நாட்கள் உண்ணாவிரதப் போர் நடத்தப்பட்டது. இங்கு கரை கடந்த இந்தியாவில் இப்போராட்டத்துக்கு மக்கள் திரண்டு ஆதரவு அளித்தார்கள். மஹாவீர் சிங், மொய்த்ரா, மோகன் கிசோர் ஆகியோருக்கு குழாய் மூலம் வலுக்கட்டாயமாக பால் செலுத்தப்பட்டதால் மூவரும் மரணமுற்றார்கள். பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் பயந்து ஓடினார்கள். மூவரின் உடலும் கடலில் வீசப்பட்டது. 

சிறையின் இத்தனை கொடுமைகளையும் தாங்கியும் மீறியும் கம்யூனிஸ்டுகள் இயக்கவாதிகள் என்பதை மெய்ப்பித்தார்கள். 1935இல் 39 கைதிகள் சேர்ந்து  சிறைக்குள்ளேயே Communist Consolidation என்ற அமைப்பை நிறுவினர், Call என்ற கையெழுத்து பத்திரிகையையும் நடத்தினர். அதே வருடம் சிறைக்குள் மே தினம் கொண்டாடினர்.

சிறையில் இருந்த மற்றவர்களில் அம்பிகா சக்ரவர்த்தி, கணேஷ் கோஷ், அனந்த் சிங், லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, ரன்தீர் தாஸ் குப்தா, ஃபகீர் சென், ஹரிகிருஷ்ண கோனார், பிப்ளபி துருபேஷ் சட்டோபாத்யாய, சுதாங்சு தாஸ் குப்தா, ஆனந்த சக்ரோவர்த்தி, நளினி தாஸ், ஜிபேந்திர தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விடுதலைக்குப் பின் இவர்களில் பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில்) பல பொறுப்புகளில் பணியாற்றினார்கள்.

.... .... ...

அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஏறத்தாழ 350 தனித்தனி தீவுகளை கொண்டது. வடக்கு முனையில் இருந்து பர்மா, தாய்லாந்து நாடுகளுக்கும் தெற்கில் இப்போதுள்ள இந்திரா முனையில் இருந்து இந்தோனேசியாவுக்கும் 3-4 மணி நேரத்தில் அதிவேக விசைப்படகுகளில் சென்றுவிடலாம் என்று சொல்கின்றனர். 

சிறையின் உள்ளே உள்ள காட்சியகத்தில் சுமார் 10x6 அளவில் ஒருவரின் உருவப்படம் உள்ளது. அந்தமான் விமானநிலையத்துக்கு அவர் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. நான் பார்த்தேன். அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்த சவர்க்கார். அவர் உருவப்படத்தைத்தான் அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் திறந்து வைத்தார். அதே சிறை வளாகத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கில் இடப்படும் கொட்டடியும் உள்ளது, அதையும் பார்த்தேன். 

உருவப்படம் தேச துரோகியின் கதை சொல்ல, தூக்கு மேடையோ உருவமற்ற தியாகிகளின் வரலாற்றை பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றது.

டேவிட் ஹாலும் ஹாட் கேக்கும்

சமீபத்தில் மதுரையில் நடந்த மூத்த தோழர் (மரியாதைக்குத்தான் சொன்னேன், அவரும் நானும் கழுதைக மாதிரி சுத்தாத தியேட்டர் மதுரையில் பாக்கி இல்லை) மகள் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். Heritage என்ற ரிசார்ட்ட்டுக்குள் திருமணம். அது மிகப்பெரிய வனம். மதுரை கோட்ஸ் மில்லின் பெரிய அதிகாரிகள் தங்கியிருந்த குடியிருப்புகள். மதுரை க்ளப். அதாவது 50, 60 வருடங்கள் முன்பு மதுரையின் விளிம்பில் கோச்சடையில் இருந்த காடு என்று சொல்லலாம். இப்போது நகருக்குள் உள்ளது! அத்தனையும் ஆங்கிலேய கட்டிடக்கலை அம்சங்களுடன் இருந்த குடியிருப்புகள். வனத்தை பாதுகாத்து கட்டிடங்களை கட்டியுள்ளார்கள். மதுரை கோட்ஸ் மூடிய பின் அதனை வாங்கியவர்கள் ஹோட்டலாக, தங்கும் விடுதியாக, திருமண மண்டபமாக பயன்படுத்த எண்ணி யுள்ளார்கள். பழைமையையும் அழகையும் சேதப்படுத்தாமல் திட்டமிட எண்ணி உலகப்புகழ் பெற்ற இயற்கையுடன் இசைந்த கட்டிடக்கலை வல்லுநர் ஆன Geoffrey Bawa வின் மாணவர் வினோத் ஜெயசிங்கே வசம் பொறுப்பை கொடுத்தார்களாம். Bawa இலங்கை கொழும்புவில் பிறந்தவர். 1919-2003 காலத்தில் வாழ்ந்தவர். பாவாவின் கலை பற்றி Architectural Digest இதழ்களில் வாசித்தால் இப்படி ஒரு மனிதரா என்று வியப்புறுவோம். எனக்கு கொச்சியில் fort kochi நினைவுக்கு வந்தது. அறிமுகம் இல்லாத ஒரு பெண் சிநேகிதி கொடுத்த சைக்கிளில் அவளுடன் ஹெரிட்டேஜில் முழுக்க எங்களை மறந்து சுற்றிக்கொண்டு திரிந்தான் என் மகன்.

டேவிட் ஹால் David hall  எனப்படும் பழம்பெரும் கட்டிடம் அது. 1665இல் கட்டப்பட்டது. கேரளத்தின் மிளகும் வாசனை மசாலா பொருட்களும் அறிந்த டச்சுக்காரர்கள் கொச்சியை 1663 ஜனவரியில் போர்த்துக்கீசியரிடம் இருந்து கைப்பற்றினார்கள். 1669இல் Hendrik Adriann van rheed tot drakestein என்பவரை டச்சு மலபாரின் கவர்னராக நியமித்தனர்.  கேரளத்தின் மருத்துவ குணங்கள் அடங்கிய செடி கொடிகள் தாவரங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஒரு நூலை எழுதும் முயற்சியில் அவர் இறங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் அவருக்கு தகவல்களை திரட்டி அளித்துள்ளார்கள். அவருடன் மலையாளி ஆன இட்டி அச்சுதன் வைத்தியர் என்பவரும் நூலாசிரியர் ஆக இருந்துள்ளார். Hortus  Malabaricus  எனப்படும் தொகுப்பு உருவானது. பின்னர் இது மலையாளம் உட்பட பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு கைமாறாக இப்போது காணப்படும் ஃபோர்ட் கொச்சி பகுதியில் சர்ச்சுகளை கட்டிக்கொள்ள அவர் டச்சுக்காரர்களுக்கு அனுமதி அளிக்க, அவர்களோ போர்த்துக்கீசியர் கட்டியிருந்த தேவாலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள். இவ்வாறாக மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்களை இடித்து தள்ளி இருக்கின்றார்கள். அந்த இடிபாடுகளின் மிச்சங்களில் இருந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூன்று வீடுகளை கட்டியதில் ஒன்றுதான் டேவிட் ஹால். 1665இல் அதில் van rheed குடியிருந்தார் என்றும் காயம் அடைந்த டச்சு படையினருக்கு ஆன பராமரிப்பு விடுதியாக இருந்திருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன. நிற்க.

கொச்சியில் விடுமுறை நாட்களை களிப்பது அல்லது நண்பர்கள் வந்தால் அழைத்துக்கொண்டு செல்வது எனில் ஃபோர்ட் கொச்சி, மட்டஞ்சேரி, செராயி கடற்கரை மூன்றும்தான். முதல் இரண்டும் 500 வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துக்கொண்டு செல்லும் பழமையான அமைதியான சிறு நகரங்கள். ஐரோப்பிய கட்டிடக்கலையின் அழகை நுகரலாம். இப்போது சுற்றுலாப்பயணிகளை நம்பி இயங்கும் வாசனை மசாலா பொருட்கள் விற்பனை, உணவு விடுதிகள், சிறு கடைகள், பழம்பொருள் கடைகள் இயங்குகின்றன. மிகப்பெரிய பழமையான கட்டிடங்கள் சரக்கு கிடங்குகளாக உள்ளன. இரண்டு நாட்கள் என் விருந்தினராக இருந்தவர் மறைந்த அருமைத்தோழர் மதுரை ஜோதிராம். மிகச்சிறந்த வாசிப்பாளி, ரசிகர் அவர், நான் அறிவேன். தொலைபேசியில் அழைத்த ஒரு வாரத்தில் வந்துவிட்டார்.

டேவிட் ஹால் இப்போது CGH Earth எனப்படும் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரங்கில் எப்போதும் ஓவியக்கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். ஏதாவது கலை நிகழ்ச்சிகள், உரையாடல்கள் நடக்கும். பின்கட்டில்தான் கொட்டிக்கிடக்கும் அந்த அழகு! செடி கொடிகளும் அடர்ந்த மரங்களும் ஆழ்ந்த அமைதியும் நம்மை சூழ்ந்து இருக்க, நாற்காலிகள் மேசைகள் நமக்கு. அது சிறிய அளவு சிற்றுண்டி சாலை. சூடான கேக் ஆர்டர் செய்தால் கிடைக்கும், வகை வகையாக. Swedish hot cake எனக்கு மிகுந்த விருப்பம். இப்படி ஒரு நாள் மாலையில் அங்கு அமர்ந்து இருந்த போதில் மழை பிடிக்க, அடடா! யாருமற்ற அந்த மாலைப்பொழுது இனி எப்போது வாய்க்கும்?

எர்ணாகுளம் என்ற கொச்சி, இந்து முஸ்லிம் கிறித்துவ மக்களை சமமாக உள்ளடக்கிய நகரம். நான் இருந்த நாட்களில் அப்படி ஒரு கலப்பான நகரில் இருந்ததாகவோ பிறர் என்னை இசுலாமியனாக பார்த்ததாகவோ நான் என்றும் உணர்ந்து இல்லை. அவரவர் மதம், அவரவர் உணவு, அவரவர் உடை, அவரவர் கலாச்சாரம், ஆனால் எல்லோருக்கும் பொதுவாக நல்லிணக்கம். மரையின் டிரைவ் எனப்படும் காஸ்ட்லி ஏரியா. கடலின் ஒரு கரையில் பேப்பூர் சுல்தான் வைக்கம் முகமது பஷீர் எப்போதோ புத்தகங்களை விற்றுகொண்டு இருந்ததாக வாசித்துள்ளேன். அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அது எந்த இடமாக இருக்கக்கூடும் என்று புத்தி பேதலிக்க நான் யோசித்து பார்த்தது உண்டு.

பொழிச்ச மீனும் ஹாட் கேக்கும் உண்டு கட்டஞ்சாயாவும் அருந்திய பஷீரும் ஜோதிராமும் இப்போதும் என்னுடன் உரையாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

படத்தில் டேவிட் ஹாலின் பின்கட்டு.

ஞாயிறு, மே 09, 2021

ரங்கணத்திட்டும் குற்றாலக்குறவஞ்சியும்

கொடகு எனப்படும் கூர்க் coorg நகரின் மீது ஒரு காதல் இருந்துகொண்டே இருந்தது. 2018 டிசம்பரில் சாத்தியமானது. காதலுக்கு காரணம் காப்பி மட்டும் அல்ல, பலவிதமான பழங்களில் இருந்தும் வடிக்கப்படும் வைன் முக்கியமான காரணம்! மிளகாயில் இருந்து தயாரிக்கப்பட்ட வைனையும் ருசி பார்த்தேன்! 

மைசூர் அரண்மனையை விடவும் ஸ்ரீரங்கப்பட்டினமும் திப்புவின் கோடைகால அரண்மனை, திப்பு வீரமரணம் எய்திய இடம், திப்புவின் தாய் தந்தையர் உட்பட சொந்தங்கள் அனைவரும் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியனவும் என்னை கவனிக்க வைத்த வரலாற்று சிறப்புமிக்க தலங்கள். திப்புவின் வாள், அவரது உடைகள் உள்ளிட்ட பழம்பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட 1799இல்தான் திப்புவும் களத்தில் கொல்லப்படுகின்றான். அவனது இரண்டு இளம்பிள்ளைகளை காரன் வாலிஸ் பிணைக்கைதிகளாக கல்கத்தாவுக்கு கொண்டு சென்றான்.

காப்பித்தோட்டங்கள் எங்கிலும் நிறைந்த கொடகு. மெர்காரா என்ற மடிகரேதான் தலைநகர். அங்குள்ள பழம்பெரும் அரண்மனையில் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. நாங்கள் சென்றபோது மிகப்பெருங்கூட்டம் அங்கே, லோக் அதாலத்!

மைசூரில் திட்டமிடப்படாத பயணமாக ரங்கணத்திட்டு பறவைகள் காப்பிடம் சென்றது மறக்க முடியாது. காப்பிடம் திறக்கப்படும் நேரத்தில் முதல் பத்து வருகையாளர்களில் நாங்களும் நுழைந்தோம், ஆஹா! அது என்னவொரு அமைதியான காலைப்பொழுது! எத்தனை எத்தனை பறவைகள்! மிகப்பரந்த ஏரியின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்களில்தான் எத்தனை வகை பறவைகள், எத்தனை வண்ணங்கள்! முதலைகள் ஆங்காங்கே பாறைகளின் மீது வாயை திறந்தவாறு அசைவின்றி கிடந்தன, நாம் பயணிக்கும் படகின் கீழும் முதலைகள்தான். முதுபெரும் பறவையியலாளர் சலீம் அலியின் பெயரால் ஒரு காட்சியரங்கும் இருந்தது. ரோமுலஸ் விட்டேகரின் மனைவி Zahida என்ற Zai யின் அம்மாவுக்கு, சலீம் அலி மாமா உறவுமுறை. காங்கிரசை நிறுவிய A O Hume ஒரு பறவையியலாளர்தான். திரும்பி வர மனசில்லாமல்தான் திரும்பினோம். 

என் ஊரான தென்காசியின் அடையாளமான குற்றாலத்தைப் போற்றும் திருக்குற்றாலக் குறவஞ்சியை நினைவுகூர்ந்தேன். சிங்கன் வாயிலாக எத்தனை வகை பறவைகளை திரிகூடராசப்ப கவிராயர் பட்டியல் இடுகின்றார்!

சிங்கன், பறவைகள் வரவு கூறுதல்:

ஐயே! வருகின்றன பறவைகள்! திரிகூடநாயகரின் வாட்டமில்லாத வயல்களுள் வாரப்பற்றுக்காடு, தோட்டம் இவற்றில் எல்லாம் பலவகைப் பறவைகளும், நாரைகளும், அன்னங்களும் தாராக்களும், கூழைக்கடாக்களும், செங்கால் நாரையும் வருகின்றன ஐயே!

காடை, சம்பங்கோழி, காக்கை, கொண்டைக்குலாத்தி, மாடப்புறா, மயில் இவை வருகின்றன; 

வெள்ளைப்புறாக்களும், சகோரமான செம்போத்தும், ஆந்தையும் மீன் கொத்திப் பறவையும், பச்சைக்கிளிகளும், ஐந்துநிறக் கிளிக்கூட்டமும், மயில்களும், நாகணவாய்ப் பறவைகளும், உள்ளான்களும், சிட்டுக்குருவிகளும், கரிக்குருவிகளும், அன்றிற்பறவைகளும் சத்தமிட்டுக்கூடிப் பலநிற வேறுபாடுகளுடன் துள்ளி ஆடுகின்ற ஆலத்தையும் நான்முகன் தலையோட்டையும் கொண்ட திரிகூடநாதரின் மனைவியாராகிய குழல்வாய்மொழியம்மை எடுத்து அணிந்து கொள்ளுகின்ற ஐந்து நிறத்தை உடைய பட்டாடைபோல, பலவகை நிறத்துடன் பறவைகள் வருகின்றன ஐயே!

நூவன், பறவை பிடிக்கும் வகையினைச் சொல்லுதல்:

அடே குளுவா! பெரிய கண்களை உடையவான கண்ணிகளை நெருக்கிக் கீழே பதித்து வைத்தோமானால் காக்கைகளும் கூட அக் கண்ணிகளில் அகப்பட்டுக்கொள்ளும்; அக்கண்ணிகளை கீழே கவித்துப் பதித்து வைத்தோமானால் வக்காப்பறவையும் அகப்பட்டுக்கொள்ளும்; உலைந்து சுருங்கி இருக்கின்ற கண்ணிகளை நன்றாக முடிபோட்டுக் கீழே பதித்து வைத்தோமானால் உள்ளான் பறவைகளும் அகப்பட்டுக்கொள்ளும்; அதனால் அடே குற்றாலமலைக் குளுவா! குற்றாலமலைக் குளுவா! நீ சிக்குப்பட்ட கண்ணிகளைச் சிக்கெடுத்து கீழே பதித்து வைய்டா! குற்றாலமலைக் குளுவா!

நான் பிறந்த ஊரின் மீது இப்போது ஒரு சிறுபறவையாய் வட்டமிடுகின்றேன் கவிராயரே!

வடகிழக்கு நோக்கி அலைபாயும் மனது

மணிப்பூரில் இளம் பெண் தங்ஜம் மனோரமாவின் உயிரற்ற உடல் 11.7.2004 அன்று பமோன் காம்ப்பு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அசாம் ரைபில் 17ஆவது படைபிரிவு அவரை கைது செய்து கொண்டு சென்றது, அப்போது அவர் உயிருடன் இருந்தார். படைப்பிரிவினருக்கான சிறப்பு அதிகார சட்டம் என்ற AFSP act நடைமுறையில் இருந்தது. அது படையினருக்கு கட்டற்ற அதிகாரத்தை அள்ளி வழங்கியது. அதனை நீக்க வேண்டும் என்று வட கிழக்கு மாநில மக்களும் ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு பிறகு அசாம் ரைப்பிலின் உள்ளூர் தலைமையகம் முன்பாக ஏறத்தாழ 30 நடுத்தர வயதுப் பெண்கள் திரண்டு தம்மை நிர்வாணப்படுத்தி கொண்டு "இந்திய ராணுவமே, எங்களையும் மானபங்கம் செய், நாங்கள் மனோரமாவின் தாய்கள்" என்று ஆவேசமாக முழக்கமிட்டு போராடிய செய்தி உலகம் முழுக்க மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாம் உலகப்போரின் போக்கில், ஜெர்மனியுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசை இந்தியாவில் இருந்து தூக்கி எறிந்துவிடலாம் என்று நம்பிய சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரையும் சந்தித்தார். தாய்லாந்தில் இருந்து ரயில்பாதை அமைத்து பர்மா வழியாக மணிப்பூருக்குள் வர வேண்டும் என்று முனைந்து ஜப்பான் படை அமைத்த சயாம் மரண ரயில்பாதை இருண்ட வரலாற்றை கொண்டது. அது குறித்து தனியே ஒரு பதிவு எழுதினேன். பல லட்சம் தமிழர்கள் அதில் செத்து மடிந்தனர். ஒருவேளை அச்சு நாடுகள் வெற்றி பெற்று ஜப்பானியர் இந்தியாவுக்குள் வந்திருந்தால்...? 2015இல் அந்தமான் சென்று இருந்தபோது இதே எண்ணம் மனதில் உதித்தது. 1942 முதல் 45 வரை அந்தமான் ஜப்பானியர் வசம் இருந்தது. நேதாஜியின் வருகையை முன்னிட்டே அங்கு விமான ஓடுபாதை கட்டப்பட்டது! அங்கே ஜப்பானியப்படைகள் பதுங்கி இருக்க கட்டப்பட்ட பங்கர்களை உள்ளே சென்று பார்த்தேன். அந்தமானில் இருந்தும் பர்மா வழியாகவோ தாய்லாந்து வழியாகவோ இந்தியாவுக்குள் வரலாம்.

இந்தியாவின் ஏழு சகோதரிகள் Seven sisters எனப்படும் வட கிழக்கு மாநில மக்களின் பண்பாடு, மொழிகள், வரலாறு, கலை இலக்கியம் என்பன ஏனைய இந்தியப்பகுதியில் இருந்தும் பெரிதும் மாறுபட்டவை, எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. பழங்குடியினர் மிக அதிகம் வாழும் வட கிழக்கு இந்தியா. அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் ஆகியன.

2014 ஜனவரியில் கல்கத்தாவுக்கும் மேகாலயாவின் ஷில்லாங்குக்கும் சென்றிருந்தேன். காலை 6 மணிக்கு பொழுது விடியும், 5 மணிக்கு இருட்டி விடும்! இரவு குளிர் ஜனவரியில் 10 டிகிரிக்கும் குறைவு. ஷில்லாங் மக்கள்தொகை அடர்த்தி குறைவு. கிழக்கின் ஸ்காட்லாந்து என்று ஷில்லாங்கை சொல்கின்றனர், அவ்வளவு அழகு. பாராபாணி என்ற ஊரில் உள்ள உமியம் என்ற ஏரி மிக மிகப்பெரியது, அழகு மிக்கது. காசி மலைத்தொடர் அந்த மக்களின் வழிபாட்டுக்கு உரிய ஒன்று. காசி மொழி உண்டு. மக்கள் எளிமையானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். நமக்கு இங்கே கிடைக்கும் நுகர்பொருள் வசதிகளுடன் ஒப்பிட்டால், அவர்கள் வாழ்க்கை உண்மையில் பாராட்டத்தக்கது. இருப்பதைக் கொண்டு வாழ்கின்றனர். அசாமின் பகுதியாகவே முன்பு இருந்ததுதான் ஷில்லாங். விமான நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு சந்தைக்கு சென்று இருந்தோம். நம் பெருநகரங்களில் பெரும் மார்க்கெட் வீதிகளில் கிடைக்கும் பொருட்கள் கூட அந்த சந்தையில் இல்லை. ஆனால் காய்கறிகள், பழங்கள், கருவாடு, மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, குளிர் தங்கும் ஆடைகள், சீனப்பொருட்கள் ஆகியவற்றுக்கு குறைவில்லை. இந்த நுகர்பொருட்களுடன் அவர்கள் வாழ்க்கையை திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்று சொல்லலாமா? 

சமீபத்தில் பர்மாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற, பல எல்லை ஊர்களில் இருந்து மக்கள் இந்தியாவின் மிஜோரம் மாநிலத்துக்குள்வந்துவிட, மிஜோ மக்கள் அவர்களை வரவேற்று கட்டியணைத்தார்கள். காரணம், மியான்மரின் மக்களும் மிஜோ மக்களும் chin எனப்படும் ஒரே இனக்குழுவை சேர்ந்தவர்கள், ஒரே திபெத்தோ பர்மிய மொழிகளை பேசுகிறவர்கள், கலாச்சார, பழக்கவழக்கங்கள் இருவருக்கும் பொது. தவிர திருமண உறவுகள் இப்போதும் நீடிக்கின்றன! இதனால்தான் உள்ளே வருபவர்களை வெளியே தள்ளுங்கள் என்று மத்திய அரசு சொல்ல, அவர்கள் எங்கள் சொந்தங்கள், வரவேற்போம், பாதுகாப்போம் என்று மாநில முதல்வர் உறுதியாக சொல்லியிருக்கிறார். ஏப்ரல் 25 2021 The Hindu sunday magazine பாருங்கள்.

ஒரு வருடத்தில் அதிக அளவு மழைப்பொழிவு பெறும் சிரபுஞ்சி இங்கேதான் உள்ளது. மலைகளின் மீது இருந்து தொலைவில் தெரியும் பங்களாதேஷ் நாட்டை காட்டுகின்றார்கள், பார்க்கலாம்.

ஊடகங்களும் அரசு தரும் செய்திகளும் வட கிழக்கு மக்களை பயங்கரவாதிகளாகவே நமக்கு சித்தரித்து காட்டி இருக்கின்றன. அந்த மக்களை நேரில் காணும் யாரும் இக்கூற்றை நம்ப முடியாது. அவர்கள் பேசும் மொழிகளுக்கு என தனியான எழுத்துரு இல்லை.ஆங்கில எழுத்துக்களில் தம் மொழியை எழுதுகின்றனர். பல வட கிழக்கு பழங்குடியினர் மொழிகள் இதனால் அழிந்து வருகின்றன. மக்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். பிற பகுதி இந்திய மக்கள் வட கிழக்கு மக்களின் பண்பாடு, மொழி, கலை ஆகியவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்யாதது, மாநிலங்களின் வளர்ச்சியில் அரசின் பாராமுகம், எல்லையில் வாழும் அம்மக்களின் பிரத்யேக பிரச்னைகளை புரிந்துகொள்ள தவறும் அரசு நிர்வாகம், அவற்றை தேசப்பாதுகாப்பு, எல்லை பிரச்சனை ஆகியனவாக குறுக்கி பார்ப்பது ஆகியவைதான் வட கிழக்கு மக்களுக்கும் பிற பகுதி இந்திய மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்கி வைத்துள்ளன. இந்த மாநிலங்களின் மக்கள் அனைவரையும் சீன மக்களாகவே இதர இந்திய மக்கள் பார்ப்பதன் விளைவுதான் கொரோனா தொற்றின் தொடக்க காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கி கல்வி பயின்ற வட கிழக்கு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முட்டாள்தனமான தாக்குதல்கள். 

... ... ...

லைபாக்லை ஆண்ட்டி பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் சிறிய தேநீர் கடை நடத்தி வருகின்றாள். மாணவர்களுக்கு கடனில் கொடுத்தாலும் கணக்கு எதுவும் எழுதி வைப்பதில்லை அவள். ஆள்வோரும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து அந்த ஏரியாவை வளைத்துப்போட்டு பெரிய வணிக காம்ப்ளக்ஸ் கட்டுகின்றார்கள். லைபாக்லை ஆண்டியின் கடையும் வாழ்க்கையும் சேர்ந்து காணாமல் போகின்றன. ஒரு ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் ஆண்ட்டி, பலத்த காயம் அடைகின்றாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவள் கடையில் தேநீர் வாங்கி பருகி கணக்கில் எழுதி வைத்த மாணவர். இது போன்ற போராட்டங்களில் இருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கையாக மருத்துவர் சொல்லும்போது, போராடினால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று தீர்மானமான குரலில் பதில் சொல்கின்றாள். 

அரசு கடனுக்காக 150 கி மீ தள்ளி இருக்கும் தன் ஊரில் இருந்து 10 முறைக்கு மேல் பயணித்தும், அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் கையூட்டு கொடுத்தும்கூட கடன் ஒப்புதல் கிடைக்காமல் நொந்து போகும் டா என் என்பவரின் கதை மற்றொன்று.

இரண்டு கதைகளும் வட கிழக்கு மக்களின் கதைகள், மொழிபெயர்த்து கொடுத்தவர் ச சுப்பாராவ். லைபாக்லை ஆண்ட்டி என்ற இந்நூலில் அவர் நண்பர் வே கண்ணன் கொடுத்துள்ள நான்கு பக்க மதிப்புரை முக்கியமானது. பணி நிமித்தமாக அசாம் சென்ற அவர், அசாமிய மொழி கற்றுக்கொண்டு, வட கிழக்கு முழுவதும் சுற்றி மக்களின் வாழ்க்கையை புரிந்து பதிவு செய்கின்றார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. சுப்பாராவும் வடகிழக்கில் சுற்றி திரிந்து நேரடி அனுபவம் பெற்றவர்தான்.

கொச்சியில் தெற்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை ஒட்டிய தேவார என்ற ஊர் முழுக்கவும் தமிழக மக்கள் நிரம்பியது. அவ்வளவு மக்களும் கொச்சியில் வேலை தேடி சென்றவர்கள். அதிகாலை, மாலை நேரங்களில் பேருந்தில் பயணிக்கும் எவரும் தமிழ்நாட்டில் இருக்கின்றோமோ என்று ஐயமுறும் அளவுக்கு தமிழர்களை பார்க்கலாம்.

தொழில் கட்டமைப்பு ஏதுமற்ற வட கிழக்கு மாநில மக்களை இப்போது சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பெருமளவு பார்க்கின்றோம். மால்கள், பெரிய சிறிய ஓட்டல்கள், கட்டுமானங்கள் என எங்கும் இருக்கின்றனர். காரணம் இங்குள்ள தொழில் கட்டமைப்பு, அதனால் பெருகும் வேலை வாய்ப்பு, அதன் பலன் ஆன பணப்புழக்கம். இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல, நீண்ட நெடிய அரசியல் வரலாறு உள்ளது இதன் பின்னால்.

ஷில்லாங் மார்கெட்டில் ஆரஞ்சுகளை விற்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களிடம் ஆங்கிலத்தில் உரையாடினார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தன் மகள் செவிலியர் படிப்பு படிப்பதாக கூறி எங்களுக்கு ஆரஞ்சுகளை பிரியமாக கொடுத்தார், பணம் வாங்க மறுத்தார். நாங்கள் கொண்டு சென்று இருந்த சென்னையின் காற்றில் தன் மகளின் சுவாசம் இருப்பதாக அவர் உணர்ந்திருக்க கூடும். இங்கே ஒவ்வொரு முறையும் ஏதாவது கடையில் அல்லது ஹோட்டலில் பொருளையோ உணவு பார்சலையோ என் கையில் தரும்போது மெல்லியதாக என் விரல்களில் படும் ஏதோ ஒரு வட கிழக்கு இளைஞனின் ஸ்பரிசத்தில் ஷில்லாங்கின் ஆரஞ்சு மணத்தை உணர்கின்றேன்.

ஞாயிறு, மே 02, 2021

சென்னை நகரின் தோற்றமும் வளர்ச்சியும்

சென்னை நகரம் அதாவது மதராஸ் ஆங்கிலேயர்களால் அவர்களது வாணிப நோக்கங்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட துறைமுக பட்டணம். ஐரோப்பாவுடனும் கிழக்கிந்திய தீவுகளுடனும் (இந்தோனேசியா) வாணிபம் நடத்த ஏற்ற இடம் என பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்தவர் தேர்ந்தெடுத்த இடமே மெட்ராஸ். ஆண்டு 1639. இந்த ஊருக்கு அருகே நெசவுத்தொழில் நடந்து வந்தது. வாணிப கிடங்குகளுக்கு பாதுகாப்பாக கோட்டை கட்டப்பட்டது, அதுதான் இன்று நாம் சொல்கின்ற கோட்டை. கோட்டையை சுற்றிலும் உள்ள கிராமங்களும் நாளடைவில் வாங்கிபோடப்பட்டன.

வெள்ளையர்கள் வாழ கோட்டைக்கு வடக்கே வெள்ளையர் நகரம், அவர்களுடன் வணிகம் நடத்தும் உள்ளூர் வணிகரும் இரு மொழிகள் அறிந்த உதவியாளர்கள் ஆன துபாஷிகளும் வாழ வெளியே மேற்கே கறுப்பர் நகரம்.

வெளியிடங்களில் இருந்து குடியேற்றப்பட்ட நெசவாளர்கள் வாழ்ந்த சின்னதறிப்பேட்டை, அதாவது சிந்தாதிரிப்பேட்டை. ஆங்கிலேயர்கள் கையில் அதிகாரம் வந்த பின் தங்களுக்கான பங்களாக்கள் கட்டி வாழ்ந்த எழும்பூர்.

ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் நடத்திய மைசூர் போர்களில் ஆங்கிலேயர் வென்ற பிறகு, மாகாணத்தின் தலைநகர் ஆனது சென்னை. ஆனால் போர்களால் ஆன எதிர்மறை நிலைகளால் வணிகம் பாதிக்கப்பட, கடல் வணிகம் கல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டது.

நகர மக்கள் தொகையில் எட்டில் ஒரு பகுதி ஆதிதிராவிடர். மக்கள்தொகை 1871இல் 4 லட்சம், 1921இல் 5 லட்சத்துக்கும் அதிகம், 1931இல் ஆறரை லட்சம்.

நிர்வாகம், வணிகம், கல்வி, பண்பாடு, அரசியல் ஆகிய துறைகளில் பணியாற்ற்றுவோர்க்கு தகுந்த ஒரு குடியிருப்பு நகராக வளர்ந்தது அன்றி அது தொழில் நகராக வளரவில்லை.

சென்னையில் இயற்கையான துறைமுகம் இல்லை. புயல், சூறாவளி போன்ற சீற்றங்களில் இருந்து கப்பல்களை காப்பாற்ற 1889யில்தான் திட்டங்கள் மேற்கொள்ள பட்டன. 1913-14இல் ஆண்டுக்கு 8 லட்சம் டன் சரக்குகளை கையாள முடிந்தது. துறைமுகத்தில் சுமார் 3000 தொழிலாளர்கள் பணியாற்றினர், பெரும்பாலோர் உடலுழைப்பு கூலிகள்.

சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி தேவைக்கு மட்டுமல்ல, உள்நாட்டு கிளர்ச்சிகளை ஒடுக்க ராணுவத்த்தை வேகமாக அனுப்பவும் ரயில் பாதை தேவைப்பட்டது. சென்னை ஆற்காடு இடையே 1856 ஜூலை மாதம் ரயில் இயக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து, SIR கம்பெனியால் 1876இல் கொண்டுவரப்பட்டது, அது மீட்டர் கேஜ். சென்னையின் மேற்கு வடக்காக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. மதராஸ் இரயில்வேஸ் என்னும் நிறுவனமும் தெற்கு மராத்தா இரயில்வே என்னும் மற்றொரு நிறுவனமும் சென்னை பம்பாய் இணைப்பு பொறுப்பை மேற்கொண்டன. இரு நிறுவனங்களும் 1908இல் மதராஸ் தென் மராத்தா இரயில்வே MSM Company என்று இணைந்தன.

ரயில் பெட்டிகள், இன்ஜின், பிற சாதனங்களை பழுதுபார்க்க, பராமரிக்க பட்டறைகள் தேவைப்பட்டன. மீட்டர் கேஜ் பிரிவுக்கு நாகப்பட்டினத்திலும் பிராட் கேஜ் பிரிவுக்கு போதனூரிலும் பட்டறைகள் அமைத்தனர். பெரம்பூரில் 1873இல் பெரிய பட்டறை அமைக்கப்பட்டது. 1914இல் இங்கு 5500 பேர் பணியாற்றினர்.

மதராஸ் நகரில் 1895இல் டிராம் பாதை அமைக்கப்பட்டது. லண்டன் நகரில் ஆறு வருடங்களுக்கு பின்னரே டிராம் தொடங்கப்பட்டது! 1919இல் டிராம் தொழிலில் 1200 தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். 1931இல் கடற்கரையில் தாம்பரம் இடையே மின்சார ரயில் ஓட தொடங்கியது. 

மதராஸ் நகருக்கு மின்சாரம் வழங்க மதராஸ் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷனால் பேசின் பிரிட்ஜில் அனல் மின்நிலையம் ஆகஸ்ட் 1907இல் உற்பத்தியை தொடங்கியது. தொலைபேசி வசதி 1893இல் வந்தது. 1855இல் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் விரைவு தந்திப் பணி முடிந்தது.

1889க்கு முன் ஸ்பென்சர் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து மண்ணெண்ணெய் இறக்குமதி செய்து விற்றது. 1889 முதல் பெஸ்ட் அன் கோ நிறுவனம் மண்ணெண்ணெய் வணிகம் செய்தது. 1906இல் ஏசியன் பெட்ரோலியம் கம்பெனி அவ்வணிகத்தை செய்ய, பர்மா ஆயில் கம்பெனி 1905இல் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை நிறுவியது. பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதியாக பர்மா ஷெல் இருந்தது. எண்ணெய் சேமிப்பில் 775 ஊழியர்கள் வேலை செய்தார்கள்.

கிறித்தவ அறிவுப்பரப்பு கழகம் என்ற அமைப்பு முதல் அச்சகத்தை 1711இல் நிறுவியது. 1761இல் புதுச்சேரியை கைப்பற்றிய ஆங்கிலேயர், அங்கிருந்த அச்சகத்தை பெயர்த்து சென்னையில் வேப்பேரியில் நிறுவினர். 1850இல் தங்கச்சாலையில் அச்சகம் செயல்பட தொடங்கியது. 1500 ஊழியர்கள். அடிசன் பிரஸ், MSM ரயில்வே அச்சகம், Associated Press ஆகியன பெரிய அச்சகங்களை கொண்டிருந்தன.  சுமார் 60 சிறிய அச்சகங்களில் சுமார் 5000 ஊழியர்கள் வேலை செய்தார்கள்.

சென்னையில் இயங்கிய ஒரே பெரிய தொழில் எனில் அது பஞ்சாலை தொழில்தான். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் ஆக 9000 தறிகள் இயங்கின. 1920களில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நிறுவப்பட்டது. அலுமினிய பாத்திர உற்பத்தியில் ஈடுபட்ட ஒரே தொழிற்சாலை இந்தியன் அலுமினிய கம்பெனி.

1910இல் குரோம்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலையை பாரி நிறுவனம் நிறுவியது. கீழை நாடுகளில் மிகப்பெரிய பதனிடும் ஆலை அதுவே. தவிர, 200க்கும் அதிகமான சிறு பதனிடும் தொழற்சாலைகளில் 500 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் வகுப்பினர்.

1874இல் யானை கவுனி அருகில் South India spinning and weaving mills என்ற நூற்பு நெசவு ஆலையை பார்சி வகுப்பை சேர்ந்த ஒருவர் நிறுவினார். முதலீடு 5 லட்சம் ரூபாய். சீனாவுக்கு நூல் ஏற்றுமதி செய்த இந்த நிறுவனம், தொழில் போட்டி காரணமாக 1892இல் மூடப்பட்டது.

1876இல் Binny & Co என்னும் ஐரோப்பிய நிறுவனம் பெரம்பூரில் 1878 ஜனவரியில் Buckingham Mill & Co என்ற பஞ்சாலையை 8 லட்ச ரூபாய் முதலீட்டில் நிறுவியது. 1884இல் அதே பின்னி, அதே ஆலைக்கு அருகில் ஓட்டேரி ஓடைக்கு மறுகரையில் Carnatic Mill ஐ நிறுவியது. 1920இல் இணைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள்தான் பி அண்ட் சி மில். 8976 தொழிலாளர்கள். மற்றுமொரு பம்பாய் முதலாளி சூளையில் 1875இல் தொடங்கிய மில்லில் 2000 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.

அடுத்த முக்கியமான தொழில் எனில் தீப்பெட்டி தொழில். ஸ்வீடன் நாட்டினர் 1928இல் திருவொற்றியூரில் Western india match company என்னும் விம்கோ தீப்பெட்டி ஆலையை தொடங்கினார்கள். 800 தொழிலாளர்கள்.

South india industries நிறுவனம் அமைத்த Madras Portland cement company  சிமெண்ட் ஆலைதான் இந்தியாவின் முதல் சிமெண்ட் ஆலை! ஆண்டுக்கு 10000 டன் உற்பத்தி, 220 தொழிலாளர்கள். 1924இல் மூடப்பட்டது.

வண்ணாரப்பேட்டை யிலும் திருவல்லிக்கேணியிலும் பீடி ஆலைகள் இருந்தன, பெரும்பாலும் சிறுவர்கள் வேலை செய்தார்கள். சுமார் 4000 தொழிலாளர்கள்.

..... ...

உதவிய நூல்: சென்னைப்பெருநகர தொழிற்சங்க வரலாறு, முனைவர் தே வீரராகவன், தமிழில் ச சீ கண்ணன், புதுவை ஞானம்,

அலைகள் வெளியீட்டகம், 2003 பதிப்பு

Manhunt - புன்னப்புரா வயலார் கிளர்ச்சி குறித்த நூலில் இருந்து...

 

1

'அலெய்டா', சே அழைக்கின்றான். 'நாளை நான் என் பொலிவியா பயணத்தை தொடங்குகின்றேன். இந்த முறை என் பயணம் எத்தனை கடுமையாக இருக்கப்போகிறது என்பதை நீ உணர்வாய் என்று நம்புகிறேன். நாளை நான் புறப்படும் முன், நீயும் நானும் நம் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மதிய உணவு உண்போம். நான்தான் அவர்களின் தந்தை என்பது அவர்களுக்கு தெரியக்கூடாது. அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. ஒரு அறுபது வயது உருகுவே நாட்டுக்காரன் போல நான் மாற்று வேடத்தில் இருப்பேன். நான் அப்பாவின் நண்பர் என்று நீ நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். உன்னைத்தவிர வேறு யாருக்கும் நான் யார் என்பது தெரியக்கூடாது. நகரின் பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்து விடு. மாலை வரை அவர்களுடன் இருக்க விரும்புகிறேன்.'

அலெய்டா காலையிலேயே குழந்தைகளுடன் பூங்காவுக்கு வந்து விடுகின்றாள். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த உருகுவே முதியவர் அவர்களுக்காக காத்திருக்கின்றார். 'குழந்தைகள் இல்லையென்றால் நானும் உங்களுடனேயே இருந்திருப்பேன்', சேயின் காதில் அலெய்டா ரகசியமாக சொல்கின்றாள். 'கியூப புரட்சிகர போரில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நாட்களில் நானும் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட நினைவுகள் மீள எழுகின்றன. அப்போது Escambray மலைகளில் நாம் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதை நினைவு கூர்கின்றேன்.'

'அலெய்டா, நீயும் இப்போது என்னுடன் இருக்க வேண்டும் என்று விழைகின்றேன்', சே ரகசியமாக காதில் சொல்கின்றான். 'நான் உன்னுடன் இருப்பேன், உன் நிழலைப்போல'', அலெய்டாவின் குரலில் ஈரம் கசிகின்றது.

'அலெய்டா, நம் பிள்ளைகள் ஓடி வருகின்றார்கள், என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வை', சே சொல்கின்றான்.

'இவர் யார் தெரியுமா? அப்பாவின் நண்பர், Ramon ராமோன் மாமா'

அப்பாவின் நண்பருடன் பிள்ளைகள் விளையாடத் தொடங்குகின்றார்கள். பூங்காவை சுற்றிலும் ஓடுகின்றார்கள். விளையாட்டின் இடையே ஏழு வயது Aleida கீழே விழுந்து விட தலையில் காயம் உண்டாகிறது. ராமோன் மாமா எத்தனை பதட்டம் அடைந்தார் என்பதை அப்போது ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அலெய்டாவை தன் மடியில் இருத்தி அவள் காயத்தை குணமாக்க முயற்சி செய்கின்றார். அதன் பின் அம்மாவிடம் சென்ற குழந்தை, ' அந்த மாமாவுக்கு என் மேல்தான் எத்தனை பிரியம் தெரியுமா? அப்பா மாதிரியே என் மேல் அன்பாக இருக்கின்றார்'. Camiloவும் அதையேதான் சொல்கின்றான். 'நான் அவருடன் நெருக்கமாக இருந்தபோது அப்பாவின் வியர்வை வாசனையை அவர் மீது உணர்ந்தேன்'. என்ன மாதிரியான பையன் இவன்! எத்தனை வேகமாக இருக்கின்றான்! அவர்கள் பிரியும் நேரம் வந்தது, மூன்று வயது Celia அவர் கன்னத்தில் முத்தமிட்டபோது சேயின் கண்கள் குளமானதை ஒருவர் உணர்ந்திருக்க முடியும். குட்டிப்பையன் Ernesto ஒளிவீசும் தன் நட்சத்திரக்கண்களால் அப்பாவை உற்றுப்பார்க்கின்றான்.

... .... ...

குறிப்பு: Alieda March Torres சே குவேராவின் மனைவி.Aleida, Camilo, Celia, Ernesto நால்வரும் அவர்களின் குழந்தைகள்.

.... ..... ..................................................................................

2

பொலீவியன் டைரியின் மேலட்டையில் இருந்து சே Che அவளை எட்டிப்பார்த்தான்.

அடர்ந்த பொலிவிய காட்டின் மரக்கிளைகள் சூழ்ந்த மறைவிடத்தில் அமர்ந்திருந்த சேயின் மடியில் புத்தகம் திறந்து கிடந்தது.

'அலைய்டா*', சே அவளை நோக்கி அழைத்தான்

'நான் அலைய்டா இல்லை, அபராஜிதா', அபராஜிதா பதில் சொன்னாள்.

'ஓ, இப்போது எங்கே இருக்கின்றாய் அபராஜிதா?'

'டெல்லியின் கடுங்குளிரில் உறைந்து கிடக்கின்றேன், எனது கனத்த குளிர் தாங்கும் உடைகளை நீ பார்க்கவில்லையா?'.

தன் தோளில் இருந்த துப்பாக்கியை எடுத்து துடைத்து அடர்ந்த மரங்களின் ஊடாக சே எதையோ குறி பார்க்கின்றான்.

'நீ கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கின்றாயா?', சே கேட்கின்றான்

'ம்ம்ம்ம்...ஆம், 

செஞ்சூரியனின் ஒளிமிக்க வருகையை ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்,

செங்கோட்டையின் உச்சியில் செங்கொடி பறக்கும் கனவில் இருக்கின்றேன்'

'இன்றில்லை எனினும் நாளை அது நடக்கும், காலத்தின் கட்டாயம் அது', என்றது சேயின் உறுதியான குரல்

'ஆம், நீ சொல்வது சரிதான், இன்றில்லை எனினும் நாளை நிச்சயம்' அவள் ஆமோதித்தாள்,

'இந்தியாவில் கம்யூனிசம் வெல்லும் நாள் வரும்; அது குறித்து கனவு காண்கின்றேன். வெகு விரைவிலேயே அது சாத்தியம் ஆகும்'.

'நீ என்ன சொல்கின்றாய்?', சே அவளை நோக்கிக் கேட்டபடியே சொன்னான், 'கம்யூனிசம் என்பது திணிக்கப்படுவது அல்ல, தானே முளைத்து வர வேண்டும்'.

... ... ....

* Aleida March Torres சே குவேராவின் மனைவி.

... ...

Manhunt - Seashore saga of the Punnapra-Vayalar Uprising நூலுக்கான தனது அணிந்துரையில் M A பேபி, CPI(M), நூலில் இருந்து எடுத்துக்காட்டும் ஒரு பகுதி. தமிழில்: மு இக்பால் அகமது

நூலாசிரியர் K V மோகன்குமார் மலையாளத்தில் எழுதிய Ushnaraasi- Karappurathinte Ithihasam என்னும் நூலை Manjula Cherkil ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிலப்பிரபுத்துவதுக்கு எதிராக புன்னப்புரா வயலார் மக்கள் நடத்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதை வடிவம் இந்த நாவல். ஆசிரியர் ஐ ஏ எஸ் அதிகாரி. அதே புன்னப்புரா வயலார் கிராமத்தில் பிறந்தவர். வெளியீடு Vitasta.

கொச்சியில் இருந்தபோது பலமுறை ஆலப்புழாவில் அந்த நினைவுச்சின்னத்தை மெய் சிலிர்க்க கடந்து சென்றிருக்கின்றேன்.

சனி, மே 01, 2021

வணிகர்களும் பக்தியாளர்களும் தோற்றுவித்த முதல் தொழிற்சங்கம்

1917 ஜுன் 17இல் ஹோம் ரூல் லீக்கின் தலைவர் பெசன்ட் அம்மையாரும் அவருடைய சகாக்களான ஜி எஸ் அருண்டேலும் பி பி வாடியாவும் Bomanji Pestonji Wadia உதகமண்டலத்தில் பாதுகாப்புக்காவலில் வைக்கப்பட்டனர். நாடெங்கிலும் எழுந்த கண்டனங்களுக்கு பிறகு அரசு தன் ஆணையை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. 1917 கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்....

2. ... வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பி பி வாடியா போன்றோர் கேந்திரமான தொழில்களில் தொழிலாளர்களைத்திரட்டி ஒரு மாபெரும் பொது வேலைநிறுத்தத்தை நடத்தினால் ஆங்கில அரசு வீழ்ந்துவிடும் என நம்பினார்கள். ...1917 அக்ட்டோபர் புரட்சிக்கு பிறகு தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரத்தன்மையை தேசிய தலைவர்கள் உணரலாயினர். உருசியாவில் இருந்து வந்த செய்திகள் தம்மை மிகவும் கவர்ந்தன என்று திரு வி க குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணிய பாரதியார் உருசியப்புரட்சியை வரவேற்று பாடல் இயற்றினார். அந்நாட்டு செய்திகளை வெளியிட்டு அவற்றுக்கு விளக்கங்கள் அளித்தார்.

3. ... சென்னைத்தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முறையான முதல் தொழிற்சங்கமாகும். இரண்டு வணிகர்கள் அதன் தோற்றத்திற்கு வித்திட்டார்கள். துணிக்கடை நடத்திய செல்வபதி செட்டியார், அரிசி மண்டி நடத்திய இராமாஞ்சலு நாயுடு. இருவரும் இளைஞர்கள், நண்பர்கள். இருவரது கடைகளும் பெரம்பூர் பட்டாளத்தில் டிமெல்லோ சாலையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் ஆலைகளுக்கு அருகில் இருந்தன. ...தன் கடைக்கு வரும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் சொல்லும் அன்றாட துன்பங்களை கேட்டு வருத்தப்பட்டார் செல்வபதி. குறிப்பாக 1917இல் நடந்ததாக கூறப்பட்ட ஒரு நிகழ்வு அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. கழிப்பறைக்கு மிக அவசரமாக செல்ல வேண்டிக் கேட்ட ஒரு தொழிலாளிக்கு மேலாளர் அனுமதி மறுத்தார். துன்பம் தாங்கமுடியாத தொழிலாளி வேலைத்தலத்திலேயே மலம் கழித்துவிட்டார். கோபமுற்ற மேலாளர் அந்த தொழிலாளியையே மலத்தை அப்புறப்படுத்தி இடத்தை கழுவ செய்தார். இது கேட்ட செல்வபதி, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார். இந்தியன் பேட்ரியாட், சுதேசமித்திரன் பத்திரிகைகளில் இந்த நிகழ்ச்சி பற்றியும் மில் தொழிலாளர்கள் அவலநிலை பற்றியும் கட்டுரை ஒன்றை வெளியிட செய்தார்.

4. செல்வபதி செட்டியார் தன் பாட்டனார் நிறுவிய  ஒரு பஜனை மடத்தை நிர்வகித்து வந்தார். ஸ்ரீ வேங்கடேச குணாம்ருத வர்ஷிணி சபா என்ற அந்த அமைப்பு, அவருடைய கடை இருந்த அதே கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. சபையின் ஆதரவில் கதா காலட்சேபம், சமய சொற்பொழிவுகள், பஜனைகள் நடைபெற்று வந்தன. கண்ணபிரான் முதலியார், திரு வி க உள்ளிட்ட பலரும் இங்கு சொற்பொழிவு ஆற்றுவர், ஆலைத்தொழிலாளர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவார்கள். 

5. ... .... தென் ஆபிரிக்காவில் வெள்ளையர் கொடுமைகளை எதிர்த்து காந்தி இந்தியர்களை திரட்டிய செய்தியால் உற்சாகம் அடைந்த அவர், இராமாஞ்சலு நாயுடுவுடன் பேசினார். சபையின் கூட்டங்களுக்கும் தம் கடைகளுக்கும் வரும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டு குறிப்புகள் எடுத்தார். அவர்களின் தனிப்பட்ட குறை தீர்க்க ஆலை நிர்வாகத்துக்கு மனுக்கள் எழுதலானார். இதனால் ஓரளவு வருமானமும் கிடைக்க, உற்சாகம் அடைந்த இரு நண்பர்களும் 1917ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று சபையின் ஆதரவில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். 30 தொழிலாளர்கள் வந்தார்கள். வைணவ சமயப்பிரச்சாரகர் கண்ணபிரான் முதலியார் மகாபாரதம் பற்றிய பேருரை ஆற்றி இறுதியில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். சங்கத்தில் சேர விரும்பும் தொழிலாளர்கள் இராமாஞ்சலு நாயுடுவின் கடையில் வைத்திருக்கும் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கணிசமான தொழிலாளர்கள் கைச்சாத்து இட்டு தம் ஒப்புதலை தெரிவித்தனர்.

6. ...1918 மார்ச் 2 அன்று பெரம்பூர் ஸ்டாதம்ஸ் சாலையில் உள்ள ஜங்க ராமாயம்மாள் தோட்டத்தில் கவுரவ மாஜிஸ்திரேட் ஆக இருந்த சுதர்சன் முதலியார் என்பவரின் தலைமையில் 10000 தொழிலாளர்கள் திரண்ட கூட்டத்தில், திரு வி க எளிய தூய தமிழில் ஆணித்தரமாக சொற்பொழிவு நிகழ்த்த, கூட்டுறவு துறை அலுவலர் குலாம் முகமது என்பாரும் பேசினார். பெரும் உற்சாகம் பெற்ற தொழிலாளர்கள், சங்கம் தொடங்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்கள்.... ஆலை நிர்வாகம் எச்சரிக்கை அடைந்தது. காவல்துறையினர் காரணங்கள் சொல்லி தலைவர்களை மிரட்டியது. இவ்வாறு முதலாளியும் காவல்துறையும் சேர்ந்து சங்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயன்றனர்.

7. ...... .... சங்கம் அமைக்க வேண்டும் எனில் இளைஞர்கள் ஆன தாங்கள் இருவரால் மட்டுமே முடியாது என்று உணர்ந்த இருவரும் , மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெரிய மனிதர்கள் சிலரை ஈடுபடுத்த வேண்டும் என்று கருதி, திவான் பகதூர் குத்தி கேசவப்பிள்ளையை அணுகினார்கள். திரு வி கவும் அவரை அணுகினார். சென்னை மாகாண சபை என்னும் மதிப்புக்கு உரிய அமைப்பின் தலைவராக இருந்த அவர், ஏற்கனவே ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்சினைகளில் முன்னின்றவர், பத்திரிகைகளில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து எழுதுபவர். தகுதி வாய்ந்த அவரோ தான் சென்னையில் வசிக்காத போது அப்பதவியை ஏற்பது சரியில்லை என்று மறுத்தார். ஆனாலும் இளைஞர்கள் இருவரையும் அன்னி பெசன்ட் அம்மையாரை பார்க்க அழைத்துக்கொண்டு சென்றார். அம்மையார் அப்போது இல்லாமல் இருந்ததால் அவருடைய சீடர் பி பி வாடியாவிடம் தங்களது நோக்கத்தை விரிவாக எடுத்து சொல்ல, பின்னி ஆலை பிரச்சினைகள் பற்றி அதுவரை ஒன்றும் அறிந்திடாத வாடியா உள்ளம் நெகிழ்ந்து தொழிலாளர்களை சந்திக்க முன்வந்தார். 

8. 1918 ஏப்ரல் 13 அன்று வாடியா தொழிலாளர்கள் மத்தியில் பேச, திரு வி க அதனை தமிழில் மொழிபெயர்த்து கூறினார். தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் இப்படி கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கூட்டம் நடந்த 1918 ஏப்ரல் 27 அன்று மதராஸ் லேபர் யூனியன் Madras Labour Union முறையாக நிறுவப்பட்டது ஆனாலும் ஏப்ரல் 13தான் நிறுவன நாளாக முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் தலைவர் வாடியா, துணைத்தலைவர்கள் கேசவப்பிள்ளை, திரு வி க, இன்னும் சிலர், செயலாளர்கள் செல்வபதி செட்டியாரும் இராமாஞ்சலு நாயுடுவும்.

... .... ....

9. அதன் பின் பிற தொழில்களில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களும் சங்கம் அமைக்கலாயினர். டிராம்வே, மின் விநியோகம், எம் எஸ் எம் ரயில்வே பட்டறை, அச்சகங்கள், மண்ணெண்ணெய் விநியோகம், அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ரிக்சா இழுப்போர், ஐரோப்பியர்கள் வீடுகளில் வேலை செய்தோர் என அவர்களும் சங்கம் நிறுவினார்கள். காவல்துறையினர், அஞ்சல் துறை ஊழியர்களும் கூட சங்கம் அமைக்க முயன்றார்கள் என்றால் அப்போது நிலவிய தொழிற்சங்க உணர்வின் தீவிரத்தை உணரலாம். ஒவ்வொரு சங்கமும் முறையான சட்ட திட்டங்களுடன் நிர்வாகிகளுடன் இயங்கின.

... ...

10. பி பி வாடியா, திரு வி க, இ எல் ஐயர், கஸ்தூரிரங்க அய்யங்கார், வ உ சி, இராஜகோபாலாச்சாரி, தண்டபாணிப்பிள்ளை, ஹரி சர்வோத்தமராவ், வி சக்கரைச்செட்டியார், குமாரசாமிச்செட்டிஆகியோர் வெவ்வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக இருந்தனர்.

... ... .... .... ... ....

உதவிய நூல்: சென்னைப்பெருநகர தொழிற்சங்க வரலாறு, முனைவர் தே. வீரராகவன், தமிழில் ச சீ கண்ணன், புதுவை ஞானம்.

அலைகள் வெளியீட்டகம், 2003 பதிப்பு.

நினைவுகள் அழிவதில்லை


மதுரையில் படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக கல்லூரி செல்லாமல் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டபோது சி ஐ டி யு சங்கத்தில் இணைந்தேன். கூடவே சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியிலும் இயங்கினேன். செல்லூர் போஸ் சாலையில் SYF கொடியேற்றி அனல் தெறிக்க பேசிய மாநில செயலாளர் ஒல்லியாகவும் கண்ணாடி அணிந்தும் இருந்தார். அவர் பேச்சின் மீது மயக்கம் வந்தது. பின்னர் ஒரு காலம் வரும், சென்னைக்கு வருவேன் என்றோ அவர் ஆசிரியராக பணி செய்த கட்சி நாளேட்டில் நானே கட்டுரைகள் எழுதுவேன் என்றோ 20 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை நாளிதழ் அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு  அவருடன் பணி செய்வேன் என்றோ பணி முடித்தவுடன் ஒன்றாகவே மின்சார ரயில் பிடித்து ஆவடி வரை அவருடன் பயணிப்பேன் என்றோ (அவர் செவ்வாப்பேட்டை செல்வார்) அவர் எழுதிய விடுதலைத்தழும்புகள் நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைக்க, ஆவடி தமுஎச சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தி வெள்ளியில் பேனாவும் பரிசாக கொடுப்போம் என்றோ நினைத்தும் பார்த்தது இல்லை. தோழர் சு பொ அகத்தியலிங்கம்!

மதுரை அந்த மாதிரி மண். எப்போதும் எங்கே திரும்பினாலும் அரசியல் கூட்டங்களுக்கு பஞ்சமில்லை. மிக மிகப்பழைய சினிமா ப்பாடல்கள் எல்லாம் மிக சாதாரணமாக குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும். கையில வாங்கினேன் பையில போடல, துடிக்கும் ரத்தம் பேசட்டும் துணிந்த நெஞ்சம் நிமிரட்டும், உண்மை ஒரு நாள் வெளியாகும், உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம், எங்கள் திராவிடப்பொன்னாடு, அச்சம் என்பது மடமையடா, சும்மா கெடந்த நெலத்தை கொத்தி, ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...

அதிலும் அந்த வரிகள்...

இழந்து போனவை விலங்குகளே 

எதிரே உள்ளது பொன்னுலகம் 

நடந்து போனவை கனவுகளே

நடக்கப்போவது புதிய யுகம்

ஒரு புதிய யுகம் ஒரு புதிய யுகம்

இரண்டு வர்க்கம் இனிமேல் இல்லை

எழுந்து வாரீர் தோழர்களே!

காலம் நமதே நமதென்று கதவு திறக்கும் வா இன்று!

.. அந்த ராணுவ அணிவகுப்பின் ஒத்திசைவுடன் ஓங்கி ஒலிக்கும் ட்ரம்பெட்டுடன் தீர்மானமாகத்தொடரும் துடிக்கும் ரத்தம் பேசட்டும்...! இப்போதும் மெய் சிலிர்க்கின்றதே! துலாபாரம் படத்தில் ஜி.தேவராஜன் இசையில் இடம்பெற்ற அந்தப்பாட்டின் வரிகள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வரிகள் என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன். 

திமுக கூட்டங்கள் எனில் எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து என்ற தொகையறாவுடன் தொடங்கும் சீர்காழியின் பாட்டு, அதில் வள்ளுவன் குறள் போல வடிவமோ சிறிதாக என்ற வரியை இப்போதும் ரசிப்பேன், எங்கே சென்றாய் எங்கே சென்றாய், கல்லக்கூடி கொண்ட..., சீர்காழி பாடிய அண்ணாவுக்கு ஆன கருணாநிதியின் இரங்கற்பா பூவிதழின் மென்மையிலும் மென்மையான..., தலையில தொப்பி எதுக்குங்க என்று எம் ஜி ஆரை தரக்குறைவாக விமர்சிக்கும் பாடல்,காங்கிரஸ் கூட்டம் எனில் நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தான் நேரு பிரான், இந்திப்பாடல் மேட்டில் அமைந்து எஸ் சி கிருஷ்ணன் பாடிய கர்ம வீரர் காமராஜர் வாழ்கவே வாழ்கவே எந்நாளுமே.. இப்படி.

மதுரையில் இருந்த காலம் பொற்காலம். எம் ஆர் வெங்கட்ராமன், பி ராமமூர்த்தி, எஸ் ஏ தங்கராஜ், என் சங்கரய்யா, ஏ பாலசுப்ரமணியம், ஜோதிபாசு, ஈ கே நாயனார், பி சுந்தரய்யா, ஈ எம் எஸ், பி டி ரணதிவே, பசவபுன்னையா, பி ராமச்சந்திரன், உமாநாத், கே டி கே தங்கமணி, எம் கல்யாணசுந்தரம்... என மரியாதைக்குரிய மூத்த தோழர்களின் கூட்டங்களை எல்லாம் கேட்கும் பெரும் வாய்ப்பு வாய்த்தது. நெல்பேட்டையில் ஒரு அரிசி ஆலையில்தான் எம் ஆர் வி, பி ஆர், ஏ பி ஆகியோரின் அரசியல் வகுப்புகளில் பங்கு பெறும் வாய்ப்புகள் வாய்த்தன. திலகர் திடலில் (வாரச்சந்தை மைதானம்) ஒரு மே தினக்கூட்டம். தோழர்கள் வி பி சிந்தன், தா பாண்டியன் இருவரும் உரையாற்ற, என்ன ஒரு அனுபவம் அது! குருதியை சூடேற்றும் நரம்புகளை முறுக்கேற்றும் போர் முரசங்கள் அல்லவா இருவரும்! அது சோவியத் யூனியன் ஒளிவீசிக்கொண்டு இருந்த காலம். மாஸ்க்கோவில் மழை பெய்தால்... என்று கேலி செய்தவர்களுக்கு, குறிப்பாக அன்றைய காங்கிரஸ் கட்சியினருக்கு, 60களில் கேரளா மக்கள் பதில் சொன்னார்கள் எனில் 70களில் மேற்கு வங்க மக்களும் திரிபுரா மக்களும் பதில் சொன்னார்கள். உண்மையில் இடதுசாரி இயக்கத்தோழர்கள் அப்போது இறுமாந்துதான் கிடந்தோம். ஆர் வி சுவாமிநாதன் என்ற காங்கிரஸ்காரர் வெற்றிபெற்றுக்கொண்டே இருந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பி ஆர் வென்றார். மதுரை கிழக்கு சட்ட மன்றத்திற்கு சங்கரய்யாவை மக்கள் தேர்ந்தெடுத்தனர். சைக்கிள் ரிக்சாவில் அவர் பயணித்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் விழாவுக்கு பட்டிமன்றம் எனில் அது இரவு 9 மணி தொடங்கி காலை 4 வரை நடக்கும். ஒரு முறை தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில், திராவிட அரசியலா பொதுவுடைமை அரசியலா முதலாளித்துவ அரசியலா என்ற பொருளை ஒட்டி நடந்த பட்டிமன்றத்தில், தா பாண்டியன், விடுதலை விரும்பி, நன்மாறன் உள்ளிட்ட பெரும் பேச்சாளர்கள் மூன்று அணிகளாக, அணிக்கு நால்வர் என இரண்டு சுற்று முடிந்து அடிகளார் தீர்ப்பு சொல்லும்போது அதிகாலை 4 மணி.

சிலந்தியும் ஈயும், வால்கா முதல் கங்கை வரை, பின் சோவியத் பதிப்புகள் என வாசிப்பு இருந்தாலும் சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, மகரிஷி, பாக்கியம் ராமசாமி/ஜ ரா சுந்தரேசன், பாலகுமாரன், எம் எஸ் உதயமூர்த்தி, கண்ணதாசன், ஜெயகாந்தன் என்று இணையாக ஒரு வாசிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்த parallel வாசிப்பு எத்தனை பயன்மிக்கது, வாசிப்பிலும் சிந்தனையிலும் எத்தனை மாற்றங்களை கொண்டுவந்தது என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன். கூடவே வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் (இப்போது தொடர்கதையே இல்லை).

இடையில் ஒரு ஆறு மாத காலம் ஆம்பூர் தோல் காலணிகள் தொழிற்சாலையில் வேலை செய்தேன். அது ஒரு வகை அனுபவம். தாராளமய மதுரை வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட வாழ்க்கையாக இருந்தது. கட்டுப்பெட்டியான இஸ்லாமிய வாழ்க்கையை அங்கேதான் பார்த்தேன். மீண்டும் மதுரை வந்தபோது நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை நூலை வாசித்தேன். தமிழில் பி ஆர் பரமேஸ்வரன் மொழியாக்கம் செய்து இருந்தார். சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டது. அவரோ பிறப்பால் கேரளத்தவர்! கையூர் தியாகிகளின் வரலாறு அது. சிறையில் உறவினர்களும் தோழர்களும் அப்புவையும் சிருகண்டனையும் சந்தித்து உரையாடும் அந்தக்காட்சி! சென்னைக்கு வேலை நிமித்தமாக வர வேண்டி இருந்தது. மதுரை நகரக்கட்சி செயலாளர் தோழர் எம் எம் என்று அழைக்கப்பட்ட முனியாண்டி அவர்களிடம் அறிமுகக் கடிதம் பெற்று 52 குக்ஸ் சாலை பெரம்பூர் சென்னை மாவட்ட கட்சி அலுவலக முகவரிக்கு வந்தேன். எம் எம் அவர்கள் சிறந்த மல்யுத்த வீரர், உடல் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர், மதுரையில் அவரைப்போன்றவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் V K பழனி, இப்போதும் 93 வயது தாண்டி வாழ்ந்து கொண்டும் புதுயுக வாலிபர் தேகப்பயிற்சி சாலை என்கிற உடற்பயிற்சி கூடத்தை பழங்கானத்தத்தில் நடத்திக்கொண்டு இருப்பதாக 14.11.2019 The Hindu வில் வாசித்தேன். 

அப்போது இருந்த சென்னை மாவட்ட செயலாளரிடம் எம் எம் கொடுத்த கடிதத்தை கொடுத்தேன். என்ன வேலை, எங்கே செல்ல வேண்டும், காலையில் எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும் என்றெல்லாம் மாவட்ட செயலாளர் விசாரித்தார். அங்கேதான் இரவு தங்கினேன். மறுநாள் காலை எழுத்து தேர்வுக்கு ஆவடி செல்ல வேண்டும். கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது ஒருவர் வந்தார். வாங்க போகலாம், கார் ரெடியாக இருக்கு என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'நீங்க ஊருக்கு புதுசு, ஆவடி இங்கே இருந்து சுமார் 30 கிலோமீட்டர், மழையும் கடுமையா இருக்கு, அதனால் உங்களை காரில் அழைத்து சென்று ஆவடியில் விட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சொல்லி என்னை அனுப்பினார், நான்தான் ட்ரைவர்' என்றார். கட்சியின் கொடி கட்டிய காரில் அரசு வேலைக்கான எழுத்து தேர்வுக்கு சென்ற ஒரே ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன்! மாவட்ட செயலாளர் வேறு யாரும் இல்லை, நினைவுகள் அழிவதில்லை நூலை தமிழில் தந்த தோழர் பி ஆர் பரமேஸ்வரன்தான்! என்ன ஒரு சிந்தனை அது! ஒரு இளைஞன் கட்சி அலுவலகத்தில் வந்து தங்கினால் அவன் வேலைகளை அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடாமல் அவன் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்டு சிந்தித்து இருந்தால் மட்டுமே மிக கவனம் எடுத்து திட்டமிட்டு தன் காரையும் கொடுத்து அனுப்பியிருக்க முடியும்! செவ்வணக்கம் தோழர் பி ஆர் பி! உங்களைப்போன்ற செம்மல்களால்தான் இயக்கம் வளர்ந்தது! நினைவுகள் அழிவதில்லை!