சனி, ஏப்ரல் 16, 2016

ஜங்கிள் புக்-4

திரும்பி வந்தபோதான பயணத்தில்தான் காட்டின் விளிம்பில் அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது; தன் பருவ வயதில் இருந்தாள் அவள்; அருகில் அமர்ந்திருந்தவர் அவளது தந்தையாக இருக்கலாம்; எங்கள் கார் நெருங்கும்போது அவள் தன் மார்பகங்களை தன் இரு கைகளால் மூடினாள்; பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு! 
ஜார்வாக்களின் வரலாற்றைப் படித்திருந்ததால், மார்பகங்களை மூடி மறைக்க வேண்டும் என்பது அவர்கள் அறியாத ஒன்று என்பதை நான் அறிந்திருந்தேன்; அவ்வாறெனில் அது மூடி மறைக்க வேண்டிய ஒரு உறுப்பு என்று அந்த வாலிபப்பெண்ணுக்கு கற்றுத்தந்தது யாராக இருக்கும்? காட்டுக்கு வெளியே இருக்கின்ற நவீனர்கள்தான் காரணமாக இருக்கலாம்; யாராவது அப்பெண்ணை உற்றோ வெறித்தோ பார்த்திருக்கக்கூடிய கெடுவாய்ப்போ நவீனர்களின் பாலியல் சீண்டலுக்கு உள்ளான கேடுகெட்ட வாய்ப்போ அப்பெண்ணுக்கு நேர்ந்திருக்கலாம்.வேறு எப்படியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. காரணம், அடுத்த சம்பவம்.

ஒரு திருப்பத்தில்தான் அந்தக் காவியக்காட்சியைக் கண்டேன்; உயர்ந்த ஒரு ஜார்வா இளைஞன்; தோள்களில் இறந்துவிட்ட பருத்த ஒரு மான் அநாயசமாக கிடக்க வலது கையில் நீண்ட வில்; அவனுடன் இளம் யுவதி; மார்பகங்களை அவள் மூடியிருக்கவில்லை. அற்புதமான ஒரு அழகனும் ஒரு பேரழகியும்! எங்கள் கார் நெருங்கும்போதும் அவனும் கண்டுகொள்ளவில்லை,  அவளும் கண்டுகொள்ளவில்லை, மறைக்கவும் முயற்சிசெய்யவில்லை. ஏதோ பேசியபடி மிகச்சாதாரணமாக எங்களைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கடந்து சென்ற அச்செவ்வியல் காட்சிக்கு வயது சத்தியமாக 60,000 வருடங்கள்! 
அந்த இளைஞன் மட்டும் தன் நீண்ட வில்லை எங்கள் காரின் கண்ணாடியைக் குறிவைத்து ஏதோ சொல்லி எங்களை அலட்சியப்படுத்தினான். ’இது எங்கள் காடு, உங்களுக்கு இங்கு என்ன வேலை? வெளியேறுங்கள்’ என எச்சரித்திருக்கக்கூடும். அதன்றி எங்களுடன் உரையாடுதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை (நம் நவீனர்களுக்கோ அவர்களிடம் பல்வேறு ‘காரியங்களை’ நிறைவேற்றிகொள்ளும் பொருட்டு உரையாடுதல் தேவைப்படுகின்றது).

அந்தமான் பயணத்தின் அடர்காட்டில் நான் சந்திக்க நேர்ந்த அந்த பதினொரு ஜார்வாக்களும் என் மூதாதையர்கள்; என் பாட்டனின் பாட்டன் வழியே எனக்குச்சொந்தமானவர்கள் என்றே என் உணர்வுகள் என்னிடம் பேசின.அவர்களுக்கும் எனக்கும் இடையேயான உறவுக்கு அடையாளமாக அவர்களுக்கும் எனக்கும் பொதுவான பாட்டைப்பாடிக் கொண்டிருந்த அக்காட்டின் குயிலொன்று உதிர்த்த சிறகை நான் திரும்பும்போது என்னோடு எடுத்து வந்தேன்.

இப்போதும் அந்தக்குயில் அக்காட்டின் நெடிதுயர்ந்த ஒரு மரத்தின் மீதமர்ந்தபடி அவர்களுக்கும் எனக்கும் இடையே ஆன ஆதிஉறவைக்குறிக்கும் ஒரு காட்டின்பாடலைப்பாடியபடியே இருக்கின்றது என்று நம்புகின்றேன். யார் அறிவார், ஒரு வேளை மோக்லி விளையாடுவதற்காக அந்தக்குயில் உதிர்த்த, மோக்லி விட்டுச்சென்ற சிறகாகவும் கூட இருக்கலாம்.
இதோ அந்தக்குயிலின் சிறகு...
(முற்றும்)

ஜங்கிள் புக்-3


2014ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு சுற்றுலா சென்றிருந்தோம்; வடகிழக்கு மாநிலங்களுக்கே உரித்தான அமைதியும் மக்கள்தொகை நெரிசல் இல்லாத ஊர்களும் வெட்டவெளிகள் வனங்கள் நீர்நிலைகள் என்று இருந்தது ஷில்லாங். மாலை நான்கு மணிக்கெல்லாம் நம் ஊரின் 10 மணி இருட்டு வந்து விடுகின்றது. இயற்கை வஞ்சகம் இல்லாமல் கொட்டிக்கொடுத்திருக்கின்றது தன் அழகை அங்கு! அல்லது அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்றும் தோன்றுகின்றது! ஜங்கிள் லைஃப்!

டவுன் என்று சொல்லத்தக்க இடங்கள் தவிர மற்றவை எல்லாம் ஆள் அரவமற்ற இடங்களாகவே இருக்கின்றன; இங்கே ஒரு வீடென்றால் வெகுதொலைவில் மற்றொரு வீடு; நம் ’சகல அதிநவீன தொழினுட்ப’ வாழ்வோடு ஒப்பிடும்போது அம்மக்களின் நவீனவசதியற்ற எளிய வாழ்க்கை நிம்மதியானதாக இருப்பதாக எனக்குத் தோன்றியது; கார்களின் எண்ணிக்கை குறைவென்பதால் இரைச்சல் இல்லை; சுத்தமாக இருந்தது காற்று; மக்கள் நடக்கின்றார்கள்; அதிசயமாக அரசுப்பேருந்து ஒன்றைக்காண நேரிட்டது. குறைந்தபட்ச வசதிகளுடன் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.

ஷில்லாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சந்தை நடந்துகொண்டிருந்தது; பழங்கள் வாங்கலாம் எனப்போனோம்; நம் ஊர்களின் பெரிய மார்க்கெட்டுக்களில் வீதிகளில் சிறுவியாபாரிகள் போடும் கடைகளும் பொருட்களும்தான் அங்கே பெரிய சந்தையாக விசேசமான பொருட்களாக இருந்தது! மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் திருப்தியுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!

சகல சம்பத்துக்களுடன் வாகனாதிவசதிகளுடன் colourful and unaffordable (or affordable to some section) மால்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று இன்றுவரையிலும் யோசித்துக்கொண்டேதான் இருக்கின்றேன்! இப்போது இதே வடகிழக்கு மாநில இளைஞர்களை சென்னையிலும் தென்மாவட்டங்களும் கூட மால்களிலும் ஹோட்டல்களிலும் ‘பிரமாண்டமாய்’ ஸ்டோர்களிலும் அப்பார்ட்மெண்ட் கட்டுமான வேலைகள், சென்னை மெட்ரொ ரயில்கட்டுமான வேலையாட்களாகப் பார்க்க முடிகின்றது; உழைப்புச்சுரண்டல்!

சென்ற வருடம் இதே ஏப்ரல் மாதம் அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தோம். 300க்கும் அதிகமான தீவுகள் இருந்தாலும் அத்தனை தீவுகளிலும் குடியேற்றம் இல்லை என்பதை அறிந்தேன். ஒரு வருடம் ஓடிய பின்னும் இன்னும் என் மனதில் நிற்பது, அந்தமானின் பரந்துவிரிந்த மகாசமுத்திரத்தை விடவும் உலகின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றான ராதாநகர் கடற்கரையைவிடவும், அடர்காட்டின் நடுவே நான் கண்ட அந்த 11 மனிதர்கள்தான்! நம் மூதாதையர்கள் அவர்கள்!

அந்தமானில் ஆறு பழங்குடி மக்கள் இருக்கின்றார்கள்: க்ரேட் அந்தமானீஸ், நிகோபாரீஸ், ஜாரவா, செண்டினெல்ஸ், சோம்பென்ஸ், ஓங்கி. ஜாரவா பழங்குடிகள் 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து கடல் வழியே இங்கு வந்து குடியேறியவர்கள் என வரலாறு சொல்கின்றது. இவர்கள் வசிக்கும் காட்டின் ஊடாக தேசிய நெடுஞ்சாலை great andaman trunk road ஒன்றை இந்திய அரசு 1970இல் அமைத்தது; போர்ட்ப்ளேயரையும் டிக்லிபூரையும் இணைக்கும் 360 கிமீ சாலை: தங்கள் காட்டை ஆக்கிரமிக்கும் ஒரு செயலாக இதைப்பார்த்த ஜாரவாக்கள் சாலை அமைத்த சில பணி்யாளர்களை அம்பு எய்து கொன்றும் விட்டார்கள்; இப்பாதை 'சுற்றுலாப்பயணிகளை தீவின் மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் பாதை’யாக பயன்படுத்தப்படுவதாக இந்திய அரசு சொன்னாலும் உண்மையில் ஜாரவா மக்களை காட்சிப்பொருளாக்கும் சுற்றுலாவே அதன் நோக்கமாகும்; கொல்கத்தா உயர்நீதிமன்றம் இச்சாலையை மூட உத்தரவிட்டது 2002 என்றால் 14 வருடங்களாக இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றதெனப்பொருள்.

ஜார்வாக்களை புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; நான் புகைப்படும் எடுக்கவில்லை; (இண்டெர்னெட்டில் அவர்களது படங்கள் கிடைக்கின்றன). எனவே காட்டின் ஒரு முனையில் உள்ள ஜார்வா ப்ரொடெக்சன் போஸ்ட்டை படம் எடுத்தேன், அதனை இங்கே பதிகின்றேன்.
நிற்க.

காரில் என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமல்லர், பொதுவாகவே பழங்குடி மக்களை காட்டுவாசிகள் என்று விளிப்பதே நாட்டுவாசிகளான நமது வழக்கம்.
உண்மையில் அவர்களே இந்த உலகின் ஆதிக்குடிமக்கள் என்பதை புரியாத நவீன அறிவிலிகளாகவே நாம் இருக்கின்றோம். தேசியநெடுஞ்சாலை எண் 223, 300 கிமீக்கும் அதிகமானது; முழுக்கவும் பல்லாயிரம் வருடங்கள் பழைமையான அடர்காட்டின் ஊடே செல்வது; இருமருங்கிலும் பல நூறு வருசங்கள் வயதான மரங்கள்,சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை.
ஆழ்ந்த அமைதி எங்கிலும் சூழ்ந்திருக்க,அவ்வப்போது நம்மை வந்தடையும் விதவிதமான பெயர் அறியாப்பறவைகளின் கூவல்களுடன், இடை இடையே மான்களின் குறுக்கீடுகளுடன் நம் பயணம் தொடர்கின்றது;

எப்போது ஒரு ‘காட்டுவாசி’ தென்படுவான் என்ற பெரும் ‘த்ரில்’காருக்குள் இருந்த நாட்டுவாசிகளுக்குள் சூழ்ந்திருக்கின்றபடியால் அவ்வப்போது எழும்பும் மெல்லிய குரலிலான உரையாடல்கள் சுருக்கமாகவே முடிகின்றன; கண்கள் காருக்கு வெளியேதான்.

யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தில்தான் அந்த நால்வரும் காரை வழிமறித்தார்கள்; கறுப்பு என்றால் அப்படி ஒரு மினுமினுப்பான கறுப்பு; நம் ஹீரோக்களின் ஆறுகட்டு பில்டப் எல்லாம் தோற்றுவிடும் உடற்கட்டு; காரின் வேகத்தை குறைத்தபடியே வழியுண்டாக்கினார் காரோட்டி; அவர்கள் காரின் ஜன்னல்களை தட்டினார்கள்; ஏதாவது கொடுக்கும்படி இருந்தது அவர்களின் சைகையும் குரலும். வழிகிடைத்தவுடன் காரோட்டி வேகம் பிடித்தார்.

இதன் பிறகு சில பெண்களையும் குழந்தைகளையும் பார்த்தேன். ஆண்களும் பெண்களும் இடுப்பில் சிவப்பான ஒன்றை அணிந்து இருந்தார்கள்; பெண்கள் மார்பில் எதையும் அணியவில்லை.

காரை நிறுத்தக்கூடாது, திறக்கக்கூடாது, ஜார்வாக்களுடன் பேசக்கூடாது, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எதையும் கொடுக்கக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது நிபந்தனைகள்.ஆனாலும் நவீன உலகைச்சார்ந்த அறிவாளிகளான நம்மவர்கள் ஜார்வாக்களுக்கு மது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து கெடுக்கின்றார்கள் என்பதும் ஜார்வா பெண்களை பாலியல்வல்லுறவு செய்கின்றார்கள் என்பதும் இணையத்தில் கிடைக்கும் செய்தி; தவிர நம்மவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வியாதிகளால் கூட்டம் கூட்டமாக ஜார்வா பழங்குடிகள் செத்து மடிந்தார்கள் என்பதும் செய்தி.

போர்ட்ப்ளேயரில் உள்ள anthropological museumஇல் ஜார்வா உள்ளிட்ட பழங்குடிகளின் வாழ்க்கை வரலாறு, இன வரலாறு, அவர்கள் பயன்படுத்தும் வேட்டைக்கருவிகள், சாதனங்கள் மாதிரிகள் உள்ளன; micro precision என்று மெச்சத்தக்க அளவில் அவர்களின் வேட்டை சாதனங்கள் கச்சிதமாக இருக்கின்றன; 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல்வழியே பயணித்து இத்தீவை அவர்கள் வந்தடைந்தார்கள் எனில் அவர்களின் கடல்சார் அறிவை என்ன சொல்ல! கடல் பயணத்துக்கான படகுகள், கருவிகள், வேட்டையாடும் அறிவு என அவர்களின் அறிவு நம்மை விடவும் 60,000 வயது மூத்தது; அவர்களை காட்சிப்பொருளாகப் பார்க்கும் நம் அறிவை என்னென்பது?!

திரும்புதல் பயணத்தின்போதுதான் அந்த அற்புதக்காட்சியைக் காணக்கொடுத்துவைத்தது!

தொடரும்

வியாழன், ஏப்ரல் 14, 2016

ஜங்கிள் புக்-2



மிக நுட்பமான உணர்வுகளை விட்டுவிடாமல் போகின்றபோக்கில் பதியவைப்பதே சிறப்பான திரைப்படம்; பெரும் யானைக்கூட்டத்தின் அருகின் மோக்லி சென்றுவிட அதிரவைக்கும் பிளிறலோடு வானுயர யானைகள் கடந்துசெல்ல, அந்தக்குட்டியானை மட்டும் தன் அகலக்கண்கள் விரித்து ‘யார் இது, புதுசா இருக்கே?’ என்றபடி மோக்லியை வியப்பாகப் பார்த்தபடியே நகரும் அந்தக்காட்சி, க்ளாசிக்!

படத்தின் பிற்பாதியில் அகிரா அறியாமல் அதன் குட்டிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு கதை சொல்லும் ஷேர்கான்; அகிரா வந்து ‘குட்டிகளா வாங்க’ என அழைக்க, இரண்டு குட்டிகள் ஷேர்கானின் கால்களில் இருந்து விடுபட, மூன்றாவது குட்டி கால் எடுத்து வைக்குபோது தனது வலதுகாலால் குட்டியை லேசாகத்தடுக்கும் ஷேர்கான்; என்னா ஒரு வில்லத்தனம் என்று வியக்கவைக்கும் நுட்பமான காட்சி! குட்டியின் தாயோடு நாமு்ம் ஒரு விநாடி ‘இது என்ன ப்ளாக்மெய்லா’ என பதறிவிடுகின்றோம்; கைதேர்ந்த ஒரு வில்லனைப்போல அதன்பின் கதையின் முடிவை ஒரு எச்சரிக்கையாக அகிராவுக்கு சொல்லியபடியே அநாயசமாக மூன்றாவது குட்டியையும் போகவிடும் ஷேர்கான்! நுட்பமான வில்லத்தனமான காட்சி! ஷேர்கானின் அங்க அசைவுகள் மிக அற்புதம்!

காலங்காலமாக கதைகேட்டே வளர்ந்த பாரம்பரியக்காரர்கள் அல்லவா நாம்! கதைகளை விரும்புகின்றது நம் மனசு! கதைகளின் ஊடாகப்பயணித்து உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப்பார்த்து வளர்ந்தவர்கள் நாம்!



பாதாள உலகில் பறக்கும் பாப்பா, விக்கிரமாதித்தன் வேதாளம், தெனாலிராமன், அக்பர் பீர்பல், முல்லா நசுருதீன், 1001 இரவுகள் என்ற அராபியக்கதைகள் (அதன் பகுதியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), அம்புலிமாமா, முயல், வாண்டுமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள், பின்னர் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் ஸ்டெல்லா, மந்திரவாதி மாண்ட்ரெக், வேதாளன் என்ற Phantom, இதன் தொடர்ச்சியாக சாண்டில்யன் கதைகள், வியாசர் விருந்து (மகாபாரதம், ராஜாஜி எழுதியது), ஆங்கிலக்கதைகளுக்கு ‘இணை’யாக தமிழ்வாணன் (மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) எழுதிய சங்கர்லால் துப்பறியும் கதைகள், ஙே என விழிக்கும் ராஜேந்திரகுமார் கதைகள், ’....என மிகக் கச்சிதமாக இருந்தாள்’ எனும் புஷ்பாதங்கதுரை கதைகள் (அவரேதான் திருவரங்கன் உலா எழுதினார், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில்), அனிதா இளம் மனைவி போன்ற சுஜாதாவின் கதைகள், பாலகுமாரன்...என கதை வாசித்ததும் வாசிப்பதும் தொடர்கின்றது.

ஒரு கட்டத்தில் எதை விட வேண்டும், எதை வாசிக்க வேண்டும் என்பது புரியும்போது சில எழுத்தாளர்கள் நம்மை விட்டுப் பிரிகின்றார்கள்; சிலர் நம்மோடு வந்து சேர்கின்றார்கள், சேர்ந்தவர்கள் காலத்துக்கும் நம்மை விட்டுப் பிரிவதில்லை; ஜெயகாந்தன், கண்ணதாசன் வனவாசம், புதுமைப்பித்தன், கநாசு, அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி (தோழர், சேதாரம், நாரணம்மா...), மீரா, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி, செ.யோகநாதன், சி.சு.செல்லப்பா, கி.ராஜநாராயணன், சிங்கிஸ் அய்த்மாதவ், பரீஸ் வசிலியேவ், செகாவ், புஷ்கின், தோல்ஸ்தோய், தோல்ஸ்தயேவ்ஸ்கி, கோர்க்கி, கோகொல், இவான் துர்கனேவ், மாயகோவ்ஸ்கி, மிகயில் சோலொகோவ், சுந்தரராமசாமி, தோப்பில் முகம்மதுமீரான், வேல ராமமூர்த்தி, கே.முத்தையா, கோமல் சுவாமிநாதன், ஷாஜகான், குறைந்த எண்ணிக்கையில் சிறந்த கதைகள் எழுதிய தோழர் காஷ்யபன் (தேன் கலந்த நீர்), யாரும் யோசித்திட முடியாத நுட்பங்களின் ஊடே பயணிக்கும் சுப்பாராவ், தேனி சீருடையான், இதயகீதன், உதயசங்கர், எஸ்.காமராஜ், பவா செல்லத்துரை, ஆதவன் தீட்சண்யா, ஜாகிர்ராஜா, பா.ராமச்சந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன்,....இன்னும் இப்போது எழுதத்தொடங்கி எழுதுபவர்கள் என எப்போதும் கூடவே பயணிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எதை வாசித்தாலும் வாசிக்காது போனாலும் ஏகாந்தமான ஆள் அரவமற்ற காடுகளையும் மலைகளையும் அருவிகளையும் சிற்றாறுகளையும் வனாந்திரங்களையும் வயல்களையும் மனசு நாடியபடியேதான் இருக்கின்றது; யாரையும் தொந்தரவு செய்யாத யார் தொந்தரவையும் விரும்பாத ஒரு காட்டுவாசியாக இருக்கவே மனசு விரும்புகின்றது, அதன் நீட்சியாகவே வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு செல்வதும், பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவியை சும்மாவேனும் சுற்றித்திரிய விரும்புவதும், தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை ரயிலில் 10 ருபாய் டிக்கெட்டில் ஜன்னல் இருக்கையை விரும்பி வைத்த கண் வாங்காமல் வெளியே பார்த்துக்கொண்டே வருவதும் ஜங்கிள் புக்குமாக இருக்கின்றது.

கதை சொல்லியவர்களும் கேட்டவர்களும் பாக்கியவான்கள்! ஆம், சொல்லியவர்களும்தான்! நமது குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்போம்!

தொடரும்

ஜங்கிள் புக்-1

ஜங்கிள் புக்-1

1980களில் தூர்தர்ஷனில் ஞாயிறு காலை மோக்லியின் வருகைக்காக காத்திருப்போம்; அடர்காடு, புலி, கருஞ்சிறுத்தை, ஓநாய்கள் குட்டிகள், மலைப்பாம்பு, யானைகள், குரங்குகள், கழுகுகள், குருவிகள், கரடி, மரங்கொத்தி...அத்தனைக்கும் மனிதர்கள் போல் பெயர் உண்டு, நம்மைப்போல் பேசவும் செய்யும், நம்மைப்போல் மோசடி பித்தலாட்டம் மட்டும் செய்யத்தெரியாது.

நேற்று ஜங்கிள் புக் 3டி படத்துக்கு குடும்பத்துடன் செல்வது என நண்பர் டக்ளஸ் அழைக்க, திட்டமிட்டேன்; ஒரு நண்பரிடம் சொன்னபோது ‘பழைய படமாச்சே’ என்றார்; ஒரு நிமிசம் அப்படியே ஸ்தம்பித்தேன்; பாட்டி சொன்ன கதைகள், தூர்தர்ஷன், ப்ளாக் அண்ட் வைட் டிவி மோக்லி...என்று சொல்லியும் ‘பழைய’திலேயே நின்றார்;


நாட்டார் கதைகளும் புராணக்கதைகளும் செவிவழிக்கதைகளும் பேய்பிசாசுதேவதைக்கதைகளும் என்றைக்குமே புதுசுதான், அவை பழையதாவதில்லை என்று அவர் கேட்ட கதைகள் பற்றிச்சொல்லியே புரியவைத்தேன்;

உலகின் முதல் ஆதிக்கதையான கில்காமெஷ் இப்போதும் புதுசாகத்தான் இருக்கின்றது; சின்ன வயதில் அம்புலிமாமாவில் வாசித்த ’தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான்; அப்போது அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப்பார்த்து எள்ளி நகையாடியது’ இப்போதும் புதுசாகத்தான் இருக்கு; ஆனால் அப்போது வாசித்த கதாபாத்திரங்கள் பால்ய மனதின் உருவாக்கத்துக்கு ஒப்ப மாயாஜால பிம்பங்களாக மயக்கின; அதே கதாபாத்திரங்கள் நம்மைச் ‘சுற்றியும்’ இருப்பதை இப்போது வயதுவந்த மனசு புரிந்துகொள்கின்றது; மனிதர்களை விடவும் வேதாளத்தின் நட்பு பரிசுத்தமானது என்பது தெரிகின்றது; என்ன, தலைகீழாக என்னால் தொங்க முடியாது, அவ்வளவுதான். ‘தலைகீழாக’ மாத்தி யோசிப்பதால்தான் வேதாளம் இத்தனை புத்திசாலியாக இருக்குதோ என்றும் யோசனையாகவும் இருக்கின்றது. அறிந்தவர்கள் சொல்லலாம், என்னிடம் இருக்கும் பறக்கும் கம்பளத்தை இலவசமாக தருவேன்.

நிற்க.


அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாய் மாகாணத்தில் பிறந்தவர் ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling); 1865. தனது செல்ல மகளான ஜோசஃபினுக்காக அவர் சொன்ன கதையே இந்த ஜங்கிள் புக் கதைகளுக்கான தொடக்கம் என்பதை அறிகின்றோம்; ஜோசஃபின் ஆறு வயதில் இறந்து விடுகின்றாள். 1894இல் ஜங்கிள்புக் கதைகள் வெளியாகின்றன;

மனிதர்களைப்போல் பேசும் பாகிரா என்ற கருஞ்சிறுத்தை, பலூ கரடி, ஷேர்கான் என்ற புலி, க்கா என்ற மலைப்பாம்பு, இவர்களுடன் காட்டில் தொலைந்து போன மோக்லியை குழந்தயாக வளர்க்கும் அகிரா என்ற ஓநாயின் குடும்பம். கறுப்பு வெள்ளையில் 1980களில் பார்த்தது இப்போது கலரில் 3டியில் பார்க்கும்போது நாமும் குழந்தைகள் ஆகின்றோம்!

அடர்காட்டின் முதிர்ந்த உயர்ந்த மரக்கிளைகள் நம்மைத்தொடுகின்றன! ஆழ்பள்ளத்தாக்குகள் நம்மைப்பயமுறுத்துகின்றன; அடர் இருட்டு நம்மை பத்திரமாக இருக்கச்சொல்கின்றது; மிகமிக உயர்ந்த அதிஅகலமான ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவிநீரில் நாம் நனைகின்றோம்; மோக்லி வானத்தைதொடும் மரங்களில் முதிர்கிளைகளில் அநாயசமாக ஓடும்போது அய்யோ விழுந்திடுவானோ என நாம் பதட்டப்படுகின்றோம்; விழுந்தாலும் பாகிராவோ பலுவோ எங்கிருந்தாலும் பறந்துவந்து மோக்லியைத்தாங்கிகொள்வார்கள் என கொஞ்சம் நிதானப்படுகின்றோம்; தங்கபுஷ்பம் ஆன பெருந்தீ பெரும் ஓலமிட்டு ஆங்காரத்துடன் அடர்காட்டை எரித்து ஆர்ப்பரிக்கும்போது வீசும் காற்றில் பரவி நம்மை நோக்கி வரும்போது நெருப்பின் இதழ்கள் நம்மைத்தீண்டிவிடாமல் இருக்க கைகள் கொண்டு தடுக்கின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஷேர்கானின் அதிவலிமையான முன்கால்கள் எந்த நிமிசத்திலும் நம் முகத்தில் அறைந்துவிடக்கூடும் என படம் முழுவதுமே எச்சரிக்கையாக இருக்கின்றோம்.
(தொடரும்)