திங்கள், டிசம்பர் 16, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-11



45) காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதெல்லாம் நாடாளுமன்றம் கூடிய அத்தனை கூட்டங்களும் பாரதீய ஜனதாக் கட்சியினரின் அமளி, கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை கூட்டி அங்கலாய்ப்பது வழக்கமானது; உண்மையில் காங்கிரஸ் கொண்டுவரும் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் விவாதம் ஏதும் இன்றி நிறைவேறவே காங்கிரசும் பிஜேபியும் சேர்ந்து அண்டர்கிரவுண்ட் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன என்பதை வரலாறு மெய்ப்பிக்கின்றது. காங்கிரசால் முன்மொழியப்பட்ட புதிய பென்சன் திட்டம், இன்சூரன்ஸ், வங்கித்துறைகளில் அந்நிய நாட்டு முதலாளிகள் நுழைய வழி, சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பெரும் அந்நிய நாட்டு முதலைகள் முதலீடு போன்ற மக்கள்விரோத மசோதாக்கள் யாவும் பிஜேபியின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டன என்பது மோசடி வரலாறு. அதேபோல் போபால் விசவாயு வழக்கில் தொடர்புடைய அமெரிக்க யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சனை இரண்டு கட்சிகளுமே பாதுகாத்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தை போட்டிபோட்டு காப்பாற்றிக் கொண்டார்கள். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. மஹாராஷ்ட்ராவில் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான் டாபோல் மின்சாரத்திட்டத்தை என்ரான் என்ற அமெரிக்க கம்பெனியிடம் கொடுத்தார்கள் என்பதும் அந்த அமெரிக்க முதலாளி ஒருநாள் லாபம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பது மற்றொரு உதாரணம் அல்லவா! அமெரிக்க அரசின், அமெரிக்க கார்ப்பொரேட்டுக்களின் நலன் காப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் போட்டி வைத்தால் கட்டியிருக்கும் துணியையும் கழட்டிவைத்துவிட்டு ஓடுவார்கள் என்பதை நீண்ட கட்டுரையாகவே எழுதலாம்.

46) இன்றைய நிலையில் 1947க்குப் பின் மிக மிகச்சீரழிந்த ஒரு பொருளாதார நிலையில் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியதில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகளுக்கும் ஆகப்பெரும் பொறுப்பு உள்ளது.  ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு மல்யுத்த வீரர்களை தெருவில் இறக்கி வித்தை காட்டுவதைப்போல் நரமாமிசமோடியையும் ராஹுல் காந்தியையும் களத்தில் இறக்கி தெருக்களில் அடித்துக்கொள்ளச்செய்து மக்களை ஏமாற்றுகின்றார்கள், ஊடகங்களும் காங்கிரஸை விட்டால் பிஜேபி, பிஜேபியை விட்டால் காங்கிரஸ் என்பதுபோன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த இரண்டு தனிநபர்களையும் தலைப்புச்செய்திகளாக சித்தரிக்க அரும்பாடு படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த இரண்டு கட்சிகளால் பலன் அடைந்த கார்ப்பொரேட்டுக்களின் கையில் உள்ளவை என்பதால் ஊடகங்களின் அவசரத்தையும் உள்நோக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் கடந்த இருபது வருடங்களாக, குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில்தான் இந்த தேசம் அதிகபட்ச சீரழிவை சந்தித்தது என்பதையும் இதன் மொத்த சுமையும் சாமானிய இந்தியர்களின் தலையில்தான் விடிந்தது என்பதையும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் மறக்கமாட்டார்கள்; இந்த இரண்டு கட்சிகளையும், இந்த சீரழிவிற்கு துணைபோன, போகின்ற சக்திகள் எந்த வடிவில் வந்தாலும், இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு சாதகமாக உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளை எளிதில் திசைதிருப்பிவிட்டு அவர்களை சாதி மத அடிப்படையில் பிரிக்கத்தக்க  எத்தகைய தந்திரமான பிரச்சாரத்தை  செய்தாலும் அவர்களையும் அம்பலப்படுத்த முற்போக்கு ஜனநாயக சக்திகள் தம்மால் இயன்றவரை உழைப்பார்கள்; நடக்கவுள்ள தேர்தல் இந்தியாவின், இந்திய மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலே என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள்; சாதி மத அடிப்படையில் சாமானிய மக்களைக் கூறுபோட முயலும் எந்த சக்தியையும் கூட்டணியையும் எந்த வடிவில் வந்தாலும் அம்பலப்படுத்துவார்கள்; தமிழகத்திலும் இப்பணியை செவ்வனே செய்வார்கள்.

முற்றும்.

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-10



42) இந்தக் காலகட்டத்தில்தான் உலக கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியர்களும் இடம் பிடித்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் வசதியாக வாழ்வோருக்கும் ஏழைகளுக்கும் ஆன இடைவெளி அதிகமாக விரிவடைந்து கொண்டே செல்வதாகவும் புள்ளிவிவரங்கள் உறுதியாக சொல்கின்றன; இந்தக் காலகட்டத்தில்தான் மும்பையில் அம்பானி என்ற தனிநபர் தனது 4 பேர் கொண்ட குடும்பத்துக்காக 20 மாடிகளுக்கு மேல் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்; அவரது வீட்டில் இருந்து சில மணி நேரப்பயணத்தில் உள்ள விதர்ப்பா என்ற ஊரில்தான் இந்தியாவில் அதிகபட்சமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், பட்டினியால் செத்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமானது. இதே கால கட்டத்தில்தான் இந்தியர்களில் 60 கோடிப்பேர் இரவு உணவு உண்ணாமல் பட்டினியுடன் உறங்கச் செல்கின்றார்கள்; இதே காலகட்டத்தில்தான் விவசாய நாடான இந்தியாவில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இக்காலகட்டம் முழுமையும் காங்கிரசும் பிஜேபியும் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது ஒரே விதமான மக்கள் விரோத கொள்கைகளைத்தான் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதும், ஒருவருக்கொருவர் இதற்காக தோள் கொடுத்தார்கள் என்பதும் வரலாற்றுப்பதிவு.

43) 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப்பின் வந்த காலம் ஒரு சோதனைக்காலம்; தன்னால் ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க முடியும் என்று (வலை வீசி ஆள் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை என்று சொல்ல வேண்டும்) பிரதமரான வாஜ்பேயி 13 நாட்களுக்குப்பின் வெளியேறினார். தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் தேவ கவ்டா பிரதமர், அதன் பின் இந்தர் குமார் குஜ்ரால் பிரதமர் எனக் கண்டோம்; அஇஅதிமுக ஆதரவுடன் மீண்டும் பிஜேபியின் வாஜ்பேயி 1998இல் பிரதமர்.

44) 1992 டிசம்பர் ஆறு அன்று (அண்ணல் அம்பேத்கரை அவமதிக்க வேண்டுமென்றே இந்த நாளை சங் பரிவார் தேர்ந்தெடுத்தது என்பதை நெடுமாறன், வைகோ, தமிழருவி ஆகியோருக்கு மீண்டும் நினைவு படுத்துவோம்) பாபர் மசூதியை இடித்தார்கள். ராமர் இங்கேதான் பிறந்தார் என்று கூட இருந்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி போல சூடம் அணைத்து சத்தியம் செய்தார்கள். புத்தருக்கும் இயேசுவுக்கும் முகமதுநபிகளுக்கும் பிறந்த தேதியை வரலாறு நிர்ணயம் செய்துள்ளது; அதேபோல் ராமரின் பிறந்ததேதி என்ன என்று கேட்டால் தேசவிரோதி என்று சொல்கின்றார்கள். இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும் ராமர்கோவிலை ஏன் கட்டவில்லை என்று கேட்டாலும் தேசதுரோகி என்று சொல்கின்றார்கள். தேர்தலுக்குத்தேர்தல் மட்டுமே ராமர் பிறப்பார் என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

....தொடரும்

சனி, டிசம்பர் 14, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-9

37) முற்றத்திறப்புவிழாவில் “யாயும் யாயும் யாராகியரோ” என்ற குறுந்தொகைப்பாடலின் நவீன வடிவமாக பிஜேபியின் பொன்.ராதாகிருஸ்ணனை தாயப்பன் இப்படி வரவேற்றாராம்: ”நீங்கள் காவி, நாங்கள் கருப்பு உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”. ஆஹா! பெரியாரைக் கேவலப்படுத்துவதில் ஆர் எஸ் எஸ்-காரர்களையும் மிஞ்சுகின்றார்கள் இனமானக்காவலர்கள். மலக்குடல் நாற்றம் தாங்கமுடியவில்லை. 

38) பிஜேபி ஆள்கின்ற மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு மகிந்த ராஜபக்சே வந்தபோது, அங்கே போராட்டம் நடத்த நேரடியாக சென்ற வைகோவின் கழுத்தில் தொப்புள்கொடிகள் கன்னாபின்னாவென சிக்கிக்கொண்டன. சிக்கியது அது ஒன்றும் முதல் முறை அல்ல. தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தார்கள் (காங்கிரசோ பிஜேபியோ தேசிய முன்னணியோ வேறு எதுவுமோ...திமுக அந்த அமைச்சரவையில் நிச்சயம் இருக்கும், அது என்ன தொப்புள்கொடியோ!). 2000 ஏப்ரலில் சிங்கள இராணுவத்தை புலிகள் முற்றுகை இட்டார்கள்; உதவி கேட்ட இலங்கை அரசுக்கு ஆதரவாக வாஜ்பாய், ”புலிகள் இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து இந்திய படைகள் அனுப்பப்படும்” என்று எச்சரித்தார். அவ்வாறே புலிகள் விலகினார்கள். இந்த உடன்பாட்டுக்கு உதவிய தொப்புள்கொடிகள் யார் யார் என்ற கேள்வியும் இக்கட்டுரையைப் பொருத்தவரை இரண்டாம்பட்சம்.

39) 2014 நாடாளுமன்றத்தேர்தல் (குறைந்த பட்சம்) அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்தியாவின் அரசியல்-பொருளாதார தலைவிதியை நிர்ணயம் செய்யும். 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலை சற்றே நினைவில் கொள்வோம்.

40) 1989ஆம் ஆண்டு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் தலைமையில் ஆன ஒரு கூட்டணி அரசு அமைந்தது; இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்கினார்; இது பார்ப்பனீய சக்திகளுக்கும் அவர்களின் இயக்கமான பிஜேபி ஆர் எஸ் எஸுக்கும் உவப்பானதாக இல்லை; மேலும் ரத யாத்திரை என்ற பெயரில் நாடெங்கும் ஒரு ரத்தக்களறியை ஏற்படுத்தி டெல்லி நாற்காலிக்கு குறிவைத்து அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கு பிஹாரில் லாலுபிரசாத் முற்றுப்புள்ளி வைத்தார்; விளைவு வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பிஜேபி விலக்கிக்கொண்டது, வி பி சிங் அரசு கவிழ்க்கப்பட்டது; அதன் பின் காங்கிரஸ் ஆதரவுடன் சில மாதங்களுக்கு பிரதமராக இருந்த சந்திரசேகர் 1991 மார்ச் ஆறாம் நாள் பதவி விலகினார்.


41) காங்கிரஸ் அல்லாத பிஜேபி அல்லாத ஒரு கூட்டணி, குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்குடன் ஆன ஒரு கூட்டணி, மத்தியில் ஆட்சியில் அமரும் என்பதை ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பாக நடந்த வாக்குப்பதிவுகள் உறுதி செய்வனவாக இருந்தன. உலகமயம் தனியார்மயம் தாராளமயம் என்ற மூன்று பெரும் தீமைகளின் பிறப்பிடமான அமெரிக்காவும் அதன் உலகமய பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களும் 1991 தேர்தலை ஆழ்ந்து கவனித்து வந்தனர்; அத்தகைய ஒரு கூட்டணி ஆட்சியில் அமர்வது தங்களது உலகளாவிய கொள்ளைக்கு, குறிப்பாக தமது இலக்கான 100 நூறு கோடி மக்களைக் கொண்ட பரந்து விரிந்த சந்தையான இந்தியாவில் ஆட்சியில் அமர்வது பெரும் தடங்கலாக அமையும் என்று உணர்ந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்; விளைவு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்; ‘நாங்கதான் உலகத்துலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடாக்கும்’ என்று எப்போதுமே பீத்திக்கொள்ளும் தேர்தல் ஆணையம், 1991 மே 21க்குப் பின் நடக்கவிருந்த வாக்குப்பதிவை 12 முதல் 15 நாட்களுக்கு தள்ளி வைத்தது; அதாவது ஒரு தனி நபரின் மரணத்தை காரணம் காட்டி ஆகப்பெரும் ஒரு தேசத்தின் வாக்குப்பதிவையே தள்ளி வைத்தது. அது தற்செயலான ஒன்றல்ல என்பதை அதன் பின் நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தெளிவாக காட்டின; ராஜீவ் கொலைக்கு முன்பான 211 தொகுதிகளில் காங்கிரஸ் மிகப்பரிதாபமான வாக்குக்களைப் பெற்றதாக தெரிய வந்தது; ராஜீவ் காந்தி கொலையின் மீதான மக்களின் அனுதாப அலையை காங்கிரஸ் அறுவடை செய்ய 21ஆம் தேதிக்குப் பின் தொடர்ந்த பத்து நாட்களும் மிக உறுதியாகப் பயன்படுத்தப் பட்டன; தொலைக்காட்சிகளில் ராஜீவ் மரணக்காட்சிகள், அவரது தாத்தா காலத்தில் இருந்து அந்தக் குடும்பம் இந்திய மக்களுக்காக தங்களை எப்படியெல்லாம் ‘அர்ப்பணித்துக்’ கொண்டது போன்ற ‘வரலாறுகள்’ மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு மக்களின் அனுதாபத்தை காங்கிரஸ் அறுவடை செய்தது; காங்கிரஸ் இறுதியாக 244 இடங்களை பெற்றது; பிஜேபி 120; தேர்தல் முடிந்தபின் நரசிம்மராவ் பிரதமர் ஆனார், மன்மோஹன் சிங் என்ற முன்னாள் மத்திய அரசு ஊழியர், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் நிதியமைச்சர் ஆனார். அமெரிக்காவும் உலக கார்ப்பொரேட் முதலைகளும் விரும்பியவாறே உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட்டன; மக்களின் அனுதாபத்தை அறுவடை செய்தது காங்கிரஸ் அல்ல, அமெரிக்காதான் என்பதை கடந்த 20 வருட பொருளாதார சீரழிவு வரலாறு தெள்ளென நிரூபிக்கின்றது. ...

...தொடரும்

வெள்ளி, நவம்பர் 29, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-8



33) நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இடங்களிலும் முச்சந்திகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும்  வேட்டிகளைக் கிழித்துக்கொண்டு தெரு நாய்களைப்போல் சண்டைபோட்டுக்கொண்டாலும் உள்ளூரில் சாதிப்பிரச்னை என்று வரும்போது இடதுசாரிகளைத்தவிர்த்த இதர கட்சிகள் அனைத்தும் இந்து மதத்திலேயே இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும், சிறுபான்மை மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும் திட்டமிட்ட வகையில் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். இவர்களில் தமிழகத்தில் திமுக, அ இ அதிமுக, மதிமுக, பாமக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளும் அடக்கம் எனில் இக்கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆதிக்க சாதியினருக்கும் தமிழகத்தின் தலித் மக்களுக்கும், இஸ்லாமிய கிறித்துவ மக்களுக்கும் ஆன உறவு   தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? 

34) இவர்கள் சொல்லும் தொப்புள்கொடி உறவு இலங்கையில் உள்ள தமிழனை  மட்டுமே இணைக்குமா? உள்ளூரில் வெண்மணியில், மீனாட்சிபுரத்தில், மண்டைக்காட்டில், புளியங்குடியில், கடையநல்லூரில், போடியில், தேவாரத்தில், தென்காசியில், கோவையில், கோட்டைமேட்டில், பரமக்குடியில், கன்னியாகுமரி நித்திரவிளையில், உத்தப்புரத்தில், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்கச்சியேந்தல், திண்ணியம், மேலவளவு, நக்கலமுத்தன்பட்டியில், மருதக்கிணறு குருவிக்குளத்தில், பந்தப்புளியில்,  நேற்று தர்மபுரியில், நிலக்கோட்டையில், வடக்கே கைர்லாஞ்சியில், காந்தமாலில், அயோத்தியில், மாலேகானில், ஹைதராபாத்தில், ஒரிசாவில், குஜராத்தில், ஹரியானாவில், முஜாஃபர்பூரில், மஹாராஷ்ட்ராவில் என பரந்துபட்ட இந்த பாரத்தேசம் எங்கும் கிழிந்து நாற்றமெடுத்து நார் நாராகத் தொங்குவது தொப்புள்கொடிகளா மலக்குடல்களா? 

35) இந்துதீவிரவாத சிவசேனாவின் பால்தாக்கரே வீட்டில் பிரபாகரனின் புகைப்படம் தொங்குவதைப் பார்த்துப்  பரவசம் அடைந்த நெடுமாறன் அவர்களும், அதே பால்தாக்கரே மண்ணின்மைந்தர்களுக்கு ஆதரவாக மும்பையில் இருந்து பிஹார், ஒரிசா, வங்காள தொழிலாளர்களை அடித்து விரட்டிய போது ‘அது சரிதான் என புளகாங்கிதம் அடைந்து போன ஆவேச அண்ணன் சீமானும், அதே சிவசேனா மும்பையின் தமிழர்களை அடித்து துவம்சம் செய்து அவர்களின் சொத்துக்களை சூறையாடிய தாக்குதலுக்கும் இஸ்லாமிய மக்களின் மீது படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டதற்கும் என்ன பெயர் வைப்பார்கள் என்று விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? குறிப்பிட்டுச் சொல்வதெனில், பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில் இன்றும் கூட்டணியில் நீடிப்பது சிவசேனாதான் என்ற நிலையில் இந்த உறவுக்கு என்ன பெயர்? பொன்.ராதாகிருஷ்ணனிடமாவது கேட்டு சொல்ல வேண்டும். 

36) ‘நரேந்திரமோடி ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது தவறுதான்; அதற்காக மோடி மன்னிப்புக்கேட்டால் அவர் இத்தேசத்தின் பிரதமராக வருவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லைஎன்று போகின்ற இடங்களில் எல்லாம் பேசிவருகின்றார் தமிழருவி. சற்று முன் கிடைத்த தகவல்படி மோடி தமிழருவியிடம் இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்பதை  தெரிவித்துக்கொள்கின்றோம். தவிர மன்னிப்புக்கேட்டால் மோடி மீதும் அவன் அரசு மீதும் நடக்கின்ற எண்ணற்ற வழக்குகளை வாபஸ் வாங்கி விடலாம் என்றும் தமிழருவி சொல்லக்கூடும். ஒருவேளை நாதுராம் கோட்சே உயிரோடு இருந்திருந்தால் காந்தியை சுட்டுக்கொன்றது தப்பு, மன்னிச்சிடுங்கோ என்று கண்ணீர் சிந்தியிருந்தால் அவனும் கூட இத்தேசத்தின் பிரதமராக வருவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் கூட காந்திய மக்கள் இயக்கத்தின் பெருந்தலைவர் தமிழருவி ஊர் ஊராக பிரச்சாரம் செய்திருக்கவும் கூடும்.
...தொடரும் 

வியாழன், நவம்பர் 28, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-7




29) கவனித்துப்பார்த்தால் 
இவர்களின் புதிய
சகாவான ஆர் எஸ்
எஸ்சின் கொடுக்கான
பிஜேபியின் 
பொன்.ராதாகிருஷ்ணன்
 இதுவரை
கவனமாக தொப்புள்கொடி என்ற சொல்லை
பயன்படுத்தவில்லை என்பது புரியும். அவர்கள்
நிலையில் அவர்கள் சரியாக இருக்கின்றார்கள்: 
அவர்களுக்கு ஐந்து விதமான
தொப்புள்கொடிகளை மனு போதித்துள்ளான்: 
பிராமணன், ஷத்ரியன், சூத்திரன், வைசியன், 
பஞ்சமன் ஆகிய ஐந்து தொப்புள்கொடிகள். 
தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்குள்ளும்
இந்த ஐந்து வெவ்வேறு கிரேட்
தொப்புள்கொடிகள் உண்டு என பிஜேபியின்
பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வாரெனில்,
‘இல்லை இல்லை, இவை தொப்புள்கொடிகள்
அல்ல, மலக்குடல்கள் என இனமான
சிங்கங்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி,
சீமான் போன்றோர் சொல்வார்களெனில்
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம்
திறக்கப்பட்டபோது தொப்புள்கொடிகளும்
மலக்குடல்களும் எப்படி பிணைந்தன,
என்னவிதமான தத்துவ உறவு அது என்று
விளக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு
உள்ளது. இதுவரை பிஜேபியின் மறைமுக
ஏஜெண்டாகவும் சமீபத்தில் வெளிப்படையாகவே
அக்கட்சியில் சேர்ந்தவருமான சு.சாமியை
முற்றம் திறக்கும்போது ஏன் அழைக்கவில்லை
என்ற கேள்வி இக்கட்டுரையை பொருத்தவரை 
இரண்டாம் பட்சம்.  

30) மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவர்கள், சம்ஸ்கிருதமே இந்தியாவின் பொது மொழி, அதுவரை இந்தி இருந்துவிட்டுப்போகட்டும் என்று சொல்பவர்கள், கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரானவர்கள், ஒரே மதம், அது இந்து மதம், ஒரே இனம், அது ஆரிய இனம் என்று பிரகடனம் செய்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஒரு தொப்புள்கொடி உறவை ஏற்படுத்த வைகோவும் நெடுமாறனும் தமிழருவியும் ராமதாசும் முயற்சி செய்கின்றார்கள்.
 
31) மஹாராஷ்ட்ரா மாநிலம் கயர்லாஞ்சி: 2006 செப்டம்பர் 29. புத்தமதத்தை தழுவிய பய்யாலால் போட்மாங்கே குடும்பத்தினர் படுகொலை. ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை சகித்துக்கொள்ளாமல் சுயமரியாதையுடன் வாழ போராடியது, ஒரு தலித் குடும்பம் 4.74 ஏக்கரை சொந்தமாக கொண்டிருந்தது,  அக்குடும்பத்தில் படித்த தலித் பெண் இருந்தது ஆகிய பெரும் ‘குற்றங்களுக்காக அக்குடும்பத்தினர் நால்வர் கொல்லப்பட்டனர். குடும்பத்தலைவியும் அவரது மகளும் அதே குடும்பத்தின் ஆண்கள் கண் முன்னால் மானபங்கப்படுத்தப்பட்டனர், அனைவரும் கொல்லப்பட்டனர். தூரத்தில் மறைவில் இருந்து இக்கொடுமைகளை அக்குடும்பத்தின் தலைவர் ஆதரவற்ற நிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். 2008 செப்டம்பர் 24 அன்று பந்த்ரா மாவட்ட நீதிமன்றம், இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரணதண்டனையும் 2 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.தாஸ் என்பவர் சாதீய அடக்குமுறையால் நிகழ்ந்த வன்கொடுமை அல்ல; இது வெறும் கொலை வழக்கு மட்டுமே என்று தீர்ப்பு சொன்னார். விசயம் என்னவெனில் குற்றம் நிகழ்ந்தபோதும் அதற்கு முன்பும் பின்பும் உள்ளூரில் காங்கிரஸ் பிஜேபி உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் அந்த தலித் குடும்பத்திற்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தன; இக்கட்சிகளும் அதன் தலைவர்களும் பொதுவிலும் தேர்தல் காலங்களிலும் இத்தேச நலனின் பொருட்டு ஒருத்தருக்கொருத்தர் கட்டிப்புரண்டு தெரு நாய்களைப்போல சண்டைபோடுவதாக காட்டிக்கொள்கின்றனர். 

32) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மிகப்பெரும் அரசியல் படுகொலையை (காந்தியடிகள்) நடத்தியவர்கள், அதன் பின் ஆகப்பெரிய மதக்கலவரத்துக்கு வித்திட்ட ராமர் ரத யாத்திரையை நடத்தியவர்கள்; தமிழகத்தின் காமராஜர் மீது டெல்லியில் பெரும் தாக்குதல் நடத்தியவர்கள்;  ஒரிசாவில் கிறித்துவப்பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் வைக்கோல்போரில் தள்ளி உயிரோடு கொளுத்தியவர்கள்; கிறித்துவ கன்னியாஸ்த்ரீகளை மானபங்கம் செய்தவர்கள்; செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக இரண்டு தலித் ஆண்களை உயிரோடு எரித்தவர்கள் (மாடு கோமாதாவாம்! கேரளாவில் கோமாதா கோபிதா இறைச்சிதான் விலை மலிவு); இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களை நடத்த ஆயுதப்பயிற்சிப்பள்ளி நடத்துகின்றவர்கள்; பல பொது இடங்களிலும் இந்துமக்களின் வழிபாட்டுத்தலங்களிலும் தங்களது அலுவலகங்களிலும் தாங்களே வெடிகுண்டு வைத்துவிட்டு பழியை இஸ்லாமிய மக்கள் மீது சுமத்துகின்றவர்கள்; கருத்துசுதந்திரத்தை அனுமதியாத ஃபாசிஸ்ட்டுக்கள்; இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மாபெரும் ரத்தக்களறியை ஒரு முதலமைச்சரின் ஆணைப்படி நிதானமாக நிறைவேற்றிய கொலைபாதகர்கள்; ரத்தக்கறை என்றும் மறையாத அதே முதலமைச்சரை இந்தியாவின் எதிர்காலப்பிரதமராகக் காட்டுவதில் வெட்கமோ மானமோ கடுகளவும் இல்லாத சமூகவிரோதிகள்; உ.பி.யில் முசாஃபர்நகரில் சமீப நிகழ்வான கலவரத்தில் 32 பேர் கொல்லப்படக் காரணமாக இருப்பவர்கள்; உத்ரகாண்ட் வெள்ளத்தில்  சிக்கிய 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றியதாக கூச்சநாச்சம் ஏதுமின்றி பொய் சொல்பவர்கள்; பாரத்மாதா என்று கூவிக்கொண்டே அமெரிக்க கார்ப்பொரேட்டுக்களுக்கு பாரத்மாதாவின் சேலை வரை விற்றுக் காசு பண்ணும் வித்தை தெரிந்தவர்கள்...இப்படி முற்றுப்பெறாமல் நீண்டுகொண்டே போகும் ஒரு பட்டியலுக்கு சொந்தமான பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலின் தமிழகப்பிரதிநிதியான பொன்.ராதாகிருஸ்ணன் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் தொப்புள்கொடி ஆவார் என்று விளக்க வேண்டிய கட்டாயம் நெடுமாறன், வைகோ, காந்திய சிந்தனைவாதி தமிழருவி ஆகியோருக்கு உண்டு.

தொடரும்...