சனி, அக்டோபர் 13, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் (இறுதிப்பாகம்)


பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.

கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாதுஎன்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்கபொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.

இமாம் எழுந்தார். ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லைஎன்று விம்மியவாறே கூறினார்.


உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும் கூட 
சூரியன் நிலைத்து நிற்பதில்லை, மறையவே செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இவற்றை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.” 


(முற்றும்)

(புகைப்படத்தில் குஷ்வந்த் சிங். (இப்போது  பாகிஸ்தானில் உள்ள ) பஞ்சாபின் ஹதாலி மாவட்டத்தில் சர்கோதா என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பு 1915, பிப்ரவரி 2.  அவரது தந்தை சர் சோபா சிங் அன்றைய காலத்தில் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ் பெற்றவர், வெள்ளையர் காலத்திய டெல்லியில் பல அழகுமிகு கட்டிடங்களை கட்டியவர். குஷ்வந்த் சிங் லாஹூர், டெல்லி,லண்டன் நகரங்களில் படித்தவர். சட்டப்படிப்பில் பார்-அட்-லா படித்தவர். அவரது நாவல்கள்,சிறுகதை தொகுப்புக்கள் முப்பதுக்கும் மேல் இருக்கலாம். சமூகம், மதம், அரசியல், பாலியல்  சார்ந்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவரது வழக்கம்)

2 கருத்துகள்:

veligalukkuappaal சொன்னது…

மூத்த தோழர் காஸ்யபன் அவர்கள் தனது வலைப்பூவில் ‘பொன் மலையும் அந்த பாரத புத்திரர்களும்’ என்ற தலைப்பில் மிக்க உணர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். எனது ‘பாகிஸ்தான் செல்லும் ரயில்’ பதிவை வாசித்து பாராட்டிய அவர், தனது வலைப்பூ பதிவையே பின்னூட்டமாக இட அன்புடன் கேட்டுக்கொண்டார். தோழர் அவர்களுக்கு என் நன்றிகள் பல. இதோ, அவரது பதிவு:
பொன் மலையும் அந்த பாரத புத்திரர்களும்......!!!

"சாம்பல் தேசம்" வலைப்பூவில் "பாகிஸ்தான் செல்லும் ரயில்" என்ற நாவல் பற்றி எழுதி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் எழுதிய இந்த நாவல் எழுதப்பட்ட காலம் இந்திய விடுதலை.மதக்கலவரம் ஆகியவை நடந்த மிகவும்குழப்பமான காலமாகும்.இதுபற்றிய சில வரலாற்றுத்தகவலை பரிமாறிக் கொள்ள விரும்பினேன். நண்பர்கள் அதன பின்னூட்டமாக போடாமல்,ஒரு தனி இடுகையாக எழுதுங்கள் என்று ஆலோசனை கூறினர்.



1946ம் ஆண்டு இறுதியில் ஆங்காங்கே மதவெறியர்களின் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது .வடமேற்கு எல்லை மாகாணம்,ராவல்பிண்டி,கிழக்குபஞ்சாப் ஆகிய இடங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இருக்கமுடியாது என்ற நிலை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் நிலமை மிகவும் மோசமாகி இந்தியப்பகுதியிலும் அதன்பாதிப்பு வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கில் இரண்டு பகுதியிலும் மக்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறினர். பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்.து பாகிஸ்தானுக்கும் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டது.ரயில்தொழிலாளர்களுக்கு அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை. இது இரண்டு பக்கமும் நடந்தது. கால்நடையாக கலவரம் நடக்கும் பகுதிகள் வழியாக வரவேண்டியதாயிற்று. வழியில் கொன்று குவிக்கப்பட்டவர்கள், கற்பழிக்கப்பட்டவர்கள் ,அனாதையான குழந்தைகள் நிலை சொல்லும் தரமன்று .



இடைக்கால அரசு இது பற்றி யோசித்தது. இரண்டு பக்கமும் உள்ளமக்கள் புலம்பெயர ரயில் போக்குவரத்தை சீர்செய்ய முடிவாகியது.அதேசமயம் இஞ்சின் ஓட்ட கரி அள்ளிப்போட ,கார்டுகள், பாயிண்ட்ஸ் மேன் என்று வேண்டுமே? ம.பி,உ.பி,பஞ்சாப்,ராஜஸ்தான் பகுதி ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் கருத்த,ஒடிசலான, நீண்ட நெற்றியைக் கொண்ட தென் இந்தியர்களை கொண்டு ஓட்ட முடிவெடுக்கப்பட்டது. நேரு இதுபற்றி செயலாற்றும் பொறுப்பை வி.வி.கிரி அவர்களிடம் கொடுத்தார். A.I.T.U.C யோடு நெருக்கமான தொடர்பு கொண்ட கிரி அவருடைய நண்பரான தோழர் அனந்தன்நம்பியாரை உதவிக்கு அழைத்தார்.



திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்கள் அமைப்பின் தலைவராக அப்போது நம்பியார் இருந்தார்.பொன்மலை ஒர்க்சாப்பில் தொழிலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார்.நிலமையை அவர்களிடம் விளக்கினார். " தோழர்களே! இந்த தேசமே உங்களை பார்க்கிறது. ஆயிரக்கணக்கான நம் சகோதரர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்! . அதேசமயம் உதவச்செல்லும் உங்களுக்கும் ஆபத்து இருக்கிறது. வெறிபிடித்த கூட்டம் இரண்டு பக்கமுமுள்ளது. அவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற அரசு எந்த உத்திரவாதமும் தர தயங்குகிறது.தோழர்களே முடிவு உங்களுடையது" என்றார் நம்பியார்.



அந்தக் கூட்டத்தின் கனத்த மோனத்தை நாராயண சாமி நாயுடு என்ற தொழிலாளி கலைத்தார்

தோழரே! நான் தயார்" என்றார். மொத்தம் முப்பது பேர் வந்தார்கள்



கருத்த அந்த தமிழக தொழிலாளர்கள் அன்று செய்த தொண்டு வரலாற்றின் இடுக்குகளில் தேடிப்பார்த்தால்தான் தெரியும்.



பி.கு. இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கு முன்னால் திருச்சி தோழர் எட்வின் அவர்களை தொடர்பு கொண்டேன். நினவில் எழுதுவதால் நாராயணசாமி நாயுடு என்ற பெயரை அவரும் உறுதிப்படுத்தினார்.மற்றவர்கள் பெயர் தெரியவில்லை..திருச்சி அன்பர்கள் பொன்மலையில் உள்ள D.R.E.U சங்கத்தை அணுகினால் அந்த பாரதபுத்திரர்களின் வரலாற்றுப்பணி தெரியவரும்.



இன்றும் திருச்சியை கடக்கும் போது "பொன்மலை" ரயில் பலகையைப் பார்க்கும்போது என்னையறியாமல் இருகரம் கூப்புவேன்.

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) சொன்னது…

மனசு கனக்கிறது இக்பால். உங்கள் ஆழமான எழுத்துகளின் அர்த்தம் புரிந்துகொண்டேன். பொன்மலையில் இன்னும் உலராமல் இருக்கும் கண்ணீரத் துளிகளையும் அடையாளம் காட்டியுள்ள காஸ்யபனின் கூப்பிய கரங்களையும்.