ஞாயிறு, செப்டம்பர் 18, 2011


உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!






சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான்  
இறவா ரகசியங்களின் உருவம் நான் 
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான் 
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்


அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள்  
எம்மக்களின் அன்றாட  உணவைப் பறித்தார்கள் 
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள் 
ஒடுக்கப்பட்ட அந்த  மக்களின் உரிமைதான் நான்


நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே 
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே 
ஒரு வாய்  உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள் 
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள் 
நாம் உதவி உதவி என்று கதறிய போது 
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்


அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே 
வருஷங்கள் காதலித்த  வண்ணம் 
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம் 
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும் 
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும் 
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே 
இருளில்  ஒளிரும் தாரகையும்  நானே 
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே 
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே 
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே 
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே  நானே 

நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம் 
அதிலிருந்து எழுப்புவோம் 
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
காற்றையும் மழையையும்    
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும் 
   
                                                                                     
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் 
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான் 
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் 
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
 .....

000 

  
“சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் ” 
ஆஹா! உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி இவள்.  இவள் பாடுவதை இங்கே பாருங்கள், கேளுங்கள்...
http://www.youtube.com/watch?v=A9mY_GsQZ2w&feature=player_embedded#!
                                        
(கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள்...இக்கவிதையை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியவர் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன், கவிதை வாசிப்போரை சூடேற்றும் ஒன்றாகவே, உடனடியாக நான் அதை மொழிபெயர்த்து, ‘நல்லா இருக்குதா தோழர்? இல்லேன்னா திருத்துங்க’ என்று மட்டும்தான் சொன்னேன்.  அவர் அதைப் படித்துவிட்டு, தோழர் மாதவராஜுடன் பகிர்ந்து கொள்ள அவரோ பெருந்தன்மையுடனும் மகிழ்வுடனும் தனது தீராதபக்கங்களில் வெளியிட்டதுடன், மறுநாள் சனிக்கிழமை என்னை தொலைபேசியில் அழைத்து உற்சாகம் பொங்கும், கேட்போரையும் உற்சாகம்  தொற்றிக்கொள்ளும் அவரது குரலில் ‘தோழா...!” என அழைத்துப் பேசிக்கொண்டே போனார்!  தொடர்ந்து மூத்த தோழர் காஷ்யபன் நாக்பூரில் இருந்து அழைத்து வாழ்த்தினார். 
 இந்த  மொழியாக்கம் வண்ணக்கதிரிலும், Bank Workers Unity பத்திரிகையின் மார்ச் இதழிலும்  இடம் பெற்றது. பெற்றுள்ளது... எஸ்.வி.வி, மாதவ், காஷ்யபன், அ.குமரேசன்,  தீராதபக்கங்களில் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்... நான் செய்த மொழிபெயர்ப்புக்களில் எனக்கு மிகுந்த திருப்தி தந்தவற்றுள் இதுவும் ஒன்று....)

கருத்துகள் இல்லை: