facebook- ல் நண்பர் தாமஸ் அலெக்ஸ் ராஜின் பக்கத்தில் அவர் பதிவிட்டதும், எனது பதிலும் இங்கு...
ஆனந்த விகடன் கேள்வி பதில் (கே.பாலசந்தர் பதில்கள் )
கேள்வி : பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருகிறீர்கள் . பாரதியாரை விட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால் உங்கள் பெண்ணிய படங்களில் ஏன் பெரியாரைப் பற்றிய சித்தரிப்புகள் இல்லை?
பதில் : ஒரு வேலை பெரியார் பாடல்கள் எழுதி இருந்தால் பயன்படுத்தி இருப்பேனோ?பெரியாருக்கு முன்பே பாரதி பிரந்துவிட்டதாலும் அவருடைய பெண்ணியக் கருத்துக்களில் பாரம்பரியத்தின் நல்ல அமசங்களும் புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும் , அதுவே எனக்குப் போதுமானதாக இறந்தது!.
இங்கு ஒரு தகவல் :
பெரியார் - 17 September 1879(1879-09-17) - 24 December 1973(1973-12-24)
பாரதி - December 11, 1882(1882-12-11) - September 11, 1921(1921-09-11)

1) முதலில் கேள்வியே தப்பு! பாலச்சந்தர் படத்தில் பெண் விடுதலை என்று என்றைக்கு பேசினார்? 'பெண் விடுதலை' என்று வார்த்தைகளில் சில பாத்திரங்கள் பேசுவது பெண் விடுதலை ஆகாது. மனதில் உறுதி வேண்டும் படத்தில் அந்தக் காட்சி ஞாபகம் உள்ளதா? நர்சுகள் எல்லாம் திரண்டு வருவார்களாம், சில கேள்விகள் கேட்பார்களாம், அதன் பின் மற்ற நர்சுகள் எல்லாம் போன பின் சுஹாசினியும் அந்த எழுத்தாளரும் 'கண்ணா வருவா' என்று மண்டபங்களில் நடனமாட....! ஒரே கூத்து போங்கள்! இவரது படங்களில் பெண் விடுதலை என்பது இதுவரை சின்னபுள்ள தனமாகத்தான் (அல்லது கால்வேக்காடு) காட்டப்படுள்ளது.
2) பெரியார் பெண்விடுதலையை இரண்டாவதாகத்தான் பேசினார். முதலில் அவர் தெளிவாக நம் பெண்களிடம் சொன்னது 'பெண்ணே! நீ அடிமையாக இருக்கின்றாய்! தெரியவில்லையா? நீ குடும்பத்துக்குள்ளும் சமுதாயத்துக்குள்ளும் அடிமையாக இருக்கின்றாய், புரியவில்லையா?' என்று முதலில் பெண்ணடிமைத்தனத்தையும் அதற்குக் காரணமான ஆணாதிக்கத்தையும் கேடுகெட்ட இந்துமதத்தின் வர்ணாசிரம, பார்ப்பனீய தத்துவங்களோடு இணைத்து பேசினார், அப்படித்தான் பேசவும் வேண்டியிருக்கும் . பெரியார் அதன் பின்பே பெண் விடுதலை பற்றி பேசுகின்றார். இஸ்லாமும் கிறித்துவமும் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை கொடுத்துள்ளன, இஸ்லாம் ஒரு படி மேலே சென்று குடும்ப வாழ்க்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவை என்று வலியுறுத்தவே செய்கின்றது. ஆனால் கணவனை இழந்த இந்து மதப் பெண்கள், குறிப்பாக பிராமண குடும்பத்துப் பெண்கள் மொட்டை அடிக்கப் பட்டு, வீட்டின் ஒரு இருட்டு மூலையில் தள்ளப்படும் அவலத்தை பாலச்சந்தர் பேச முற்படுவார் எனில், இது குறித்து பெரியாரின் கருத்துக்களை பேச வேண்டியிருக்கும், வருணாசிரம், பார்பனீயம்...என சாக்கடைகளைப் பற்றி பேசவேண்டிய கட்டாயம் ஏற்படும், பாலச்சந்தர் அப்படியான விசயங்களை பேசிவிடுவாரா என்ன?
3) பாரதியாரை விடவும் பெரியார்தான் பெண்ணியம், பெண் விடுதலை, உரிமை குறித்து அதிகம் பேசினார் என்பது உண்மை. எனவேதான் அத்தகைய பெரியாரின் குரல் நம் வீட்டு பெண்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்பதில் நம் ஆண்கள் மிக கவனமாக எச்சரிக்கையாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள், குறிப்பாக பார்ப்பனீயர்கள் கண்டுபிடித்த வழிதான், நம் சமுதாயப் பெண்களை எளிதில் கோபமுறச் செய்யும் 'பெரியாரா! அவரு சாமி சிலைய ஓடச்சாரு, புள்ளையாரு சிலைக்கு செருப்பு மாலை போட்டாரு' போன்ற பிரச்சாரங்களை வீட்டுக்குள்ளேயே பரப்பியதும், பெரியார் என்றாலே கடவுள் வெறுப்பாளர், மறுப்பாளர் என்ற ஒற்றை முகத்தை மட்டுமே நம் பெண்களுக்கு காட்டியதும். இதற்கு பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல. (பெரியாரின் பிறந்த தினம் தெரியாமல் இருப்பது ஒன்றும் பெரிய குற்றம் அல்ல, ஆனால் பெரியாரின் வரலாறும் தெரியாமல் பாரதியாரின் வரலாறும் தெரியாமல் அரைவேக்காடாய் இருப்பதுதான் குற்றம். அவரது பல படங்களும் அப்படித்தான், ஏதோ பெரிய பிரச்னையை பேச வருவது போல் தொடங்குவார், முடிக்க தெரியாமல் திணறுவார்).
2 கருத்துகள்:
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
தானும் வாடிய வள்ளலாரை நான் என்றும் மதிக்கின்றேன். எல்லாவற்றையும் விட மனிதனை தீயவற்றுக்குத் தூண்டுவது பசி என்றறிந்த மாமனிதன் அவர். ஆகையால்தான் அணையா நெடும் அடுப்பு வடலூரில் இன்றும் தொடர்ந்து எரிந்துகொண்டே உள்ளது. இதில் ஒரு தத்துவம் இருப்பதாகவே நான் காண்கின்றேன். நன்றி!
கருத்துரையிடுக