திங்கள், செப்டம்பர் 14, 2026

தூசிமுத்துவின் டைரியிலிருந்து ஒரு நாள்...

"...நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே அறிஞர்கள் தோன்றுவார்கள். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே பேரறிஞர்கள் பிறப்பார்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே மஹான்கள் அவதரிப்பார்கள் என்பதறிக...மெல்லத்தமிழினிச்சாகும் என்ற கொடுநிலை கி.பி.இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும்...இருபத்துஒன்றாம் நூற்றாண்டில் அது பேரழிவு நிலையை எட்டும்...செம்மொழியாம் தமிழை காரிருளும் பேயிருளும்  சூழும்...ஆசியக்கண்டத்தின் மிகப்பெரும் தேஷமும், ரிஷிபுங்கவர்களும் ஜடாமுடிதரித்த முனிவர்களும்,  காற்றை மட்டுமே உண்டு ஆயிரம் வருடங்கள் ஜீவிக்கும் காயகல்ப வித்தை அறிந்த யோகிகளும் அவதரித்த புண்ணியபூமியுமான பாரததேஷத்தின் தென்கோடி முனையில் வங்கசமுத்திரம் ஓரம் தமிழ் யாப்பிசைக்கும் யாழிகளும் வெள்ளையானைகளும் ஒற்றைக்கொம்புக்குதிரைகளும் தமிழ் ஆப்பசைக்கும் மந்திகளும்  தமிழ்ப்பால் மட்டுமே சுரந்து வழியும் எருமைமாடுகளும் நின்றுலாவும் கூவம் நதிக்கரையில் இருபதாம் நூற்றாண்டில் சிப்பிக்குள் முத்தாக ஓர் மஹான் அவதரிப்பான் என்பதையும், தமிழ் அவனால் சாகாவரம் பெற்று சிரஞ்சீவியாக நீடுபேறு பெற்று நிலைத்து நிற்கும் என்பதையும், அற்ப மானிடரே, நீவிர் குலமும் கொற்றமும் சுற்றமும் நட்பும் சூழ அறிக..." (கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுமுடிசுருட்டியசீலைப்பேன்சாத்தனார் எழுதிய 'கபடமணிமாலைநிகண்டு' என்ற ஓலைச்சுவடியின் 2123ஆம் பக்கத்தில் இருந்து).

வழக்கத்தைவிட அன்று சற்று கனமான மேக்-அப்.  தலையை மீண்டும் மீண்டும் வாருவதும் கலைப்பதும், இடதுபுறமும் வலதுபுறமும் திரும்பியும் நிலைக்கண்ணாடிக்கே கழுத்துவலிக்கும் அளவுக்கு குனிந்தும் சாய்ந்தும் நிமிர்ந்தும்...இருக்கின்ற அந்த கொஞ்சநஞ்ச முடியையும் படாதபாடு படுத்திக்கொண்டிருந்தார். ஆனால் அந்த முடிகள் சாதாரண முடிகள் அல்ல, அவை கவிச்சக்ரவர்த்தி தூசிமுத்துவின் முடிகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவை இயற்கையாகவே மணிமுடிகளாக அவதாரம் எடுத்திருந்தன.  தமிழகத்தின் தனிப்பெரும் கவிச்சக்ரவர்த்தியான தனது பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்து தூசிமுத்துவுக்கே சற்றுப் பொறாமையாக இருந்தது.  பிரபஞ்ச நாயகன் பங்கஜமணாளனைப் பார்க்கப்போவது என்றால் சும்மாவா?  அதற்காகத்தான் இன்று மேக்-அப்பில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம்.

"எல்லாம் எடுத்து வச்சாச்சா?" என்று கண்ணாடியில் இருந்து கவனத்தைத் திருப்பாமலே ஒரு சவுண்ட் விட்டார்.  "அதெல்லாம் வச்சாச்சு, மேக்-அப் பண்ணது போதும்...இருக்றதுதான் இருக்கும். புதுசா என்ன மயிரா முளைக்கப்போவுது" என்று மனைவி நக்கலாகவோ குத்தலாகவோ கூற, "இந்த நக்கல் குத்தல் எல்லாம் எனக்கு ஜுஜுபி" என்பதாக அதைத் தூசிபோலத் தட்டிவிட்டார் தூசிமுத்து.  அவர் எடுத்து வச்சாச்சா என்று கேட்டது அவரது கவிதைத்தொகுப்பான "செவ்வாய்கிரக மனிதனும் செப்டிக் டாங்கும்".  ஐந்து வருடங்களுக்கு முன்னால் போட்டது.  மனைவி 'புதுசா என்ன முளைக்கப்போவுது' என்று குத்தலாகக் கேட்டதும் அதைத்தான்.

தூசிமுத்து பர்ஸில் விசிட்டிங் கார்டு இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டார்.  ஒருமுறை விசிட்டிங் கார்டை வெளிச்சத்தில் அப்படியும் இப்படியும் திருப்பிப்பார்த்தார்.  கவிச்சக்ரவர்த்தி தூ.சி.முத்து என்ற பெயர் தங்கத்தில் மின்னியது, அதன்கீழே மாநிலப்பொறுப்பாளர் என்ற எழுத்துக்கள் மிகப்பெரிய கொட்டை எழுத்துக்களில் கார்டு முழுமையும் அடைத்துக்கொண்டு இடமின்றி கீழேயும் சிந்திக்கொண்டிருந்தன.  அதன் கீழே அவர் பொறுப்பில் இருக்கும் எழுத்தாளர் அமைப்பின் பெயர் இருந்தது.  இவற்றின் பின்னணியில் ஒரு புத்தகமும் போர்வாளும் சிம்பாலிக்காக இருந்தன.  மறக்காமல் தனது கவிதைத்தொகுப்பின் ஐந்து பிரதிகளையும் தோல்பை உள்ளே வைக்கும்போது முகத்தில் பெருமித ஒளி வீசியது. இது பங்கஜமணாளனுக்குக் கொடுப்பதற்காக.  புத்தகத்தின் பின்னட்டை பூராவும் அவரது முழுநீளப்புகைப்படம் அட்டை சைசையும் பையையும் மீறித்துருத்திக்கொண்டிருந்தது.

பைக் ஸ்டார்ட் செய்யும் நேரம் செல்போன் சிணுங்கியது.  அற்புதமான பாடலை ரிங்டோனாக வைத்திருந்தார்.."சங்கே முழங்கு..."  வேண்டுமென்றே கொஞ்சநேரம் செல்போனை ஒலிக்கவிட்டார். தெருவில் போவோர் வருவோரையும் அக்கம்பக்கத்தாரையும் ஒரு கவிச்சக்ரவர்த்திக்கே உரிய பாணியில் கர்வத்துடன் சுற்றி ஒரு பார்வை பார்த்தார்.  பிறகு போனை அழுத்தி, "ஆங்...வணக்கம்...வாழ்க...சரியா பத்து அம்பதுக்கு அங்க  வந்திடுங்க... ஆமா... பதினொரு மணிக்குத்தான் அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்திருக்கார், நமக்கு அஞ்சு நிமிசம்தான் கொடுத்திருக்காரு.   ரெண்டு மணி ஃப்ளைட்டுல யு.எஸ்.போறார். ... ஹஹ்ஹஹ்ஹ...ரொம்ப பிசிதான், ஆனா தூ.சி.முத்து  கேட்டு இல்லன்னு சொல்வாரா.  சரியா பத்துஅம்பதுக்கு வந்திடுங்க" என்றவாறே போனை அணைத்தார். மனைவி "என்னங்க, ஒம்பதரை மணிக்குன்னு சொன்னீங்க?..." என்று கேள்வியுடன் பார்க்க, "ஒனக்கு ஒண்ணுந்தெரியாது, கம்ணு இரு" என்றபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தார். அவர் உட்கார்ந்த போசிலும் சக்ரவர்த்திகளுக்கே உரிய கம்பீரம் தெரிந்தது.

சென்னை ட்ராஃபிக்கில் சிக்கிசீரழிந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகரின் ஆஃபிசுக்கு கவிச்சக்ரவர்த்தி தூசிமுத்து போய்ச்சேர அநேகமாக நாற்பது நிமிடம் ஆகலாம்.  அந்த இடைவெளியில் தூசிமுத்துவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

புரிகின்றது, அது என்ன தூசிமுத்து என்று தொடக்கதிலிருந்தே நீங்கள் மண்டையை சொறிவது.  தூத்துக்குடி சின்னச்சாமி முத்து என்பதுதான் அவர் பெயர்.  தொடக்ககாலத்தில் தூத்து.சி.முத்து என்ற பெயரில்தான் சந்துமுனைகள், கல்யாணம், காதுகுத்து, சடங்குவீடுகள்  என்று கவிதைபாடிக்கொண்டிருந்தார்.  அவர் கவிதைபாடிக் கீழே இறங்கியவுடன் பலரும் சூழ்ந்துகொண்டு "தூத்து...சூப்பர்!"  "தூத்து...நச்சுனு இருந்தது" என்று பேசும்போது, உண்மையில் புகழ்கின்றார்களா துப்புகின்றார்களா என்று அவருக்கே பலத்த சந்தேகம் வரத்தொடங்கியது.  தவிர பல விழா அழைப்பிதழ்களில் குத்தூசி முத்து என்றும் கவலைப்படாமல் அச்சடித்துக்கொண்டிருந்தார்கள்.  பிற்பாடு அவர் கேட்கும்போது ப்ரின்டிங் மிஸ்டேக் என்று கூறித்தப்பித்துக் கொண்டார்கள்.  இதிலும் அவருக்கு சந்தேகம் வந்தது, வேண்டுமென்றே செய்கின்றார்களா என்று. கழிப்பறையிலோ குளியலறையிலோ இவர் இருக்கும்போது இவருக்கு வரும் போனில் "தூத்து இருக்காறா?" என்று கேட்பது நாராசமாக காதில் விழவே... இப்படி ஆயிரம் காரணங்கள் அடுக்கடுக்காக வந்து சூழ, நேரிசை வெண்பா, நிகரிசை வெண்பா, புகைமண்டிய ஆசிரியப்பா, தொடை, தளை, இலை, மட்டை என சகல இலக்கண விதிகளையும் ராப்பகலாக ஆராய்ந்து இறுதியில் தூ.சி.முத்து என்ற பெயரே தமிழகத்தின் இலக்கியத்தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்போவதாக ஒருநாள் நடுநிசி  பன்னிரெண்டு மணிக்கு நமனை அஞ்சாமல் டிக்ளேர் செய்தார் என்றாலும் இது நெருக்கமானவர்கள் மட்டுமே அறிந்த விசயம்.

ஆனாலும் இதுக்கும் ஒரு நெருக்கடி வந்து சேர்ந்தது.  கம்பன், இளங்கோ, ஷேக்ஸ்பியர், மில்டன், புஷ்கின், பாரதியார், பாரதிதாசன் வரிசையில் அடுத்தது தான்தான் என்ற ரீதியில் இவர் பண்ணும் பந்தாவில் மயங்கும் புதிய இளம் எழுத்தாளர்களும், கவியரங்கங்களில் இவருக்கு முன்னே (இவர் வி.ஐ.பி. கவிஞர், பிடிவாதமாக கடைசியில்தான் கவிதை பாடுவார்) கவிதை பாடுபவர்களும் தாங்கள் எழுதி வெளியான வெளியாகாத கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இன்னபிற சமாச்சாரங்களை இவரிடம் கொடுத்து பவ்வியமாக "படிச்சு கருத்து சொல்லுங்க சார்!" என்று கைகட்டி நிற்கும்போது, "சபாஷ்! வாழ்த்துக்கள்!  இன்னும் நிறைய எழுதுங்க! உங்கள மாதிரி புதுசா எழுத வந்து தடுமாறிதிரியறவங்கள கைப்பிடித்து அழைத்து தூக்கி விடுறதுதான் நம்பள மாதிரியான சக்ரவர்த்திகள் செய்ய வேண்டிய கடமை!  ஆனா என்ன செய்றது...ஏற்கனவே உங்களை மாதிரி எழுதுனவங்க கொடுத்த படைப்புக்களே என் டேபிள் நிறய குவிஞ்சு தூசி படிஞ்சு கிடக்கு, படிக்க நேரமில்லே...ஒரே இயக்க வேலை...மாநிலம் பூராவும் அலைய வேண்டியிருக்கே! எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க" என்று தனது வி.ஐ.பி அந்தஸ்தைக் காக்கும் சொல்விளையாட்டில் இறங்கி தான் எப்போதும் பிசியாக இருப்பாதாக எஸ்டாப்ளிஸ் பண்ணிக்கொண்டே இருப்பார்.  

உண்மை என்னவெனில் நேற்று வந்த சின்னப்பசங்கள்ளாம் தன்னை விடவும் காத்திரமான கவிதைகளை சாதாரணமாக எழுதுவதைக் கண்டு அவர் நிறையவே வெம்பியிருந்தார்.  எனவே தன் எழுத்துக்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை என சபதம் செய்திருந்தார். ஆக,  இப்படி தூசி படிஞ்ச டயலாக்கை எப்போதும் இவர் அள்ளிவிட்டுக்கொண்டே இருப்பதைக் கண்ட நெருங்கிய சகாக்கள், இவரை அழைக்கும்போது தூவுக்கும் சிக்கும் அடுத்துள்ள புள்ளிகளை கால் விநாடி இடைவெளியில் அப்புறப்படுத்தி தூசிமுத்து என்றே சொல்லத்தொடங்கி புழக்கத்துக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.  இருந்தாலும், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழ்க்கவிதை உலகில் பேசப்படப்போவதும் நிலைத்து நிற்கப்போவதும் "செவ்வாய்கிரக மனிதனும் செப்டிக் டாங்கும்" மட்டுமே என்ற டயலாக்குடனும் விசிட்டிங் கார்டுடனும் தமிழகத்தை அவர் அலறடித்துக்கொண்டிருந்தார்.

ஒரே இயக்க வேலை...மாநிலம் பூராவும் அலைய வேண்டியிருக்கே என்ற டயலாக்கின் பின்னே யாரும் அறியாத ஒரு தந்திரமும் இருந்தது.  சங்கத்தின் முழுநேர ஊழியராக இருந்துகொண்டு சம்பளமும் போக்குவரத்து இன்னபிற அலவன்சுகளும் வாங்கிக்கொண்டு 'செவ்வாய்க்கிரகத்தை'த்தவிர வேறு என்ன செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்படுமானால்,   பழைய ஃபியட் காரில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் போகும் லேகிய மருத்துவர்களைப் போல முன்நவீனத்துவம், பின்நவீனத்துவம், சர்ரியலிசம், மாயாவாதம், பக்கவாதம் போன்ற இலக்கியவாதங்களைப்போக்க தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் போவதாக ஒரு அட்டவணையை எடுத்துப்படிப்பார்.  இதிலுள்ள ரகசியமும் இவர் மட்டுமே அறிவார்.  இவரே ஒவ்வொரு மாவட்டப்பொறுப்பாளர்களுக்கும் போன் செய்து, 'என்ன இது!  தேசமே பற்றி எரியுது, பேசாம இருக்கீங்க?' என்று ஏதாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச்சொல்வார், கவனமாக தன்னை சிறப்புரையாளராகப் போடச்சொல்வார்.  இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போன் செய்து வரிசையாக மாசம் முப்பத்தைந்து நாளும் மாநிலம் எங்கும் தனது சூறாவளி சுற்றுப்பயணம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்.  மறக்காமல் இதை மாநிலத்தலைமை ஆபிசுக்கு அனுப்பி ரிக்கார்டு பண்ணிவிடுவார்.   

அவரது 'செவ்வாய்கிரகம்...' தொகுப்பு அச்சான ரகசியம் அவருக்கும் சில நெருங்கிய சகாக்களுக்கும் மட்டுமே தெரிந்த சங்கதி.  'செவ்வாய்கிரக...'த்தின் முதல் பக்கத்திலேயே 'சோப்பை விழுங்கி காற்றை நீக்கு, யாப்பை விழுங்கி தமிழைத்தூக்கு' என்பதே தனது இலக்கியவாழ்வின் உயர்ந்த லட்சியமாக தூசிமுத்து பிரகடனம் செய்திருந்தார். கீழே சிம்பாலிக்காக ஒரு புத்தகமும் போர்வாளும் இருந்தது.  தமிழ்ச்சமூகத்தின் குணக்கேடுகள், மேடுபள்ளங்கள், குண்டுகுழிகள், சந்துபொந்துகள், குப்பைகூழங்கள் என அனைத்து சீர்கேடுகளையும், தமிழுக்கு இப்போது வந்துள்ள சோதனைகளையும் தனது கவிதைப்போர்வாள் கொண்டு சீவி எறிந்து புதிய சமுதாயம் படைப்பது என்பதே சிம்பாலிக்கின் பொருள் என்பதையும் புரியாத பாமரர்களுக்கு சொல்லி விடுகின்றேன்.  ஆனால் இந்த சிம்பாலிக் போர்வாளின் அர்த்தம் குறித்து  தூசிமுத்துவுடன் நெருங்கிப்பழகிய எழுத்தாளர்கள்  வேறு மாதிரிப் பேசுவதை பின்னால் சொல்கின்றேன்.   

இந்த தொகுப்பின் தட்டச்சுப்பிரதியுடன் சென்னையில் உள்ள அனைத்து பதிப்பாளர்களையும் இவர் அணுகியபோது, " ஆஹா! இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!  தமிழகத்தின் இலக்கியத்தலைவிதியே தலைகீழா மாறப்போவுது பாருங்க! நாளைக்கு போனில் காண்டக்ட் பண்ணுங்க" என்று ஒரு கப் காபியோடு இவரை அனுப்பி வைத்தார்கள். இந்த ஒரு புத்தகத்தை வெளியிட்டால் போதும், இத்தனை வருசமாக சேர்த்து வைத்த நல்ல பெயரோடு இருக்கிற கொஞ்சநஞ்ச சொத்துசுகங்களும் ஒரு நொடியில் செப்டிக் டாங்கில் சமாதியாகிவிடும் என்பதை நன்கு புரிந்துகொண்ட அவர்கள், அதன் பிறகு இவர் போன் செய்தால் மொபைலை எடுப்பதில்லை.  எனவே லேண்ட்லைனில் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். எனவே, பதிப்பாளர்கள் போன் செய்பவரின் நம்பர் தெரிகிற மாதிரியான போனை வாங்கி வைத்தார்கள்.  இந்த தந்திரத்தைப் புரிந்துகொண்ட தூசிமுத்து வெவ்வேறு பி.சி.ஓக்களில் இருந்து போன் செய்து 'வணக்கம், எப்போ பிரின்ட் பண்ணலாம்' என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்.  சென்னை மாவட்டத்தின் பல பி.சி.ஓ கடைக்காரர்கள் "என்ன சார், புஸ்தகம் இன்னும் பிரின்ட் ஆகலியா" என்று நெருக்கமாக விசாரித்து இவரை வெறுப்பேற்றும் அளவுக்கு நிலைமை மோசமாகவே,  செங்கல்பட்டு, சூலூர்பேட்டை, திருத்தணி, பெரியபாளையம் என மாவட்டம் தாண்டி சென்று தூசிமுத்து போன் செய்ய ஆரம்பிக்க, பல பதிப்பாளர்கள் பிளட்பிரஷர் எகிறி ஆஸ்பத்திரியில் படுக்கும் அளவுக்கு தூசிமுத்துவின் போன் தொல்லை எல்லைதாண்டிய பயங்கரவாதமாக ஆனது.  கடைசியில் அவரே சில ஆயிரங்கள் செலவு செய்து செவ்வாய்கிரகத்தை வெளியிட்டுக்கொண்டார், அவரே பல பெயர்களில் கருத்துரை, ஆய்வுரை, பொழிப்புரை, கண்புரை எழுதி பல பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி பிரசுரிக்க வைத்து அவற்றின் கட்டிங்குகளை எப்போதும் தோல்பையில் வைத்திருப்பார்.

தொடர்ந்து இதுபோன்ற இடையறாத இலக்கியப்பணிகளால் கலைமாமணி, பத்மஸ்ரீ, தமிழ்வாள், தமிழ்க்கத்தி போன்ற பட்டங்கள் தன்னைத் தேடி வருவது உறுதி என்றும், 'செவ்வாய்கிரக'த்துக்கு சாஹித்ய அகாடமி அவார்டு கொடுக்க வேண்டியது தமிழிலக்கிய உலகத்தின் தலைவிதி என்றும், இந்தத் தகுதிகள் எல்லாம் எதிர்காலத்தில் மாநிலத்தலைமையைக் கைப்பற்றுவதற்கு உதவும் என்ற கனவும் அவருக்கு இருந்தது என்பதை நீங்கள் யாருக்கும் சொல்லாமல் இருக்கக்கடவது.  தனது மாவட்டத்தில் புதிய படைப்பாளிகளின் படைப்புக்களை தூசிபடியவைப்பது, அல்லது தத்துவார்த்த ரீதியாக படைப்பில் ஏதோ குறை இருப்பதாக மிரட்டி முழிபிதுங்க வைப்பது, இதையும் தாண்டி புதியபடைப்பாளிகள் யாராவது நூல் வெளியிட முயற்சிப்பதாகத்தெரிந்தால் சம்பந்தப்பட்ட பதிப்பாளருக்கு போன் செய்து எப்படியாவது தடுத்து நிறுத்தி விடுவது, புதிய எழுத்தாளர்கள் தனது மாவட்ட எல்லை தாண்டி இலக்கியக்கூட்டங்கள், முகாம்களுக்கு போவதைத் தடுத்தி நிறுத்திவிடுவது, அதையும் மீறி யாராவது போவது போல் தெரிந்தால் 'உங்களுக்கு தெரியாதா, நிகழ்ச்சி கான்சல் ஆயிடுச்சே, வீட்டுக்குப்போங்க' என்று கூசாமல் அள்ளிவிடுவது...என்று பல டெக்னிக்குகள் வைத்திருந்தார்.  இதற்காகவே அவ்வப்போது ரயில்வேஸ்டேசன், பஸ்ஸ்டாண்டு என்று பைக்கில் ரவுண்ட் அடிப்பார்.  இவரது சாகசங்களைத் தெரிந்து கொண்டு யாராவது நள்ளிரவில் கோயம்பேட்டில் பஸ் பிடித்தாலும் இவருக்கு எப்படியாவது மூளையில் மணியடித்துவிடும். பைக் எடுத்துக்கொண்டு விரட்டிப்பிடித்து தாம்பரத்தில் பஸ்சை ஓவர்டேக் செய்து நிறுத்தி இறக்கிவிட்டு, 'யாரைக் கேட்டு நீ அங்கே போகின்றாய்?  என்னைக் கேட்காமல் சென்னை மாவட்ட எல்லையைத் தாண்டியதே தப்பு, விதி எண் 84.7, துணை விதி 9/11இன் கீழ் ஒழுங்குநடவடிக்கை எடுத்து விடுவேன், ஜாக்கிரதை' என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.  'பாட்டி செத்துப்போய்விட்டதாக எஸ்.எம்.எஸ். வந்துது' என்று சொன்னாலும் நம்ப மாட்டார்.

அன்றாடம் காலைப்பத்திரிக்கைகளில் 'இன்றைய நிகழ்ச்சி' பத்தியைப்படித்து விடுவார்.  வி.ஐ.பி.நடிகர்கள், எழுத்தாளர்களின் கூட்டங்களை லிஸ்ட் எடுத்து, கரெக்டாக ஆஜராகி விடுவார்.  எத்தனை கூட்டம் முண்டி அடித்தாலும் புகைப்படம் எடுக்கின்ற அந்த நொடியில் வி.ஐ.பி.யின் அருகில் நின்று போஸ் கொடுத்து விடும் டெக்னிக் தூசிமுத்துவுக்கு மட்டுமே கைவந்த கலை.  மறுநாள் பத்திரிக்கைகளில் இந்தப்படம் வருவதை எப்படியாவது உறுதி செய்துவிடுவார்.  மாநிலத்தலைவர்களுக்குபோன் செய்து ஏதோ தலை போகிற விசயத்தைப் பேசுவதுபோல் பேச்சைத்தொடங்கி, நைசாக பத்திரிக்கையில் தனது படம் வந்திருப்பதை ரிக்கார்ட் செய்து விடுவார்.

கல்யாணம், கருமாதி, பூப்புனிதநீராட்டுவிழா, காதுகுத்து, மொட்டை அடிப்பது என அனைத்து இடங்களிலும் தான் சிறப்புரை ஆற்றியே தீரவேண்டும், மாலைபோட்டு வரவேற்க வேண்டும் என்ற  பணிவும் அடக்கமும் தூசிமுத்துவுடன் உடன் பிறந்தது.  ஒரு முறை இழவு வீட்டில் தன்னை மாலைபோட்டு வரவேற்கவில்லை என்று குறைப்பட்டுக்கொள்ள, செத்துக்கிடந்த பாட்டியின் கழுத்தில் கிடந்த மாலையை எடுத்து அவருக்கே தெரியாமல் பின்பக்கமாகக் கொண்டுவந்து அவர் கழுத்தில் போட்டு புகைப்படம் எடுத்தபின்தான் பாட்டி எப்படிச்செத்தார் என்று துக்கம் விசாரித்தார். மற்றொரு இழவு வீட்டில், வழக்கமான டயலாக்கான "இந்த புரட்சிகரமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் நல்வாய்ப்புக்காக ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வகையில் நீண்ட நெடுநாட்களாகவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்...தமிழ்கூறும் நல்லுலகம்..." என்று பேசத்தொடங்கினார்.   செத்துப்போனவருக்கு மூன்று சம்சாரங்கள் என்பதும் அவரை மூலையில் சாத்தி வைத்துவிட்டு  அங்கே தீவிரமான சொத்துப்பிரச்னை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த நிலையில் இவர் பேசிய பேச்சு, திட்டமிட்டு பெரியவரை சாகடித்துவிட்டார்கள் என்ற வதந்தியை நொடியில் பரப்பவே பெரும் சலசலப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டு அரிவாள்கள் தீட்டப்படும் சத்தம் கேட்க, தூசிமுத்துவை பத்திரமாக பின்வாசல் வழியாக வெளியேற்றுவதற்குள் பெரும் கலவரசூழ்நிலை ஏற்பட்டது.  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் வரவில்லை என்றால் தொலைத்து விடுவார் தொலைத்து.  இதை அவர் ஒரு இலக்கிய சேவையாகத்தான் செய்து வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.

சென்னையில் இருப்பதால் தூசிமுத்துவுக்கு ஒரு மிகப்பெரிய வசதியும் இருந்தது.  கோடம்பாக்கத்தில் உள்ள வி.ஐ.பி.நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், லைட்பாய், வாட்ச்மேன் அத்தனை பேர் போன் நம்பரும் அவருக்கு அத்துப்படி.  சென்னை தாண்டி  வெளியூர் இலக்கியக்கூட்டங்கள், மாநிலக்கூட்டங்கள், பயிற்சிமுகாம்கள் போன்றவற்றில் இவர் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லி வைத்ததுபோல் பங்கஜமணாளன், சோழன், சங்கர்மச்சான், கான.சந்திரசேகரன், பி.ஸ்டாலின், மஹேந்திரவர்மா, பாரதிமன்னன், மோசர், ஜெசி, குமார்முத்து, அரன்ஹரி போன்ற பிரபலங்களிடம் இருந்து போன் வரும். இவரும் 'மைக்'கை ஆஃப் பண்ணாமல் அவர்களுடன் மிக உரிமையாகப் பேசுவார். "கிட்சனில் பைப் உடைஞ்சிருந்துதே, மாத்தியாச்சா?" "ரம்யாவுக்கு இப்போ ஜுரம் குறைஞ்சிருக்கா?" என்று இவர் பேசுவதைப்பார்க்கும் மற்ற மாவட்டத்துக்காரர்கள் மிரண்டு போவார்கள்.  கோடம்பாக்கத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை கவனமாக இப்படி மாநிலத்தலைவர்களுக்கு எஸ்டாப்ளிஸ் பண்ணிக்கொண்டே இருப்பார்.  

கூட்டங்களில் இவர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் டெல்லியில் இருந்து போன் வரும்.  சாஹித்ய அகாடமி தலைவர் பேசுவதாகவும், இந்த வருட விருது தமிழில் யாருக்குக் கொடுப்பது என்பதில் பெரும் குழப்பம் எழுந்து டெல்லியே பற்றி எரிவதாகவும், தீ தமிழ்நாட்டுக்குள் பரவுவதற்குள் தூசிமுத்து ஏதாவது ஆலோசனை சொல்லியே தீர வேண்டும் என்று அவர் கெஞ்சுவதாகவும் இவர் போனில் பேசும்போதே ஸ்பாட்டில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு வேர்த்து விறுவிறுத்துப்போவார்கள்.  ஆனால் , தூசிமுத்துவே திட்டமிட்டு மொபைலில் அலாரம் செட் பண்ணி அதற்கு ரிங்டோனும் செட்பண்ணி இதுபோல் பலர் கூடுகின்ற இடங்களில் ஒலிக்கச்செய்து நாடகம் ஆடுவதாக மூத்த நண்பர்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.  

சக நண்பர்கள் யாராவது வி.ஐ.பி. நடிகர்கள், எழுத்தாளர்களின் போன் நம்பரை வைத்திருப்பதாகத் தெரிந்தால் அவ்வளவுதான், "இந்த நம்பர் எப்படி உங்களுக்கு கிடச்சுது?  இது இயக்கத்துக்கு நல்லதில்லை, உடனே உங்க மொபைல்ல இருந்து இதை அழிச்சிடணும்...இல்லைனா விதி எண்..." என்று உதார் விடுவார்.

இத்தனையும் மீறி அவருக்கு உள்ளூர ஒரு ஜுரம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. தன்னை விடவும் ஜகஜாலக்கில்லாடிகள் எப்போதும் இருக்கவே செய்கின்றார்கள் என்ற கசப்பான உண்மை, சிம்மசொப்பனமாக

மாநிலத்தலைமையைக் கைப்பற்றும் அவரது கனவை சிதறடித்து தூசிமுத்துவை பகலிலும் தூங்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றது. எனவே அடுத்த மாநிலமாநாட்டுக்குள் தனது அடுத்த படைப்பான "சீனப்புரட்சியில் சீவகசிந்தாமணியின் தாக்கம்" என்ற ஆய்வுநூலை வெளியிட்டுவிடுவது, ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தை வாங்கியே தீருவது என்ற திட்டத்தில் முழுமூச்சுடன் இறங்கியுள்ள விசயமும் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.   தனது இந்த ஆய்வு நூல் வெளிவருவதற்குள் வேறுயாரும் நூல் வெளியிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.  எனவே புதிய படைப்பாளிகளை அரவணைப்பது, அறிவுரை கூறுவது, அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது  போல நடித்து, இலக்கணம், மரபு, தொன்மை, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், போஸ்ட்மாடர்னிசம், போஸ்ட்மார்ட்டம்  போன்ற வார்த்தைகளைப்போட்டு உப்புமா செய்து அவர்களை மிரட்டி மழுங்கடித்து விடுவார்.  இவரது இந்த தந்திரத்தையும் மீறி எவனாவது மேலே வருவது போல் தெரிந்தால் "வாராய் நீ வாராய்" பாணியில் நைச்சியமாகப்பேசி தந்திரமாக கைப்பிடித்து அழைத்துச்சென்று, அவருடைய சிம்பாலிக் வாளால் தலையை சீவிவிடுவதாகவும்  மூத்த எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு பேச்சு உலாவுகின்றது.  பல இளம் படைப்பாளிகள் எழுச்சியுடன் வருவதும் அவர்களை தூசிமுத்து கைப்பிடித்து அழைத்துச்செல்வதையும் அதன் பிறகு அவர்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போவதையும் இவற்றை நேரில் கண்ணுற்ற எழுத்தாளர்கள் இலக்கிய முகாம்களிலும் கூட்டங்களிலும் அக்கம்பக்கம் பார்த்து தங்களுக்குள்  பேசிக்கொள்வதுண்டு.  இந்த வகையில் தூசிமுத்து ஒரு 'கண்ணுக்குத்தெரியாத கரும்பொருள்' (டார்க் மேட்டர்) என்று தெரிந்தவர்கள் எச்சரிக்கையுடன் தள்ளியே இருந்தார்கள்.

"சீனப்புரட்சியில் சீவகசிந்தாமணியின் தாக்கம்" என்ற ஆய்வுநூலை வெளியிடுவதற்குள் ஒரு மினி பட்ஜெட்டில் குறைந்தகால அவகாசத் தயாரிப்பாக அடுத்த மாநாட்டுக்குள் சிறப்புமலர் ஏதாவது வெளியிட்டு தனது பெயரை எல்லோரும் பேசவைக்கவேண்டும் என்று மண்டையைச் சொரிந்து கொண்டிருந்த தூசிமுத்து, தமிழ்த்திரைப்படங்களில் நடிகர்கள் மேக்-அப் போட ஆரம்பித்து எழுபது வருடங்கள் ஆனதை எப்படியோ தெரிந்துகொண்டு, 'ஒப்பனை75' என்ற சிறப்புமலர் வெளியிட முடிவு செய்தார்.  எனவே அதற்கென ஒரு குழுவை அமைத்து,  பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரகடனம் செய்து, அதை மாநிலத்தலைவர்களுக்கும் புகைப்படத்துடன் மறக்காமல் அனுப்பி வைத்தார்.  மற்றவர்கள் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை என்பதால் அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், வசூல், மேடைநிர்வாகம், வாழைமரம் கட்டுவது, மைக் டெஸ்ட் பண்ணுவது ஆகிய அனைத்துப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும் மாநிலத்தலைமைக்கு ஃபேக்ஸ் மூலம் செய்தி அனுப்பினார்.  'ஒப்பனையும் சொக்கப்பனையும்' என்ற தலைப்பில் மலருக்காக ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதில் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.

நீங்கள் தூசிமுத்துவப் பற்றித்தெரிந்துகொண்ட இந்த காலஇடைவெளியில் அவர் பைக் எல்டாம்ஸ் ரோட்டுக்குள் நுழைகின்றது.  மேக்-அப்பில் சாதனை படைத்த பங்கஜமணாளனைப் பார்த்து ஒரு நேர்காணல் பதிவு செய்யவே தூசிமுத்து இப்போது அங்கே சென்றுகொண்டிருக்கின்றார்.  பங்கஜமணாளனின் அப்பாயின்ட்மென்ட் உண்மையில் ஒன்பதரை மணிக்குத்தான்.  தவிர பங்கஜமணாளன் யு.எஸ்.சுக்கும் போகவில்லை.  இயக்கத்துக்கு புதிதாக வந்த ஒரு இளம்எழுத்தாளர் ஏற்கனவே தனக்கு நேர்காணல்களில் அனுபவம் உண்டு என்றும் தானும் இந்த நேர்காணலுக்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.  இதனால் 'தூசிமுத்து, கவனம், உனக்குப்போட்டியா?' என்று தூசிமுத்துவுக்கு மண்டையில் சிவப்புவிளக்கு எரிந்தது. எனவே வேண்டுமென்றே அவரை பதினொரு மணிக்கு வரச்சொல்லியிருந்தார்.  அதற்குள் நேர்காணலை முடித்துவிட்டு டேக்கா கொடுத்து விடலாம் என்பது தூசியின் வாழ்நாள் அனுபவ டெக்னிக்.  இப்படி ஒரு மாபெரும் திட்டத்துடன் ஒன்பது இருபதுக்கு போட்டோகிராபருடன் பங்கஜமணாளனின் ஆபிசுக்குள் நுழைந்த தூசிமுத்து அப்படியே பேய் அறைந்தது போல் ஆனார், பிளட்பிரஷர் ஏகத்துக்கும் எகிறி வேர்த்துவிறுவிறுத்துப்போனார்.  காரணம், அந்த இளம் எழுத்தாளர் அவருக்கு முன் அங்கே காத்திருந்ததுதான்.  தூசிமுத்துவின் கல்யாணகுணங்களை அரசல்புரசலாகக் கேள்விப்பட்டிருந்த அவர், நடிகரின் அப்பாயின்ட்மென்ட் ஒன்பதரை மணிக்கே என்பதைத் தெரிந்துகொண்டு அங்கே ஆஜராகி இருந்தார்.  இதை சற்றும் எதிர்பாராத தூசிமுத்து தனது இலக்கிய வாழ்வில் மாபெரும் தத்துவார்த்த தோல்வியைச் சந்தித்த நிலைக்கு ஆளானார். இருந்தாலும் அந்த நொடியிலும் அவரது கிரிமினல் மூளை உடனடியாக வேலை செய்தது.  "உங்களை யாரு முன்னாலேயே வரச்சொன்னது?   யாரக் கேட்டு வந்தீங்க? இயக்கவிரோத நடவடிக்கைகளுக்காக விதி எண் 97/3 துணைவிதி 007இன் கீழ் உங்களை ஒன்பதரை மணி முதல் பதினொரு மணிவரையிலும் இயக்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்கிறேன்" என்று ஆன் தி ஸ்பாட் முடிவு செய்து அதை உடனடியாக மாநிலத்தலைமைக்கும் செல்போனில் அறிவித்தார்.  இதனால் நேர்காணலுக்கு தான் மட்டும் தனியே செல்வதை தந்திரமாக உறுதி செய்தார்.

நேர்காணல் முடிந்து வெற்றிகரமான தோரணையில் கவிச்சக்ரவர்த்தி தூசிமுத்து பத்தரை மணிக்கு வெளியே வரும்போதும் அந்த இளம் எழுத்தாளர் அங்கேயே காத்திருந்தார்.  தனது தந்திரோபாயங்கள், ஜாலக்குகளை தெரிந்த ஒரு திறமையான நபர் இயக்கத்தில் புதிதாக மேல் வரும் ஆபத்தை உணர்ந்த தூசிமுத்துவின் மூளை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானது.  "சரி, சஸ்பென்சனை நீக்கி விடுகின்றேன்.  போனது போகட்டும். தமிழும் தமிழனும் வாழணும், அதுவே எனது மூச்சு.  வாங்க டீ சாப்பிடுவோம்.  ரொம்ப நாளாவே உங்க கட்டுரைத்தொகுப்பை புத்தகமாப் போடணும்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்களே,  வாங்க பதிப்பாளரப் பார்க்கலாம், உங்கள மாதிரி புதுசா எழுத வந்து தடுமாறிதிரியறவங்கள கைப்பிடித்து அழைத்து தூக்கி விடுறதுதான் நம்பள மாதிரியான சக்ரவர்த்திகள் செய்ய வேண்டிய கடமை!" என்று கைப்பிடித்து அழைத்துச்சென்றார்.  யாரோ ஒரு பதிப்பாளருக்கு அங்கிருந்தே போன் செய்தார்.  யார் கண்ணுக்கும் தட்டுப்பாடாத தனது சிம்பாலிக் போர்வாளை  தூசிமுத்து தீட்டத்தொடங்கினார்.

******

உயிர் எழுத்து, நவம்பர் 2010

கருத்துகள் இல்லை: