வெள்ளி, செப்டம்பர் 25, 2026

பள்ளிக் குழந்தைகள் உணவுத் திட்டம்: மறக்கப்பட்ட அரசியல் மேதை எம். சி. ராஜா

இந்தியா பல பஞ்சங்களைக் கண்டுள்ளது, இப்பஞ்சங்களில் உணவு கிடைக்காமல் செத்தவர்கள் பல கோடி மக்கள். 


இவ்வாறான பஞ்ச காலங்களில், பொருளாதார வசதி படைத்தோர் இரக்கம் கொண்டு மக்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்து அரிசிக்கஞ்சியும் துவையலும் இலவசமாக கொடுத்து காப்பாற்றிய வரலாறு இருக்கின்றது. 

1925இல், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் ப்ரெசிடென்சியின் Labour Advisory Board இல் உறுப்பினர் ஆக இருந்த எம். சி. ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில், பெண் குழந்தைகள், ஆதிவாசிகள், தலித் மக்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய மக்களை பள்ளிக்கூடங்களுக்கு வர வைக்கும் முயற்சியாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பிரெஞ்ச் நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில் இதே போன்ற மதிய உணவுதிட்டம் 1930இல் கொண்டுவரப்பட்டது.

காமராஜர் ஆட்சியில் அவரது மதிய உணவுத்திட்டத்துக்கும், பின்னர் எம். ஜி. ஆரின் காலத்தில் அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கும், கடந்த திமுக ஆட்சியில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்துக்கும் ஒரு நூறாண்டுக்கு முன்பே வித்திட்டவர் எம். சி. ராஜா. 
...

1919 ஆம் ஆண்டுக்கு முன்பாக மெட்ராஸ் பிரசிடென்சி ஆனது வைசிராயின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. வைஸ்ராயின்.அலுவலகம் கல்கத்தாவில் இருந்தது. அன்றைய வைஸ்ராயாக இருந்தவர் செம்ஸ்போர்ட் Lord Chelmsford. 

இந்திய அரசு சட்டம் 1919 Government of India act 1919 இன் கீழ் மெட்ராஸ் பிரசிடென்சியானது இரட்டை ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது (Dyarchy System). இதனைத் தொடர்ந்த 1920 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை இந்திய தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது. மொத்தம் உள்ள 98 இடங்களில் 63 இடங்களை நீதிக்கட்சி என்ற ஜஸ்டிஸ் பார்ட்டி அதாவது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வென்று ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் முதல் அமைச்சரவையை அமைத்தது. 

தனது உடல் நலக் குறைவினால் அவர் 1921 ஆம் ஆண்டு பதவி விலக சர் பனகண்டி ராமராயநிங்கர் என்ற பனகல் ராஜா 1921 ஜூலை மாதம் பதவி ஏற்றார். இரண்டாவது முறையாகவும் அவர் முதலமைச்சராகி 1926 வரை பதவியில் இருந்தார்.

இந்த அமைச்சரவையின் முதல் கல்வி, பொதுப்பணித்துறை அமைச்சர் சர் அன்னேப்பு ராமதாஸ் பாத்ரோ. 

ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா, சுருக்கமாக எம் சி ராஜா அவர்கள் தலித் சமுதாய மக்களின் மரியாதைக்குரிய தலைவராக விளங்கியவர். 

மெட்ராஸ் பிரசிடென்சியில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரத்தியேகமான ஒரு தொழிலாளர் துறை (specialized Labour Department) உருவாக்கப்பட்டது. இந்தத் துறையை ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் துறை Department of Protector of the depressed classes என்று அழைத்தார்கள். 1919ஆம் ஆண்டில் தொழிலாளர் துறையின் பாதுகாவலராக ஜார்ஜ் பாடிசன் George Paddison என்பவர் நியமிக்கப்பட்டார். 

எம்.சி. ராஜா அவர்களின் வலியுறுத்தல், தொடர் முயற்சியின் காரணமாக லேபர் அட்வைஸரி போர்டு Labour Advisory Board 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஜார்ஜ் பாடிசன் லேபர் கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த கமிஷனில் ஒரு ஐரோப்பியர், ஒரு பிராமணர், ஒரு பட்டியல் இன மக்கள் பிரதிநிதி என மூவர் நியமிக்கப்பட்டார்கள். கில்பர்ட் சிலேட்டர் Gilbert Slater, ராமானுஜச்சாரியார், எம். சி. ராஜா ஆகியோர் இந்தப் பிரதிநிதிகளாக இருந்தார்கள். 

இந்தக் குழுவில் இருந்துதான் எம். சி. ராஜா பள்ளி மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்க வேண்டும் என்று முதல் முதலாக வலியுறுத்தி பரிந்துரையும் செய்தார். அதன் பலனாக தொழிலாளர் துறையால் நிர்வகிக்கப்பட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான பள்ளியில் நண்பகல் உணவு வழங்கப்பட்டது. அந்த வகையில் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்பது இந்தியாவில் அதுதான் முதல் முறை. 

" மெட்ராஸ் சட்டமன்ற மேலவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்க வேண்டும் என்பதே" என்று எம். சி. ராஜா மேலவையில் தனது கோரிக்கையாக பதிவு செய்துள்ளார். 

இதே கோரிக்கையை தொடர்ந்து 1922, 23, 25 ஆம் ஆண்டுகளில் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளார். 1922 ஆம் ஆண்டு பதவியில் இருந்த நீதிக்கட்சி அரசில் மேலவையில் நீதிக்கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக இருந்தனர். எம் சி ராஜா முன்வைத்த கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் எனில் வருடத்திற்கு சுமார் 67 லட்ச ரூபாய் செலவாகும் என்று காரணத்தை வைத்து அவரது கோரிக்கையை நிராகரித்தது நீதிக் கட்சி அரசு. அன்றைய கல்வித்துறை அமைச்சர் திரு. பாத்ரோ இதனை எழுத்து வடிவில் எம். சி. ராஜாவுக்கு தெரிவித்துள்ளார். 

இது மட்டும் இன்றி, பட்டியலின சமூக மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு கல்வி அறிவை ஊட்ட வேண்டும் எனில் கல்வி ஊக்கத்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் ஸ்காலர்ஷிப் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் 1923 பிப்ரவரி மாதம் மெட்ராஸ் சட்டமன்ற மேலவையில் ஒரு தீர்மானத்தை எம். சி. ராஜா முன்மொழிந்து உள்ளார். ஆனால் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் கல்வி அமைச்சர் ' வறுமை என்பது பட்டியலின மக்களின் தனிப்பட்ட சொத்து அல்ல ' என்று சொல்லி தீர்மானத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் தடுத்துவிட்டார். 

பின்னர் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதை காட்டிலும் நண்பகல் உணவை பள்ளிகளில் வழங்கலாம் என்று நீதிக் கட்சி அரசுக்கு தோன்றியுள்ளது. எனவே அமைச்சரவை இதை விவாதித்து அவ்வாறே முடிவு செய்து நண்பகல் உணவை தஞ்சாவூரிலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலும் இருக்கிற அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தி இருக்கிறது. 

1920ஆம் ஆண்டில் மெட்ராஸ் சட்டமன்ற மேலவையின் ஒப்புதலுடன் ஆயிரம் விளக்கு பகுதியில் இயங்கி வந்த மெட்ராஸ் மாநகராட்சிப்பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டம் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவாக்கப்பட்டது. 

1925 ஆம் ஆண்டு மெட்ராசில் சில மாநகராட்சிப்பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. 

அந்த வகையில் இந்தியாவில் அரசு நேரடியாகத் தலையிட்டு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை உருவாக்க வித்திட்டவர் எம். சி. ராஜா என்பதுதான் உண்மை. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு விட்டது. 

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் எனில் அவர்களுக்கான உணவை அரசாங்கம் வழங்க வேண்டும்; இலவசக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்; ஆண் பெண் இருபாலருக்கும் கல்வி அவசியம் என்று தொடர்ந்து ஒரு நூறு ஆண்டுக்கு முன்பாகவே வலியுறுத்தி தனது முயற்சியில் வெற்றியும் பெற்றவர் எம் சி. ராஜா.
...

அருவருப்பான செயற்கை, விளம்பர ஒளி விளக்குகள், ஜிகினாக்கள், பட்டாசுகள் வெளிச்சத்திலும் சத்தத்திலும் கூச்சலிலும் இயற்கையான சூரிய வெளிச்சம் மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் சூரிய வெளிச்சம் நிலையான ஒன்று என்பதை மறைக்க முடியாது.
...

பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று முதல் முதலாக ஒரு கோரிக்கையை முன்மொழிந்தவர் பொதுவுடைமை இயக்கவாதி ம. சிங்காரவேலர் என்ற கருத்தும் உள்ளது.

மாணவர்களுக்கான காலை உணவு அல்லது மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் பேசியவர் யார் என்பது முக்கியம் அல்ல, எம். சி. ராஜா ஆனாலும் ம. சிங்காரவேலர் ஆனாலும் இருவருக்கும் அந்த ஒத்த சிந்தனை இருந்து இருந்ததை வரவேற்போம். 

காலத்தையும் அவர்கள் வகித்து வந்த அரசுப் பதவிகளையும் கணக்கில் கொண்டால், எம். சி.ராஜா அவர்கள் இது குறித்து முதல் முதலில் பேசி இருக்கவும், அரசை வலியுறுத்தி இருக்கவும் ஆன வாய்ப்பு அதிகம் என்று உணர்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் நண்பர்கள் இங்கே பதிவு செய்யலாம். வரவேற்கிறேன். எப்படி இருந்தாலும் இந்த மாணவர் பள்ளி உணவுத் திட்டம் பற்றி பேசும்போது அதிகபட்சம் காமராஜர் காலத்துடன் நிறுத்திக் கொள்வது அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழக்கமாக உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாற்றை பேசுவதற்கு பலரும் தயங்குகிறார்கள் அல்லது மறைக்கிறார்கள். அதைத்தான் நாம் கவனப்படுத்த விரும்புகிறோம்.

எம். சி. ராஜா அன்றைய மெட்ராஸ் சட்டமன்ற மேலவையில் நீதிக்கட்சி வேட்பாளராக 1920 நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த அவையின் நீதிக்கட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ம. சிங்காரவேலர் மெட்ராஸ் மாநகராட்சியின் கவுன்சிலராக 1925 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாகாணத்தில் பிரத்தியேகமாக ஒரு தொழிலாளர் துறை உருவாக்கப்படுகிறது. எம். சி. ராஜா அவர்களின் தொடர் முயற்சியால் லேபர் அட்வைசரி போர்டு ஒன்று நிறுவப்படுகிறது. இந்த வாரியத்தில்தான் மேலே சொன்னபடி எம். சி. ராஜா ஒரு உறுப்பினராக இருக்கிறார். இந்தத் துறையின் கீழ் லேபர் பள்ளிகள் தொடங்கப்பட்டு அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. 

"தி ஹிந்து" 30.8.2023, 21.2.2020 தேதியிட்ட ஆங்கில நாளேடுகளில் டி. ராமகிருஷ்ணன் எழுதிய பதிவின்படி, "1920 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று மெட்ராஸ் கார்ப்பரேஷன் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கிற ஒரு மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அதனுடைய செலவு ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ஒரு அணா. அப்போது 165 மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இதன் பிறகு மேலும் நான்கு பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டபோது பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதாவது 1923 காலத்தில் 811 மாணவர்கள் இருந்த நிலையில் 1924-25 காலத்தில் 1671 மாணவர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த உணவுக்கான செலவு தொடக்கப்பள்ளி கல்விக்கான நிதியிலிருந்து (Elementary Education Fund) செய்யப்பட்டதால்  இந்த உணவுத் திட்டத்தை 1925 ஏப்ரல் ஒன்று அன்று நிறுத்திவிட்டது. எனினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் திட்டம் உயிர் பெற்றது, 25 பள்ளிக்கூடங்களில் மொத்தமாக சுமார் ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள்."

இங்கே குறிப்பிட வேண்டியது காலகட்டம்தான். முதலில் நான் சொன்னபடி 1920 நவம்பர் மாதத்தில் ராஜா அவர்கள் மெட்ராஸ் சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ம. சிங்காரவேலர் மெட்ராஸ் மாநகராட்சியில் 1925 ஆம் ஆண்டுதான் கவுன்சிலர் ஆகிறார். 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி அன்று ஒரு பள்ளியில் மாணவர்களுக்கான உணவு திட்டம் தொடங்கப்பட்டு விட்டது எனில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுவப்பட்ட தொழிலாளர் துறையின் கீழ் அமைக்கப்பட்ட பள்ளிகளில் ஏற்கனவே ஒரு மாணவர் உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனில் அதற்கான முன் முயற்சிகளை அப்போதே எம். சி. ராஜா செய்திருக்கிறார் என்பதுதான் இங்கே பதிவு செய்யப்பட வேண்டியது. இரண்டு ஹிந்து நாளிதழ்களின் ஸ்கிரீன் ஷாட் பதிவு செய்கிறேன். மேலும் இணையத்திலிருந்து ஓரிரண்டு விக்கி ஸ்கிரீன்ஷாடுகளும் பதிவு செய்கிறேன். வாசியுங்கள்.

உதவியவை: Tracing the history of Tamil Nadu's mid-day meal scheme, T. Ramakrishnan, The Hindu, 21.2.2020; How Tamil Nadu created history through mid-day meal scheme, T. Ramakrishnan, 30.8.2023; Perunthalaivar Prof.M.C. Rajah: The Pioneer of Mid-day Meal Scheme in India, 5.12.2018, ambedkarambeth.blogspot.com; wikipedia
.
(2022 செப்டம்பர் 15 அன்று அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு வரையில்  அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.  2026 செப்டம்பர் 26 அன்று 15 அன்றைய முதல்வர் ஜோசப் விஜய் ஆறு முதல் எட்டாவது வகுப்பு வரையில்  அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.) 

(மேலே முதல் புகைப்படத்தில் இருப்பவர் எம்.சி.ராஜா)

23.9.2026






















கருத்துகள் இல்லை: