செவ்வாய், மார்ச் 04, 2025

தமிழ்நாட்டில் இந்தி


தமிழ்நாட்டில் இந்தி


தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 70ஆம் ஆண்டுகளில் ' செந்தமிழ்ச்செல்வி ' என்ற மாத இதழை வெளியிட்டுள்ளது. அதன் 53 வது இதழில் (செப்டம்பர் 1978) இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.

இந்த இதழ் ஆசிரியர் கூட்டத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் டாக்டர் நா. சஞ்சீவி, ஔவை சு துரைசாமிப்பிள்ளை, கொண்டல் சு. மகாதேவன், டாக்டர் சொ சிங்காரவேலன், டாக்டர் ச வே  சுப்பிரமணியம், புலவர் இரா இளங்குமரன், இரா முத்துக்குமாரசாமி ஆகியோர். இதழின் ஆசிரியர் வ சுப்பையா. 

செப்டம்பர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாட்டில் இந்தி என்ற கட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன். 
...


தமிழ்நாட்டில் இந்தி 

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்ப் பன்மொழிக் கலவைத் திரிமொழியாக உருவாகியதும், செம்மையான இலக்கண வரம்போ இலக்கிய வளமோ பிற பிற  சிறப்புகளோ ஒரு சிறிதும் இல்லாததும், ஒரே மொழி எனக் கூறப்படினும் ஏறத்தாழ 80 மொழிகள் என்னும் அளவிற்கு வேறுபாடுகளைகக் கொண்டுள்ளதும், ஒவ்வொரு பகுதியினர் பேச்சு வழக்கும் மற்றைப் பகுதியினருக்கு இயல்பாக விளங்காததும், செயற்கை நடையினதும் ஆன இந்தி மொழியை மொழியாலும் சமயத்தாலும் பண்பாடு கலை நாகரிகம் வாழ்வியல் நடைமுறைகளாலும் வேறுபாடும் மாறுபாடும் பல்வேறு கூறுபாடும் உடைய இனத்தவர்களை கொண்ட இந்திய துணை கண்டத்தின் ஒரே ஆட்சி மொழி ஆக்கிவிடல் வேண்டுமென்று இந்திய நடுவண் அரசினர் விடாப்பிடியாய் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

ஏழைமை நிரம்பியதும் கல்வி அறிவு பெருகாததும் தொழில் வளம் சிறவாததும், நேற்று நாடுகளுக்குக் கடன் பட்டுக்கிடப்பதும், அண்டை அயல் நாட்டினரால் அடிக்கடி பொருதப்படுவதும், வேலையற்றோர் தொகை நாளும் நாளும் பெருகுவதும் ஆன இத்துணைக்கண்ட அரசின் வருவாயில் பெருவாரியான தொகை இந்தி மொழி வளர்ச்சிக்கு என தொடர்ந்து பாழாக்கப்பட்டு வருகின்றது.

இந்திக்கல்வி, நூல் வெளியீட்டுத் துறைகளும், இந்தியைப் பரப்பும் பொருட்டு அங்கிங்கு எனாதபடி  எங்கெங்கும் நிறுவப்பட்டிருக்கும் அவைகளும் ஏராளமான தொகையை விழுங்கி ஏப்பம் இடுகின்றன.

இந்தியாவில் உள்ளோர் அனைவரும் தத்தம் தாய் மொழியையும் ஆங்கிலத்தையும் பயின்று கல்வி கலையாகிய அறிவுத்துறைகளில் மேம்பட்டும் அண்டை அயல் மாநிலத்தவர் நாட்டினரோடு நட்புறவு கொண்டும் வாழும் முறை எளியதும் சிறந்ததும் ஆக இருக்க அதனை விட்டு, நூற்றுக்கு அறுபது விழுக்காட்டினர் கல்வியறிவு பெறாத, பெற முடியாதவர்களாகவும், 20 விழுக்காட்டினர் எழுத்தறிவு மட்டுமே பெற்றவர்களாகவும் இருக்கும் இத்துணைக் கண்டத்தில் பெரும்பான்மையோருக்கு அயன் மொழியானதும் செயற்கை ஆனதுமான இந்தியை இத்துணைக் கண்ட முழுமைக்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் விழுவதோடு ஒப்பதன்றி வேறென்னை?

மாநிலங்கள் தத்தம் தாய்மொழியில் ஆட்சி செலுத்தவும், அவை ஏனை மாநிலங்களோடும் நடுவண் அரசோடும் தொடர்புகொள்ளல், நடுவண் அரசு மாநிலங்களோடும் அயல்நாடுகளோடும் தொடர்புகொள்ளல் முதலியவற்றுக்கு இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைக் கொள்ளவும் வாய்ப்பு இருக்க, இஃது இத்துணைக் கண்டத்தினர் அனைவருக்கும் சமநிலை அளிக்கும் நன்முறையாகவும் இருக்க, நடுவண் அரசைக் கைப்பற்றும் வாய்ப்புத் தமக்கு மட்டுமே இருக்கின்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நடுவுநிலை பிறழ்ந்து இந்தியாளர் தமது மொழி ஒன்றனையே ஆட்சி மொழியாக்குவேம் என்று மடிதற்று நின்று இந்திய ஒற்றுமையைச் சிதைக்க முனைகின்றனர்.

இந் நாவலத்தேயத்தில் தனித்தனி நாடுகளாய் இருந்தனவற்றை ஒன்றிணைத்து இந்தியா என ஒரு நாடாக உருவாக்கி அரசாட்சி செலுத்திய ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தினாலேயே செம்மையாக ஆட்சி செலுத்த முடிந்தது. இந்தியாவை உருவாக்கிய ஆங்கிலமே அதனை இதுகாறும் இணைத்து காத்துக் கொண்டிருக்கின்றது. அதுவுமே இன்றி ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றாக வேரூன்றி உள்ளது. இந்தியாவெங்கணும் பரவலான வழக்காக நிலை பெற்று உள்ளது. ஆங்கிலத்தையே தாய்மொழியாக கொண்டவர்கள் கணிசமான அளவினர் இந்திய குடிமக்களாக உரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். 

இத்துணையையும் புறக்கணித்து ஆங்கிலம் அயன்மொழி என்றும் இந்தியே இந்தியாவின் உரிமை மொழி என்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அது கட்டாய தேவை என்றும் போலிக்காரணம் காட்டி இந்தியாவில் உள்ள இந்திக்காரர்கள் ஆகிய சிறுபான்மையினர் இந்தியார் அல்லாத பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தி வல்லாட்சி செலுத்த முனைந்திருப்பது மேற்கூறியாங்கு அவர்கள் ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்று ஓவாது கூக்குரலிடும் இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது உறுதி.

இந்தி பேசாதார்மாட்டு இந்தியைத் திணிக்கக் கூடாது எனின், இந்திக்காரர்கள் 'எங்கள் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது' என்கின்றனர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளாக இத்துணைக் கண்டத்தின் ஆட்சி மொழியாக விளங்கி வருவதும் மேற்கூறியாங்கு பல்வேறு இனத்தவரையும் இதுகாறும் இணைத்துக் கொண்டுள்ளதும் ஆன ஆங்கிலத்தை கைவிட்டு அவ்விடத்தில் இந்தியை திணிக்க கூடாது என்பதன் உண்மையை உணராமலோ அல்லது உணர மருத்துவ கூறும் கூற்றே அஃது என்பதை சிறுமகாரும் அறிவர்.

இந்தியாவின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர் யாவராயினும் அவர் தமக்குள் எத்தனை முரண்பாடான கொள்கைகளும் செயன்முறைகளும் இருப்பினும், இவ் இந்திக் கொள்கையில் மட்டும் முற்றும் ஒன்றுபட்ட கருத்தும் செயல்முறையும் உடையவராகவே இருக்கின்றனர். இஃது அன்று முதல் இன்றுகாறும் வாடிக்கையாக வளர்ந்து கொண்டிருக்கின்றது.

முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களைக் கொண்டு பணி அமர்த்தமாக அமைக்கப்பட்ட குழுவினரே இந்தியை இத்துணைக்கண்டத்தின் பொது ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை உருவாக்கினர் என்பதும், அதுவும் இந்திக்குச் சார்பாகவும் எதிர்ப்பாகவும் சமமான ஒப்போலைகள் votes கிடைத்த நிலையில் குடியரசுத் தலைவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திக்குச் சார்பாக அளித்த ஒரே ஓர் ஒப்போலையினாலேயே இந்தி இந்தியாவின் பொது ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆகவே தொடர்ந்த பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் இவ்வாட்சி மொழிக் கோட்பாட்டை மறு ஆய்வு செய்வது மிகவும் இன்றி அமையாததாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஏறத்தாழக் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு முயற்சிகள் பெருந்தொடராக நீண்டு கொண்டிருக்கின்றன. 1938 ஆம் ஆண்டில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழர்கள் கிளர்ந்து எழுந்தனர். நிறைபுல வேந்தர் மறைமலை அடிகளார் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பல்துறைப் பெருமக்களும் அணிவகுத்து நின்றனர். இந்தி ஒருவாறு பின்வாங்கியது. ( 1928 ஆம் ஆண்டு அளவில் இம்முயற்சி கருத்தளவில் பேசப்பட்ட போதே தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.)

அடுத்து 1948 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி பரவலாகத் திணிக்கப்பட்டு வருதலை எதிர்த்துத் தந்தை பெரியார் ஈ வே ராமசாமி அவர்கள் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தித்திணிப்பின் முடுக்கம் சற்றுக் குறைந்தது.

இனி 1962 ஆம் ஆண்டு மீண்டும் இந்திப்படை தமிழ்நாட்டில் நுழைந்தது. தமிழ்நாட்டில் குழப்பமும் கலவரமும் எழுந்தன. அப்பொழுது தலைமை அமைச்சராய் விளங்கிய பண்டிதர் சவகர்லால் அவர்கள் "இந்தி பேசாதவர்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலமும் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்" என்று ஒரு போலி உறுதிமொழி அளித்து ஒருவாறு நிலைமையைச் சரிப்படுத்தினார்.

பண்டிதர் ஜவஹர்லால் அவர்களின் மறைவுக்குப் பின் 1965 ஆம் ஆண்டில் இந்தி இத்துணைக் கண்டத்தின் ஆட்சி மொழியாக மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முனைந்த போது தமிழ்நாடு கொந்தளித்து எழுந்தது. கொடும் போர் நிகழ்ந்தது. 1938 ஆம் ஆண்டு இந்தியைத் திணித்த உயர்திரு சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்களே இந்தித் திணிப்பின் தீமையை உணர்ந்து தம் கருத்தை மாற்றிக்கொண்டு இந்து திணிப்பை எதிர்த்துப் பெருங்குரல் எழுப்பினார். நடுவண் அரசு அமைச்சர்களாக விளங்கிய திருவாளர்கள் சி சுப்பிரமணியம், ஓ வி அளகேசன் ஆகிய இருவரும் இந்தித் திணிப்பால் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கொடுஞ்செயல்களை ப் பொறுக்கமாட்டாது தம் அமைச்சர் பதவிகளினின்றும் விலகினர். தமிழ்நாட்டைப் பின்பற்றி வங்காளம், கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய மாநிலத்தவரும் இந்தித்திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர்.
இந்தி வெள்ளம் ஒருவாறு தணிந்தது.

1967 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களின் தலைமையில் அமைந்த திமுகழக அரசு 1968 இல் தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமும் என்னும் இரு மொழித் திட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி மும்மொழி திட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இத்தொடர் நிகழ்ச்சியில் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புற்றவர் பலர். பதவி பறிக்கப் பெற்று வருவாய் இழந்தும் வாடியவர் பலர். காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பலர். உலக வரலாறு காணாத அளவிற்குத் தாய்மொழி காக்க முனைந்து தம் உடலுக்குத் தாமே தீ மூட்டிக்கொண்டு உயிர் நீத்தவர்களும் பலர். 

இத்துணைக்குப் பின்னும் இந்திய நடுவண் அரசினர் 'இந்தியை நாங்கள் திணிக்கவில்லை திணிக்கவில்லை' என்று கூறிக்கொண்டே தம் நேரடி ஆளுமையின் கீழ் உள்ள துறைகளில் இந்தியை வலிந்து புகுத்தி வருகின்றனர். ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்பது கூட பெயரளவில் இருந்தாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை புறக்கணிக்கப்படுகின்றது. சுற்றறிக்கைகள் கடிதங்கள் எல்லாம் இந்தியில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. பண விடைத்தாள்கள் முதலிய படிவங்கள் எல்லாம் இந்தியில் மட்டுமே அச்சிட்டு பரப்பப்படுகின்றன. இதற்கு எதிர்ப்புக் குரல் எழவே இந்தியிலும் ஆங்கிலத்திலும் மேலும் கீழுமாக அச்சிட்டு பரப்புகின்றனர். 

பெருவாரியான மக்களின் தாய் மொழிகளாக விளங்கும் மற்றை மொழிகள் எல்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்தியோ ஆங்கிலமோ அறியாத பிற மொழியாளர்கள் தம் மனநிலை என்னாம்? இந்தியின் கீழ் ஆங்கிலத்தை ஒட்டி இருப்பது எதிர்ப்பைச் சரிப்படுத்த இப்போதைக்குச் செய்யப்படும் கண் துடைப்பே அன்றி வேறில்லை. நாளடைவில் ஆங்கிலத்தைக் கைவிட்டு இந்தியை மட்டுமே நிலைப்படுத்தும் கரை உள்ளத்துடன் செய்யப்படுவதே என்பது தெளிவு.

அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, நாட்டு உடைமை வைப்பகங்கள் முதலிய பற்பல துறைகளிலும் இந்தியில் தனி ஆளுமை வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியைப் பயின்று உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்னும் நிலை உருவாகியுள்ளது. முன்னமே அலுவல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கூட பகுதி நேர இந்தி வகுப்புகளில் சேர்ந்து இந்தி பயிலுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்தி பயின்றால் மட்டுமே தம் அலுவலை காப்பாற்றிக் கொண்டு தொடர்ந்து நீடிக்கவும் பதவி உயர்வு சம்பள உயர்வுகள் பெறவும் முடியும் என்றும் அச்சுறுத்தவும் ஆசை மூட்டவும் பெறுகின்றனர்.

கடந்த பல காலக் கட்டங்களிலும் இந்தியாளர் இன்னோர் அன்ன  பலப்பல முயற்சிகளை முனைந்து செய்வதும், எதிர்ப்பு மிகுமாயின் சற்றுப்
பின்வாங்கிக் கொள்வதும் தொடர்ந்து வழக்காய் நிகழ்ந்து வருகின்றது. என்றேனும் ஒரு நாள் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தியாளர் பேராசை.

இந்நிலைகள் எல்லாம் பாராளுமன்றத்திலும் செய்தித்தாள்கள் வழியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனினும் நடுவணரசு இதில்
அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. சென்னையில் கடந்த 15 8 1978 அன்று மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று செட்டிநாட்டு அரசர் அரசவயவர் முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் மொழி அறிஞர்கள் கலந்து கொண்டு இந்தித் திணிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போராட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டவர் மட்டுமே இந்தியை எதிர்க்கின்றனர் என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். மேற்கூறியாங்குக் கடந்த 1965 ஆம் ஆண்டுப்போராட்டத்தின் போதே வங்காளம், கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவர்களும் இந்தித் திணிப்பின் தீமையை உணரத் தொடங்கிவிட்டனர். ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர் எத்துணைதான் மூடி மறைப்பினும் மக்கள் உணர்வு வெடித்து வெளிப்படுவது திண்ணம். இனிப் பஞ்சாபு, மராட்டியம் முதலிய மாநிலத்தவர்களும் இந்தியை ஏற்றுக்கொள்வதனால் தாம் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப்படுதலை நடைமுறையில் கண்டு கொண்டு எதிர்காலத்தில் எதிர்க்கவே செய்வர்.

இந்திய நடுவண் அரசினர் மேற்கூறிய நிலைகளைத் தீர விளங்க எண்ணிப் பார்த்து இத்துணைக் கண்டத்தின் எதிர்காலம் ஒற்றுமை என்னும் ஒளிமயமானதாக அமையும் பொருட்டு இந்தித்திணிப்பைக் கைவிடுமாறு வேண்டி அறிவுறுத்துகின்றோம்.
...


Internet archive இல் இருந்து பெறப்பட்ட ஆவணம்

கருத்துகள் இல்லை: