செவ்வாய், மார்ச் 11, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நூலில் என்னுரை


என்னுரை


தென்னங்கீற்று ஊஞ்சலிலே

தென்றலில் நீந்திடும் ஓலையிலே

சிட்டுக்குருவி பாடுது-தன்

பெட்டைத் துணையைத் தேடுது

 

சின்னச்சின்ன மூக்குத்தியாம்

செவப்புக்கல்லு மூக்குத்தியாம்

கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங்கண்டு

கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்...

பள்ளி செல்லும் சிறுவனாக நான் இருந்த வயதில் இந்த இரண்டு பாடல்களில் ஒன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும். எளிமையான சொற்கள், மிகக்குறைந்த பின்னணி இசைக் கருவிகள், பாடல் வரிகள் தெளிவாகப் புரிவது என பிற வழமையான பாடல்களில் இருந்து ஒரு விதத்தில் வேறுபட்டு இருப்பது மட்டும் அந்த வயதில் புரிந்தும் புரியாமலும் இருந்தது. சற்று வயது கூடும்போது பாடல் வரிகளுக்குள் கவனம் போனது. பின்னர் சென்னை வந்து வேலையில் அமர்ந்தபின், தொடர்பாகத் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டபோது தொழிற்சங்கக் கூட்டங்கள், போராட்ட நாட்களில் துடிக்கும் ரத்தம் பேசட்டும், துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்’, ‘மணப்பாறை மாடுகட்டி’,’சும்மா கெடந்த நெலத்தை கொத்தி’, ‘உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும் ஆகிய பாடல்களை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வோம். உண்மை ஒரு நாள்...பாடல் கவர்ச்சிகரமான ஒரு ராணுவ அணிவகுப்பின் தாளகதியில் இருப்பது புரிந்தது. அதாவது அந்தப் பாடலின் உட்கருத்தை உள்வாங்கி அதற்கொப்ப மெட்டமைக்கப்பட்ட பாடல் என்பது புரிந்தது. இந்தப் பாடலும் தொடக்கத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாடல்களும் ஒரே படத்தில் இடம் பெற்ற பாடல்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். பாதை தெரியுது பார் என்ற படம். உடனடியாகத் தேடிப் பார்க்க அந்த நேரத்தில் இணையம் என்ற வசதி இருக்கவில்லை. அப்படியே நாட்கள் கடந்தன.

1995 டிசம்பர் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள், சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்(CLS) பேராசிரியர் தயானந்தன் பிரான்சிஸ், சு.சமுத்திரம் ஆகியோரின் முன்முயற்சியில் சென்னை மெமோரியல் ஹாலில் மக்கள் இலக்கியமும் திறனாய்வுப் போக்குகளும்என்ற  கருப்பொருளில் மிகச் சிறப்பான கருத்தரங்கை நடத்தியது. மூத்த பெருமக்கள் ஆன தி.க.சி., ச.செந்தில்நாதன், வல்லிக்கண்ணன், கந்தர்வன், திருப்பூர் கிருஷ்ணன், முகம்மாமணி, ஞானராஜசேகரன், டி.செல்வராஜ், செ.யோகநாதன் உள்ளிட்டோர் பங்கு பெற்றார்கள். முதல்நாள் அமர்வுக்குத் தலைமை தாங்கிய  தோழர் கே.சி.எஸ்.அருணாச்சலம் கவிதைகள் குறித்து ஆய்வு செய்தார். சின்னச்சின்ன மூக்குத்தியாம்... செவப்புக்கல்லுபாடலைத் தனது உரையின் இறுதியில் பாடினார். அது அப்படத்தில் அவரே எழுதிய பாடல் என்பதால் கேட்டு உணர்ச்சிவயப்பட்டவன் ஆனேன். அப்போதுதான் அந்தப் பாடலும் முன்பு சொன்ன இரண்டு பாடல்களும் பாதை தெரியுது பார்என்ற திரைப்படத்தில் இடம் பெற்றவை என்பதை உறுதி செய்து கொண்டேன். மட்டுமின்றி கே.சி.எஸ்.அவர்கள் மிக அழகாகப் பாடும் திறன் கொண்டவர் என்பதும் அவரது நண்பர்கள் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள் என்பதும் பின்னாட்களில் நான் தெரிந்து கொண்டவை.

2000 ஆகஸ்ட் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் லொயோலா கல்லூரி வளாகத்தில் பண்பாடு - மக்கள் தொடர்பகம் தமிழ்ப் பொதுவுடைமை இயக்கங்களும் கலை இலக்கியப் போக்குகளும்என்ற கருப்பொருளில் ஆய்வரங்கம் ஒன்றை நடத்தியது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளின் குறிப்புகள் இப்போதும் என்னிடம் உள்ளன. தோழர்கள் ஆர். நல்லக்கண்ணு, அறந்தை நாராயணன், சி.மகேந்திரன், கே.வரதராஜன், பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன், அ.குமரேசன், பேரா.ச.மாடசாமி, சு.சமுத்திரம், ச.ராஜநாயகம், ஸ்ரீரசா, ச.செந்தில்நாதன், பேரா.கே.ராஜு, பேரா.தி.சு.நடராஜன், சு.பொ.அகத்தியலிங்கம், ந.முத்துநிலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். அங்கேதான் அறந்தை நாராயணன் காலம் மாறிப் போச்சு’, ‘தாமரைக்குளம்’, ‘பாண்டித்தேவன்’, ‘பாதை தெரியுதுபார்ஆகிய படங்களைப் பற்றிப் பேசினார். இடதுசாரிகள் கூட்டாகப் பணமுதலீடு செய்து அப்படத்தை எடுத்த கதையைக் கூறினார். கேரளாவில் இருந்து திருச்சிக்கு வந்து பொன்மலை ரயில்வேயில் தொழிலாளியாக வேலை செய்த கே.விஜயன், வங்கத்தில் இருந்து வந்த நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடத்தக்க விதத்தில் பேசினார்.

இது ஒரு புறம் இருக்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பாதை தெரியுதுபார், புதுவெள்ளம், மதனமாளிகை, தாகம் ஆகிய படங்களில் இருந்து பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்ட பழைய நினைவுகள் மேலெழும்புகின்றன. வெளிவராத திரைப்படம் ஆன புதுச் செருப்பு கடிக்கும்படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய சித்திரப் பூச்சேலை...பாடல் மீண்டும் நினைவில் தளும்ப எழுகிறது. ஜெயகாந்தன் எழுதிய பாடல் அது தாகம் படத்தில் இடம் பெற்றவானமெங்கும் பரிதியின் ஜோதி... என்ற பாரதியின் பாடலை கே.ஜே.யேசுதாஸ் தனது குரலால் காட்சிப் படுத்தும் அதிசயம் விரிகிறது. 1999இல் கே.சி.எஸ்.அருணாச்சலம் அவர்கள் மறைந்தபோது பித்துப்பிடிச்சவன் என்று சொல்லி என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்என்று மெமோரியல் ஹாலில் அவரே பாடிய நாள் நினைவுக்கு வந்து, கட்டுப்படுத்த முடியாமல் அழுதது ஈரம் காயாமல் குளுமையாக நினைவில் உள்ளது.

யார் இந்த எம்.பி.சீனிவாசன்? எண்ணினால் இரண்டு கைகளிலும் மீதம் இரண்டு விரல்கள் மிஞ்சும், ஆம், தமிழில் எட்டே எட்டுப் படங்களுக்கு மட்டும் இசையமைத்த அவர் யார்? அதற்கு முன்னும் அதன் பின்னும் அவர் வரலாறு என்ன? தமிழ்ச் சினிமா இசையில் அல்லது சினிமாத்துறையில் அவர் செய்த குறுக்கீடு என்ன? அவரது இடம் என்ன? சினிமா இசையுடன் அவரது எல்லை முடிவுற்றதா? இந்த நூலுக்கு மக்களிசை மேதைஎன்ற தலைப்பை நான் சூட்டக் காரணம் என்ன?

இக்கேள்விகளுடன் தமிழ் நாட்டில் அவரைப் பற்றிய தேடுதலை மேற்கொள்ளும் எவர் ஒருவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். 1991 ஆம் ஆண்டு அறந்தை நாராயணன் அவர்கள் எழுதி வெளியிட்ட சிறிய நூல் ஒன்றைத்தவிர அவருக்கான தனிப்பட்ட வரலாற்று நூல் எதையும் தமிழ் இலக்கிய உலகமும் சரி, தமிழ்ச் சினிமா வரலாற்றை அறிந்த எவரும் சரி, இதுவரை எழுதவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, அவரைப் பற்றி நன்கு அறிந்த, அவருடன் இசைத்துறையில் பணி செய்தவர்கள், அவரிடம் இசைகற்றுப் பிரபலமானவர்கள் என யாரும் அவரைப் பற்றி எந்தப் பதிவும் செய்யவும் இல்லை, அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அவர் இசைக் கலைஞர் மட்டுமே அல்லர், ஓர் இடதுசாரித் தொழிற்சங்கவாதி, தென்னிந்தியச் சினிமாத்துறையில் முதலாவது தொழிற்சங்கத்தைத் தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ்ப்பதிவு செய்தவர் என்ற வகையில் அவரால் பலன் பெற்றவர்களும் கூட அவரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். சினிமா வரலாறு பற்றி மிகக் கனமான நூல்களை எழுதித்தள்ளுவோரும் கூட எம்பிஎஸ் பற்றி அறியாதவர்களாக இருப்பது யதார்த்தம். தியடோர் பாஸ்கரன், ஆர்.ஆர்.சீனிவாசன், அம்ஷன் குமார், ஷாஜி, வாமனன் போன்றோர் விதிவிலக்குகள். அவரைப் பற்றி அங்கும் இங்குமாய்ச் சில தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன, அவ்வளவுதான்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இணையமும் எம்.பி.சீனிவாசன் இசையமைத்த பாடல்களை நமக்குத் தருகின்றன என்பதில் ஐயமில்லை. அதுவும் கூட 2005க்குப் பிறகுதான் சாத்தியமானது. இந்தக் கட்டத்தில் அவரது மலையாளச் சினிமா பங்களிப்பு பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது அவர் குறித்த தேடுதல் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டவே செய்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏதோ  ஒரு நாள் முகநூலில் எம்பிஎஸ் பற்றி ஒரு பதிவு எழுத, அதை மறுநாளும் தொடர, சரி, தொடர்ந்து அவர் குறித்து எழுதினால் என்ன என்று இணையத்தில் தகவல்கள் திரட்டினேன். இந்த நூலின் தொடக்கம் இப்படியாக அமைந்ததுதான். எனது பதிவைத் தொடர்ந்து வாசித்த நண்பர்கள், அதனை மேலும் விரிவாக்கி நூல் வடிவத்துக்குக் கொண்டு வந்தால் எம்.பி.எஸ். குறித்த பதிவாக காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்று என்னைத் தூண்டியதன் விளைவே இந்த நூல்.

ஓர் இசைமைப்பாளரை, இசைக் கலைஞனை, அதுவும் திரைப்படத்தில் இசையமைத்த ஒருவரைப் பற்றிய வரலாற்றை எழுதுவது எளிதான ஒன்றல்ல. இசை என்பது கேட்டுணரக் கூடியது. அதற்கான காலத்தையும், நேரத்தையும் தனியே அர்ப்பணிக்க வேண்டும். எனில் எம்பிஎஸ் இசையமைத்த படங்களைப் பார்க்க வேண்டும். பாடல்களைத் தனியே கேட்க வேண்டும், பாடல்களைக் காட்சியுடனும் பார்க்க வேண்டும், அவரது சேர்ந்திசைப் பாடல்களையும் கேட்டுணர வேண்டும். நான்கு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பணி பலமணி நேரங்களை வேண்டி விரும்பி விழுங்கியது. அன்றி, இசை, திரைப்பட இசை, தமிழிசை சார்ந்த மிகப் பல நூல்களை வாசிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்ந்ததால் அதற்கான தேடங்களிலும் நூல்களை வாங்குவதிலும் வாசிப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். வாசித்த நூல்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பது இந்த நூலைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை.

நூலாக்கும் முயற்சியைத் தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கும்  கமலாலயன், நா.வே.அருள், சரணா (பா.சந்திரசேகரன்), தெ.புகழேந்தி (பாவெல் சூரியன்), தனுஷ்கோடி இசக்கிமுத்து, கி.பாரி, எஸ்.மோசஸ்பிரபு, திருநின்றவூர் பகுதி த.மு.எ.க.ச.நண்பர்கள், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, மயிலை பாலு, விஜயசங்கர் ராமச்சந்திரன் (ஃபரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர்), தனது இணையத்தளத்தில் சேகரித்து வைத்து இருந்த அரிய தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த  எஸ்.விகாஸ் (காப்பாளர், www.mbsreenivasan.com), தஞ்சாவூர்க் கவிராயர், திரையிசை ஆய்வாளரும் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்த சில லட்சம் இசைத்தட்டுக்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வருபவரும் எழுத்தாளருமான திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், திரைப்படங்களைத் தாண்டி மிகப்புகழ் பெற்று விளங்கும் இசைக் கலைஞர்கள் பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பன் கி.ராஜன், மலையாள மொழியில் கிடைத்த ஆதாரங்களை எனக்குப் புரியவைத்துத்  தமிழாக்கம் செய்ய உதவிய அகமது நியாஸ்மோன், அம்ஷன்குமார், ஷாஜிசென், ச.தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர் ரவிவிஸ்வநாதன், பேராசிரியர் போ.மணிவண்ணன், ஆய்வாளர் ஆர்.சுகுமாரன் (நீலகிரி) ஆகியோருக்கும், எனது நீண்டநாள் நண்பர் பரிசல் சிவசெந்தில்நாதன் ஆகியோருக்கும், நூலின் வரவுக்காகக் காத்திருப்பதாகத் தொடர்ந்து என்னிடம் உறவாடிக் கொண்டிருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி. இவர்கள் தவிர இணையதளத்தில் பல நூறு யூடியூப் சானல்களை நடத்திக் கொண்டிருக்கும் முகமறியாத பல நூறு நண்பர்களுக்கும் பெரிதும் நன்றி கூறுகிறேன். நீண்ட பல மாத உழைப்பிற்கு என்னுடன் பெரிதும் ஒத்துழைத்த என் மனைவி ஆசியா, மகன் சாதத் ஆகியோருக்கும் என்  உளமார்ந்த நன்றி.

எம்.பி.எஸ். அவர்களின் அன்புக்குரிய மாணவரும் சென்னை இளைஞர் இசைக்குழு (இப்போது Madras MBS Choir)வின் முன்னாள் செயலாளரும் இன்னாள் கலை இயக்குநரும் ஆன டி.ராமச்சந்திரன் அவர்களுக்கு நான் பெரிதும் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன். வயதில் இளையவனான என்னிடம் அவர் காட்டும் அன்பும் மரியாதையும் என்னைப் பெரிதும் நெகிழச் செய்கின்றன. உண்மையில் எம்பிஎஸ் அவர்களின் மகத்தான பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் எம்.ஒய்.சி.யின் கலைஞர்கள்தாம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இவர்களிடம் இருந்து பெற்ற அரிய தகவல்கள் ஏராளம்.

எம்.பி.எஸ்ஸின் தந்தை பாலகிருஷ்ணனின் தம்பி கல்யாணசுந்தரம். அவரது மகள் ஜெயந்தி எம்.ஒய்.சி.யின் தொடக்ககால உறுப்பினர். அவரைச் சந்தித்த பின்னர்தான் எம்பிஎஸ்ஸின் முன்னோர் பற்றிய அரியதகவல்களைப் பெற முடிந்தது. மிகப்பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பார்க்க முடிந்தது. இந்த நூலின் முக்கியமான பதிவாக அவற்றைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜெயந்தி இந்நூலுக்குச் சிறப்பான வாழ்த்துரையையும் வழங்கியுள்ளார். ஜெயந்தியின் கணவர் ரமேஷும் எம்.ஒய்.சி.யின் மூத்த உறுப்பினரே. அவர்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

ஒரு நூலின் முகப்பு அட்டை என்பது நூலுக்குள் நுழைய வாசகரை அழைக்கும் நுழைவாயில் ஆகும். முகப்பு அட்டையையும், நூலையும் அழகுறவும் சிறப்பாகவும் வடிவமைத்துள்ள தோழர் ஜீவமணி பாலன் அவர்களுக்கு என் உளமார்ந்த   நன்றி. இந்த நூலை விரைவில் முடிக்கத் தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார் அவர். எனது எழுத்தையும் வளர்ச்சியையும் தொடர்ந்து கவனித்து என்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கும் மூத்த தோழர் கமலாலயன், இந்த நூலை வெகு சிறப்பாகச் செப்பனிட்டு அனைவரும் வாசிக்கத்தக்க விதத்தில் இறுதி வடிவத்துக்குக் கொண்டு வந்துள்ளார். அவருக்குப் பெரிதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நூலைத் தட்டச்சு செய்து குறித்த காலத்துக்குள் வெளிவர உதவிய ரேகா அவர்களுக்கும் நன்றி.

இங்கே ஒரு கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இசையை ரசிப்பது என்பது ஒரு ரசிகனின் மனநிலை, கட்டற்ற சுதந்திரம் அந்த மனநிலைக்கு எப்போதும் உண்டு; இசையைப் பற்றி அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முனைவது இந்த ரசிக மனநிலையைத் தாண்டியது, அதற்கு அப்பாற்பட்டது, எல்லைகளைத் தாண்ட வேண்டும். சாய்மானம் இல்லாத, பாரபட்சம் அற்ற மனநிலை வேண்டும்.

ஒரு பாடலையோ இசைத்துணுக்கையோ அல்லது ஒரு இசையமைப்பாளரின் திறனையோ மதிப்பிட வேண்டும் எனில் ரசிகமனநிலையைக் கடந்து செல்ல வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். விருப்புவெறுப்பற்ற மனநிலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம் அந்தக் கிராமத்துக்காரருக்கு அழகுதான்; சற்றேவிலகிச் சென்று மலையின் உச்சியில் ஏறி நின்று பார்க்கும் போது மலையைச் சுற்றி இருக்கும்   பல நூறு கிராமங்களின் அழகும் தெரியும், தனது கிராமத்தில் அதுவரை தன் கண்களுக்குப் புலப்படாத பலவும் கூடத் தெரியலாம். அந்த மனநிலை கை கூடினால் அது அளிக்கும் இன்பம் வேறானது, அந்தப் பரவசம் பாரபட்சம் இல்லாதது. இந்த நூலை அப்படியான ஓர்  இடத்தில் இருந்துதான் நான் எழுதியுள்ளேன். வாசிப்போர் அதனை உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வாருங்கள், வாசிப்போம், 

எம் பி எஸ் அழைக்கிறார்!

அன்புடன்,

மு.இக்பால் அகமது




திங்கள், மார்ச் 10, 2025

மொழிபெயர்ப்புக்கலையின் இலக்கணத்தை வகுத்த மணவை முஸ்தபா

 

மொழிபெயர்ப்புக்கலையின் இலக்கணத்தை வகுத்த மணவை முஸ்தபா அவர்கள்:


அவரது வரையறையின்படி மொழிபெயர்ப்பைப் பின்வரும் 12 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்துகிறார். 

1. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு (literal translation)

சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது சில சமயங்களில் மூல ஆசிரியர் சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்தை வெளிக்காட்டி விடும். உதாரணமாக hundred rail sleepers were washed என்ற ஆங்கில செய்தி தலைப்பை 'ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 100 பேர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர் '  என்று முற்றிலும் தவறாக மொழிபெயர்ப்பதற்கு காரணம் சொல்லுக்குச்சொல் மொழி பெயர்த்ததால் வந்தது. 
எனவே பெயர்கள், குறியீடுகள் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்ற இடங்களில்
மரபினை ஒட்டியே மொழி பெயர்க்க வேண்டும்.

2. வரையறை அற்ற மொழிபெயர்ப்பு (free translation)

கதை இலக்கியங்களை மொழிபெயர்க்க இதுவே சிறந்த உத்தியாகும்.
மூலக்கரு சிதையாமல் எந்த மொழியில் பெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியில் மரபுக்கு ஏற்ப பழமொழிகள் மரபுத்தொடர்கள், உத்தி, மொழி நடை ஆகியவற்றை சேர்த்து மூல நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது. 

3. பொது மக்கள் ஆர்வ மொழிபெயர்ப்பு popular translation 

செய்திப் பரிமாற்றத் துறையில் அதிகம் பயன்பட்டு வரும் இந்த மொழிபெயர்ப்பு சாதாரண படிப்பு அறிவு உள்ளவர்களை கருத்தில் கொண்டு செய்யப்படும் மொழிபெயர்ப்பாகும். அதாவது மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று என்று உணராத வகையில் தாய் மொழியில் எழுதப்பட்டதைப் போன்ற வகையில் நடை, உத்தி அனைத்தையும் கையாண்டு எழுதப்படுவது. 

4. துல்லியமான மொழிபெயர்ப்பு (accurate translation)

மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு முறையான இதில் மூலமொழி உணர்த்தும் கருத்தையோ உணர்வையோ சிறிது கூட 
ச் சிதைக்காமல் கருத்து, நடை, உத்தி ஆகிய அனைத்தும் மூல ஆசிரியனை ஒட்டியே அமைய வேண்டும். அறிவியல், சட்டத்துறைகளுக்கு இந்த வகையான மொழிபெயர்ப்பு ஏற்றது. 

5. மொழியாக்கம் (transcreation)

இலக்கிய மொழிபெயர்ப்புக்கு, குறிப்பாக கவிதை மொழிபெயர்ப்புக்கு ஏற்ற முறையாக உள்ளதே மொழியாக்கம் எனும் உத்தி. மூல நூலாசிரியர் கையாண்ட கருவை அடியொற்றி பெயர்ப்பு மொழியின் மரபு இலக்கண விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்படுவது. 

6. விரிவான மொழிபெயர்ப்பு (magnified translation)

மூல நூலின் கருத்துக்களை ஒட்டி அதிக செய்திகளை சேர்த்து விளக்கமாக எழுதி பொருள் விளங்க மொழி பெயர்ப்பது. 

7. சுருக்க மொழிபெயர்ப்பு abridged translation 

மூல நூலின் கருவை மாற்றாமல் உருவில் மட்டும் மாற்றம் செய்து சுருங்கிய வடிவில் மூலத்தை தருதல். மூல ஆசிரியன் எழுதிய சில பகுதிகளை நீக்கி விடுவது அல்லது சுருக்கி விடுவது இம்முறையில் இயல்பானதாகும். 

8. தழுவல் மொழிபெயர்ப்பு (adopted translation)

மொழிபெயர்ப்பு என்ற பெயரால் அழைக்கப்படாமலே இவ்வகை மொழிபெயர்ப்புக்கள் உலக மொழிகளில் ஏராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள், கம்பராமாயணம் போன்ற உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களில் பெரும்பாலானவை தழுவல் வகையைச் சேர்ந்தவையே. 
மூலத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ஆங்காங்கே சுருக்கியும் விரித்தும் பெயர்க்கப்படும் மொழியின் மரபு, பண்பாடு, சிறப்புத் தன்மைக்கு ஏற்ப சொல்லுகின்ற முறை அமையும். சான்றாக வால்மீகி ராமாயணத்தில் இராவணன் சீதையை தன் தொடை மீது தூக்கி வைத்துக்கொண்டு சென்றான் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழில் இதைத் தழுவிய கம்பர் இராவணன் சீதையை பர்ண சாலையோடு பெயர்த்து தூக்கிச் சென்றான் என்று கூறுகின்றார். 

9. திரைப்பட சாரப்பெயர்ப்பு (subtitle translation)

திரையரங்குகளில் வேற்று மொழி திரைப்படம் ஓடும்போது அதன் கதை உரையாடல்களின் சாரத்தை தேவையான மொழியில் இரண்டொரு வரிகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது திரையின் அடிப்பகுதியில் தோன்றுமாறு அமைப்பர்.

10. திரைப்பட மொழிமாற்றப் பெயர்ப்பு (dubbing translation) 

திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் வேற்று மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பேசப்படும் போது பாத்திரத்தில் உதட்டு அசைவுக்கு ஏற்ப உரிய சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மூலமொழியில் பேசுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதே அளவு நேரத்திற்குள் மொழி மாற்றம் அமைய வேண்டும். 

11. கருவி மொழிபெயர்ப்பு machine translation 

கணினியின் துணைகொண்டு செய்யப்படும் இந்த வகையான மொழிபெயர்ப்புக்கு தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்த போதிலும் நம்பிக்கையூட்டும் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. ஜப்பானிய மொழி மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் ஓரளவு வெற்றியடைந்துள்ள இம்முறை இன்னும் தமிழ் - ஆங்கிலம், தமிழ் - பிற மொழிகளில் மிகவும் பின்னடைந்து காணப்படுகிறது. 

12. சிறுவருக்கான மொழிபெயர்ப்பு 
Translation for children 

சிறுவருக்குப் புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்வது பற்றி ஆழமாக இதுவரை சிந்திக்கப்படவில்லை. வளரும் தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை தணிக்க மொழிபெயர்ப்பும் ஒரு சிறந்த கருவியாக அமையும். சொல்லும் முறை, நடை, சொற்களில் எளிமை ஆகியவற்றில் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மொழிபெயர்த்து தருவதே சிறுவருக்கான மொழிபெயர்ப்பாகும். 
...

அறிவியல் தமிழுக்கு ஆக்கம் தந்த மணவை முஸ்தபா அவர்களின் சிறப்பான பணிகளைப் பற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்து 1998 ஆம் ஆண்டு மீரா பப்ளிகேஷன் வெளியிட்ட 'அறிவியல் தமிழின் விடிவெள்ளி' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த நூலின் தொகுப்பாசிரியர் ஆர் ராமசாமி அவர்கள். 'தமிழில் அறிவியல் இலக்கியமும் மணவையார் சிந்தனையும்' என்ற தலைப்பில் ராம்குமார் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. 

கணினி மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரை ஆசிரியர் ராம்குமார் அவர்களின் கருத்தும் கனவும் குறிப்பிடத்தக்கவை.
அன்றைய கனவு இப்போது அதாவது முப்பது வருடங்களுக்குப் பிறகு நனவாகி உள்ளது! விஞ்ஞான வளர்ச்சி அன்றி வேறென்ன?!
...

செவ்வாய், மார்ச் 04, 2025

பேசும் புதிய சக்தியில் எம்.பி.எஸ். நூல் அறிமுகம்

 

பேசும் புதிய சக்தி மார்ச் 2025 இதழில்  எம்.பி.எஸ். நூல் அறிமுகம்

"... இந்த நிலையில் மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் குறித்த வரலாற்றை அரிதின் முயன்று தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி உள்ள மு. இக்பால் அகமதுவின் முயற்சி பாராட்டுக்குரியது. எம்.பி. சீனிவாசனின் பூர்விக வரலாற்றில் இருந்து தொடங்கும் இந்நூல் மொத்தம் 33 தலைப்புக்களில் அவரது இசை சார்ந்த வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் விவரித்துள்ளது. அவரது வரலாற்றின் ஊடாகப் பல வரலாற்றுக் குறிப்புக்களை, விவரிப்புக்களை இந்நூலில் தரிசிக்க முடிகிறது. அவர் குறித்த நம்பத்தகுந்த ஆவணமாக விளங்கும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் ஆழமாக, அகலமாக, தெளிந்த நீரோடை போல் அமைந்துள்ளது. நூலாசிரியரின் உழைப்பும் முயற்சியும் பாராட்டத் தக்கவை. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.


தமிழ்நாட்டில் இந்தி


தமிழ்நாட்டில் இந்தி


தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 70ஆம் ஆண்டுகளில் ' செந்தமிழ்ச்செல்வி ' என்ற மாத இதழை வெளியிட்டுள்ளது. அதன் 53 வது இதழில் (செப்டம்பர் 1978) இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.

இந்த இதழ் ஆசிரியர் கூட்டத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் டாக்டர் நா. சஞ்சீவி, ஔவை சு துரைசாமிப்பிள்ளை, கொண்டல் சு. மகாதேவன், டாக்டர் சொ சிங்காரவேலன், டாக்டர் ச வே  சுப்பிரமணியம், புலவர் இரா இளங்குமரன், இரா முத்துக்குமாரசாமி ஆகியோர். இதழின் ஆசிரியர் வ சுப்பையா. 

செப்டம்பர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாட்டில் இந்தி என்ற கட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன். 
...


தமிழ்நாட்டில் இந்தி 

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்ப் பன்மொழிக் கலவைத் திரிமொழியாக உருவாகியதும், செம்மையான இலக்கண வரம்போ இலக்கிய வளமோ பிற பிற  சிறப்புகளோ ஒரு சிறிதும் இல்லாததும், ஒரே மொழி எனக் கூறப்படினும் ஏறத்தாழ 80 மொழிகள் என்னும் அளவிற்கு வேறுபாடுகளைகக் கொண்டுள்ளதும், ஒவ்வொரு பகுதியினர் பேச்சு வழக்கும் மற்றைப் பகுதியினருக்கு இயல்பாக விளங்காததும், செயற்கை நடையினதும் ஆன இந்தி மொழியை மொழியாலும் சமயத்தாலும் பண்பாடு கலை நாகரிகம் வாழ்வியல் நடைமுறைகளாலும் வேறுபாடும் மாறுபாடும் பல்வேறு கூறுபாடும் உடைய இனத்தவர்களை கொண்ட இந்திய துணை கண்டத்தின் ஒரே ஆட்சி மொழி ஆக்கிவிடல் வேண்டுமென்று இந்திய நடுவண் அரசினர் விடாப்பிடியாய் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

ஏழைமை நிரம்பியதும் கல்வி அறிவு பெருகாததும் தொழில் வளம் சிறவாததும், நேற்று நாடுகளுக்குக் கடன் பட்டுக்கிடப்பதும், அண்டை அயல் நாட்டினரால் அடிக்கடி பொருதப்படுவதும், வேலையற்றோர் தொகை நாளும் நாளும் பெருகுவதும் ஆன இத்துணைக்கண்ட அரசின் வருவாயில் பெருவாரியான தொகை இந்தி மொழி வளர்ச்சிக்கு என தொடர்ந்து பாழாக்கப்பட்டு வருகின்றது.

இந்திக்கல்வி, நூல் வெளியீட்டுத் துறைகளும், இந்தியைப் பரப்பும் பொருட்டு அங்கிங்கு எனாதபடி  எங்கெங்கும் நிறுவப்பட்டிருக்கும் அவைகளும் ஏராளமான தொகையை விழுங்கி ஏப்பம் இடுகின்றன.

இந்தியாவில் உள்ளோர் அனைவரும் தத்தம் தாய் மொழியையும் ஆங்கிலத்தையும் பயின்று கல்வி கலையாகிய அறிவுத்துறைகளில் மேம்பட்டும் அண்டை அயல் மாநிலத்தவர் நாட்டினரோடு நட்புறவு கொண்டும் வாழும் முறை எளியதும் சிறந்ததும் ஆக இருக்க அதனை விட்டு, நூற்றுக்கு அறுபது விழுக்காட்டினர் கல்வியறிவு பெறாத, பெற முடியாதவர்களாகவும், 20 விழுக்காட்டினர் எழுத்தறிவு மட்டுமே பெற்றவர்களாகவும் இருக்கும் இத்துணைக் கண்டத்தில் பெரும்பான்மையோருக்கு அயன் மொழியானதும் செயற்கை ஆனதுமான இந்தியை இத்துணைக் கண்ட முழுமைக்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் விழுவதோடு ஒப்பதன்றி வேறென்னை?

மாநிலங்கள் தத்தம் தாய்மொழியில் ஆட்சி செலுத்தவும், அவை ஏனை மாநிலங்களோடும் நடுவண் அரசோடும் தொடர்புகொள்ளல், நடுவண் அரசு மாநிலங்களோடும் அயல்நாடுகளோடும் தொடர்புகொள்ளல் முதலியவற்றுக்கு இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைக் கொள்ளவும் வாய்ப்பு இருக்க, இஃது இத்துணைக் கண்டத்தினர் அனைவருக்கும் சமநிலை அளிக்கும் நன்முறையாகவும் இருக்க, நடுவண் அரசைக் கைப்பற்றும் வாய்ப்புத் தமக்கு மட்டுமே இருக்கின்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நடுவுநிலை பிறழ்ந்து இந்தியாளர் தமது மொழி ஒன்றனையே ஆட்சி மொழியாக்குவேம் என்று மடிதற்று நின்று இந்திய ஒற்றுமையைச் சிதைக்க முனைகின்றனர்.

இந் நாவலத்தேயத்தில் தனித்தனி நாடுகளாய் இருந்தனவற்றை ஒன்றிணைத்து இந்தியா என ஒரு நாடாக உருவாக்கி அரசாட்சி செலுத்திய ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தினாலேயே செம்மையாக ஆட்சி செலுத்த முடிந்தது. இந்தியாவை உருவாக்கிய ஆங்கிலமே அதனை இதுகாறும் இணைத்து காத்துக் கொண்டிருக்கின்றது. அதுவுமே இன்றி ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றாக வேரூன்றி உள்ளது. இந்தியாவெங்கணும் பரவலான வழக்காக நிலை பெற்று உள்ளது. ஆங்கிலத்தையே தாய்மொழியாக கொண்டவர்கள் கணிசமான அளவினர் இந்திய குடிமக்களாக உரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். 

இத்துணையையும் புறக்கணித்து ஆங்கிலம் அயன்மொழி என்றும் இந்தியே இந்தியாவின் உரிமை மொழி என்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அது கட்டாய தேவை என்றும் போலிக்காரணம் காட்டி இந்தியாவில் உள்ள இந்திக்காரர்கள் ஆகிய சிறுபான்மையினர் இந்தியார் அல்லாத பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தி வல்லாட்சி செலுத்த முனைந்திருப்பது மேற்கூறியாங்கு அவர்கள் ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்று ஓவாது கூக்குரலிடும் இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது உறுதி.

இந்தி பேசாதார்மாட்டு இந்தியைத் திணிக்கக் கூடாது எனின், இந்திக்காரர்கள் 'எங்கள் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது' என்கின்றனர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளாக இத்துணைக் கண்டத்தின் ஆட்சி மொழியாக விளங்கி வருவதும் மேற்கூறியாங்கு பல்வேறு இனத்தவரையும் இதுகாறும் இணைத்துக் கொண்டுள்ளதும் ஆன ஆங்கிலத்தை கைவிட்டு அவ்விடத்தில் இந்தியை திணிக்க கூடாது என்பதன் உண்மையை உணராமலோ அல்லது உணர மருத்துவ கூறும் கூற்றே அஃது என்பதை சிறுமகாரும் அறிவர்.

இந்தியாவின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர் யாவராயினும் அவர் தமக்குள் எத்தனை முரண்பாடான கொள்கைகளும் செயன்முறைகளும் இருப்பினும், இவ் இந்திக் கொள்கையில் மட்டும் முற்றும் ஒன்றுபட்ட கருத்தும் செயல்முறையும் உடையவராகவே இருக்கின்றனர். இஃது அன்று முதல் இன்றுகாறும் வாடிக்கையாக வளர்ந்து கொண்டிருக்கின்றது.

முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களைக் கொண்டு பணி அமர்த்தமாக அமைக்கப்பட்ட குழுவினரே இந்தியை இத்துணைக்கண்டத்தின் பொது ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை உருவாக்கினர் என்பதும், அதுவும் இந்திக்குச் சார்பாகவும் எதிர்ப்பாகவும் சமமான ஒப்போலைகள் votes கிடைத்த நிலையில் குடியரசுத் தலைவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திக்குச் சார்பாக அளித்த ஒரே ஓர் ஒப்போலையினாலேயே இந்தி இந்தியாவின் பொது ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆகவே தொடர்ந்த பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் இவ்வாட்சி மொழிக் கோட்பாட்டை மறு ஆய்வு செய்வது மிகவும் இன்றி அமையாததாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஏறத்தாழக் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு முயற்சிகள் பெருந்தொடராக நீண்டு கொண்டிருக்கின்றன. 1938 ஆம் ஆண்டில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழர்கள் கிளர்ந்து எழுந்தனர். நிறைபுல வேந்தர் மறைமலை அடிகளார் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பல்துறைப் பெருமக்களும் அணிவகுத்து நின்றனர். இந்தி ஒருவாறு பின்வாங்கியது. ( 1928 ஆம் ஆண்டு அளவில் இம்முயற்சி கருத்தளவில் பேசப்பட்ட போதே தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.)

அடுத்து 1948 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி பரவலாகத் திணிக்கப்பட்டு வருதலை எதிர்த்துத் தந்தை பெரியார் ஈ வே ராமசாமி அவர்கள் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தித்திணிப்பின் முடுக்கம் சற்றுக் குறைந்தது.

இனி 1962 ஆம் ஆண்டு மீண்டும் இந்திப்படை தமிழ்நாட்டில் நுழைந்தது. தமிழ்நாட்டில் குழப்பமும் கலவரமும் எழுந்தன. அப்பொழுது தலைமை அமைச்சராய் விளங்கிய பண்டிதர் சவகர்லால் அவர்கள் "இந்தி பேசாதவர்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலமும் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்" என்று ஒரு போலி உறுதிமொழி அளித்து ஒருவாறு நிலைமையைச் சரிப்படுத்தினார்.

பண்டிதர் ஜவஹர்லால் அவர்களின் மறைவுக்குப் பின் 1965 ஆம் ஆண்டில் இந்தி இத்துணைக் கண்டத்தின் ஆட்சி மொழியாக மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முனைந்த போது தமிழ்நாடு கொந்தளித்து எழுந்தது. கொடும் போர் நிகழ்ந்தது. 1938 ஆம் ஆண்டு இந்தியைத் திணித்த உயர்திரு சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்களே இந்தித் திணிப்பின் தீமையை உணர்ந்து தம் கருத்தை மாற்றிக்கொண்டு இந்து திணிப்பை எதிர்த்துப் பெருங்குரல் எழுப்பினார். நடுவண் அரசு அமைச்சர்களாக விளங்கிய திருவாளர்கள் சி சுப்பிரமணியம், ஓ வி அளகேசன் ஆகிய இருவரும் இந்தித் திணிப்பால் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கொடுஞ்செயல்களை ப் பொறுக்கமாட்டாது தம் அமைச்சர் பதவிகளினின்றும் விலகினர். தமிழ்நாட்டைப் பின்பற்றி வங்காளம், கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய மாநிலத்தவரும் இந்தித்திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர்.
இந்தி வெள்ளம் ஒருவாறு தணிந்தது.

1967 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களின் தலைமையில் அமைந்த திமுகழக அரசு 1968 இல் தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமும் என்னும் இரு மொழித் திட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி மும்மொழி திட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இத்தொடர் நிகழ்ச்சியில் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புற்றவர் பலர். பதவி பறிக்கப் பெற்று வருவாய் இழந்தும் வாடியவர் பலர். காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பலர். உலக வரலாறு காணாத அளவிற்குத் தாய்மொழி காக்க முனைந்து தம் உடலுக்குத் தாமே தீ மூட்டிக்கொண்டு உயிர் நீத்தவர்களும் பலர். 

இத்துணைக்குப் பின்னும் இந்திய நடுவண் அரசினர் 'இந்தியை நாங்கள் திணிக்கவில்லை திணிக்கவில்லை' என்று கூறிக்கொண்டே தம் நேரடி ஆளுமையின் கீழ் உள்ள துறைகளில் இந்தியை வலிந்து புகுத்தி வருகின்றனர். ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்பது கூட பெயரளவில் இருந்தாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை புறக்கணிக்கப்படுகின்றது. சுற்றறிக்கைகள் கடிதங்கள் எல்லாம் இந்தியில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. பண விடைத்தாள்கள் முதலிய படிவங்கள் எல்லாம் இந்தியில் மட்டுமே அச்சிட்டு பரப்பப்படுகின்றன. இதற்கு எதிர்ப்புக் குரல் எழவே இந்தியிலும் ஆங்கிலத்திலும் மேலும் கீழுமாக அச்சிட்டு பரப்புகின்றனர். 

பெருவாரியான மக்களின் தாய் மொழிகளாக விளங்கும் மற்றை மொழிகள் எல்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்தியோ ஆங்கிலமோ அறியாத பிற மொழியாளர்கள் தம் மனநிலை என்னாம்? இந்தியின் கீழ் ஆங்கிலத்தை ஒட்டி இருப்பது எதிர்ப்பைச் சரிப்படுத்த இப்போதைக்குச் செய்யப்படும் கண் துடைப்பே அன்றி வேறில்லை. நாளடைவில் ஆங்கிலத்தைக் கைவிட்டு இந்தியை மட்டுமே நிலைப்படுத்தும் கரை உள்ளத்துடன் செய்யப்படுவதே என்பது தெளிவு.

அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, நாட்டு உடைமை வைப்பகங்கள் முதலிய பற்பல துறைகளிலும் இந்தியில் தனி ஆளுமை வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியைப் பயின்று உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்னும் நிலை உருவாகியுள்ளது. முன்னமே அலுவல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கூட பகுதி நேர இந்தி வகுப்புகளில் சேர்ந்து இந்தி பயிலுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்தி பயின்றால் மட்டுமே தம் அலுவலை காப்பாற்றிக் கொண்டு தொடர்ந்து நீடிக்கவும் பதவி உயர்வு சம்பள உயர்வுகள் பெறவும் முடியும் என்றும் அச்சுறுத்தவும் ஆசை மூட்டவும் பெறுகின்றனர்.

கடந்த பல காலக் கட்டங்களிலும் இந்தியாளர் இன்னோர் அன்ன  பலப்பல முயற்சிகளை முனைந்து செய்வதும், எதிர்ப்பு மிகுமாயின் சற்றுப்
பின்வாங்கிக் கொள்வதும் தொடர்ந்து வழக்காய் நிகழ்ந்து வருகின்றது. என்றேனும் ஒரு நாள் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தியாளர் பேராசை.

இந்நிலைகள் எல்லாம் பாராளுமன்றத்திலும் செய்தித்தாள்கள் வழியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனினும் நடுவணரசு இதில்
அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. சென்னையில் கடந்த 15 8 1978 அன்று மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று செட்டிநாட்டு அரசர் அரசவயவர் முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் மொழி அறிஞர்கள் கலந்து கொண்டு இந்தித் திணிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போராட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டவர் மட்டுமே இந்தியை எதிர்க்கின்றனர் என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். மேற்கூறியாங்குக் கடந்த 1965 ஆம் ஆண்டுப்போராட்டத்தின் போதே வங்காளம், கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவர்களும் இந்தித் திணிப்பின் தீமையை உணரத் தொடங்கிவிட்டனர். ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர் எத்துணைதான் மூடி மறைப்பினும் மக்கள் உணர்வு வெடித்து வெளிப்படுவது திண்ணம். இனிப் பஞ்சாபு, மராட்டியம் முதலிய மாநிலத்தவர்களும் இந்தியை ஏற்றுக்கொள்வதனால் தாம் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப்படுதலை நடைமுறையில் கண்டு கொண்டு எதிர்காலத்தில் எதிர்க்கவே செய்வர்.

இந்திய நடுவண் அரசினர் மேற்கூறிய நிலைகளைத் தீர விளங்க எண்ணிப் பார்த்து இத்துணைக் கண்டத்தின் எதிர்காலம் ஒற்றுமை என்னும் ஒளிமயமானதாக அமையும் பொருட்டு இந்தித்திணிப்பைக் கைவிடுமாறு வேண்டி அறிவுறுத்துகின்றோம்.
...


Internet archive இல் இருந்து பெறப்பட்ட ஆவணம்