விடுதலை திரைப்படத்தின் அரசியல்
அரசு The State என்பது என்ன? அதன் தன்மை யாது? பொருள் என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவ த்தை அறவே தூக்கி எறிய போராடும் தொழிலாளிவர்க்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பற்றி கொள்ள வேண்டிய அடிப்படை யான உறவு நிலை யாது?
"வன்முறைகளை பயன்படுத்தும், வன்முறைக்கு மக்களை கீழ்ப்படுத்தும் முறையான தனி எந்திரமே அரசு. ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் எந்திரம்தான் அரசு."
மாறாக "அரசு என்பது தெய்வீகமானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது, தெய்வத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒருசக்தி, அதாவது மனிதனுடையது அல்லாத ஒன்றை அவனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றால் கொடுக்கப்பட்டதை அது தன்னோடு கொண்டு வருகிறது; மக்களுக்கு அதனை வழங்குகிறது அல்லது வழங்குவதற்காக வைத்துள்ளது" என்ற போதனையோ சுரண்டும் வர்க்கங்களின், அதாவது நிலப்பிரபுகள், முதலாளிகளின் நலன்களோடு மிக மிக நெருக்கமாக பிணைக்கப் பெற்றுள்ளது. அவர்களின் நலன்களுக்காக மிக நன்றாக சேவை செய்கின்றது.
... ....
அரசு என்பது எல்லாக் காலங்களிலும் இருந்தது இல்லை. அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே எவ்வெப்போது சமுதாயத்தில் வர்க்கப்பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகின்றார்களோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசும் தோன்றுகிறது.
... ...
ஆதியில் இருந்த சமூக அமைப்பு தந்தைவழிக்குடும்ப அமைப்பு. அதாவது குலம், தலைமுறை clan ஆகியவற்றுக்கு இணங்கி மக்கள் கூடிவாழும் முறை. இது ஆதிகாலக்கம்யூனிசத்தை ஓரளவு ஒத்திருக்கும் காலம். அதாவது அரசு என்ற ஒரு எந்திரம், அடக்குமுறை எந்திரம் இல்லாது இருந்த காலம். சரியாக சொல்வது எனில் ஒடுக்குபவனும் இல்லை ஒடுக்கப்படுவோனும் இல்லை , வர்க்கப்பிரிவினை இல்லாத சமூகம். Original patriarchal, primitive society.
இதன் பின்னர் தோன்றிய ஆண்டான் அடிமை சமூகமே முதல் வர்க்கப்பிரிவினை தோன்றிய சமூகம். Slave owners and slaves.
மூன்றாவதாக நிலப்பிரபுத்துவ சமூகம். சுரண்டும் நிலப்பிரபுக்கள், சுரண்டப்படும் பண்ணையடிமைகள். Feudalistic society. நடைமுறையில் இவ்வடிவம் வேறு எல்லா நாடுகளையும் விடவும் ருஷ்யாவில் நீண்டகாலமாகவும் மிகவும் கொடூரமான வடிவங்களுடனும் நீடித்தது என்று லெனின் குறிப்பிட்டார்.
பண்ணையடிமை, அதாவது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வாணிகம் வளர்ச்சியுற்று உலகச்சந்தை தோன்றி பணப்புழக்கம் வளர்ச்சியுறும்போது ஒரு புதிய வர்க்கம் தோன்றியது, அதுவே இன்று நாம் காணும் நான்காவதான முதலாளித்துவ சமுதாயம், மூலதனத்தின் ஆதிக்கம் கோலோச்சும், பாட்டாளிகள் என்ற எதிர்த்தரப்பின் உழைப்பில் தன் மூலதனத்தை பெருக்கி கொண்டே செல்லும் முதலாளி வர்க்கம் தோன்றிய சமூக அமைப்பு.
... ...
சமுதாயம் வர்க்கங்களாக பிரிவதற்கு முன் அரசு என்ற நிறுவனம் இருந்தது இல்லை.
எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாக பிரிகின்றதோ, சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் என்ற இரு பிரிவுகளாக பிரிகின்றதோ அங்கு அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் தனி எந்திரமாக தோன்றியது என்பதை வரலாறு சொல்கிறது. வர்க்கப்பிரிவினை உண்டாகி உறுதியாக வேரூன்றிவிட்டபோது, வர்க்கச்சமுதாயம் தோன்றிவிட்டபோது, அரசு என்பதும் கூடவே தோன்றி, உறுதியாகவும் வேரூன்றிவிட்டது.
அரசு என்பது மனித சமுதாயத்திற்கு முழுமையாக புறத்தே நிற்கும் ஆளுவதற்கான எந்திரம். ஆளுவதை மட்டுமே தொழிலாக கொண்ட ஒரு தனிப்பிரிவினர் தோன்றும்போது, பிறருடைய சித்தத்தை கட்டாயப்படுத்துவதற்கும் கீழ்ப்படுத்துவதற்கும், அவர்களை ஆளும்பொருட்டு அரசு என்னும் வடிவம் தோன்றுகிறது. அந்த தனி எந்திரத்தின் அங்கங்கள்தான் சிறைச்சாலை, ராணுவம், பிற ஆயுதப்படைகள், இவற்றின் மென்மையான வடிவங்கள் ஆன சிவில் நிர்வாகம் ஆகியன. அந்த எந்திரத்தை எதிர்த்து எப்போதெல்லாம் வெகுமக்கள் எதிர்குரல் எழுப்புகின்றார்களோ அல்லது கிளர்ச்சியில் இறங்குவார்களோ அல்லது கிளர்ச்சியில் இறங்க முற்படுகின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களை அடக்கி ஒடுக்க ஏவப்படும் அடக்குமுறை எந்திரங்கள்தான் சிறைச்சாலை, இராணுவம், தனிப்பட்ட படைப்பிரிவுகள் அதாவது போலீஸ், துணை ராணுவம், அதன் 'மென்மையான' வடிவங்களோடு இயங்கும் சிவில் நிர்வாகம், சட்ட நீதி அமைப்புகள் ஆகியவை, இவை அனைத்துமே அரசின் வடிவங்கள்தான், அங்கங்கள்தான்.
அரசு என்ற அந்த எந்திரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் உள்ளது. ஆதிகாலத்து குண்டாந்தடியாக, ஆண்டான் அடிமை சமூகத்தின் சற்று மேம்பட்ட ஆயுத வகைகளாக, மத்தியக்காலத்தின் துப்பாக்கி போன்ற சுடுகருவிகளாக, விஞ்ஞான தொழிநுட்பம் வெகுவாக முன்னேறிவிட்ட இன்றைய நவீன காலத்தின் புதுவகை ஆயுதங்களாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.
சுருக்கமாக, சொத்து ஏதும் அற்ற மக்கள்திரளின் தாக்குதலில் இருந்து சொத்துடைமையோரின் சொத்துக்களை பாதுகாப்பதே அரசு என்ற நிறுவனத்தின் ஒற்றை நோக்கம். ஆனால் சொத்து இருப்பவனும் உழைப்புசக்தியை தவிர வேறு எந்த சொத்தும் இல்லாதவனும் சட்டத்தின்படி சரிநிகர் சமானம், எல்லோரும் சமம் என்று போதிக்கப்படும், இந்த போலி கட்டமைப்பை உண்மை என்று நம்ப வைப்பதற்கு ஆன அனைத்தும் மக்கள் மத்தியில் செய்யப்படும், அவை நலத்திட்டங்கள் என்று சொல்லப்படும், அந்த அரசு welfare State என்றும் அழைக்கப்படும்.
இந்த அமைப்புக்குள் அல்லது நம்பிக்கைக்குள் செயல்படும் அல்லது இந்த அமைப்பை ஒத்துக்கொண்டு அதன் கட்டமைப்புக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாத வகையில் செயல்படும் 'அரசியல்' இயக்கங்கள், 'அரசியல்' கட்சிகளுக்கு அரசு என்ற நிறுவனம் முழு அனுமதி அளிக்கும், அத்தகைய இயக்கங்களின் 'போராட்ட' வடிவங்களுக்கும் அனுமதி அளிக்கும். குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் அத்தகைய 'போராட்டங்கள்' 'ஆர்ப்பாட்டங்கள்'' அரசின் அனுமதி பெற்று நடத்தப்படும் 'ஜனநாயக' வழி போராட்டங்கள் ஆக இருக்கும். ஏனெனில் இந்த அரசின் கீழ் இயங்கும் 'அரசியல் கட்சிகள்', இந்த அரசால் வரைந்து நிலையாக்கப்பட்ட அரசியல் சாசனத்துக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அதற்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படுத்த முனைவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கட்சிகள். எனவே அரசு என்ற நிறுவனத்தின் பகுதியாகவோ அதன் தொங்கு தசையாகவோ ஆகிவிட்ட இயக்கங்கள் அல்லது கட்சிகள்.
சொத்து ஏதும் அற்ற மக்கள்திரளின் தாக்குதலில் இருந்து சொத்துடைமையோரின் சொத்துக்களை பாதுகாப்பதே அரசு என்ற நிறுவனத்தின் ஒற்றை நோக்கம். தனது நோக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு சிறு அசைவும் வெகுமக்கள் திரளில் இருந்து பிறக்கும் எனில் அல்லது அந்த மக்கள் திறளை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு இயக்கத்தின் செயற்பாடுகளால் அந்த நோக்கத்திற்கு ஊறு விளையும்
எனில் மேலே குறிப்பிட்ட சிவில் நிர்வாகம், ஆயுதப்படைகள் ஆகியவை களத்தில் இறக்கப்படும்.
- மு இக்பால் அகமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக