உணவகம் ஒன்றில் கேட்க நேர்ந்த உரையாடல் இது.
மாட்டுக்கறி தவாக்கறி அந்த கடையில் படு சூப்பர். மாலையில் பரோட்டா, இடியாப்பம், இதர புலால் ஐட்டங்கள் படு ஓட்டம். சில நாட்கள் முன் அதாவது மே 5 வணிகர் தினம் அன்று மாலை நேரம் சென்றிருந்தேன், பல ஹோட்டல்கள் மூடி இருந்ததால் அன்று கூட்டம் அதிகமாக இருந்தது.
கல்லாப்பெட்டியில் இருந்த உரிமையாளர் ஆன இளம்பெண்ணுக்கும் மாட்டுக்கறி தவாக்கறி வாங்க வந்த ஒரு இளைஞனுக்கும் நடந்த உரையாடல்:
என்னங்கண்ணா, பார்த்து ரொம்ப நாளாச்சு?
நான் எங்கே இங்கே இருக்கேன், குஜராத்லய்ல இருக்கேன், வேலை அங்கே, வீடும் அங்கேதான்
ஓ
வெக்கேசனுக்கு வந்தேன்... அப்பா அங்கே வந்தப்போ ரொம்ப கஷ்டப்பட்டாரு
ஏண்ணா?
ஆமா, அங்கே பீப்லாம் நெனெச்சே பாக்க முடியாது. சுத்தமா கெடையாது. அப்பா இஷ்டமா சாப்டுவாரு, பாவம் இருந்த ஆறு மாசமும் அவஸ்தைதான்
ஓ! மத்தப்படி அங்கே எல்லாம் ஓகேயா அண்ணா?
அய்யோ, படு சூப்பர்! ஒரு கொறைச்சலும் இல்ல (ஆகப்பெரிய பெருமிதமும் பெருமையும் அவன் முகத்திலும் உடல் அசைவிலும் இப்போது)
... ...
கல்லாப்பெட்டியில் இருந்த உரிமையாளர் ஆன இளம்பெண் இஸ்லாமியர். அந்த இளைஞன் இஸ்லாமியர் அல்லாத பெரும்பான்மை மதத்தவர்.
எல்லாம் சரியாக இருக்கிறதா நண்பா என்று நான் கேட்டு விட முடியும்தான், ஆமா சரியாகத்தான் இருக்கு, என்ன இப்போ என்றுதான் அவனும் சொல்லியிருப்பான். ஆனால் அந்த இளம்பெண் தன் எளிய கேள்வியால் அவனை வீழ்த்தி நகையாடி விட்டாள் என்பது அவனுக்கே தெரியவில்லை! "மத்தப்படி அங்கே எல்லாம் ஓகேயா அண்ணா?"
3000 மக்களின் குருதி அந்த மாநிலத்தின் தெருக்களில் அன்றைக்கு ஓடியபோது வேடிக்கை பார்த்தவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? அல்லது இனிமேல் ஓடினால் வேடிக்கை பார்க்கப்போவது யாராக இருப்பார்கள்?
நமக்கு தேவை ஒரு பிளேட் பீப் தவாக்கறி, அவ்வளவே, எல்லாம் சுகமே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக