செவ்வாய், மார்ச் 28, 2023

புரட்சியாளன் பகத்சிங்கை நினைவுகூர்ந்து சில கடிதங்கள்

புரட்சியாளன் பகத்சிங்கை நினைவுகூர்ந்து சில கடிதங்கள்

(1)

3 மார்ச் 1931

என் அன்பு குல்தார்,
கண்களில் கண்ணீர் வழிய இன்று நான் உன்னை பார்க்கும்போது வருத்தமடைந்தேன். இன்று உன் பேச்சில் ஆழமான வலி இருந்தது. நீ அழுது என்னால் பார்க்க முடியவில்லை.
என் செல்லமே, உன் படிப்பை தொடர்வதில் கவனம் செலுத்து, உன் உடல் நலத்தில் கவனமாக இரு.
மனதில் உறுதி வேண்டும். வேறு என்ன... சொல்ல? (வேறு என்ன எழுத முடியும்?)... என்னால் என்ன கவிதை பாடிவிட முடியும்? கேள்:
அடக்குமுறையின் புதிய புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் எப்போதும் முனைப்பாக இருக்கின்றார்கள்

அடக்குமுறையின் எல்லைதான் என்ன என்று தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கின்றோம்

நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்?
இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
என் சக பயணிகளே, நான் இங்கே ஒரு தற்காலிக விருந்தாளி, அவ்வளவுதான்,
நான் ஒரு விளக்கு, விடியும்வரை எரிவேன், அணைக்கப்படும் நேரத்தை எதிர்பார்த்து இருப்பேன்.
வீசும் தென்றல் என் சிந்தனையின் சாரத்தை எங்கெங்கும் எடுத்துச்செல்லும்
இந்த உடலோ கையளவு மண் அன்றி வேறில்லை, எங்கு வாழ்ந்தாலும் எங்கே மடிந்தாலும்.
சரி, செல்கின்றேன்.
நாட்டு மக்களே, மகிழ்ச்சியுடன் இருங்கள், பயணத்தை தொடங்கி விட்டேன்.
துணிச்சலுடன் வாழுங்கள்.
வணக்கம்.
உன் சகோதரன்,
பகத் சிங்.
....
1931 மார்ச் 3 அன்று சிறையில் அவர் குடும்பத்தினர் கடைசியாக அவரை சந்தித்தார்கள். இளைய சகோதரன் குல்தார் கண்ணில் நீர் வழிய நின்ற காட்சியை பகத் சிங்கால் தாங்க முடியவில்லை. குல்தாருக்கு பகத் எழுதிய கடிதமே இது.
.... ......

(2)
(ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் எனது)

லாஹூர் மத்திய சிறைச்சாலை
24.7.30
என் அன்புக்குரிய ஜெய்தேவ், 1
த்வாரகதாஸ் நூலகத்தில் இருந்து கீழே கண்ட புத்தகங்களை பெற்று குல்விர் Kulvir மூலம் வரும் ஞாயிறு அன்று அனுப்பி வைப்பாயாக:
Militarism (Karl Liebknecht)
Soviets at Work
Left-Wing Communism
Fields, Factories and Workshops
Land Revolution in Russia
Why Men Fight (B. Russel)
Collapse of the Second International
Mutual Aid (Prince Kropotkin)
Civil War in France (Marx)
Spy (Upton Sinclair)
பஞ்சாப் பொது நூலகத்தில் இருந்து Historical Materialism (Bukharin) என்ற நூலையும் பெற்று எனக்கு அனுப்பு. போர்ஸ்ட்டால் சிறைக்கு Borstal Jail ஏதாவது புத்தகங்கள் அனுப்பப்பட்டனவா என்பதை நூலகரிடம் கேட்டு உறுதி செய். அங்கே புத்தகங்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. அவர்கள் தமக்கு தேவையான புத்தகங்களை பட்டியலிட்டு சுக்தேவின் சகோதரர் ஜெய்தேவ் மூலம் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். ஆனால் இன்றுவரை அவர்களுக்கு ஒரு புத்தகமும் கிடைக்கவில்லை. அப்படி அவர்களுக்கு கிடைத்து இருந்தால், புத்தகங்களின் பட்டியல் எதுவும் இல்லாமல் இருந்தால், லாலா பிரோஸ் சந்த்திடம் Lala Firoz Chand சொல்லி அவருக்கு விருப்ப uiமான புத்தகங்கள் சிலவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள். வரும் ஞாயிறு நான் அங்கே செல்வேன், அதற்கு முன்பாக புத்தகங்கள் அவர்களுக்கு சென்று சேர வேண்டும். இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டும். நினைவில் கொள்க.
Darling இன் Punjab Peasants in Prosperity and Debt என்ற புத்தகத்தையும் அதே போன்ற 2 அல்லது 3 புத்தகங்களையும் டாக்டர் ஆலம் அவர்களுக்காக அனுப்பி வை. இப்படி ஒரு சிரமத்தை கொடுப்பதற்கு நீ என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன். இனிமேல் இப்படியான தொந்தரவுகள் தர மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பை தெரிவிக்கவும், லஜ்ஜாவதிக்கு என் மரியாதையை தெரிவிக்கவும். தத்தின் Dutt சகோதரி வந்தால் என்னை வந்து பார்க்க மறக்க மாட்டார் என்பதை நான் அறிவேன்.
அன்புடன்
பகத் சிங்
...
1 ஜெய்தேவ் குப்தா பகத்சிங்கின் நெருங்கிய நண்பர், பள்ளித்தோழன்
... ...

(3)

மார்ச் 22, 1931
தோழர்களே,
வாழ வேண்டும் என்ற வேட்கை இயற்கையானது. எனக்கும் அந்த வேட்கை உண்டு. நான் அதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒரு கைதியாகவோ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டோ நான் வாழ விரும்பவில்லை. எனது பெயர் இந்தியப்புரட்சியின் ஓர் அடையாளமாக மாறிவிட்டது. புரட்சிகர கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும்தான் என்னை அந்த உயரத்துக்கு கொண்டு சென்றன, நான் உயிரோடு இருந்தால் அந்த உயரத்தை தாண்டி எப்போதும் போக முடியாது.
எனது பலஹீனங்கள் எவை என்பதை இப்போது யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் தூக்கில் இருந்து நான் தப்பிப்பேன் எனில் எனது அந்த பலஹீனங்கள் வெளிச்சத்துக்கு வரும், புரட்சியின் அடையாளம் என்ற பெருமை சிதைக்கப்படும், ஒருவேளை ஒட்டுமொத்தமாக அது கரைந்துபோகவும் கூடும். மறுபுறம் நான் புன்னகையுடன் தூக்குக்கயிற்றை ஏற்பேன் எனில் இந்திய தாய்மார்கள் உற்சாகம் பெறுவார்கள், தம் குழந்தைகள் பகத்சிங்காக மாற வேண்டும் என உறுதி பூணுவார்கள். ஆக நம் தேச விடுதலைக்கான போராட்டத்தில் தம் உயிரை தியாகம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும். அதன் பின் புரட்சி எனும் பேரலையை எதிர்கொள்வது ஏகாதிபத்தியத்துக்கு சவாலாக மாறும், அவர்களின் அனைத்து சக்தியையும் சாத்தான் போன்ற முயற்சிகளையும் திரட்டி எதிர்த்தாலும் புரட்சியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.
ஆம், ஒரே ஒரு விசயம் நெருடலாக உள்ளது. மனித சமூகத்திற்கும் எனது நாட்டிற்கும் ஏதாவது செய்து விட வேண்டும் என்ற பேரவா என் இதயத்தில் நிரம்பியுள்ளது. ஆனால் அந்த இலட்சியங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. வாழ்வேன் ஆயின் ஒருவேளை அவற்றை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்று ஒருவேளை நான் விரும்புவேன் எனில் அது இதன் பொருட்டாகத்தான் இருக்கும்.
இப்போதெல்லாம் நான் என்னை நினைத்துப் பெருமைப்படுகின்றேன், இறுதிச்சோதனைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன். அந்த நாள் விரைவில் வரட்டும்.
உங்கள் தோழமைமிகு
பகத் சிங்
...
இது பகத்சிங்கின் கடைசி கடிதம், தூக்கில் இடப்பட்ட நாளுக்கு முன் அவர் எழுதியது. சிவ வர்மா கூறுகிறார்: வார்டு எண் 14இல் இருந்த (மரண தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த செல் அருகில்) இரண்டாவது லாஹூர் சதி வழக்கு கைதிகள் பகத்சிங்குக்கு ஒரு குறிப்பு எழுதி 'வாழ்வதற்கு விருப்பம் உள்ளதா?' என்று கேட்கின்றனர். பகத்சிங் எழுதிய பதிலே இது. நாள் மார்ச் 22, 1931. இக்கடிதத்தை உருது மொழியில் பகத் எழுதினார்.
... ...

(4)

பெறுநர்
பஞ்சாப் கவர்னர்
ஐயா (Sir),
கீழே கண்ட கோரிக்கையை தகுந்த மரியாதையுடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
இந்திய பிரிட்டிஷ் அரசின் தலைவரான வைசிராய் உத்தரவின்பேரில் சிறப்பு எல்சிசி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் எல்சிசி டிரிப்யூனல் 1930 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று எங்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எங்கள் மீது சாற்றப்பட்ட முதன்மையான குற்றச்சாட்டு என்னவெனில் இங்கிலாந்து மன்னர் மரியாதைக்குரிய ஜார்ஜ் அவர்களுக்கு எதிராக போரை நடத்தினோம் என்பதே.
நீதிமன்றத்தின் மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் இரண்டு விசயங்களை ஒத்துக்கொள்வதாக உள்ளன:
பிரிட்டிஷ் தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே ஒரு போர் நடந்துகொண்டு இருக்கின்றது என்பது முதலாவது. நாங்கள் அந்தப் போரில் நேரடியாக ஈடுபட்டோம், எனவே நாங்கள் போர்க் கைதிகள் என்ற தகுதி படைத்தவர்கள் ஆகின்றோம், இது இரண்டாவது. இரண்டாவது சற்றே மிகையாக தெரிந்தாலும் அதனுள் பொதிந்துள்ள உள்நோக்கம் எதுவாயினும் நாங்கள் அதை மறுக்கப்போவதில்லை.
முதலாவது விசயத்தை பேச வேண்டும் எனில் நாங்கள் கட்டாயமாக சிலவற்றை விளக்கியாக வேண்டும். அந்த சொற்றொடரில் சொல்லப்பட்டதை போல் அப்படி ஒரு போர் எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவு. இருப்பினும் அந்த தீர்மானத்தில் அடங்கியுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள எங்களை நீங்கள் அனுமதித்தே ஆக வேண்டும், அது எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படியே. ஆனால் அதனை மிகச்சரியாக புரிந்துகொள்ள வேண்டும் எனில் அதனை நாங்கள் இன்னும் விரிவாக விளக்க வேண்டும். ஆம் போர் நடக்கிறது, போர் இன்னும் நடக்கும், இந்திய பாட்டாளிமக்களும் அவர்களது இயற்கை மூலாதாரங்களும் ஒரு சில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்படுவது நீடிக்கும் வரை இந்தப்போர் நீடிக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கின்றோம். இந்த ஒட்டுண்ணிகள் முழுக்கவும் பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம், அல்லது பிரிட்டிஷ் இந்திய முதலாளிகளின் கூட்டணியாக இருக்கலாம், அல்லது முழுக்கவும் இந்திய முதலாளிகளாக இருக்கலாம். அவர்கள் தமது இழிவான சுரண்டலை கூட்டணியான அல்லது முழுக்கவும் இந்திய அரசாங்க எந்திரத்தின் வழியே நடத்திக்கொண்டு இருக்கலாம். எப்படி ஆயினும் அவற்றுள் வேறுபாடு எதுவும் இல்லை. இந்திய சமூகத்தின் மேல்தட்டு வர்க்க தலைவர்களுக்கு சில சில்லறை சலுகைகள், சமரசங்களை கொடுப்பதன் மூலம் உங்கள் அரசு அவர்களை தம் பக்கம் வென்றிருக்கலாம், அதன் மூலம் விடுதலை இயக்கங்களின் நம்பிக்கை மீது ஒரு மனச்சோர்வு ரீதியான ஒரு தாக்குதலை ஏற்படுத்தியும் இருக்கலாம். இந்திய இயக்கத்தின் தலைமை, புரட்சிகர கட்சி இந்தப்போரின் அலையில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம். போகட்டும்.
எங்கள் மீது இரக்கம் கொண்டு எம்மீது கவலைகொண்டுள்ள தலைவர்கள் மீது நாங்கள் பெரிதும் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் அந்த தலைவர்கள் என்ன செய்தார்கள்? அந்த வீடற்ற, நண்பர்கள் அற்ற, வாழ வக்கற்ற பெண் உழைப்பாளிகள், புரட்சிகர கட்சியை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் உழைப்பாளிகளையும், தம்மையும் தம் நேசத்துக்குரிய கணவர்கள், சகோதரர்கள், இன்னும் தமது உயிருக்கு நிகரான அனைத்து சொந்த பந்தங்களையும், ஏன், தங்களையும் இந்தப் போரில் தத்துக்கொடுத்து தியாகம் செய்த வீர மங்கைகளையும் தமது அஹிம்சாவாத கற்பனா உலகின் (இந்த உலகம் ஏற்கனவே காலாவதியான உலகம் என்பது ஒருபுறம்) எதிரிகள் என்று குற்றம்சாட்டிய அந்த தலைவர்களை நாங்கள் எப்படி மறப்போம்? இந்த போராளிகளை உங்கள் அரசாங்கம் சட்டவிரோதிகள் என்று அறிவித்தது. ஆனால் இந்த தலைவர்களோ இவர்களை ஒட்டுமொத்தமாக மறந்தார்கள், தாங்கள் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளில் அவர்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட மறந்தார்கள்.
சிறு கரும்புள்ளியும் இல்லாத இவர்களின் மாண்பை, இவர்களது கட்சியின் மாண்பை குலைக்கும் வண்ணம் உங்கள் ஏஜெண்டுகள் மிக கீழ்த்தரமான ஆதாரங்கள் அற்ற கட்டுக்கதைகளை பரப்பிவிடலாம், போகட்டும். இந்தப்போர் தொடர்ந்து நடக்கும் என்பதை சொல்லிக்கொள்கின்றோம்.
இந்தப்போர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கலாம். வெட்டவெளிச்சமான, மறைவான, முழுவதும் கிளர்ச்சி வடிவிலான, வாழ்வா சாவா என்ற இக்கட்டான போராக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது ரத்தம் சிந்தக்கூடிய போரா அல்லது அமைதி வழியிலான போரா, எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது, நாங்கள் அல்ல, நீங்கள்தான். உங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே நடக்கட்டும். ஆனால் அந்தப்போர் இடைவிடாது நடக்கும், சில்லரைத்தனமான.... (1), அர்த்தமற்ற நியாய வாதங்கள் போன்றவற்றை தள்ளிவைப்போம். அந்தப்போர் புதிய சக்தியுடன், மகத்தான , வளைந்து போகாத உறுதியுடன் தொடர்ந்து நடக்கும், சோசலிச குடியரசு நிறுவப்படும் வரை, இன்றைய சமூக கட்டமைப்பு முற்றாக துடைக்கப்பட்டு புதிய சமூக கட்டமைப்பு நிறுவப்படும் வரை, சுரண்டலின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட்டு நியாயமான வளமான நிரந்தர அமைதி நிலவும் ஒரு சமூக அமைப்புக்குள் மனித சமூகம் நுழையும் வரை இந்தப்போர் நடக்கும். வெகு விரைவிலேயே இறுதிப்போர் நடக்கும், இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்படும்.
முதலாளித்துவ, ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப்போர் எங்களால் தொடங்கப்பட்டதும் அல்ல, எங்கள் வாழ்நாளில் முடியப்போவதும் இல்லை. வரலாற்றுப் போக்கின் தவிர்க்க முடியாத தொடர் விளைவுகளும் அன்றைய சூழலுமே இந்தபோரை தீர்மானிக்கின்றன. எங்களது சிறிய தியாகங்கள் யாவும் இந்தப்போர் என்னும் சங்கிலித்தொடரின் ஒரு கண்ணி என்றே நாங்கள் கருதுகின்றோம். திரு.தாஸ் அவர்களின்ஈடு இணையற்ற தியாகம், தோழர் பகவதி சரண் அவர்களின்
வருந்தத்தக்க ஆனால் மதிப்பற்ற தியாகம், எங்கள் அன்புக்குரிய போராளி ஆசாத்தின் வீர மரணம் ஆகிய அனைத்தும் இந்தக் கண்ணியை மிகப்பொருத்தமாக அழகு படுத்தியுள்ளன.
எங்கள் மரணம் பற்றி நாங்கள் சொல்கின்றோம், அனுமதியுங்கள். எங்களை கொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள், கண்டிப்பாக செய்வீர்கள். உங்களிடம் அதிகாரம் உள்ளது, இந்த உலகின் மிகப்பெரிய நியாயம் என்னவென்றால் அதிகாரம் என்பதுதான். "வலிமை எதுவோ அதுவே நியாயமானது" என்ற சொலவடைதான் உங்களின் வழிகாட்டி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரணை எப்படி நடந்தது என்பதே அதற்கு போதுமான சான்றாகும்.
நாங்கள் குறிப்பாக சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி நாங்கள் ஒரு போரை நடத்தினோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள். எனவே உங்கள் தீர்ப்பின்படியே நாங்கள் நடத்தப்பட வேண்டும், அதாவது எங்களை தூக்கில் இட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும். உங்கள் நீதிமன்றம் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்பதை இப்போது நீங்கள்தான் உறுதிசெய்ய வேண்டும்.
உங்கள் ராணுவத்தின் படைப்பிரிவை அனுப்பி எங்கள் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு இடுவீர்கள் என்று வேண்டுகின்றோம், அவ்வாறே நம்புகின்றோம்.
உங்கள்,
பகத்சிங்
ராஜ்குரு
சுக்தேவ்
... ...
(1) தெளிவற்ற எழுத்து

Bhagat Singh, The Jail Notebook and Other Writings,
Chaman Lal,
LeftWord

(ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் எனது)

கருத்துகள் இல்லை: