திருக்குறளும் சித்தர்கள் பாடல்களும் இல்லாமல் அவரது உரையாடலோ மேடைப்பேச்சோ நிறைவு பெற்றதாக எனக்கு நினைவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து எங்கிருந்தோ ஒரு பாடல் வரியை திடீரென மேற்கோள் காட்டுவார், நமக்கு வியப்பாக இருக்கும். 'மனுசன் இதையெல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருக்கின்றாரோ!'
ஒரு யூடியூப் சானல் நேர்காணல். நாடெங்கும் பேசப்பட்ட அவரது 2020 நவம்பர் 20 ரூபாய் ஆட்டோ பயணத்தின் பின் நடந்தது. 'சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட பார்ச்சுன், இன்னோவா என்று கார்களில் பறப்பதும் பல கோடி சொத்துக்கள் சேர்ப்பதும் நடைமுறை ஆன காலத்தில், இரண்டு முறை எம் எல் ஏ ஆக இருந்த நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றீர்கள், பேருந்தில் பயணம் செய்கின்றீர்கள்.... என்ற கேள்விக்கு நன்மாறன் இப்படி பதில் சொல்கின்றார்:
சித்தர்கள் எதன் மீதும் பற்றற்றவர்கள், உண்பது நாழி உடுப்பது முழம் என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள்.... எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் எத்தனை வீடு வாசல்கள் வைத்திருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 'போன' ஒரு மனிதனையாவது காட்ட முடியுமா? இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது, இதன் கோளாறுதான் அரசியல் வாழ்க்கையில் சம்பாதிப்பதும் 'செலவு செய்தால்தான் அரசியலுக்கு வர முடியும்'ங்கற கருத்தும்....
இவ்வாறு சொன்னவர், சித்தர்களின் பொருள் சார்ந்த பற்றற்ற வாழ்க்கை பற்றி குறிப்பிட்டு, சித்தர்கள் உண்பது நாழி.... என்று கூட சொல்ல மாட்டார்கள் என்று முடிக்கின்றார். அப்பாடல் இது:
உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்!
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான்!
- ஒளவையாரின் நல்வழி
பொருள்: மனிதன் உண்பது ஒரு நாழி அளவே சோறுதான், உடுப்பதோ நான்கு முழத்துணி. ஆனால், மனதில் நிழலாகும் எண்ணங்கள் மட்டும் எண்பது கோடியாகப் பெருகி மனத்துன்பத்தைத் தருகின்றது. அகக்கண் குருடாக இருக்கின்ற மாந்தர்களின் குடிவாழ்க்கை ஆனது, தடம் மாறி கருத்தின்றி பயணித்தால், உள்ளதே போதும் என்ற மன அமைதி பெறாவிடில், எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பமே அளிக்கும்!
... .... ....
கேட்பதற்கு இது ஏதோ ஆன்மிகவாதம் போல் முதல் பார்வையில் தோன்றக்கூடும். உண்மை அதுவல்ல.
உண்மையில் சித்தர்கள் பொருள்முதல்வாதிகள். ஆனால் தமக்கெனவும் எதிர்காலத்துக்கும் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்ளாத பெருந்தகைகள். இன்றிருப்பதை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு நாளைக் கழிப்பவர்கள். இந்த மனநிலை, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சொத்தும் பொருளும் சேர்க்காத மனநிலை, தன்னலம் அற்ற கம்யூனிஸ்ட் மனநிலையன்றி வேறில்லை. அதுவே மறைந்த நன்மாறன் தன் காலம் நெடுகிலும், ஒரு சிறு பிரயத்தனமும் தனிப்பட்ட முயற்சியும் இன்றி, சாதாரணமாக கைக்கொண்டு இருந்த மனநிலையும் வாழ்க்கை நடைமுறையும்.
கேரளாவின் உயர்சாதி ஆன நம்பூதிரி வகுப்பில், பெரும் செல்வமிகு குடும்பத்தில் பிறந்தவர். பின்னர் அம்மாநில முதலமைச்சராக இருந்தவர். தனக்கு கிடைத்த குடும்ப சொத்தின் பங்கு அனைத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் ஈ எம் எஸ் நம்பூதிரிப்பாட். அவரை நேர்காணல் கண்டு சுபமங்களாவில் எழுதினார் கோமல் சுவாமிநாதன். ஈ எம் எஸ் தேநீர் அருந்திய கோப்பையில் கீறல் விழுந்து இருந்தது என்று பதிவு செய்தார், வாசித்தது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது.
அவர் தந்தை ராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியவர், செல்வந்தர். இவர் வழக்கறிஞர். மதுரையில் செல்வந்தர்கள் விளையாடும் 'கிளப்'பில் டென்னிஸ் விளையாடுவார். கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது. அனைத்தையும் உதறிவிட்டு திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் படுத்தும் உண்டும் உறங்கியும் தங்கியும் அவர்களுக்கான உரிமைபோரில் முன்னால் நின்று களம் கண்டார். அநேகமாக அவர்கள் அனைவரும் தலித் சமூக மக்கள்தான். மாட்டுக்கறி உண்டார். அவர் அமிர்தலிங்கம் ஐயரின் மகனான பாலசுப்ரமணியம். கூடவே எஸ் ஏ தங்கராஜன் என்ற அதிசயப்பிறவி. இவர் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன், 'ஊறல் குழியில் இருந்து....'. எங்கேயாவது இரண்டு நாள் சேர்ந்தால்போல் நிம்மதியாக தூங்கியிருக்கின்றாரா என்று நூல் முழுக்க தேடினேன், இல்லவே இல்லை. போலீஸ் ஸ்டேசன், ஜெயில், தடியடி, கற்பனைக்கும் எட்டாத சித்ரவதைகள். திண்டுக்கல் பேகம்பூர் இவர்களால் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
கர்நாடகாவில் இருந்து வந்த பிராமணர் அவர். சிவப்பு நிற மேனியர். கட்சியின் கட்டளை, தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தை கட்டுகின்றார். தமிழ் தெரியாது. அடித்தால் திருப்பி அடி என்று கற்றுக் கொடுக்கின்றார். மாமிசம் உண்டார், அந்த மக்களுடன் தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டார் பி ஸ்ரீனிவாச ராவ்.
கேரளாவில் பிறந்த சிண்டன் கட்சியின் கட்டளையை ஏற்று தமிழ்நாடு வருகின்றார். பாரதிதாசன் அவருக்கு சிந்தன் என்று பெயர் சூட்டுகின்றார். சமூக விரோதிகளின் கத்திகுத்துக்கு ஆளாகின்றார், 30க்கும் மேற்பட்ட கத்திகுத்துக்கள். அதிசயம், உயிர் பிழைக்கின்றார். ஹோட்டல் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள் என அடிமட்ட தொழிலாளர்களுடன் வாழ்க்கையை பிணைத்துக் கொள்கின்றார்.
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பார் அட் லா பட்டம் பெற்றவர், சி பா ஆதித்தனார் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர், தன் வாழ்நாளின் இறுதியில் சென்னை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கே டி கே தங்கமணி. நான் முன்னுதாரணமாக இல்லை எனில் யார் இருப்பார் என்று மதுரை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த பி மோகன். வேட்டியை துவைத்து காயப்போட்டுள்ளேன், பொறுங்கள், கட்டிக்கொண்டு வருகின்றேன் என்று வாழ்ந்த ப ஜீவானந்தம். இப்போதும் வாழும் தியாக தீபங்கள் ஆன என் சங்கரய்யாவும் ஆர் நல்லக்கண்ணுவும்.
இவர்கள் சொந்த வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறு ஆக வாழ்ந்தார்கள் இல்லை. வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை, வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு வாழ்க்கை வாழவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை தம் சொந்த வாழ்விலும் மிக சாதாரணமாக வெற்றிகரமாக கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர்கள், காட்டுகின்றார்கள்.
பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இவர்கள் விட்டுச்செல்லும் செய்தியும் வாழ்க்கை நடைமுறையும் இதுவே. இது பாடம் அல்ல, வாழ்க்கையாக நாம் கைகொள்ள வேண்டியதும் பயில வேண்டியதும்.
.... ... .....
என் நன்மாறன் (13.5.1947 - 28.10.2021)