செவ்வாய், ஜூன் 23, 2020

"மரணம் கொண்டாடப்பட வேண்டியது". எப்போது?

அகிரா குரோசாவாவின் Village of the watermills என்ற குறும்படம் குறித்த சில சிந்தனைகள். The Dreams என்ற அவரது கனவுகள் பற்றி அவர் இயக்கிய சில குறும்படங்களின் தொகுப்பில் ஒன்றுதான் நீராலைக்கிராமம். 

இக்கிராமத்துக்கு நம் கதைசொல்லி வருகின்றான். எங்கு நோக்கிலும் மரம் செடி கொடி பூக்கள், அமைதியாக புரண்டு ஓடும் ஆறு, மரத்தில் ஆன வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நீராலை என இந்த உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஓர் கிராமமாக இருக்கின்றது. நகர வாழ்க்கையின் அடையாளம் துரும்புக்கும் இல்லை. இயற்கை அழகு எங்கு திரும்பினாலும் கொட்டிக்கிடக்கின்றது. 

கதைசொல்லி ஆற்றின் குறுக்கே உள்ள சிறிய மரப்பாலத்தை கடந்து வரும்போது  குழந்தைகள் அவனுக்கு வணக்கம் சொல்கின்றனர். அங்கே உள்ள சிறிய கல்லின் மீது சிறுகுழந்தைகள் பூக்களை பறித்து வைத்து செல்வதைப் பார்க்கின்றான். தொடர்ந்து நடந்து வர ஆற்றின் கரையில் உட்கார்ந்திருக்கும் முதியவர் ஒருவர் மரத்தால் ஆன நீராலைச்சக்கரம் ஒன்றை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் அருகே சென்று வணக்கம் சொல்கின்றான், அவர் தனது வேலையில் கவனமாக இருக்கின்றார், மீண்டும் சொல்லும்போது அவர் பதில் வணக்கம் சொல்கின்றார். அவர் எதிரே இவனும் தரையில் அமர்கின்றான். அவருக்கும் அவனுக்கும் ஆன உரையாடல் தொடங்குகின்றது. முதியவர் தன் வேலையை தொடர்ந்து கொண்டே இருக்க இவன் பேசுகின்றான்.

இந்த கிராமத்துக்கு பெயர் என்ன?

    பெயர் ஏதும் இல்லை. சிலர் நீராலைக்கிராமம் என்று சொல்வார்கள் 

ஆள் நடமாட்டாமே இல்லையே?

    மக்கள் வேறு இடங்களில் இருக்கின்றார்கள்

பக்கத்தில் உள்ள வீட்டினுள் பார்க்கின்றான், ஓர் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருகின்றது.

மின்சாரம் எங்குமே இல்லையே?

  எம் மக்களுக்கு மின்சாரம் தேவையில்லை.  மக்கள் சொகுசு வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விட்டு உண்மையில் நல்ல பல விசயங்களை இழந்து விட்டார்கள். 

அப்போ வெளிச்சத்துக்கு என்ன செய்றீங்க?

  மெழுகுவர்த்தியோ எண்ணெய் விளக்கோ பயன்படுத்துகின்றோம்

ஆனால் இரவு ரொம்ப இருட்டாக இருக்கே?

  (சற்றே நிதானமாக அவனை நோக்கி) உண்மைதான், அதனால்தான் அது இரவாக இருக்கின்றது. .... பகலைப்போல் இரவும் வெளிச்சமாக இருந்தால் எப்படி? ...நட்சத்திரங்களை பார்க்க முடியுமா? வெளிச்சமான இரவுகளை எனக்கு பிடிக்காது.

டிராக்டர்கள் ஏதும் இல்லையே?

 எங்களுக்கு தேவையில்லை, மாடுகளும் குதிரைகளும் இருக்கின்றன....மரங்களை வெட்ட மாட்டோம், கீழே விழும் மரங்களின் விறகுதான் எங்கள் எரிபொருள், தவிர மாட்டுச்சாணமும் நல்ல எரிபொருள்.

நீண்டு நெடிய வளர்ந்து நிற்கும் பசுமையான மரங்களை பார்க்கின்றான்.  

முதியவர் தொடர்ந்து பேசுகின்றார்.

  மனிதன் எப்படி வாழ்ந்தானோ அப்படி வாழ நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம். அதுவே இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான். அதை மறந்து விட்டு அவனே இயற்கையை அழிக்கின்றான். இயற்கையை விடவும் சிறப்பான ஒன்றை தன்னால் உருவாக்க முடியும் என மனிதன் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றான். குறிப்பாக நம் விஞ்ஞானிகள். அவர்கள் அறிவாளியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இயற்கையின் இதயத்தை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கண்டுபிடித்த எல்லாம் இறுதியில் மனிதனின் சந்தோஷங்களை பிடுங்கி எறிகின்றனவாகவே உள்ளன. ஆனாலும் என்ன, தமது கண்டுபிடிப்புகளை பற்றி அவர்கள் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றார்கள். ..தங்களை அதிசயப்பிறவிகளாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கின்றார்கள். இயற்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் அழியப்போவதை உணரவில்லை.  மனிதன் உயிர்வாழ அடிப்படையில் என்ன வேண்டும்? தூய காற்றும் தூய நீரும் அவற்றை பிறப்பிக்கும் மரம் செடிகொடிகளும். ஆனால் எல்லாமே அழிக்கப்படுகின்றது. சூழல் நாசமாக்கப் பட்டுவிட்டது. அசுத்தமான காற்று, அசுத்தமான நீர், விளைவு, மனிதனின் இதயமும் அசுத்தமாகி விட்டது.

சற்றுத்தொலைவில் இசைக்கருவிகள் இசைக்கப்படும் ஒலி கேட்கின்றது.

இன்று திருவிழாவா?

  இல்லை, அது இறுதிச்சடங்கு. என்ன, ஆச்சர்யமாக இருக்கின்றதா? மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்ட காலம் வாழ், மற்றவர்கள் உனக்கு நன்றி சொல்வார்கள். ...எமது கிராம மக்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வார்கள், இருப்பார்கள். இன்று இறந்த பெண்ணுக்கு வயது 99. (எழுகின்றார்) மன்னிக்கவும், நானும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும். .... உன்னிடம் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும், இவளே என் முதல் காதலி. என்ன செய்ய, வேறு ஒருத்தனை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள், நான் நொறுங்கிப் போனேன். முதியவர் வருத்தம் தொனிக்க சிரிக்கின்றார்.

வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடையுடன் வருகின்றார், கையில் ஜல்ஜல் என ஒலிக்கும் ஒரு இசைக்கருவி. 

முகத்தில் வியப்பு பொங்க இவன் கேட்கின்றான், உங்கள் வயது என்ன?

  103. போதும் வாழ்ந்தது. தெரியுமா, வாழ்க்கை கடினமானதுன்னு சொல்வாங்க, அதெல்லாம் சும்மா. உண்மை என்ன? வாழ்வதே சந்தோசம், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது.

பக்கத்தில் இருந்த செடியில் இருந்து பூக்களைப் பறிக்கின்றார். ஒரு கையில் பூ, மறு கையில் இசைக்கருவியை ஒலித்தபடி நடக்கின்றார். இறுதி ஊர்வலம் பலத்த ஆரவாரத்துடன் மகிழ்ச்சி பொங்கும் இசையுடன் வருகின்றது. முன்னணியில் குழந்தைகள் மலர்தூவியபடி வர பின்னால் வரும் பெரியவர்கள் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடி வருகின்றனர். ஊர்வலத்தை முன்னின்று வரவேற்ற முதியவர் ஆடியபடியே ஊர்வலத்தில் சங்கமிக்கின்றார்.
.......

மிக அற்புதமான இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு கிராமத்தில் படம் நகர்கின்றது. வீடுகளும் நீராலைகளும் மரத்தால் செய்யப்பட்டுள்ளன. அமைதியாக ஓடும் ஆற்றில் கையால் நீரை அள்ள முடியும். பின் எதற்கு நீராலைகள்? மின்சாரமும் ட்ராக்டரும் பெட்ரோலியமும் இன்ன பிற நவீன  வசதிகளும் நமது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் படுவதற்கு   பல நூறு ஆண்டுகள் முன்னால் நம் முன்னோர்கள் அவர்கள் அறிவைப் பயன்படுத்தி கண்டறிந்த பல கருவிகளின் அடையாளமாக மட்டுமின்றி இப்போதும் இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை மட்டுமே மனித சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதன் குறியீடாக இக்கிராமம் எங்கும் நீராலைகள் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கத்தின் உயிர்ப்பின் பகுதியாகவே தனது கிராம மக்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வார்கள் என்று முதியவர் சொல்கின்றார். 

16 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் உள்ளடக்கத்தில் ஒரு நீண்ட மானுடவியல் படமாக உள்ளது.

ஞாயிறு, ஜூன் 21, 2020

காங்கிரசின் எமெர்ஜென்சியும் ஆர் எஸ் எஸ்-பி ஜே பி நாடகமும்

(விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலம் என சொல்லப்படும் அவசரநிலை என்ற எமெர்ஜென்சி 1975 ஜூன் 25 நள்ளிரவில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட து. 45 வருடங்களுக்கு பிறகு இன்றைய ஆர் எஸ் எஸ் கூட்டம் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்களில் தாங்கள் வாளெடுத்து வீசி ஜனநாயகம் காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்ததாக எப்போதும் போல புளுக கூடும். உண்மையில் என்ன செய்தார்கள் என்பதை 25.6.2000 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் பதிவு செய்திருந்தேன். அப்பதிவு இங்கே மீண்டும்).


1. 2000 ஜூன் 14ஆம் தேதி தி இந்து நாளிதழில் ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலமாகக் கருதப்படும் 1975 அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் விதமாக பா ஜ கட்சி ஒரு வார கால அவசரநிலை எதிர்ப்பு அனுசரிக்க உள்ளது என்பதே அந்த செய்தி. அது தொடர்பான நிகழ்ச்சிகள் டெல்லி, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் நடத்தப்படுமாம். இதை வாசிக்கின்ற யாரும் பொதுவாக 25 வருடங்களுக்கு முன்பு நடந்த ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரான படுகொலையை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது நல்லதுதானே என்று கருதக்கூடும்.

2. 1975 ஜூன் 25 நள்ளிரவில் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு எங்கெங்கோ சிறைகளில் அடைக்கப்பட்ட னர். பத்திரிகை தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த காங்கிரஸ் அல்லாத அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1975 செப்டம்பர் மாத கணக்குப்படியே அறுபதாயிரத்தை தாண்டியதாக தனது 'ஜட்ஜ்மெண்ட்' என்ற நூலில் குல்தீப் நயார் கூறுகின்றார். பல நூறு பேர்கள் சிறைகளில் கொடுமைப் படுத்தப்பட்டு மாண்டனர். பலரது கதி என்னவென்றே தெரியாமல் போனது. 1977 மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இந்திரா காந்தி அத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசாக அது அமைந்தது.

3. ஜனதாக்கட்சி ஆட்சி 1980ஆம் ஆண்டு கவிழ்ந்தது. உண்மையில் அந்த ஆட்சி கவிழ்க்கப் பட்டது. சோசலிஸ்டுகளான மது லிமாயே, ராஜ் நாராயண் இருவரும் ஒரு பிரச்னையை கிளம்பினார்கள். "பழைய பாரதீய ஜனசங்க கட்சி (இன்றைய பாரதீய ஜனதா கட்சி)யினர், இப்போது (1977-80 காலக்கட்டத்தில்) ஜனதா கட்சியிலும் உறுப்பினர் ஆக இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ்-இலும் உறுப்பினர் ஆக இருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, அவர்கள் ஆர் எஸ் எஸ் தொடர்பை கைவிட வேண்டும்" என வற்புறுத்த தொடங்கினார்கள். ஜனசங்கத்தினரோ ஆர் எஸ் எஸ் உறவை , அதாவது உறுப்பினர் பதவியை துறக்க முடியாது என்று உறுதியாக நின்றார்கள். விளைவாக மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்தது. அதாவது இவர்கள் கவிழ்த்தார்கள். 1980இல் பாரதீய ஜனசங்க புட்டிக்கு பாரதீய ஜனதா கட்சி என லேபிள் ஒட்டப்பட்டது. மிதவாதியாக மக்களுக்கு காட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் அதன் தலைவராக ஆக்கப்பட்டார்.

4. இங்கே ஒரு விசயம் ஊன்றிக்கவனிக்கப்பட வேண்டும். ஆர் எஸ் எஸ் என்ற இந்து மத வெறி அமைப்பின் பல்வேறு எடுபிடி கிளை அமைப்புக்களில் ஒன்றுதான் பி ஜே பி, இரண்டுக்கும் ஆன தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட முடியாதது. எனவேதான் ஒரு அரசாங்கமே கவிழ்கின்ற நிலைமை எற்பட்ட போதும் அவர்கள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் ஆக இருப்பதே தலையாய காரியம் என்ற நிலையை எடுத்தார்கள். வேறு சொற்களில் சொன்னால் வாஜ்பாய் ஆனாலும் அத்வானி ஆனாலும் முதலில் ஆர் எஸ் எஸ், பின்னரே பி ஜே பி, மந்திரி மாயம் எல்லாம்.

5. அப்படியானால் இன்றைக்கு அவசர நிலையை எதிர்த்த போராட்டத்தை நடத்திக்காட்ட முயற்சி செய்கின்ற பி ஜே பியின் தாய் பீடமான ஆர் எஸ் எஸ் அன்றைக்கு அவசர நிலை காலத்தின்போது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகின்றது. உண்மையில் அவசரநிலை காலத்தை இவர்கள் எதிர்த்தார்களா, ஜனநாயகம் பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை உண்டா என்பது அப்போதுதான் புரியும். இது வெறும் பழைய நிகழ்வுகளை புரட்டுவது மட்டும் அல்ல, இப்போதுள்ள ஆர் எஸ் எஸ்-பி ஜே பியின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ளவும் உதவும்.

6. அவசரநிலை காலத்தின் போது சிறைச்சாலைகளில் தம் உயிரை இழந்தோர் பல ஆயிரம் பேர். காணாமற் போனோரும் பல ஆயிரம் பேர். சிறைச்சாலைகளில் புதிது புதிதாக சித்திரவதை வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குழந்தைகள், வயதானோர், கிழவர் கிழவிகள் ஆகியோருக்கும் கூட வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்ற கோஷத்தை அன்றைய மத்திய மந்திரி தேவகாந்த பரூவா கண்டுபிடித்து இந்திராவிடம் நல்ல பெயர் வாங்கினார். ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுபவித்த சித்திரவதைகளை தனியே புத்தகமாக அச்சிடலாம். கேரளத்தில் பேராசிரியர் ஈச்சரவாரியாரின் மகனும் என்ஜீனியரிங் மாணவருமான ராஜன் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டான், திரும்பி வரவே இல்லை. இது போன்ற தடயங்கள் ஏதும் அற்ற மரணங்கள் நாடெங்கும் நடந்தன, கணக்கில்லை.

7. ஜனநாயக சக்திகள் சிறைகளில் இருந்தார்கள், அல்லது தலைமறைவாக இருந்தபடி அவசரநிலை காலத்துக்கு எதிராக தொண்டர்களையும் பொதுமக்களையும் திரட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆர் எஸ் எஸ்-பி ஜே பி கூட்டம் என்ன செய்து கொண்டிருந்த து?

8. அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியத்துக்கு இந்திரா காந்தியை துரத்தியது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்பது தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார், சட்டத்தை திருத்தினார், வழக்கில் வெற்றி பெற்றார். உடனடியாக அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி புளகாங்கிதம் அடைந்தவர் அன்றைய ஆர் எஸ் எஸ் தலைவர் தேவரஸ்.

9. ஆனாலும் என்ன, தேவரஸ் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் அவருடன் இருந்த மராட்டிய மாநில சோசலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், ஆர் எஸ் எஸ் இயக்கத்தவர் சிறையில் என்ன மாதிரியான 'போராட்டம்' நடத்தினர் என்பதை இப்படி விவரிக்கின்றார்:
"சிறையின் உள்ளே வந்த பல ஆர் எஸ் எஸ்காரர்கள் தாங்கள் அவசரநிலை யை எதிர்க்கவில்லை என்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் தாங்கள் பங்குபெறவே இல்லை என்றும் புலம்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மையை சொல்லப்போனால் பல ஆர் எஸ் எஸ்காரர்கள் அவசரநிலை யை ஆதாரிக்கவே செய்தார்கள். தேவரஸ் இருந்த ஏரவாடா சிறையில் தான் நானும் இருந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். இந்திரா, வினோபா, சஞ்சய் காந்திக்கு நெருக்கமானவர்கள், மராட்டிய முதல்வர் எஸ்.பி.சவாண் ஆகியோருடன் தேவரஸ் கடித தொடர்பு வைத்து இருந்தார். 1976 பிப்ரவரி மாதம் இந்திரா பம்பாய் வந்தார். அப்போது அவரை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னை பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்க வழி செய்து கொண்டார். வெளியே இருந்த ஜனசங்க எம் எல் ஏ ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்".

10. "சிறையில் இருந்தபடியே 11.10.1975 அன்று தேவரஸ் இந்திராவுக்கு எழுதிய கடிதம் இது: "உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் உங்கள் தேர்தல் செல்லும் என அறிவித்துள்ளார்கள், இதற்காக என் பாராட்டுதல்களை தெரிவித்துக கொள்கின்றேன். ஆர் எஸ் எஸ் மீதான தடையை நீக்கி ஆர் எஸ் எஸ்காரர்களை விடுதலை செய்யுங்கள், லட்சோபலட்சம் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற சேவையை (!) நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்".

11. அடுத்து ஆச்சார்ய வினோபாவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதுகின்றார். பம்பாய் ஜார்ஜ் மருத்துவமனை கைதிகள் வார்டு 14 என்ற முகவரியில் இருந்து எழுதிய கடிதம் இது: "பிரதமர் இந்திரா 1976 பிப்ரவரி 24 அன்று உங்களை ஆசிரமத்தில் சந்திக்க இருப்பதாக அறிகின்றேன். பிரதமரிடம் சொல்லி எங்களை விடுவிக்க வழி செய்யுங்கள். பிரதமரின் தலைமையின் கீழ் நாங்கள் சேவை செய்ய தயாராக இருப்பதை சொல்லுங்கள்."

12. ஆர் எஸ் எஸ் லோகத்திலும் ஒரு யோக்கியர் உண்டென்றால் அவர் வாஜ்பாய்தான் என ஒரு பொய்யை கட்டமைத்து உள்ளது அக்கும்பல். அவர் அப்போது என்ன செய்தார்? 13.6.2000 நாளிட்ட தி ஹிந்து நாளிதழில் ஆர் எஸ் எஸ் சிந்தனையாளர் சுப்ரமண்யஸ்வாமியே எழுதியது இது: "அடல் பிகாரி வாஜ்பாய் இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதி தள்ளினார். இருபது மாத அவசரநிலை காலத்தில் அடல்ஜி பல முறை பரோலில் வெளிவந்தார் எனில் காரணம், தான் வெளியே வந்தால் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என அவர் உறுதி அளித்தார். மேலும் பல ஜனசங்ககாரர்கள் எவ்வாறு நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வதாக உறுதியளித்து சிறையில் இருந்து வெளியே வந்தார்கள் என்பதை அகாலித்தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் விரிவாக கூறும்.... வாஜ்பாய் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு சமர்ப்பிக்கும் நிலைக்கு தயாரானார். நல்லவேளை, ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதாக இந்திரா காந்தி அறிவித்தார்."

13. பிரிட்டிஷ்காரன் இங்கே அரசாண்டபோது இவர்களின் சித்தாந்த சிங்கம் விநாயக் தாமோதர் சாவர்க்கரை அந்தமான் சிறையில் அடைத்தான். தன்னை சிறையில் இருந்து விடுத்தால் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் ராணிக்கு தன்னை விடவும் விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு வாலை சுருட்டிக் கொண்டு எந்தவிதமான அரசியல் நடவடிக்கை களிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதாக கடிதம் மேல் கடிதமாக எழுதியவர் சாவர்க்கர். சாவர்க்கரின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்? வெள்ளையனே வெளியேறு போராட்ட இயக்கத்தின்போது வாஜ்பாயும் அவர் சகோதரரும் ஒரு கிராமத்தையே காட்டிக் கொடுக்க காரணமாக இருந்த துரோக வரலாறும் இருக்கின்றது, மறக்க கூடாது.

(மேற்கோள்கள் உதவி: விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஆர் எஸ் எஸ் ஒரு அபாயம்" என்ற நூல்).

சனி, ஜூன் 20, 2020

ரோசா பார்க்ஸ்: அமெரிக்கப் பேருந்தில் பற்றிய பெருந்தீ

1955 டிசம்பர் முதல் நாள். வியாழக்கிழமை. அமெரிக்காவின் அலபாமா மாவட்டம், மாண்ட்கோமெரி என்னும் நகரம். தனன்து அன்றைய நாள் பணிகளை முடித்த பின்னர் க்ளீவ்லாண்ட் அவன்யூ செல்லும் பேருந்து எண் 2857இல் 42 வயதான ஆஃப்ரோ-அமெரிக்க கருப்பினப் பெண்மணி ஒருவர் ஏறி இருக்கையில் அமர்கின்றார். வண்டியின் ஓட்டத்தில் ஓட்டுநர் ஜேம்ஸ் பிளேக் அந்தப் பெண்மணியையும் மேலும் மூன்று  கறுப்பினப் பெண்களையும் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு வெள்ளையர் அமர இடம் தருமாறு கட்டளை இடுகின்றார். மூன்று பெண்கள் எழுந்து விட இந்தப் பெண் எழ மறுக்கின்றார். "எழ வேண்டும், இல்லையேல் நான் போலீசை அழைத்து உன்னைக் கைது செய்ய வேண்டியிருக்கும்" என ஓட்டுநர் எச்சரிக்கின்றார். அவரோ அமைதியாக "நீங்கள் அவ்வாறே செய்யலாம்" என்று உறுதியாக கூற, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப் படுகின்றார்.

தனது இருக்கையில் இருந்து எழ முடியாது என அப்பெண்மணி திட்டவட்டமாக மறுத்த கணத்தில் அமெரிக்க மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் முதல் வரிகள் எழுதப்பட்டன என்பதை அந்த ஓட்டுனரோ காவலர்களோ பெண்மணியை விசாரணை செய்த நீதிமன்றமோ நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள்.

அப்பெண்மணியின் பெயர் ரோசா லூயி மெக்காலே. 1932இல் ரேமாண்ட் பார்க்ஸ் என்னும் மனித உரிமைப் போராளியை திருமணம் செய்துகொண்டபின் ரோசாபார்க்ஸ் என்று அறியப்பட்டார். படுக்கைவிரிப்புக்கள் தயாரிக்கின்ற வணிகமையத்தில் தையல் தொழில் செய்தவர். மட்டுமின்றி, கறுப்பின மக்கள் உரிமைக்கான தேசிய அமைப்பின் (National Association for the Advancement of Colored People) தலைவரின் செயலாளர் ஆகவும் இருந்தார். கணவன் மனைவி இருவருமே வாக்காளர் சங்கம் (Voter's League) என்ற அமைப்பின் உறுப்பினர்கள்.

அமெரிக்காவில் நிறவெறி மிக மோசமாக இருந்த காலம் அது. ஜிம்க்ரோவ் சட்டம் எனப்பட்ட "பிரிவினைச்சட்டம்" நடைமுறையில் இருந்தது. அது என்ன சட்டம்? அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாவட்டங்களில் பேருந்துகளில் கறுப்பின மக்கள் பின்வரிசையில் அமர வேண்டும். வெள்ளையர்கள் வரும்போது எழுந்து தமது இடத்தை அவர்களுக்கு தர வேண்டும். கறுப்பின மக்கள் அமர்வதற்கான கடைசி ஐந்து வரிசைகளும் கூட வெள்ளையர் வந்துவிட்டால் அவர்களுக்கு உரியதாகிவிடும். ஓட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்த படியே கறுப்பின மக்களின் இருக்கைக்கு மேல் உள்ள ஒரு  அடையாளக் குறியீட்டை நகர்த்துவார். அவர் பின் நோக்கி நகர்த்த நகர்த்த அந்த இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் எழுந்துவிட வேண்டும். பல நேரங்களில் ஓட்டுநர் இந்த அடையாளக்குறியை அகற்றியும் விடுவார், அதாவது கறுப்பர்களுக்கு இருக்கை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் கடைசி ஐந்து வரிசைகள் தவிர மற்ற இருக்கைகள் காலியாக இருந்தாலும் அவற்றில் கறுப்பர்கள் அமரக் கூடாது! கறுப்பர்கள் முன்வாசல் வழியே வந்து ஓட்டுநரிடம் பயணச்சீட்டு பெற்று கீழே இறங்கி பின்வாசல் வழியே மீண்டும் உள்ளே எற வேண்டும்! இவ்வாறு ஏறும் முன்பே கதவு மூடப்படுவதும் கறுப்பர்கள் சாலையில் ஏமாந்து நிற்பதும் அடிக்கடி நடப்பவை.

அன்றைய தினம் ரோசா ஐந்தாம் வரிசையில் அமர்ந்திருந்தார், அதாவது கறுப்பர்களுக்கான முதல் வரிசை. ஓட்டுநர் அடையாள குறியை நகர்த்தியபோது அவர் எழ மறுத்தார், கைது செய்யப் பட்டார். 12 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு நிகழ்வில் ரோசாவை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட அதே ஓட்டுநர்தான் இப்போதும்.

ஒரு கறுப்பர் எழ மறுப்பதும் கைது செய்யப்படுவதும் இது முதல் முறை அல்ல. 1945இல் ஈரென்மார்கன் என்பவர் கைது செய்யப் பட்டார். பின்னர் கிளாடெட் கால்வின் என்ற 15 வயது நங்கை கைது செய்யப்பட்டாள். இவள் மீதான வழக்கை நடத்திவிடும் பொருட்டு அதற்கான நிதி திரட்டும் பணியில் ரோசாவும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அப்பெண் திருமணம் ஆகாதவர் ஆக, கர்ப்பிணியாகவும் இருந்ததால் அவரால் வழக்கின் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாது என உணர்ந்து வழக்கு கைவிடப்பட்டது. 1944இல் ஜாக்கி ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் மேரி லூசி ஸ்மித் என்னும் இளம்பெண் கைதுசெய்யப்பட்டாள். அவள் அபராதம் செலுத்தி மீண்டு வந்தாள். கொடுமைகள் நீண்டுகொண்டே செல்ல, இத்தகைய ஒரு சூழலில் வழக்கை உறுதியாக சந்திக்க வல்லமை கொண்ட ஒரு நபர் கைது செய்யப்படும் ஒரு நல்வாய்ப்புக்காக NAACP அமைப்பு காத்திருந்தது. மனித உரிமைகளின் மாண்பை நிலைநாட்டும் அந்த அரிய நாள் ரோசாவின் வடிவில் வந்து சேர்ந்தது.

ரோசாவின் கைது பற்றி அறிந்த மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவரும் ஆன ஈ.டி.நிக்சன் அகமகிழ்ந்து போனார்! "கடவுளே! 'பிரிவினை' எத்தனை பெரிய வாய்ப்பினை என் கைகளில் அள்ளித்தந்துள்ளது! ". இப்படி ஒரு வழக்கை எதிர்கொள்ள ரோசாவை விடவும் உறுதியான ஒரு நபர் கிடைக்க மாட்டார் என்பதை அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார்.

ரோசா இப்படிக் கூறினார்: "எங்களுக்கு (கறுப்பின மக்களுக்கு) இழைக்கப்படும் கொடுமைகளினால் நான் மிகவும் கொதிப்படைந்திருந்தேன். எனது தாத்தா, எனது பாட்டி, என் பெற்றோர்கள்! அவர்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள்! எனக்குத் தெரியும், என்றாவது ஒரு நாள் நானும் இத்தகைய சூழலை சந்திப்பேன், ஆனால் அப்போது அந்த வாய்ப்பை என் மக்களின் விடுதலைக்காக நான் பயன்படுத்தி க்கொள்வேன்!"

பெயிலில் வெளியே வந்த ரோசா, மாண்ட்கோமெரி பிரிவினைச் சட்டத்துக்கு எதிராக இந்த வழக்கை நடத்துவதென முடிவு செய்தார். மகளிர் அரசியல் குழு என்னும் அமைப்பு அன்று நள்ளிரவு கூடுகின்றது. 35,000 துண்டறிக்கைகள் உருட்டச்சில் அச்சிடப்பட்டு மறுநாள் காலையில் கறுப்பின மக்களின் பள்ளிக்கூடங்களில் விநியோகிக்கப்பட்டன. அறிக்கை மிக எளிமையாக இருந்தது. ஆனால் ஒரு பெரும் போராட்டத்துக்கான அறைகூவல் அதில் இருந்தது. "ரோசாவின் கைதுக்கும் விசாரணைக்கும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு நீக்ரோவும் வரும் திங்கள் அன்று பேருந்துப்பயணத்தை புறக்கணிக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். அப்படியே உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளும் பெரியவர்களும் பேருந்துகளை புறக்கணித்து வாடகைக்கார்களை பயன்படுத்துங்கள்!"

வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் மாண்ட்கோமெரியின் ஒட்டுமொத்த கறுப்பின சமூகமும் அரசுப்பேருந்துகளை புறக்கணித்து எங்கு சென்றாலும் நடந்தே சென்றார்கள், வாடகை கார்களில் பயணித்தார்கள்.

எப்போதும் போல முப்பது நிமிடங்களில் விசாரணை முடிந்தது, ரோசா குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதே நாளில் மாண்ட்கோமெரி முன்னேற்ற சங்கம் அமைக்கப்பட்டது. நகருக்கு புதிதாக வந்த ஒரு வழக்கறிஞர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அப்போது அவர் டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலய மதகுரு.

தமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருந்த மாண்ட்கோமெரியின் 40,000 கறுப்பின மக்கள் நிறவெறி தலையின் உச்சிக்கு ஏறியிருந்த அமெரிக்க அரசுக்கும் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கும் வரலாற்றின் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். பேருந்து புறக்கணிப்பு 381 நாட்கள் நீடித்தது! எரிச்சலுற்ற வெள்ளையர்கள் கறுப்பின மக்களை தாக்கினார்கள், வீடுகளையும் தேவாலயங்களையும் தாக்கினார்கள். தீக்குண்டுகளை வீசினார்கள். நிறவெறி கொண்ட காவல்துறை தன் பங்கை நிறைவேற்றியது, கறுப்பின மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன, கறுப்பின வாடகை கார் ஓட்டுநர்கள் கைது செய்யப் பட்டார்கள். போராட்டத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உச்சகட்டமாக மார்ட்டின் லூதரின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவரது மனைவியும் குழந்தைகளும் தப்பித்தார்கள். மார்ட்டின் வெளியே சென்றிருந்தார். (மார்ட்டின் 1968 ஏப்ரல் 4 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் ).

வேறு வழியின்றி அமெரிக்க உச்சநீதிமன்றம் விவகாரத்தில் தலையிட்டது. 1956 நவம்பர் 13 அன்று மனித உரிமைப்போராளிகள் வெற்றி பெற்றார்கள். பேருந்துகளில் நிறப்பிரிவினை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு எழுதப்பட்டது. டிசம்பர் 21 அன்று மான்ட்கொமெரி அரசுப்பேருந்து ஒன்றில் ரோசா பார்க்ஸ் அமர்ந்திருக்க அவர் பின்வரிசையில் வெள்ளையர் ஒருவர் அமர்ந்துள்ள புகைப்படம் வெளியானது. மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியின் அடையாளம் அது.

வழக்கு நடந்த நாட்களில் ரோசாவும் அவரது கணவரும் எண்ணற்ற தொல்லைகளை சந்தித்தார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரோசாவை பற்றியோ வழக்கைப் பற்றியோ வேலை செய்யும் இடத்தில் பேசக் கூடாது என கணவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி தடை செய்ய, பார்க்ஸ் அவரது வேலையை தூக்கி எறிந்தார். வழக்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டதால் தொல்லைகள் தொடர்ந்தன. எனவே தமது குடியிருப்பை மிச்சிகன் மாவட்டத்தின் டெட்ராய்டுக்கு மாற்றினார்கள்.

கறுப்பின மக்களின் வரலாற்றில் மட்டுமின்றி அமெரிக்க வரலாற்றிலும் ஒரு மாபெரும் திருப்பத்தை உருவாக்கிய ரோசா தனது 95ஆவது வயதில் 2005 அக்டொபர் 24 அன்று மரணம் அடைந்தார்.

மனித உரிமைகள் மீதும் உலக மக்கள் மீதும் கறுப்பின மக்கள் மீதும் அமெரிக்க அரசு தொடர்ந்து ஏவும் கொடும் தாக்குதல்கள் இன்றோ நேற்றோ தொடங்கி வைக்கப்பட்ட ஒன்றல்ல. 1492இல் பஹாமாஸ் தீவுகளில், அதாவது இன்று அமெரிக்கா என்று சொல்லப்படும் மண்ணில், ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவனது சகாக்களுடன் வந்து இறங்கி அங்கே பல நூற்றாண்டுகளாக வசித்து வந்த சூது வஞ்சகம் ஏதும் அறியாத பூர்வ குடி மக்களான அரவாக் செவ்விந்தியர்கள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த நாட்களிலேயே கருக்கொண்டு விட்டது. ஜார்ஜ் ஃபிளாய்ட் இந்தப் பட்டியலில் இப்போது சேர்க்கப் பட்டுள்ளான்.
....