
3) பொலிவியா. மத்திய தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள வறுமை மிகு நாடு. 1985இல் அதன் பணவீக்கம் 25,000%! கேடுகெட்ட அயோக்கிய ஆட்சியாளர்களின் கடைசிப்புகலிடமான உலகவங்கியை பொலிவிய ஆட்சியாளர்களும் நாடினார்கள். உலகவங்கி என்ற ஓநாய் ‘வந்தியா மாப்ளே!’ என்று போட்ட நிபந்தனைகளின் படி பொலிவியாவின் ரயில்வே, தொலைபேசி, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம் என கேந்திரமான அனைத்து அரசுத்துறைகளும் தனியார் கையில் தாரைவார்க்கப்பட்டன. இது போதாது என்று உச்சகட்டமாக ஒரு கட்டளை இட்டது உலகவங்கி. ‘லா பாஸ் (La Pas), கொச்சபம்பா (Cochabamba) ஆகிய ஊர்களின் இயற்கை நீர் வளங்களை அதாவது ஆறு, குளம் எல்லாவற்றையும் தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பெக்டெல் (Bechtel) என்ற அமெரிக்க கம்பெனியின் துணை நிறுவனமான International Water Limited (தண்ணீருக்கு லிமிட்!) என்ற கம்பெனியின் கீழ் Aguas del Tunari என்ற உள்ளூர் கம்பெனிக்கு பொலிவியாவின் நீர்வளம் 40 வருட குத்தகைக்கு விடப்பட்டது! பெக்டெலுக்கு இந்த காண்ட்ராக்ட் உலகவங்கியின் நிர்ப்பந்தத்தால் கிடைத்தது. கொச்சபம்பாவில் வசித்த அமெரிக்க குடிமகனான ஜிம் ஷுல்ட்ஸ் என்பவர் ஜனநாயக மையம் (Democracy Centre) என்ற அமைப்பை நடத்தினார். அவர் சொன்னது: “யேசுவை, முகம்மது நபியை, மோசசை, புத்தரை எப்படி சாமானிய மக்கள் நம்புகின்றார்களோ அதேபோல் ‘தனியார்மயம்’ என்பதை உலகவங்கியின் நீர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றார்கள்”. ("Bank water officials believe in privatization - the way other people believe in Jesus, Mohammed, Moses, and Buddha," says Jim Schultz). இதற்கான ஒரு பிரத்தியேகமான சட்டத்தையே (Law 2029) அரசு இயற்றியது. ஒரு மாதத்திற்கு சராசரி வருமானம் 70 டாலர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்த பொலிவிய மக்கள் அதில் இருபது டாலரை தண்ணீருக்காக செலவு செய்ய வேண்டிய கொடுமை ஏற்பட்டது. வீட்டின் கூரை மேல் விழும் மழைத்தண்ணீரை சேமிக்கவும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்கின்ற அளவுக்கு கொடுமை உச்சத்தை தொட்டது. விளைவு, மக்கள் அரசுக்கும் பெக்டெலுக்கும் உலகவங்கிக்கும் எதிராக வீதிகளில் திரண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், படிப்பாளிகள், அறிவுஜீவிகள் என ஒன்றுதிரண்டு Coordinator for the Defense of Water and Life என்ற அமைப்பை நிறுவினார்கள். La Coordinadora என்ற மத்திய போராட்ட அமைப்பு ஆஸ்கார் ஆலிவேரா என்பாரின் தலைமையில் அமைக்கப்பட்டது. பல்வேறு கட்டப்போராட்டங்களில் மக்கள் போலீசுடனும் ராணுவத்துடனும் நேரடியாக மோதினார்கள். பலர் துப்பாக்கிசூட்டில் இறந்தார்கள். குறிப்பாக ஏப்ரல் 2000இல் கிளர்ச்சி வலுத்தது, வேலைநிறுத்தங்கள் நடந்தன, ஐந்து லட்சம் மக்கள் கொண்ட கொச்சபம்பாவில் முழு அடைப்பு நடந்தது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து போராட்ட தலைவர்களை வஞ்சகமாக சிறையில் அடைத்தது அரசு. பலரை பிரேசில் எல்லை அருகே அமேசான் மழைக்காட்டு பிரதேசமான சான் ஜோவோக்வின் என்ற காட்டுப்பகுதியில் சிறை வைத்த்து. மக்கள் கம்புகளையும் கற்களையும் துணிகளையும் ஏந்தி வீதிகளில் போலீசின் துப்பாக்கிசூடு, கண்ணீர்ப்புகையை சந்திக்க திரண்டார்கள். மறுநாள் காலையில் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் அன்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசு. ஆனால் அரசுத்தரப்பில் யாரும் வராமல் காலம் கட்த்தினார்கள். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இருந்த ரோமன் கத்தோலிக்க பிஷப் திடீர் என்று வந்து, ‘அரசு பெக்டெல் கம்பெனியுடன் ஆன ஒப்பந்த்த்தை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக’ அறிவித்தார். “ஒரு முக்கியமான பொருளாதார வெற்றியை நாம் இக்கணத்தில் ஈட்டியுள்ளோம்!” என ஆஸ்கர் ஆலிவேரா மக்கள் கூட்டத்தில் பிரகடனம் செய்தார்.
4) ’குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியனவற்றை இலவசமாக தருவது அரசின் அடிப்படைக் கடமை’ என்ற மனிதநேயமிக்க கொள்கையை உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம் (IMF) ஆகிய அமெரிக்க நலன் காக்கும் அமைப்புக்கள் மறுக்கின்றன, ’எதுவும் இலவசம் இல்லை, இயற்கையில் கிடைக்கும் தண்ணீரைக் கூட அரசு தராது, நீ காசு கொடுத்து வாங்கு!’ என மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு கட்டளை இடுகின்றன. இந்தியாவில் அமெரிக்க, உலகவங்கி, IMF அடிமைகளான மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் போன்றவர்கள் இந்தக் கட்டளைகளை சிரமேல் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகின்றார்கள். LPG என்று இன்று அறியப்படும் Liberalisation, Privatisation, Globalisation ஆகிய பாதகங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது இந்த கும்பலே. விளைவாக விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்வதை இந்த கும்பல் மனச்சாட்சி சற்றும் வலிக்காமல் வேடிக்கை பார்க்கின்றது; இக்கும்பலின் கொலைபாதக்க் கொள்கைகளின் விளைவாக சிறுதொழில்கள், விவசாயம் யாவும் அழிக்கப்படுகின்றன; வெளிநாட்டுக்கம்பெனிகள் இங்கே அனுமதிக்கப்படுகின்றன, உள்நாட்டுத்தொழில் அழிக்கப்படுகின்றது. தொடக்கத்தில் சொன்ன அம்பத்தூர் தொழிற்பேட்டையும் இந்த அழிவுக்கு நம் கண் முன்னே உள்ள ஆகப்பெரும் சாட்சி. அந்நியக்கம்பெனிகளுடன் அந்நியக் கலாச்சாரமும் நுழைய, நம் முன்னோர்கள் ஆகப்பெரும் உயிர் தியாகங்கள் செய்து நமக்கு ஈட்டித்தந்த தொழிற்சங்க உரிமைகள் சவக்குழியில் புதைக்கப்படுகின்றன, இப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதே தெரியாத, சமூக அக்கறை சிறிதும் இல்லாத, தேசப்பற்று என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தலைமுறை - ஒரு கார்ப்பொரேட் மென்பொருள் தலைமுறை – வளர்ந்து கொண்டு இருக்கின்றது. ‘இப்படியான இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருளை-தண்ணீரை- காசு கொடுத்து வாங்க வேண்டுமா?’ என்ற சாதாரண அடிப்படைக்கேள்வியைக் கூட தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவும் தெரியாத ஒரு தலைமுறை வளர்ந்து நிற்கின்றது; இத்தலைமுறைதான் ’இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவது நியாயம்தானே?’ என்று எண்ணவும் தலைப்பட்டுள்ளது.
5) அடிப்படைக்கல்வியை அரசாங்கமே வியாபாரமாக ஆக்கியுள்ள நிலையில், கல்வி கற்பதே சம்பாதிக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தேவையான பொருள் சேர்க்கவும் ‘சந்தோசமாக’ வாழ்க்கையை வாழவும் என்று இன்றைய தலைமுறை நினைத்தால் தவறு யார் பக்கம்? மனிதனை மனிதனாகப் பார்க்க கற்றுத்தராத, தன் போன்ற சகமனிதர்களின் கூட்டத்தால் ஆனதே இந்த சமூகம் என்ற அடிப்படைப் பார்வையை உருவாக்காத, சக மனிதனின் வலியை என்ன என்றாவது கேட்க வேண்டும் என்ற உணர்வைக் கூடத்தராத, காசு கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும், இதில் கேள்வியெல்லாம் எதற்கு என்று மனிதனின் சூடு சுரணையை மழுங்கடிக்கும் இந்தக் கல்வியும் கல்வி கற்பிக்கும் இந்த அமைப்பும் யாருக்கு வேண்டும்?
6) இப்புதிய ஆண்டில் குரு ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் ஜன கண மன... பாடலின் தமிழாக்கத்தை இங்கே தந்து முடிக்கின்றேன் (மனக்குமுறலோடு)...
”மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான்.
வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ.
வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!”
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ.
வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!”
8 கருத்துகள்:
மிக நல்ல பதிவு.தொழிலாளர்களின் சப்தம் கேட்ட வீதிகளில் இன்று ட்ஸ்கொதேக்கள் நடைபெறுகிற சப்தங்கள் பெருகி இன்றைய காலசாரங்களின் வேர்களில் வென்னீர் ஊற்றி கொண்டிருக்கிற பொன்னான (?)பொழுதில் நாம் அனைவருமே ஒரு விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறோம் என்பதும் எந்த ரப்பர் கொண்டும் அழ்க்க முடியாத உண்மையாக/
மிகவும் அற்புதமான பதிவு தோழரே! வாழ்த்துக்கள் ---காஸ்யபன்
வேறு யாரும் அல்ல, எல்லாம் நம் வீட்டுப்பிள்ளைகள்தானே! குறைந்த பட்சம் நாம் செய்ய வேண்டியது நம் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தின் தியாக வரலாற்றை சொல்லித்தருவதும் சிறைக்கொட்டடிகளிலும் தூக்குமரங்களிலும் உயிர் நீத்த தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை சொல்லித்தருவதும் ஆகும். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா,இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ...
அருமைத்தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களின் மேலான உற்சாகமூட்டும் கருத்து எனக்கு மெயிலில் வந்தது,இங்கே கீழே. தோழர் எஸ்.வி.வி.! என் உளமார்ந்த நன்றி உங்களுக்கு!
/அன்பு இக்பால்,
அருமையான கட்டுரை...
மணம் வீசுகிறது உங்கள் பதிவு
பொலிவியா விஷயம் எப்போதோ படித்தது..
அதை அத்தனை பின்புலத்தோடும் விவரங்களோடும்
இனி மறக்க இயலாத வகையில் தந்துவிட்டீர்கள்..
வாழ்த்துக்கள்..
நாம் இருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்
அது நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம்..
என்ற குரல்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் தோழா..
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் போராட்ட நம்பிக்கையும்
கலந்து மணம் வீசுகிறது உங்கள் பதிவு..
எஸ் வி வேணுகோபாலன் /
அருமையான பதிவு, முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன். சிறந்த எழுத்துநடையுடன் நல்ல தகவல்கள்.
வாருங்கள் ஹரிஹரன்! வருக! உங்கள் அன்புக்கு நன்றி! மிகவும் மனம் நொந்துபோன நாட்களில் அதுவும் ஒன்று! கடந்த வாரம் புத்தகக்கண்காட்சிக்கு சென்றபோது அங்கே இன்னுமொரு அநியாயத்தைக் கண்டேன், ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளேன், பாருங்களேன். iqbalahamed iqbal என்ற முகவரியில்.
விமலன்,ஹரிஹரன், மூத்த தோழர் காஸ்யபன் ஆகியோரின் அன்புக்கு என் நன்றிகள் பல!
மிகச் சிறப்பான பதிவு. இப்பதிவை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து பயன் பெற உதவிய தோழர் SV வேணுகோபாலன் அவர்களுக்கு நன்றி. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
- ஜெ. குருமூர்த்தி
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
அன்பு தோழர் எஸ் வி வேணுகோபாலன், தீக்கதிர் தோழர்கள் சு.பொ.,அ.கு. ஆகியோருக்கு நன்றி! விசயத்தின் கடுமை கருதி நேற்றைய வண்ணக்கதிரில் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இன்று தோழர் எஸ்விவி_க்கு நான் எழுதிய கடிதம்:/
அன்பு தோழர் எஸ் வி வேணுகோபாலன்,
நேற்று காலை முதலே தோழர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து தங்கள் பாராட்டுதல்களை தெரிவித்தார்கள். தோழர்கள் சு.பொ, அ.கு. இருவரிடம் பேசி நன்றி தெரிவித்தேன். இதோ தோழர் குருமூர்த்தி அவர்களின் வாழ்த்து! திறந்த மனதுடன் சந்தோசங்களையும் வாழ்த்துக்களையும் எப்போதும் பகிர்ந்து கொண்டே இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள் பல என்று சொல்வது போதாது போதாது!
உலகமயமும் தனியார்மயமும் சாமானியனுக்கு தந்துள்ள கொடுமைகளில் உச்சகட்டக்கொடுமை தண்ணீரை தனியார்மயமாக்கி காசுபண்ணும் கொடுமைதான் என்றே நான் நினைக்கின்றேன். கொந்தளிப்பான மனநிலையில் நான் இக்கட்டுரையை எழுதியது 31 ஆம் தேதி இரவில். ஆனால் கடந்த வாரம் ஞாயிறு ஹிந்து நாளிதழ் இந்திய அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டது, வேறு எந்த நாளிதழ் அல்லது தொலைக்காட்சி சானலிலும் இது பற்றி ஒரு வரி செய்தி கூட இல்லை என்பது எத்தனை கொடுமை! இடதுசாரிகள் வேறு எந்தப் பிரச்சனையை விடவும் இதற்கு தலையாய இடம் கொடுத்து போராட்ட களத்தில் குதிக்கவேண்டிய அவசியம் உள்ளதாக நான் உறுதியாக நம்புகின்றேன்.
அன்புடன்
இக்பால்
கருத்துரையிடுக