எதிர்க்கட்சிகள், ' பி. ஜெ. பி. தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு அதிகாரிகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்தும் கேவலமான உத்தி' என்று அரசின் இந்த ஆணையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களை பி.ஜெ.பி. தன் தேர்தலுக்கு பயன்படுத்தும் கேவலமான உத்தி என்பதில் ஐயமில்லை. வன்மையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.
யதார்த்தம் என்ன என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்கள் உள்ளன. ஒன்றிய அரசானாலும் மாநில அரசுகள் ஆனாலும் அவர்களுக்கு ஆன தொழிற்சங்கங்கள் உள்ளன. அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் ஆனாலும் ஊதியக்குழு உள்ளிட்ட பிற பொருளாதார கோரிக்கைகள் ஆனாலும் உள்ளூர் மட்டங்களில் ஊழியர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்னைகள் ஆனாலும் இந்த சங்கங்கள் தலையிடுகின்றன. சரியாக சொன்னால் ஊழியர்களுக்கு துணையாக நிற்பதும் அதனால் பிற்பாடு அரசால் ஏவப்படும் தற்காலிக பணிநீக்கம், இடமாற்றம், இன்க்ரிமெண்ட் வெட்டு, பணிநீக்கம், மறைமுகமாக தரப்படும் தொந்தரவுகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இந்த தொழிற்சங்கங்களும் அவற்றின் முன்னணி ஊழியர்களும் மட்டுமே எதிர்கொள்வார்கள், கொள்கிறார்கள்.
அதிகாரிகள், குறிப்பாக செயலாளர், இயக்குனர், இணை, துணை செயலாளர், IAS போன்ற உயர்மட்ட அதிகாரிகள் எப்போதும் அரசின் முகமாகவே அறியப்படுபவர்கள். பொதுவாக இவர்கள் ஊழியர்களிடம் இருந்து எப்போதும் தங்களை தனிமைப்படுத்தியே வைத்துக்கொள்வார்கள். ஊழியர்களிடம் நெருங்க மாட்டார்கள். தொழிற்சங்கங்கள் என்றால் இவர்களுக்கு கசக்கும். நான் இதை குறிப்பிடும்போது மிக கவனமாக இருக்கிறேன். தனிப்பட்ட நபர்களாக நல்ல மனிதர்கள் இவர்கள், இந்த உயர்மட்ட அதிகாரிகளில் அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அவர்களே அரசு அதிகாரிகளாக எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையே இங்கு குறிப்புடுகிறேன்.
ஒன்றிய அரசின் இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் Joint Secretary, Deputy Secretary, Director பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், IAS அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ அனைவரும் அரசு அதிகாரிகள் என்பதை தாண்டி அதிகார வர்க்கமாகவும் பி ஜே பி கட்சிக்கு ஆதரவாளர்களாகவும் ஆக இருப்பதில் எந்த தயக்கமும் இல்லாத பிரிவினர் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. ஓரிரண்டு விதிவிலக்கு ஆனவர்கள் இருக்கலாம், அவர்களின் குரல் வெளியே வராது, வந்தால் தங்கள் கதி என்ன ஆகும் என்பதை நன்கு அறிந்த மிக மிக சிறுபான்மை ஆன இவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று கவனமாக போவதை தவறு என்று சொல்ல முடியாது.
ஆகப் பெரும்பாலோர் இந்த அரசு என்ன சொன்னாலும் செய்ய எப்போதும் ஆயத்தமாக உள்ளவர்கள். எதிர்க்கட்சிகள், திரு மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் எழுப்பியுள்ள குரல் கொள்கையின் அடிப்படையில் எழுந்தது, செய்ய வேண்டிய ஒன்று, தவறில்லை. ஆனால் இந்த உயர்மட்ட அதிகார வர்க்கம் மோடி என்ன சொன்னாலும் செய்யும், கேள்வி கேட்காது என்பது உண்மை எனில் இவர்களுக்காக குரல் எழுப்பி என்ன பயன்?
இவை ஒருபுறம் இருக்க, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதில் மோடி அரசுக்கும் சங் பரிவாருக்கும் எழுந்துள்ள அச்சத்தின் வெளிப்பாடுதான் இதுவரை வேறு எந்த அரசும் அல்லது கட்சியும் செய்ய தயங்கிய இந்த நகர்வு. அதாவது தன் கட்சிக்காரன் மக்களிடம் சென்று மோடி அரசின் நலத்திட்டங்கள் என்று பிரச்சாரம் செய்தால் எடுபடாது என்பதால் கட்சி சார்பற்ற அரசு அதிகாரிகள் என்ற முகத்தை காட்டி அரசு அதிகாரிகளை களத்தில் இறக்கி தனக்கான கட்சி பிரச்சார நபர்கள் ஆக்க மோடி முயற்சி செய்கிறார். அதாவது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் பி ஜெ பிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். இதையே அதிகாரிகள் அல்லாத ஊழியர்கள் செய்ய வேண்டும் என்று இந்த அரசு உத்தரவு இட்டு இருந்தால் ஊழியர்களும் சங்கங்களும் பலத்த எதிர்ப்பு குரல் எழுப்பி இருப்பார்கள். கெடுவாய்ப்பாக அரசின் உயர்மட்ட அதிகார வர்க்கத்துக்கு இதில் எந்த தயக்கமும் இருக்காது என்பதே உண்மை.
இந்தப் பதிவு 24.10.2023 தேதியில் முகநூலில் எழுதிய பதிவு.
...
இதற்கு அடுத்த வருடம் அதாவது 9.7.2024 அன்று இதே பணியாளர் அமைச்சகம் ஓர் உத்தரவு இட்டுள்ளது.கடந்த காலத்தில் 30.11.1966, 25.7.1970, 28.10.1980 ஆகிய நாட்களில் ஒன்றிய அரசின் அமைச்கங்கள் வெளியிட்ட ஆணைகளில் ஜமாத் இ இஸ்லாமி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களில் அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. மட்டுமின்றி, ஒன்றிய அரசு ஊழியர்கள் பணி ஒழுங்கு விதிகளின் கீழ் (CCS Conduct Rules, 1964) அரசு ஊழியர்கள் இணையக் கூடாத அமைப்புக்கள் என்று தனியாக ஒரு பட்டியலே உள்ளது. ஆனால் 9.7.2024 அன்று ஒன்றிய பணியாளர் அமைச்சகம் இட்ட உத்தரவில் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்கி உள்ளது. அதாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒன்றிய அரசு ஊழியர்கள் இணையலாம் என்று அனுமதித்து உள்ளது.
பசுமாடு வெட்டுவதை எதிர்த்து 7.11.1966 அன்று, நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியில் ஆர் எஸ் எஸ் - ஜனசங்கம் இணைந்து நடத்திய கலவரத்தில் சில லட்சம் பேர் திரண்டு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தினார்கள். வீதியில் இருந்த பல அரசு அலுவலங்களுக்கு தீ வைக்கப்பட்டன. அன்று ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த ஸ்வாமி ராமேஸ்வரானந்த் லோக்சபையில் முறைகேடாக நடந்தமைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த கலவரத்துக்கு அவரும் பிறரும் பேசிய வன்முறையைத் தூண்டும் உரைகளே காரணமாக இருந்தன. இக்கலவரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ஏழு பேரும் ஒரு காவலரும் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்ததுதான் 30.11.1966 தேதியிட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மும்பைக்கு நாற்பது கி.மீ தொலைவில் உள்ள பிவாண்டியில் 1970 மே மாதம் 7, 8 இரு நாட்களும் நடந்த மராத்திய மன்னர் சிவாஜி பிறந்தநாள் ஊர்வலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கைகளில் தடியுடன் திரண்டு திட்டமிட்ட வகையில் நிஜாமபுரா மசூதி இருந்த தெரு வழியே சென்றார்கள். கலவரம் வெடித்ததில் மிகப்பலர் உயிர் இழந்தனர். தொடர்ந்து நீதிபதி தின்ஷா பிரோஷா மாதோன் விசாரணைக்கமிசன் அமைக்கப்பட்டது. தனது விசாரணை அறிக்கையில் போலீஸ் துறையின் இஸ்லாமியருக்கு எதிரான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் சிவசேனாவையும் நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். விசாரணை அறிக்கையின்படி, பிவாண்டியில் மட்டும் 142 இஸ்லாமியர், 20 ஹிந்துக்கள் உயிர் இழந்தனர். கலவரம் ஜல்காவ்ன், மஹத், கோனி, நகாவ்ன் ஆகிய ஊர்களுக்கும் பரவிய பின் 78 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் 50 பேர் இஸ்லாமியர், 17 பேர் ஹிந்துக்கள். இதனைத் தொடர்ந்ததுதான் 25.7.1970 தேதியிட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
...
மஹாத்மா காந்தி படுகொலைக்குப்பின், 1975 அவசர நிலை காலம், 1992 பாபர் மசூதி இடிப்பு ஆகிய மூன்று காலகட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கப்பட்டதும் பின்னர் தடைகள் விலக்கப்பட்டதும் தனியான வரலாறு.
...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக