திங்கள், அக்டோபர் 20, 2025

கலை இலக்கிய அறிக்கை: த.மு.எ.க. சங்கம் திருவள்ளூர் மாவட்ட எட்டாவது மாநாடு

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

திருவள்ளூர் மாவட்ட எட்டாவது மாநாடு, 20,21 செப்டம்பர் 2025

கலை இலக்கிய அறிக்கை

1. மனிதன் மீது அவன் வாழும் புறச் சூழ்நிலையின் தாக்கத்தின் பாதிப்பினால் ஏற்படும் சிந்தனையின் வெளிப்பாடுதான் கலை இலக்கிய வடிவமாக உருவாகின்றது. இந்த வெளிப்பாடு ஆனது பல்வேறு வடிவங்களில் காணப்படும். புறச் சூழ்நிலை என்பது எது? தாக்கம் என்பது எது? மனிதனுக்கும் இயற்கைக்கும் மனிதருக்கும் மனித சமூகத்திற்கும் இடையே ஆன தாக்கமே அது.

2. மனித சமூகமானது வரலாற்று ஓட்டத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்து வரும்போது இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கலை இலக்கியங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமூகத்தின் வாழ்க்கை முறை, கலை இலக்கியங்கள் யாவும் சேர்ந்துதான் கலாச்சாரம் ஆகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலகட்டத்தின் அதிகார வர்க்கங்கள் தத்தமது தேவைக்கு ஏற்ப கலை இலக்கியங்களைப் பயன்படுத்தியும் வந்துள்ளன, கலை இலக்கியங்களை உருவாக்கியும் வந்துள்ளன. மனித சமூகத்தின் தொடக்க காலங்களில் இயற்கையும், அடிமை சமூகத்தில் சில வீர புருஷர்களும், நிலவுடைமை சமூகத்தில் மன்னர்களும்தான் அன்றைய கலை இலக்கியத்தின் முக்கியமான கருவாயினர் என்பது இயல்பு.

3. இன்றைய முதலாளித்துவ சமூக சகாப்தத்தில் ஆளும் வர்க்கம் தனது செய்கைகளை நியாயப்படுத்தவும், தம்மைப் பாதுகாக்கவும், மக்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்துவிடா  வண்ணம் அவர்களின் சிந்தனையை மழுங்கடிக்கவும் கலை இலக்கியங்களைப் பயன்படுத்துகின்றது. இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் பல எழுத்தாளர்கள் விலைக்கு வாங்கப்படுவதும், எல்லா நுகர்வுப் பண்டங்களைப் போலவே கலை இலக்கியங்களும் சந்தைப் பொருள் ஆக்கப்பட்டு விற்பதும் வாங்குவதும் நடக்கின்றது, அவ்வாறே நடக்கும் 

4. உலகெங்கும் 90களுக்குப் பிறகான உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற கட்டற்ற வணிகக் கோட்பாடு எல்லைகளை உடைத்து வெள்ளம் எனப் பாய்ந்த பிறகு புதிய வகை காலனி ஆதிக்கம் ஒன்றை நம்மால் பார்க்க முடிகிறது. படை நடத்தி நாடுகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்து காலனிய அல்லது அடிமை நாடுகளை உருவாக்கும் பழைய விதிகள் அல்லது தந்திரங்களுக்கு மாறாக, இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி செய்ததை இன்று பல நூறு கம்பெனிகள் மேற்கு நாடுகளான ஐரோப்பிய, அமெரிக்க ஆளும் அரசுகளின் பூரண ஆசீர்வாதத்துடன் மூன்றாம் உலக நாடுகளின் மேல் வணிகப் படையெடுப்பு அல்லது கட்டற்ற வணிக சுதந்திரம் என்ற பெயரால் கலாச்சார ஆக்கிரமிப்பு அல்லது கலாச்சார ஏவலை நடத்த முடிகிறது. இதைக் கலை இலக்கிய தளத்தில், பண்பாட்டுத் தளத்தில் இயங்குகின்ற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது. 

5. புதிய வணிகப் படையெடுப்பு வணிகம் என்ற எல்லைக்குள் மட்டுமே நிற்கவில்லை. எல்லை கடந்த கட்டற்ற வணிகம் என்பது பண்ட விற்பனை, லாபம் என்ற வரையறைக்குள் மட்டுமே நிற்கவில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, எல்லைகளை அழித்த தகவல் தொழில்நுட்பத் தொழில்ப்பரவல், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் நாடு கடந்து சென்று பணியாற்றத் தக்க புதிய புதிய வாய்ப்புகள், மாற்றங்கள், எளிதில் நமது கைகளில் கிடைத்துவிடும் திரைப்படங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், பிற நுகர்வுப் பொருட்கள், கூடவே கடந்த 30 வருடங்களுக்கு முன் கற்பனை செய்து பார்த்திராத உலக நாடுகளின் இலக்கியங்கள், அவற்றின் தாக்கங்கள் என அனைத்தும் ஒரு நொடிக்குள் உலகில் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்று விடுகின்றனநொடிக்குள் பரிமாறப்பட்டு விடுகின்றனகளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள், மக்கள் எழுச்சிகள், போராட்டங்கள் ஆகியன பற்றிய நேரடிக் காணொளிப் பதிவுகள் என அனைத்தும் நொடிக்குள் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு வந்து விடுகின்றன. ஆனால் இந்தத் தளங்களின் உடைமையாளர்கள் யார்அவரவர்களுக்கான அரசியல் இருப்பது போலவே இந்த உடமையாளர்களுக்கான அரசியலும் இருப்பது கண்கூடுதானே

6. இந்தத் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தும் பயனாளிகள் தமது 100 சதவீத கருத்துக்களையும் வெளியிடுவதற்கான அல்லது பகிர்ந்து கொள்வதற்கான உரிமையை பூரணமாக இந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உடைமையாளர்கள் அல்லது கட்டுப்பாட்டாளர்கள் கொடுத்து உள்ளார்களா? இல்லை என்பது பதில் ஆனால் காரணம் என்ன? எனில் இதில் ஜனநாயகம் அல்லது கருத்துரிமை பேச்சுரிமை எங்கே உள்ளது? இருந்தால் எந்த அளவுக்கு உள்ளதுஇல்லை என்பது பதில் ஆனால் காரணம் என்னஆக ஆளும் வர்க்கத்தின் தந்திரங்களும் அடக்குமுறை ஏவலும் பிரச்சார யுக்திகளும் கலை இலக்கியவாதிகளின் கவனத்திற்கு உள்ளாக வேண்டும். இதிலிருந்து தப்ப முடியாது. எதிரியின் ஆயுதத்துக்கு ஈடு கொடுக்கத்தக்க சம வலிமை உடைய ஆயுதத்தை நாமும் கையில் எடுக்க வேண்டிய அவசியமும் காலத்தின் தேவையும் உள்ளது

7. இத்தாலிய இடதுசாரி அறிஞர் முசோலியின் சிறையில் 11 வருடங்கள் இருந்து 45 வயதில் உயிர் நீத்த மார்க்சிய அறிஞர், தத்துவஞானி அந்தோனியோ கிராம்சி இவ்வாறு சொல்கிறார்: "பண்பாட்டுக்கு அரசியல் உண்டு. தனி மனிதனின் கலைப் படைப்புகள் அல்லது நடவடிக்கைகள் தனிப்பட்டவையாகக் கருதப்பட்டாலும் அது உண்மையில் அவனைப் பாதித்துள்ள அல்லது அவனை ஈர்த்துள்ள அரசியல் தத்துவ அம்சத்தின் அடிப்படையில்தான் அமையும். அதனுடைய கூறுகளைக் கொண்டிருக்கும். பண்பாட்டுக்கான அரசியல் என்பது எப்போதும் எந்த காலத்திலும் இருக்கும்."  ஆம், இருக்கின்றது

8. பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது மேற்கட்டுமானம். பண்பாடு என்பதில் எவையெல்லாம் அடக்கம்? கலை, இலக்கியம், மொழி, சாதி, சமயம், கல்வி ஆகிய அனைத்தும் பண்பாட்டின் கூறுகளே. இவை எந்த அரசியல் தத்துவத்தின் மீது கட்டப்பட்டுள்ளனவோ அதுதான் அடிக்கட்டுமானம்

9. சாமானிய மனிதன் மீது மேலாதிக்கம் அல்லது மேலாண்மை (hegemonic) செலுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரக்காரணிகள், கூறுகள் போலவே அதே ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுக் கூறுகளும் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்படுகின்றஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தால் கட்டமைக்கப்படுகின்ற, அரசியலால் கட்டமைக்கப்படுகின்ற பண்பாட்டுக் கூறுகளும் சாமானிய மனிதன் மீது ஆளுமை அல்லது மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டவை, செலுத்துகின்றன 

10. இந்தப் பண்பாட்டுத்தளத்தில் நடப்பவை சாமானிய மக்களை ஆளும் வர்க்கத்தின் சேவகர்களாக மாற்றும் திறன் பெற்றவை. இந்தப் பண்பாட்டு அரசியல்தான் மதச் சடங்குகள், கலை, இலக்கியம், கல்வி முறை, பிரசார ஊடகங்கள் உள்ளிட்ட பல நூறு வடிவங்களில் மக்களின் சிந்தனையை ஊடுருவி ஒரு சித்தாந்தப் போரை நடத்துகின்றது. மக்களின் சிந்தனையில் ஒரு சித்தாந்த ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது

11. ஆனால் இது வெறும் ஒரு வழிப்பாதை அல்ல என்பதை வரலாறு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. மேல்கட்டுமானம் அடிக்கட்டுமானத்தைப் பாதிக்கும் என்பதை பிரான்ஸ் தேசத்திலும் ரஷ்யாவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வரலாறு காட்டியுள்ளது

12. ஆளும் வர்க்கத்தின் சிந்தனைக் கட்டுமானத்தையும் மீறி, அடக்குமுறைகளை மீறி, மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் எதிராகத் தமது எழுத்துக்களையும் கலைப் படைப்புகளையும் படைத்த படைப்பாளிகள்தான் மேல் கட்டுமானத்தில் பெரும் புரட்சி செய்த விக்டர் ஹ்யுகோ, வால்டேர், ரூசோ, ரோமைன் ரோலண்ட், ழான் பால் சாத்ரெ, Charles Baudelaire, எமிலி ஜோலா, Denis Diderot, Olympe de Gonges (பெண்கள் - பெண் குடிமக்களுக்கான உரிமைகள் சாசனத்தை வரைந்தவர்), Camille Desmoulins, ழான் பால் மாரட்  ஆகியோருடைய எழுத்துக்களும் படைப்புகளும் அடிக்கட்டுமானத்தை உடைக்கவில்லையா? 1789 பிரெஞ்சு புரட்சியை நோக்கி மக்களின் உணர்வுகளைத் தூண்டி வீதிக்கு வரச் செய்யவில்லையா? பாஸ்டில் சிறை உடைபடவில்லையா? நானூறு வருட போர்பான் வம்ச முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையா

13. மாக்சிம் கார்க்கி, மாயகோவ்ஸ்கி, தோல்ஸ்தோய், பியதோர் தொஸ்தவெஸ்கி, ஆன்டன் செகாவ், இவான் துர்கனேவ், நிக்கோலாய் வசிலியேவிச் கொகோல்அலெக்சாண்டர் புஸ்கின் இவர்களது எழுத்துக்கள் போல்ஸ்விக் புரட்சியை நோக்கி மக்களைத் திருப்பியது வரலாறு அல்லவாதோல்ஸ்தோய்யின் படைப்புகளைப் பற்றி கூறும் போது,  "ரஷ்யப் புரட்சியின் கண்ணாடி தோல்ஸ்தோய்" என்றார் லெனின்

14. 1917 மாபெரும் அக்டோபர் புரட்சியை சிலாகித்து தமிழின் மாகவி பாரதியார், "மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் 

கடைக்கண் வைத்தாள் அங்கே 

ஆஹா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி 

கொடுங்கோலன் அலறி விழுந்தான்" என்று பாடினான்

"முப்பது கோடி ஜனங்களின் 

சங்க முழுமைக்குப் பொதுவுடமை 

ஒப்பில்லாத சமுதாயம் 

உலகத்துக்கொரு புதுமை - வாழ்க 

வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!" என்று அவர் பாடிக்கொண்டாடியது நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் தோல்வியுற்ற 1905 ரஷ்யப்புரட்சியையும் பாடிய ஒரே கவிஞன் இந்தியாவில் மகாகவி பாரதி மட்டுமேதான் என்பது பலர் அறியாத ஒன்று. அப்போது 'இந்தியா' பத்திரிகையில் பாரதி இப்படி எழுதி இருக்கிறார்: சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருசியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவார் ஆக". 

15. அதேபோல அதே ரஷ்யாவில் 1917 பிப்ரவரியில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடந்து கெரன்ஸ்கி தலைமையில் ஒரு அரசு அமைகின்றது.  'காக்காய் பார்லிமென்ட்' என்ற ஒரு கவிதையில் பாரதி இப்படி எழுதி இருக்கிறான்: "கேட்டீர்களா காகங்களே,

அந்த ருஷிய தேசத்து ஜார் சக்கரவர்த்தியை 

இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம்.

அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்." 

16. அடுத்து 1917 புரட்சி வெற்றி பெற்ற பின்பு பாரதி இப்படி எழுதுகிறான், 'காலைப் பொழுது' என்ற தலைப்பிட்ட ஒரு கவிதையில்

'கற்றறிந்த காக்கையே, பேசுக நீ' என்கிறான் பாரதி. காக்கை பேசுகிறது

"அருமையுள்ள தோழர்களே! செப்புவேன், கேளீர்

சில நாளாகக் காக்கையுள்ளே நேர்ந்த 

புதுமைகளை நீர் கேட்டறியீரோ

சார்ந்த நின்ற கூட்டமங்கு சாலையின் மேற்கண்டீரே?

மற்றந்தக்கூட்டத்து மன்னவனைக் காணீரே?

கற்றறிந்த ஞானி கடவுளையே நோவான்

எழுநாள் முன்னே இறைமகுடந்தான் புனைந்தான் 

வாழியவன் 

எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் 

சோற்றுக்குப் பஞ்சமில்லை, போர் இல்லை, துன்பமில்லை 

போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ?"

என்று காக்கை லெனினைப் புகழ்கிறது

17. முன்ஷி பிரேம்சந்த் தனது நண்பருக்கு இப்படி எழுதுகிறார்: நான் போல்ஷ்விக் தத்துவங்களை (கம்யூனிசம்) பெரும்பாலும் புரிந்திருக்கிறேன்.”

மூத்த காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் தனது போல்ஷ்விசம் - ஆன்ட்டி போல்ஷ்விசம் என்ற நூலில் போல்ஷ்விசம் வெற்றி பெறவே செய்யும் என்று எழுதி இருக்கிறார்

18. ஆக சோவியத் நாட்டில் இந்திய இலக்கியப் படைப்புகளும் இந்திய நாட்டில் சோவியத் இலக்கியப் படைப்புகளும் பெரிதும் கொண்டாடப்பட்டன

19. முதலாம் உலகப் போரின் முடிவும் ரஷ்யப் புரட்சியும் ஒரே காலத்தில்தான் நடந்தேறின. உலகெங்கும் காலனிய அடிமைக் கோட்பாட்டிற்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்த நாடுகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் மாபெரும் ரஷ்யப் புரட்சி அளித்த அளவுக்கு உலகில் அதுவரை வேறு எந்த மக்கள் எழுச்சியும் வேறு எந்த நாடும் எதையும் அளித்ததில்லை என்பது வெளிச்சமான வரலாற்று உண்மை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்த பல கோடி மக்களுக்கும் தலைவர்களுக்கும், பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கும் மகத்தான ரஷ்யப் புரட்சிதான் மிகப்பெரும் உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு

 

20. தோழர்களே

1935இல் கம்யூனிஸ்ட்  அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் ஆனது பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது. இந்திய இடதுசாரிகள் இதற்கு செவிமடுக்கின்றார்கள்இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1936இல் உதயமாகிறது. விடுதலைப் போராட்ட இயக்கம் மிகத் தீவிரமாக இயங்கி வந்த காலத்தில்தான் இது நடக்கிறது. ரவீந்திரநாத் தாகூர், முன்ஷி பிரேம் சந்த், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பலரும், "இந்தியாவை ஏகாதிபத்தியப் போரில் தள்ளுவதற்கு நாங்கள் எதிரானவர்கள்; எதிர்கால மனித குலம் என்பது அடுத்த உலகப்போரில் கேள்விக்குறியாக்கப்படும்" என்று பகிரங்கமாக பிரகடனம் செய்தார்கள்

21. முதலாம் உலகப் போர் போலவே இரண்டாம் உலகப்போரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான பொருளாதார நெருக்கடியில், அவர்கள் தங்களுக்கு இடையே உலக நாடுகளைப் பங்கிட்டுக் கொள்வதன் நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதுதான். 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்குகிறது.

22. 1941இல் பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த அனில் டீ சில்வா பெங்களூர் மக்கள் நாடக மன்றத்தைத் தொடங்குகிறார்

23. 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்குகிறது. அதே ஆண்டில்தான் பிரிட்டிஷார் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் செயற்கையாக உருவாக்கிய உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. இந்தியாவில் இருந்தும் பிற ஆசிய நாடுகளில் இருந்தும் விளைந்த பல கோடி டன் அரிசி உள்ளிட்ட தானிய மூட்டைகளையும் கப்பலில் பிற நாடுகளுக்கு சென்று கொண்டு இருந்த தானிய மூட்டைகளையும் கடலில் மறித்து உலகப்போரில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த தன் நாட்டு படைகளுக்கு கொடுக்க கவர்ந்து சென்றது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்உணவுப்பொருட்கள் இருந்தும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்தப் பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் பசியாலும் வறுமையாலும் செத்துமடிந்தார்கள். அப்போதுதான் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த இடதுசாரி சிந்தனை உள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரவர் மாநிலங்களில் கலைக்குழுக்களையும் நாடகக்குழுக்களையும் உருவாக்கி மக்கள் மத்தியிலே சென்று பிரச்சாரம் செய்து பஞ்சத்தால் பரிதவித்த மக்களுக்கு நிதி திரட்டி உதவி செய்த பேரதிசயம் நடந்தது

24. இதன் அடுத்த கட்ட நகர்வு மிகப்பெரிய ஒரு கலை இலக்கிய இயக்கத்துக்கு விதை இட்டது. தத்துவார்த்த ரீதியாக நாடெங்கும் இடதுசாரிகளாக இயங்கிக் கொண்டிருந்த இந்தக் குழுக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான பூர்ண சந்திர ஜோசி உணர்ந்து இருந்தார். இப்டா போன்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முதல் முதலாக சிந்தித்தவரும் அவர்தான். கலையும் இலக்கியமும் சமூகத்தில் மக்களின் விழிப்புணர்வைத் தட்டி எழுப்பும் கூர்மையான வடிவங்களாகத் தமது பங்கை ஆற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார் அவர். இதன் விளைவாக 1943 மே 25 அன்று இந்திய மக்கள் நாடகம் என்ற இப்டா (Indian Peoples’ Theatre Association- IPTA) அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆனவர் அன்றைய தொழிற்சங்கத் தலைவரான என். எம். ஜோஷி. பொதுச்செயலாளர் அனில் டீ சில்வா. பொருளாளராக எழுத்தாளர் காஜா அகமது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீப்பிள்ஸ் தியேட்டர் என்ற சொல்லை அன்று முன்மொழிந்தவர் அணுசக்தி விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பது பலர் அறியாதது. அவருக்குத் தூண்டுதலாக இருந்தவர் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ரொமேன் ரோலாண்ட். இதன் பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு கலாச்சார அமைப்புகள் இப்டாவின் தேசியக் குழுவில் அங்கம் வகித்தார்கள். இப்டாவில் பங்கு வகித்த முன்னணி எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய பட்டியல் மிக நீளமானது: முல்க்ராஜ் ஆனந்த், மோகன் ஷெகல், பிருத்வி ராஜ்கபூர், பண்டிட் ரவிசங்கர், .கே. ஹங்கல்ஹபீப் தன்வீர், ஹேமந்த் குமார், சலீல் சவுத்ரி, தேவ் ஆனந்த், ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய, கைஃபி ஆஸ்மி, மஜ்ரூ சுல்தான் புரி, ஷகீர் லுத்யான்வி, ரொமேஷ் தாபர், பிரேம் தாவன், இஸ்மத் சுக்தாய், கணு கோஷ், சேத்தன் ஆனந்த், ரித்விக் கட்டக், சஞ்சீவ் குமார், உத்பல் தத், பிமல் ராய், பாசு பட்டாச்சார்யா, அனில் பிஸ்வாஸ், தமிழ்நாட்டின் திரைப்பட இயக்குனர் கே சுப்பிரமணியம், இசையமைப்பாளர் எம். பி. சீனிவாசன், ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், இசையமைப்பாளர் டி சலபதி ராவ், கேரளாவின் தோப்பில் பாசி உள்ளிட்ட பல நூறு கலைஞர்களும் எழுத்தாளர்களும் தீவிரமாகப் பங்கு பெற்று களத்தில் இயங்கினார்கள். அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனிய ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் தமது எழுத்துத் திறன், கலைத்திறன் ஆகியவற்றை முழு மூச்சுடன் முழுமையாகப் பயன்படுத்தி களத்தில் இறங்கினார்கள்

25. இதன் பின்னர் ஒரு நெருக்கடியான அரசியல் சூழல் விடுதலை பெற்ற இந்தியாவில் ஏற்பட்டது என்பது இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்த 1975 எமர்ஜென்சி என்ற நெருக்கடிநிலைக் காலம்தான்இந்த நெருக்கடியான சூழலில் 1974 ஆம் ஆண்டு பிறந்ததுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்இடதுசாரி இலக்கிய ஏடான செம்மலர் ஏட்டில் எழுதிக்கொண்டு இருந்த எழுத்தாளர்கள்தான் இந்தச் சங்கம் உருவாக அஸ்திவாரம் இட்டவர்கள்சங்கத்தின் முறையான முதல் மாநாடு 1975 ஜூலை 12 13 ஆகிய நாட்களில் மதுரையில் நடந்தது. அதுதான் அமைப்பு மாநாடு. 110 பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் ஆக கே. முத்தையா, துணைச் செயலாளர்களாக கு. சின்னப்ப பாரதி, அருணன், . செந்தில்நாதன் ஆகியோரும், பொருளாளராக தி. வரதராஜன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்இப்படி ஒரு எழுத்தாளர் சங்கம் உருவாக வேண்டிய அவசியத்தை அன்று உணர்ந்து இருந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய மூத்த தோழர்களான கே. முத்தையா, எம்.ஆர். வெங்கட்ராமன், என். சங்கரய்யா, . பாலசுப்ரமணியம், . நல்லசிவன் ஆகியோர் ஆவர்.

26. சங்கத்தின் பொன்விழாவை நிறைவு செய்து நாம் மாநிலம் எங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், விடுதலை பெற்ற 75 ஆண்டுகளில் நாடு இதுவரை சந்தித்திராத புதிய வகை வலதுசாரி இந்துதுவா மத அடிப்படைவாத சக்திகளின் தலையெடுப்பு என்ற நெருக்கடியை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்திருக்கிறோம். 90களுக்குப் பிறகு, குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து நாம் சந்தித்து வரும் இந்த நெருக்கடியானது விடுதலை பெற்ற இந்தியா இதுவரை காணாதது. இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்து கடன் பெற்ற ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாத தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கத்தின் ஆட்சியை மையத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றை உணவு, ஒற்றை உடை என எல்லாவற்றிலும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தும் பெரும்பான்மை மத அடிப்படைவாதபாசிச தத்துவத்தின் அடிப்படையிலான ஒரு அரசைப் பார்க்கிறோம்பன்மைத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூக நீதியையும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், மொழி, இன, மத அடிப்படையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் உறுதி செய்கின்ற, மாநில அரசுகளின் உரிமைகளை வரையறுத்து கூட்டாட்சி எனும் உயரிய தத்துவத்தை உறுதி செய்து இருக்கின்ற, அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் விதைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்ற அரசியல் சட்ட அமைப்பு என்ற ஒன்றை மிக மிகக்கசப்புடன், வெறுப்புடன் நோக்கி அதனை முற்றாக அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு என்ற போர்வையில் செய்து கொண்டிருக்கிற ஒரு அரசைப் பார்க்கிறோம். குடிமக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை எந்த வடிவத்திலும் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாத, அடிப்படை உரிமைகள், சுதந்திரம் ஆகிய  அனைத்தையும் அழிக்கின்ற பாசிச தத்துவத்தின் அடிப்படையிலான ஓர் ஆட்சியின் கீழ் இந்திய சமூகம் மிதிபடுகிறது.

27. 2008இல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து உலக ஏகாதிபத்தியம் இன்னும் மீண்டு வரவில்லை. வளர்ச்சி என்பது ஒரு பக்கச் சார்பாக உள்ளது என்பது கண்கூடு. அதாவது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு மட்டும் பல நூறு மடங்கு பெருக ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக ஆகின்றார்கள். இது வளர்ச்சி இல்லை, நோய். இந்தியாவில் நாம் காண்பதும் இதுதான். நவீன தாராளமயம், உலக மயம், தனியார் மயம் என்பது கடந்த 35 ஆண்டுகளில் எதைக் கொண்டு வந்து சேர்த்து உள்ளது என்பது கண்கூடு. இந்த நிதி நெருக்கடியில் இருந்து வளர்ச்சி பெற்ற நாடுகள் என்று சொல்லக்கூடிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பிற முதலாளித்துவ நாடுகளும் தப்பிக்க இயலவில்லை. எனில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்

28. 90கள் வரையான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகள் என்பவை இந்தியப் பெரு முதலாளிகளின் ஆட்சியாக இருந்த நிலை மாறியுள்ளது. அதே நேரத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகள், நிதி பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் சாமானிய மக்களின் வெறுப்பை சம்பாதித்தன என்பதும் ஒரு மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்த்து இருந்த அரசியல் உறுதியற்ற சூழலில் பெரும்பான்மை மதவாத அடிப்படையில் ஆன ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அடிப்படைவாத அமைப்பு அந்த சூழலை அல்லது இடைவெளியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதை வரலாறு தெளிவாக நிரூபிக்கின்றது.

29. வலதுசாரி இந்துத்துவா அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ் அரசு வெறும் மதவாத அரசு என்று மட்டுமே கணக்கிட்டோம் என்று சொன்னால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இந்த அரசானது மக்களிடையே மத அடிப்படையில் திட்டமிட்ட பிரிவினையை உருவாக்கி, மோதல்களையும் கொலைபாதகங்களையும் உருவாக்கி அந்தக் கூச்சலின் பின்னால் இந்திய கார்ப்பரேட்டுகளுக்கும், குறிப்பாக பார்ப்பனிய, பனியா வகுப்பு பெரு முதலாளிகளின் ஏஜென்ட் ஆக, சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கும் ஏஜென்ட் ஆக செயல்படும் ஒரு அரசு என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் பெரும்பான்மை மத அடிப்படைவாதம் சிறுபான்மையினருக்கு எதிரான மதத்துவேசம், பட்டியல் இன, பழங்குடி இன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய மேல் மேல் பூச்சுக்களுக்குப் பின்னால், கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள், அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பழங்குடி மக்களின் வாழ்விடங்களை, அவர்களது வாழ்வாதாரங்களை அழிப்பதற்குப் பின்னால், இந்தி சமஸ்கிருத மயமாக்கலுக்குப் பின்னால், புதிய கல்விக் கொள்கைக்கு பின்னால், NEET, TET, JET, GATE போன்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் பின்னால் ஒளிந்திருப்பது மேல் சாதி இந்திய, சர்வதேச கார்ப்பரேட் நலன் என்ற ஒற்றை இலட்சியமே என்பதை தீர்க்கமாகப் புரிந்து கொள்வோமாக. நடப்பது கார்ப்பரேட் இந்துத்துவா ஃபாசிஸ்ட் வல்லாதிக்க மேலாதிக்க ஆட்சி என்பதை புரிந்து கொள்வோம்அதே வேளையில் இந்த சக்திகளின் அச்சுறுத்தல், ஆத்திரம் ஊட்டல், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிர்வினை என்ற பெயரில் மொழி, இன, மத சிறுபான்மையின மக்களை தூண்டி விட்டு மைய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கிற, ஜனநாயக இயக்கங்களில் இருந்து அவர்களை விலக்கி வைக்கிற சுயநல சக்திகளை அடையாளம் கண்டு காட்டி இந்த மக்களை சரியான அரசியல் பாதைக்குத் திருப்ப வேண்டியதை உறுதி செய்ய வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

30. எவ்வாறு பிரஞ்சுப் புரட்சிக்கும் மாபெரும் ரஷ்யப் புரட்சிக்கும், இன்ன பிற லத்தின் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் புரட்சிகளுக்கும் பின்னால் எழுத்தாளர்களும் கலை இலக்கியவாதிகளும் தம்மால் இயன்ற வகையில் எல்லாம் கலைப்படைப்புகளையும் எழுத்துக்களையும் உருவாக்கி மக்கள் புரட்சிக்கும் மக்கள் எழுச்சிக்கும் ஆதரவாக நின்றார்களோ அதே வரலாற்றுக் கடமையை, முன்னுதாரணத்தை நமக்கு முன்னால் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தலைமுறை ஏற்கனவே திட்டவட்டமாக உருவாக்கி ஏற்படுத்தி நிலை நிறுத்திச் சென்றுள்ளது. நமது உடனடிக் கடமையானது இன்றைய கார்ப்பரேட் இந்துத்துவா பாசிச சக்திகளை எதிர்கொள்ளத்தக்க வகையில் நமது கலைத்திறனையும் எழுத்து உள்ளிட்ட பிற அனைத்து வடிவங்களையும் கையில் எடுத்துக் கொண்டு மக்களிடையே செல்வதும் மக்களை நம் பக்கம் திரட்டுவதும், மக்களை கலை இலக்கிய ஆயுதபாணிகளாக களத்தில் மாற்றும் அரசியலைக் கற்பிப்பதும் தொடர்ந்து முன்னேறுவதும்தான்.

31. நமது கலை இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டும்? அதற்கென்று ஒரு அரசியல் வேண்டுமா வேண்டாமா? அதற்கென்று ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம் வேண்டுமா வேண்டாமா? வெறுமனே அரசியல் போதுமா? அழகியல் வேண்டாமா? மக்களிடம் கொண்டு செல்லப்படும் நமது கலை இலக்கியங்களின் வடிவம் எவ்வாறு இருந்தால் வெற்றி பெறும்

32. 'கலை இலக்கியம் பற்றி' என்ற நூலில் லெனின் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: கலை மக்களுக்குச் சொந்தமானது, அதனுடைய வேர்களை உழைக்கும் மக்களிடம் மிகுந்த நெருக்கத்தில் ஊன்றி விட வேண்டும். அது இந்த மக்களால் புரிந்து கொள்ளப்படவும் நேசிக்கப்படவும் வேண்டும். அது அவர்களது உணர்வுகளையும் சிந்தனைகளையும் விருப்பங்களையும் கண்டிப்பாக உயர்த்தவும் ஒன்றுபட வைக்கவும் வேண்டும். அது கண்டிப்பாக அவர்களை செயல்பாட்டிற்கு தூண்ட வேண்டும் 

33. இருக்கின்ற மக்கள் பிரச்சனைகளை மட்டுமே பேசி விரக்தி மனப்பான்மையுடன் ஒரு எழுத்தாளன் எழுதுவது என்பது இருக்கும் நிலைமையை அப்படியே ஒரு பார்வையாளனாக இருந்து பார்ப்பதன்றி வேறு எதற்கும் உதவாது. இந்த எழுத்து அல்லது இந்த வடிவம் நமது எதிரிகளுக்கு மட்டுமே உதவும்

34. வேறு ஒரு வடிவமானது உருவகத்தை முதன்மைப்படுத்தி அழகியல் அம்சத்துக்கும் தனிமனித உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமூகப் பிரச்சினைகளின் அடிப்படைகளை நழுவ விடுகின்ற ஒரு வடிவம். தமிழில் இதுபோல் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது எழுத்துக்கள் வாசிப்போருக்கு ஒருவித கவர்ச்சியையும் மயக்கத்தையும் கொடுக்கும். ஆனால் இது நசிவு இலக்கியம். வாசிப்பவனுக்கு மயக்கத்தையும் ஒருவித இன்பத்தையும் தருமே ஒழிய அடுத்த அடிக்கு இட்டுச் செல்லாது.

35. கலை இலக்கியத்தில் அழகியல் அம்சத்திற்கும் சமூக அரசியல் நோக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பை தோழர் மாவோ தனது 'யெனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரைக'ளில் இப்படிக் குறிப்பிடுகிறார்: "அரசியல், கலை ஆகிய இரண்டின் ஐக்கியத்தையும், புரட்சிகர அரசியல் உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்தபட்ச முழுமையான கலை இயல் வடிவம் ஆகிய இரண்டின் ஐக்கியத்தையும் நாம் கோருகிறோம்கலையின் அம்சங்கள் குறைந்த கலைப்படைப்புகள், அவை அரசியல் ரீதியில் எவ்வளவு முற்போக்கு உடையவை ஆனாலும், அவை அத்தனை சக்தி வாய்ந்தவை அல்ல. எனவே தவறான அரசியல் கண்ணோட்டம் உடைய படைப்பு, கலைப்பண்பு குறைந்த 'சுவரொட்டி அல்லது சுலோக நடை' தழுவிய போக்கு ஆகிய இரண்டையும் நாம் எதிர்க்கிறோம். கலை இலக்கியப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வரையில் நாம் இருமுனைகளிலும் போராட வேண்டும்." 

36. கலாச்சாரம் இல்லாத படை மந்த புத்தி உள்ள படை என்று தீர்மானமாக மாவோ சொல்கிறார்.

37. தோழர்களே! மக்களிடம் நாம் செல்வோம். மக்களிடம் இருந்து கற்போம். சமுதாய இயக்கத்தின் இயங்கியல் அம்சத்தைப் புரிந்து கொள்வோம். இந்த இயக்கத்தின் தத்துவார்த்த அரசியலைப் புரிந்து கொள்வோம். உள்ளடக்கத்தில் செழிப்பானதும் திசைவழியில் சரியானதுமான கலை இலக்கியங்களைப் படைப்போம்நமது குறிக்கோளை அடைவோம், வெல்வோம்.

....

 

 

இயக்கவாதியான இசைமேதை எம். பி.எஸ்ஸின் நூற்றாண்டு



மத்திய சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அக்டோபர் 11 அன்று மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. நிகழ்ச்சிக்கு நாடகவியலாளர் பிரளயன் தலைமை வகித்தார். 

1925 செப்டம்பர் 19ஆம் நாள் பிறந்த எம்.பி. சீனிவாசன், ஓர் இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆகவும் மிகச்சிறந்த இசைக் கலைஞராகவும் இருந்தார். தென்னிந்தியத் திரைப்படத்தொழிலாளர்களுக்கான முதலாவது தொழிற்சங்கத்தை தொழிற்சங்கச் சட்டம், 1926இன் கீழ் பதிவு செய்த இடதுசாரி இயக்கவாதி எம்.பி. சீனிவாசன் ஆவார். அவரால் நிறுவப்பட்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ மூன்று லட்சம் திரைப்படத் தொழிலாளர்கள் இன்றளவும் அவரால் பயன் பெற்று வருகிறார்கள். மட்டுமின்றி சேர்ந்திசை என்ற சமுதாய கூட்டிசையை தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்களிடையே கொண்டு சென்ற முன்னோடியாக அவர் இருந்தார். 

எம்.பி. சீனிவாசன் அவர்களால் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழுவின் செயலாளராக பொறுப்பு வகித்த டி. ராமச்சந்திரன் இப்போது அக்குழுவின் கலை இயக்குனராக பொறுப்பு வருகின்றார். குழுவின் பெயர் இப்போது சென்னை எம்.பி.எஸ் சேர்ந்திசைக் குழு என்று மாற்றப்பட்டுள்ளது. டி. இராமச்சந்திரன் எம்.பி. சீனிவாசனிடம் இசை கற்றுக் கொண்ட நேரடி மாணவர் ஆவார். 

நூற்றாண்டு விழாவில் தனது இசைக்குழுவினருடன் பாடல்களை அரங்கேற்றிய டி. இராமச்சந்திரன் தனது உரையில் பேசியதாவது: 

இசை எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்குள்ளும் இசை இருக்கிறது, அதை வெளியே கொண்டு வருவதுதான் நமது வேலை என்பார் எம்.பி. சீனிவாசன். இசை குறித்த கேள்வி ஞானம் மட்டுமே இருந்த எனக்கும் எமது குழுவின் உறுப்பினர்களுக்கும் எம்.பி. சீனிவாசன்தான் இசைஞானத்தைப் புகட்டினார். ஒரு பாடலை எழுதிய பாடலாசிரியர் எந்த உணர்வுடன் அந்தப் பாடலை எழுதியிருப்பார், அவர் சொல்ல வருவது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வதுதான் ஒரு பாடகனின் அடிப்படையான வேலை. அந்த உணர்வுடன் பாட வேண்டும், பாடலின் உள்ளே இருந்து பாட வேண்டும் என்று எம்.பி.எஸ் கூறுவார். ஒரு பாடலைப் பாட வேண்டும் என்றால் முதலில் அந்தப் பாடலின் உட்கருத்தை எங்களுக்குப் புரிய வைப்பார்.  பாடலின் உணர்வுக்கு ஏற்ப பாடுபவர் உணர்ச்சிப் பூர்வமாக இருக்க வேண்டும்,  இசை மணம் இருக்க வேண்டும், இசைப்பிணம் அல்ல என்பார் எம்.பி.எஸ்.

பன்னிரண்டு மொழிகளில் நாங்கள் பாடுகிறோம். எனவே பிறமொழிப் பாடல்களைப் பாடும்போது அந்தந்த மொழியின் சரியான உச்சரிப்புடன் பாட வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருப்பார். அந்த மொழி தெரிந்த ஒருவரை அருகில் வைத்து எங்களுக்குப் பயிற்சி அளிப்பார். ஒரு தெலுங்குப் பாடலில் ஒரே ஒரு எழுத்தின் உச்சரிப்பை எங்கள் குழுவினர் சரியாகச் சொல்லவில்லை என்பதற்காக எங்களை இருபத்தைந்து முறை மீண்டும் மீண்டும் உச்சரிக்கக் கற்றுக்  கொடுத்தார்.  

அவரிடமிருந்து நாங்கள் இசையை மட்டுமே கற்றுக் கொள்ளவில்லை. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நற்குணங்களை தன்னுடைய வாழ்க்கையில் அவர் எப்போதும் கடைப்பிடித்து வந்தார். அடுத்த மனிதனைப் பற்றிய அக்கறை வேண்டும், அடுத்த மனிதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் அவரது நிலையான பண்பாக இருந்தது. பிறர் அறியாமல் அவர் மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள் ஏராளம். அவரால் பயன் பெற்றவர்கள் ஏராளம் என்பதை நானே அறிவேன். ஆனால் அவர் இது பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்.  

சேர்ந்திசை மூலம் அடுத்த தலைமுறையும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே மிகப்பல பயிற்சிப்பட்டறைகளை நடத்தினார். அவரது பாரம்பரியத்தை நாங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்களும் பள்ளிக்குழந்தைகளுக்கு தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வருகிறோம். பள்ளிக் குழந்தைகள் 6,000 பேரை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து எம்.பி.எஸ். சேர்ந்திசை நிகழ்ச்சி நடத்தினார்.  அவரது சேர்ந்திசைப் பாரம்பரியத்தை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுத்துக் கொள்வோம்.

எம்.பி. சீனிவாசனின் தந்தை மானாமதுரை பாலகிருஷ்ணன். இவரது தம்பி எம். ஆர். வெங்கட்ராமன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் 1964க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார். இவர்களது தம்பி கல்யாணசுந்தரம் சர்க்கரைத் தொழில்நுட்ப நிபுணர். அவரது மகள் ஜெயந்தி.  சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழுவில் ஜெயந்தியும் ஒரு பாடகர். விழாவில் ஜெயந்தி அவர்கள் ஆற்றிய உரை: 

எனது தாத்தா ராவ் பகதூர் ராமசாமி சிவன், பாட்டி லட்சுமி ஆகியோர் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எங்களது குடும்பத்தினர் அனைவருமே ஜாதி மத பேதங்களை மறுத்தவர்கள். பாரம்பரியமான சடங்குகள், ஆச்சாரங்களை மறுத்து அவற்றைக் கைவிட்டவர்கள்.  எங்களது பாட்டி லட்சுமி அவரது காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் ஒன்பது கெஜம் மடிசார் கட்டிக்கொண்டு பெரிய ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் கலந்து கொண்டார். எங்களது குடும்பத்தில் பல மதத்தவர்களும் ஜாதியினரும் இருக்கிறார்கள். எமது குடும்பத்தில் தாத்தா, பாட்டி உட்பட மிகப் பலரும் இசை அறிவும் திறனும் பெற்றவர்கள்.  எனது பெரியப்பா எம்.ஆர். வெங்கட்ராமன் அவர்களும் சிறந்த இசை அறிவு படைத்தவர், நல்ல பாடகர்.

நானும் எனது சகோதரியும் எம்.பி.எஸ். இசைக்குழுவில் இணைந்து இசை கற்றுக்கொண்டோம். அவரது நேர்மை, உழைப்பு, திறமை ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து வியந்தோம். இங்கே சேர்ந்திசை நிகழ்த்தப்பட்டபோது நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன். அவர் இன்னும் பல காலம் வாழ்ந்து இருக்க வேண்டியவர். அவரது மகத்தான பணி திரையுலகத்திற்கு இன்னும் தேவைப்பட்டது. அவர் மிகச்சிறந்த நேர்மையாளர். தனக்கு சரி என்று பட்டதை எதையும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து காட்டியவர். எனவேதான் பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டன.  ஆயினும் தனது பொருளாதார நிலைமை பற்றி அவர் என்றுமே பொருட்படுத்தியது இல்லை. 'விளம்பரப்படங்களில் வரும் வருவாயைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்துவேன்' என்று பகிரங்கமாக சொன்னவர் அவர். 

அவருக்குத் தரப்பட வேண்டிய உரிய இடத்தையும் மரியாதையையும் தமிழ்ச்சினிமா உலகம் கொடுக்கவில்லை என்பது துயரமான உண்மை. அவரது மனைவி ஜகிதா உண்மையில் எம்.பி.எஸ்சின் உற்ற நண்பராக இருந்து அவருக்கு வலதுகரமாக விளங்கினார். எல்லா சூழ்நிலைகளிலும் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது.  பலதரப்பட்ட தளங்களிலும் வெளிவரும் நூல்களை தொடர்ந்து வாசிப்பார். வாசிப்பும் இசையும் அவரது மூச்சாக இருந்தன. உலக மக்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவர் இல்லை, சாதி பேதம் எதுவும் இல்லை, மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை அவர் தன் வாழ்வில் நேர்மையாகக் கடைப்பிடித்தார். அவர் எங்களுக்கு கற்றுத் தந்த உயர்ந்த விழுமியம் அதுதான். அவர் அன்று சொன்னதை நாங்கள் இன்று வரையிலும் எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கிறோம்.

நான் எம்.பி.எஸ்ஸின் குடும்பத்தை சார்ந்தவர் என்ற வகையில் இந்த விழாவில் கலந்துகொள்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். வாழும் காலத்தில் மறக்கப்பட்ட அந்தக் கலைஞனை இப்போது உலகம் கொண்டாடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவதை எனது உறவினர் மல்லிகாவின் மூலம் அறிந்த பாடகர் உஷா உதுப் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்து செய்தியை அனுப்பி இருக்கிறார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மாநாட்டில், எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாட வேண்டும், சென்னையில் அவரது சிலையை நிறுவ வேண்டும், அவரது பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  விழாவில் மு. இக்பால் அகமது எழுதிய 'மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன்' என்ற நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

...

தீக்கதிர் வண்ணக்கதிர் 19.10.2025

புகைப்படத்தில்: விழாவில் உரையாற்றிய திரு.டி இராமச்சந்திரன், திருமதி. ஜெயந்தி