திங்கள், செப்டம்பர் 25, 2023

ஆப்பிளும் கொய்யாப்பழங்களும்

சென்னைக்கு வந்த புதிதில் சென்னையின் மிக பிஸியான கோடவுன் தெருவில் (குடோன் ஸ்ட்ரீட் என்றே வழக்கில் வந்துவிட்டது) அண்ணனுடன் அறையில் தங்கினேன். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சரக்கு ஏற்றுவது இறக்குவது, சற்றே தொலைவில் இருந்த கொத்தவால் சாவடி காய்கறி போக்குவரத்து என உழைக்கும் மக்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள். பகல் பொழுதில் நடக்கமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலில் திணறும் என் எஸ் சி போஸ் சாலையை இரவு பத்து மணிக்கு மேல் நடந்து சென்று பார்ப்பது வேறு ஒரு உலகமாக இருக்கும். 

சென்னையின் மிகப்பழமையான தெருக்கள் நிறைந்த பகுதி ஜார்ஜ் டவுன். ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு வணிகத்துக்கு என எழுதப்பாடாத விதியோடு இயங்கியது வியப்பு. அண்ணா பிள்ளை சந்து மளிகை பொருட்கள் விற்கும் மையம் என்பதால் அத்தெருவில் நுழைந்தால் மளிகை சாமான்கள் வாசம் வரும். ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு அண்ணாபிள்ளை சந்து மட்டும் ஏன் ரொம்பவும் பிடித்த இடமாக இருந்தது என்று இப்போது புரிகிறது. அடுப்படி, வீட்டு சமையல் என்று மனம் என்னை அறியாமல் நாடி இருக்கிறது. மினர்வா தியேட்டர், அதன் காப்பி மணம் பற்றி பல முறை எழுதிவிட்டேன்.

ஆவடிக்கு அப்போது மின்சார ரயில் மாத சீசன் டிக்கெட்18 ரூபாய் மட்டுமே. ரயிலில் ஏறினால் அநேகமாக எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒரு பத்திரிகை, வார இதழ் என்று இருக்கும். வாசிப்பதோடு மட்டுமின்றி அரசியல் உரையாடல்கள் நிகழும். அருகில் இருப்பவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் ஆக இருந்தாலும் தீவிரமான உரையாடல் நிகழும். அவரவர் நிறுத்தம் வந்த உடன் சார் 'இறங்குறேன்' என்று இறங்கி செல்வார்கள். அதுவரை வாசிக்கப்பட்ட செய்தித்தாளை அவர் அங்கேயே விட்டுச்செல்வார். அப்படியே அது அரக்கோணம் வரையும் பல கைகள் மாறும். ஒரே செய்தித்தாள், பல மனிதர்கள், பல கோணங்கள், பல விவாதங்கள் என மனிதர்களுக்குள் ஒரு உரையாடல் இருந்தது. நக்கீரன், ஜூனியர் விகடன், தராசு என வாங்கி வாசிப்போர் அவற்றையும் அருகில் இருப்பவரிடம் விட்டுவிட்டு செல்வார்கள். 

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விசயம், பலர் ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான் ஏறுவார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏற்கனவே இருப்பவர்கள்  இருக்கையை ரிசர்வ் செய்வார்கள். ஆனால் இவர்கள் யாரும் சக பயணி என்பதை தவிர வேறு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். 

எல்லாவற்றுக்கும் மையமாக நான் கவனிப்பது மனிதர்களுக்குள் நடந்த உரையாடல். இப்போது அடிக்கடி நடக்கும் ரயிலில் கத்திக்குத்து, கொலை என்பதெல்லாம் அப்போது இல்லை. 

... ... ...

இப்போது? மனிதர்கள் கைபேசியில் ஆழ்ந்து உள்ளே சென்றுவிட்டார்கள். ரயிலில் ஏறுவதில் தொடங்கி இறங்கும்வரை அது எத்தனை மணி நேர பிரயாணம் ஆனாலும், உள்ளூர் மின்சார ரயில், 10, 20, 30 மணி நேர பிரயாணம் ஆனாலும் கைபேசிகளில் ஆழ்ந்து விட்டார்கள். சக பயணிகள் முகத்தையும் பார்ப்பதில்லை, எந்த ஒரு உரையாடலும் இல்லை. புத்தகம் வாசிப்பவர்கள் அநேகமாக யாரும் இல்லை. 30 மணி நேர பிரயாணத்துக்கு பின் இறங்கும்போதும் சக பயணியை நோக்கிய சிறு புன்னகையோ கை அசைப்போ எதுவும் இல்லை, காதுகளில் மூளை நரம்புடன் ஏற்கனவே பிணைக்கப்பட்ட கருவியுடன் வருகிறார்கள், போகிறார்கள்.

பொது இடங்களில் மட்டுமின்றி குடும்பங்களிலும் இதே நிலைதான். ஒரு மனிதனுக்கு இரண்டு அதி நவீன கைபேசி, ஒரு மடிக்கணினி எனில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன உரையாடலுக்கும் உறவுக்கும் நேரம் ஏது? 

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள், ஆனால் தனித்தனி தீவுகளாக இருக்கிறார்கள். 

உலகம் ரொம்ப வேகமாக செல்வதாகவும் எதுக்கும் நேரம் இல்லை சார் என்ற உரையாடலையும் சகஜமாக கேட்க முடிகிறது. நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் நம் வேலைகளை எளிதாக்கி நேரத்தை பெருமளவு சேமிக்க உதவியுள்ளன எனில் அந்த மீதமான நேரத்தை எதன்பொருட்டு செலவு செய்தோம்? மின்சார கட்டணத்தை மின்சார அலுவலகத்தில் சென்று வரிசையில் செலுத்தி விட்டு வீடு திரும்ப சுமார் ஒரு மணி நேரம் ஆனது, இப்போது இணையத்தில் ஐந்து நிமிடத்தில் செலுத்திவிட முடிகின்றது எனில் மீதமான 55 நிமிடங்களை நாம் எந்த வகையிலாவது உருப்படியாக பயன்படுத்தினோமா என்ற கேள்வியை கேட்டால் இது அவசர உலகம் சார் என்ற பொய்யான கட்டமைப்பு உடைப்படுகிறது அல்லவா? சரியாக சொன்னால் கடந்தகாலத்துடன் ஒப்பிட்டால் இப்போது ஒரு நாளைக்கு சுமார் 30 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது என்றால் அந்த ஏற்கனவே இருந்த 24 மணி நேரத்தையும் கூடுதலாக கிடைத்த

ஆறு மணி நேரத்தையும் திருடிக்கொண்ட நவீன தொழிநுட்பம் அதாவது முதலாளித்துவ தொழிநுட்ப வளர்ச்சி மனிதர்களை எதை நோக்கி தள்ளி உள்ளது?

இது மாய உலகம். வேகமாக ஓடும் நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாளித்துவம் மனிதர்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்துள்ளது. 90களில் உலகெங்கும் புகுத்தப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தின் லேட்டஸ்ட் வடிவமே  இது. கடந்த பத்தாண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட முகநூலில் இப்போது நாம் புரட்சி செய்யவில்லையா? அரசியல் கள செயற்பாடுகளின் பொருட்டு இப்போது மனிதர்களை திரட்டுவது கடினமான செயலாகி வருகிறது. அரசியல் போராட்ட களசெயல்பாடுகளுக்கு திரளும் கூட்டங்களில் உழைப்பாளி மக்களை பெருவாரியாக பார்க்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்தின் கோபதாபங்களை வீதிக்கு கொண்டுவருவதை மடைமாற்றியுள்ள நவீன தொழிநுட்பம் ஓரிரண்டு ஸ்டேட்டஸ், பதிவு போதும், திருப்தி அடைவோம் என அவர்களுக்கு திட்டமிட்ட வகையில் வழி செய்து இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொழுதுபோக்கு பதிவுகள், சினிமாக்களின்பால் இழுத்துக்கொண்டு போகிறது.

டுனீசியாவில் நடந்த அரபு வசந்தம் போல இங்கேயும் நடந்து விடாதா? முகநூலும் வாட்சப்பும் போராட்ட களங்களுக்கு மக்களை திரட்ட பயன்படாதா என்று கேட்கலாம். 140 கோடி மக்கள் கொண்ட தேசத்தை, நூற்றுக்கணக்கான இனங்களும் மொழிகளும் அதே அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் ஆக, நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள், டி வி சானல்கள் என பல்வேறு வடிவங்களில் டுனீசியாவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்த தேசம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. தவிர கடந்த பல பத்தாண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் இந்துத்துவா தீவிரவாத சக்திகளின் கைகளில்தான் சென்று சேர்ந்துள்ளன. அநேகமாக அனைத்து ஊடகங்களும், அச்சு, மின்னணு என அனைத்தையும் இந்துத்துவா அரசியல் சக்திகள், அவற்றின் ஆதரவு சக்திகள் கைப்பற்றி விட்டன. சமீபத்திய உதாரணம் என் டி டி வி. ஆக அங்கிங்கு எனாதபடி கைபேசி, டி வி, செய்தித்தாள் என நீக்கமற இந்துத்துவா சக்திகளின் பிரசாரமே நமது மூளைகளுக்குள் வலிந்து திணிக்கப்படவில்லை,  நாமே முன்வந்து நமக்குள் திணித்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு விட்டன.

... ... ...

சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பகல் நேர ரயிலில் சென்றேன். என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும், சக பயணிகளும் அவரவர் கைபேசிகளில் ஆழ்ந்து இருக்க, நான் அப்போது வந்த வார இதழ் ஒன்றை வாசித்துக்கொண்டு வந்தேன். சேலம் நெருங்கும்போது சக பயணி ஒருவர் கேட்டார், சார் சென்னையில் இருந்து பார்க்கிறேன், நீங்கள் மட்டும்தான் புத்தகம் வாசித்துக்கொண்டு வருகிறீர்கள், இப்போதும் ஒருவர் கைபேசி பார்க்காமல் புத்தகம் வாசித்துக்கொண்டு வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது சார் என்றார். அவர் என்னுடன் எப்போதாவது உரையாடுவார். தன் மகனுக்கும் மகளுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்வார். அவர் சென்னை ஐ ஐ டியில் ஆய்வு மாணவராக அப்போது இருந்தார், ஏற்காட்டில் சில ஏக்கர் விவசாயம் செய்யும் குடும்பம் அவருடையது.

... ... ...

பள்ளி செல்லும் மாணவன், மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் மிக புகழ்பெற்ற மனிதர்களின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். எங்கே விழுந்தது இடைவெளி? உரையாடலில் விழுவதாக நினைக்கிறேன்.

ஆப்பிளின் புதிய கைபேசி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனைக்கு வந்துள்ளதாம். மும்பையில் உள்ள முதல் ஆப்பிள் ஸ்டோரில் அதை வாங்கும்பொருட்டு குஜராத், சென்னை, பெங்களூர் போன்ற வெளி இடங்களில் இருந்து விமானத்தில் பயணம் செய்து முதல் நாள் பகல், இரவு கடைக்கு முன் படுத்து உறங்கி புது கைபேசியை பல நூறு பேர் வாங்கி பெருமை பொங்க இணையத்தில் பதிவு செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதி. கூட்டம் கூட்டமாக கூடிய இவர்கள் கடை முன் காத்திருந்த அந்த 20 மணி நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள், கழுத்தும் வலது கை பெருவிரலும் நோக நோக ஏற்கனவே தங்களிடம் இருந்த கைபேசியை நோண்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். சக மனிதர்களுடன் ஆன உரையாடல்?

தோழர் போப்பு அவர்களிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அந்தக்கால பேருந்துகளில் இருக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் இருந்தன, உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று கேட்டார். நுட்பமான அவதானிப்பு. நீக்கப்பட்டது இருக்கையின் வடிவம் அல்ல, மனிதர்களுக்கு இடையே ஆன உரையாடல்.

மின்சார ரயில் பயணத்தில் சக மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கொய்யாப்பழங்கள் அர்த்தமிக்கவை. ஆப்பிள்களால் அவற்றை எப்போதும் நெருங்க முடியாது.

... ...

(படத்தில்: மும்பையில் புதிய ஆப்பிள் 15 வாங்க திரண்ட கூட்டம்)

சாதீயம், பெரியார், குலத்தொழில், இடஒதுக்கீடு, நான், நீங்கள்...

கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான். சொந்த ஊர் தென்காசி. அநேகமாக ஆறு வயது ஆகும்போது மதுரைக்கு இடம் பெயர்ந்தோம், அதாவது பிழைப்பு தேடி. இரண்டு அண்ணன்மார், நான், எனது தம்பி, வாப்பா, உம்மா என ஆறு பேர் கொண்ட குடும்பம்.

வாப்பா நெசவாளி என்றாலும் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களை தறி நெய்யும்போது ராகமாக பாடுவார், கேட்டிருக்கிறேன். அதேபோல் தியாகராஜ பாகவதர் பாடல்களையம் பாடுவார். இசை குறித்து எனக்கு இது ஓர் அறிமுகம் எனில் இயல்பாகவே இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர் என்பதால் கல்யாண வீடுகளில் நாகூர் அனீபா பாடல்கள்தான் ஒலிக்கும், எனவே எனக்கு நினைவு தெரிந்து அறிமுகம் ஆன ஒரு பாடகர் அனீபாதான். 

சென்னை திருவல்லிக்கேணியில் வெண்கல பாத்திரங்களை தலையில் சுமந்து விற்றதாகவும் பொருளாதார நிலையில் நல்லவிதமாக இருந்ததாகவும் என் வாப்பா எப்போதாவது சொல்வது நினைவில் உள்ளது. ஏன் அதை கைவிட்டுவிட்டு தென்காசியில் தறித்தொழிலுக்கு வந்தார் என்று கேட்டு பதில் பெறும் அளவுக்கு வயதும் அனுமதிக்கவில்லை, கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முதிர்ச்சியும் இல்லை. இப்போது நினைத்தால் வருத்தமாக உள்ளது. அதேபோல் அம்மாவின் ஊர் தென்காசி என்றாலும் இலங்கையில் தன் சகோதரிகளுடன் ஓட்டலில் சமையல் தொழிலில் ஈடுபட்டதை அடிக்கடி சொல்வார். ஒருசில உணவுப்பண்டங்களின் சிங்களப்பெயரையும் அவற்றை செய்யும் விதத்தையும் கூட சொல்வார். ஒரு பெண்ணான அவரது அனுபவங்களையும் சற்றே காதுகொடுத்து ஈடுபாட்டுடன் கேட்டிருந்தால் பெரிய கதை ஒன்றுக்கான அடித்தளமாக இருந்திருக்கும். இரண்டையும் தவற விட்ட பாவியானேன் நான்.

தென்காசியில் சாரம் எனப்படும் கைலி, சேலை நெசவு பிரதானம். குழித்தறிகள், அதாவது தரையில் குழி தோண்டி அதற்குள் தறியை கட்டமைத்து இருப்பார்கள். மழைக்காலத்தில்  தரையின் பக்கவாட்டில் ஈரக்கசிவு ஏற்பட்டால் தறி நெசவு சிரமமாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில் தறித்தொழில் சிரமம்தான். 

மதுரையில் பலகைத்தறி. தமிழகத்தின் மிகப்பெரிய நெசவுத்தொழில் ஊராக செல்லூர் இருந்தது. ஆற்றின் தென்கரை, அனுப்பானடி, கிருஷ்ணாபுரம் காலனி பகுதிகளில் சவுராஷ்டிர சமூக மக்கள் அதிகம். செல்லூரின் தறித்தொழிலுக்கு அடிப்படை ஆன பாவோடுதல், பாவுக்கான டப்பா தார் சுற்றுதல் ஆகிய தொழில்களில் அச்சமூகத்தின் பெண்கள் ஈடுபடுவார்கள். அச்சமூகத்தின் ஆண்கள் செல்லூர் நெசவுத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு நான் பார்த்தது இல்லை. 

ஒட்டுமொத்த நெசவுத்தொழிலாளர்களின் வாக்குகள்தான் மதுரையில் சட்டமன்ற தொகுதியின் வெற்றி தோல்வியை பாதித்தன. கைத்தறி தொழில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லி மதுரை மேற்குத்தொகுதியில் எம் ஜி ஆர் நின்று ஜெயித்தார். தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அவரை மேடையின் முன்னே வெகு அருகில் பார்த்த நினைவு உள்ளது.  கைத்தறி தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன், இனிமேல் கைத்தறி நெசவாளிகள் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லி வாக்குகளை பெற்றார். அவ்வளவுதான்.

வாப்பாவின் வழியில் எஸ் எஸ் எல் சி முடித்திருந்த மூத்த அண்ணனும் நெசவில் ஈடுபட்டார். பதினோரு வயது மூத்தவர். அன்றைய எஸ் எஸ் எல் சியில் எலெக்டிவ் சப்ஜெக்ட் என்ற ஒன்று இருந்தது. அண்ணன் விவசாயத்தை தேர்வு செய்து இருந்தார். அவரது ரிகார்டு நோட்டை பார்த்துள்ளேன், மிக அழகாக படம் வரைவார்.

தென்காசியில் இருந்து ஒருநாள் இரவில் குடும்பம் ஊரை விட்டு புறப்படுவதற்கு முன்பே வாப்பாவும் அண்ணனும் மதுரைக்கு சென்று தொழில், வாடகை வீடு என உறுதி செய்து வந்திருந்தார்கள் என்பதை பின்னாட்களில் தெரிந்துகொண்டேன். வாப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

மதுரையில் செல்லூர் ஜெயபாரத் பள்ளியில் எட்டாவது வரையும் 12வரை மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளியிலும் படித்தேன். அதன் பின் கல்லூரியில் சேரவில்லை, குடும்பச்சூழல் காரணமாக. நானும் கைத்தறிதொழிலில் இறங்கினேன், நெசவும் அறிவேன். ஆனால் ஜகார்டு எனப்படும் பூவாலை துண்டுகளை நெய்யும் தறியை கட்டுவது, அதன் டிசைன் அட்டை தயாரிப்பது என டெக்னிகல் பக்கத்தில் வேலை செய்தேன். பிறகு ஆம்பூரில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டேன்.

தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அப்ரெண்ட்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். விளம்பரத்தை பார்த்தவர் வாப்பா என்றாலும் பயிற்சி தேர்வுக்கு அழைப்பு வந்தபோது வாப்பா சென்னைக்கு என்னை அனுப்ப தயங்கினார். அண்ணனே தலையிட்டு என்னை ஆவடிக்கு அனுப்பினார்.

130 ரூபாய் மாத உதவித்தொகை stipend. மறுமாதமே அது 230ஆக உயர்த்தப்பட்டது என்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அண்ணனுக்கு அழைப்பு வர மாநில அரசின் பட்டுவளர்ப்பு துறையில் ஓசூரில் பயிற்சி பெற்று வேலையும் பெற்று இப்போது பணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

இரண்டாவது அண்ணனுடன்தான் நான் சென்னை கோடவுன் தெருவில்தான் Godown street அறையில் தங்கி இருந்தேன். சென்னையின் மிக மிக பிஸியான தெரு அது. அவருக்கு ஒன்றிய அரசின் கனரகதொழில்துறையில் stenographer வேலை கிடைத்து டெல்லி செல்ல நான் ஆவடிக்கு வந்து அறை எடுத்து தங்கினேன். 

ஒன்றரை வருட பயிற்சிக்கு பிறகு  மூன்றரை வருடங்கள் நிரந்த தொழிலாளியாக பணி செய்த பின் திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆவடியில் DRDO பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் Lower Division Clerk வேலைக்கு நேர்முகத்தேர்வுக்காக அழைத்தது. Competition Success Review, Competition Master போன்ற மாத இதழ்கள், The HINDU, Front line, Outlook என வாசித்து என் ஆங்கில அறிவையும் பொது அறிவையும் வளர்த்து வந்தேன். எல்லாம் சுயமாக செய்ததுதான். 

LDC தேர்வில் என்னுடன் சேர்த்து நான்கு பேர் தேர்ச்சி பெற்றார்கள். ஒருவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், ஒருவர் மாற்றுத்திறனாளி, ஒருவர் விமானப்படையில் ஓய்வுபெற்றவர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினன். உடனடியாக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறதா? இந்த நான்கு பேருமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்வானவர்கள் என்ற உண்மை தெளிவாக தெரிகிறதா? 1988 மே மாதம் பணியில் சேர்ந்து பின்னர் துறை தேர்வு எழுதி Class 1 Gazetted Officer ஆனேன்.

ஒரே வருடத்தில் 1989இல் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய வி பி சிங் அவர்களின் ஆட்சிக்கு எதிராக சங் பரிவாரம் மிகப்பெரிய கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது. ராஜீவ் கோஸ்வாமி என்ற ஒருவன் தீக்குளித்து செத்தான் அல்லது சாகடித்தார்கள். திட்டமிட்டபடி அத்வானியை வைத்து ரதயாத்ரை கலவரம் நடத்த பீகாரில் லல்லுபிரசாத் அவரை கைது செய்ய வி பி சிங் அரசுக்கு அளித்த ஆதரவை பிஜேபி வாபஸ் பெற்று அவர் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

... ... ...

எனது குடும்பத்தில் யாரும் உயர்ந்த பள்ளிகளிலோ தனியார் பள்ளிகளிலோ படிக்கவில்லை. செல்லூரில் நான் எட்டாவது வரை படித்த ஜெயபாரத் பள்ளியில் பல நூறு நெசவாளிகளின் பிள்ளைகள்தான் கட்டணம் இன்றி படித்தார்கள்.

காமராஜரின் இலவச கல்வி, டாக்டர் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் பிற இடதுசாரி இயக்கங்களும் திராவிட  இயக்கங்களும் உயர்சாதி பிராமணீயத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், விளைவாக அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கிய உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றால்தான் ஒரு கைத்தறி நெசவாளியின் பிள்ளைகள் அரசுத்துறைகளில் வேலை பெற்றார்கள், சமூகத்தில் ஒரு மரியாதையை பெற்றார்கள், பொருளாதார நிலையில் உயர்ந்தார்கள். தமது வாரிசுகளை தாம் கற்ற கல்வியை விடவும் அதிக அளவில் படிக்கவைத்தார்கள்.

... ...

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சொல்வது மிக முக்கியமானது. குலத்தொழிலை அதாவது கோவிலில் பூஜை செய்வது, உஞ்ச விருத்தி, திதி, விவாஹங்களில் மந்திரம் சொல்வது ஆகிய குலத்தொழில்களை செய்து வயிற்றை கழுவிய பிராமணர்கள் அவற்றை கைவிட்டு பட்டப்படிப்பு, chartered accountant, என்ஜினீயரிங், டாக்டர், ஐ டி படிப்பதுடன் பிராமணீயம் தடை செய்துள்ள கடல்கடந்த பிரயாணத்தை மிக சகஜமாக ஏற்றுக்கொண்டு ஸ்டேட்ஸ், கனடா, ஈரோப் என அரை முக்கால் ட்ரவசர்களை போட்டுகொண்டு அதாவது பஞ்சகச்சம் குடுமி ஆகியவற்றை துறந்து வாழும் எனில் இன்றைக்கு பிரதமர் தொடங்கி வைத்துள்ள விஸ்வகர்மா திட்டம் யாரை அல்லது எந்தெந்த சமூகங்களை உள்ளடக்கும் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

(மதராஸ் கடற்கரையில் ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டுபோட்டவுடன் இந்தியாவில் இனிமேல் ஹிட்லர் ஆட்சிதான் என்று முடிவுசெய்து ஜெர்மன் மொழி படிக்க ஓடிய திருவல்லிக்கேணி மைலாப்பூர்வாசிகளின் கதையை நான் இங்கு எழுதவில்லை).

...