LVM3/M2. ISRO ஏவிய ராக்கெட்டுக்களில் இதுவே மிகக்கனமானது. 36 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.
90களில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்துக்கு அலுவலக தொடர்பாக சென்றேன்.அப்போது ஒரே ஒரு ஏவுதளம் மட்டுமே இருந்தது. இரண்டாம் தளம் கட்டப்பட்டு வந்தது. அப்போது ஒரு ஏவுவாகனத்தை கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஏவுவாகனத்தை அது ஏவப்படும் இடத்திலேயே கட்ட வேண்டும். எனவே மிகப்பிரமாண்டமான எல்ஐசி கட்டிட உயரத்துக்கு ஒரு நகரும் தொழிற்சாலையினுள் இருந்து கொண்டுதான் தொழிலாளர்களும் விஞ்ஞானிகளும் ஏவுவாகனத்தை கட்டுகின்றார்கள். இறுதியில்தான் ஏவப்பட உள்ள செயற்கைக்கோள்கைகளை முனையில் பொருத்துகின்றார்கள். உச்சிவரை சென்று பார்த்தேன்.
ராக்கெட் ஏவுதளம் கட்டப்படும் முன் ஏற்கனவே அங்கே வாழ்ந்துவந்த நயாடி எனப்படும் பழங்குடி மக்கள் இப்போதும் இஸ்ரோ வளாகத்துக்குள் வசிக்கின்றார்கள். நான் அவர்களைப் பார்த்தேன். அவர்களின் வாழ்க்கையை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு உதவுகின்றது இஸ்ரோ.
இஸ்ரோவின் முதல் தலைவர் விக்ரம் அம்பாலால் சாராபாய். குஜராத்தைச் சேர்ந்தவர். கேரளாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் மிருணாளினியை திருமணம் செய்துகொண்டார். புகழ்பெற்ற நடனக்கலைஞர் மல்லிகா சாராபாய் இவர்களது மகள்.
மிருணாளினியின் அக்கா விடுதலைப் போராட்ட வீரரும் நேதாஜி படையின் பெண்கள் படைத்தளபதியும் ஆன கேப்டன் லட்சுமி அவர்கள். இவர்களின் பெற்றோர் தமிழர் ஆன டாக்டர் சுப்பாராம சுவாமிநாதன், மலையாளி ஆன அம்மு.
கேரளாவில் திருவனந்தபுரம் தும்பாவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை அரசு கேட்டபோது மனமுவந்து கொடுத்தவர்கள் கிறித்துவ மிஷனரி என்பதை சொல்ல வேண்டும். பூகோள அமைப்பின்படி அந்த முனையில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது பல வகையிலும் பயனுள்ளதாக இருந்ததாக கண்டுபிடித்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் அதனினும் சிறந்த முனை என்று கண்டறிந்து அங்கே ஏவுதளம் கட்ட உள்ளார்கள்.
முதல் சோதனை ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண அன்றைய பிரதமர் இந்திரா நேரில் அங்கே வந்திருக்க, ராக்கெட்டின் முனையில் பொருத்தப்பட வேண்டிய கூம்புவடிவ மூடியை கடற்கரை மணலில் சைக்கிளில் வைத்து இரண்டு விஞ்ஞானிகள் தள்ளிக் கொண்டுபோகும் புகைப்படத்தை பார்த்துள்ளேன்.
தும்பாவில் முதல் ராக்கெட்டை உருவாக்கி கட்டவும் பின்னர் ஏவுவதற்கும் உழைத்த விஞ்ஞானிகள், தொழிலாளர்களின் பாடுகளை வாசித்திருக்கின்றேன். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அநேகமாக பொதுவெளியில் கிடைக்காதது, வாசிக்கப்படாதது. பிரமிக்கச் செய்யும். பின்னர் பதிவு செய்வேன். விக்ரம், சதீஷ் தவான், ப்ரம் பிரகாஷ், அப்துல்கலாம், சாண்ட்லாஸ் போன்ற விஞ்ஞானிகள் வாழைப்பழத்தையும் வடையையும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கும் போகாமல் அங்கேயே படுத்துறங்கி உழைத்துள்ளார்கள்.
கலாமின் அப்பா ஜெயினுலாபுதீன் மரைக்காயர் ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்ஸில் வந்து மகனைப் பார்த்துள்ளார். ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலையில் இருந்த கலாமை சதீஷ் தவான் அழைத்து மதுரை வரை அப்பாவுடன் சென்று வழியனுப்பி வைக்க பணித்துள்ளார். சரி என்று சொல்லிவிட்டு சென்றவர் சில மணி நேரங்களில் மீண்டும் ஆய்வுவேலையில் இருந்திருக்கிறார். ஏன்யா அப்பா கூட போகலியா? என்று கேட்டதற்கு திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டில் அவரை ஏற்றிவிட்டு திரும்பி வந்ததாக சொல்லியிருக்கிறார்.
முதல் எஸ்.எல்.வி.ராக்கெட் ப்ராஜெக்டின் தலைவர் கலாம். ராக்கெட் கடலில் விழுந்தது. பல நூறு கோடிகள் வீணானதாக பத்திரிக்கைகள் கிண்டல் அடித்தன. இஸ்ரோ தலைவர் தவான் கலாமையும் பிற விஞ்ஞானிகளையும் பின்னே தள்ளிவிட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தோல்விக்கு பொறுப்பேற்றார். அடுத்த சில வாரங்களில் எஸ்.எல்.வி.வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இப்போது தவான் பின்னே நின்றுகொண்டு கலாமை முன்னே தள்ளி பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் செய்தார். மனுசன்யா! எழுதும் எனக்கு புல்லரிக்கின்றது.
நேற்றிரவு 12.07 மணிக்கு மொட்டைமாடியில் நின்று பார்த்தபோது காரிருள் வானில் பிரகாசமாக ஒளிர்ந்து புகை கக்கிய ராக்கெட்டில் தவானின், சாராபாயின் முகங்களைக் கண்டேன்.
ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் முன் மாதிரிகள் திருப்பதியில் வைத்து பூஜை செய்யப்படுவதும் தேங்காய் உடைப்பதும் சர்ச்சையை கிளப்புகின்றது. போகட்டும். முதல் எஸ்.எல்.வி.ராக்கெட் தும்பாவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது கர்த்தரின் அருள்தானா?
...... ....
(படம் இணையத்தில் எடுத்தது. பதிவுக்கு தொடர்பில்லை. வெறுங்கண்ணால் பார்ப்பதே பெரும்பேறு).